‘ஒரு கணம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. விட்டாள்… ? என்னை லவ் பண்றீங்களா…’ கேட்டு விட்டு, கொஞ்சம் கூட அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கொடுத்த அதிர்ச்சியில் என் முகம் மாறியதை கவனித்தாள். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“ரிலாக்ஸ் வெங்கட்… ஐ வாஸ் ஜஸ்ட் ஜோக்கிங்.. ஏன் இப்படி சீரியஸாகறீங்க…“
“இல்லைங்க… சீரியஸால்லாம் ஆகலை.“
“கமான் வெங்கட்.. உங்க மூஞ்சி போன போக்கைத்தான் பாத்தேனே.. சரி.. ஜோக்ஸ் அபார்ட்.. சொல்லுங்க. என்ன விஷயம் சொல்லனும்.“
நான் பேங்க்கில் வேலை செய்து கொண்டிருந்தேன் என்று தொடங்கி பாலகிருஷ்ணனை பூதலூர் சென்று பார்த்தது பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கேப்புச்சீனோ கொண்டு வந்து வைத்தான். சாதாரண காபியின் மீது க்ரீம் போட்டு, அந்தக் க்ரீமின் மேல் சாக்லேட் திரவத்தால் இதயம் வரைந்து அதன் நடுவே ஒரு அம்பைப் பாய விட்டிருந்தான் இரண்டு காப்பியிலும்.
இங்கே வருபவர்கள் எல்லாம் காதலர்கள் என்று எப்படி முடிவு செய்கிறார்கள் ? வேறு எந்தப் பைத்தியக்காரன் 8 ரூபாய் காபியை 80 ரூபாய்க்கு குடிப்பான். அங்கே வருபவர்கள் காபி குடிக்கவா வருகிறார்கள்…? கடைசிக் கேபினில் அமர்ந்திருந்தவனின் பின்னந்தலை மட்டுமே வந்தது முதல் தெரிந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கம் பெண் இருக்கிறாளா இல்லையா என்பதே தெரியவில்லை. உள்ளே நுழையும்போது பார்த்திருந்ததால் அவள் இன்னும் அதே இடத்தில்தான் இருப்பாள் என்று அனுமானித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. திடீரென்று அவனைப் பார்ப்பவர்களுக்கு, அவன் சுவற்றில் தலை சாய்தது அழுவது போலத் தோன்றும்.
“அவள் கவனம் என் கதையிலிருந்து காபிக்கு திரும்பியது. “ப்யூட்டிஃபுல்லா இருக்குல்ல ?” என்றாள். நான் என் வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் விரைவில் அவள் இதழ்களுக்குள் மரணிக்க இருக்கும் சாக்லேட் இதயத்தின் அழகில் லயித்திருந்தாள். தன் செல்போனை எடுத்து அந்த சாக்லேட் இதயத்தை போட்டோ எடுத்தாள். அவள் போட்டோ எடுத்து முடிக்கும் வரையில் நான் அமைதியாக இருந்தேன். என் வாழ்வில் சோதனையாகவும், ஒரு வகையில் சாகசமாகவும் அமைந்த சம்பவங்களை உணர்ச்சி பொங்க சொல்லிக் கொண்டிருக்கையில் அவள் காபியில் கவனம் செலுத்தியது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.
காபியை செல்போனில் போட்டோ எடுத்துவிட்டு என்னிடம் காட்டினாள். ஆர்வமே இல்லாமல் நல்லா இருக்குங்க என்றேன். அவளுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்.
“ம் சொல்லுங்க… நீங்க ஏதோ ஒரு ஊருக்கு கிளம்பிப் போனீங்க.. “ என்றாள்.
