கதிரவன். நீதிபதி பி.டி.கதிரவன். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சுப்புராஜ் தந்தார். அந்த நீதிபதி மோசமான நபர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துக் குவித்திருப்பார் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
சிங்காரவேலு பற்றி செய்தி வெளியிட்டதற்காக பொய் வழக்கு. சிறை. பணி நீக்கம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவரைப் பற்றி எழுதினால் என்ன நடக்கும் ? அரசியல்வாதிகள் மீதான ஊழல் புகார்கள் அவ்வப்போது வந்துள்ளன. ஆனால் நீதிபதிகள், அதுவும் ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி… உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரைப் பற்றி இது வரை செய்தி ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை.
“சார்.. நீங்க பேப்பர்சை கொடுங்க. இந்த விஷயத்துல நானா எதுவும் முடிவு பண்ண முடியாது. எடிட்டர்கிட்ட கேக்கணும். டிஸ்கஸ் பண்ணிட்டு இன்னைக்கே பாக்க வர்றேன்.”
அவரும் சம்மதித்து, அது தொடர்பான ஆவணங்களை கொடுத்தனுப்பினார்.
எடிட்டரிடம் பேசியபோது, அவருக்கே இது தயக்கத்தை ஏற்படுத்தியது.
”டாக்குமென்ட்செல்லாம் ஓ.கே வெங்கட். அந்த ஆளு இந்த சொத்தையெல்லாம் லஞ்சம் வாங்கித்தான் சேத்தாருன்றதுக்கு நம்மகிட்ட என்ன மெட்டீரியல் இருக்கு ? ”
”சார்.. அவரு மாமனார் மாமியார் பேர்ல சொத்து வாங்கியிருக்காங்க. ஊட்டியில அவர் பொண்ணு பேர்ல சொத்து வாங்கியிருக்காங்க. அந்த சொத்துக்களோட மதிப்பு பல கோடி. மாமனார் மாமியார் கதிரவன் ஜட்ஜ் ஆகறதுக்கு முன்னாடி பைல் பண்ண இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்ஸ்ல மாசம் நாலாயிரம் வருமானம் காமிச்சுருக்காங்க. இவர் ஜட்ஜ் ஆனதுக்குப் பிறகு, அவங்க இந்த பலகோடி ரூபாய் சொத்து வாங்கியிருக்காங்க. இதுக்கு அவங்களுக்கு பணம் எங்கேர்ந்து வந்துச்சு… ?
அது மட்டுமில்லாம, கதிரவனே திருவள்ளுர்ல 580 ஏக்கர் நிலம் வச்சுருக்கார். அந்த 580 ஏக்கர்ல கவர்மென்ட் லேன்ட் 22 ஏக்கர் இருக்கு. கவர்மென்ட் லேன்டுக்கும் சேத்து ஃபென்ஸ் (fence) போட்டிருக்கார். வி கேன் பில்ட் ய குட் ஸ்டோரி சார்.. (We can build a good story sir) ”
”இது நல்ல ஸ்டோரின்றதுல டவுட் இல்ல வெங்கட். நானும் ஒத்துக்கறேன்.. அதே நேரத்துல இது நார்மலான ஸ்டோரி இல்லன்றதையும் புரிஞ்சுக்கோ.. கதிரவன் இப்போ கர்நாடகா ஹை கோர்ட்டோட சீப் ஜஸ்டிஸ். இப்போ சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா ஆகப்போறாரு. அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகக் கூடாதுன்றதுக்காக வேற யாரோ சொல்லி நாம இந்த ஸ்டோரிய பப்ளிஷ் பண்ணதா நம்ப மேலயே அலிகேஷன் வரலாம். ஸ்ட்ரெயிட்டா நம்ப மேல கன்டெம்ப்ட் எடுக்கலாம். அது மட்டுமில்லாம அவர் தலித் கம்யுனிட்டி. தன்னை தலித்ன்றதுனால பழி வாங்கறாங்கன்னு அந்த ஆயுதத்தையும் அவர் கையில எடுக்கலாம்.
