திடீரென்று தலையில் இடி இறங்கியது போலிருந்தது. என்னதான் தொழிற்சங்கம், போராட்டம் என்று பழக்கம் இருந்தாலும் கூட்டமாக போலீசைச் சந்திப்பதற்கும், தனியாக சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு. யாருக்குத் தகவல் சொல்வது, தகவல் சொல்ல விடுவார்களா. வீட்டில் வேறு ஏதாவது ஆதாரங்கள் வைத்திருக்கிறோமா. அம்மா இச்செய்தியை எப்படித் தாங்கப்போகிறார்கள் என்று ரிமோட்டில் சேனலை மாற்றுவது போல எண்ணங்கள் மாறி மாறி வந்தன.
”என்ன விஷயமா சார் அரெஸ்ட் பண்றீங்க. ?”
”பாலகிருஷ்ணன்ற பேங்க் மேனேஜரோட பர்சனல் லாக்கரைத் திறந்து 12 லட்ச ரூபாயை நீங்க கையாடல் பண்ணிட்டதா புகார் வந்துருக்கு. அதுலதான் உங்களைக் கைது பண்றோம். நான் சிபிஐ டிஎஸ்பி ஷ்யாம் சுந்தர். இது என்னோட டீம்” என்று இந்திய கிரிக்கெட் டீமை அறிமுகம் செய்வது போலச் செய்தார்.
”ட்ரெஸ் மாத்திட்டு வந்துட்றேன் சார். ”
”நான் கூட வர்றேன்” என்று ஒரு சபாரி அனுமதி இல்லாமலேயே உள்ளே நுழைந்தார்.
விளக்கைப் போட்டேன். ‘அடிப்பார்களோ. விலங்கு போடுவார்களோ’
சபாரி ஷுவைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே நுழைந்தார். நேராக படுக்கையறைக்குள் என்னோடு நுழைந்தார். நான் உள்ளாடை மாட்டும்போது தயங்கியதைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். உடைகளை மாற்றினேன்.
”சார். பேஸ்ட் ப்ரஷ், லுங்கியெல்லாம் எடுத்து வச்சுக்கங்க. செல்போன் பர்ஸ் எல்லாம் வச்சுட்டு வந்துடுங்க”
”சார் நம்ப மட்டும் போயிடலாம.. இல்ல அம்மாவை எழுப்பணுமா ?”
“அம்மாவை எழுப்புங்க தம்பி. அவங்ககிட்ட கையெழுத்து வாங்கனும். அது ஒரு ஃபார்மாலிட்டி.”
அம்மாவை எழுப்பினேன். தூக்க கலக்கத்தில் ”என்னடா இந்த நேரத்துல, தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்றவாறே எழுந்து வந்தாள்.
நான் பேசுவதற்கு முன்பாகவே சபாரி பேசினார். ”அம்மா நாங்க சிபிஐ அதிகாரிங்க. உங்க பையன ஒரு விசாரணைக்காக அழைச்சுட்டுப் போறோம். நாளைக்கு கோர்ட்டுல வந்து பாருங்கமா. இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று அவர் முடிப்பதற்குள்ளாகவே அம்மா அலறத் தொடங்கினாள்..
”அய்யய்யோ.. என்னடா ஆச்சு. ஏன்டா போலீஸ் கூட்டிட்டுப் போறாங்க. அய்யா என் பையன் நல்லவங்கையா. அவன ஒண்ணும் பண்ணிடாதீங்கய்யா. ” என்று அழத் தொடங்கினாள்.
அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். ”ஒண்ணும் இல்லம்மா. அழாத. வந்துட்றேன். நாளைக்கு காலையில தோழர் கல்யாண சுந்தரத்தைப் போயிப் பாரு. விவரம் சொல்லுவாரு. கவலைப் படாதே” என்று நான் பேசிக்கொண்டிருந்தாலும் அவள் அழுகை நிற்கவில்லை. அழுதுகொண்டே அவர்கள் நீட்டிய படிவத்தில் கையெழுத்துப் போட்டாள்.
