”என்ன சார் சொல்றீங்க… ?”
”ஆமாம் வெங்கட். சேர்மேனுக்கு கதிரொளியை தொடர்ந்து நடத்தறதுல விருப்பம் இல்லை. நெறய்ய ப்ரெஷ்ஷர் இருந்துருக்கும்னு தோணுது. ஹி வான்ட் டு க்விட் ஃப்ரம் ப்ரெஸ். (He want to quit from press) சிங்காரவேலு பத்தி நம்ம மொதல்ல பப்ளிஷ் பண்ணப்பவே அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் ப்ரொசீட் பண்ணேன். ப்ராப்ளம்ஸ் வரும்னு சொன்னேன். பட் அவரோட மெயின் பிசினெஸ்ல கை வைப்பாங்கன்னு நானே எதிர்ப்பார்க்கல.. ஐடி, ஈடின்னு கவர்மென்ட்ல இருக்கற அத்தனை டிப்பார்ட்மென்டையும் வச்சு ரெய்ட் பண்ணிட்டாங்க. மோஸ்ட் ஆப் தி டாக்குமென்ட்ஸை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க.. ஹி ஈஸ் கார்னர்ட். (He is cornered) அதையெல்லாம் தாண்டி, அவரும் ஒரு முதலாளின்றதை நாம மறந்துடக் கூடாது. நஷ்டத்துக்கு வியாபாரம் பண்றதுக்கு உலகத்துல எந்த முதலாளி இருக்கான் ?”
”எப்போ க்ளோஸ் பண்றதா ஐடியா சார்… ? ”
”அவராலதான் சக்சஸ்புல்லா நடத்திட்டு இருந்த நியூஸ் ஏஜென்சியை க்ளோஸ் பண்ணிட்டு வந்தேன். அவர் இதிலேர்ந்து விலகிட்டா கூட, கதிரொளி டைட்டில் என் பேர்லதான் ரிஜிஸ்டர் பண்ணிருக்கார். டெய்லியா கன்டினியூ பண்ண முடியலனாலும், அட்லீஸ்ட் வீக்லியா கன்டினியூ பண்ணலாமான்னு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஃப்ரென்ட்ஸ் கொஞ்சம் பேர் இன்வெஸ்ட் பண்றேன்னு சொல்லிருக்காங்க. எந்தவித பிரதியுபகாரமும் எதிர்ப்பார்க்காத நண்பர்கள். கதிரொளின்னு ஒரு நல்ல ப்ரான்ட் பில்ட் பண்ணிருக்கோம். அதை இப்படியே விட்டுட வேணாம்னு பாக்கறேன்.”
”ஓ.கே சார்.. ஐ அன்டர்ஸ்டான்ட். ஏதாவது டெவலப்மென்ட் இருந்தா கால் பண்ணுங்க சார்.. ”
”ஐ வில் கால் யு.. செலவுக்கு பணம் இருக்கா வெங்கட்… ? ”
”இருக்கு சார்..”
“ இன்னும் பிஎஃப் பணம் கூட வந்திருக்காது. எனக்குத் தெரியும். கொஞ்சம் இரு.. ” என்று கூறி விட்டு, இன்டர்காமில் யாரையோ அழைத்து 20 ஆயிரம் பணம் கொண்டு வரும்படி சொன்னார்.