யு டூ ஒன் திங். உன் சோர்ஸ் கிட்டயே, இருக்கற எவிடென்ஸ் வைச்சு, கதிரவன் மேல சுப்ரீம் கோர்டுக்கு கம்ப்ளெயின்ட் அனுப்பச் சொல்லு.. அவர் கம்ப்ளெயின்ட பேஸ் (base) பண்ணி நம்ம ஸ்டோரி பண்ணிடலாம். அப்போ நமக்கு பிரச்சினை வராது. அட்வகேட்ஸ் கம்ப்ளெயின்ட பேஸ் பண்ணி நாம ஸ்டோரி பண்ணதா ஆயிடும். தென் வி வில் நாட் பி அலோன். (Then we will not be alone) இந்த விஷயமா நானும் டெல்லியில பேசறேன். ஃபர்தரா விசாரிக்கறேன். நீ உன் சோர்ஸைப் பாத்து டிஸ்கஸ் பண்ணு.”
மீண்டும் சுப்புராஜ் அலுலவகத்துக்குச் சென்றேன். அவர் தயங்கினார்.
”இங்க பாருங்க வெங்கட். உங்க கிட்ட குடுக்கறதுக்கு முன்னாடி நானே இந்த கம்ப்ளெயின்டை அனுப்பியிருக்க பண்ணியிருக்க முடியும். பட், நான் மாவோயிஸ்ட்ஸ்காக நெறய்ய கேஸ்ல அப்பியர் ஆகறேன். ஸோ எனக்கு மோட்டீவ் இருக்குன்னு சொல்லிடுவாங்க. கம்ப்ளெயின்ட சீரிஸா எடுத்துக்க மாட்டாங்க. அதனால அந்த கம்ப்ளெயின்ட் மேல நடவடிக்கை எடுக்காம போனாலும் போயிடுவாங்க.. அந்த ரிஸ்க் இருக்கு. யாராவது நல்ல ஸ்டேச்சர் (stature) உள்ள ஆளு இந்த கம்ப்ளெயின்ட அனுப்பினா நல்லா இருக்கும்.”
”சார் இது ஜுடிஷியரி சம்பந்தப்பட்ட மேட்டர். ப்ரெஸ்ல இது மொதல்ல வந்துச்சுன்னா வி மே பி டார்கெட்டட். (we may be targetted) அட்வகேட்ஸ் கம்ப்ளெயின்ட்ஸ பேஸ் பண்ணி வி கேன் டூ ய ஸ்டோரி.. ”
”ஓ.கே. சிபிஎம் அட்வகேட் வைகறைச் செல்வன் இதை எடுப்பார்னு நெனைக்கறேன்.. ”
வைகறைச் செல்வன் என்று சொன்னதுமே வசந்தி முகம் வந்து மறைந்தது.
”சார் நான் வேணா இந்த பேப்பர்ஸை அவர்கிட்ட குடுத்துப் பேசறேன் சார்.. ”
”நோ நோ… நீங்க ப்ரெஸ்லேர்ந்து போயி அவர்கிட்ட பேசுனா நல்லா இருக்காது. நானே அவர் கிட்ட பேசிட்டு சொல்றேன்.. அப்புறம் அவரை மீட் பண்ணுங்க..”
ஏமாற்றமாக இருந்தது. இந்தச் சாக்கை வைத்து அவர் அலுவலகத்துக்கு போகலாம் என்று நினைத்தால் இப்படிப் பண்ணி விட்டாரே…
”சரி சார்.. நான் எடிட்டர்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்றேன். ”
எடிட்டரிடம் விஷயத்தைச் சொன்னேன்.
”நானும் டெல்லியில சில சீனியர் அட்வகேட்ஸ் கிட்ட பேசியிருக்கேன் வெங்கட். அவங்க கிட்ட சில டீட்டெயில்ஸ் இருக்கு. திஸ் ஈஸ் யுவர் ஸ்டோரி. இதை ப்ரேக் பண்ணி அந்த ஆளை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகாம நிறுத்தினேன்னா இட் வில் பி ய பிக் ப்ரேக் இன் யுவர் கேரியர். (It will be a big break in your career) ஸ்டார் ஜர்னலிஸ்ட் ஆயிடுவ. இந்த வாரம் இதைப் பண்ண முடியாது. நீ வேற எந்த ஸ்டோரியும் பண்ண வேண்டாம். திஸ் ஈஸ் கதிரொளி ஸ்டோரி. இந்த ஸ்டோரி வேற யார் கைக்கும் போயிடாம பாத்துக்கோ. இந்த வாரம் கொண்டு வர முடியாது. நெக்ஸ்ட் வீக் வி வில் ப்ரேக் திஸ்.(Next week we will break this)”
அடுத்த வாரம் முழுக்க சுப்புராஜ் அலுவலகத்திலேயே குடியாக இருந்தேன். வைகறைச் செல்வன் கதிரவன் மீது புகார் தயார் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று கூறியிருக்கிறார். வெள்ளிக்கிழமை மீண்டும் வரச் சொன்னார். வெள்ளிக்கிழமை மீண்டும் சென்ற போது, வைகறைச் செல்வன் அனுப்பிய புகாரின் நகலை அளித்தார்.