ஒரு பையில் துணிகளை எடுத்துக் கொண்டு அவர்களோடு கிளம்பினேன். வெள்ளை நிற இன்னோவா கார் நின்று கொண்டிருந்தது. அதில் என்னை ஏற்றி என் இரண்டு புறமும் இருவர் அமர்ந்து கொண்டனர். கார் நேராக சாஸ்திரி பவனுக்குச் சென்றது. இரண்டாவது தளத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர். செல்லும்போது என் கைகளை இருவரும் பிடித்துக் கொண்டனர்.
ஒரு அறைக்குள்ளே என்னை அழைத்துச் சென்று என் பேன்ட் சட்டையில் இருந்தவற்றை எடுத்து தனியே வைக்கச் சொல்லினர். நான் பேனாவைத் தவிர எதையும் எடுத்து வரவில்லை. பேனாவை மட்டும் எடுத்து டேபிளில் வைத்தேன்.
சற்று நேரத்தில் டிஎஸ்பி ஷ்யாம் சுந்தர் உள்ளே வந்தார். அருகில் இருந்தவரிடம் ஒரு பெட்ஷீட் எடுத்துட்டு வாப்பா என்றார். சற்று நேரத்தில் அவர் பெட்ஷீட்டை எடுத்து வந்தார்.
”சார் இங்க படுத்துக்கங்க. நானும் இங்கதான் படுக்கப்போறேன். நாளைக்கு காலையில ரிமாண்ட் பண்ணிடுவோம்.”
”சார். யாரு சார் கம்ப்ளெய்ன்ட் குடுத்துருக்கா ? நான் அந்த மாதிரி பணத்தையெல்லாம் எடுக்கலை சார். ”
”உங்க கூட வேலை பாக்கற அசிஸ்டன்ட் மேனேஜர் சம்பத் தான் கம்ப்ளெயின்ட் குடுத்துருக்கார். உங்க ஆர்க்யூமென்ட்சையெல்லாம் கோர்ட்டுல சொல்லுங்க.”
லுங்கி மாற்றிக் கொள்ளவா என்று கேட்க நினைத்து கேட்காமலேயே படுத்தேன். அந்த அறையில் ஏசி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரம் கழித்து குளிரத் தொடங்கியது.
”சார் குளுருது சார்” என்றேன்.
எழுந்து ஏசியை அணைத்து விட்டு பேனைப் போட்டு விட்டு படுத்தார்.
‘நடப்பவை எல்லாம் கனவில் நடப்பது போலவே இருந்தது. தூக்கத்தில் இருந்தவனை திடீரென்று எங்கோ வாக்கிங் அழைத்துச் செல்வது போல இருந்தது. நடப்பவற்றை நம்ப முடியாவிட்டாலும், படுத்திருக்கும் இடம் இது உண்மைதான் என்பதை உணர்த்தியது. அம்மாவின் நினைவு அழுத்தியது. இந்நேரம் தூங்காமல் அழுது கொண்டிருப்பாள். அவளை நினைத்தால் எனக்கும் அழுகை முட்டியது. அதே நேரத்தில் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்துதானே இறங்கினோம் என்பதும் உறுத்தியது.
சம்பத்தைப் போல பேசாமல் நமக்கென்ன என்று இருந்திருக்கலாமோ ? அவசரப்பட்டு விட்டோமோ.. இந்த அவமானம் தேவையா ? எவ்வளவு வசதியான வங்கி மேனேஜர் வேலை. யாருக்காவது கிடைக்குமா. நானே கெடுத்துக் கொண்டேனோ.. ‘
காலையில் அவர்களாகவே கேட்டு டாய்லெட் போக அனுமதித்தார்கள். டாய்லெட் கதவை திறந்து வைக்கச் சொன்னார்கள். பல் விளக்கிய பிறகு, இட்லி வாங்கிக் கொடுத்தார்கள்.
மதியம் உணவுக்குப் பின், இரண்டரை மணிக்கு ஒரு வழக்கறிஞர் வந்தார்.
”தோழர் என் பேர் ராஜன். ஹை கோர்ட்டுல அட்வகேட்டா இருக்கேன். தோழர் கல்யாண சுந்தரம் அனுப்பினார். எல்லா விபரத்தையும் சொன்னார். சாப்பாடு குடுத்தாங்களா ? ”
ம் என்று தலையாட்டினேன்.
