‘சிங்காரவேலு சார்பில் பேசிய அந்த ஆர்.கே.என்டர்பிரைசஸ் காரனின் போன் நம்பர் வீட்டில் இருக்கிறது. வெளியில் போனதும் அவனிடம் பேசி நான் உங்கள் வழிக்கே வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடலாமா ?’
ச்சே. என்ன நினைப்பு இது ? இதற்காகவா இப்படி ஒரு போராட்டம் ? சிங்காரவேலு காலிலேயே விழுந்திருக்கலாமே … நான் படித்த மார்க்சும் சே குவாராவும் இதையா சொல்லிக் கொடுத்தார்கள் ? பாரதி கோழையாகவா கற்றுக் கொடுத்தான் ? இச்சகத்துள்ளோரெல்லாம் எதிர்த்தாலும் அஞ்சக் கூடாது என்றல்லவா சொல்லியிருக்கிறான் ? சிங்காரவேலுதான் உலகமா என்ன ? ச்சீ.. அந்த நினைவு வந்தது அருவறுப்பாக இருந்தது.
பூகம்பத்தில் சிக்கிய பூச்செடி போல ஆகிவிட்டது என் வாழ்க்கை. இதோ என்னோடு படுத்திருக்கும் அத்தனை பேரும் என்னை சந்தேகத்தோடு அல்லவா பார்க்கிறார்கள் ? ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்து விட்டு சிறைக்கு வருகையில், வரும் அத்தனை பேரும் குற்றம் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்று நினைப்பது இயல்புதானே ?
இங்கே என்னோடு படுத்திருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் இச்சிறைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நான் ….. ? ஒரு உயரிய நோக்கத்துக்காக அல்லவா வந்திருக்கிறேன் .. … நான் செய்யாவிட்டால் சிங்காரவேலு பதவியை ராஜினாமா செய்திருப்பாரா … ? வேறு யாராவது சிங்காரவேலுவை எதிர்த்து இப்படிச் செய்யத்தான் துணிந்திருப்பார்களா… இதனால் ஏற்பட்ட விளைவுகள் நான் எதிர்பாராதது என்றாலும், இதற்காக வருத்தப்பட என்ன இருக்கிறது ? பெண்ணைச் சீரழித்தேனா… தாலியறுத்தேனா… அல்லது இவர்கள் சொல்வது போல வங்கிப் பணத்தைக் கையாடினேனா ? அல்லது சிங்காரவேலு போல மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தேனா ? சிங்காரவேலுவே வெட்கப்படாதபோது நான் எதற்காக வெட்கப்பட வேண்டும் ? வெட்கப்பட்டு புழுங்கும் அளவுக்கு என்ன செய்து விட்டேன் ? ’
ஓரளவுக்கு தெளிவு பிறந்தது போல இருந்தபோது மணி என்ன என்று பழைய ஞாபகத்தில் தலைமாட்டில் கைகள் செல்போனைத் தேடின… தலையணைக்குப் பதிலாக தரையில் கை பட்டவுடன் இது சிறை என்பது உறைத்தது. எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
காலையில் ஆறு மணிக்கு எனது அறையில் இருந்தவர்கள் ஒவ்வொருவர் பெயராக அழைத்தான் ஒரு சக கைதி. எனக்கு முன்னால் இருந்தவர்கள் அவர்கள் பெயரை அழைத்ததும் கையை உயர்த்தினார்கள். நானும் என் பெயர் அழைக்கப்பட்டபோது கையை உயர்த்தினேன். பெயர் அழைத்தவனை ஆல்ட்டி என்று அழைத்தார்கள். ஒவ்வொரு ப்ளாக்குக்கும் ஒரு ஆல்ட்டி இருப்பானாம். அவன் ஏறக்குறைய பள்ளியில் உள்ள வகுப்பு லீடர் போல. ஆசிரியருக்கு உதவி செய்யும் வகுப்பு லீடர் போல, அந்த ஆல்ட்டி சிறைக் காவலர்களுக்கு உதவி செய்தான். இது என்ன ஆல்ட்டி என்பது புரியவில்லை ? எப்படி வந்திருக்கும் இந்தப் பெயர் ?
