‘நாம் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நீதிமன்றம் கண்டிக்கும் என்று பார்த்தால், இப்படிப் பேசுகிறார்களே… உயர்நீதிமன்ற நீதிபதிகளே என் மீது போடப்பட்ட பொய் வழக்கை நம்புகிறார்களே!!! நான் விடுதலை ஆகவே முடியாதா ? இப்படியே சிறையில் கிடந்து சாக வேண்டுமா ?’
நீதிபதி பேசி முடித்ததும் ராஜராஜன் மீண்டும் தொடங்கினார். “நாங்கள் இந்த நீதிமன்றத்தின் முன் வந்திருப்பது, அவரை விடுதலை செய்ய வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்பதற்காக இல்லை. அவர் மீது சட்டத்தில் உள்ளபடி என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கட்டும். ஆனால் அது சட்டம் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளின்படி இருக்க வேண்டும். அதற்காக அவரை அடைத்து வைத்து துன்புறுத்தக் கூடாது. இந்த நீதிமன்றத்தின் முன் நாங்கள் சொல்லியுள்ள புகார் அவர் சித்திரவதை செய்யப்படுகிறார் என்பது மட்டுமே. அது சரியா இல்லையா, அவர் மனித உரிமைகள் மீறப்படுகிறதா என்பதை மட்டுமே இந்நீதிமன்றம் பார்க்க வேண்டும். பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் இது போல சித்திரவதை செய்யப்படலாம் என்றால் பிறகு அரசியல் அமைப்புச் சட்டம் எதற்கு ? நீதிமன்றங்கள் எதற்கு ?
நாகரீகத்தின் வளர்ச்சி காரணமாகத்தான் இன்று நாம் ஜனநாயகம், நீதிமன்றம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 12 லட்ச ரூபாயைக் கையாடல் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை உள்ளாடைகளோடு இரவு முழுவதும் 14 டிகிரி குளிரில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை இந்த நீதிமன்றம் சரி என்று சொல்லுமேயானால், அது ஜனநாயகத்திற்கு அடிக்கப்படும் சாவு மணி என்பதை மிகுந்த வருத்தத்தோடு இந்நீதிமன்றம் முன் பதிவு செய்ய விரும்புகிறேன்.” என்று அடை மழை போல கொட்டித் தீர்த்து விட்டு அமர்ந்தார்.
முழுமையாக கேட்டுக் கொண்டிருந்த நீதிபதிகள் அமைதியாக அவர்கள் முன்பு இருந்த பேப்பர்களைப் பார்ப்பது போல குனிந்து கொண்டார்கள். வழக்கறிஞர் ராஜராஜனின் வாதம் உறங்கிக் கொண்டிருந்த அவர்கள் மனசாட்சியை உலுக்கியது அவர்கள் முகத்தில் தெரிந்தது. அவசரப்பட்டதற்காக அவமானப்பட்டிருக்க வேண்டும். பட்டார்களா என்பது தெரியவில்லை.
”வாட் டூ யு சே பி.பி. ?” (What do you say PP ?) என்று அரசு வழக்கறிஞரைப் பார்த்து கேட்டார்கள். சிபிஐக்கு ஆஜரான வழக்கறிஞர் எழுந்து, ”மை லார்ட். அக்யூஸ்ட் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை சிபிஐ எவ்விதமான சித்திரவதைக்கும் ஆளாக்கவில்லை. நல்ல முறையில், மரியாதையாக நடத்தப்பட்டார். மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அவர் கையாடல் செய்த பணத்தை எங்கே வைத்திருக்கிறார் என்பது குறித்து தீவிரமான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால் மேலும் அவரை சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்க மனுத் தாக்கல் செய்ய உள்ளோம். ” என்றார்.
”ப்ரிங் ஹிம் ஹியர்”(Bring him here) என்றார் நீதிபதி.
