ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். என்னடா இது.. நண்பிகளை அழைத்து வந்து தனிமையைக் கெடுத்து விட்டாளே… எப்போது இந்த இடத்தை விட்டுக் கிளம்பிப் போகலாம் என்று என்ற இருந்தவனுக்கு இப்படியா அதிர்ச்சியைத் தருவாள் ? சிரிப்பு மாறாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என் சிந்தனையிலிருந்து விடுபடாமல் நடந்தது புரியாமல் ஒரு கணம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
“வேண்டாம்னா விட்டுடுங்க” என்றாள்.
“அய்யய்யோ உக்காருங்க போலாம்“ என்று அவசர அவசரமாக முதுகில் இருந்த பையை எடுத்து பைக்கின் முன்னால் வைத்தேன். அவள் நண்பிகள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். ‘கிண்டல் செய்கிறார்களா.. ? செய்தால் என்ன ?’
பல நாள் பழகியவள் போல இயல்பாக இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தாள். படபடப்பாக இருந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்து, தினத்தந்திக்கு அருகில் திரும்பினேன்.
“எங்கங்க போலாம்.. “
“சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு திருப்பி ஹாஸ்டல்ல வந்து இறக்கி விட்டுடுங்க..“
“சரிங்க. “
‘நூறு மீட்டருக்குள்ளாகவே ஸ்பீட் ப்ரேக்கர் வந்தது. சட்டென்று ப்ரேக் அடித்தால் கேவலமாக நினைத்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது. பக்குவமாக அதிராமல் வண்டியை மெல்லமாகவே ஓட்டி ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்கினேன். பள்ளங்களில் வண்டி அதிராமல் ஓட்டினேன். வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் வழியாக, டவுட்டன் தாண்டி அவள் ஹாஸ்டல் செல்லும் வழியில் திரும்பினேன்.
“ஏன் மெல்லமா ஓட்றீங்க… நான் பயப்படமாட்டேன்.. “ என்றாள்.
“இல்லைங்க… ரோடு மோசமா இருக்கு.. அதான்…“ என்று சொல்லி விட்டு என் கவனத்தை மீண்டும் ரோட்டில் செலுத்தினேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பைக் ஓட்டிக் கொண்டிருந்தாலும், இன்று பைக்கை புதிதாக ஓட்டுவது போல ஒரு பதற்றம். நேராக ஓட்டிச் சென்று பத்திரமாக இவளை இறக்கி விடவேண்டும் என்ற கவனம் அதிகமாக இருந்தது. அவள் ஹாஸ்டலுக்குச் செல்லும் சாலையில் நேராகச் செல்ல எத்தனிக்கையில், “இப்படி ரைட்ல திரும்புங்க“ என்றாள். எதற்கு திரும்ப வேண்டும் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் திருப்பினேன்.
“இங்க ஒரு காபி ஷாப் இருக்கு… காப்பி குடிப்பீங்கள்ல ? “ என்று கேட்டாள்.
“குடிப்பேங்க.”
காபி ஷாப்பின் முன்பாக வண்டியை நிறுத்தினேன். பதற்றம் தணியவேயில்லை. “காப்பி டே” என்று சிகப்பு எழுத்துக்களில் மின்னியது. அதன் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். சின்னதாக வட்டமாக கண்ணாடியில் டேபிள் போடப்பட்டிருந்தது. அதற்குப் பொருத்தமாக சிறிய நாற்காலி. அருகே சொகுசாக உட்காருவது போல சோபா செட்டுகள் இருந்தன. ஆனால் அதில் ஒரு ஜோடி அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டே காதலித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். சுவற்றில் “லாட் கேன் ஹேப்பன் ஓவர் ய காஃபி” என்று பெரிய வால்பேப்பர் ஒட்டியிருந்தார்கள். சுற்றியுள்ள அத்தனை டேபிள்களிலும் ஜோடி ஜோடியாக சுவாராஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பெரும்பாலும் டீ ஷர்ட் அணிந்திருந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான டீ ஷர்டுகள்.
‘தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி துளியும் பிரக்ஞை இல்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அவர்கள் ஈழப் பிரச்சினையைப் பற்றியோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ பேசிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களுக்கு அதை விட முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கு இல்லாமலா போய்விடும் ? அப்படி ஏதோ முக்கியமான விஷயங்களைத்தான் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.’
