பரபரப்பாக ஆளுக்கு ஒரு பக்கம் பேப்பரை வாங்கிக் கொண்டார்கள். எனக்கு இருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் ரூம் மேட், “சார் ஜெயிலர் ரூம்ல எல்லா பேப்பரும் இருக்கும். அங்க போய் படிங்க“ என்றான். வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லி விட்டு, ஜெயிலரை பார்க்கச் சென்றேன்.
“வாங்க வெங்கட்…“ என்றார். இத்தனை நாள் என்னை நடத்தியதற்கும், இன்று என்னை நடத்துவதற்கும் வித்தியாசம் தெரிந்தது. திடீரென்று மரியாதை கூடியது போல இருந்தது.
‘ஒன்றும் புரியவில்லையே.. அப்படி என்ன செய்தி வந்திருக்கும் ?’
“இந்தாங்க வெங்கட்.. உங்களப் பத்திதான் எல்லாப் பேப்பர்லயும் நியூஸ்.. பாருங்க“ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து போய் விட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்திலேயே செய்தி வந்திருந்தது. “ப்ளோன் விசில் ப்ளோவர்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. டெக்கான் க்ரானிக்கிள் என் படத்தை போட்டு “த மேன் ஹு சின்க்ட் சிங்காரவேலு”(The man who sinked Singaravelu) என்றது. அது இரண்டு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம். அம்மாவிடம் வாங்கியிருப்பார்கள். தினமலர், “சிக்கவைத்தவர் சிக்கினார்” என்றது. கதிரொளி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். “சிங்காரவேலு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு காரணமானவரை சிபிஐ பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர் கல்யாண சுந்தரம்” என்று தொடங்கி நடந்தவற்றை விரிவாக எழுதியிருந்தது கதிரொளி. வங்கியில் லாக்கரை அனைவர் முன்னிலையிலும் திறந்தது, அதற்காக உரிய பதிவேடுகளில் பதிவு செய்தது, நான் இல்லாவிட்டால் இந்த ஊழல் வெளி வந்திருக்காது, சிபிஐயில் எனக்கு நடந்த சித்திரவதை என்ற விபரங்கள் உள்ளிட்டவை விரிவாக வந்திருந்தன. நான் படித்து முடிக்கையில் ஜெயிலர் வந்து விட்டார். ”ரொம்ப பெரிய விஷயம் பண்ணிருக்கீங்க சார். நான் கூட முதல்ல உங்களைத் தப்பா நெனச்சேன். எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கீங்க.. ஒரு மலையையே சாச்சுருக்கீங்க சார்.” என்றார்.
”அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்” என்றேன்.
”உங்களுக்கு ஏதாவது வேணும்னா எப்போ வேணாலும் என்னை வந்து பாக்கலாம்.”
”தேங்ஸ் சார். ஒரே ஒரு ரெக்வெஸ்ட் சார்” என்றேன்.
”என்ன சொல்லுங்க..” என்றார்
”என் செல்லுக்கு கதிரொளி பேப்பர் வந்துச்சுன்னா ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”
”கண்டிப்பா போட சொல்றேன்… பட் உங்க வீட்டுல வர்ற மாதிரி காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துடும்னு எதிர்ப்பாக்காதீங்க. பதினோரு மணிக்குத்தான் வரும்.”
”ஏன் சார் இங்க பேப்பர் லேட்டா வருமா ? ”
”நோ. நோ… காலையில ஆறு மணிக்கே வந்துடும். ஜெயில் ரூல்ஸ் படி, எல்லாப் பேப்பரையும் படிச்சு, கைதிகள் பாக்கக்கூடாத பகுதிகளை கருப்பு மையில அழிச்சுட்டுத்தான் தருவோம்.”
”ஏன் சார் அப்படி ?”
”அதெல்லாம் தெரியாது சார். வெள்ளைக்காரன் காலத்துல போட்ட ரூல்ஸ். சுதந்திரப் போராட்டம் நடந்தப்போ பெரும்பாலான தலைவர்கள் ஜெயில்லதான் இருந்தாங்க. வெளியில நடக்குற போராட்டம் அவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு போட்ட ரூல்ஸ் அது. அதை இன்னைக்கும் ஃபாலோ பண்றோம். செர்டைய்ன் திங்ஸ் டோன்ட் சேன்ஜ்”(Certain things don’t change)
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போய் எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் காலனியாதிக்கத்தின் எச்சங்களாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டத்தை இன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோமே…. இதை யாருமே கேட்க மாட்டார்களா… வாய் கிழியப் பேசும் ஒரு அரசியல்வாதி கூட இதைப் பற்றிப் பேசமாட்டேன்கிறார்களே..
