தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. 80 சதகிதம் வாக்குப் பதிவு செய்து புதிய வரலாற்றை படைத்துள்ளார்கள் தமிழக மக்கள்.
பல பூத்களில் காலை 8 மணிக்கு முன்பே வரிசையில் நிற்கத் தொடங்கினர் மக்கள். பொதுவாக வரிசையில் நின்று வாக்களிப்பதை ஒரு பெரிய வேலையாகக் கருதி, தேர்தல் நாளை விடுமுறை தினமாகக் கருதி, டிவி முன் பொழுதை கழிக்கும் நடுத்தர வர்க்கமும், ஊரில் எது நடந்தாலும் கவலையே படாத உயர் நடுத்தர வர்ககமும், வரிசையில், வெயிலில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்ததை காண மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை நாள் இல்லாத அளவுக்கு திடீரென்று என்ன அப்படி ஒரு ஆர்வம் ? அதிக எண்ணிக்கையிலான வாக்குப் பதிவுக்கு ஒரே ஒரு விளக்கம் தான் இருக்க முடியும். மாற்றம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இந்த ஊழல், மக்களை அருவருப்படையச் செய்திருக்கிறது. நேற்று வாக்களிக்கச் சென்ற பல்வேறு தரப்பினரிடம் பேசிய போது, வாக்குகளுக்கு திமுகவினர் பணம் கொடுத்த விவகாரமே அவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், நீங்கள் என்ன எங்களுக்கு பணம் தருவது, நான் உனக்கு பெரிய பரிசை தருகிறேன் பாருங்கள் என்று கோபத்தோடு வாக்களித்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் மத்தியில் மட்டும் ஜெயலலிதா எதிர்ப்பு மனப்பான்மை இன்னும் மறையவில்லை. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்களின் உரிமைகள் பாதிக்கப் படும், பறிக்கப் படும் என்றே நம்புகிறார்கள்.
இந்த தேர்தல், வாக்குப் பதிவு சதவிகிதத்தை மட்டும் வைத்து, திருப்பு முனை தேர்தல் என்று சொல்ல முடியாது இது வரை தமிழகம் கண்டிராத அளவில், ஏன் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவில், தேர்தல் ஆணையம், தன் செயல்பாடுகளை தமிழகத்தில் தீவிரப்படுத்தியது.
தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே, தேர்தல் ஆணைய அதிகாரிகள், இந்த முறை வாக்குகளுக்கு பணம் கொடுத்து, தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் திமுகவின் முயற்சியை முறியடிப்பது என்று முனைப்பு கொண்டார்கள். தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களிலும், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவது, மிகப் பெரிய பிரச்சினை என்று தெரிவித்தார். அந்தப் பெரிய பிரச்சினையை மிக மிக திறம்பட தேர்தல் ஆணையம் சமாளித்துள்ளதாகவே சவுக்கு பார்க்கிறது.
எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சாலையெங்கும் எத்தனை சோதனைச் சாவடிகள் ? வாகன ரோந்தில் பறக்கும் படைகளை ஈடுபடுத்தி, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி எளிதாக வெற்றி பெறலாம் என்ற திமுக வின் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டார்கள்.
இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக ஜாபர் சேட்டின் மாற்றத்தை சவுக்கு பார்க்கிறது. ஜாபர் சேட், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக தொடர்ந்திருந்தால், தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பான நடவடிக்கைகளை எப்படியாவது தடுத்திருப்பார் என்றே சவுக்கு கருதுகிறது. லத்திக்கா சரண் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்ற உத்தரவிட்ட போது, அதை அவ்வளவாக கண்டு கொள்ளாத கருணாநிதி ஜாபர் சேட்டை மாற்றியதும், கடும் கோபம் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது தொடர் தாக்குதல்களை தொடங்கியதை நம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். ஜாபர் சேட் இல்லாததால் பணப் பட்டுவாடா நிறுத்தப் பட்டது மட்டுமல்ல… எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் பிரச்சார யுத்திகளையும் கருணாநிதியால் ஒட்டுக் கேட்க முடியாமல் போனதே இதற்குக் காரணம்.