டேபிளில் மெனு கார்டு கொண்டு வைத்தான் யூனிபார்ம் அணிந்திருந்த ஒருவன். மெனு கார்டை பிரித்துப் பார்த்தால் பகீரென்றது. 80 ரூபாய்க்கு குறைந்து ஒரு காபியும் இல்லை. காபியிலேயே பல்வேறு வகைகளை வாயில் நுழையாத பேராக வைத்திருந்தார்கள். கேக் என்று போட்டு ஒரு பீஸ் 120 ரூபாய் போட்டிருந்தார்கள்.
“என்ன சாப்ட்றீங்க ?“ என்று விருந்தாளியை உபசரிப்பது போலக் கேட்டாள்.
“எனக்கு எதுவும் புரியலைங்க.. நீங்களே ஆர்டர் பண்ணுங்க..“ என்றேன். பர்ஸில் வெறும் 300 ரூபாய் இருந்தது நினைவுக்கு வந்தது.
“நான் கேப்புச்சீனோ சாப்புட்றேன்.. நீங்க என்ன வேணும்னு பாத்து சொல்லுங்க“ என்றாள்.
‘கேப்புச்சீனோ 90 ரூபாய் போட்டிருந்தது. அவள் கேக் வேண்டுமென்று கேட்டு விட்டால்..?’ லெமன் டீ என்று 40 ரூபாய்க்கு ஒன்று இருந்தது. “நான் லெமன் டீ சாப்ட்றேங்க.. ”
“நீங்களும் கேப்புச்சீனோ சாப்புடுங்க… சூப்பரா இருக்கும்” என்றாள். “இல்லைங்க நான் லெமன் டீயே சாப்புட்றேன்”
“போய் வாங்கிட்டு வாங்க… இங்க செல்ப் சர்வீஸ்“.
90 ரூபாய் கொடுத்து காப்பி வாங்கினால் அதை டேபிளில் கூட சர்வீஸ் செய்ய மாட்டார்களா… என்ன இழவு இது… என்று அலுத்துக் கொண்டே ஆர்டர் பண்ணி விட்டு வந்து அமர்ந்தேன்.
காபி டே போன்ற காபி ஷாப்புகளை சாலையில் செல்லும்போது அடிக்கடி பார்த்திருந்தாலும், ஒரு நாள் கூட இது போன்ற கடைகளுக்குள் நுழைந்ததேயில்லை. எதற்காக நுழைய வேண்டும் ? இங்கே வந்து காப்பி குடிப்பவர்கள் ஒருவர் கூட தனியாக வரவில்லை. நான் யாரோடு வருவது ? காதலாகி கசிந்துருகி, காபியோடு கனவு காண எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதில்லையே… அதிகபட்சம் சாலையோர டீக்கடைகளில் டீ குடித்துக் கொண்டே சிகரெட் பிடிப்பதே பழக்கமாகி விட்டது.
“ம் அப்புறம் சொல்லுங்க வெங்கட். உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு…?“
“நான் ஒரு சிஸ்டர் மட்டும்தாங்க… அவங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு.. பாம்பேயில செட்டில்ட்“
“அவங்க போட்டோ வச்சுருக்கீங்களா மொபைல்ல.. “
“இல்லைங்க. “
“நான் என் வீட்டுக்கு ஒரே பொண்ணு.. ரொம்ப செல்லம்“ என்றாள். செல்லத்தில் கூடுதல் அழுத்தம் கொடுத்தாள்.
“ஒரே பொண்ணுன்னா செல்லம் குடுக்கத்தான் செய்வாங்க“ என்றேன்.
“செல்லம் மட்டும் இல்லை. ரொம்ப இன்டிபென்டன்டா வளத்துருக்காரு எங்க அப்பா“ என்று பெருமை பொங்கச் சொன்னாள்.
“அப்பா என்ன பண்றாருங்க.. “
“எங்க அப்பாவும் அட்வகேட். மதுரையில ப்ராக்டிஸ் பண்றார்.“ என்று சொல்லிக் கொண்டே அவள் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னே இழுத்து டேபிளோடு நெருக்கி அமர்ந்தாள். அவள் டீ ஷர்ட் வாசங்கள் இருந்த இடம் கவனத்தை கலைத்தது. அப்படியே மெனு கார்டை புரட்டுவது போல பார்வையை திருப்பினேன்.