”ஏதும் டார்ச்சர் பண்ணாங்களா ? தேர்ட் டிகிரி ? ”
”இல்லை தோழர். மரியாதையா நடத்துனாங்க. ”
”இன்னைக்கே பெயில் போட்டுட்றேன். பட் லோயர் கோர்ட்டுல கிடைக்கறது ரொம்ப கஷ்டம். ஹைகோர்ட்ல தான் கிடைக்கும். ஐ வில் ட்ரை மை பெஸ்ட்.” என்று கூறிவிட்டு அவர் கிளம்பினார்.
மாலை நாலு மணிக்கு எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள். பெண் நீதிபதி. சிபிஐ கொடுத்த அறிக்கைகளைப் பார்த்து விட்டு, என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் ”எனி கம்ப்ளெயின்ட்ஸ் ? ” என்று கேட்டார்.
இல்லை என்றதும், ”உங்களை அடுத்த 15 நாளைக்கு காவல்ல வைக்க உத்தரவு போட்றேன்.” என்று கூறினார்.
மீண்டும் அதே இன்னோவா. வண்டி எழும்பூரிலிருந்து புழல் சிறை நோக்கிச் சென்றது. செல்லும் வழியில் வண்டியை நிறுத்தி ப்ரெட் பாக்கெட்டும், வாழைப்பழமும் வாங்கினார்கள்.
”இந்தாங்க சார். இன்னைக்கு நைட் உங்களுக்கு சிறையில சாப்பாடு இருக்காது. நாளைலேர்ந்துதான் குடுப்பாங்க. ” என்று கொடுத்தார்.
புழல் சிறைக்குள் வண்டி நுழைந்ததும், இறக்கி நடத்திக் கூட்டிச் சென்றார்கள். இருபது அடிக்கும் மேலான உயரத்தில் பெரிய இரும்பு கேட் இருந்தது. என்னை அந்த பெரிய கேட்டின் கீழே இருந்த ஒரு சிறிய கேட்டின் உள்ளே அழைத்துச் சென்றனர்.
அங்கே இருந்த பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சிபிஐயிலிருந்து வந்தவர்கள், ”சார்.. நாங்க வர்றோம்” என்று கிளம்பினர்.
எனக்கு முன்னால் வரிசையாக கைதிகள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த பை தலைகீழாகக் கொட்டப்பட்டு, கலைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. ”சட்டையை கழட்டிட்டு நில்லுங்க” என்று ஒருவர் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர் சட்டையைக் கழற்றியவுடன் நானும் கழற்றினேன். ”பனியனையும் கழட்டுங்க” என்ற குரல் வந்தவுடன் பனியனையும் கழற்றினேன்.
பேன்ட்டையும் கழற்றச் சொல்வார்களோ… ?
வரிசையில் நின்று கொண்டிருந்த கைதிகளில் ஒருவன், நீளமாக தலை முடிவைத்திருந்தான். அவன் போட்டிருந்த லுங்கியை அவழ்க்கச் சொன்னார் காவலர். அவன் லுங்கியை அவிழ்த்து எறிந்தான். “ஜட்டியை இழுடா“ என்றார். அவன் சட்டென்று ஜட்டியையும் அவிழ்த்தான். அனைவரும் சிரித்தனர். எனக்கு சிரிப்பு வரவில்லை. என் பயம் கூடியது. “டேய் ஜட்டியப் போட்றா. வெக்கங்கெட்டவனே” என்றார். அவனும் சிரித்துக் கொண்டே ஜட்டியைப் போட்டான். அவன் வாயைத் திறக்கச் சொன்னார். தலைமுடிக்குள் கையை விட்டு கலைக்கச் சொன்னார். இரண்டு காதுகளையும் முன்னோக்கி மடக்கிப் பார்த்தார். செருப்பை கழற்றச் சொன்னார். ”துணியை எடுத்துட்டுப் போயி ஓரமா நில்லு” என்றார். அவன் அகன்றான்.
அடுத்து வந்தவனுக்கும் அதே போல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவன் பேன்ட் அணிந்திருந்தான். ஜட்டியை விலக்கச் சொன்னதும் அவன் தயங்கினான். அந்தக் காவலர் “டேய் சொன்னாக் கேக்க மாட்டியா “ என்று அடிக்கக் கையை ஓங்கினார். அவர் அடியிலிருந்து விலகி அவன் உடனே ஜட்டியை விலக்கினார்.
