வெளியே வந்தவள், “உங்களை சார் கூப்பிட்றார் கோட்டைச்சாமி.. “ என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை சிரித்தாள்.
‘என்னை கிண்டல் செய்கிறாளா ?’
எழுந்து உள்ளே சென்றேன். வைகறைச் செல்வனிடம் பேசியதும், தொழிலாளர்கள் தொடர்பாக அவர் ஆஜரான நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சொல்லி, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவாக எப்படி தொழிலாளர் சட்டங்கள் திருத்தியமைக்கப் படுகின்றன என்றும், தொழிலாளர் நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருவதால், மார்க்ஸ் சொன்னது முன்னெப்போதையும் விட, இப்போது நன்றாகப் பொருந்துகிறது என்றார். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, வெளியே வந்தேன்.
வசந்தி யாரிடமோ செல்போனில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள். நான் வந்ததை கவனிக்கவில்லை. அவள் உரையாடலை இடைமறித்து அவளிடம் சொல்லிக் கொண்டு சென்றால், அது வெளிப்படையாக தெரியும் என்று யோசித்து விட்டு கிளம்பினேன்.
மறுநாள் சுப்புராஜ் அவர் சொன்னபடி கேள்விகளுக்கான பதில்களை வாங்கி வைத்திருந்தார். அவரிடம் பதில்களை வாங்கிக் கொண்டு, ம்யூச்சுவல் பண்டுகளின் இரண்டு அதிகாரிகளைப் பார்த்து, அவர்கள் கருத்தையும் கேட்டுக் கொண்டு அலுவலகம் திரும்பினேன்.
1500 வார்த்தைகளில் கட்டுரையை தயார் செய்து, எடிட்டருக்கு அனுப்பி விட்டு காத்திருந்தேன். மாலை ஏழு மணிக்கு அழைத்தார்.
“குட் வொர்க் வெங்கட்.. ஆர்ட்டிக்கிள் நல்லா வந்துருக்கு… நல்லா எழுதற.. யு ஹேவ் ய ப்ரைட் ப்யூச்சர் இன் ஜர்னலிசம்… (You have a bright future in journalism)“
“தேங்க்யூ சார். “
“ஆமா… இந்த நக்சலைட்ஸ் வ்யூ போட்டிருக்கியே… இது நெஜம்மாவே அவங்கக்கிட்ட வாங்குனதா.. இல்ல உன் மனசுல தோணுனத எழுதினியா ? “
“சார் ஐ வில் நெவர் டூ தட் சார்… ஐ ஹேவ் காட் ய குட் சோர்ஸ்.. (I will never do that sir. I have got a good source) “
“குட் குட்.. மாவேயிஸ்ட்ஸ் இந்த மாதிரி கான்டாக்ட் பண்ற மாதிரி இருக்காங்கன்றதே எனக்கு நியூஸ்.. டைம் வரும்போது சொல்றேன்.. அவங்களைப் பத்தி ஒரு ஃபுல் ஃப்ளெட்ஜ்ட் (full fledged) ஸ்டோரி பண்ணலாம். கீப் தி கான்டாக்ட்ஸ் அலைவ் (keep the contacts alive)“
“ஷ்யூர் சார்..“
அடுத்த இரண்டு வாரங்களில் லே அவுட் செய்வதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அடோப் இன் டிசைன் என்ற சாப்ட்வேரில் எளிதாக லே அவுட் செய்து விட முடியும் என்பது வியப்பாக இருந்தது. வங்கியில் வெறும் எண்களை மட்டுமே பார்த்து, கம்ப்யூட்டர் என்பதை ஏறக்குறைய கால்குலேட்டர் போல பயன்படுத்திக் கொண்டிருந்த எனக்கு, இன் டிசைன் செய்த மாயங்கள் வியப்பாக இருந்தன.
அடோப் போட்டோ ஷாப்பும் இன் டிசைன் அளவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டருக்கு எத்தனையோ பயன்கள் இருந்தாலும், அது பற்றி பெரிய அளவுக்கு அறிவு இல்லாமலேயே கால்குலேட்டராக அதை பயன்படுத்தியே வங்கியில் வாழ்க்கை கழிந்திருக்கும்…
அடுத்த இரண்டு வாரங்கள் பரபரப்பாக பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலேயே கழிந்தன. மூத்த பத்திரிக்கையாளர்கள் அசைன்மென்டுக்கு செல்லும்போது அவர்களோடு அனுப்பி வைத்தார். அரசியல்வாதிகளைப் பேட்டியெடுக்கையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்பதையும், பேட்டிக்குச் செல்லும் முன் பேட்டியெடுக்கப்படும் நபர் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார் எடிட்டர்.