கருப்பு கோட்டு போட்டுக் கொண்டு நீதிபதியின் கீழே அமர்ந்திருந்த நீதிமன்றப் பணியாளர், என்னை அழைத்து வருமாறு சைகை செய்தார். சிபிஐ போலீஸ்காரர்கள் என் கையைப் பிடித்து முன்னே இழுத்துச் செல்ல முயன்றபோது, நீதிபதி “லீவ் ஹிம். ஹி வில் கம் ஆன் ஹிஸ் ஓன்” (Leave him. He will come on his own) என்றார்.
நீதிபதி அருகே சென்றேன். “உங்களை துன்புறுத்தினார்களா ?”
”இரவு முழுவதும் ஜட்டியோடு ஏ.சி குளிரில் படுக்க வைத்திருந்தார்கள்” என்றேன்.
”உணவு கொடுத்தார்களா ?”
”ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் உணவு கொடுத்தார்கள்.” என்று கூசாமல் பொய் சொன்னேன். இது என் நேரம். என் எதிரி என்னை பத்து அடி அடிக்கும்போது நான் அவனை ஒரு முறை திருப்பி அடிக்க கிடைத்த ஆயுதம். அடி வாங்கிக் கொண்டே இருக்க நான் துவைக்கும் கல் அல்ல. என்னால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த கிடைத்த ஒரு வாய்ப்பு. இதை விடமாட்டேன்.
“என்ன விசாரித்தார்கள் ? “
“என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.“
“நீங்க போங்க… பி.பி.. அக்யூஸ்ட் சேஸ் ஹி வாஸ் நாட் இன்டராகேட்டட். தென் ஒய் சிபிஐ கஸ்டடி ?“ (PP. Accused says he was not interrogated. Then why CBI custody ?) என்று சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார்.
உடனே சிபிஐ வழக்கறிஞர், அவர் அருகே இருந்த சிபிஐ அதிகாரியின் காதில் ஏதோ சொன்னார்.
“நோ மை லார்ட். அக்யூஸ்ட் வாஸ் இன்டராகேட்டட் பை த்ரி அஃப்பிஷியல்ஸ். “ (No my lord. Accused was interrogated by three officials)
“ஓ.கே.. ப்ரொட்யூஸ் தி ஸ்டேட்மென்ட் ரெக்கார்டட் ஃப்ரம் தி அக்யூஸ்ட் அட் 2.15“ (Okay. Produce the statement recorded from the accused at 2.15) என்றார் நீதிபதி.
அந்த பி.பி சிபிஐ அதிகாரியிடம் பேசி விட்டு, “அக்யூஸ்டை விசாரிக்கையில் குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்படும். வாக்குமூலம் பின்னர் தனியே தயார் செய்யப்படும்“ என்றார்.
“அந்தக் குறிப்புகளை 2.15க்கு சமர்ப்பியுங்கள்“ என்று கூறி விட்டு, “கால் தி நெக்ஸ்ட் ஐடெம்“ என்று நீதிமன்றப் பணியாளரிடம் கூறினார்.
சிபிஐ வழக்கறிஞர் உடனே வெளியே வந்தார். என்னையும் போலீசோடு வெளியே கூட்டி வந்தார்கள். என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு, அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். சிபிஐ வழக்கறிஞர் கோபமாக சிபிஐ அதிகாரிகளைப் பார்த்துக் கத்தினார். ராஜராஜனும், அருணும் வெளியே வந்தனர். என் அருகே வந்து, ராஜராஜன், “டோன்ட் ஒர்ரி யங் மேன். (Don’t worry young man) கல்யாண சுந்தரம் டோல்ட் எவ்ரிதிங். (Kalyanasundaram told everything) யு ஹேவ் டன் ய க்ரேட் ஜாப். (You have done a great job) நாட் ஒன்லி க்ரேட். (Not only great) வெரி ப்ரேவ் ஆல்சோ.(Very brave also) “ என்று கூறினார்.
நீதிமன்றத்தில் எனக்கு சாதகமாக ஏதாவது செய்கிறார்களோ இல்லையோ. அவர் வாதாடிய திறமைக்காகவே கையெடுத்துக் கும்பிட்டேன். அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்து விட்டு தன் ஜுனியரோடு கிளம்பினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின், மீண்டும் வழக்கு தொடங்கியது.