‘இவரை யார் புகாரை வாங்கி வைக்கச் சொன்னது. நான் போய் வைகறைச் செல்வன் அலுவலகத்திலேயே வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனா.. ?’
வைகறைச் செல்வன், சுப்புராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மேலும் சில வழக்கறிஞர்கள், கையெழுத்திட்டு கதிரவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்று புகார் அனுப்பியிருந்தார்கள். கதிரவன் வாங்கியிருந்த சொத்துக்களின் பட்டியல் குறித்து முழுமையான விபரங்கள் அதில் இருந்தன.
அலுவலகம் வந்து ஸ்டோரியை தயார் செய்ய ஆரம்பித்தேன். கதிரவன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன, தற்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள விபரங்களையும் சேர்த்து அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்படுவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் முடித்தேன். 1300 வார்த்தைகள் வந்தது. எடிட்டரிடம் அனுப்பி விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எடிட்டர் அழைத்தார்.
”வெங்கட்… ஸ்டோரி பார்த்தேன். குட். பட் நீட்ஸ் சம் எடிட்டிங். (But needs some editing) நான் கொஞ்சம் மாத்திருக்கேன்.. என்கிட்ட இன்னும் சில டீட்டெயில்ஸ் வந்துருக்கு. இதையும் ஸ்டோரியில இன்க்ளுட் பண்ணி, ரிவைஸ் பண்ணி அனுப்பு” என்றார்.
எடிட்டர் கொடுத்த விபரங்கள் கதிரவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அல்ல, அவர் தற்போது வகிக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியையை காலி பண்ணும் அளவுக்கு தீவிரமாக இருந்தன.
கதிரவன், நான்கு மாதங்களுக்கு முன் கனடாவுக்கு குடும்பத்தோடு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அந்த சுற்றுப்பயணத்துக்கான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொண்டது, கருணா மூர்த்தி என்ற தொழில்அதிபர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாமூர்த்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கதிரவன் கருணாமூர்த்திக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடர்பான வழக்கில், வாரியத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து விட்டு, சோழிங்கநல்லூரில் அவர் மகளுக்கும், மகனுக்கும் 5 க்ரவுண்டுகள் இடத்தை வீட்டு வசதி வாரியத்திடமிருந்து ஒதுக்கீடு பெற்றிருந்தார். அவர் மகன் மற்றும் மகள் கொடுத்த விண்ணப்பத்தின் மேல் “விஐபி” என்று எழுதப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள பி அன்ட் சி மில் மூடப்பட்டபோது, தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை குறைத்து வழங்கும்படி தீர்ப்பளித்திருந்தார் கதிரவன்.
எடிட்டரின் சோர்ஸ்களை நினைத்து மீண்டும் ஒரு முறை மலைப்பு ஏற்பட்டது.
அனைத்து விபரங்களையும் சேர்த்து, 2000 வார்த்தைகளில் தயார் செய்தேன். மொத்த கட்டுரையையும் மீண்டும் எழுதினேன்.
‘அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றால், நியாயம் வேண்டும் மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் இருக்கின்றன என்று நம்பப்பட்டு வருகிறது. அரசியல், நிர்வாகம், பத்திரிக்கைகள் என்று ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் உளுத்துப்போய் இடிந்து விழும் நிலையில் இருக்கும்போது, மீதம் உள்ள ஒரே தூணான நீதித்துறையின் மீதுதான் மக்கள் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீதித்துறையில் கதிரவன் போன்ற கருப்பு ஆடுகள் இருப்பது, அந்த கடைசி நம்பிக்கையையும் பொய்த்துப் போகச் செய்யும் வல்லமை படைத்தது.
ஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழல் புரிந்தால் அவர் மீது பாய்ந்து பிராண்டும் இந்நாட்டுச் சட்டங்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளை மட்டும் மயிலிறகால் வருடிக்கொடுப்பது, ஜனநாயகத்தின் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. நீதிபதிகளையும் ஊழல் புரியும் மற்ற குற்றவாளிகளைப் போலவே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கதிரவன் இவ்வளவு சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார் என்றால் இவர் தன் முன் வந்த வழக்குகளில் லஞ்சம் வாங்கி மட்டுமே சேர்த்திருக்க முடியும். நாளை அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்… சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். ஆனால் அவர் வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் என்ன ஆவது… ? கதிரவன் என்ற தனிநபர் வழங்கிய தீர்ப்புகளாக இருந்தாலும் அவை நீதிமன்றத்தின் தீர்ப்புகளாக நிரந்தரமாக இருக்குமே…
அந்தத் தீர்ப்புகளை யார் திருத்தி எழுதுவது ?’ என்று கட்டுரையை முடித்திருந்தேன். படித்து விட்டு எடிட்டர் பாராட்டினார். “நல்லா இம்ப்ரூவ் ஆயிட்டய்யா“ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.
“கறை படிந்த நீதி“ என்று தலைப்பிட்டு கவர் ஸ்டோரியாக வந்தது. வெளிவந்த முதல் நாளே கடைகளில் இதழ் விற்றுத் தீர்ந்தது. அந்த இஷ்யூவை மறு நாளே 50 ஆயிரம் காப்பிகள் ரீ ப்ரிண்ட் செய்ய வேண்டியதாயிற்று.
தேசிய ஊடகங்களும், தொலைக்காட்சிச் சேனல்களும் கதிரவனை வறுத்து எடுத்தன. டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து, கதிரவன் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனுக்கொடுத்தார்கள். தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.கிருஷ்ணபாலன், எப்படியாவது கதிரவனை உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். கதிரவன் சென்னையில் அண்ணா நகர், ஷெனாய் நகர், முகப்பேர் ஆகிய இடங்களில் வாங்கியிருந்த சொத்துக்களின் பட்டியலை மற்றொரு பத்திரிக்கை வெளியிட்டது.
‘இந்த விபரம் நமக்கு எப்படிக் கிடைக்காமல் போய் விட்டது என்று எரிச்சலாக இருந்தது. எல்லா துறைகளிலும் சாகசங்கள் செய்து மின்ன வேண்டும் என்ற எண்ணத்தைப் போலவே, ஒரு பத்திரிக்கையாளன் முக்கியமான ஸ்டோரிக்கள் அனைத்தையும் தான்தான் ப்ரேக் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான். எனக்கு இந்த எண்ணம் வந்தது, நானும் பத்திரிக்கையாளன் போலச் சிந்திக்க தொடங்கி விட்டேன் என்பதை உணர்த்தியது.’
எடிட்டர் சொன்னது போலவே, கதிரவன் நான் ஒரு தலித் என்பதால் என்னை ஆதிக்க சமூகம் பழிவாங்குகிறது என்றார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு முழு பக்கத்திற்கு பேட்டியளித்தார். அவருக்கு ஆதரவாக தலித் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின.
மற்றொரு பக்கம் கதிரவனுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில், கதிரவனை ராஜினாமா செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் முதல் மூத்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் கதிரவனை நியமிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்கள். தலைமை நீதிபதி கிருஷ்ணபாலன் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டு கதிரவனை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பதில்லை என்று முடிவெடுத்தார். கதிரவன் விடுப்பில் சென்றார்.
எனக்கு பாராட்டுக்கள் குவிந்தன. வட இந்தியாவிலிருந்து வரும் பயனீர் நாளேடு, “த மேன் ஹு புட் ஸ்போக்ஸ் இன் கதிரவன்ஸ் வீல் ஆப் லூட் (The man who put spokes in Kathiravan’s wheel of loot” என்று தலைப்பிட்டு என்னைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தது.
ஃபேஸ் புக்கில் ஒரே பாராட்டு மழை. கதிரொளி நிருபர் என்று போட்டிருந்தேன். என் ஸ்டோரியின் லிங்க்கை போட்டிருந்தேன். நூற்றுக்கணக்கில் நண்பர்கள் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.
திடீரென்று கிடைத்த இந்த பாராட்டு மழை திக்குமுக்காடச் செய்தது. நான் வங்கியில் செய்து கொண்டிருந்த வேலையை நினைத்துப் பார்த்தேன். பணக்காரர்களுக்கு வரிப்பணத்தை வழங்கி அவர்கள் கடனை கட்டத் தவறினால், நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ் என்று அதை வகைப்படுத்தி நஷ்டக் கணக்கில் வைத்து, நாள்தோறும் கணக்குப் போட்டுக் கொண்டே, எண்களில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன்.
காற்று வெளியில் அலையும் கண்ணுக்குத் தெரியாத சிறு துகளாகக் கரைந்து போயிருப்பேன். நிதி அமைச்சராக சிங்காரவேலு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்திக் கொண்டிருந்திருப்பேன். அதுவா வாழ்க்கை ? நம்மை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களை அசைத்துப் பார்ப்பது எத்தனை பெரிய த்ரில்லைத் தருகிறது ? இந்தத் த்ரில் எந்த வேலையில் கிடைக்கும் ?
ஃபேஸ் புக்கில் ஆன்லைனில் சென்றவுடன், முகம் தெரியாத பல்வேறு பேர் சேட்டில் வந்தார்கள். அனைவருக்கும் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
திடீரென்று “ஹலோ சார் ? டூ யு ரிமெம்பர் மி ?” என்று ஃபேஸ்புக்கில் மெசேஜ். யாரென்று பார்த்தால் வசந்தி. கோட்டைச்சாமி என்ற என் பெயரை அழகுபடுத்திய அதே வசந்தி.
‘பதில் சொல்வதா வேண்டாமா ? அலைந்து கொண்டு உடனே பதில் சொன்னால் வழிகிறான் என்று நினைத்துக் கொள்வாளோ…’
“ஐ யம் தி ஜுனியர் ஆப் வைகறைச்செல்வன். யு கேம் டு அவர் ஆபீஸ்.“
“யெஸ் ஐ ரிமெம்பர் யூ.. “ என்று பதில் அனுப்பினேன்.
“யு ஹேவ் டன் ய மார்வெலஸ் ஜாப்… (You have done a marvellous job)“
“தேங்ஸ்…“
“மை போன் நம்பர் ஈஸ் 9983802981“
‘என்ன இது எடுத்த எடுப்பில் அவள் போன் நம்பரை அனுப்புகிறாள்.. நான் கேட்கவேயில்லையே.. விளையாட்டுத்தனமாக அனுப்புகிறாளா.. இல்லை போன் நம்பரை அனுப்பினால் நான் என்ன செய்கிறேன் என்று சோதிக்கிறாளா… இவளின் வேகம் அதிபயங்கரமானதாக இருக்கிறதே..’
“வாட் ஈஸ் யுவர் நம்பர்… ? “ என்று அடுத்து எனது நம்பரைக் கேட்டு ஒரு மெசேஜ்.
‘நமது போன் நம்பரையும் கேட்கிறாளே ? பேசுவாளோ… அனுப்பலாமா வேண்டாமா… அனுப்பாவிட்டால் திமிராக நடந்து கொள்வது போல இருக்குமோ. அவளாகத்தானே கேட்கிறாள்.. ’
அனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் மெசேஜ் வந்தது.
“யு ஹேவ் டன் ய க்ரேட் ஜாப். மை சீனியர் டாக்ஸ் அபவுட் யு ய லாட். க்ரேட் வொர்க். (You have done a great job. My senior talks about you a lot)“
“தேங்க்ஸ். “
பிறகு மெசேஜ் வரவில்லை. 20 நிமிடங்கள் கழித்து மெசேஜ்.
“ஆர் யு மேரீட் ? “
தொடரும்.
Bro! Venkat has sent a copy of bank loan documents to his friend in Bangalore or somewhere, right?! When will it be revealed?
mumbaiyil singaravelu thannoda velaya kaattitan
R U Married ? Semma ending Bro.
தம்பி மிக நன்றாக செல்கிறது.
I dialed that mobile number in true caller. It was a Hindi man’s.
படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் எவ்வளவு ஆபத்துக்களைத் தாண்டி, தற்போதும் அவற்றின் மத்தியிலும் வாழ்கிறாய்…தம்பி…
you are doing a great work.
நீதிபதி பி.டி.தினகரன், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.. பல பேரை பலி கொடுத்து இவ்வளவு சொத்து சம்பாதித்து சொகுசாய் வாழ்கிறான்களே..இவன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இச்சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுக்க முடியாதா?
Antha aniyayam piditha sothu venam brother… Fulla pavam … Avangale vachi sagattum