சிறிது நேரத்தில் கதவைத் திறந்து விட்டார்கள். நானும் துண்டை எடுத்துக் கொண்டு, பேஸ்டையும் ப்ரஷையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். வாயிலில் நின்றிருந்த காவலர், “என்ன கேசு“ என்றார். அதே பதிலைச் சொன்னேன். இவர் பணியில் மூத்தவர் போலிருக்கிறது. வயதானவராக இருந்தார். இவர் மற்றவர்களைப் போல கருத்து சொல்லவில்லை. என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். அவரைக் கடந்து வெளியே சென்றேன். பெரும்பாலானோர் இடது பக்கமாகச் சென்றதால் நானும் அந்தப் பக்கம் சென்றேன். வரிசையாக கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தன. பேருந்து நிலையங்களில் குமட்டல் வரவைக்கும் கழிப்பறைகளை மனதில் வைத்துக்கொண்டே கழிப்பறையை அணுகினேன். ஆச்சர்யமாக சுத்தமாக இருந்தது.
காலையில் பொங்கல் உணவு என்றார்கள். ஒரு பெரிய ட்ராலியில் பிணத்தைப் படுக்க வைப்பது போன்று துணி போர்த்தப்பட்டிருந்தது. எனக்கு ஒரு தட்டு கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றேன். அந்த ஆல்ட்டி அந்த ட்ராலி அருகே நின்று மற்றொரு கைதிக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான். துணியைத் திறந்தபோது கவிழ்த்து வைத்த கிண்ணத்தைப் போல பொங்கல் இருந்தது. அதன் மேலே ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு ஆரஞ்சு வண்ணத்தில் ஏதோ இருந்தது. அது என்ன என்று கேட்க பயமாக இருந்தது.
என் தட்டில் வைக்கப்பட்டதும் எடுத்து மோந்து பார்த்தேன். சட்னி. இவ்வளவு பொங்கலுக்கு ஒரு ஸ்பூனில் சட்னி வைத்தால் எப்படிச் சாப்பிட முடியும் ? கைதிக்கு கல்யாணச் சாப்பாடா போடுவார்கள்..? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு ஒரு வாய் எடுத்துவைத்ததும் அப்படியே துப்பினேன்.. தாங்க முடியாத அளவுக்கு உப்பு… என்னைச் சுற்றி பார்த்தேன். சிலர் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.. சிலர் அதில் தண்ணீரை ஊற்றி கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.. அப்படியே நானும் கொட்டினேன். பசித்தது. நேற்று இரவு கொடுக்கப்பட்ட ப்ரெட்டை எடுத்து சாப்பிட்டேன். எனக்கு அருகில் இருந்தவர் இதை தொட்டுக்கங்க என்று ஜாம் கொடுத்தார்.
“என்ன கேஸ் சார் ? “ என்று ஆரம்பித்தார். விபரத்தைச் சொன்னேன். எனக்காக பரிதாபப்படவில்லை. “நீங்க மேனேஜர்.. நான் ப்ரொபசர்“ என்றதும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தேன்… நான் கேட்பதற்கு முன் அவரே சொன்னார்.
“டௌரி கேஸ் சார்.“
“என் பையன் விருப்பத்தை மீறி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன். அவன் ஒரு நாள் கூட வாழலை.. ரெண்டு பேரும் தனித்தனியாக இருந்தாங்க.
ஒரு மாசம் பொறுத்தா என் மருமக. மொத்த குடும்பத்து மேலயும் டௌரி கேஸ் குடுத்துட்டா. என் பையனும் வொய்ஃபும் ஊருக்குப் போயிருந்தாங்க. என்னை காலேஜுலையே வெச்சு ஸ்டூடன்ட்ஸ் முன்னாடியே அரெஸ்ட் பண்ணிட்டாங்க“
நானே பரவாயில்லைப் போலிருக்கிறதே. தான் பாடம் சொல்லிக் கொடுக்கும் மாணவர்கள் முன்பாகக் கைதாவதை விட வேறு என்ன கொடுமை இருக்கிறது… ?