நீதிபதி பி.பியைப் பார்த்து “எஸ்… “என்றார்.
“மை லார்ட்ஸ்.. ஒரு வாரம் இவ்வழக்கை தள்ளி வையுங்கள். அக்யூஸ்டிடம் எடுக்கப்பட்ட குறிப்புகள் வாக்குமூலங்களாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும். “ என்றார்.
நீதிபதியின் முகத்தில் கோபம். “அக்யூஸ்டுக்கு மூன்று வேளைக்குப் பதில் ஒரு வேளை உணவுதான் வழங்கியிருக்கிறீர்கள். இரவு முழுவதும் குளிர் அறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் சொல்லுகிறார். ஆனால் எதுவுமே விசாரிக்கவில்லை. நான்கு நாட்கள் கஸ்டடிக்கான ஆணை பெற்று இரண்டு நாட்களாக எதுவுமே விசாரிக்கவில்லை என்றால் எதற்காக கஸ்டடி கேட்டீர்கள் ? “
“மை லார்ட். இன்னும் பல விபரங்களை அக்யூஸ்டிடம் வாங்க வேண்டி உள்ளது“ என்றார்.
“நாங்கள் விரும்பினால் எஞ்சியுள்ள இரண்டு நாட்கள் கஸ்டடியை ரத்து செய்ய முடியும். ஆனால், அது காவல்துறையின் புலனாய்வு அதிகாரத்தில் தலையிடுவதாக இருக்கும் என்பதால் அதைச் செய்யாமல் தடுக்கிறோம்.
மேலும் இரண்டு நாள் சிபிஐ காவலில் அக்யூஸ்ட் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் காலை 10, 1.30, 4.30 மற்றும் இரவு 9.30க்கு வழக்கறிஞர் அக்யூஸ்டை சந்திக்கலாம். ஒவ்வொரு சந்திப்பும் அரை மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அக்யூஸ்ட் உறங்கும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி, இரவு முழுவதும் படமெடுத்து அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தினமும் இரவு 7.30 மணிக்கு அரசு மருத்துவர் அக்யூஸ்டை பரிசோதிக்க வேண்டும். சிபிஐ இணை இயக்குநர், அக்யூஸ்ட் சொல்லும் சித்திரவதை குறித்த புகார்களை விசாரிக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டனர்.
இரண்டு நாட்களாக இரவு உறங்காமல், குளிரில் மனதும் உடலும் விரைத்துப்போயிருந்த எனக்கு, இன்று நீதிமன்றத்தில் நடந்தது, பனிப்பிரதேசத்தில் எரியும் தீ போல ஆறுதலாக இருந்தது. நன்றியோடு வழக்கறிஞர்களைப் பார்த்து கும்பிட்டேன். அவர் பதிலுக்கு தலையாட்டி விட்டு கிளம்பினார்.
கல்யாண சுந்தரம் வந்திருப்பார் என்று எதிர்ப்பார்த்துத் தேடினேன். அவரைக் காணவில்லை. மீண்டும் போலீஸ் வாகனத்தை நோக்கி அழைத்துச் சென்றபோது, வண்டியிலும் சிபிஐ அலுவலகத்திலும் அடிப்பார்களோ என்ற பயம் தோன்றியது. ‘அடித்தால்தான் என்ன ? இரவு முழுவதும் ஜட்டியோடு குளிரில் படுப்பதை விடவா அது சித்திரவதையாக இருக்கப் போகிறது ?
