இன்று சவுக்குக்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்கள் இருக்கின்றன. நேரிலும் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் அன்பைப் பொழிபவர்கள் பலர். ஆனால், 2008 எப்படி இருந்தது என்பதை இப்போது திரும்பிப் பார்க்கையில் மலைப்பாகவே இருக்கிறது.
2008ல் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு தொடர்பாக சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப் பட்டு, விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, சவுக்குக்கு ஆலோசனை சொன்னவர்கள், உன்னால் அரசாங்கத்தை எதிர்த்துச் சண்டையிட முடியாது. அதனால், பேசாமல், அவர்கள் சொல்கிறபடி கேட்டு நட என்றார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ? இந்தக் குற்றத்தை நீ செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, எப்படி இருந்தாலும் உன் தலையில்தான் கட்டப் போகிறார்கள், அதனால் பேசாமல், நான்தான் செய்தேன் என்று ஒப்புக் கொள் என்று ஆலோசனை கூறப்பட்டது. சரி பெரிய மனிதர்கள் சொல்கிறார்களே என்று, வழக்கறிஞரின் ஆலோசனையை கோரலாம் என்று, சவுக்கு முதலில் சந்தித்தது, வழக்கறிஞர் விஜயக்குமார். அவர் சவுக்கிடம் கேட்ட முதல் கேள்வி, நீ சிறை செல்லத் தயாரா என்பதுதான். தயார் என்று சொன்னதும், உன் வழக்கை நான் நடத்துகிறேன், செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள் என்று இப்படிப் பட்ட முட்டாள்த்தனமான யோசனையை உனக்குச் சொன்னது யாராக இருந்தாலும் சரி. அதை ஏற்காதே….. என்று ஆலோசனை சொன்னார்.
அதற்குப் பிறகு இன்று வரை தொடரக்கூடிய நீண்ட நெடிய போராட்டம். ஜுலை 17 2008 அன்று மாலை 4 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் வைத்து கைது செய்யப் பட்ட கணத்திலிருந்து நரகம். சவுக்கு மீது காவல்துறை வசம் இருந்த முக்கிய ஆதாரம், தொலைபேசியில் பத்திரிக்கையாளர்களோடு பேசியது. கைது செய்யப் பட்ட போதும், சவுக்கிடம் இரண்டாவதாக ஒரு தொலைபேசி இருந்தது. அந்த தொலைபேசியை எப்படி மறைப்பது என்று யோசித்துக் கொண்டே, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலிருந்து சிபி.சிஐடி அலுவலகம் உள்ள கிண்டி செல்வதற்குள், பாக்கெட்டில் இருந்த செல்போனில் இருந்து சிம் கார்டை நைசாக கழற்றியாகி விட்டது. சரி, இந்த சிம் கார்டை எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டே, “சார் பாத்ரூம் போகனும்” என்று சொல்லி அங்கே சென்று பார்த்தால், சினிமா தியேட்டரில் இருப்பது போல இருந்தது. இன்ஸ்பெக்டர் சரவண குமார் சிறுநீர் கழிக்கும் போது கூட பின்னால் நின்று கொண்டிருந்தான். பிறகு, அந்த சிம்கார்டை பாக்கெட்டிலேயே வைத்து இரண்டாக உடைத்து, ஷூவை கழற்றுவது போல, அந்த சிம் கார்டை ஷூவுக்குள் போட்டாகி விட்டது. பாக்கெட்டுகள் சோதனை செய்யப் பட்டு, பர்சில் இருந்த 5000 ரூபாய் பணம் முதலியன பறிமுதல் செய்யப் பட்ட பிறகு, வீட்டை சோதனையிட வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். (அந்த 5000 ரூபாய் பணம், கடைசி வரை கணக்கில் காட்டப் படவில்லை) வீட்டுக்கு சோதனை என்ற பெயரில் அழைத்துச் சென்று, வீட்டை அலங்கோலமாக்கி, வீட்டிலேயே அடி தொடங்கியது. ஒரு இரண்டு மணி நேர அடிக்குப் பிறகு, மீண்டும் சிபி.சிஐடி அலுவலகம் அழைத்துச் சென்றார்கள். வீட்டிலேயே நிர்வாணப்படுத்தப் பட்டு, நிர்வாணமாகவே சாலை வரை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்ற மிரட்டல். பிறகு மீண்டும் ஆடை கொடுத்து, கைது செய்யப் பட்டதற்கு அத்தாட்சியாக கையொப்பம் பெற்றுக் கொண்டு, நான்கு மூட்டைகளில் ஆவணங்களை (என்ன ஏது என்று தெரியாமலேயே) அள்ளிக் கொண்டு கிளம்பினார்கள்.
