அம்பேத்கர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஏன் கொண்டாடப் படுகிறார் என்பதற்கு காரணம் இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட பலர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்த பிறகே செய்ய வேண்டும் என்று விவாதிக்கிறார்கள். இறுதியாக அம்பேத்கர் பேசுகிறார்.
“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிகச் சிறந்தவர் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தலைமை நீதிபதியும் மனிதரே. நம்மைப் போல எல்லா ஆசாபாசங்களும் நிறைந்தவர். நம்மைப் போன்ற எல்லா பலவீனங்களும் கொண்டவரே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. உச்சநீதிமன்ற நீதிபதியின் நியமனத்தை நிராகரிக்கும் அதிகாரத்தை அரசுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ வழங்காமல், தலைமை நீதிபதிக்கு வழங்குவது என்பதும், ஆபத்தான முடிவே”
தற்போது உள்ள தீபக் மிஸ்ராவோடு அம்பேத்கரின் இந்த கருத்தை பொருத்திப் பாருங்கள். எத்தனை தீர்க்கதரிசனமான வார்த்தைகள் ?
இந்தியா தற்போது வரலாறு காணாத ஒரு நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடியின் மையப் புள்ளியாக விளங்குவது நீதித்துறை. அமித் ஷாவை விடுவித்து, கேரள ஆளுனர் பதவியை சதாசிவம் பெற்றது முதல், நீதித்துறையை தொடர்ந்து பிஜேபி அரசு தங்கள் கட்டை விரலின் கீழே வைத்து அழுத்தத் தொடங்கியிருக்கிறது. உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், பொம்மலாட்டத்தின் பொம்மைகளாகவும், அவர்களை ஆட்டுவிக்கும் கயிறு, அமித் ஷா மற்றும் மோடியிடமும் இருக்கும் ஒரு நிலை உருவாகியிருக்கிறது. சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தெல்லாம், வெறும் கருவியே. இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள நீதிபதிகளை, மிரட்டியோ, லஞ்சம் கொடுத்தோ, தங்களுக்கு வேண்டிய சாதகமான வழக்குகளில் தீர்ப்பு எழுத வைக்கக் கூடிய நிலை, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடந்து வருகிறது.
2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் பல துறைகளில் மலிந்திருந்தது உண்மைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி, நீதித்துறையை வளைக்கவோ, மிரட்டவோ முயன்றதில்லை. இன்னும் சொல்லப்போனால், அமித் ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில், மூளையாக இருந்து செயல்பட்டவர், குஜராத்தில் அப்போது மத்திய உளவுத் துறை ஐஜியாக பணியாற்றிய ராஜேந்திர குமார். குஜராத்தில் 2001 முதல் 2002 வரை நடந்த அனைத்து என்கவுன்டர்களிலும், இவரது பங்கு முக்கிய பங்கு என்பதை, இவ்வழக்கை விசாரித்த சிபிஐ கண்டறிந்து இவர் பெயரை குற்றப் பத்திரிக்கையில் சேர்த்தது.
காங்கிரஸ் ஆட்சியிலேயே, அப்போது இருந்த மத்திய உள்துறைச் செயலர், ராஜேந்திர குமார் மீது வழக்கு தொடர அனுமதி வழங்க மறுத்தார். காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால், உள்துறை செயலாரையே மாற்றியிருக்கலாம். ஆனால் மாற்றவில்லை. மத்திய உள்துறை செயலாளரின் கருத்தை மதித்து, ராஜேந்திர குமாரின் பெயரை, குற்றப் பத்திரிக்கையில் இருந்து நீக்கியது.
அதன் பின்னர், ராஜேந்திர குமார் என்ற முக்கிய புள்ளி இல்லாததன் காரணமாகவே, குஜராத் டிஜிபி பி.பி.பாண்டே உள்ளிட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்த வழக்கு மொத்தமாக நீர்த்துப் போனது.