மீண்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றியதும், என்னை ஆடையைக் களையச் சொன்ன அதிகாரி, என் அருகில் அமர்ந்தார். “உங்களை என்னமோன்னு நெனச்சேன். நீங்க சாதாரணமான ஆளு இல்ல சார்.“
நான் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
“சார்.. என்ன சார் மூணு வேளையும் சாப்பாடு கொடுத்தோம். ஒரு வேளைதான்னு கோர்ட்ல சொல்லிட்டீங்களே சார்.. ? “
“ஜட்டியோடு ஏ.சி ரூம்ல படுக்க வச்சிட்டு எதுவுமே பண்ணலைன்னு நீங்க சொல்லலையா ? எதுவுமே விசாரிக்காம விசாரிச்சோம்னு சொல்லலையா ?“ என்று சற்று கோபமாகவே சொன்னேன். அந்த நபர் எதுவும் பேசாமல் அமைதியானார்.
நான் தங்கியிருந்த அறையில் கேமரா பொருத்தப்பட்டது. கட்டில் போடப்பட்டது. தலையணையும், போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்கப்பட்டது. இரவு விளக்கை அணைக்காமல் அப்படியே விட்டு விட்டார்கள். சிபிஐ அதிகாரி இரவு வந்து பார்த்தார். சார், கோர்ட் ஆர்டர் படி கரெக்டா பண்ணிட்டோம் சார். வேற எதுனா வேணும்னா சொல்லுங்க சார்“ என்றார்.
இது என் நேரம் அல்லவா ? இதைப் பயன்படுத்தாமல் விடுவேனா ?
“சார் நேத்து அளவுக்கு வேணாம். ஒரு 25 டிக்ரீஸ்ல வைச்சுடுங்க. அப்போதான் கூல்நெஸ் நல்லா இருக்கும்“ என்றேன்.
“என்ன சொன்னீங்க ? “ என்றான்.
“நேத்து அளவுக்கு வேணாம்.. 25 டிகிரில ஏ.சிய செட் பண்ணுங்க சார்.“ என்றேன் சற்று சத்தமாக.
அவன் எதுவும் பேசாமல் போய் விட்டான்.
நான்கு நாட்களும் முடிந்ததும் சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் என்னை ஆஜர்படுத்தினார்கள். அந்த நீதிபதியும், “கஸ்டடி முடிஞ்சுச்சா ? திரும்ப ஃப்ரெஷ் கஸ்டடி கேப்பீங்களா ? “ என்று சிபிஐ அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டார். சிபிஐ காரர்களே எதுவும் பேசாமல் கம்மென்று நிற்கிறார்கள். இந்த நீதிபதிக்கு என்ன அக்கறை ? மற்ற நீதிபதிகளைப் போலவே தலையை குனிந்து கொண்டே, “எனி கம்ப்ளெயின்ட்ஸ் ? “ என்றார்.
“வாட் ஐ சே மே ப்ளீஸ் பி ரெக்கார்டட்…“(What I say may please be recorded) என்று நான் சொன்னதும், நீதிபதி நிமிர்ந்தார். நான் சித்திரவதை செய்யப்பட்ட விபரங்களையும், உயர்நீதிமன்றத்தில் நடந்ததையும் சொன்னேன். எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் நடந்ததை பதிவு செய்து கொண்டார்.
மீண்டும் புழல் சிறைக்கு வண்டி சென்றது. வழியில் சிபிஐ அதிகாரிகள் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
புழல் சிறையில் என் அறைக்குச் செல்லும் முன் அதே சோதனைகள் நடந்தன. இம்முறை சோதனை நடந்தபோது முதல் முறை இருந்த நடுக்கம் இல்லை. பயம் தெளிந்திருந்ததை உணர முடிந்தது. அடுத்து இதுதான் நடக்கும் என்பதும் தெரிந்ததாலா ? அவர்கள் சொல்லும் முன்பாக நானே சட்டையைக் கழற்றினேன். முதல் முறை சோதனை போட்ட அளவுக்கு கடுமை இல்லாமல் பெயருக்கு சோதனை போட்டது போல இருந்தது.
உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று வக்கீல் சொன்னார். ஆனால் எப்போது கிடைக்கும் என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே வந்து பத்து நாட்கள் கடந்து விட்டன. இன்னும் எவ்வளவு நாள் என்பது புரியாததால் சற்றே மனக்கலக்கம் இருக்கத்தான் செய்தது. அம்மாவின் நினைவும் அவ்வப்போது வந்து போனது.