கழுத்தில் மெல்லிய செயின் அணிந்திருந்தாள். முகத்தில் அதிக மேக்கப் இல்லை. உதடுகள் மட்டும் பள பளவென்று இருந்தன. லிப்ஸ்டிக் போலவும் தெரியவில்லை. இடது கை விரலில் நகங்களை நீளமாக வளர்த்திருந்தாள். பிசிறின்றி நெயில் பாலீஷ் அணிந்திருந்தாள்.
‘எதற்காக இந்த பெண்கள் இவ்வளவு நீளமாக நகத்தை வளர்க்கிறார்கள் ?. இரண்டு வாரம் சேர்ந்தார்ப் போல நகம் வெட்டாமல் இருந்தால் எரிச்சலாகவும் சிரமமாகவும் இருக்கிறது. இந்தப் பெண்கள் எப்படி இவ்வளவு நீளமாக நகத்தை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்கள் ? தன்னை ஒருவன் பலாத்காரம் செய்ய முற்படும்போது ஒரு பெண் தன் பற்களையும் நகங்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று காந்தி சொன்னதை அவ்வளவு சீரியசாகவா எடுத்துக் கொள்கிறார்கள் ? காந்தி ஒரு வேளை ஏதாவது நெயில் பாலீஷ் கம்பேனியின் விளம்பரத்திற்காக அப்படி சொல்லியிருப்பாரோ… ச்சே..என்ன மட்டமான சிந்தனை ?’
“அம்மா என்ன பண்றாங்க“ என்றேன்.
“அம்மா ஹவுஸ் வைஃப்தான். எங்க அப்பாவுக்கு என்னை எப்படியாவது ஜட்ஜ் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை… அதுக்காகத்தான் என்னை வக்கீலுக்குப் படிக்கணும்னு ஒரே ப்ரெஷ்ஷர்.. சட்டென்று அவள்,
“ஆமா.. உங்களுக்கு என்ன வயசு ?“ என்றாள்.
அங்கே அந்த காப்பி ஷாப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும், 20க்கும் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே தவறான இடத்துக்கு வந்து விட்டோமோ என்ற குறுகுறுப்போடு அமர்ந்திருந்த எனக்கு, இவள் வயசைக் கேட்டது இன்னும் சங்கடம் ஏற்படுத்தியது.
“34“ என்றேன். “உங்களைப் பாத்தா அப்படித் தெரியலை.. யங்காத்தான் தெரியறீங்க.. நான் 23“ என்றாள்.
’எனக்கும் இவளுக்கும் 11 வயது வித்தியாசம். இவள் உருவத்தைப் பார்த்து வயது அதிகமாக இருக்கும் என்று தவறாக மதிப்பிட்டு விட்டேன். சின்னப்பெண். என் வயதுக்கு இவள் எப்படிப் பொருத்தமாவாள் ? இது தெரியாமல் என்னென்னவோ கற்பனை பண்ணிக் கொண்டு இருந்தேனே… இது எப்படி சரியாக வரும்.. வயதைத் தாண்டிய ஆசையில்லையா எனக்கு… அனேகமாக பாதி வாழ்க்கை முடிந்து விட்டது. இந்த வயதில் போய் காதல்.. புடலங்காய் என்று… ச்சை… முதலில் இந்த நினைப்பை மாற்ற வேண்டும்.
“ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை வெங்கட்?“
‘என்ன சொல்வது இவளிடம். நான் கல்யாணத்தை விரும்பவில்லை என்பதை விளக்கமாகச் சொல்வதா… அப்படிச் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாள்… இல்லை யாரிடமும் மனதைப் பறி கொடுக்கவில்லை என்று சொல்வதா…’
“எனக்கு மேரேஜ் பண்ணிக்கற மாதிரி ஐடியா இல்லைங்க..“ என்றேன்.
“கல்யாணமெல்லாம் டயத்துக்கு பண்ணிடனும்ங்க… லேட் பண்ணக் கூடாது. நீங்க வேணா சொல்லுங்க.. நான் உங்களுக்காக பொண்ணு பாக்கறேன். என் ஹாஸ்டல்லையே ப்யூடிஃபுல்லா கேர்ள்ஸ் இருக்காங்க.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா உங்க வைஃப் முன்னாடியே நான் உங்களை ஹக் பண்ணுவேன்” என்றாள்.