“கழட்டுடான்னா பெரிய இவன்மாதிரி பண்ற. என்ன கேசு..? என்று கேட்டார். அவன் சொன்னது யார் காதிலும் விழவில்லை. “சத்தமா சொல்றா“ என்று மறுபடியும் அடிக்கக் கையை ஓங்கினார். அவன் போர்ஜரி கேஸ் என்றான். போர்ஜரி பண்ணிட்டு வந்து திமிரப் பாரு என்று கூறி விட்டு அவன் முதுகில் கை வைத்துத் தள்ளிவிட்டார்.
அடுத்து நான். ”என்னா கேசு.. ”
”பேங்க்..”
”பேங்க கொள்ளையடிச்சியா ” என்று கேட்டுவிட்டு சிரித்தார்.
”இல்லை இன்னொருத்தர் லாக்கரத் தொறந்து பணத்தை எடுத்துட்டேன்னு.. ”
”அப்படிப் போடு.. நீ பேங்குல என்னவா இருக்க ?”
”நான் மேனேஜர். ”
”உங்களையெல்லாம் நம்பி பேங்குல பணத்தைப் போட்டா வௌங்கின மாதிரிதான். உன் பேங்குலையே திருடுனியா. சரியான ஆளுதான் நீ” என்று சொல்லி விட்டு எனக்கு முன்னால் சென்றவனிடம் நடந்த சோதனைப் போலவே என்னையும் சோதனையிட்டார்.
இவனுக்கெல்லாம் எப்படிச் சொல்லி புரிய வைப்பேன் ? நான் திருடனில்லை என்று உரக்கக் கத்த வேண்டும் போல இருந்தது. சிறைக்கு வருபவர்கள் அத்தனை பேரும் உண்மையிலேயே குற்றம் செய்தவர்கள்தான் என்று எப்படி முடிவு செய்கிறார்கள் ? அவன் முடிவு செய்வதிலும் என்ன தவறு ? மக்கள் பணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சிங்காரவேலு போன்ற முதலைகளிடம் மோதி வாழ்க்கையை இழப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர் ? லட்சத்தில் ஒருவர் ? கோடிகளில் ஒருவர் ? என்னைப்போன்ற பைத்தியக்காரன்தானே இந்த வேலையைச் செய்வான் ? அவன் நினைப்பதில் என்ன தவறு ?
எனக்கு என்ன தலையெழுத்தா ? 1200 கோடி ஊழலைப் பற்றித் தெரிந்த பேங்க்கின் விஜிலென்ஸ் ஆபீசர், மவுனமாக சிங்காரவேலுவோடு கூட்டணி சேர்ந்து கொள்ளவில்லையா ? அவரா இப்படிச் சிறையில் அவமானப்படுகிறார் ? ஏ.சி அறையில் அவர் இந்நேரம் மகிழ்ச்சியாக இருப்பார். இப்படிக் கஷ்டப்படுவதால் சரிந்து விழும் இந்தியாவை முட்டுக் கொடுத்து நிறுத்திவிட்டேனா ? பாராட்டுவார்கள். நீ பெரிய சாதனை செய்து விட்டாய் என்று சொல்லுவார்கள். சிங்காரவேலுவை வீழ்த்தி விட்டாய் என்று வாழ்த்துவார்கள். அழும் என் தாயை எப்படித் தேற்ற முடியும் ? இந்தப் பாராட்டுக்கள் அவள் கண்ணீரைத் துடைத்து விடுமா ? அவளுக்கு நான்தானே உலகம். 1200 கோடி மக்கள் பணம் பெரிதா என்ன ? பத்தாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டாலும், அவளுக்கு அவள் மகன்தானே பெரிது ? பாசமாக வளர்த்து வங்கியில் மேனேஜராக இருக்கும் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தவளின் வாழ்வே தகர்ந்து விட்டதே…..
சோதனை முடிந்தவுடன் மற்றவர்களோடு கூட்டமாகச் சென்று நின்றேன். அனைவரையும் வரிசையாக ஆட்டு மந்தை போல அழைத்துச் சென்றனர்.