முதல் நாள் ருசி பார்த்த பிறகு அந்தப் பொங்கலைத் தொடுவதேயில்லை. காலையில் கொடுக்கும் டீயோடு பிஸ்கட்டைத் தின்று காலை உணவை முடிப்பது வழக்கமாகி விட்டது. மதியம் டிபன் பாக்ஸைக் கவிழ்த்து வைத்தது போல குழைந்த சோறு. கருப்புக் கலரில் தண்ணீர் போல குழம்பு. ஏதாவது ஒரு கூட்டு அல்லது பொரியல். இரவும் அதே சோறு. மாலை ஆறு மணிக்கு சிறையை அடைப்பதற்கு முன்பாக உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தவற விட்டால் அன்று இரவு பட்டினிதான். ஆனால், சிறைக் கைதிகளுக்குள்ளாக ஒரு நட்புறவு வளர்ந்து விடுகிறது. கூட இருப்பவர் உணவு வாங்கத் தவறினால், வாங்கி அறையில் வைத்து விடுகிறார்கள். இது எல்லா அறைகளிலும் நடப்பதை பார்க்க முடிந்தது. நானும் அவன் தாமதாக வந்தால் வாங்கி வைக்கத் தொடங்கினேன்.
பத்து நாட்கள் ஆனதால் தாடி வளர்ந்து அரிக்கத் தொடங்கியது. வாரம் ஒரு முறை நான் இருந்த வளாகத்திற்கு சவரம் செய்பவர்கள் வருவார்கள். வரிசையில் நின்று சவரம் செய்து கொள்ள வேண்டும். முடியும் வெட்டிக் கொள்ளலாம். இரண்டு பீடியோ, 10 ரூபாய் பணமோ கொடுத்தால் புது ப்ளேடு போடுவார்கள். இல்லையென்றால் பழைய ப்ளேடுதான். என் அறையில் இருந்தவனிடம் ஏராளமான பீடிகள் இருந்தன. எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தான். பீடிதான் சிறையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தாலும், பீடி இல்லாவிட்டால் சிறையை நடத்தவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். பீடி இல்லாதவர்கள், தங்கள் சுயமரியாதையை இழந்து, பீடி பிடித்துக் கொண்டிருப்பவரிடம் ஒரு இழுப்பு கொடுங்கள் என்ற கெஞ்சுவது சிறையில் சாதாரணமான காட்சி.
இரண்டு பீடிகளை எடுத்துக் கொண்டு சவரம் மட்டும் செய்து கொண்டேன். பீடியில்லாதவர்கள், பழைய ப்ளேடுகளில் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஷேவிங் செய்து கொண்டார்கள்.
முடி திருத்த வருவர்களும் கைதிதான். அவர்கள் சிறை ஊழியர்கள் அல்ல. ஏதாவதொரு குற்றம் புரிந்து விட்டு சிறைக்குள் வந்தால், இந்த வேலையைச் செய்வதால் அவர்களுக்கு பீடி கிடைக்கிறது. அவர்களும் பீடி கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒரு மணி நேரத்தில் எட்டு பேருக்கு ஷேவிங் செய்கிறார்கள். ஒரு ஷேவிங்குக்கு நாற்பது ரூபாய் வாங்குபவர்கள் ஒரு ரூபாய் பெறுமானமுள்ள பீடிக்காக ஷேவ் செய்கிறார்கள்.
‘சிறைதான் மனிதனை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது.. ? வெளியில் இருந்தால், முடி வெட்டும் கடையில் பழைய ப்ளேடை போட விடுவோமா ? எந்தவொரு பேச்சும் பேசாமல், எத்தனை பேருக்கு ஷேவிங் செய்த ப்ளேட் என்பது கூட தெரியாமல், அமைதியாக முகத்தைக் காட்டி விட்டு செல்கிறார்கள். சூழல் மனிதனை எப்படி பக்குவப்படுத்தி விடுகிறது ?’
