“உங்களை நாலு நாள் கஸ்டடியில விசாரிக்கறதுக்கு கோர்ட் பர்மிஷன் குடுத்துருக்கு வெங்கட்.” என்றார் ஷ்யாம் சுந்தர்.
‘வழக்கே பொய்.. இதில் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது ? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்படியெல்லாம் வளைக்கிறார்கள் ? நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் ? அல்லது இவர்கள் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று நம்புவார்களா ? நான் தவறு செய்யவில்லை என்று சொல்வதற்கு இருந்த முக்கியமான சாட்சியைக் கொன்று விட்டார்கள். பாலகிருஷ்ணன் இறக்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? இந்நேரம் உண்மையைச் சொல்லியிருப்பாரே. எவ்வளவு வசதியாக பாலகிருஷ்ணனைக் கொன்று விட்டு என்னை கொஞ்ச கொஞ்சமாக கொல்கிறார்கள். ’
வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, வண்டியில் ஏற்றி சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள்.
ஏற்கனவே இருந்த அறையில் அடைக்காமல் வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அது ஒரு சிறிய அறை. அங்கே இரண்டு நாற்காலிகளும் ஒரு டேபிளும் இருந்தன. நாற்காலியில் அமரச் சொன்னார்கள். இரண்டு மணி நேரம் கழித்து இரவு உணவு வந்தது. இரண்டு மணி நேரமாக தனியாக அமர்ந்திருந்தேன். எந்த விசாரணையும் நடக்கவில்லை. பிறகு ஷ்யாம் சுந்தர் வந்தார்.
“சார். என்னை இந்த கேசுல இருந்து மாத்திட்டாங்க. இனிமே நான் உங்கள பாக்க மாட்டேன். எனக்கு எல்லா உண்மையும் தெரியும். யாரு சொல்லி இது நடக்குதுன்னும் எனக்குத் தெரியும். இப்பக் கூட உங்களை இங்கே அழைச்சுட்டு வந்துருக்கறது டார்ச்சர் பண்றதுக்காகத்தான். என்னால டார்ச்சர் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன். நான் உங்களை நடத்துன மாதிரி இனிமே நடத்த மாட்டாங்க. டார்ச்சர் பண்றதுக்காக லோக்கல் போலீஸ்லேர்ந்து ஆட்களை கூட்டிட்டு வந்தாலும் வருவாங்க. நான் வெளியில போயி உங்க அட்வகேட்டுக்கு தகவல் சொல்லிட்றேன். என்னால அவ்வளவுதான் சார் பண்ண முடியும். ஐ யம் ரியல்லி சாரி.“
அவருக்கு பதில் சொல்லக்கூடத் தோன்றவில்லை. டார்ச்சர் என்றதும், சினிமாவில் போலீஸ் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கும் காட்சிகள் நினைவுக்கு வந்தன. நான் பேங்க் மேனேஜர் அல்லவா. அப்படியா அடிப்பார்கள் ? பேங்க் மேனேஜரென்பதால் அல்லவா இது வரை என்னை மரியாதையாக நடத்தினார்கள் என்று நினைத்து வந்தேன். இந்த ஆள் போய் விட்டால் நம்மை என்ன பாடு படுத்துவார்கள் ? பயம் உடல் முழுக்க பரவியது. யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாததால் ஒருவரிடமும் இதைச் சொல்லி புலம்பக் கூட முடியாதே.
ஷ்யாம் சுந்தர் கிளம்பிப் போய் விட்டார். அவர் போன அறை மணி நேரத்தில், அந்த அறையில் இருந்த இரண்டு ஏசிக்களும் இயங்கத் தொடங்கின. இந்த நேரத்தில் எதற்கு ஏ.சி ?
சிறிது நேரத்தில் பெரிய மீசை வைத்த ஒருவர் உள்ளே வந்தார்.
“நீதான் வெங்கட்டா ?“
“ஆமாம் சார்.. “
சாலரி லோன் வேணும் சார் என்று என்னிடம் கெஞ்சிய காவல்துறையினரின் நினைவு வந்தது. அப்போது நான் கொடுப்பவன். இப்போது பெறுபவன்.
“பேன்ட் சட்டையெல்லாம் கழட்டு”
டார்ச்சர் என்று ஷ்யாம் சுந்தர் சொன்னது நினைவுக்கு வரவும், மறு பேச்சு பேசாமல் கழற்றினேன். நான் ஜட்டியோடு நிற்பதை உறுதி செய்ததும், என் பேன்ட் சட்டையை கையில் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் அந்த மீசை.