பேராசிரியர் என்பதால் அவரையும் மரியாதையாக நடத்தியிருப்பார்கள். “ஸ்டேஷன்ல மரியாதையா நடத்தினாங்களா சார்… ?“
“அதை ஏன்பா கேக்குற.. பொம்பளைங்களா அவளுங்க. பொம்பளைகளுக்காகன்னு ஆல் வுமன் போலீஸ் ஸ்டேஷன் உருவாக்குனாலும் உருவாக்குனாங்க. என்ன பேச்சு பேசறாளுங்கப்பா. என் பையன் பண்ணதுக்கெல்லாம் சேத்து என்னை பேசறாளுங்கப்பா. கூனிக் குறுகி உக்காந்துருந்தேன். இந்த ஜெயில் எவ்வளவோ பரவால்லப்பா.“
‘உடனே நம்மை அது போல யாரும் பேசவில்லை என்று ஆறுதலாக இருந்தது. பேசினால் மட்டும் என்ன செய்து விட முடியும் ? அவரைப்போல கேட்டு விட்டு இங்கே வந்து புலம்பியிருக்க முடியும். வேறு என்ன செய்து விட முடியும் ?’
அன்று மாலை க்வாரன்டைன் ப்ளாக்கிலிருந்து வேறு ப்ளாக்குக்கு குற்றத்தின் தன்மைக்கு ஏற்றார்ப்போல மாற்றினார்கள். என்னை ஐந்தாம் ப்ளாக்குக்கு மாற்றினார்கள். அந்தப் பேராசிரியர் என்னோடு வருவார் என்று பார்த்தேன். அவரை நான்காம் ப்ளாக்குக்கு மாற்றியிருந்தார்கள். எல்லோரையும் ஆடு மாடுகள் போல விரட்டியதால் அவரிடம் சொல்லிக் கொண்டு கூட வரமுடியவில்லை.
ஐந்தாம் ப்ளாக்கில் தரைத்தளமும் மேல்த்தளமும் இருந்தது. என்னை தரைத்தளத்தில் அடைத்தார்கள். ஒரு கட்டில் இருந்தது. என்னோடு அறையில் வேறு யாரும் இல்லை. சற்று நிம்மதியாக இருந்தது. இரண்டு நாட்கள் கவலையோடு கழிந்தது. மூன்று வேளையும் உணவு கொடுத்தாலும் நேரத்தைக் கழிப்பது மிக மிக சிரமமாக இருந்தது. யாரிடமும் அதிகம் பேச்சுக் கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து என் அறையில் ஒரு இருபத்து ஐந்து வயது இளைஞனைப் போட்டார்கள். மூன்று கொலைகள் செய்தவனாம். அவன் என்னிடம் அதிகம் பேசவில்லை. நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் எனக்கு கட்டில் வேண்டாம் என்று சொல்லி விட்டு தரையில் படுத்துக் கொண்டேன். என்ன கேஸ் என்பதை மட்டும் விசாரித்து விட்டு அமைதியாக படுத்து விட்டான்.
காலை பதினோரு மணிக்கு ஜெயிலர் அழைப்பதாகச் சொன்னார்கள். என் அறையில் இருந்தவனிடம், “ஜெயலிர் எதற்காக கூப்பிடுகிறார்“ என்று கேட்டேன். ஜெயிலர் ரூம்னா குண்டாஸ் ஆக்ட்ல ஒரு வருஷம் போடுவாங்க. அதுவும் ரெண்டு மூணு கேஸ் இருந்தாத்தான் போடுவாங்க. உனக்கு ஒரு கேஸ்தானே சார். போயிட்டு வா. பாத்துக்கலாம் என்று அந்த சிறைக்கே அவன்தான் அதிகாரி போலப் பேசினான்.
ஜெயிலர் ரூம் எங்கே இருக்கிறது என்று விசாரித்து விட்டுச் சென்றால், உள்ளே கல்யாண சுந்தரம் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் என்னையறியாமல் மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் குற்றமற்றவன் என்பதை அறிந்த ஒருவரைப் பார்த்தால் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே…. அதை விவரிக்கவே முடியாது.