ஆங்கிலத்தில் ”க்வாரன்டைன்” என்றும் தமிழில் ”பிணி நீக்கும் பிரிவு” என்றும் எழுதியிருந்த ஒரு வளாகத்துக்குள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டோம். ஒரு பெரிய ஹாலுக்குள் அனைவரையும் உள்ளே போகச் சொல்லி வெளியே கதவைப் பூட்டினர்.
அந்த ஹாலில் ஒரு ஐம்பது பேர் படுத்திருந்தனர். இரண்டு மூன்று இடங்களில் தலையில் கோடு கிழித்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். உள்ளே இருந்தவர்கள் புதிதாக வந்தவர்களை பார்வையாலே அளந்தனர். அந்த அறையின் மூலையில் இடுப்பு உயரத்துக்கு தடுப்புச் சுவர் இருந்தது. உள்ளேயிருந்து ஒரு ஆள் எழுந்து, லுங்கியால் பின்புறத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தபோது அது டாய்லெட் என்பது புரிந்தது.
இத்தனை பேர் முன்பு எப்படி டாய்லெட் வரும் என்பதை நினைத்தால் குமட்டியது. அவசரப்பட்டு விட்டோமோ.. தவறு செய்து விட்டோமோ.
புதிதாக வந்தவர்களில் சிலர் லுங்கி மாற்றினார்கள். நான் எதுவும் மாற்றவில்லை. கொண்டு வந்த பையை தலைக்கு வைத்து படுத்தேன். விளக்கு எரிந்து கொண்டே இருந்தது.
‘அம்மா என்ன செய்வாள். இன்னும் அழுது கொண்டிருப்பாளோ. அவள் உடல்நிலை என்ன ஆகும் ?. அம்மாவை நினைத்ததும் கண்ணீர் வந்தது. கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றவில்லை. எப்படிச் சமாளிக்கப் போகிறாள் இந்த அதிர்ச்சியை ? இது இன்றோடு முடிகிற விஷயம் இல்லையே. எப்போது முடியும் என்பதற்கான அறிகுறியே இல்லையே.
இந்த சம்பத்துக்கு அத்தனை விவகாரங்களும் தெரியுமே.. அந்த ஆள் எப்படி இது போன்ற ஒரு பொய்ப் புகாரை கொடுத்தார்.
பாலகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என்று மிரட்டினால் என்ன செய்வார் சம்பத் பாவம். சிபிஐ இப்படியா விசாரிக்காமல் கைது செய்வார்கள். யாரிடம் விசாரித்திருந்தாலும் உண்மை என்ன என்பது தெரிந்திருக்குமே.
ஜனனிக்குத் தெரிந்தால் என்ன நினைப்பாள். அவளும் இந்தக் கதையை நம்புவாளோ. அவள் நம்பமாட்டாள். நல்லவேளை இவனிடமிருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொள்வாளோ. அவன் மீண்டும் மீண்டும் பேச முயற்சித்தும் தவிர்த்தது நல்லதாகப் போய் விட்டது.. நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைப்பாளோ.
எல்லோரையும் போல நானும் ஏன் என் வேலையை மட்டும் பார்க்கவில்லை ? திமிரா ? ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசையா ?
இந்நேரம் வீட்டில் அம்மா கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, டிவி பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே.. அவசியமா எனக்கு இது ? எனக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை ? என்னைச் சுற்றி இருப்பவர்கள் அத்தனை பேரும் இதே தேசத்தில்தானே வாழ்கிறார்கள் ? 1200 கோடியைப் பற்றி யாருமே கவலைப்படாதபோது நான் ஏன் கவலைப்பட்டேன். எனது அந்தக் கவலை என்னை இப்படி புழல் சிறையின் தரையில் படுக்க வைத்திருக்கிறதே. செயின் அறுத்தவர்கள், கொலை செய்தவர்கள், வீட்டை உடைத்துத் திருடுபவர்கள், கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள், பொறுக்கிகள், இவர்களோடு படுத்து உறங்க வேண்டியவனா நான் ? இவர்களோடு வாழ வேண்டியவனா நான் ?
ஒரு முடிவுக்கு வந்தேன்.
தொடரும்.
அப்பா சுஜாதா காலத்திற்கு பின் மிக நல்ல கதை
எதார்தமான எழுத்து நடை
நன்றி