ஆனால் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இது போன்ற நாகரீகங்களோ, நாட்டின் மீதான அக்கறையோ துளியும் கிடையாது. இட்லரைப் போன்ற சர்வாதிகாரிகளிடம் பண்பையும், நாகரீகத்தையும் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா, ஒரு மோசமான ஊழல் பேர்வழி மட்டுமல்ல. அவர் செய்த ஊழலால், வகையாக சிக்கிக் கொண்டு, சிறை செல்வதற்கு அஞ்சி, மோடி மற்றும் அமித் ஷாவின் சொல்படியெல்லாம் ஆடுகிறார் என்பதுதான் இந்தியா இன்று எதிர்கொள்ளும் பெரும் ஆபத்து.
விரிவாகச் செல்வதற்கு முன்னால், தீபக் மிஸ்ராவின் நடவடிக்கைகளுக்கு ஒரு சிறு உதாரணத்தை பார்த்து விட்டு செல்வோம்.
தலைமை நீதிபதியை மாஸ்டர் ஆப் ரோஸ்டர் என்று அழைப்பார்கள். இந்த அடிப்படையில் தலைமை நீதிபதிக்கு, எந்த நீதிபதி எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்ய எல்லா அதிகாரங்களும் உண்டு. மோடியின் அடிமையாக உள்ள தீபக் மிஸ்ரா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் சார்ந்த, கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான அனைத்து பொது நல வழக்குகளையும், தனக்கு வேண்டிய இதர காவி நீதிபதிகளுக்கே ஒதுக்கி வந்தார். இவ்வாறு ஒதுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும், அரசுக்கு ஆதரவாக தள்ளுபடி செய்யப்பட்டன.
இப்படி பாரபட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பட்டியலிட்டு, தலைமை நீதிபதி மட்டும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது உச்சநீதிமன்றத்தின் மூத்த 5 நீதிபதிகள் அடங்கிய கொலிஜியமே இதை முடிவு செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சாந்தி பூஷண் அந்த வழக்கை தாக்கல் செய்தார். வழக்கு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை, அதை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிமன்ற பதிவகம் மறுக்கிறது.
திங்கட்கிழமை, இதே கோரிக்கையோடு பாண்டே என்ற வழக்கறிஞர் ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்து, பட்டியலிடப்படாமல் இருந்த ஒரு வழக்கை எடுத்து, தீபக் மிஸ்ராவே விசாரித்து, அதை தள்ளுபடி செய்கிறார். இதே கோரிக்கையோடு ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் சாந்தி பூஷணின் மனு என்ன ஆகும் ? தானாகவே காலாவதியாகுமா இல்லையா ? அப்படித்தான் ஆனது.
ஒரு வழக்கை பட்டியலிட வேண்டாம் என்று உத்தரவிட்டு விட்டு, அதே போன்ற ஆறு மாதங்களுக்கு முந்தைய ஒரு வழக்கை எடுத்து, தள்ளுபடி செய்து, சாந்தி பூஷணின் வழக்கு விசாரணைக்கே வராமல் செய்ய எத்தனை துணிச்சலும் அயோக்கிய உள்நோக்கமும் வேண்டும் ? அப்படிப்பட்ட தலைமை நீதிபதிதான் தீபக் மிஸ்ரா. இப்போது மீண்டும் ஒரு முறை அம்பேத்கரின் விவாதத்தை படித்துப் பாருங்கள்.
இந்த நிலையில்தான் 20 ஏப்ரல் அன்று, காங்கிரஸ் தலைமையிலான 64 எம்.பிக்கள் துணை குடியரசுத் தலைவரிடம், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான மனுவை அளித்தனர்.
இந்த மனு குறித்து பேசிய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், “நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, பொது மக்கள் நலன் சார்ந்த வழக்குகள், ஒரு குறிப்பிட்ட அமர்வுக்கே அனுப்பப்படுகின்றன. நான் கடந்த 30 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வருகிறேன். இது போன்ற மோசமான நிலைமையை நான் பார்த்ததே இல்லை” என்கிறார்.
தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து, மிஸ்ராவின் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் பிரசாந்த் பூஷன், “இந்த தகுதி நீக்க மனு ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால், தலைமை நீதிபதியை மருத்துவக் கல்லூரி லஞ்ச வழக்கில் அரசு மிரட்டி வருகிறது. இது மிகப் பெரிய ஆபத்து. அனைத்து வழக்குகளையும் யாருக்கு ஒதுக்குவது என்று தலைமை நீதிபதி முடிவெடுத்து வருவது, ஒட்டுமொத்த உச்சநீதிமன்றத்தையும், அரசு கட்டுப்படுத்தி வருவதையே காட்டுகிறது” என்றார்.
தீபக் மீஸ்ரா மீதான குற்றச்சாட்டுகள்.
பிரசாத் ட்ரஸ்ட் மருத்துவக் கல்லூரி வழக்கு
1) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரசாத் ட்ரஸ்ட் நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் ஒதிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இரண்டாவது மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் 10ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறார். 8ம் தேதி அன்று மதியமே, அந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தவிடுகிறார்.
அடுத்த விசாரணையில், இந்த வழக்கு நீதிபதி ஏகே.சிக்ரி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. அதே நாளில் அந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வில் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமை நீதிபதி யாருக்கு எந்த வழக்கை ஒதுக்க வேண்டும் என்பது கேள்வி கேட்க முடியாத அதிகாரம் என்று கூறி, மற்றொரு மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படுகிறது. அந்த மூன்று நீதிபதி அமர்வு, பிரசாத் ட்ரஸ்ட் மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழல் விவகாரத்தில் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்கு தொடுத்த அமைப்புக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கிறது.
2) சிபிஐ சிறப்பு இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கு
13 நவம்பர் 2017 அன்று, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா நியமனத்துக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அந்த மனு விசாரணைக்கு வருகையில் அந்த அமர்வில் இருந்த நீதிபதி நவீன் சின்ஹா, என் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வர வேண்டாம் என்கிறார். அந்த அமர்வின் மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா இல்லாத ஒரு அமர்வில் 17 நவம்பர் 2017 அன்று இந்த வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவிடுகிறார்.
அந்த உத்தரவின் பொருள் ரஞ்சன் கோகோய் மற்றும் வேறொரு நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் வழக்கு நீதிபதிகள் ஆர்கே.அகர்வால் மற்றும் ஏஎம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. இது உச்சநீதிமன்றத்தின் நடைமுறைகளை பட்டியலிடும் Handbook on Practice and Procedure and Office Procedure 2017 விதிகளுக்கு எதிரானது.
3) 2ஜி மேல் முறையீட்டு வழக்கு.
6 நவம்பர் 2017 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. பின்னர் இந்த வழக்கு பட்டியலில் இருந்து என்ன காரணத்தினாலோ நீக்கப்படுகிறது. பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. 13 நவம்பர் அன்று, புதிதாக நீதிபதிகள் ஏஎம்.கன்வாலிக்கர் மற்றும் டிஒய்.சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வருகிறது. இரு நீதிபதிகளும், இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்று கூறி விடுகின்றனர். ஆனால் பல மூத்த நீதிபதிகள் இருக்க, இளைய நீதிபதியான அருண் மிஸ்ரா முன்னிலையில் இந்த வழக்கு என்ன காரணத்தினாலோ பட்டியலிடப்படுகிறது.
4) நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கு
11 ஜனவரி 2018 அன்று, நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை கோரும் இரு மனுக்கள் நீதிபதி அருண் மிஸ்ரா முன்னிலையில் பட்டியலிடப்படுகின்றன. அதே நாள்தான், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், நீதிபதி லோயா மரண விசாரணை குறித்த மனு உரிய அமர்வின் முன்பு பட்டியலிடப்படவில்லை என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கின்றனர். 16 ஜனவரி அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வழக்கு உரிய அமர்வின் முன் விசாரணைக்கு வரும் என்று உத்தரவிடப்படுகிறது. பொது நல வழக்குகள் பல அமர்வுகளின் முன்பு விசாரிக்கப்பட்டாலும், 22 ஜனவரி 2018 அன்று, இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பாக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை தேவையில்லை என்று கடந்த வாரம், தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
5) சசி தரூர் மீது விசாரணை கோரும் சுப்ரமணிய சுவாமியின் மனு.
சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி வழக்கு தாக்கல் செய்கிறார். மனு 29 ஜனவரி 2018 அன்று நீதிபதி அருண் மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா (Maintainability) என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஆனால் அடுத்த விசாரணையில், தலைமை நீதிபதி முன்பாக இது விசாரணைக்கு வந்து, டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறார் தலைமை நீதிபதி. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
6) அமித் ஷா மகன் ஊழல் புரிந்தது குறித்து விசாரணை கோரும் வழக்கு
பல உச்சநீதிமன்ற அமர்வுகள் பொது நல வழக்குகளை விசாரித்தாலும், இந்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வுக்கே விசாரணைக்கு வருகிறது.
7) ஆதார் வழக்குகள்
தீபக் மிஸ்ராவுக்கு முந்தைய தலைமை நீதிபதி கேஹர் அமர்வில், தனி நபர் உரிமையை தீர்மானிக்கும் விவகாரத்தை முடிவு செய்ய 9 நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்படுகிறது. நீதிபதிகள் கேஹர், செல்லமேஸ்வர், சந்திரசூட் எஸ்ஏ.போப்டே, அப்துல் நசீர் உள்ளிட்ட நீதிபதிகள் விசாரித்து தனி நபர் உரிமையில் சமரசம் இல்லை என்று தீர்ப்பு வழங்குகின்றனர். அதன் பிறகு ஆதார் கட்டாயமா இல்லையா என்ற விசாரணை தொடங்குகிறது. இதை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. தலைமை நீதிபதி கேஹர் ஓய்வு பெற்று, தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாகிறார். ஆனால் புதிய அமர்வை நிறுவிய தீபக் மிஸ்ரா, இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த, செல்லமேஸ்வர், போப்டே மற்றும் அப்துல் நசீர் இந்த அமர்வில் இல்லாதது போல பார்த்துக் கொண்டார்.
8) பிஜேபி செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவை ஓஎன்ஜிசி யின் இயக்குநராக நியமித்ததை எதிர்த்த வழக்கு.
இந்த வழக்கு 8 ஜனவரி 2018 அன்று, நீதிபதிகள் அகர்வால் மற்றும் சாப்ரே முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அதில் ஒரு நீதிபதி விலகிக் கொண்டதால், அதில் உள்ள மற்றொரு நீதிபதியை வைத்து புதிய அமர்வு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பாக இதை விசாரணைக்கு அனுப்புகிறார்.
9) நீதிபதிகள் நியமன முறை குறித்த விதிகளை வகுப்பதில் மத்திய அரசு தாமதம் செய்தற்கு எதிரான வழக்கு.
இந்த வழக்கு நீதிபதிகள் யுயு.லலித் மற்றும் ஏகே.கோயல் முன்பாக விசாரணைக்கு வருகிறது. 27 அக்டோபர் 2017 அன்று நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடுகின்றனர். 14 நவம்பர் அன்று இந்த வழக்கு, மிஸ்ர, சிக்ரி மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வருகிறது. இந்த மூன்று நபர் அமர்வு, 27 அக்டோபர் 2017 அன்று மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறது.
இவை வழக்குகளை பட்டியலிடுவதில் உள்ள ஊழல் மட்டுமே.
இது தவிர, பிரசாத் ட்ரஸ்ட் மருத்துவக் கல்லூரி வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதில் சந்தேகத்துக்கு உள்ளான நபரே தீபக் மிஸ்ராதான். ஆனால் அவரே இந்த மனுவில் விசாரணை நடத்தி வழக்கை தள்ளுபடி செய்கிறார்.
இது தவிர, தீபக் மிஸ்ரா கையாண்ட பல வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகள் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க உண்மை. உடனே தண்டனை அளிக்க வேண்டும் என்று யாரும் கோரவில்லை. கோரவும் முடியாது. நம் முன் உள்ள ஒரே கேள்வி. இந்த புகார்கள் விசாரிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது மட்டுமே. இந்தப் புகார்கள் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டியவையே.