‘ஜெயிலர் என்னை ”சார்” என்று அழைத்தது வித்தியாசமாக இருந்தது. ஒரே நாளில் எப்படி எல்லாம் தலைகீழாக மாறி விட்டது ?’
வெளியில் வந்தபோது வழக்கமாக என்னைச் சோதனையிடும் காவலர்கள் ”நீங்க போங்க சார்” என்றனர். செல்லுக்குத் திரும்பினேன். ரூம் மேட் சிரித்தபடி வரவேற்றான். ”சார்.. என்னா சார் இவ்ளோ பெரிய வேலை பண்ணிருக்கீங்க.. ஜெயில் பூரா உங்களப்பத்திதான் பேச்சு.. கலக்கிட்டீங்க சார். ” என்றான்.
மதியம் மூன்று மணிக்கு ஒருவர் என் செல்லுக்கு வந்தார். ”வணக்கம் தோழர்” என்றார். ”வணக்கம்” என்றேன்.
”என் பேர் சுந்தரமூர்த்தி. போன மாசம் ஜார்கண்ட்ல அரெஸ்ட் ஆனேன். தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஜார்கண்டில் கைதுன்னு பேப்பர்ல பாத்துருப்பீங்களே.. அது நான்தான். 15 வருஷமா அமைப்புல இருக்கேன். மாவோயிஸ்ட் பார்ட்டி உருவாகறதுக்கு முன்னாடி, பிடபிள்யுஜியில இருந்தேன்.” என்றார். புகைப்படத்தைப் பார்க்காமல், செய்திகளை மட்டும் படிக்கும் போது, மனதில் ஏற்படும் பிம்பங்களுக்கும், நேரில் பார்க்கும் உருவங்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை.
இந்த சுந்தரமூர்த்தி கைதானபோது, மூன்று வாரங்களுக்கு இவரைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இவர் கொரில்லா யுத்தத்தில் நிபுணர். பல்வேறு நாடுகளில் ஆயுதப்பயிற்சி எடுத்திருக்கிறார். உலக நாடுகளில் உள்ள நக்சலைட் இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று தொடர்ந்து வந்த செய்திகள், இவரை கிங் காங் போல எண்ண வைத்திருந்தன.
ஆள் பார்க்க சாதாரணமாக இருந்தார். சாலையில் பார்த்தால் இரண்டாவது முறை திரும்பிப் பார்க்க மாட்டோம். மிகச் சாதாரணமாக இருந்தார்.
”நீங்க சிபிஎம்.ல இருக்கீங்களா ?”
”ஆமாம் தோழர்..”
”சிபிஎம்ல இருந்துக்கிட்டு எப்படி இப்படி ஒரு வேலையைச் செய்தீங்க ? ஆச்சர்யமா இருக்கு ? நாங்க செய்யற வேலைக்கும் நீங்க செய்ததுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.”
”இதுக்கும் பார்ட்டிக்கும் சம்பந்தம் இல்லை தோழர்”
”சம்பந்தம் இருக்காதுன்னு எனக்கும் தெரியும். சிங்காரவேலுவைப் பத்தி இப்படி ஒரு இன்பர்மேஷன் கிடைச்சுதுன்னா, இந்த இன்பர்மேஷனை வைச்சு, அடுத்த எலெக்ஷன்ல சிபிஎம்முக்கு கூடுதலா சீட் கேக்க இதை யூஸ் பண்ணிருப்பாங்க. வெளியிட்டிருக்க மாட்டாங்க. அதான் நீங்க எப்படி இதைப் பண்ணீங்கன்னு கேட்டேன்.”
கல்யாணசுந்தரத்தின் பங்கைப் பற்றிச் சொல்லலாமா வேண்டாமா ? அவரையும் வம்பில் சிக்கவைத்து விடுவோமோ… சிறையில் இருப்பவரிடம் சொல்வதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது.
