“ஆர் யு மேரீட்.. ?“ மடை திறந்து பாயும் நதியலை போல பாய்ந்தது மனது. நான் திருமணமானவனா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இவள் காட்டும் ஆர்வம், நிச்சயம் என் மீதான ஆர்வம்தானே ? பின்னே வேறு என்ன… ? எனக்கு கல்யாணமாகி இருந்தால் அவளுக்கு என்ன… ஆகாவிட்டால் அவளுக்கு என்ன….
“ஜி.எஃப் ?“
‘இது என்ன ஜி.எஃப் ?’
புரியவில்லை என்று பதில் அனுப்பினேன். கேர்ள் ஃப்ரெண்ட் என்று அனுப்பினாள்.
‘எவ்வளவோ ட்ரை பண்ணியும் யாருமே கிடைக்கவில்லை என்று சொல்வதா… இல்லை நான் முயற்சி செய்யவில்லை என்று சொல்வதா… இல்லை என்னை யாருக்குமே பிடிக்கவில்லை என்று சொல்வதா ? நான் முயற்சி செய்யவில்லை என்பதுதானே உண்மை. பெண்ணைப் பார்த்து, பிடித்துப் போய், அவள் பின்னால் அலைந்து, அவள் செல்போன் நம்பரை வாங்கி அவளோடு காதல் உறவாடுவதற்கு எனக்கு எங்கே நேரம் இருந்தது ?’
”கேர்ள் ஃப்ரெண்டுக்கு செலவழிக்க எனக்கு நேரமில்லை” என்று பதில் அனுப்பினேன்.
“ஐ யம் சாரி“ என்று பதில் அனுப்பினாள்.
எதற்காக சாரி… அடச்சே… இவளிடம் பேசவும் நேரமில்லை என்றல்லவா எடுத்துக் கொண்டிருப்பாள்… உனக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது எனக்கு நேர விரயம் என்ற பொருளுமல்லவா அதில் அடக்கம் ? திமிர்ப் பிடித்தவன் என்றல்லவா நினைத்திருப்பாள்.. ?
‘சின்னப் பெண். துடுக்குத்தனமாக கேட்கிறாள். இதற்குப் போய் இப்படி முகத்தில் அடித்த மாதிரியா பதில் சொல்வது. என்ன மனிதன் நான். பதில் சொல்லியாகி விட்டது. இனி எப்படி சமாதானப்படுத்துவது. மீண்டும் நானே மெசேஜ் அனுப்பினால், நன்றாகவா இருக்கும் ? இருந்தாலும் நான் அப்படி பதில் அனுப்பியிருக்கக் கூடாதுதான். ஏதோ ஆர்வத்தில் கேட்டிருப்பாள். இதை எதற்காக நான் பெரிதுபடுத்த வேண்டும்.’
பொத்தாம் பொதுவாக “குட் நைட்” என்று ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
“குட் நைட். இனிய கனவுகள் உன் தூக்கத்தில் உன்னைத் தழுவட்டும்” என்று ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தாள். கூடவே கண்ணடிப்பது போல ஒரு ஸ்மைலி வேறு.
செல்போன்களில் இந்த ஸ்மைலிக்கள் எதற்காக என்று பல நாள் யோசித்திருக்கிறேன். ஒரு முறை கூட ஸ்மைலிக்களை பயன்படுத்தியதே கிடையாது. இன்டெர்நெட்டில், சேட்டிங்கிலும், மெசேஜ்களிலும் ஸ்மைலிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிந்தாலும், ஸ்மைலியோடு நான் யாருக்கும் மேசேஜ் அனுப்பியதே இல்லை. எனக்கும் யாரும் அனுப்பியது இல்லை. ஆனால் அவள் கண்ணடிப்பது போல அனுப்பியிருந்த ஸ்மைலி ஒரு குறுகுறுப்பான உணர்வை ஏற்படுத்தியது. என்னவோ நெருங்கிய நண்பர்கள் பக்கத்தில் உட்கார்ந்து அரட்டையடிப்பது போன்ற ஒரு நெருக்கத்தை அந்த ஸ்மைலி ஏற்படுத்தியிருந்தது. அவளே என்னைப் பார்த்துக் கண்ணடிப்பது போல இருந்தது.’