என் ரூம் மேட் முடி வெட்டும் இடத்துக்கு வந்து சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அங்கே ஒருவன் தினத்தந்தி வைத்து படித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் படிச்சுட்டு தர்றீங்களா என்று கேட்டேன்.
”இந்தாங்க” என்று சப்ளிமென்ட்டை எடுத்துக் கொடுத்தான். சற்று நேரத்தில் ”அண்ணா பீடி இருக்கான்னா ? ” என்றான். என்னிடமிருந்த இரண்டில் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். என் ரூம் மேட் என்னைப் பார்த்து முறைத்தான்.
‘நீயே ஓசி.. நீ இன்னொருத்தனுக்கு ஓசி குடுக்கறியா..’ என்று கேட்பது போல எனக்குத் தோன்றியது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
பேப்பர் படிப்பவனுக்கு கேட்காத குரலில் என் ரூம் மேட், ”நீங்க பாட்டுக்கு பீடிய ஓசி குடுக்கறீங்க. டிமான்ட் வந்துச்சுன்னா என்ன ஆகும் தெரியுமா ?” அமைதியாக பார்த்தேன்.
”திடீர்னு கைதி யாராவது தகராறு பண்ணான்னா, இல்லை ஏதாவது பிரச்சினை வந்துச்சுன்னா, ஜெயிலுக்குள்ள பீடி வர்றதை கட் பண்ணிடுவாங்க. நீங்க குடுத்த அந்த பீடி பத்து ரூபா ஆயிடும் தெரியுமா ?. இப்படித்தான் வந்து கேப்பாங்க. இனிமே கேட்டா குடுக்காதீங்க..” என்று விட்டு பாக்கெட்டிலிருந்து இரண்டு பீடிகளை எடுத்துக் கொடுத்தான்.
இப்படி ஒரு நல்ல மனது படைத்தவன் எப்படி கொலை செய்திருக்க முடியும் ? முன் பின் தெரியாத ஒருவன் நான். என்னால் இவனுக்கு எதுவுமே ஆகப்போவதில்லை. ஆனால், சிறையிலேயே அதிக மதிப்புள்ள பொருளான பீடியை சர்வ சாதாரணமாக கொடுக்கிறானே.
திடீரென்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன், சார்… “உங்க போட்டோ பேப்பர்ல வந்துருக்கு சார்” என்றான்…
தொடரும்.
very thrill story sir. super narration. got to know many things. your way of story telling easily involve the reader in to the concept. reduce the breaks please.
ரொம்ப எதிர்பர்ர்ப்புகளுடன் செல்கிறது. உங்கள் அரசியல் கட்டுரைக்களுக்கு கிடைத்த வரவேற்பையும் மிஞ்சிவிடும்போல உள்ளது
சார் நானும் செய்யாத குற்றத்திற்காக பத்து நாள் சித்திரவதை பட்டேன் இந்த பதிவு என் மனதை என் பழைய நினைவை மேலும் பாதித்துள்ளது சிறையில் நடப்பதை கண் முன்பு நிறுத்தினீர் இப்படி ஒருவரின் சுயநலத்திற்காக மற்றவரை சித்திரவதை செய்வது கொடுமையிலும் கொடுமை…ஒருமுறை சிறை சென்றால் வாழ்கையே வீணாகிடுமே….
ப.சிங்காரவேலன் இவ்வளவு கொடூரமான அரசியல்வியாதியா,அவன் …
Excellent Story telling, and excellent plot- Looks like a train of personal experiences.
A small issue that I noticed: The personal pronoun has been inconsistent from Episode 1. In a few places, it sounds Venkat did that, Venkat did this. In a few places, it sounds I did, it happened to me….- not sure if this is intentional, or if you got emotional while narrating your personal experience?
Oh, by the way, I have been following you from Sept 2014, and have huge respect for your conviction. Much courage to you!!
இது உண்மையிலேயே நடந்த கதை போல தெரிகிறது. ஒவ்வொரு அத்யாயதையும் அதிக இடைவெளி இல்லாமல் வெளியிடவும்.
Interesting… Is it real story ?