“அடுத்த வாரம் முதல் இதழ் வருது. எவ்வளவு சிரமத்துக்கு இடையில நாம இந்தப் பத்திரிக்கையை கொண்டு வர்றோம்னு உங்க எல்லாருக்கும் தெரியும். சிங்காரவேலு கதிரொளி மேல தொடுத்த தாக்குதல் சாதாரணமானது இல்லை. கதிரொளியை ஒழிச்சுக் கட்டணும்ன்றதுதான் அவங்க எண்ணம். கதிரொளியோட நிலைமையப் பத்தி செய்தி பரவ ஆரம்பிச்ச உடனேயே எனக்கு ஜாப் ஆஃபர் (job offer) வந்துச்சு. இப்போ வாங்கறத விட நெறய்ய சம்பளம். ஆனா, அதிகார மையத்தோடு போராடி ஒரு பத்திரிக்கை தோத்துப் போறத என்னால தாங்க முடியலை. அதுனாலதான் நான் அந்த ஆஃபரை ரிஜெக்ட் பண்ணிட்டேன்.
ஒரு ஊழல் மந்திரி, இத்தனை பேரோட வேலையை காலி பண்றான். ஒரு நேர்மையான பத்திரிக்கையை இழுத்து மூட வைக்கறான்றத என்னால ஜீரணம் பண்ணவே முடியலை. அதுனாலதான் பிடிவாதமா கதிரொளியை வீக்லியாவாவது கொண்டு வரணும்னு முயற்சி பண்ணேன். சிங்காரவேலு உள்துறை அமைச்சராகப் போறார்னு டெல்லியில பேசிக்கறாங்க. நிதியமைச்சரா இருந்து பதவியை ராஜினாமா பண்ண பிறகே, கதிரொளியை இந்த கதிக்கு ஆளாக்க முடிஞ்சுச்சுன்னா, உள் துறை அமைச்சரானா என்னென்ன பண்ணுவான்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
சிங்காரவேலு மேல விசாரணை நடத்தற வேலாயுதம் விசாரணை கமிஷன், சிங்கார வேலுவை காப்பாத்தறதுக்கு என்னென்ன பண்ணுனுமோ அத்தனையும் பண்ணும். அந்தக் கமிஷன் விசாரணை நியாயமா நடக்கும், கதிரொளிக்கு ஆபத்து இருக்காதுன்னு மட்டும் நெனச்சுடாதீங்க. நம்பளோட இந்த புது முயற்சியையும் காலி பண்றதுக்கு சிங்காரவேலு என்ன வேணாலும் பண்ணுவான்.
நீங்க அத்தனை பேரும், இந்தப் பத்திரிக்கைக்காக நேர்மையா உழைச்சு, கதிரொளியோடு முன்னேற்றத்துக்கு சேந்து வேலை செஞ்சீங்கன்னா, நம்பளால இன்னும் பல சிங்காரவேலுக்களை சமாளிக்க முடியும். பத்திரிக்கை தொழில் கவர்மென்ட் ஆபீஸ் க்ளெர்க் வேலை இல்ல. கடவுளுக்கு சேவகம் பண்றதை விட மிக மிக புனிதமான தொழில். நாம நெனைச்சா, இந்த ஜனநாயகத்தை காப்பாத்த முடியும். இதை வலுப்படுத்த முடியும். அதே மாதிரி நாம நெனைச்சா, ஜெர்மனியில ஹிட்லரை மாதிரி ஒரு ஆளையும் உருவாக்க முடியும். நாம எதை தேர்ந்தெடுக்குறோம்ன்றது நம்ப கையிலதான் இருக்கு.
ஏற்கனவே வேலை பாத்துக்கிட்டிருந்த பல பேரை அனுப்பிட்டு, எனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஆளுங்களை மட்டும்தான் ரீடெயின் பண்ணிருக்கேன். திஸ் ஈஸ் தி க்ரீம் ஆப் மை டீம். (This is the cream de la cream of my team) ஐ ஹோப் யூ வில் ஆல் கோ ஆப்பரேட் வித் மி. (I hope you will cooperate with me) கடவுள் நம்மோடு இருப்பார். தேங்க்யூ” என்று முடித்துக் கொண்டார்.