நான் பதில் ஏதும் அனுப்பவில்லை. பரபரப்பான ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றியோ, ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டோ, அல்லது அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடோ தூங்கிப் பழக்கப்பட்ட எனக்கு, ஒரு இதமான உணர்வோடு உறங்குவது புதிதாக இருந்தது. அவள் எப்படிப்பட்ட பெண், எதற்காக போன் நம்பரை வாங்கி மேசேஜ் அனுப்புகிறாள் என்று பல்வேறு யோசனைகளோடு தூங்கினேன்.
காலை ஆறு மணிக்கே “குட் மார்னிங் ஹேவ் ய நைஸ் டே” என்று வசந்தியிடமிருந்து மெசேஜ். ஹேப்பி பர்த்டே, ஹேப்பி தீபாவளி, என்று எனக்கு யாருக்கும் மெசேஜ் அனுப்பும் வழக்கமே இல்லை. இது போல அனுப்புவதால் என்ன ஆகப்போகிறது, அதனால் என்ன மாறிவிடப் போகிறது என்று ஒரு எண்ணம்.
“வெரி குட்மார்னிங்“ என்று பதில் அனுப்பினேன். அதற்குப் பிறகு அவளிடமிருந்து மேசேஜ் எதுவும் வரவில்லை. அவள் அனுப்பவில்லையே தவிர, நாள் முழுவதும் செல்போனை என்னையே அறியாமல் எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டுதானிருந்தேன்.
சிங்காரவேலு மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் வேலாயுதம் கமிஷனிலிருந்து எடிட்டருக்கு சம்மன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். மதியம் 12 மணிக்கு எடிட்டரே அழைத்தார்.
“வெங்கட்.. கமிஷன்லேர்ந்து சம்மன் வந்துருக்கு. இந்த ஆளு நியாயமா நடந்துக்குவான்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இருந்தாலும், நாமளே ஊழல் குற்றச்சாட்டை பப்ளிஷ் பண்ணிட்டு, கமிஷனுக்கு ஒத்துழைக்காம இருந்தா நல்லாருக்காது. நம்ம அட்வகேட், கதிரொளி சார்புல ஒரு அஃபிடவிட் தயார் பண்ணியிருக்கார். ஏதாவது ஃபாக்சுவல் எர்ரர் (factual error) இருக்கான்னு பாத்துடு. சரியா இருந்தா சொல்லு. மதியம் மூணு மணிக்குத்தான் போகணும். நீயும் என் கூட வா“ என்றார்.
வாங்கிப் படித்துப் பார்த்தேன். பெரும்பாலும் சரியாக இருந்தது. எல்லாம் ஓ.கே சார் என்றேன்.
மூன்று மணிக்கு எடிட்டரின் காரிலேயே புறப்பட்டோம். எடிட்டரோடு வழக்கறிஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். க்ரீன் வேஸ் சாலையில் அமைச்சர்களின் பங்களாக்களில் ஒரு பங்களாவின் வாசலில், ‘மாண்புமிகு நீதியரசர் வேலாயுதம் ஆணையம்’ என்று பெயர்ப் பலகை இருந்தது. அந்த பங்களாவின் ஹால், நீதிமன்றம் போல மாற்றப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தபோது நீதிபதி வரவில்லை. வழக்கறிஞர்கள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். பார்ப்பதற்கு மிடுக்காக வட இந்தியர் போல காட்சியளித்த ஒரு வழக்கறிஞர் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி முகத்தில் பணக்காரக் களையோடு ஜுனியர் வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். எடிட்டரோடு சென்று உள்ளே அமர்ந்தேன். கதிரொளி வழக்கறிஞர், அந்த வட இந்திய வழக்கறிஞர் டெல்லியிலேயே பெரிய வக்கீல் என்றும், ஒரு முறை ஆஜராவதற்கு ஐந்து லட்ச ரூபாய் பீஸ் வாங்குவார் என்றும், அவர்தான் சிங்காரவேலுவின் வக்கீல் என்றும் கூறினார்.