”இந்தா வெங்கட்… இதை வச்சுக்க… இதை தானமா குடுக்கலய்யா.. அட்வான்சா வச்சுக்க… கதிரொளிக்கு எவ்வளவு பெரிய ப்ரேக் குடுத்துருக்கன்னு தெரியும். யு டிசர்வ் எனி அமவுன்ட். கமான்…”
தயக்கத்தோடு வாங்கிக் கொண்டேன். சிங்காரவேலு வாழும் இதே உலகில்தான் இவரைப் போன்றவர்களும் வாழ்கிறார்கள். அரிசியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் கல் போல, சமுதாயத்தில் மோசமானவர்கள் இருந்த காலம் மாறி, நல்லவர்களை அரிசியில் கல் போல தேட வேண்டியதாகப் போய் விட்டது… கல்லே இல்லாத சுத்தமான அரிசி கிடைப்பது போல, நாளை லிங்கேஸ்வரன், கல்யாணசுந்தரம், பாலகிருஷ்ணன் போன்ற நபர்களே இல்லாமல் செய்து விடக்கூடிய வல்லமை சிங்காரவேலுக்களிடம் இருக்கிறது. ஒரு பாலகிருஷ்ணனை ஒழித்து கட்டிவிட்டார்கள். மீதம் உள்ள லிங்கேஸ்வரன், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் ஒன்று கூடி உழைத்தால்தான் இந்த குருஷேத்திரத்தில் வெல்ல முடியும்…
இரண்டு வாரங்கள் கடந்தன. லிங்கேஸ்வரனிடமிருந்து எவ்விதமான தகவலும் இல்லை. கல்யாண சுந்தரத்தைச் சென்று பார்த்தேன்.. இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்குமாறு கூறினார். கட்சிப் பத்திரிக்கையான தீக்கதிரில் பணியாற்றுகிறாயா என்று கேட்டார்.. நீங்களே கட்சியிலிருந்து விலகி விட்டீர்கள்.. இனி கட்சிப் பத்திரிக்கை மட்டும் எதற்கு என்று கூறிவிட்டேன். ஆன்லைனில் வேலை தேடலாமா என்று யோசித்து, ஒரு மாதம் கழித்து முயற்சிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.
மூன்றாவது வாரம், லிங்கேஸ்வரனிடமிருந்து அழைப்பு வந்தது. அன்று மாலையே வந்து பார்க்கச் சொன்னார்.
”வெங்கட்… இன்னும் ஒரு மாசத்துல கதிரொளியை வீக்லியா கொண்டு வரப்போறோம். நம்ப ப்ளானுக்கு சேர்மேனும் ஓ.கே சொல்லிட்டார். நம்ப நடத்திக்கறதுல அவருக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. எதிர்ப்பார்த்த இன்வெஸ்ட்மென்ட்ஸ் வந்துடுச்சு… டெய்லிலேர்ந்து வீக்லிக்கு அடாப்ட் பண்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.. பட் வி வில் லேர்ன். (We will learn) இப்போ இருக்கற ஸ்டாஃப், வீக்லிக்கு அதிகம். அதனால கட் ஷார்ட் பண்றோம். இப்போதைக்கு இந்த பில்டிங்லயே கன்டின்யூ பண்றோம். நாலு மாசம் கழிச்சு வேற இடம் போகலாம்னு இருக்கேன். நீ எப்போ ஜாயின் பண்ற ?”
”நெக்ஸ்ட் மன்த்தானே சார் ஸ்டார்ட்டிங்… ? ”
”நெக்ஸ்ட் மன்த்னா… இப்போ வேலை இல்லைன்னு அர்த்தமா ?” நாலு டம்மி இஷ்யூஸ் கொண்டு வரப்போறோம். யு ஜாயின் டுமாரோ இட்செல்ஃப்.(You join tomorrow itself) ஆர்டர்ஸ் செக்ரட்டரிக்கிட்ட வாங்கிக்க… குட் லக். அன்ட் ஒன் மோர் திங்… நீ பேங்க்ல வாங்கிக்கிட்டு இருந்த சம்பளத்தை இப்போதைக்கு பே பண்ண முடியாது.. இப்போதைக்கு 20 தவுசன்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். இஷ்யூ பிக் அப் ஆச்சுன்னா, ஐ வில் ஹைக் பிஃபோர் யு ஆஸ்க்..(I will hike before you ask) குட் லக். ”
வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது ? வங்கிப் பணியில் சேர்ந்த முதல் நாளை நினைத்தால் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஜாயினிங் லெட்டர் கொடுத்தபோது இருந்த மேனேஜர், சிறிய வயதாக இருப்பதால், ஜெனரல் மேனேஜராக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து பணியாற்ற வேண்டும் என்று சொன்னார். ஜெனரல் மேனேஜர் என்பது, வங்கியில் கவர்ச்சிகரமான பதவி என்பதால், எப்படியும் அதை அடைவது என்ற நோக்கத்திலேயே பல ஆண்டுகள் பணியாற்றினேன். அதற்காகத்தான், வங்கிப் பணியில் பாஸ் பண்ண வேண்டிய தேர்வுகளையெல்லாம் சீக்கிரத்தில் பாஸ் பண்ணினேன். நாளாக நாளாக, சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்ததும், ஜெனரல் மேனேஜர் பதவியின் மீது இருந்த மோகம் சிறிது சிறிதாக குறைந்தது. அதன் மீது இருந்த கவர்ச்சி தனது சோபையை இழந்தது. வங்கியின் ஜெனரல் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த நான் ஒரு பத்திரிக்கையாளராவேன் என்பதை கனவிலாவது ஊகித்திருக்க முடியுமா ? இந்த சுவையான திருப்பங்கள் வாழ்க்கையில் இருப்பதால்தான், ஒரு விறுவிறுப்பான திரைக்கதை எப்படி பார்வையாளர்களைத் தன்னுள் இழுத்துக் கொள்ளுமோ அது போல வாழ்க்கையும் மனிதர்களை தன்னுள் இழுத்துப்போட்டுக் கொண்டு தன் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறது.