மீதம் உள்ள கதையையும் சொல்லி முடித்தேன். எல்லாவற்றையும் கேட்டு முடித்ததும் அவளிடம் ஒரு பய உணர்வு தோன்றியது. சிதைந்திருந்த அவளது கவனம் மீண்டும் என் மீது திரும்பியிருந்தது. சற்று கவலையோடு பார்த்தாள். குறும்பு புன்னகை காணாமல் போயிருந்தது. ‘தப்பான ஆளோடு பழகுகிறோமோ என்று யோசிக்கிறாளோ… ?’
“உங்களை நான் எல்லாரையும் மாதிரி ஒரு ஜர்னலிஸ்ட்னுதான் நெனச்சேன். பட் உங்க பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கும்னு நான் நெனைக்கலை. இவ்ளோ வேலையை வைச்சுக்கிட்டு என் கூட எப்படி உங்களால டைம் ஸ்பென்ட் பண்ண முடியுது ?” ரொம்பவும் சீரியசாகத்தான் பேசினாள்
”மனசுக்கு புடிச்ச விஷயத்தை செய்யறதுக்கு எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் நேரத்தை நாமளாவே ஒதுக்கிடுவோம். உங்க கூட பேசிக்கிட்டிருக்கறது எனக்கு பெரிய ரிலாக்ஷேஸனா இருக்கு. இந்த ப்ரெஷ்ஷர்லேர்ந்து ரிலீஸான மாதிரி இருக்கு.”
”ஸோ அந்த வகையில நானும் உங்க வேலையில கான்ட்ரிப்யூட் பண்றேன்.. ” மீண்டும் அவளிடம் உற்சாகம். சிரித்தாள்.
”அஃப்கோர்ஸ்” என்றேன்.
பில் கொடுத்து விட்டு கிளம்பினோம். நாங்கள் கிளம்பும்போதே மூலையில் முத்தமிட்டுக் கொண்டிருந்த ஜோடியும் கிளம்பியது. அந்தப் பெண்ணின் இதழ்கள் ரத்தச் சிவப்பில் இருந்தன. நான் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு திரும்பியதும் என்னைப் பார்த்துச் சிரித்தாள் வசந்தி.
ஹாஸ்டல் வாசலில் இறக்கி விடும்போது மணி 9. அவள் உள்ளே செல்வதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. நேற்றைப் போல நான் கிளம்புகிறேன் என்று நானும் சொல்லவில்லை. அவள் போவது வரை காத்திருப்பேன் என்பது சொல்லப்படாத ஒரு விஷயமாகி விட்டது. அவள் ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டாள். நான் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தேன்.
”உங்களுக்கு யாரு சப்போர்ட் பண்றா வெங்கட்.. ? எந்த சப்போர்ட்டும் இல்லாம எப்படி சமாளிக்கறீங்க ? ”
”நெறய்ய சப்பார்ட் இருக்கு வசந்தி. இப்போ நான் ஒரு எஸ்டாப்ளிஷ்ட் ஜர்னலிஸ்ட். நல்ல ஸ்டோரிஸ் பண்ணிருக்கேன். பண்ணிக்கிட்டு இருக்கேன். ஐ யம் ய மேன் ஆஃப் இன்டெக்ரிட்டின்னு (I am a man of integrity) ப்ரூவ் பண்ணிருக்கேன். என்னோட இந்த ஹானஸ்டி எனக்கு நெறய்ய நண்பர்களை ஏற்படுத்திக் கொடுத்துருக்கு. எங்க எடிட்டர் இதுக்காகத்தான் எனக்கு கூப்டு வேலை கொடுத்தார். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நான் சர்வைவ் ஆயிடுவேன்னு நம்பிக்கை இருக்கு.”
”என்னால எந்த ஹெல்ப்பும் பண்ண முடியலைன்னு கஷ்டமா இருக்கு வெங்கட். ”
”எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம் வசந்தி. ஐ வில் மேனேஜ். ஜஸ்ட் ரிலாக்ஸ்”
‘தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது சீரியஸான விஷயங்களைப் பேசினால் மாறும் அவள் மூட், ஒரு சில நிமிடங்களிலேயே கலகலப்பாக மாறி விடுகிறது. கொஞ்ச நேரம் கூட தொடர்ந்து இவளால் சோகமாக இருக்க முடியவில்லை. நெருக்கமானவர்கள் யாராவது இறந்தால் எப்படி இருப்பாள்… ? ச்சை.. என்ன யோசனை இது..’