நீதிபதி சாம்பல் நிறத்தில் கோட்டும், மெரூன் நிறத்தில் டையும் அணிந்திருந்தார். அனைவரையும் வணங்கிவிட்டு அமர்ந்தார். “விட்னெஸ் ரெடியா ?“ என்று கேட்டார். ரெடி என்றதும், “பி.டபிள்யூ 44 லிங்கேஸ்வரன்“ என்று க்ளெர்க் அழைத்தார்.
லிங்கேஸ்வரன் நீதிபதியின் இடது புறத்தில் அமைக்கப் பட்டிருந்த கூண்டுக்குள் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் பெயர், தொழில் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டபிறகு, கமிஷனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர், லிங்கேஸ்வரனிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
“சிங்காரவேலு மீதான புகார்கள் குறித்த ஆதாரங்கள் உங்களுக்கு எப்படி வந்தது ?“
எடிட்டர் முகத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல், ஒரு மெல்லிய புன்னகையோடே அந்தக் கேள்வியை எதிர்கொண்டார்.
“ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில், என்னுடைய சோர்ஸை நான் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.“
உடனே நீதிபதி வேலாயுதம், “மிஸ்டர் லிங்கேஸ்வரன், இந்த கமிஷனோட டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ், (Terms of Reference) இந்த செய்தி எப்படி வெளியானதுன்னு கண்டுபிடிக்கனும்னு இருக்கு. நாங்க உங்கள ஹாரஸ் (harass) பண்றதுக்காக இதைக் கேக்கல.. கமிஷன் ஹேஸ் டு டூ இட்ஸ் ஜாப்.(Commission has to do its job)“
“கமிஷனுடைய விசாரணை வரம்பில் இதை குறிப்பிட்டிருந்தாலும் நான் என்னுடைய சோர்ஸை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.“
“நான் இதை அட்வெர்ஸாக (adverse) பதிவு செய்ய வேண்டி வரும். தேவைப்பட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட கமிஷன் பரிந்துரை செய்ய வேண்டி வரும்.“
உடனே கதிரொளியின் வழக்கறிஞர் எழுந்து, “தடா, போடா (TADA, POTA) போன்ற சட்டங்களில் மட்டுமே பத்திரிக்கையாளர்கள் தங்கள் சோர்ஸை அடையாளம் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதுவும் தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களாக இருந்தால் மட்டுமே. ஒரு அமைச்சரின் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கட்டுரையின் ஆதாரங்களை ஒரு விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்றார்.
சிங்காரவேலுவுக்காக ஆஜரான வழக்கறிஞர் எழுந்தார். அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் பேசினார். “என்னுடைய க்ளையன்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த ஊழல் புகார்களுக்கு முக்கிய காரணமே கதிரொளி பத்திரிக்கைதான். இந்தியாவின் நிதி அமைச்சராக உள்ள ஒருவர் மீது இப்படி ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தையே சிதைக்க வெளிநாட்டின் சதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த சதிக்கு கதிரொளி பத்திரிக்கை பலியாகி விட்டது. விட்னெஸ், சோர்ஸை அடையாளம் காண்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
வெளிநாட்டின் சதி என்றதும், எடிட்டரின் முகத்தில் கோபம் தெரிந்தது.
சற்றே உரத்த குரலில் எடிட்டர் பேசினார். “அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் ஊழல் புரியும்போது அதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்த வேண்டியது இந்நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளனின் கடமை. அந்தக் கடமையை செய்த்தற்காக நான் வெளிநாட்டுக் கைக்கூலி என்று இந்தக் கமிஷன் குற்றம் சுமத்தும் என்றால், அது ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடு. என்ன உத்தரவு போட்டாலும், நான் என்னுடைய சோர்ஸை வெளியில் சொல்ல இயலாது. அது நான் இத்தனை ஆண்டுகாலமாக பேணிப் பாதுகாத்து வரும் என்னுடைய பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரானதாகும். நான் ஒருகாலும் அதைச் செய்ய மாட்டேன். நான் சொன்னது அத்தனையையும் கமிஷன் பதிவு செய்ய வேண்டும்“ என்றார்.
அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே, பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து என்னையே அறியாமல் இயல்பான பழக்கத்தில் பார்ப்பது போலப் பார்த்தேன். ’ச்சே.. இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது… நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்…’
எடிட்டர் பேசியதும், நீதிபதி வேலாயுதம் பரபரப்படைந்தார். “மிஸ்டர் லிங்கேஸ்வரன்… டோன்ட் கெட் வொர்க்ட் அப். (Don’t get worked up) நீங்க என்ன சொல்லனும்னு நெனைக்கறீங்களோ அதைச் சொல்லுங்க.. “ என்றார்.
எடிட்டரின் ஸ்டேட்மென்ட் தயாரானதும் காத்திருந்து கையெழுத்துப் போட்டு விட்டுப் போகச் சொன்னார்கள். வெளியே வந்ததும், கதிரொளி வழக்கறிஞர் “கமிஷன் ஆப் என்கொயரி சட்டத்தின்படி, இந்த நீதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை. பதில் சொல்ல முடியாதுன்னா இவரால ஒண்ணும் பண்ண முடியாது. இந்த ஆளு கமிஷன் நடத்துறதே சிங்காரவேலுவை காப்பாத்தறதுக்காகத்தான் சார்“ என்றார்.
“அந்த ஆளு எதுக்காக வேணா நடத்திக்கிட்டு போகட்டும். நான் என் ஜர்னலிஸ்டிக் எதிக்ஸை (journalistic ethic) விட்டுக் குடுக்க முடியுமா ? ஒரு மந்திரி மேல ஊழல் குற்றச்சாட்டு இருக்கு. 1200 கோடியை ஸ்வாகா பணணிருக்கான். அவன் மேல விசாரணை நடத்தறத விட்டுட்டு, எப்படி வந்துச்சு, எங்கேர்ந்து வந்துச்சுன்னு என்னென்ன கேள்வி கேக்கறானுங்க பாருங்க“
எடிட்டரின் கோபம் இன்னும் அடங்கவில்லை. “இந்த நீதிபதிகளையெல்லாம் ரிட்டயர் ஆன பிறகு எந்த பதவிக்கும் நியமிக்கக் கூடாது.. பதவிக்கு ஆசைப்பட்டுட்டுதான் இப்படி ஜால்ரா அடிச்சிக்கிட்டு இருக்கறானுங்க. ஏற்கனவே இந்த விஷயம் வெளியில வர்றதுக்கு காரணமான ஒருத்தரை கொன்னுட்டானுங்க. இன்னும் இருக்கறது இவன் ஒருத்தன்தான். இவனையும் காலி பண்ணணும்னு நெனைக்கிறானுங்க.“ என்று என்னை கை காண்பித்து சொன்னார் படபடப்பாக.
என்னைப் பார்த்துத் திரும்பி, “வெங்கட்.. இந்த வேலாயுதத்தைப் பத்தி என்ன மேட்டர்னு விசாரி. இவர் மெட்ராஸ் ஹைகோர்டுலையும், சுப்ரீம் கோர்டுலயும் என்னென்ன பண்ணிருக்காருன்றதைப் பத்தி டீடெயிலா விசாரி. தேர் மஸ்ட் பி சம்திங்.“
“ஓ.கே சார்“ என்றேன்.
எடிட்டரும், வழக்கறிஞரும் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தாலும், என் கவனம் முழுக்க என் செல்போன் மீதே இருந்தது. வசந்தியிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. நானாக அனுப்பவும் தயக்கமாக இருந்தது. ஆனால், செல்போனை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.
ஆறு மணி ஆகியது. வேறு வேலைகள் எதுவும் இல்லாததால், கிளம்பலாம் என்று எத்தனித்தபோது, வசந்தியிடமிருந்து மெசேஜ்.