எடிட்டரின் செக்ரட்டரியைச் சென்று பார்த்தேன். கொஞ்ச உக்காருங்க சார் என்று சொல்லிவிட்டு, அரை மணி நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை ஒரு கவரில் போட்டு கையில் கொடுத்தார். பிரித்துப் படித்தேன். கதிரொளி வாரப் பத்திரிக்கையில் சீனியர் கரஸ்பான்டென்டாக நியமிக்கப்பட்டிருந்தேன். வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.
வங்கி வேலையில் முதல் நாள் சேர்ந்தபோது கூட இப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படவில்லை. பத்திரிக்கையாளர் என்றதும் ஒரு பெருமிதம். மிடுக்கு எல்லாமே ஏற்பட்டது. இத்தனை நாள் மனதை உலுக்கிக் கொண்டிருந்த பொருளாதாரச் சிக்கல்கள் பெரிதாக உறுத்தவில்லை. அது வரை உலகத்தை சாதாரண பார்வையில் பார்த்துக் கொண்டிருந்த நான், இனி ஒரு பத்திரிக்கையாளராக உலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்பதை அறியும்போதே பெருமை ஏற்பட்டது. சிங்காரவேலு மறைமுகமாக நமக்கு ஒரு நன்மை செய்திருக்கிறாரோ… ?அவர் அப்படி ஒரு ஊழல் செய்யவில்லை என்றால், நான் பத்திரிக்கையாளராயிருக்க முடியுமா ? வங்கி வேலையை விட்டு விட்டு, பத்திரிக்கையாளராகலாம் என்று அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருப்பேனா… நிச்சயம் எடுத்திருக்க மாட்டேன்.. நான் பத்திரிக்கையாளராவதற்காக 1200 கோடி செலவு செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்ததும் சிரிப்பு வந்தது… நானே என் பாட்டுக்கு சிரித்துக் கொண்டு நடந்தேன். வழக்கமாக பிடிக்கும் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்தேன்.
வீட்டுக்குச் சென்றதும் அம்மாவிடம் கவரைக் கொடுத்தேன். என்னடா இது என்றாள். அம்மா… கதிரொளி பேப்பர் வருதுல்ல… அதுல ஜாயின் பண்ணிட்டேன்… இனிமே நான் பேங்கர் இல்ல.. ஜர்னலிஸ்ட் என்றேன்…
”எனக்கு தெரியும்டா.. உனக்கு இருக்கற டேலன்ட்டுக்கு நீ ஜம்முனு வருவன்னு…. இந்த டேலன்டோட சேத்து ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டன்னா எனக்கு நிம்மதி.. எனக்கு என்ன பத்து புள்ளையா.. பையன் ஒன்னு.. பொண்ணு ஒன்னு.. ”
”அம்மா நல்ல மூட்ல இருக்கேன் ஸ்பாயில் பண்ணாத.. காப்பி போடு டார்லிங்.. போ…”
டிவியை போட்டேன். மடை திறந்து பாயும் நதியலைதான் என்று சந்திரசேகர் பாடிக்கொண்டிருந்தார். என் மூடுக்கு ஏற்றார் போல பாட்டு போடுகிறார்கள் என்ன பொருத்தம் என்று நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் அலுவலகம் சென்றதும், பயோடேட்டாவும் இதர விபரங்களையும் கேட்டுப் பெற்றார்கள். கம்யூனிசம் இறந்து விட்டதா என்று ஒரு கட்டுரை தயார் செய்யச் சொன்னார். அரை நாளில் கூகிளில் தேடி, ஒரு பெரிய கட்டுரையை தயார் செய்து எடிட்டரைப் பார்த்தேன்.