சிங்காரவேலு உள் துறை அமைச்சர் என்றதும் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. எடிட்டர் சொன்னது போல, அந்த விசாரணை கமிஷனில் ஏதாவது நல்லது நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்பது உண்மைதான். விசாரணை கமிஷன் என்பதே, ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான முதியோர் இல்லம்தானே ? முதியோர் இல்லத்தில் நுழைய போட்டி போடும் நீதிபதிகள் எப்படி நியாயம் வழங்குவார்கள் ?
முதல் இதழின் கவர் ஸ்டோரி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தொடர்பானது. அதை எடிட்டரே எழுதியிருந்தார். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை இதற்கு முன்பு மத்திய அமைச்சராக இருந்தார். அவர் இறந்த பிறகு, அவன் மகனை அமைச்சராக்கினார்கள். அவர் சகோதரர் தமிழகத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியை 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்று இந்தியா முழுக்க தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி நடத்திக் கொண்டிருப்பவர். அரசியல் பலமும், பண பலமும் சேர்ந்ததால், யாராலும் தங்களை அசைக்கவே முடியாது என்ற இறுமாப்பில் இருப்பவர்கள். தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெருங்கிய உறவினர்கள்.
அந்த மத்திய அமைச்சர், தனக்கு வழங்கப்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்பை தன் அண்ணனின் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டிலிருந்து காட்சிகளை இறக்குமதி செய்வதற்காக பயன்படுத்தியதாக ஆவணங்களோடு அம்பலப்படுத்தியது கவர் ஸ்டோரி. இரண்டு ஆண்டுகளாக அப்படி தொலைபேசியை தவறாக பயன்படுத்தியதன் மூலம், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்ததை விளக்கியிருந்தது அந்தக் கட்டுரை. சம்பந்தப் பட்ட அமைச்சரிடம் விளக்கம் கேட்டதற்கு, பொய்ச் செய்தி, பிரசுரித்தால் வழக்கு போடுவேன் என்று மிரட்டியிருந்தார். அதுவும் அப்படியே பிரசுரமாகியிருந்தது.
எடிட்டர் சாதாரணமான ஆள் இல்லை. அவரின் தொடர்கள் மூலம் அவர் வெளியிடும் ஸ்டோரிகள் அத்தனையும் இந்தியாவையே உலுக்கிப் போடும் வகையில் உள்ளது.. அவரை விட நாம் சிறந்த பத்திரிக்கையாளராக வேண்டும் என்பது எனக்கு அந்த நேரத்தில் கனவாகவும், லட்சியமாகவும் உருவாகியது.
நான் கம்யூனிசம் பற்றி எழுதியிருந்த கட்டுரையை டம்மி இஷ்யூவில் வைக்காமல், முதல் இதழில் வைத்திருந்தார் எடிட்டர். பெருமையாக இருந்தது. எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்ப்போம்.
முதல் இதழை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனேன்.. “அம்மா.. இது என் கட்டுரைமா.. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு…“
“எங்கடா… குடு.. “ என்று வாங்கி வேகமாக புரட்டியவள், பை லைனில் கோட்டைச்சாமி வெங்கட் என்று வந்ததைப் பார்த்ததும் பூரித்தாள்.
“என்னடா அப்பா பேரோட சேத்துப் போட்டுருக்காங்க.. “
“நாந்தாம்மா அப்படிப் போடச் சொன்னேன்…“
“கோட்டைச் சாமி.. நைஸ் நேம்” வசந்தியின் நினைவு வந்து போனது. அப்படிப் போடச் சொன்னதற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும்தானே தெரியும்.’
“அம்மா.. கோட்டைச்சாமின்னு அப்பாக்கு ஏம்மா பேரு வச்சாங்க…“
“அது நம்ப குலதெய்வத்தோட பேருடா. நம்ப மெட்ராஸ் வந்ததுலேர்ந்து போனதேயில்ல… உங்க தாத்தாதான் குலதெய்வம் பேரத்தான் வைக்கணும்னு வச்சாராம்.. “
“இவ்வளவு நாள் கழிச்சு திடீர்னு ஏன் கேக்கற ?“
“இல்லம்மா.. பத்திரிக்கையில அப்பாப் பேரோட கட்டுரை வந்துருக்கே.. அதப்பாத்ததும் கேட்டேன்.. “
“அதான் வேலை கெடச்சுடுச்சே… ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டா எனக்கு நிம்மதியா இருக்குமேடா…. எனக்குப் பிறகு உன்னை யாருடா பாத்துக்குவா….“
“அம்மா.. நான் கல்யாணம் பண்ணிக்கறதா இல்லை. எனக்கு இருக்கற பிரச்சினைக்கு கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்டு நிம்மதியா என்னால இருக்க முடியாது. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு யாரும்மா பொண்ணு குடுப்பா.. ? நான் பட்ற கஷ்டம் பத்தாதுன்னு இன்னொரு பொண்ணு வந்து கஷ்டப்படணுமா ?“
“உனக்கும் வயசாயிட்டே இருக்குடா… கேசைப் பத்தியெல்லாம் விளக்கிச் சொல்லிட்டு கேக்கலான்டா.. “
“பேசாம இரும்மா.. இந்தப் பேச்சை இன்னையோட விடு…“
என் படுக்கையில் விழுந்தேன். ஜனனி ஞாபகம் வந்தது. வசந்தி ஞாபகம் வந்தது. திருமணம் எனக்கு சரிப்பட்டு வருமா ?