ஹக் பண்ணுவது என்றால் கட்டிப் பிடிப்பதுதானே… இல்லை வேறு ஏதாவது பொருள் இருக்குமா ? ‘தெரிந்துதான் பேசுகிறாளா.. உண்மையிலேயே கட்டிப்பிடிப்பாளா… அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவள் கட்டிப்பிடிப்பேன் என்று சொன்னதும், நினைவு அவள் டீ ஷர்ட்டைச் சுற்றியது. எப்படி இருப்பாள்… வாசனையாக இருப்பாளா… சும்மா கட்டிப்பிடிப்பாளா… இறுக்கிப் பிடிப்பாளா… ச்சை… என்ன கண்றாவி இது.. அவள் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லுகிறாள்.. அதைப்போய் சீரியசாக எடுத்துக் கொண்டு. வர வர புத்தி ரொம்ப மோசமாக வேலை செய்கிறது.
மனிதனின் கற்பனை ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. அவள் கட்டிப் பிடிப்பேன் என்று சொன்ன ஒரு வார்த்தை க்ரையொஜெனிக் என்ஜினை துவக்கியது போலல்லவா கற்பனையை தொடங்கி வைத்துள்ளது.’
“இல்லைங்க மேரேஜ் வேணாம்னு தீர்மானமா இருக்கேன்.“
“நீங்க பெரிய்ய ஜர்னலிஸ்ட்.. ஏதாவது காரணம் வச்சுருப்பீங்க… நான் சொன்னாக் கேப்பீங்களா..“ அந்தப் ’பெரிய்ய’ வில் கிண்டல் இருந்தது.
“அப்படியெல்லாம் இல்லீங்க. வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். அவ்வளவுதான். ஐ யம் ஹேப்பி பீயிங் சிங்கிள்.“
“ஓ.கே.. ஜர்னலிஸ்ட். விடுங்க இந்த டாப்பிக்கை. வேற ஏதாவது பேசுவோம். எப்போலேர்ந்து ஜர்னலிஸ்டா இருக்கீங்க.. ?“
‘இவளிடம் என் ஆரம்பம் முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல இருந்தது. வங்கியில் மேனேஜராக இருந்தது, சிங்காரவேலு.. பாலகிருஷ்ணன்.. கல்யாண சுந்தரம்.. என்று மொத்தக் கதையையும் சொல்லாம் போலத்தான் இருந்தது.’
ஆனால் ”ரொம்ப நாளாவே ஜர்னலிஸ்ட்தாங்க” என்றேன்.
”இந்த வேலை உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ…”
”ம்ம்.. புடிக்குங்க. ”
”உங்களுக்கு எப்படி இவ்ளோ டீடெயில்ஸ் கிடைக்குது… ?”
”நல்ல ஜர்னலிஸ்டா இருந்தா உங்களை நம்பி டீடெயில்ஸ் குடுப்பாங்க. ஒரு ஜர்னலிஸ்ட் மேல இருக்கற நம்பிக்கைதான் ரொம்ப முக்கியம். நீங்க செய்யற வேலையைப் பொறுத்து அந்த நம்பிக்கை தானா வளரும். அந்த நம்பிக்கைக்கு பாதகமில்லாம நடந்துக்கிட்டீங்கன்னா, உங்களை தேடி ஸ்டோரீஸ் வரும். நீங்க தேடிப் போக வேண்டியதில்லை”
”ம் ம்.. எனக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது. சரி போலாம் வாங்க.. மணி ஒன்பது ஆகுது. லேட்டானா அந்த வார்டன் திட்டும்” என்றாள்.
”எத்தனை மணிக்கு உள்ளே போகணும் ? ”
”9.30 வரைக்கும் டைம் இருக்கு.. பட் ஷார்ப்பா போனா நல்லா இருக்காது.. அதுவும் நான் உள்ள வந்துட்டு அப்புறம் வெளியில வந்துருக்கேன்.. ”
”வாங்க போலாம்” என்று சொல்லி விட்டு எழுந்தேன்.
ஹாஸ்டல் வாசலில் வண்டியை நிறுத்தினேன். வண்டியிலிருந்து இறங்கி ப்ளாட்பாரத்தின் மீது ஏறி நின்று கொண்டாள். ”தேங்க்ஸ் பார் தி காஃபி”
”யு ஆர் மோஸ்ட் வெல்கம்.. ஓகே நான் கௌம்பறேங்க” என்றேன்.
”இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு.. இருந்துட்டுப் போங்க” என்றாள்.
‘அவள் இருந்துட்டு போங்க என்று சொல்லியதும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. நம்மோடு பேசிக்கொண்டிருப்பதில் அவளுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்தால் இருந்து விட்டுப்போங்கள் என்று சொல்லுவாள்… நம்மைப் பிடிக்காவிட்டால் இப்படி 15 நிமிடங்கள் கூட வீணடிக்காமல் பேச வேண்டும் என்று நினைப்பாளா..?’