ஜாபர் சேட்டின் மாற்றம் ஒரு துணிச்சலான அறிவு பூர்வமான நடவடிக்கை என்றால், மேலும் பல அதிகாரிகளை மாற்றி, நேர்மையாக செயல்படாமல், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் கண்காணிக்கப் பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அறிவிப்பு பெருமளவில் பலன் அளித்தது.
இந்தத் தேர்தலில் நடந்த மற்றொரு சிறப்பான விஷயம் மதுரை கலெக்டராக நியமிக்கப் பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகம் இருக்கும் சூழலில், நேர்மையான அதிகாரிகளை ஒதுக்கி வைப்பது என்ற விவகாரத்தைத் தாண்டி, நேர்மையான அதிகாரிகளை ஒழித்துக் கட்டுவது என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான நேர்மையான அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்கு மாறுதலில் சென்றது இதற்கு ஒரு உதாரணம். அப்படியும் இருக்கும் மீதம் உள்ள ஒரு சில அதிகாரிகளும், திமுக வோடு மோதி வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டு, அமைதியாக ஒதுங்கிக் கொண்டார்கள். அப்படிப் பட்ட ஒரு நிலையில், சகாயம் எப்படிப் பட்ட அதிகாரி என்றால், ஒதுங்கிப் போகும் அதிகாரி அல்ல….. பாதகம் செய்பவரைக் கண்டு பயம் கொள்பவர் அல்ல…… சகாயத்தின் நியமனம், மதுரை நகருக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம்.
சகாயம் மற்றும் மற்ற அதிகாரிகள் மதுரை நகரில் எப்படிப் பட்ட சூழலில் பணியாற்றினார்கள் தெரியுமா ? அவர்களைத் தவிர, அங்கே பணியாற்றும் அத்தனை பேரும், அழகிரியின் நபர்கள். குறிப்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் பிஆர்ஓ, அழகிரியின் தீவிர விசுவாசி என்று கூறுகிறார்கள். இந்த நபர், பறக்கும் படை, சோதனைக்கு கிளம்பிய உடன், தகவலை சம்பந்தப் பட்ட இடத்திலேயே சொல்லிக் கொண்டு இருக்கிறார். இதையடுத்து, சகாயம், தகவல் சென்று, அவர்கள் பணத்தை பத்திரப் படுத்தும் இடத்தை கண்டுபிடித்து, அந்த இடத்தில் சோதனை போட்டு, கடும் நெருக்கடி கொடுத்தார்.
40 காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்புக்காக வைத்திருந்த அழகிரியிடம் இருந்து, அளவுக்கு அதிகமாக இருக்கும் அதிகாரிகளை அப்புறப் படுத்தினார்கள். அஞ்சா நெஞ்சன் என்று தன்னை அழைத்துக் கொண்ட அழகிரி, அஞ்சி நடுங்கி, என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறினார். கருணாநிதி அவர் பங்குக்கு புலம்பினார். தேர்தல் ஆணையமோ, உனக்கு பாதுகாப்பு தானே வேண்டும். மத்திய போலீசை பாதுகாப்புக்கு அளிக்கிறோம் என்று கூறினார்கள். எதுவுமே செய்ய முடியாமல், அழகிரி திணறியது வெளிப்படையாகவே தெரிந்தது.
பணத்தை பட்டுவாடா செய்ய முடியாமல், திணறிய அழகிரி, சகாயம் மீது, அவதூறான குற்றச் சாட்டுகளை சுமத்தி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்தார். அதுவும் வெற்றி பெறாமல் போய், தன் விதியை நொந்து கொண்டு தன் தந்தையை திட்டித் தீர்த்தார்.