‘அம்மா கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. எல்லாக் குடும்பங்களையும் போல, தன் மகனும் திருமணம் செய்து கொண்டு, தன் சந்ததியை நீட்டிக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.. இயல்பாக எல்லா தாய்களுக்கும் இருக்கும் எண்ணம்தானே அது ? அவளைக் குறை சொல்ல முடியாது.
திருமணம், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது என்ன… ? நான் இறந்த பிறகும் வாழ வேண்டும் என்ற சுயநலத்தின் நீட்சிதானே.. என் உருவில் என் மகனைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம்தானே… கண்ணாடியில் தன்னையே பார்த்து ரசித்துக் கொள்ளும் நார்சிஸ்டுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே.. தவறு செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள் அத்தனை பேரும் சொல்லும் காரணம், எனக்காக இல்லை, என் குடும்பத்திற்காக என்பதுதானே… நானும் அந்தச் சுழலிலா சிக்கிக் கொள்ள வேண்டும் ?
குடும்பம் என்பது பலவீனம் இல்லையா ? மொழி வாழ்க, தமிழ் வாழ்க என்று மேடை மேடையாக முழங்கிவிட்டு, தன் பிள்ளையை கான்வென்டில் சேர்க்கும் போலித்தனத்துக்கு நானும் ஆளாகி விட மாட்டேனா ? சொந்தமாக வீடு வைத்திருந்தாலும், மேலும் சொத்து சேர்க்க வேண்டும் என்று உலகமே பேயாக பணத்தின் பின்னால் அலைவது குடும்பத்தின் பெயரைச் சொல்லித்தானே… மரணம் ஒன்றே மாற்ற முடியாத விதி என்பதைத் தெரிந்தும், ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவது போல சொத்துக்களை சேர்த்துக் கொண்டே செல்லும் இந்த மனிதனின் பேராசையைத் தூண்டுவது குடும்பம்தானே…. எத்தனை ஏக்கர் நிலம் வாங்கினாலும் ஆறடிதானே சொந்தம்… இந்த நவீன யுகத்தில், எலெக்ட்ரிக் சுடுகாட்டில் எரித்து, இதுதான் வெங்கட் என்று ஒரு சொம்பில் மொத்தமாக கொடுத்து விடுவார்களே…
இதையெல்லாம் விட, சிங்காரவேலுவை எதிர்த்துப் போராடும் துணிச்சல் இருக்குமா ? என் மனைவி, என் குழந்தை என்று வந்து விட்டால் நாளை சமரசம் செய்து கொள்ள மாட்டேனா….
மனைவிக்காக, குழந்தைக்காக என்று குறைந்தபட்சம் அத்தியாவசியத் தேவைகளுக்காகவாவது பணத்தின் பின்னால் அலைய மாட்டேனா ? எனக்கு திருமணம் ஆகி, குழந்தை இருந்திருந்தால், சிங்காரவேலுவுக்கு எதிராக கிடைத்த ஆவணத்தை வெளியிட்டிருப்பேனா…. சத்தமில்லாமல் அதே இடத்தில் வைத்து விட்டு, என் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டுதானே இருந்திருப்பேன்…. இதுதான் பாதை என்று தேர்ந்தெடுத்து விட்ட பிறகு, இனி திரும்பிப் போவது சாத்தியமா என்ன ? சாத்தியமாகவே இருக்கட்டுமே…. நான் வேறு பாதையில் போவதாக இல்லை.
செக்ஸ்…? அவசியம்தான். இல்லாமல் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.. சமயத்தில் அதன் தேவை, தாங்க முடியாத வேதனையையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது.. திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கும் நெருக்கமான காதல் காட்சிகள் கிளர்ச்சியை விட, எரிச்சலை ஏற்படுத்துகின்றன.. அவுட்லெட் இல்லாமல் மனது வக்கிரத்தனமாக மாறி விடுமோ என்று பயமாகவும் இருக்கிறது…
அதற்காக திருமணம், குடும்பம் என்று இறங்க முடியுமா ? ஆற்றில் குளித்தால் நன்றாகத்தான் இருக்கும்.. அதற்காக ஆற்றைத் திருப்பி வீட்டுக்குள் விட முடியுமா ? யோசித்துக் கொண்டே உறங்கி விட்டேன்..