“வணக்கம் தோழர்“ என்றேன். ஜெயிலர் எதிரிலேயே இருந்ததால் முக்கியமான விஷயங்கள் பேச முடியாதே என்ற கவலை ஏற்பட்டது. ஆனால் கல்யாண சுந்தரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆரம்பித்தார். “பார்ட்டிலேர்ந்து விலகிட்டேன்பா.“
அதிர்ச்சியாக இருந்தது. கட்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர், கட்சிக்காக திருமணம் செய்து கொள்ளாமல், கம்யூனிசமே என் வாழ்வு என்று வாழ்ந்தவரா இப்படிப் பேசுவது ?
நடந்ததை விவரித்தார்.
நான் கைது செய்யப்பட்ட அன்று கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளார். வங்கி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், ரயில்வே சங்கம் போன்ற எல்லா சங்கங்களையும் இயக்குவது இடது வலது என்று பிரிந்து கிடக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளே.. வெளிப்பார்வைக்கு தொழிற்சங்கம் என்று நடந்தாலும், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, போராட்டங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது எல்லாமே கட்சியே. கட்சியை மீறி தொழிற்சங்கம் எந்த முக்கியமான முடிவையும் எடுக்க முடியாது.
“வெங்கட் தோழரை எல்லாருக்கும் தெரியும். கட்சி உறுப்பினர். தொழிற்சங்கத்துல ஆக்டீவான ஆளு“ என்று தொடங்கி நடந்த அனைத்தையும் விவரித்துள்ளார். எந்த ஆதாரமாக இருந்தாலும் அதை கட்சி மூலமாக வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் வெளியிட்டது தவறு. தனிப்பட்ட முறையில் செயல்பட்ட நபர்களுக்கெல்லாம் கட்சி சப்போர்ட் செய்ய முடியாது என்று பல்வேறு பேர் பேசியுள்ளனர்.
“வெங்கட் எவ்வளவு வேலைகள் கட்சிக்காக செஞ்சுருக்காருன்னு எல்லாருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தோழருக்கு ஒரு நெருக்கடின்னா நம்ப தலையிடலன்னா வேற யாரு உதவி பண்ணுவா ? அது தவிரவும், நம்ப தோழர் சிங்காரவேலு ராஜினாமா பண்ணதுக்கு காரணமா இருந்தாருன்னா அது கட்சிக்குத்தானே பெருமை ?“
“எல்லாரும்தான் கட்சிக்காக உழைக்கறோம். அதுக்காக பேங்க் பணத்தை கையாடல் பண்ணதுக்கெல்லாம் கட்சி சப்போர்ட் பண்ண முடியுமா ? “ என்று ஒரு குரல்.
“நான் என் வாழ்க்கையையே கட்சிக்காக குடுத்தவன். கட்சியும் சங்கமும்தான் என் வாழ்க்கை. நான் பொய்யா சொல்லுவேன் ? நடந்தது எல்லாத்தையும் நான் சொன்ன பிறகும் கையாடல் பண்ணான்னு பேசறது ஒரு கம்யூனிஸ்டுக்கு அழகா ? எனக்கு என்ன மரியாதை இருக்கு ?“
“நீங்க மூத்த தோழர்தான். ஒத்துக்கறோம். அதுக்காக நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆட முடியாது தோழர். நம்ப கட்சிக்குன்னு ஒரு பேரு இருக்கு. அதை கெடுக்கற மாதிரி வேலையிலயெல்லாம் கட்சி இறங்க முடியாது என்றார் அதே நபர். மற்றவர்கள் அவரை ஆமோதிப்பது போலவே பேசியிருக்கிறார்கள்.
“கட்சிக்குன்னு என்ன பேரு இருக்கு ? ட்ரேட் யூனியன் நடத்திக்கிட்டு முதலாளிகிட்ட பொறுக்கித் தின்றதா ? தொழிலாளி முதுகுல குத்திட்டு முதலாளிகிட்ட வாங்கித் தின்ற தோழர்கள் பேரைச் சொல்லவா ? எனக்குத் தெரியாதா ? கட்சியில எல்லாரும் யோக்கியமா ? ஆனா வெங்கட் யோக்கியன். எனக்குத் தெரியும். உங்க எல்லாரையும் விட அவன் யோக்கியன். அவனை சப்போர்ட் பண்ணாத இந்தக் கட்சி என் மயிருக்கு சமானம். இன்னைக்கே ராஜினாமா பண்றேன்.“ என்று கத்திவிட்டு வெளியேறியிருக்கிறார்.