இந்த புகார்களுக்கு உள்ளான நபர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய டிகே.ராஜேந்திரன் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கே, மாதக் கணக்கில் போராட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கையில் நாட்டின் உச்சபட்ச அரசியல் அமைப்புச் சட்ட பதவியான தலைமை நீதிபதி மீது விசாரணை அத்தனை எளிதா என்ன ?
நீதிபதிகள் சுதந்திரமாக, அச்சமின்றி, பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும் என்பதற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள், மிக மிக ஆழமாக சிந்தித்து, நீதிபதிகளுக்கு மிக உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.
ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால், மாநிலங்களவையின் 50 எம்.பிக்கள், அல்லது மக்களவையின் 100 எம்பிக்கள் கையெழுத்திட்டு அவைத் தலைவரிடம் மனு அளிக்க வேண்டும். அவர் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஒரு மூத்த நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து, புகார்களை விசாரிக்கக் சொல்வார். அந்த குழுவுக்கு, உச்சநீதிமன்றத்துக்கு நிகரான அதிகாரங்கள் இருக்கும்.
அந்த மூவர் குழு அளிக்கும் அறிக்கையின்படி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மக்களவையில் இது 364 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட நீதிபதி தகுதிநீக்கம் செய்யப்படுவார்.
இது வரை இந்திய வரலாறில், மூன்றே மூன்று முறைகள்தான் தகுதிநீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி ராமசாமி. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிடி.தினகரன். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென். இந்த மூன்று முயற்சிகளுமே நிறைவேறவில்லை. ஆனால் மூன்று நேர்வுகளிலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் ராஜினாமா செய்தார்கள். அவர்கள் மீதான ஊழல் புகார்களின் ஆதாரங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டன. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சிகளுக்கு உள்ள எண்ணிக்கைகளை வைத்துப் பார்த்தால், தீபக் மிஸ்ராவின் மீதான பதவி நீக்க தீர்மானம் எந்த காலத்திலும் நடக்கப் போவதில்லை. ஆனால், இந்தியாவையும், அதன் மக்களையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் ஒரு அரசியல் கட்சி, தீபக் மிஸ்ரா பதவி ஓய்வு பெறட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன ?
ஒருவருக்கு நோய் வந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், அறுவை சிகிச்சை செய்யத்தான் வேண்டும். வேறு வழி உள்ளதா என்ன ? அறுவை சிகிச்சைக்கு பயந்தால் நோயாளியை காப்பாற்ற முடியுமா ? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வான் என்ற மூடன் மட்டுமே நோயாளியை படுக்க போட்டு கடவுளை ஜெபிப்பான். அறிவுள்ளவன், அறுவை சிகிச்சைக்கு தயாராவான்.
எம்பி.க்கள் கையெழுத்திட்டு, குடியரசுத் துணைத் தலைவரிடம் தகுதிநீக்க மனுவை அளிப்பது என்பது ஒரு முதல் கட்டம் மட்டுமே. இந்த தீர்மானம் நிறைவேறினால் நிறைவேறட்டும். நிறைவேறாவிட்டால் போகட்டும். மூன்று நபர் விசாரணைக் குழுவின் முன்பாக இந்த புகார்கள் விசாரணை செய்யப்படுவது மட்டுமே தற்போதைய முதல் நோக்கம். மூவர் விசாரணைக் குழுவின் விசாரணையில் தீபக் மிஸ்ரா மீதான புகார்களுக்கு ஆதாரங்கள் கிடைத்து, அதற்குள் அவர் ஓய்வு பெற்றால்தான் என்ன ? இன்னும் நல்லது அல்லவா ? ஓய்வு பெற்ற நீதிபதிக்கு என்ன பாதுகாப்பு. கிடைத்த ஆதாரங்களை வைத்து, தீபக் மிஸ்ரா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வைத்து கைது செய்யலாமா முடியாதா ?