பத்து நிமிடத்தில் குளிர் தாக்கத் தொடங்கியது. விளக்கும் அணைக்கப்பட்டது. விளக்கு அணைத்ததும் குளிர் அதிகமானது போல இருந்தது. டேபிளுக்கு அடியில் சென்றேன். அங்கேயும் அதிகமாக குளிர்ந்தது. தரை முழுவதும் சில்லென்று மாறியது. அந்த சிறிய அறையில் இரண்டு ஸ்ப்ளிட் ஏசிக்களை பொறுத்தியது இதற்காகத் தானோ ? உடல் நடுங்கியது. ஏ.சிக்கு நேர் கீழே உட்கார்ந்தால் எதிர்ப்பக்கத்திலிருந்த ஏசி காற்றை நேராக வீசியது. எந்தப்பக்கம் நகர்ந்தாலும் குளிர் அதிகமாகிக்கொண்டே போயிற்று.
அறை முழுவதும் நகர்ந்துகொண்டே இருந்தேன். உடல் நடுக்கம் நிற்காமல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஏசியை கட்டுப்படுத்தலாம் என்று பார்த்தால் எட்ட முடியாத உயரத்தில் இருந்தது. கை விரல்கள் விரைத்துப் போனது போல மடக்குவதே சிரமமாக இருந்தது. மேசையை இழுத்து அதை எட்டலாம் என்றால் மேசையை நகர்த்த முடியாத அளவுக்கு குளிர் நடுக்கியது. மேசையின் கால்களை கையால் பிடிக்க முடியவில்லை. அதைப் பிடிக்க முயற்சி செய்யும்போதே கை நடங்கியது. குளிர் அதிகமாக அதிகமாக சிந்தனையே மரத்துப் போனது போல இருந்தது. சிந்தனை செய்ய மூளை நிறைய சிரமப்படுவது போல இருந்தது. எவ்வளவு நேரம் நகர்ந்து கொண்டே இருந்தேன் என்பது தெரியவில்லை. நகர முடியாமல் சோர்ந்து ஒரு மூலையில் சாய்ந்தேன்.
வெளிச்சம் வந்தது போல இருந்தது. கதவைத் திறந்து கொண்டு இன்னொருவர் வந்தார்.
“ரஞ்சித்“ என்று யாரையோ அழைத்தார். “யாருய்யா இப்படிப் பண்ணது.. ட்ரெஸ்ஸைக் குடுய்யா“ என்றார். அவசர அவசரமாக ட்ரெஸ் என் மேல் வீசப்பட்டது. “போட்டுக்கங்க சார். டாய்லெட் போயிட்டு வாங்க. ப்ரஷ் பண்ணிக்கங்க. ப்ரேக் பாஸ்ட் கொண்டு வரச் சொல்றேன்“ என்றார். அவன் பேசியதிலேயே போலித்தனம் தெரிந்தது. அவர் உண்மையாகப் பேசவில்லை என்பதும் தெரிந்தது.
ட்ரெஸ்ஸை மாட்டிக் கொண்டு உணவும் அருந்தி முடித்த ஒரு மணி நேரத்தில் வழக்கறிஞர் வந்தார். வழக்கறிஞர் வந்தபோது வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர். நடந்தது அத்தனையையும் சொன்னேன்.
“நான் இம்மீடியட்டா உங்களுக்கு கஸ்டடி கொடுத்த ஜட்ஜுகிட்ட பெட்டிஷன் போட்றேன். அங்க ரெஸ்பான்ஸ் இல்லன்னா, ஹைகோர்ட்டுல ஹேபியஸ் கார்ப்பஸ் மூவ் பண்றேன். இன்னும் மூணு நாள்தான். அதுக்குள்ள ஏதாவது ஆர்டர்ஸ் கிடைக்குதான்னு பாக்கறேன். நான் கௌம்பணும்“ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்தபோது, எனக்கு காலை உணவு வழங்குகிறேன் என்று சொல்லிய நபர் வந்தார். வக்கீல் அவரைப்பார்த்து கோபமாக, “என்ன சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க ? அவர் பேங்குல ஒரு சீனியர் மேனேஜர் தெரியுமா ? யார் குடுத்தா உங்களுக்கு இந்த அதிகாரத்தை ? கஸ்டடியில துன்புறுத்த மாட்டோம்னு சொல்லித்தானே ஆர்டர்ஸ் வாங்கனீங்க ? நான் இதை சும்மா விட மாட்டேன் சார். இது பெரிய ஹ்யூமன் ரைட்ஸ் வயலேஷன். (human rights violation). யு வில் ஃபேஸ் தி கான்சிக்வென்சஸ்” (You will face the consequences) என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
வக்கீல் அப்படிப் பேசியது தெம்பாக இருந்தது. அவர் போனதும் மீண்டும் பழைய அறையிலேயே அடைத்தனர். ஆடைகளை களையச் சொல்லவில்லை. வக்கீல் பேசியது வேலை செய்திருக்கிறது என்று நினைத்து சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு மணி நேரம் கழித்து அதே நபர் திரும்ப வந்தார். “சார் ட்ரெஸ்ஸைக் கழட்டி குடுக்கறீங்களா“ என்று கேட்டார்.
