தேர்தல் நடக்கும் வரை, அயராது பணியாற்றினோம். அதிமுக வெற்றிக் கனியை பறிக்கும் சூழலை ஒருவர் இருவர் அல்ல…. ஆயிரக்கணக்கானோர் சளைக்காமல் பணியாற்றி உருவாக்கினோம். அதிமுக நாளை பெறப்போகும் வெற்றியில், சவுக்கு வாசகர்களுக்கு 0.000005 சதவிகிதம் கூட பங்கு இல்லாமல் போய் விடுமா என்ன ? நிச்சயம் இருக்கும்.
செல்வி ஜெயலலிதாவின் கடந்த இரண்டு ஆட்சிகளையும் எடுத்துக் கொண்டால், அராஜக ஆட்சி என்ற வார்த்தைகளே முன்னுக்கு வந்து நிற்கின்றன. 2011 தேர்தலில் ஜெயலலிதா பெறப்போகும் வெற்றி, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விழுந்த வாக்குகளை விட, கருணாநிதி என்னும் தீய சக்தி அகற்றப் பட வேண்டும் என்று விழுந்த வாக்குகளே அதிகம். சர்வசக்தி பொருந்தியவர், யாராலும் அசைக்க முடியாத தமிழினத்தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கருணாநிதியையே மக்கள் தூக்கி எறிகிறார்கள் என்றால், தவறு செய்தால், ஜெயலலிதாவையும் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள் என்ற உணர்வு ஜெயலலிதாவிடம் இருக்க வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது. இது வரை, மோசமான ஆட்சியை வழங்கினார் என்ற அவப்பெயரை, துடைத்தெறிய ஒரு வாய்ப்பாக ஜெயலலிதா இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தை ஆள வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது.
ஜெயலலிதா முதல்வரானதும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக, சவுக்குக்கு தோன்றிய விஷயங்கள் கீழே வழங்கப் படுகின்றன. சவுக்கு என்பது ஒரு இயக்கம் அல்லவா ? அதனால், சவுக்கு வாசககர்கள், ஜெயலலிதா பதவியேற்றதும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக கருதுபவற்றை, பின்னூட்டமாகவோ, பெரிய ஆலோசனையாக இருந்தால், newsavukku@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, தங்களின் ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள். சிறந்த ஆலோசனைகள் பெயரோடு பிரசுரிக்கப் படுவதோடு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதலமைச்சரானதும், இந்த கோரிக்கைகள் / ஆலோசனைகள் ஜெயலலிதாவிடம், சவுக்கு வாசகர்கள் சார்பாக அளிக்கப் படும் என்பதை சவுக்கு உங்களிடத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. சவுக்கு வாசகர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் பார்ப்போம். முதலில், சவுக்கின் ஆலோசனைகளை பார்த்து விட்டுத் தொடருங்கள்.
1) மதுரை தினகரன் எரிப்பு வழக்கில், மதுரை நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை என்பதால், தமிழக அரசு, தன்னையும் ஒரு கட்சியாக இணைத்துக் கொண்டு, இது வரை நடந்த வழக்கு விசாரணையை, செல்லா விசாரணை (Mis-trial) என்று அறிவிக்க உத்தரவு பெற்று, அந்த விசாரணையை மீண்டும் நடத்த முயற்சி எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்த அந்த மூன்று குடும்பத்துக்கும் நியாயம் பெற்றுத் தர வேண்டும்.
2) முதலமைச்சர் வாகனம் (Convoy) சாலையில் செல்லும் போது, அரை மணி நேரம் பொது மக்கள் வாகனங்களை நிறுத்தும் வழக்கத்தை கைவிடுங்கள். காலையில் பரபரப்பாக செல்லும், பொது மக்கள், இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
3) அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு, மீண்டும் உயிரூட்டி, அதற்கு உமாசங்கர் ஐஏஎஸ் அவர்களையே தலைவராக நியமித்து, தமிழகமெங்கும், உயர் ரக கம்பி வட இணைப்பு மூலம், கேபிள் டிவியோடு சேர்த்து, இணைய இணைப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கேபிள்களை சேதப் படுத்துபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள்கள் சேதப்படுத்துவோரை கைது செய்யத் தவறும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்று உத்தரவிட வேண்டும். அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு சன் குழுமம் தனது இணைப்புகளை தர மறுத்தால், அவசரச் சட்டம் கொண்டு வந்து, அரசுக்கு சன் டிவி சிக்னல்களை எடுத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு என வகை செய்ய வேண்டும.