தினகரன் ஊழியர் எரிப்பு வழக்கை சற்றே நினைத்துப் பாருங்கள். பட்டப் பகலில், அழகிரியின் ஆட்கள், ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, மூன்று பேரை கொலை செய்து விட்டு, தப்பிக்கும் அளவுக்கு, அழகிரி மாநிலம் முழுக்க செல்வாக்கு படைத்தவர். அழகிரி இப்படி என்றால், அவரின் அல்லக்கையாக இருக்கும் பொட்டு சுரேஷின் செல்வாக்கு ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் வாயிலாக தெரியும். ஜுனியர் விகடன் பத்திரிக்கையில், தன்னைப் பற்றி ஒரு செய்தி வந்து விட்டது என்பதற்காக, தினமலர் நாளிதழில், ஜுனியர் விகடன் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டும் வகையில் முழு பக்க விளம்பரம் கொடுத்து, அவதூறு வழக்கு தொடுத்து, கடைசியில் விகடன் குழுமத்தையும் மண்டியிட வைத்தவர்.
அப்படிப்பட்ட அழகிரியையும், பொட்டு சுரேஷையும், அடக்கி ஒடுக்கிய பெருமை சகாயத்தையும், காவல்துறை அதிகாரிகளையுமே சேரும். தேர்தல் நாளன்று, மதியம் கட்சிக்காரர்களை சந்தித்த அழகிரி, திமுகவினர் ஒழுங்காக பணியாற்றவில்லை என்ற விபரத்தை கேள்விப் பட்டு, நேரடியாக பூத்துகளுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பியிருக்கிறார். அழகிரி வாகனம் கிளம்பியதும், உடனடியாக தலையிட்ட காவல்துறையினர், நீங்கள் வேட்பாளர் அல்ல, வெளியில் செல்ல உங்களுக்கு அனுமதி கிடையாது, என்று அழகிரியை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்தனர் என்றால், இந்த அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பாருங்கள்.
இந்த அதிகாரிகளின் இந்த முயற்சியால், பெருமளவில் பணப்பட்டுவாடா தடுக்கப் பட்டது. கடந்த வாரம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் குறிப்பிட்ட விஷயம் முக்கியமானது. ஆணையத்தின் நடவடிக்கைகளால், வெளிப்படையாக கொடுக்கப் பட்டு வந்த பணப்பட்டுவாடா, மறைமுகமாக செய்யப் படுகிறது என்பதே மிகப் பெரிய வெற்றி.
இந்த தேர்தல் ஆணையத்துக்குத் தான் எத்தனை நெருக்கடிகளை கொடுத்தார்கள் திமுகவினர் ? நீதிமன்றத்தில் ஒன்று மாற்றி ஒன்றாக எத்தனை வழக்குகள் ? சகாயத்தை மாற்றக் கோரி ஒரு வழக்கு என்றால், தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளால் அடிப்படை உரிமைகள் பாதிக்கப் படுகிறது என்ற மற்றொரு வழக்கு. இது போல 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன. தந்திரமாக, நீதிமன்றத்தின் மூலமாக சோதனைகளுக்கு தடையாணை பெறப்பட்டதோடு அல்லாமல், கருணாநிதியின் அறிக்கை அடிப்படையில் நீதிமன்றமே தானாக முன் வந்து ஒரு வழக்கை எடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு தன் பங்குக்கு நெருக்கடி கொடுத்தது.
இத்தனை நெருக்கடிகளையும் மீறித் தான் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறது. மக்களும், தேர்தல் ஆணையத்துக்கு தங்கள் ஆதரவு முழுமையாக இருக்கிறது என்பதை, விரும்பி பெருமளவில் வாக்களித்ததன் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலின் நிஜ ஹீரோக்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளும், மதுரை மாவட்ட ஆட்சியரான சகாயமும் தான்.
இந்த அதிகாரிகளுக்கு சவுக்கு வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. உங்கள் பங்குக்கு நீங்களும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் உறவுகளே….!!!!!