“வக்கீல் டார்ச்சர் பண்ணக்கூடாதுன்னு சொன்னாருல்ல சார்.. “ என்று சன்னமான குரலில் சொன்னேன்.
“கழட்டறீங்களா… இல்லை வேற ஆளை வரச் சொல்லவா ?“
எதுவும் பேசாமல் கழற்றினேன். இரவு முழுவதும் குளிர் நடுக்கத்தோடு கழிந்தது. நேரம் என்ன ஆகிறது என்பதே தெரியிவில்லை. முதல் நாள் நடந்த அதே சடங்குகள் காலையிலும் நடந்தன.
விடிந்த ஒரு மணி நேரம் கழித்து, பரபரப்பு தொற்றிக் கொண்டது போல அதிகாரிகள் என் அறைக்குள் நுழைந்தார்கள். ஏய், வா போ என்ற பேசிக்கொண்டிருந்த அதே அதிகாரி “சார் கொஞ்சம் ட்ரெஸ் பண்ணிக்கங்க சார்” என்றது வித்தியாசமாக இருந்தது. நேற்று வக்கீல் வந்தபோது இந்த மரியாதை இல்லையே… சீனியர் வக்கீல் யாராவது வருகிறார்களா ? எதற்காக இந்த திடீர் மரியாதை ?
சற்று நேரத்தில் வேனில் ஏற்றினார்கள். வாகனம் நேரே உயர்நீதிமன்றம் சென்றது. வண்டியை உயர்நீதிமன்றத்தின் உள்ளே இருந்த பழைய காவல்நிலையம் அருகில் நின்றது. வெளியே கருப்பு கவுன் அணிந்த வழக்கறிஞர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அருகே மற்றொரு போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது. அதில் இருந்த கைதிகளிடம் உறவினர்கள் போலத் தோற்றமளித்தவர்கள் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் வந்திருக்கிறேன். ஒரு நண்பர் அழைத்தார் என்பதற்காக. அப்போதெல்லாம், இதே நீதிமன்ற வளாகத்தில் ஒரு கைதியாக வருவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரம் கழிந்தது.
திடீரென்று என்னை வாகனத்தை விட்டு கீழே இறங்கச் சொன்னார்கள். என்னை ஆடைகளை அவிழ்க்கச் சொன்ன அதிகாரி என் அருகே வந்தார். “சார் உங்களுக்காக கல்யாண சுந்தரம்னு ஒருத்தர் ஹேபியஸ் கார்ப்பஸ் தாக்கல் பண்ணிருக்கார். அதுக்காகத்தான் உங்களை ப்ரொட்யூஸ் பண்ணச் சொல்லிருக்காங்க. உங்களை டார்ச்சர் பண்றோம்னு அலிஜ் (allege) பண்ணிருக்காங்க. எதையும் மனசுல வச்சுக்காதீங்க சார்.” என்றார்.
‘இரவு முழுவதும் ஜட்டியோடு குளிரில் நடுநடுங்க படுக்க வைத்து விட்டு … ….. ….. எப்படி மனசு வருகிறது ?’
அந்த ஆளுக்கு பதில் சொல்லாமல் முறைத்தேன். அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். சிவப்பு நிறக் கட்டிடங்களாக இருந்தன. என்னைச் சுற்றி நான்கு பேர் நடக்க நான் நடுவில் அழைத்துச் செல்லப்படுவதை அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர். இரண்டு மாடிகள் ஏற்றி 4 என்று எண்ணிட்ட நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினார்கள்.