அப்போது சிம்கார்டோடு இருந்த ஷூவை அங்கேயே அவிழ்த்துப் போட்டு விட்டு, சிபி.சிஐடி போலீசாரோடு ஜீப்பில் ஏற்றினார்கள். வடபழனியில் சிக்னல் அருகே நிற்க வைத்து, உண்மையை சொல்லாவிட்டால், இப்படியே இறக்கி விட்டு விட்டு, தப்பி ஓடினாய், என்கவுண்டரில் சுட்டு விட்டோம் என்று கேசை மூடி விடுவோம் என்று மிரட்டல். அவர்களிடம் துப்பாக்கி இருக்க வாய்ப்பே இல்லை என்பது, 19 ஆண்டுகளாக, காவல்துறையோடு பணியாற்றியவனுக்குத் தெரியாதா என்பதைக் கூட அறிந்து வைக்காத அறிவிலிகள்.
மீண்டும் இரவு 10.30 மணிக்கு சிபி.சிஐடி லாக்கப். ஒருவர் மாற்றி ஒருவராக, டிஎஸ்பி பாலு, இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சரவண குமார் ஆகியோர் காலை 4 மணி வரை பின்னு பின்னென்று பின்னினார்கள். அவர்களின் நோக்கம் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை இந்த வழக்கோடு சம்பந்தப் படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என்பது என்ற விபரம், ரொம்ப நாட்களுக்குப் பிறகே, தெரிய வந்தது. ஏ.கே.விஸ்வநாதன் என்ற அதிகாரியை சவுக்கு இன்று வரை பார்த்தது கிடையாது. பேசியதும் கிடையாது. அப்படி இருக்கும் போது, அவரை சம்பந்தப் படுத்தி எப்படி வாக்குமூலம் கொடுக்க முடியும் ?
தன்னுடைய எதிரியாக ஏ.கே.விஸ்வநாதனைக் கருதிய ஜாபர் சேட், சவுக்கு மூலமாக விஸ்வநாதனுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று பொய்யான வாக்குமூலத்தைப் பெற்று, அவர் வீட்டில் சோதனை என்ற பெயரில், பத்திரிக்கைகளில், செய்தியை வெளியிட்டு அவரை அவமானத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதே, சவுக்குக்கு விழுந்த அத்தனை அடிகளுக்கும் காரணம் என்பது பின்னாளில் தெரிந்தது. ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறாததால், கிறுக்குத் தனமாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களாகவே எழுதிக் கொண்டார்கள்.
புழல் சிறையில் அடைக்கப் பட்டபின், வழக்கறிஞர் புகழேந்தி வந்து பார்த்தார். சிறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறை வாசிகள் அத்தனை பேரும், புகழேந்தியின் கட்சிக் காரர்கள். அவர்களிடம் புகழேந்திக்கு நல்ல மதிப்பு உண்டு. புகழேந்தி அவர்களிடம், நான் சிறைக்கு வந்தால் என்னை எப்படி பார்த்துக் கொள்வீர்களோ, அது போல இவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இரண்டு மாத சிறை வாழ்க்கை, பல்வேறு அனுபவங்களைத் தந்தது. சிறையில் பல்வேறு மனிதர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து, மனிதர்களை இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்ற நல்ல பண்பை சிறை தந்தது என்றே சொல்ல வேண்டும.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வெளியே வந்தால் என்ன செய்வது ? 19 ஆண்டுகளாக, அரக்க பரக்க வேலை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென்று எந்த வேலையும் இல்லை என்றால் எப்படி இருக்கும்…. ?
அந்த நேரத்தில் தான், வழக்கறிஞர் புகழேந்தி, சிறைக் கைதிகளுக்காகவும், மனித உரிமை தளத்திலும் பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்த விபரம் தெரிய வந்தது. வேலை இல்லாத வெட்டி ஆபிசருக்கு இதை விட்டால் என்ன வேலை ? நண்பர் புகழேந்தியோடு சேர்ந்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்தும், ஊழலை வெளிக்கொணரவும் பல்வேறு வேலைகள் தொடர்ந்து செய்யப் பட்டன. மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்காக, பல்வேறு வழக்குகளில் இலவசமாகவே ஆஜரானது மிகப் பெரிய பலமாக அமைந்தது.
இதையொட்டி பல்வேறு பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இது தவிரவும், சவுக்கு மீதான வழக்கு, நீதிமன்றத்தில் தொடங்கியது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் அவர்கள் பங்குக்கு தொந்தரவு தர வேண்டாமா ? துறை நடவடிக்கை என்ற பெயரில், 6க்கும் மேற்பட்ட துறை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அத்தனை துறை நடவடிக்கைகளையும் சமாளித்து, நீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரிட் மனுக்களை தாக்கல் செய்து, இத்தனை ஆண்டு காலம், சமாளிக்க உதவி செய்தவர் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இது பத்தாதென்று லஞ்ச ஒழிப்புத் துறையில் மாதந்தோறும் வழங்க வேண்டிய அரை சம்பளத்தை, இதோ அதோவென்று, தராமல் இழுத்தடிக்க வேண்டியது, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே தான் சவுக்கு தொடங்கப் பட்டது. சவுக்கு தொடங்கப் படுவதற்கு முக்கிய காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்ட பல்வேறு ஆவணங்களை பத்திரிக்கைகளில் வெளியிட எடுக்கப் பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததே. பத்திரிக்கை உலகின் மிகச் சிறந்த மனிதர்கள் சவுக்குக்கு நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் முதலாளிகள் இல்லையே …..