முதல் இதழ் விற்றுத் தீர்ந்தது. வாசகர்கள் கதிரொளியை கைவிடவில்லை. எடிட்டர் அனைவரையும் அழைத்துப் பாராட்டியதோடு, இது ஆரம்பப் பரபரப்பு.. இந்த ஆர்வத்தை தொடர்ந்து நீட்டிக்க வைக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். ஸ்டோரி ஐடியாஸ், அன்று மாலையே அவுட்லைனோடு தனக்கு மெயிலில் அனுப்ப வேண்டும் என்றும் சொன்னார்.
அடுத்து என்ன ஸ்டோரி என்று புரியவில்லை. புதிதாக பத்திரிக்கை உலகுக்கு வந்திருப்பதால், பெரிய அளவில் தொடர்புகளும் இல்லை.
நம்மை நம்பி சீனியர் கரெஸ்பான்டென்ட் பதவி வேறு கொடுத்து விட்டார். அவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு மட்டும் இருந்தது.
வழக்கறிஞர் சுப்புராஜிடமிருந்து போன். உடனே கிளம்பி அவர் அலுவலகம் வர முடியுமா என்று கேட்டார். உடனே வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். இன்னும் கொஞ்சம் விசிட்டிங் கார்டுகளை எடுத்து வைத்துக் கொண்டேன்.
“வணக்கம் சார்…“
“வாங்க வெங்கட்.. உங்க ஸ்டோரி பாத்தேன்… ரொம்ப நல்லா வந்துருக்கு.. பேலன்ஸ்டா இருக்கு.. அவங்களும் படிச்சுட்டு தகவல் சொன்னாங்க.. நான் உங்களை இப்போ கூப்பிட்ட விஷயம், முக்கியமான விஷயம். உங்க ஸ்டோரியைப் படிச்சுட்டு இதை நீங்க பண்ணா சரியா இருக்கும்னு நெனச்சுதான் உங்களை கூப்பிட்டேன்.“
“சொல்லுங்க சார்…“ என்றேன்.
“இந்த ஸ்டோரி பண்றதுல கொஞ்சம் ரிஸ்க் ஜாஸ்தி. ப்ராப்ளம்ஸ் வரும். ஃபேஸ் பண்ண முடியும்னா சொல்லுங்க…“
“சார் கண்டிப்பா பண்றேன் சார்.. எடிட்டர்கிட்டயும் கேட்டுக்கறேன்.. என்ன மேட்டர் சார் ?“
அவர் சொன்ன விஷயம் சின்ன ரிஸ்க் அல்ல.. பெரிய ரிஸ்க்.
சிங்காரவேலனை விட பெரிய ரிஸ்க். அது சிங்காரவேலன். இது கதிரவன்.
தொடரும்.
இது கதை அல்ல நிஜம்
Shankar Sir you are Awesome.. Am waiting eagerly for every episode..
Shankar, please release the other issues also fast. Cant wait for next part..
As usual fantastic Mr. Shankar.
Mr. Shankar this story is really a great work by you. That technical briefings like a bank employee hardly uses the PC like calculator and all shows your imagination power and home work for this story. i think you almost became that character while writing. Keep going on… “Ithu katai alla … nijam”
Thambi indha IPLpathi oru PIL sampath kumar IPS potirukkar. Adhai konjam parungalen. Vinod Rai SC solli oru arikkai thanthathakavum adhu thappanathu ul nokkam kondathunnu mama subramanyam swamy sorar… adhu pathi konjam puriyumpadi ezhuthungalen….. indha naatharinga mele nadavaikkai illame epadi karuppuppanam ozhiyum… ille ozhikka mudiyum
தலைவரே..சூப்பர்.. அப்படியே உங்கள் எண்ண ஓட்டங்களையும் பிரதிபலிப்பது அருமை.. உங்கள் புத்தகத்தை விட இது கொஞ்சம் நல்லாவே போகுது…
2 G கதிரவனா ? தகதாய கதிரவன் தானே ? சங்கரு நீர் எழுதுவது கதை இல்லையா இங்க நடந்தவைகள். எழுதும் அப்படியாச்சும் மக்களுக்கு பூய் சேரட்டும்