“உங்கள் வேலை முடிந்து விட்டதா ? “
“முடிந்து விட்டது“ என்று பதில் அனுப்பினேன். பிறகு எந்த மெசேஜும் இல்லை. எதற்காகக் கேட்டாள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து அழைப்பு.
போனை எடுத்தவுடன் “ஹாய் கோட்டைச்சாமி…“ என்றாள்.
இவள்தான் என்று தெரிந்தாலும், கோட்டைச்சாமி என்று அழைப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது. இவளைத் தவிர என்னை வேறு யார் கோட்டைச்சாமி என்று கூப்பிடுகிறார்கள் ?
“ஹாய் சொல்லுங்க“ என்றேன்.
“நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா மீட் பண்ணுவோமா ?“
பேசிக்கொண்டிருக்கும் போதே இதயத்துடிப்பு அதிகமானதை உணர்ந்தேன். எல்லாமே மின்னல் வேகத்தில் நடப்பது போல இருந்தது.
“நான் ஃப்ரீதாங்க.. எங்க மீட் பண்றது ?“
“என் ஹாஸ்டல் வந்துருங்க… ஒய்.டபிள்யு.சி.ஏ தெரியுமா ?“
“கேள்விப்பட்டது மாதிரி இருக்கு.. எங்க இருக்கு ?“
“பூந்தமல்லி ஹைரோட். சென்ட்ரலுக்கு அடுத்த ஸ்டாப். நெக்ஸ்ட் டு தினத்தந்தி.. “
“யெஸ்.. யெஸ். தெரியும்.. எத்தனை மணிக்கு வரணும் ?“
“செவனுக்கு வந்திடுங்க.. வந்ததும் கால் பண்ணுங்க.. நான் வெளியில வர்றேன்.“
“ஓ.கே.. “ என்று போனை வைத்ததும் என்ன செய்வது என்றே புரியவில்லை. உடலும் மனதும் ஒருசேர பரபரபப்படைந்தது. இருப்பு கொள்ளவில்லை. என் அலுவலகத்திலிருந்து அவள் ஹாஸ்டலுக்கு செல்லும் சாலையில் ட்ராஃபிக் இருக்குமா ? குறித்த நேரத்தில் செல்ல முடியுமா ? லேட்டானால் நன்றாக இருக்காது.. சீக்கிரமாகவும் போகக் கூடாது. சரியான நேரத்தில்தான் போக வேண்டும். சட்டென்று ட்ரெஸ் நன்றாக இருக்கிறதா என்று பார்த்தேன். அன்றைக்கு என்று பார்த்து, பாக்கெட்டில் லேசாக இங்க் கொட்டியிருந்தது. இப்படியே போனால் என்ன நினைப்பாள்… புது சட்டை வாங்கிப் போட்டுக் கொள்ளலாமா… ச்சே… புதுசு என்று கண்டுபிடித்து விடுவாள்… ஆபிசிலிருந்து வேலை முடிந்து திரும்புபவன் புது சட்டை போட்டுக் கொண்டா வருவான்.. அது அபத்தமாகத் தெரியும்.
நேராக பாத்ரூம் சென்று, ஃபேஸ் வாஷ் போட்டு முகத்தைக் கழுவினேன். சட்டையை ஒழுங்காக இன் செய்தேன். தலையை ஒரு முறை வாரிக்கொண்டேன். ஹெல்மெட் போட்டுக் கொண்டு அந்த இடத்துக்கு போகும்போது தலை கலைந்து விடுமே… டேபிள் ட்ராயரைத் திறந்து அதனுள்ளே கிடந்த சீப்பை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். பர்ஸை திறந்து பார்த்தேன்.. 300 ரூபாய் இருந்தது. திடீரென்று எங்காவது போகலாம் என்று சொல்லி விட்டால் ? இது போதும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.. ஒரு வேளை கூடுதலாக செலவானால் பணமில்லை என்று சொல்ல முடியுமா ? போகும் வழியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். அவள் என்ன என்னை டின்னருக்குக் கூப்பிட்டாளா ? அல்லது ஊர் சுற்ற கூப்பிட்டாளா ? அதற்குள் ஏன் எனக்கு இவ்வளவு கற்பனை.