மேலும், உரிய எண்ணிக்கையில் எம்.பிக்கள் கையெழுத்திட்டு, குடியரசுத் துணைத் தலைவரிடம் தற்போது தகுதி நீக்க மனு அளித்துள்ளார்கள். இந்த மனுவை, ஏதாவதொரு காரணம் காட்டி, வெங்கையா நாயுடு நிராகரிக்கத்தான் போகிறார். தீபக் மிஸ்ராவை காப்பாற்றுவதற்காக, அரசியல் அமைப்புச் சட்டம் அளித்த கடமையை ஒரு பிஜேபியின் குடியரசுத் தலைவர் ஏன் மீறுகிறார் ? இதிலிருந்தே, தீபக் மிஸ்ரா பிஜேபியின் பிரதிநிதி என்று அவர்கள் இருவரையுமே அம்பலப்படுத்த இது ஒரு வாய்ப்பா இல்லையா ?
இந்த வாய்ப்பைத்தான் திமுக தவற விட்டு விட்டது. பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், தீபக் மிஸ்ரா தகுதி நீக்க மனுவின் மீது கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது திமுக எம்பிக்கள், ஆர்எஸ்.பாரதி, டிகேஎஸ்.இளங்கோவன், மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் ஒரு சில நாட்களிலேயே தங்கள் கையெழுத்துக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
திமுகவின் தலைமையிடம் விசாரித்தபோது, இந்த தகுதி நீக்க மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதனால் கையெழுத்திடவில்லை என்றனர். மேலே விவரித்த காரணங்களால், இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மேலும், கடந்த காலங்களில் இது போன்ற நேர்வுகளில் திமுகவின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக மிக மோசமான ஊழல் நீதிபதியான பிடி.தினகரனின் மீது இதே போன்ற தகுதிநீக்க மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த முயற்சிகளில் முன்நின்றவர், மூத்த வழக்கறிஞர் வைகை.
முரசொலியில் முதல் பக்கத்தில், வைகை பார்ப்பனர் என்றும், பி.டி.தினகரன் தலித் என்றும், அதனால்தான், அவர் தினகரன் மீது ஊழல் ஆதாரங்களை திரட்டுகிறார் என்று கூறும் விதமாக, முரசொலியில் முதல் பக்கத்தில், சூத்திரனுக்கோர் நீதி, தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கோர் நீதி என்ற பாரதியின் வரிகள் படத்தோடு வெளியிடப்பட்டது. அத்தோடு நிற்கவில்லை. அது போஸ்டர்களாக சென்னை நகர் முழுக்க ஒட்டப்பட்டது. இதுதான் திமுகவின் கடந்த கால வரலாறு.
இந்த விவகாரம் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்ககோவனிடம் கருத்து கேட்டபோது, “தகுதிநீக்க மசோதாவுக்கு போதுமான எண்ணிக்கையில் எம்பிக்களை காங்கிரஸ் கட்சியாலேயே சேர்க்க முடிந்தது. திமுக எம்பிக்களின் கையெழுத்து தேவையில்லை என்பதால் கையெழுத்திடவில்லை.
இது விவாதத்துக்கு வருகையில் நாங்கள் பங்கேற்போம் என்றார்” இரு வாரங்களுக்கு முன் ஏன் கையெழுத்திட்டு விட்டு பின்னர் வாபஸ் பெற்றீர்கள் என்று கேட்டதற்கு, “எங்கள் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் கையெழுத்திட்டதால் பின்னர் அதை வாபஸ் பெற்றோம்” என்றார். இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. டிகேஎஸ்.இளங்கோவன் நான் மிகவும் மதிக்கும் ஒரு அற்புதமான தலைவர். ஆகையால் அந்தக் கேள்வியை கேட்கவில்லை.
2ஜி மேல் முறையீட்டுக்காக திமுக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்ததா என்று திமுக உயர் மட்டங்களில் விசாரித்தபோது “விசாரணை நீதிமன்றத்திலேயே விடுதலை பெற்று விட்டோம். இது வெறும் மேல் முறையீடுதானே… எங்களிடம் அற்புதமான மூத்த வழக்கறிஞர்கள் உள்ளனர். இந்த வழக்கின் மேல் முறையீட்டை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். நிச்சயமாக இது 2ஜி மேல் முறையீட்டை மனதில் வைத்து அல்ல” என்றார்கள்.
தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்க மசோதாவில் கையெழுத்திடாமல் தவிர்த்த முக்கிய கட்சிகள் மூன்று.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம்.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்.
திராவிட முன்னேற்றக் கழகம்
நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மாநில சுயாட்சி வீரர் கருணா 1980 ல் எம் ஜி ஆர் ஆட்சிய கலைத்தார்.
TRS சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராசுட்டிரிய சமிதியும் கையெழுத்து இடவில்லை. ஒடியா நவின் பட்நாயக்கின் பிசூ சனதாதளமும் கையெழுத்து இடவில்லை.
எதற்க்கும் தயார் என்ற துணிச்சலான பதிவு
மிகவும் தெளிவும் துணிவும் நிறைந்த கட்டுரை. வாழ்த்துக்கள் #Savukku
நாத்தம் புடுச்ச நாய்கள்…
“”லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம்.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்.
திராவிட முன்னேற்றக் கழகம்””
லஞ்சமும், ஊழலும் இரு கண்கள் என்ற கோட்பாட்டுடன் வாழும் அம்மூதேவிகளும், உள்மனது சொல்வதைக் கேட்டு, அக்கயவனைக் காப்பாற்ற BJP உடனான பேரத்தில் மதிமயங்கி இருப்பார்கள்.
எல்லாவனும் கள்ளப்பயலுவ. நாட்ல எல்லா துறையும் சீரழிஞ்சாச்சி. எதுவும் செய்ய இயலாத பிறவிகளாக மக்கள்.
Your certificate for CONGRESS is flawed. Congress or DMK both were culprits in dealing with judiciary. They would write judgements and judge would sign the same…If you want more ask your lawyer friends in the bar…But they have the nuances to make it as if JUSTICE IS DONE……
BJP is novice…. Dont bother…. they too will learn from the past soon….. The basic is very simple. There is REGIME change. It is not simply a party in power changed. It is ideological change. So far the whole system was encroached by the dead left ideology. When changing that and removing from the system these things may happen….
Parpom ….
2019 BJPkkannu uruthiya solla mudiyalai….
EVM help pannina nadakkalam… NAVIN chawlannu oru porampokku mathiri officer kidaiccalum…
adutha term edhaavathu concretize panninarna oru middle path kidaikkumnu thaan thonuthu…. AADHAR illame adhu nadakkanum.I’m deadly against it.
neraiya peru solraanga…. he is bringing basic changes- water tight- for better administration….Enakku onnum theriyalai..oozhalum kuraiyalai…..irundhaalum fieldle irukkira neutral people solrappo ketka vendi irukku. Avanga govt departments kuda direct dealingle iruppathaale….
நீதிமன்றத் தீர்ப்பினை தனக்கு சாதகமாக பெற முடியாத காரணத்தால் தான் இந்திரா அவசர நிலையை பிரகடனம் செய்தார் என்பது வரலாறு.அன்றைய நீதியரசர்கள் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நீதி பரிபாலனம் செய்ததும் அவசர நிலை அமல்படுத்தபடுவதற்கு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.தீபக் மிஸ்ரா,சதாசிவம் போன்றவர்கள் நீதித்துறையின் அவமானச் சின்னங்கள்.
///”ஒருவருக்கு நோய் வந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், அறுவை சிகிச்சை செய்யத்தான் வேண்டும். வேறு வழி உள்ளதா என்ன ? அறுவை சிகிச்சைக்கு பயந்தால் நோயாளியை காப்பாற்ற முடியுமா ? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வான் என்ற மூடன் மட்டுமே நோயாளியை படுக்க போட்டு கடவுளை ஜெபிப்பான். அறிவுள்ளவன், அறுவை சிகிச்சைக்கு தயாராவான்”///
உண்மையான வரிகள்…
alahabad t neethimandra theerppirku pinnar neethithuraiyinai mudakki avasarnilai prakatanam seithathu yaar?inta azhakil congress katchi neethithuraiyinai valaikkavo mirattavo muyalavilla ennun narchaandru viyappai alikkirathu!