9.30 ஆனது. வருகிறேன் என்று அவளிடம் விடை பெற்று விட்டுக் கிளம்பினேன். அவளிடமிருந்து கிளம்பியதுமே, நாளை கமிஷன் முன் ஆஜராகவேண்டும் என்பது நினைவுக்கு வந்தது… என்ன கேட்பார்கள்.. எவ்வளவு நேரம் நடக்கும் விசாரணை…
”ட்ரைவ் சேஃப்லி” என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள். நன்றி என்று பதில் அனுப்பினேன். ஆனால் பழைய உற்சாகம் இல்லை. என் நினைவுகளை நீதிபதி வேலாயுதம் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்.
இரவு 10 மணிக்கு ”யு ஆர் ய க்ரேட் மேன். ஐ யம் ப்ரவுட் டு பி யுவர் ஃப்ரென்ட்” என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள். நான் ஒன்றும் க்ரேட்டெல்லாம் இல்லை. சாதாரண மனிதன் என்று கூறினேன். ஸ்வீட் ட்ரீம்ஸ் என்று பதில் அனுப்பினாள். நாளை என்ன நடக்கும் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு ட்ரீம்ஸ் வந்தாலே பெரிய விஷயம். இதில் ஸ்வீட் ட்ரீம்ஸ் வேறா….
காலை பத்து மணிக்கெல்லாம் கமிஷன் அலுவலகத்தை அடைந்தேன். வழக்கறிஞர் இன்னும் வரவில்லை. வெளியே காத்திருந்தேன். 10.20க்கு ராஜராஜன் தன் ஜுனியர்களோடு வந்தார்.
”வாங்க வெங்கட். வந்து ரொம்ப நேரம் ஆச்சா… ? ” இல்லை சார். இப்போதான் வந்தேன்.
”ஆல்ரைட். உங்களை ரொம்ப க்ரில் (grill) பண்ணுவாங்க. கவனமா பதில் சொல்லுங்க. உங்களை இம்ப்ளிகேட் (implicate) பண்ற மாதிரி எதுவும் சொல்லாதீங்க… காம்ப்ளிகேட்டடான விஷயங்களைப் பத்திக் கேட்டா தெரியாது… ஞாபகமில்லைனு சொல்லுங்க. ”
”ஓ.கே. சார். ”
பத்தே முக்காலுக்கு நீதிபதி வேலாயுதம் வந்து அமர்ந்தார். என் பெயரை அழைத்ததும், நீதிபதி பக்கத்தில் அமைந்திருந்த கூண்டின் உள்ளே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
கமிஷனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வக்கீல், என் பெயர், முன்னர் பார்த்த வேலை, தற்போது பார்க்கும் வேலை போன்ற சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டார்.
என் மீதான தாக்குதல் தொடங்கியது.
”உங்களை ஏன் வேலையிலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணாங்கன்னு சொல்ல முடியுமா ?”
”என் மேல சிபிஐ போட்டிருக்குற கேஸ்ல உள்ள அதே காரணத்துக்காக டிஸ்மிஸ் பண்ணிருக்காங்க.”
”அது என்னன்னு நான் சொல்றேன். சரியான்னு சொல்லுங்க. உங்களுக்கு முன்னால அந்த பேங்க்ல மேனேஜரா வேலைப் பாத்த பாலகிருஷ்ணன் என்பவர் வைத்திருந்த பர்சனல் லாக்கரை திறந்து, அதனுள்ளே இருந்த 14 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்திருக்கிறீர்கள் என்ற காரணத்துக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டீர்கள் என்ற காரணத்துக்காக என்றால் சரியா ?”