மணியைப் பார்த்தேன். 6.20. இருபது நிமிடத்தில் அவள் ஹாஸ்டல் சென்று விடலாம்.
வேக வேகமாக பையை எடுத்துக் கொண்டு பைக்கில் கிளம்பினேன். சாலையில் எப்போதும் இல்லாதது போல அதிகமான ட்ராஃபிக் இருப்பது போலத் தோன்றியது. அலுவலகம் முடிந்து எல்லோரும் போகும் நேரம் இதுதானே… இன்று மட்டும் திடீரென்று எப்படி ட்ராஃபிக் அதிகமாகியிருக்கும் ? எல்லாம் நினைப்புதான் என்ற எண்ணிக்கொண்டே அவள் ஹாஸ்டலை சென்றடைந்தேன்.
மணி 6.55. சரியாக ஏழு மணிக்கு போன் அடித்தேன்.
“வந்துட்டேங்க.. உங்க ஹாஸ்டல் வாசல்லதான் வெயிட் பண்றேன்.“
“கிவ் மி ஃபைவ் மினிட்ஸ்.“ என்ற சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல்துறை அலுவலகத்துக்கு அடுத்த கட்டிடம் அவள் ஹாஸ்டல். யங் விமன் க்ரிஸ்டியன் அசோசியேஷன் (Young Women Christian Association) ஹாஸ்டல் என்று பெயர்ப்பலகை இருந்தது. பெரிய காம்ப்பவுன்ட். கேட்டருகே வாட்ச்மேன் அமர்ந்திருந்தார். அந்த உயரமான ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டு நான்கு ஜோடிகள் பேசிக்கொண்டிருந்தனர். ‘இவர்களில் காதலர்களாக பேசிக் கொண்டிருப்பவர்கள் யார் ? காதலை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள் யார்… நான்கு ஜோடிகளும் ஒரே மாதிரி பேசிக்கொண்டிருப்பது போலத்தான் இருந்தது.
அந்த முக்கியமான நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்களை கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல், மெய்மறந்து ஒரு தனி உலகத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி நாணத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள். ஏதாவது ஏ ஜோக் சொல்லியிருப்பானோ.. ஏ ஜோக் சொல்லிச் சிரிப்பதென்றால் நிச்சயம் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும். ஏன் பெண் நண்பர்களிடம் ஏ ஜோக் சொல்லக் கூடாதா என்ன ? ஏ ஜோக் சொல்லும் அளவு நெருக்கம் உள்ள பெண் தோழி காதலியாக இருக்கத்தானே வாய்ப்பு அதிகம் ?’ என்று யோசித்துக்கொண்டே இருந்தபோது, வசந்தி வந்தாள்.
வசந்தியோடு இன்னும் மூன்று பெண்கள் வந்திருந்தனர்.
‘இவள் மட்டும் வருவாள் என்று பார்த்தால், இன்னும் மூன்று பேரை அழைத்து வருகிறாளே…’
பைக்கை நகர்த்தி அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் சென்றேன். கேட் அருகிலேயே பேருந்து நிறுத்த நிழற் குடை இருந்தது.
தனியாகப் பார்த்து ஏதாவது பேசலாம் என்று ஆவலாக வந்தால், கூட மூன்று இம்சைகளை அழைத்து வந்திருக்கிறாளே…
வசந்தி ஜீன்ஸூம் டீ ஷர்டும் அணிந்திருந்தாள். பார்வையை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு டீ ஷர்டில் ‘வாசங்களும்’ இருந்தன. சும்மாவே ஆண்கள் பெண்களை கழுத்துக்குக் கீழேதான் பார்ப்பார்கள். இது போல புரியாத மொழியில் எதையாவது எழுதியிருந்தால் ?
எப்போதும் வக்கீல் உடையணிந்தே பார்த்ததால், வசந்தியின் உருவப் பரிமாணம் முழுதாகத் தெரிந்ததில்லை. சற்று பருமனாகத்தான் இருந்தாள். சுருட்டைக் கூந்தலை ஒரு பேன்ட் போட்டுக் கட்டியிருந்தாள். டீ ஷர்ட் ரொம்ப டைட்டாகவும் இல்லாமல், லூசாகவும் இல்லாமல் இருந்தது. வயிறு லேசாக வெளித் தள்ளியிருந்தது. அதுவும் அழகாகத்தான் இருந்தது. வக்கீல் கோட்டோடு பார்த்ததற்கு இந்த உடையில் கவர்ச்சியாகத்தான் இருந்தாள்.
அருகில் சென்றவுடன், “இது ஜெயந்தி, இது மீனா, இது சுமதி. “ என்று அறிமுகப்படுத்தினாள்.
அவர்கள் ஹலோ, ஹலோ என்று தனித்தனியாக ஹலோவினார்கள். இருவர் ஒல்லியாக இருந்தார்கள். மற்றொருத்தி உயரம் குறைவாக இருந்தாள். ஒவ்வொருவரும், தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பதாகச் சொன்னாள்.
“இவருதாண்டி… கோட்டைச்சாமி.. நான் சொன்னேன்ல… பெரிய்ய ஜர்னலிஸ்ட். “ என்று இரு கைகளையும் அகலமாக விரித்துச் சொன்னாள்.
“ஒரு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜையே காலி பண்ணிட்டாரு..”
அவர்கள் அதை ஆமோதிப்பது போல மையமாக சிரித்து வைத்தார்கள்.
‘இந்த அறிமுகத்தையெல்லாம் இன்னொரு நாள் செய்து கொள்ளக் கூடாதா… நாங்கள் இருவருமே ஒழுங்காக அறிமுகம் ஆகவில்லை. தனியாக வராமல் இப்படி ஊர்வலமாக வந்தால் எப்படி அறிமுகம் ஆகிக்கொள்வது… ?. இந்தப் பெண்களை வைத்துக் கொண்டு என்ன பேசுவது.. இவர்களுக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல், ஏன் இங்கேயே நின்று கொண்டு உயிரை எடுக்கிறார்கள். இந்த சங்கடமான மவுனத்தில் இருப்பதற்கு பதிலாக ஏதாவது காரணத்தைச் சொல்லிவிட்டு கிளம்பலாமா ?’
அருகாமையில் இருந்த பேருந்து நிலையத்தில் உள்ள அனைவரும் என்னையே பார்ப்பது போல இருந்தது.
“மிஸ்டர் கோட்டைச்சாமி…” என்று வசந்தி அழைத்தாள்.
குழப்பமான எண்ணங்களிலிருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்தேன். குறும்பான சிரிப்போடு என்னைப் பார்த்தாள்.
“என்னை உங்க பைக்ல ஒரு ரவுன்ட் கூட்டிட்டு போறீங்களா ?“
தொடரும்
ennanga sir kalakuringa …
சகோ .. உங்கள் எழுத்து வண்ணம் சரமாரியாக இருக்கு.. அரசியல் , புலனாய்வு தவிர , காதல் உணர்ச்சியால் விளையாடுது.. அதுவும் மிக எளிமையான வரிகளால்.. சூப்பர் ப்ரோ..
ஒரு சிறந்த எழுத்தாளர் எங்கள் கண் முன்னே உருவாகிறரர்…
You should explore the possibility of publishing this as a book
you article bring me back to my college days. so good. you are really good at love sequences.
18 MLA வழக்கு எந்த நிலையில் உள்ளது.தீர்ப்பு எப்போது வரும்.அதை பற்றிய கட்டுரை எழுதுவீர்களா?
பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
Wow! Superb description of those ladies. Even I felt like falling in love, though not possible. And, that bike ride… allow the pair with joy.
Savukku sir, unga khathaiyila nava rasathayum kasakki pizhiyu reenga!!!!!!!!! Unga hero oru nava rasa nayagana irukkar!!!!!!!!!!