கல்யாண சுந்தரத்திடம் இவ்விஷயத்தை முதலில் சொன்னதையும், விஷயத்தை வெளியில் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளையும் விளக்கினேன்.
”உங்கள மாதிரி, கல்யாண சுந்தரம் மாதிரி ஆட்களெல்லாம் என் இன்னும் சிபிஎம்ல இருக்கீங்கன்னுதான் எனக்குப் புரியவே மாட்டேங்குது தோழர்.”
”என் அரெஸ்டைப் பத்தி கட்சி எதுவும் நடவடிக்கை எடுக்காதுன்னு சொன்னதும், கல்யாண சுந்தரம் வெளில வந்துட்டார் தோழர்.”
”நீங்களும் வெளியில வாங்க. ரொம்ப சந்தோஷம் தோழர் உங்களை சந்திச்சதுல. நீங்க சீக்கிரம் வெளியில போயிடுவீங்க. நானெல்லாம் சிறையை விட்டு வெளியில வரவே மாட்டேன். நீங்க இருக்கற நாளை எப்படி உபயோகமா பயன்படுத்தறதுன்னு பாருங்க. நெறய்ய படிங்க. என்ன வேணும்னாலும் என்னைக் கேளுங்க. சிறை நிர்வாகத்திலேர்ந்து ஏதாவது தொந்தரவுன்னா சொல்லுங்க.. தட்டக் கவுத்திட்றேன்.” என்றார்.
”தட்டக் கவுக்கறதுன்னா ? ”
”சிறை மொழியில அதுக்கு உண்ணாவிரதம்னு பேரு தோழர். உண்ணாவிரதப் போராட்டம் காந்தியோட செத்துப் போச்சு. வெளியில உண்ணாவிரதம் இருந்தா யாருமே கண்டுக்கப்போறதில்லை. ஆனா, சிறையைப் பொறுத்தவரைக்கும் உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம். உண்ணாவிரதம்னு சொன்னா அதிகாரிங்க நடுங்குவாங்க. நீங்க கவலைப்படாம இருங்க. என்ன வேணாலும் கேளுங்க” என்று சொல்லிவிட்டு, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை தந்தார்.
”இதைப் படிங்க. முடிச்சுட்டு சொல்லுங்க வேற புக் தர்றேன். பீடி இருக்கா ?”
”இருக்கு தோழர். ”
விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார். நான் சிறைக்கு வந்ததிலேயே மகிழ்ச்சியான விஷயம் என்றால் அது சுந்தரமூர்த்தியை சந்தித்ததுதான். மக்களுக்காக போராடுகிறோம் என்று பறைசாற்றிக் கொண்டு, ஏ.சி கார்களில் பவனி வந்து, நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்தி, சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ஒரு பக்கம். உணவில்லாமல், தங்க இடமில்லாமல், காடு மேடுகளில் மக்களோடு மக்களாக வாழ்ந்து, அரசாங்கத்தின் துப்பாக்கிகளை எதிர்கொண்டு, இந்த மக்களுக்காக தங்கள் வாழ்வையே பணயம் வைக்கும் நக்சலைட்டுகளை நேரில் சந்திக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, சுந்தரமூர்த்தியை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மக்களின் நன்மைக்காக தங்கள் உயிரையும் இழக்கத் துணியும் இவர்களை எது தூண்டுகிறது ? ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் என்றும் எடுத்துக் கொள்ள முடியாதே.. இவர்கள் இருப்பதே வெளி உலகத்துக்கு தெரியப்போவதில்லையே. வெளியில் தெரிந்தால்தானே ஹீரோ ஆக முடியும் ?
வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்து, ராஜீவ் காந்தி போன்ற செல்வந்தர்கள் படிக்கக் கூடிய டூன் ஸ்கூலில் படித்து, பின்னர் இந்தியாவின் மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து சென்று, சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக வேலை பார்த்த பின்னர், நக்சலைட்டாக மாறியவர் கோபட் காந்தி. தன்னுடைய சக நக்சலைட்டான அனுராதாவை திருமணம் செய்து, அவருக்கு மலேரியா காய்ச்சல் வந்து சிகிச்சை அளிக்க முடியாமல், தண்டகாரன்யா காடுகளில் கண் முன்னால் அவர் உயிர் பிரிவதை பார்த்தவர்தான் கோபட் காந்தி. புற்றுநோய்க்காக சிகிச்சை எடுக்க வருகையில் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இவர் ஏன் தன்னுடைய செல்வச் செழிப்பையும், தன் கல்வியையும் பயன்படுத்தி மேலும் பணக்காரனாகாமல், உணவில்லாமல், தங்க இடமில்லாமல் காடுகளில் திரிந்து கொண்டிருந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.‘
‘எல்லாரையும் போல, உண்டு, உடுத்தி, உறங்கி, திருமணம் செய்து, பிள்ளை பெற்று, பொருளாதார முன்னேற்றத்தையே வாழ்வின் லட்சியமாகக் கருதி ஏன் இவர்களால் வாழ முடியவில்லை ? சிங்காரவேலுவின் ஊழலை நான் ஏன் வெளியிட்டேன் ? இதில் உள்ள ஆபத்து எனக்கு மட்டும் தெரியாதா என்ன ? இந்த ஊழல் வெளியே வந்தே ஆக வேண்டும் என்ற முடிவில்தானே இந்த ரிஸ்க்கை நான் எடுத்தேன் ? இவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்பதுதானே உண்மை !!
‘சிறை செல்வோ, சித்திரவதை செய்யப்படுவோம் என்பது முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை நான் இதைச் செய்திருக்க மாட்டேனோ…’ என்னால் தெளிவான விடை காண முடியவில்லை.
மறு நாள் செய்தித்தாளில், பாராளுமன்றத்தில் கல்யாணசுந்தரம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் எதிரொலித்தன. சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் அமளி என்று வந்திருந்தது. மூன்றாவது பக்கத்தில், சிங்காரவேலு மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி பொது நல வழக்கு என்று செய்தி வெளியாகியிருந்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு சிங்காரவேலு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
இரண்டு வாரங்கள் கழித்து சிங்காரவேலு மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் மத்திய அரசு அறிவிப்பு என்று செய்தி வெளியாகியது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வேலாயுதம் என்பவர் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் இயங்கும். முன்னாள் மத்திய அமைச்சர் சிங்காரவேலு மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னணி, அதன் உண்மைத் தன்மை, இதில் ஏதாவது சதித்திட்டம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அந்த ஆணையம் ஆறு மாதத்துக்குள் அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரிய பொது நல வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என்பதால், தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
பதவியில் இல்லாவிட்டாலும் சிங்காரவேலுவுக்கு இருந்த செல்வாக்கு பிரமிக்க வைத்தது. எவ்வளவு சாதுர்யமாக சிபிஐ விசாரணையை தவிர்த்து விட்டார்.. சிபிஐ மட்டும் என்ன…. விசாரித்துக் கிழித்து விடுவார்களா.. என் மீது வழக்கு போட்டதும் இதே சிபிஐதானே…
ஆனாலும் சிங்காரவேலுவுக்கு சிபிஐ என்றால் ஏதோ ஒரு பயம் இருந்தது மட்டும் புரிந்தது. இல்லையென்றால் எதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் ? என்று யோசனைக்கு இரண்டு நாட்களில் விடை கிடைத்தது.
தினமும் பதினொரு மணிக்கு வரும் கதிரொளி, மாலை நாலு மணி வரை வரவில்லை. ஜெயிலர் அலுவலகத்திற்குச் சென்று கேட்டேன்.
”உங்களுக்கு விஷயம் தெரியாதா… கதிரொளி ஆபீஸ்ல என்கொயரி கமிஷன் ரெய்டு. ப்ரெஸ் எல்லாத்தையும் மூடிட்டாங்க.” என்று கூறிவிட்டு அன்றைய தினத்தந்தியை எடுத்துக் காண்பித்தார்.