சங்க அலுவலகத்தை காலி செய்து விட்டு, திருவெல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்.
அவர் செய்த காரியத்தை நினைத்து பெருமையாகவும் இருந்தது. வருத்தமாகவும் இருந்தது. தான் உயிருக்கு உயிராக நேசித்த கட்சியை எனக்காக தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறாரே. அப்படி என்ன செய்து விட்டேன் இவருக்காக ?
“அவசரப்பட்டு முடிவெடுத்துட்டீங்களா தோழர் ? “
“அவசரமெல்லாம் படலைப்பா… இவனுங்க பண்ற எத்தனையோ அயோக்கியத்தனத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தேன். எத்தனையோ தகவல்கள் என் காதுக்கு வந்துருக்கு. போனஸ் பேச்சுவார்த்தையில எத்தனை பேர் போயி முதலாளிக்கிட்ட காசு வாங்கிருக்கான் தெரியுமா ? எத்தனை பேர் ஸ்டேட் கவர்மென்ட் மினிஸ்டர்ஸ்கிட்ட ட்ரான்ஸ்பர்க்கு ரெக்கமன்ட் பண்ணி காசு பண்ணியிருக்கான் தெரியுமா ? இந்தக் கட்சியை விட்டா வேற பெட்டர் ஆப்ஷன் இல்லையேன்னுதான் பொறுமையா இருந்தேன். உன் விஷயத்துல எனக்கு பொறுமை சுத்தமா போயிடுச்சுப்பா. நான் ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லிடலாம்னு இருக்கேன். இனிமே வேற வழியில்லை.
நீ கவலைப்படாதே. தைரியமா இரு. சமாளிக்கலாம். காலை விட்டாச்சு. இனிமே போராடினாத்தான் வெளிய வர முடியும். இனிமே என்ன ஆனாலும் பின் வாங்கக் கூடாது.“
“நானும் அந்த முடிவுலதான் இருக்கேன் தோழர். அம்மா வந்தாங்களா தோழர் ?“
“நீ அரெஸ்ட் ஆன மறுநாள் காலையில ஆறு மணிக்கே வந்தாங்கப்பா. அவங்கள அட்வகேட் ஆபீசுக்கு அனுப்பினேன். பாத்துட்டு வந்து மறுபடியும் என்னைப் பாத்தாங்க. அட்வகேட் பெயில் கிடைக்க எப்படியும் ஒரு வாரம் ஆயிடும்னு சொல்லிருக்கார். நானும் அட்வகேட் கிட்ட பேசுனேன். அம்மாவ நான் பாத்துக்கறேன்.“ என்று சொல்லி விட்டு அவர் எடுத்து வந்திருந்த புத்தகங்களை கொடுத்தார்.
அவர் புத்தகங்களைக் கொடுத்தவுடன் ஜெயிலர் கையை நீட்டி அந்தப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். மக்சீம் கார்க்கியின் தாய். அலெக்சாந்தர் குப்ரினின் செம்மணி வளையல்.
“சார் ஒண்ணும் அப்ஜெக்ஷனா இல்லையே“ என்றார் ஜெயிலர்.
“உலக இலக்கியம் சார். சந்தேகமா இருந்தா படிச்சுட்டு குடுங்க“ என்றார் கல்யாண சுந்தரம்.
“ச்சே ச்சே.. இது ப்ரொசிஜர் சார்.“
“தோழர் அம்மாவை பாக்க வரவேண்டாம்னு சொல்லுங்க தோழர். எனக்கும் கஷ்டமா இருக்கும். அம்மாவுக்கும் கஷ்டமா இருக்கும்.“
“நான் சொல்லிட்டேன்பா… ஆனா அவங்க பாக்கனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. நானே கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்கேன்… நான் வரேன்பா..“
“சரி தோழர்“ என்று விடைபெற்று என் அறைக்குத் திரும்பினேன். வழியில் ஐந்து இடங்களில் உடல் முழுவதும் தடவி சோதனையிட்ட பிறகு, புத்தகங்களை பிரித்து, உதறி, உலுக்கி சோதனையிட்டார்கள்.