என்னை நேற்று சந்தித்த வழக்கறிஞர் அருணன் வெளியே வந்து என்னைப் பார்த்தார். “சார். ஜட்ஜ் வீட்டில போயி மென்ஷன் பண்ணினோம். உடனே இன்னைக்கு மேட்டரை எடுத்துக்கிட்டாங்க. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். ஒரு வேளை ஜட்ஜஸ் உங்களை கூப்பிட்டுக் கேட்டாங்கன்னா, என்ன நடந்ததோ அதை பயம் இல்லாமல் சொல்லுங்கள்.“
“சார் இன்னும் ரெண்டு நாள் கஸ்டடி இருக்கு சார். நான் அவங்க கூடத்தான் போகணும்.“
“பயப்படாதீங்க சார். அதுக்குத்தானே இந்த பெட்டிஷனே. டோன்ட் ஒர்ரி. நம்ப சீனியர் பாத்துக்குவார். இந்த ஜட்ஜும் நல்ல ஆளு. ஹ்யூமன் ரைட்ஸ் வையலேஷனை ரொம்ப சீரியஸா பாக்கிறவர். இந்த மாதிரி டார்ச்சர் பண்ண பல பேர் மேல ஆக்சன் எடுக்க உத்தரவு போட்டுருக்கார். உங்களை பண்ண டார்ச்சரை கண்டிப்பா சீரியஸா எடுத்துக்குவார். நிச்சயம் ரிலீஃப் கிடைக்கும்“ என்று அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது.
ஐந்து நிமிடத்தில் உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்த பெரிய ஹால் இரண்டாக தடுக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில் பார்வையாளர்களுக்காக பென்ச் போடப்பட்டிருந்தது. முன்பக்கத்தில் குதிரை லாட வடிவில் மேசை இருந்தது. அதைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் வழக்கறிஞர்கள் அமர்ந்து இருந்தார்கள்.
வழக்கறிஞர் அருணன். நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக இருந்த நாற்காலியில் தலை நரைத்த வயதான ஒருவர் இருந்தார். என்னை ஓரமாக நிற்க வைத்தார்கள். என்னோடு மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்த போலீஸ் காரர்கள் தள்ளி நின்றனர்.
நீதிமன்றத்தில் இருந்த அத்தனை கண்களும் என்னைத் துளைப்பதை உணர முடிந்தது. அத்தனை பேரும் என்னை வங்கிப் பணத்தை கையாடல் செய்தவன் என்றுதானே கருதுவார்கள் ? இவர்களில் எத்தனை பேருக்கு நான் சென்று புரிய வைப்பேன். ஒரே நாளில் என்னை சிறுமைப் படுத்தி விட்டார்களே…..
வழக்கறிஞர்கள் பேசுவது மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. துல்லியமான நிசப்தம்.
“ஐடெம் நம்பர் 25. ராஜராஜன்” என்று ஒரு பெண் அழைத்தார். அவர் அழைத்ததும், அருணன் முன்பாக உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் எழுந்தார். ஒருவர் கூட தமிழில் பேசவில்லை. ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய ஒரு தேசத்தில் வந்திறங்கியது போல இருந்தது.
“மை லார்ட்… திஸ் ஈஸ் ய கேஸ் ஆப் ப்ரூட்டல் டார்ச்சர்“ (My Lord. This is a case of brutal torture) என்று கணீரென்ற குரலில் தொடங்கினார். என் கட்சிக்காரரின் நண்பர் ஒரு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அவர் மீது சிபிஐ பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து விசாரணை என்ற பெயரில், மனிதத்தன்மையற்ற முறையில் சித்திரவதை செய்து வருகிறார்கள். அவரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.“ என்றார்.
கண்ணாடி அணிந்து தலை வழுக்கையாக இருந்த ஒரு நீதிபதி, “வாட் ஈஸ் தி அலிகேஷன் அகெய்ன்ஸ்ட் ஹிம் ? “ (What is the allegation against him) என்று கேட்டார்.
“அவர் பணியாற்றிய வங்கியில் இருந்த ஒரு லாக்கரில் இருந்து 12 லட்ச ரூபாயை கையாடல் செய்து விட்டார் என்று குற்றச்சாட்டு“ என்றார்.
இதைக் கேட்டதும், நீதிபதி முகத்தில் எரிச்சல் தெரிந்தது.
“இது போன்ற நபர்களை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? வங்கியில் பணம் பத்திரமாக இருக்கும் என்று நினைத்து மக்கள் பணத்தைப் போடுகிறார்கள். இது போன்ற நபர்கள் பணத்தை கையாடல் செய்து விட்டு, சித்திரவதை செய்கிறார்கள் என்று நாடகமாடி நீதிமன்றத்தை ஏமாற்றுவார்கள். அதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா ? நீங்கள் இது போன்ற வழக்குகளை எடுத்து வந்து, எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா ? இது போன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டாமா ?“
என் வக்கீல் அருணனின் முகம் இருண்டது.
நம்பிக்கையோடு வந்த எனக்கு உள்ளுக்குள் ஏதோ தகர்ந்தது.
தொடரும்
சார் உலகமே இப்படிதான நடந்து கெ ாள்ளும் ????????
? ? ?