கதிரொளி அலுவலகத்தில் நீதிபதி வேலாயுதம் விசாரணைக் கமிஷன் அதிகாரிகள் சோதனை. இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் கட்டுக் கட்டாக ஆவணங்களை அள்ளிச் சென்றனர். சிங்காரவேலு மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட வேலாயுதம் ஆணைய அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக கதிரொளி பத்திரிக்கை அலுவலகத்தில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். விசாரணை ஆணையத்தின் வரம்புகளை நிர்ணயித்த மத்திய அரசு, சிங்காரவேலு மீதான ஊழல் புகார்கள் வெளியான பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால், இதற்கான ஆதாரங்களை முதலில் வெளியிட்டது கதிரொளி பத்திரிக்கை என்பதால், இந்தச் சோதனை கதிரொளி அலுவலகத்தில் நடந்ததாக விசாரணை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்யாண சுந்தரத்தின் ப்ரெஸ் மீட்டுக்குப் பிறகு எனக்கு இருந்த நம்பிக்கை தளர ஆரம்பித்தது. கதிரொளி ஒரு பிரபலமான பத்திரிக்கை. குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இன்று விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஆசிரியர், பல்வேறு அரசியல்வாதிகளுக்கு பர்சனலான நண்பர். ஒரு அரசியல்வாதியால் என்னென்ன செய்ய முடிகிறது என்பதை நினைத்தால் மலைப்பாக இருந்தது.. கதிரொளிக்கே இந்த கதி என்றால் என்னை என்ன செய்வார்கள் ? என்னையே அறியாமல் ஒரு பய உணர்ச்சி உட்புகுந்ததை உணர முடிந்தது.
மூன்று நாட்கள் கழித்து கதிரொளி மீண்டும் வர ஆரம்பித்தது. ஆனால் ரெய்டு குறித்து எந்தச் செய்திகளும் வரவில்லை. முதல் பக்கத்தில் சிறிய பாக்ஸில், தவிர்க்க இயலாத காரணங்களால், கடந்த இரண்டு நாட்களாக கதிரொளி வெளி வர இயலவில்லை. வருந்துகிறோம் என்று மட்டும் இருந்தது.
கதிரொளியின் மீது நடந்த தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்கவேயில்லை. ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கே இந்த கதி என்றால் நம்மை என்ன செய்வார்கள் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. சிறைக்கு வந்து 45 நாட்கள் கழித்து, சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியுள்ள செய்தி வந்தது. ஜாமீன் வழங்கினாலும், எனக்காக ஷ்யூரிட்டிகள் நிறுத்தி, அது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்து வெளியே செல்ல இரண்டு மூன்று நாட்களாகுமென்றான் என் ரூம் மேட்.
ஜாமீன் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுக்கு என்னைப் பிரியப்போகிறோம் என்ற வருத்தம் இருந்தது. வெளில போயிட்டு என்னை ஞாபகம் வச்சுக்கங்க சார்.. மறந்துடாதீங்க… எப்பயாவது நேரம் கிடைச்சா மனு போட்டுப் பாருங்க சார்…” என்றான்.
‘எனக்கு கஷ்டமாக இருந்தது. ரொம்ப கொஞ்ச நாளே பழகியிருந்தாலும் கூட அவன் எனக்கு நெருக்கமாகியிருந்தான்’
அப்போது ஜெயிலர் கூப்பிடுகிறார் என்று அழைத்தார்கள். ”அதுக்குள்ளயா பெயில் ஆர்டர் வந்திருக்கும் ? ரெண்டு நாள் ஆகும்னு சொன்னியே ? ” என்று ரூம் மேட்டிடம் கேட்டேன்.
”பெயிலா இருக்காது சார்.. வேற ஏதாவது இருக்கும்… பாத்துட்டு வாங்க.. பெயில் ஆர்டர் இன்னைக்கு வந்தாலும், நாளைக்கு காலையிலதான் விடுவாங்க…”
ஜெயிலர் அறையில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். ஜெயிலரைப் பார்த்து வணக்கம் சொன்னேன். ”உக்காருங்க சார்” என்றார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது.
என்னிடம் ஒரு பேப்பரை நீட்டிக் கையெழுத்துப் போடச் சொன்னார்.
அது என்னை வேலையை விட்டு நீக்கியதற்கான டிஸ்மிஸ்ஸல் ஆர்டர்.
தொடரும்.
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போய் எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் காலனியாதிக்கத்தின் எச்சங்களாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டத்தை இன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோமே…. இதை யாருமே கேட்க மாட்டார்களா… வாய் கிழியப் பேசும் ஒரு அரசியல்வாதி கூட இதைப் பற்றிப் பேசமாட்டேன்கிறார்களே..
நம்மவர்களுக்கு உரைக்ககூடிய கருத்துகள்.
படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது
super chapter sir. very few situations made us to meet and realized the real heroes. what a cruel world! bad people got more powers.