அடுத்த ப்ளாக்கின் வாசலில் ஒரு கைதியை மூன்று காவலர்கள் சேர்ந்து லத்தியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். “அய்யோ.. சார் விட்டுடுங்க சார் வலிக்குது அய்யா” என்று அவன் கதறினான். பூட்ஸ் காலால் அவன் கால் முட்டிக்குக் கீழே உதைத்தார் ஒரு காவலர்.. சுருண்டு விழுந்தான்.
“என்கிட்டயே திமிரா பேசறியா நாயே…“ என்று சொல்லி விட்டு மீண்டும் அடித்தார். இவனைப் போயி சாலிட்டரில போடு என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மீதம் இருந்த இரண்டு காவலர்களும் அவனை தர தரவென்று இழுத்துக் கொண்டு போனார்கள்.
அறைக்குத் திரும்பியதும், அந்த இளைஞனிடம் கேட்டேன். “சாலிட்டரின்னா என்னப்பா”
“ஏன் சார் கேக்கறீங்க… ?“
“இல்ல.. மூணு காவலருங்க சேந்து ஒருத்தனை போட்டு மாடு அடிக்கற மாதிரி அடிச்சாங்க… அடிச்சுட்டு அவனை சாலிட்டரில போடுன்னு சொன்னாங்க. அதான்…“
“இது ஜெயில் சார்.. இங்க அவங்க வைக்கறதுதான் சட்டம். வாயை மூடிக்கிட்டு இருந்தா ஜெயில்ல காலத்த ஓட்டலாம். அப்படித்தான் அடிப்பானுங்க… இங்க நடக்கறது வெளியில யாருக்குத் தெரியும்.. அடி வாங்குனவன் அவங்க வக்கீல் கிட்ட சொல்லலாம்னு நெனைக்கக் கூட கூடாது. அதுக்குத்தான் சாலிட்டரி. சாலிட்டரின்னா யாரையுமே பாக்க முடியாதபடி தனியா அடச்சிடுவாங்க. படி மட்டும் வரும். “
“படி ன்னா என்றேன். “
“படின்னா சோறு சார்“
“யாரையுமே பாக்க முடியாம ரெண்டு நாள்ளயே ஆளு கதறிடுவான். ஜெயில் நிர்வாகத்துக்கு அடிமையாயிடுவான்.. சாலிட்டரின்னா இங்க எல்லாருமே அலறுவாங்க“ என்று கூறிவிட்டு, அவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.
‘இது வேறு உலகம். இங்கே கைதிகள் விலங்குகள். இந்த விலங்குகளை அடைத்து வைத்துப் பழக்கப்படுத்துபவர்கள் சிறைக் காவலர்கள். படியாத மிருகத்துக்கு நேரும் கதிதான் இங்கே நேருகிறது. மிருகத்தை வதை செய்தால் யார் குரல் கொடுப்பார்கள்…? அல்லது அந்த மிருகம்தான் வாய் திறந்து பேசுமா ?’
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஜெயிலர் அழைக்கிறார் என்றார்கள். கல்யாண சுந்தரத்தைப் பார்க்கும் மகிழ்ச்சியோடு கிளம்பினேன்.
‘ப்ரெஸ் மீட் வைக்கிறேன் என்று சொன்னாரே.. அதில் ஏதாவது சிக்கலா… இல்லை என்னிடம் கூடுதல் விபரங்களை கேட்பதற்காக வந்திருக்கிறாரா.. எனக்குத் தெரிந்த அத்தனை விபரங்களும் அவருக்கும் தெரியுமே..’
ஜெயிலர் அறையில் அந்த சிபிஐ அதிகாரி ஷ்யாம் சுந்தர் உட்கார்ந்திருந்தார்.
தொடரும்.
THE FACT IS OPEN REGARDING THE POLITICAL PARTIES ..THANKS
story going very thrill sir! super. very interesting.