”வெங்கட்… பத்திரிக்கைக்குன்னு ஒரு ஒழுங்கு இருக்கு. இப்படி இஷ்டத்துக்கு வார்த்தைகளை விரயமாக்கக் கூடாது. 1000 வார்த்தை அதிகபட்சம் 1500 வார்த்தை. கூகிள்ள தேடித்தானே இந்த ஆர்ட்டிக்கிள ரெடி பண்ண ? ”
”ஆமாம் சார்.. ”
”மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுல இந்த மாதிரி வேலை பாக்கக் கூடாது. ஒரு அவுட்லைன் ரெடி பண்ணிக்கிட்டு, ரெண்டு கம்யூனிஸ்ட் பார்ட்டிலயும் உள்ள லீடர்ஸ் கிட்ட கோட்ஸ் எடுத்துக்க. ரெண்டு இன்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் கிட்ட கோட்ஸ் எடுத்துக்க. லேபர்ஸ் யூனியன் லீடர்ஸ்கிட்ட பேசு.. உன் ஆர்டிக்கிளைப் படிக்கும்போது ஹோல்சம்மா, ஒரு கம்ப்ளீட் ஆர்ட்டிக்கிள்ன்ற ஃபீலிங் வரணும். டேக் டூ டேஸ் டைம்” என்றார்.
இப்படி அவசரக் குடுக்கையாக வேலை செய்து கெட்டபேர் வாங்கி விட்டோமே என்று அவமானமாக இருந்தது. அவர் சொன்னபடி சிறப்பாக இக்கட்டுரையை எழுதி, அவரை வியக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மறுநாள், அடையாள அட்டையும் விசிட்டிங் கார்டும் கொடுத்தார்கள். அடையாள அட்டையில் என் புகைப்படத்தோடு கழுத்தில் மாட்ட கயிறோடு கொடுக்கப்பட்டிருந்தது. விசிட்டிங் கார்டில், கதிரொளியின் லோகோ போடப்பட்டு கீழே கதிரொளி என்று எழுதப்பட்டிருந்தது. கோட்டைச்சாமி வெங்கட். சீனியர் கரெஸ்பான்டென்ட், என்று என் பெயர் கருப்பு நிறத்தில் மின்னியது… என் செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. நானே மின்னுவது போல உணர்ந்தேன். இரண்டு டப்பாக்களில் விசிட்டிங் கார்டுகள் கொடுத்தார்கள். வாங்கி என் மேசையில் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து ஒரு இருபது கார்டுகளை எடுத்து பர்சில் வைத்துக் கொண்டேன்.
முதல் அசைன்மென்ட்டுக்கு புறப்பட்டேன். வங்கி மேலாளர்களின் கான்ஃபரன்ஸ் ஒன்றில், ஐசிஐசிஐ பேங்கின் தென்னிந்திய பொது மேலாளரைச் சந்தித்து உரையாடியது நினைவுக்கு வந்தது. அவரிடம் முதல் கோட் கேட்கலாம் என்று அவரைச் சந்திக்கச் சென்றேன். ராஜா அண்ணாமலைபுரத்தில் பத்து மாடிக் கட்டிடத்தில் எட்டாவது மாடியில் அவர் அலுவலகம் இருந்தது. அவர் பி.ஏவிடம் விசிட்டிங் கார்டை கொடுத்த உடனே உள்ளே அழைத்தார். அவருக்கு என்னை நினைவில்லை. நல்லதாகப் போய் விட்டது… ஆங்கிலத்தில் பேசினால்தானே மதிப்பார்கள். ”சார் வி ஆர் டூயுங் அன் ஆர்ட்டிக்கிள் ஆன் தி ரிலவென்ஸ் ஆப் கம்யூனிசம்…(Sir, we are doing an article on the relevance of communism) ஐ வுட் லைக் டு ஹேவ் யுவர் கோட்.. (I would like to have your quote)”
”ஈஸ் திஸ் மேகசின் கமிங் இன் இங்க்லீஷ் ஆர் டமிழ் ” என்றார் ?