”இல்லை. சிபிஐ என் மீது தொடர்ந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது. நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று அறிவிக்காத சூழலில் என் மீது விசாரணை நடத்தப்படாமலேயே நான் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளேன். ”
”சிபிஐ விசாரணை முடியாமல் இருந்தாலும், உங்களை டிஸ்மிஸ் செய்ததிலிருந்தே நீங்கள் பணத்தை கையாடல் செய்தது வங்கியால் நிரூபிக்கப்பட்டதாகத்தான் பொருள் கொள்ள முடியும். ”
ராஜராஜன் எழுந்தார். ”யுவர் ஆனர்… சாட்சியை மிரட்டும் வகையில் வழக்கறிஞர் விசாரணை நடத்துகிறார். இது இந்த விசாரணை ஆணையத்தின் வரம்புக்கும் தொடர்பில்லாதது. ”
கமிஷன் வழக்கறிஞர் ”இந்த விசாரணைக்கும் கமிஷன் விசாரணை வரம்புக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது. இந்த சாட்சி பணத்தை கையாடல் செய்துள்ளார். இவர் பணத்தை கையாடல் செய்துள்ளதாலேதான் இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இப்படி பணத்தாசை பிடித்த ஒருவர், இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கத்தோடு, மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு மீது பொய்யான ஆவணங்களை தயாரித்திருக்கக் கூடும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. சிங்காரவேலு மீதான புகார் எப்படி உருவானது என்ற கமிஷனின் விசாரணை வரம்புக்கு இந்தக் கேள்விகள் நிச்சயம் அவசியமானது” என்றார்.
நீதிபதி, ”க்வெஸ்டின் அலோவ்ட். யு மே ப்ரொசீட். விட்னஸ் ஷுட் ஆன்ஸர்”(Question alloweed. You may proceed. Witness should answer) என்றார்.
ராஜராஜன் அமர்ந்ததும் என்னிடம் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்டார்.
”எனது டிஸ்மிஸ்ஸலை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன். அதனால், நான் இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் அது என் வழக்கை பாதிக்கும்” என்று சொன்னேன். நீதிபதி முகத்தில் திகைப்பு. ராஜராஜன் ஒரு பாராட்டும் தொனியோடு என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
ஆனால் கமிஷன் வழக்கறிஞர் சளைக்கவில்லை. கவலைப்படாமல் அவர் தொடர்ந்தார். “ஆர்டிக்கிள் 311 (2) வின்படி உங்கள் மீது விசாரணை நடத்தப்படாமலேயே நீங்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறீர்கள்.. இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ? “
“தெரியாது.“
“நான் சொல்கிறேன். 311 (2) என்ற பிரிவு, தேசத்தின் பாதுகாப்பு காரணமாக, குடியரசுத் தலைவர் ஒரு அரசு ஊழியரை விசாரணை இல்லாமல் டிஸ்மிஸ் செய்ய வழங்கப்படும் அதிகாரம் அது. அந்த அதிகாரத்தின்படி நீங்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதால், உங்களின் செயல்பாடுகள் தேசப்பாதுபாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிய வருகிறது என்பதுதான் காரணம். அதனால்தான் நீங்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கூறுகிறீர்கள்.“
ராஜராஜன் அருகில் இருப்பதால் எனக்கு சற்று தைரியமாக இருந்தது. என்ன ஆனால் என்ன… ? நீதிபதி கழுத்தையா சீவி விடுவார் ?
“என் மீது சிபிஐ போட்டுள்ளது பொய் வழக்கு. அதே பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் என்னை டிஸ்மிஸ் செய்துள்ளார்கள். 1200 கோடி ரூபாய் வங்கிப் பணம் மோசடி செய்யப்பட்டதற்கு சிங்காரவேலுதான் காரணம் என்பதற்கான ஆதாரங்களை நானே என் கண்ணால் பார்த்தேன். அதனால்தான் என்னை பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்கில் சிக்கவைத்துள்ளார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை உள் துறை அமைச்சராக்கி விட்டு, நடத்தப்படும் இந்த விசாரணை ஆணையம் எப்படி நேர்மையான விசாரணையை நடத்த முடியும் ? “ என்று நான் சொன்னதும், நீதிபதி கோபமடைந்தார்.
“மிஸ்டர்… அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. திஸ் ஈஸ் என்கொயரி கமிஷன். நாட் ய பொலிடிக்கல் ஸ்டேஜ். (This is Inquiry Commission. Not a political stage) சம்பந்தமில்லாத மேட்டரையெல்லாம் இங்க பேசாதீங்க.. “ என்று நீதிபதி கத்தியதும், ராஜராஜன் எழுந்து பேசினார்.
“எது சம்பந்தமில்லாதது. சம்பந்தமில்லாத கேள்வியை கமிஷன் கேட்டதற்கு, இந்த சாட்சி பதில் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்படுகிறார். சம்பந்தமுள்ள பதிலைச் சாட்சி சொன்னால், அதற்கு சாட்சியை நீதிபதியே மிரட்டுவது இந்தக் கமிஷன் எப்படி நடக்கிறது என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு“
““அதற்காக இதை அரசியல் மேடையாக பயன்படுத்தவதை நான் அனுமதிக்க முடியாது“ என்றார் நீதிபதி கோபமாக.
“சாட்சி என்ன பதில் சொல்லுகிறாரோ.. அதை அப்படியே பதிவு செய்ய வேண்டியது கமிஷனின் கடமை. சாட்சியை சம்மன் கொடுத்து அழைத்து விட்டு, அவர் சொல்வதை பதிவு செய்ய மாட்டேன் என்று மறுப்பது சட்டவிரோதம். சாட்சி சொல்வதை அப்படியே பதிவு செய்யாவிட்டால் சாட்சிக்கு கொடுக்கப்பட்ட சம்மனை வாபஸ் பெற வேண்டும்“
“மிஸ்டர் ராஜராஜன், யு டோன்ட் டிக்டேட் டெர்ம்ஸ் டு திஸ் கமிஷன். (Mr.Rajarajan. You don’t dictate terms to this Commission)“
“ஐ யம் நாட் டிக்டேட்டிங் டெர்ம்ஸ். ஜஸ்ட் ட்ரையிங் டு டெல் யு தி லீகல் பொசிஷன்.“ (I am not dictating terms. Just trying to tell you the legal position)
“டோன்ட் டீச் மி லா“ (Don’t teach me law)
“இஃப் ய ஜட்ஜ் ஃபர்கெட்ஸ் லா, இட்ஸ் தி ட்யூட்டி ஆப் அன் அட்வகேட் டூ டீச் லா.. “ (If a Judge forgets law, it’s the duty of an advocate to teach law)
“ஐ வில் இனிஷியேட் கன்டெம்ப்ட் அகெயின்ஸ்ட் யு..“ (I will initiate contempt against you)
“ஐ வெல்கம் இட். ப்ளீஸ் இனிஷியேட். ஐ ஆல்சோ வான்ட் டு பாயின்ட் அவுட் அக்கார்டிங் டு தி கமிஷன் ஆப் இன்கொயரி ஆக்ட், யு டோன்ட் ஹேவ் கன்டெம்ப்ட் பவர்ஸ்” (I welcome it. Please Initiate. I also want to point out that according to the Commission of Inquiry Act, you don’t have contempt powers) என்று சூடாகப் பதில் சொன்னார் ராஜராஜன்.
நீதிபதி பின்வாங்கினார். அமைதியானார். அந்த ஹாலில் புயலடித்து ஓய்ந்தது போன்ற நிசப்தம்.
ஜட்ஜ் திடீரென்று எழுந்து தன் அறைக்குள் சென்றார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நான் கூண்டிலிருந்து எழுந்திருப்பதா இல்லையா என்று புரியாமல் ராஜராஜனை பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து விட்டு எதுவுமே பேசாமல் இருந்தார். அவர் கோபம் இன்னும் அடங்கவில்லை.
கமிஷனின் வழக்கறிஞர், எழுந்து நீதிபதியின் அறைக்குள் சென்றார். கூண்டுக்குள் இருந்த என்னை எழுந்து வருமாறு அழைத்தார் ராஜராஜன். வெளியே வந்தோம். “ஏன் சார் இவ்ளோ கோபப்பட்டுட்டீங்க.. ? “
“பின்ன என்ன வெங்கட்… இவன் கரப்ட்னு எனக்கு நல்லா தெரியும். தெனமும் சிங்காரவேலுகிட்ட என்ன பண்ணணும்னு உத்தரவு வாங்கிட்டுத்தான் பண்ணுவான்னும் தெரியும். சிங்காரவேலுவுக்கு அவன் விசுவாசமா இருந்துக்கட்டும். அதுக்காக வர்றவன் போறவனையெல்லாம் டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க முடியுமா ? கன்டெம்ப்ட் எடுப்பானாம். பெரிய மயிரு இவன்.. இவனை மாதிரி எத்தனை ஜட்ஜை பாத்துருப்பேன். 30 வருஷ ப்ராக்டிஸ் எனக்கு… இவனை மாதிரி பொறுக்கித் தின்ற ஆளு இல்ல வெங்கட் நானு… நேர்மையா ப்ராக்டிஸ் பண்றவன்.”
”விடுங்க சார்.. நீங்க டென்ஷனா ஆகாதீங்க…”
”பெரும்பாலான வக்கீலுங்க இந்த மாதிரி ரோக் ஜட்ஜஸோட (rogue judges) அயோக்கியத்தனத்தை பொறுத்துக்கிட்டு போறதுக்கு ஒரே காரணம், நாங்க சண்டை போட்டா அதனால பாதிக்கப்பட்றது க்ளையன்ட்ஸ்தான். க்ளையன்ட்ஸ் பாதிக்கப்படக் கூடாதேன்னுதான் பொறுத்துக்கிட்டுப் போறோம். இது என்ன வெறும் கமிஷன் ஆப் என்கொயரிதானே… தூக்குலயா போட்ருவான்.”
நீதிபதி அமர்ந்து விட்டார் என்று உள்ளே இருந்து ஒருவன் வந்து எங்களை அழைத்தான்.
உள்ளே சென்றோம். நீதிபதி ராஜராஜனைப் பார்த்து, ”ஐ யம் சாரி மிஸ்டர் ராஜராஜன்.” என்றார்.
ஆச்சர்யமாக இருந்தது. ஏன் இப்படிப் பின்வாங்குகிறார் இந்த ஆள்.
”இட்ஸ் ஆல்ரைட்.. ஐ யம் சாரி டூ” என்றார். யுவர் ஆனர் சொல்வதை கவனமாக தவிர்த்தார். நீதிபதியும் இதைக் கவனித்திருப்பார் ராஜராஜனைப் பார்த்து, ”கன்ட்டின்யூ பண்ணலாமா… இன்னொரு நாள் வச்சுக்கலாமா… டெல் மி யுவர் கன்வீனியன்ஸ்”(Tell me your convenience) என்றார்.
”வி மே கன்ட்டின்யூ” என்று மட்டும் பதிலலித்தார்.
நீதிபதி வேலாயுதம் ஏன் பின்வாங்கினார் என்பது உடனே தெரிந்தது. கமிஷன் வழக்கறிஞர் கேள்விகளைத் தொடர்ந்தார்.
”உங்களுக்கு முன்னால் பணியாற்றிய பாலகிருஷ்ணனை உங்களுக்குத் தெரியுமா ? ”
”தெரியும்”
”அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா ?”
‘என்ன பதில் சொல்வது.. ? தெரியும் என்று சொன்னால், எக்குத்தப்பாக அவர் மகள் விவகாரம் வெளியே வந்து விட்டால்…. அவர் இறந்து விட்டாலும், அவர் மகள் தற்போது திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறாளே… அந்த உரையாடலை இந்தக் கமிஷனில் தாக்கல் செய்து விட்டால்… எப்படித் தெரியும், எதற்காகத் தெரியும் என்று உயிரை எடுப்பானே…’
”பேசியதில்லை. ”
”நீங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னால் அவர் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறீர்கள். அவரோடு 28 முறை தொலைபேசியில் பேசியிருக்கிறீர்கள். யுவர் ஆனர், தி விட்னஸ் ஈஸ் லையிங்.” என்று கூறி விட்டு, எனது செல்போனின் இரண்டு வருட ஸ்டேட்மென்ட்டை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தார்.
”நீங்கள் பாலகிருஷ்ணனை சந்திக்கவில்லையென்றால், இரண்டு நாட்களில் உங்கள் செல்போன் டவர் ஏன் பாலகிருஷ்ணனின் சொந்த ஊரான பூதலூரைக் காட்டுகிறது ?”
”நான் வேறு வேலைக்காக அங்கே சென்றேன். எனது நண்பர் அந்த ஊரில் இருக்கிறார்”
”நண்பரின் பெயரையும் முகவரியையும் சொல்லுங்கள்”
”தற்போது நினைவில்லை. என் டைரியைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். ”
”நான் சொல்கிறேன். அது போன்ற ஒரு நண்பரே உங்களுக்கு இல்லை. நீங்கள் பூதலூர் சென்றதே, பாலகிருஷ்ணனின் லாக்கரிலிருந்து நீங்கள் கையாடல் செய்த 14 லட்ச ரூபாய் பற்றி அவருக்குத் தெரிந்து விடப் போகிறதே என்பதற்காக பாலகிருஷ்ணனை கொலை செய்வதற்காகத்தான்….”
தொடரும்.
இந்த கதையில் வரும் வசந்தி உளவாளி.
வசந்தி உளவாளி என்றால் எப்படி அதிர்ச்சியில் உறைந்து இருப்பார் வெங்கட். பெரும் இடி தாக்கியதை விட மோசமாக அவரது நிலைமை இருக்கும். கடவுளே என்ன கொடுமை.
விசாரணை கமிஷன் சினிமா காமெடி மாதிரி உள்ளதே? Ippadi thaan eduththaen kavizhththaen endru rendu pakkamum pesippaangala?
Enna ji nalla romantic ah poittu irundhadhu, marubadiyum UTurn potuteengalaey. . .
அடப்படுபாவிகளா..! சட்டத்தை இப்படியெல்லாம் கூட கொல்லுவதற்கு சட்டத்தில் இடமிருக்கா..!? இந்த நாவலின் முடிவு எப்பிடி இருக்கிறதோ தெரியாது.. ஆனால் ஒவ்வொரு சம்பவங்களும் நம் நீதித்துறையும் ஜனநாயகமும் நாய் கக்கிய வாந்தியை விட கேவலம் ..! இதற்க்கு முந்தைய உங்கள் கட்டுரையும் இந்த நாவலையும் படித்து முடிக்கும் ஒருவன் மனநிலை அரசுக்கு விரோதமாகத்தான் செல்லும்.., நிகழ்கால இந்தியா அழிவின் ஆரம்ப விதையை ஆழமாய் வழமான இடத்தில் புதைத்திருப்பதிற்கு நிகர்..
அடடா! கதை மீண்டும் த்ரில் கோணத்தில் சூடுபிடிக்கிரது. சில நாட்கல் கழித்து படித்தாலும், ஆரம்பித்த மாத்திரத்தில் கதையோடு ொண்ட்ற வைத்துவிடுகிரது ுங்கல் ெழுத்து.
கதையில் சில வர்னனைகல் அமோகம்!