4) லஞ்ச ஒழிப்புத் துறையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
5) தலைமைத் தகவல் ஆணையராக உள்ள கே.எஸ்.ஸ்ரீபதி மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த ஒரு வழக்கு குறித்து, தலையிட்ட காரணத்துக்காக, அவர் மீது உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, அவர் மீது விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரை தலைமைத் தகவல் ஆணையர் பணியிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
7) லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு இப்போது உள்ள சிக்கலான நடைமுறையை எளிமையாக்கி, ஊழலில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
8) கடந்த ஐந்தாண்டுகளில், ஐஏஎஸ், மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், சம்பாதித்த சொத்துக்கள் என்பது பல கோடிகள். பாரபட்சம் பார்க்காமல், இவர்கள் அத்தனை பேர் மீதும், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்ட ஊழல் வழக்குகளை பதிவு செய்து, உரிய புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்குகள், சாதாரண நீதிமன்றங்களில் தொடரப்பட்டால், முடிவடைய மிகுந்த காலதாமதம் ஆகும் என்பதால், விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்தி, நீதிமன்ற விசாரணையை தீவிரமாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
திமுக அரசின் 2006-2011 வரையிலான அத்தனை ஊழல்களையும் விசாரிக்கும் வேலையை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, அந்தக் குழுவிடம் ஒப்படைத்தால், சாதாரணமாக நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வேலைகள் பாதிக்கப் படாது.
இது போன்ற விசாரணைகளை நடத்துவதற்கு, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது என்பதால், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கி, தேவையான வசதிகளையும் செய்து தர வேண்டும். விரைவாக, புலனாய்வை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரியை கவுரவப்படுத்துவது போன்ற செயல்கள், மற்றவர்களையும் விரைவாக வேலை செய்ய வைக்கும்.
9) மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐல், கவுண்டர் இன்டெலிஜென்ஸ் என்ற பிரிவு ஒன்று உண்டு. அந்தப் பிரிவின் வேலை, சிபிஐ க்குள் இருந்து கொண்டு, லஞ்சம் வாங்குவதோ, அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்டிறியவென்றே செயல்படும் உளவு அமைப்பு. இதனால், சிபிஐக்குள் பணியாற்றிக் கொண்டு, தவறு செய்யும் எண்ணமே ஏற்படாமல், சிபிஐ பெருமளவில் தடுக்க முடிந்துள்ளது. அதே போல, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில், கவுண்டர் இன்டெலிஜென்ஸ் பிரிவு ஒன்று ஏற்படுத்தி, அங்கே பணியாற்றிக் கொண்டே, மாமூல் வாங்கும், அதிகாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
10) தமிழக காவல்துறைக்கு வழங்கப் படும் ரகசிய நிதி என்பது, பெருமளவில் அதிகாரிகள் கையாடல் செய்வதற்காகவே பயன்பட்டு வருகிறது. அதிகாரிகள் சட்ட விரோதமாக தங்கள் சொந்த செலவுக்கு இதில் பெரும் தொகையை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு, ஆய்வோ, ஆடிட்டோ இல்லை என்பதால், இந்தக் கையாடல் கண்டுபிடிக்கப் படாமலேயே போய் விடுகிறது. இந்த ரகசிய நிதியை ஆடிட் செய்வதற்கென்றே ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இந்த அமைப்பு, என்ன செலவுகள் செய்யப் பட்டுள்ளது என்பதற்கு தணிக்கை செய்யும் அதிகாரம் வழங்க உத்தரவிட வேண்டும். இந்தத் தணிக்கையை மாநில அரசு அதிகாரிகள் செய்யாமல், மத்திய கணக்காயர் அலுவலகத்திலிருந்து நடக்கும் ஆய்வுக் குழுவைப் போன்ற ஒரு குழு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.
11) ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு, 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், நளினி உள்ளிட்ட வாழ்நாள் சிறையாளிகளை, அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் அதிகாரத்தின் படி, முன்விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 ஆண்டுகள் சிறை என்பது, மிக மிக அதிகபட்ச தண்டனை. மேலும், மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள மற்ற கைதிகளின் தண்டனையை வாழ்நாள் சிறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12) தேவையற்ற நிர்வாகச் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளில், அனுமதிக்கப் பட்ட அளவைக்கும் அதிகமாக ஏராளமான ஊழியர்கள் வீட்டு வேலைக்காக பணியாற்றி வருகிறார்கள். இதற்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தகுதியானவர்ளாக இல்லாத பட்சத்தில், அந்த ஊழியர்களை உடனடியான அதிகாரிகள் வீட்டிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும். இதே போல, பல்வேறு அதிகாரிகள், தங்கள் வீட்டில் 5 அல்லது 6 வாகனங்கள் (குறிப்பாக காவல்துறையில்) பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அரசு ஓட்டுனர் வேறு. இதற்கு ஆகும் பெட்ரோல் டீசல் செலவை கணக்குப் போட்டாலே பல கோடிகள் வரும். இது போன்ற முறைகேடுகளை கண்டறிந்து, அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல், அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை என்று உத்தரவிடுவதோடு, இது போல் வாகனங்களை தவறாக பயன்படுத்துபவர்களைப் பற்றி ரகசியமாக தகவல் தரலாம் என்றும் அறிவிக்க வேண்டும். இது பெரும் அளவில் இந்த முறைகேடுகளை தவிர்க்கும்.
13) என்கவுண்டர் எனப்படும் போலி மோதல் படுகொலைகளை அறவே நிறுத்த வேண்டும். நிஜமான என்கவுண்டர்கள் என்றால், யாரும், அதைப்பற்றி கவலைப் படப்போவதே இல்லை. ஆனால், தங்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது என்பது கடுமையான மனித உரிமை மீறலாகும். ஆகையால், இது போன்ற போலி என்கவுண்டர்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை என்று உத்தரவிட வேண்டும்.
14) இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்,, திமுகவுடையதாக இருந்தாலும், அத்திட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
15) தமிழ்வழிக் கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
16) 1996ம் ஆண்டு, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, உழவர் சந்தை என்ற திட்டம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்க வகை செய்யும் ஒரு அற்புதமான திட்டம். அந்தத் திட்டத்தை மேலும் செழுமையாக்கி செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
17) அரசு ஊழியர்கள் மீது, அவர்களுக்கு வழங்கப் படும் சலுகைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அவர்களை மேலும் ஒழுங்காக பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக, தனியார் நிறுவனங்களில் இருப்பது போல, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், பையோ மெட்ரிக் அல்லது, எலேக்ட்ரானிக் கருவிகளை பொறுத்தி, அரசு ஊழியர்கள் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவதை உறுதி செய்யலாம். தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள், ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படும் என்றும் உத்தரவிடலாம்.
18) சென்னை உயர்நீதிமன்றத்தில், தேவையில்லாமல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான வழக்குகள், அரசு அதிகாரிகள் தேவையில்லாமல், தங்கள் ஈகோவிற்காக தொடர்ந்தன. இவ்வாறு வழக்குகள் தொடர்கையில், சம்பந்தப் பட்ட அதிகாரி, இந்த வழக்கு எதற்காக தொடரப்படுகிறது, தொடர்வதற்கான தேவை என்ன என்பதை, எழுத்து பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, வழக்கறிஞர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைத்த, தற்போது நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளில், தேவையற்ற வழக்குகளை நீதிமன்ற உத்தரவோடு முடித்து வைக்கவும் நடவடிக்கை எடுப்பதென்பது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நிலுவையை கணிசமாக குறைக்க உதவும்.
19) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கண்டறியப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, விஎஸ்.பாபுவின் ரவுடிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதலுக்கு காரணமான ரவுடிகள் மீது சட்டப் பட நடவடிக்கை எடுப்பதோடு, இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லத்திக்கா சரண், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கடமையிலிருந்து தவறியதாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இந்த அளவில், சவுக்கின் ஆலோசனைகள் நிறுத்தப் படுகின்றன. இப்போது உங்கள் ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள் தோழர்களே…… நல்லாட்சி அமைய நாமும் துணை நிற்போம்.