”இனிஷியல்லி வி ஆர் கமிங் இன் டமில்.. பட் ஷார்ட்லி வி வில் சேன்ஜ் இன்டு பை லிங்குவல்.. ” என்று கூசாமல் புளுகினேன்.. உலகப் பொருளாதாரத்தை மொத்தமாக கரைத்துக் குடித்தது போலப் பேசினார். கம்யூனிசம் ஈஸ் கம்ப்ளீட்லி டெட் என்றார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏன் இந்த பொருளாதாரத் தேக்கநிலை என்றதற்கு இது ஒரு தற்காலிகமான பின்னடைவு… சில வருடங்களில் எகானமி வில் ஹேவ் ய ரொபஸ்ட் க்ரோத் என்றார். கிளம்பும்போது, தன் பி.ஏவிடம் தன் புகைப்படத்தை சிடியில் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்…. இவர் புகைப்படத்தை வெளியிடுவதாகச் சொல்லவேயில்லையே… மனிதனுக்கு பணத்தைப் போலவே புகழும் போதைதான். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், இந்த புகழ் போதைக்கு அடிமையாகாதவர்கள் வெகு குறைவே.
தொழிற்சங்க தலைவர்களைச் சந்திப்பதற்கு முன், ஏன் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து அவர்கள் பார்வை என்ன என்று பதிவு செய்யக் கூடாது ? சிறையில் சந்தித்த சுந்தரமூர்த்தி தனது வழக்கறிஞரின் அலுவலகம், எனது வழக்கறிஞர் ராஜராஜனின் அலுவலகத்துக்கு அருகேதான் என்று சொன்னது ஞாபகம் வந்தது… வழக்கறிஞர் பெயர் சுப்புராஜ் என்று சொன்னதாக ஞாபகம். என் வழக்கறிஞர் அலுவலகத்திலயே கேட்கலாமே…
சுப்புராஜ் அலுவலகம் என் வழக்கறிஞர் அலுவகத்துக்கு அடுத்த கட்டிடம். சாலையிலேயே பார்த்தால் தெரிவது போல போர்டு வைத்திருந்தார்கள்.
அலுவலகம் எளிமையாகத்தான் இருந்தது. வெளியே அமர்ந்திருந்த ஒருவரிடம் விசிட்டிங் கார்டை கொடுத்தேன். ஒவ்வொரு முறை விசிட்டிங் கார்டை கொடுக்கும்போதெல்லாம் ஒரு பெருமை உணர்ச்சி.. குறுகுறுப்பாக உணர்ந்தேன்…
உடனே உள்ளே அழைத்தார். ”வாங்க உக்காருங்க… என்ன விஷயமா என்னைப் பாக்க வந்துருக்கீங்க.. ”
”சார்.. கம்யூனிசம் பத்தி ஒரு ஆர்ட்டிக்கிள் பண்றேன்.. மாவோயிஸ்ட் பார்ட்டிலேர்ந்து யாராவது ஒருத்தர்கிட்ட பேசணும்…”
”அதுக்கு ஏன் சார் எங்கிட்ட வர்றீங்க… எனக்கு அந்த மாதிரி யாரையும் தெரியாதே…”
”சார்.. நான் சுந்தரமூர்த்தியை சந்திச்சேன்.. அவர்தான் உங்க பேரைச் சொன்னார்…”
”அவரை எப்படி சந்திச்சீங்க.. அவர் ஜெயில்ல இருக்காரே.. ? ”
”சார்… சிங்காரவேலு மினிஸ்டர் ரிசைன் பண்ணாருல்ல… அது சம்பந்தமா நான் அரெஸ்ட் ஆனேன்…. பேங்க்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தேன் சார்.. சுந்தரமூர்த்தியை ஜெயில்ல பாத்தேன்.. உங்களப் பத்தி சொன்னாரு…”
”ஓ…. ஒக்கே ஓக்கே… குட் குட்… இப்போ ஞாபகம் வருது… ஃபென்டாஸ்டிக் வொர்க் சார்.. நீங்க பேங்க்லதானே வேலை பாத்துக்கிட்டு இருந்தீங்க…. ? ”
”டிஸ்மிஸ்ட் சார்.. ”