இந்த நெருக்கடிக்கிடையே தான் சவுக்கு தொடங்கப் பட்டது. மெள்ள மெள்ள சவுக்கு பிரபலமாகி வருகையில் தான் ஜாபர் சேட் வீட்டு வசதித் துறையில் செய்த முறைகேடுகள் ஆவணத்தோடு அம்பலப்படுத்தப் பட்டன. அதன் மறுநாளே, மதுரவாயல் சாலையில் செங்கலை எடுத்து ஒரு நபர் மீது அடித்ததாக பொய்ப் புகார் பதியப் பட்டு சவுக்கு 3 நாட்கள் சிறையில் இருந்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே…… இந்த ஜாபர் சேட், உண்மையிலேயே ஒரு முட்டாள் தான் நண்பர்களே…. முதல் முறை சிறைக்குச் செல்வபன், சிறையைக் கண்டு அஞ்சுவான்.. ஏற்கனவே இரண்டு மாதம் சிறையில் இருந்தவனுக்கு சிறை என்றால் என்ன பயமா ?
ஆனால் அந்த கைது சம்பவமே, சவுக்கை இன்னும் பல்வேறு தளங்களில் கொண்டு சேர்த்தது. ஓரளவுக்கு பரவலாக தெரியவைத்தது. அதற்குப் பின் முழு வீச்சோடு சவுக்கு வேலையில் இறங்கியது.
சவுக்கின் வாசகர்கள் தந்த அமோக ஆதரவு காரணமாக, சவுக்கு இன்று ஒரு இயக்கமாகவே வளர்ந்திருக்கிறது என்றால் அது மிகைச் சொல் இல்லை.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
என்கிறார் அய்யன் வள்ளுவன்.
(என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது)
இத்தனை ஆண்டு காலம், அத்தனை பிரச்சினைகளையும் வெற்றிகரமாக சமாளித்து ஓட்டியதற்கு வழக்கறிஞர்கள் அல்லாமல், பத்திரிக்கையாளர்களின் உதவியும், ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. பத்திரிக்கையாளர்களின் மத்தியில் சில கறுப்பு ஆடுகள் இருந்தாலும், சவுக்கோடு பழகிய பத்திரிக்கையாளர்கள் மாணிக்கங்கள். சவுக்கைப் போலவே இந்த சமுதாயத்தை நேசிப்பவர்கள். சவுக்குக்கு முக்கிய தகவல்களை கொடுத்து உதவுவதிலிருந்து, அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுவது வரை அத்தனை உதவிகளையும் செய்து விட்டு, தங்கள் பெயர் கூட வெளியில் தெரிய வேண்டாம் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள்.
சவுக்கின் போன் என்றாலே அலறி தொலைபேசியை அணைத்து வைக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், எப்போது போனாலும், சவுக்கை அன்போடு பார்த்துப் பேசும் அதிகாரிகளும் வெகு சில அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
சவுக்கு தொடங்கிய காலத்தில் சவுக்கை படித்து, உற்சாகப் படுத்தி வளர வைத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனாக இருக்கட்டும், படித்து விட்டு பின்னாளில் வாழ்த்திய பல மூத்த பத்திரிக்கையாளர்களாக இருக்கட்டும், அவர்களின் அன்பு வாழ்த்துக்கள் இல்லாமல் சவுக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஏப்ரல் 15 2011ல் கருணாநிதியின் ஆட்சி முடிகிறது என்று கவுண்ட்டவுன் போட்ட போது, சவுக்கை பார்த்து சிரிக்காதவர்கள் கிடையாது. சில நண்பர்கள், இது ரொம்ப ஓவர் என்றார்கள். ஆனால், சவுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னால் சொன்னது இன்று நடந்திருக்கிறது. முடிந்தது கருணாநிதியின் ஆட்சி.
சரி. கருணாநிதியின் ஆட்சியை முடித்து வைப்பது மட்டும் தான் சவுக்கின் வேலையா ? சமூகத்தில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் ஓய்ந்து விட்டதா என்ன ?
ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் சவுக்கைக் காண வருகிறார்கள். சவுக்கின் கருத்துக்களை தங்கள் பொன்னான நேரங்களை ஒதுக்கி படிக்கிறார்கள். நன்றாக இருந்தால் பாராட்டும் அதே வேளையில் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்குவதில்லை. அவர்களை எப்படி ஏமாற்றுவது…. ? அதனால், சவுக்கை தொடர்ந்து எத்தனை சிரமங்கள் இருந்தாலும் நடத்துவது. சமூகத்தில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக சவுக்கை சுழற்றுவது என்ற உறுதி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பணியாற்றுவோம் தோழர்களே……
பாதகம் செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ள ளாகாது பாப்பா…..
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்ற பாரதியின் வரிகள், பாப்பாவுக்கு மட்டுமா ?