அவள் மதுரை சட்டக் கல்லூரியில் படித்தது, முதலில் வேறு ஒரு அலுவலகத்தில் ஜுனியராகப் பணியாற்றியது, தற்போது வைகறைச் செல்வன் அலுவலகத்தில் பணியாற்றுவது என்று அவளாகப் பேசிக் கொண்டிருந்தாள். 9.25க்கு மணியாகி விட்டது வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் சென்றதும், வண்டியை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்ற பிறகு, சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தேன். சாலையிலேயே குதிக்க வேண்டும் போல இருந்தது. உரக்கக் கத்தி பாட வேண்டும் போல இருந்தது. என்னை எவ்வளவு பிடித்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போங்கள் என்று சொல்லியிருப்பாள். சாலையில் என்னைக் கடந்து சென்ற அத்தனை பேரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றியது.
எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாள். “ஐ ஹேட் ய வொன்டர்ஃபுல் டைம். தேங்க்யூ. (I had a wonderful time. Thank You)”
”இட்ஸ் ய ப்ளெஷர்”(It’s a pleasure) என்று பதிலனுப்பினேன். ”யு ஆர் சோ ஸ்வீட்” என்று பதிலனுப்பினாள்.
ஹாஆஆ என்று கத்த வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வண்டி ஓட்டிச் செல்லும் போது, ரெண்டு கையையும் விட்டு விட்டு ஓட்ட வேண்டும் போலிருந்தது.
‘பெண் என்பவள் எவ்வளவு பெரிய போதை !!! அவளின் அருகாமைதான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது ? உலகில் எந்த போதையும் இதற்கு ஈடாகாது. உலகமே மறந்து போகிறதே!!! எத்தனை இன்பங்கள் வைத்தாய் இறைவா என்று பெண்ணை வைத்துத்தான் சொல்லியிருப்பார்களோ ?’
ஒரு வழியாக வீட்டுக்கு வந்தேன். அம்மா டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். ”வெங்கட் உனக்கு ஒரு லெட்டர் வந்துருக்குடா. உன் டேபிள்ள வைச்சுருக்கேன் பாரு” என்றாள் அம்மா.
என்னை நேராகப் பார்த்துப் பேசியது போதாது என்று வசந்தி லெட்டரும் அனுப்பியிருக்கிறாளோ…. என்று நகைச்சுவையாக நினைத்துக் கொண்டேன்.
டேபிள் மீது இருந்த கவரை எடுத்துப் பார்த்தேன். வேலாயுதம் விசாரணை ஆணையத்திலிருந்து இரண்டு நாட்கள் கழித்து நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன்.
தொடரும்.
I can’t wait for the next part. It’s so Interesting. Good work bro.
வசந்தியின் உண்மையான பெயர் கடைசியில் லெட்சுமி என்று முடியுமா?
சங்கர் வாழ்க்கையில் வந்த வசந்தியின் உண்மையான பெயர் கடைசியில் லெட்சுமி என்று முடியுமா?
enkku therinthavarai comrdekal jollu vidammaattaarkal enpathe!
தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி துளியும் பிரக்ஞை இல்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அவர்கள் ஈழப் பிரச்சினையைப் பற்றியோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ பேசிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதில் ஒரு ஜோடி அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டே காதலித்துக் கொண்டிருந்தார்கள். இதை யெல்லாம் படிக்கும் போது இன்னொரு சுஜாதா உருவானது தெரிகிறது
அரசியல் ,சமூக சிந்தனை ,காதல்,ஒரு வயது முதிர்ந்த வாலிபரின் காதல் அனுவபபத்தை அழகாக சொல்கிறது இந்த தொடர் ,வாழ்த்துக்கள் தோழர் .
கொஞ்சம் kill the messenger வாசம் வருதே..( ஆனால் இது உங்கள் அனுபவம்+நடைமுறையில் இப்படித்தான் என்பதும் உண்மைதான்) எனக்கு இப்பவே ஒரே மூச்சில் இந்த நாவலையே படித்து முடிக்கனும் போல இருக்கு..!!
அரசியலில் அல்லது சமுக கதையில் ஒரு காதல் அத்யாயம்… சினிமா போன்று செல்கிறது கோ படம் பார்ப்பது போல் நன்றாக செல்கிறது வாழ்த்துக்கள்.