”ம்ம்.. லீவ் இட்.. பத்திரிக்கையில வேலை பாத்தா மக்களுக்கு நெறய்ய சேவை செய்ய முடியும்.. ஓ.கே.. உங்க கேள்விகளை எழுதி குடுத்துட்டுப் போங்க.. நான் பதில் வாங்கி வைக்கறேன்.. அவங்க தெரியாத ஆளுங்களை சந்திக்க மாட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு நேரா வந்து பாருங்க.. போன்ல எதுவும் பேசாதீங்க.. ”
”தேங்க்யூ சார்.. பட் நாளைக்கு ஆர்ட்டிக்கிள் முடிக்கணும் சார்… சரி நாளைக்கு ஈவ்னிங் வாங்க.. வாங்கி வைக்கறேன்.. ” என்றார்.
கேள்விகளை எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.. அடுத்து எங்கே செல்வது…
யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தூரத்தி சிரித்தபடி பேசிக்கொண்டே இரு பெண்கள் நடந்து வந்தனர். ‘இவளை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே… எங்கே பார்த்திருக்கிறோம்…’
அவள் வைகறைச் செல்வனின் அலுவலகத்தில் ஜுனியராக வேலை பார்க்கும் வசந்தி. அவள் அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண்ணோடு சிரித்துப் பேசியபடியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
உற்சாகம் என்றால் அவள் முகத்தில் அப்படி ஒரு உற்சாகம். அது குதூகலமா, துள்ளலா, உற்சாகமா, மகிழ்ச்சியா, பூரிப்பா, என்று வகைப்படுத்த முடியாத ஒரு மத்தாப்புச் சிதறல். நடக்கிறாளா, துள்ளுகிறாளா என்று இனங்காண முடியாதபடி நடந்து சென்று கொண்டிருந்தாள். வக்கீல் கவுனை ஸ்டைலாக ஒரு கையில் பிடித்தபடி, மற்றொரு கையில் வழக்குக் கட்டுகளை பிடித்தபடி அவள் நடந்த நடையில் அழகோடு சேர்ந்து திமிரும் இருந்தது.
இவள் சீனியரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்தானே.. அவரிடம் கோட் எடுத்தா என்ன ?
அவள் சீனியர் வைகறைச் செல்வனின் கோட் எடுப்பதை விட, அந்த மத்தாப்புச் சிரிப்பை மீண்டும் காண வேண்டும் என்பதுதானே நோக்கம்… அவர் அலுவலகம் அடுத்த தெரு.
உள்ளே நுழையும்போது சத்தமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நுழைந்ததும், என் விசிட்டிங் கார்டை கொடுத்தேன்.. வாங்கிப் பார்த்து விட்டு சற்று மரியாதையோடு நிமிர்ந்து பார்த்தாள்..
”கோட்டைச்சாமி வெங்கட்… நைஸ் நேம்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கோட்டைச்சாமி..” என்று என்னைப் பார்த்து ஒரு வசீகரப் புன்னகையை வீசிவிட்டுச் சென்றாள். என்னை கோட்டைச்சாமி என்று யாருமே அழைத்ததில்லை. எல்லோருக்கும் வெங்கட்தான். முதன் முதலாக இவள்தான் கோட்டைச்சாமி என்று அழைக்கிறாள்.
என் அப்பாவின் பெயருக்கு இப்படி ஒரு அழகா…. மீண்டும் ஒரு முறை கோட்டைச்சாமி என்பதை சொல்லிப்பார்த்துக் கொண்டேன்…
அழகாகத்தான் இருக்கிறது…
தொடரும்.
வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது ?