உண்மையியே கேட்கிறார்களா ? கிண்டல் செய்கிறார்களா என்று ஒரு கணம் நம்ப முடியவில்லை. இது நீதிமன்றம்… இங்கே கிண்டல் செய்து விளையாடுவதற்கு இவர்கள் என்ன நண்பர்களா உறவினர்களா என்பது உறைத்தது.
‘எனக்கு அழுகை வந்து விட்டது. என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கட்டுப்படுத்த நினைத்தேன். முடியவில்லை. அது கொலைப்பழி சுமத்தப்பட்ட பயத்தால் அல்ல. அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தவரின் மரணத்துக்கு மறைமுகமாக காரணமாகி விட்டேனோ என்று குற்ற உணர்ச்சியில் இருந்த எனக்கு, அவரையே நான் கொலை செய்தேன் என்று குற்றம் சாட்டினால்… ?. ஒரு கடுமையான நெருக்கடிக்கிடையில் நேர்மை தவறாமல் அவர் நடந்து கொண்ட ஒரே காரணத்தால்தான் இந்த ஊழலே வெளிவந்தது. அவரின் உறுதியைப் பார்த்துதான் நானே இந்தச் செயலை செய்தேன். அவரைப் போய் நான் கொலை செய்தேன் என்று சொல்கிறார்களே…’
கர்சீஃப்பை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டேன். ராஜராஜன் எழுந்து, நாளை விசாரணையைத் தள்ளி வைக்கலாம் என்று சொன்னார். நீதிபதி, நாளை வைத்துக் கொள்ளலாமா என்று என்னைக் கேட்டார்.
நான் வேண்டாம் என்று விட்டு தொடர்ந்தேன். “1200 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சிங்காரவேலு என்ற நபர் கொள்ளையடித்தார் என்பதே குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கவே இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சிங்காரவேலு மீதான புகாரை நான்தான் வெளியிட்டேன். அந்தப் புகார் நான் இல்லாவிட்டால் வெளி வந்திருக்காது. நான் நினைத்திருந்தால், சிங்காரவேலுவிடம் பேரம் பேசி, சில லட்சங்களையோ, சில கோடிகளையோ வாங்கிக் கொண்டு சந்தோஷமாக என் வாழ்வை ஓட்டியிருக்க முடியும். சிறை சென்றிருக்க வேண்டாம். சிபிஐயால் சித்திரவதை அனுபவித்திருக்க வேண்டாம். இன்று இது போன்ற கட்டப் பஞ்சாயத்து மன்றம் முன்பு அமர்ந்து அவமானப்பட்டிருக்க வேண்டாம். ஆனாலும் நான் எனக்குச் சரியெனப்பட்டதைச் செய்தேன். நாளை மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் இதையேதான் செய்வேன்.
என்னை இங்கே அமர வைத்து, என்னை தேசவிரோதி என்றும், கொலைகாரன் என்றும் பழி சுமத்துகிறீர்கள். இது என்னை மிரட்டுவதற்காகத்தான். என் உறுதியை அழிப்பதற்காகத்தான் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் உங்களால் என் உறுதியை அழிக்க முடியாது. 1200 கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்த சிங்காரவேலு ஒரு குற்றாவளி என்றால், அந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தேன் என்பதற்காக, என்னை இப்படி அலைக்கழித்து அவமானப்படுத்தும், இந்த விசாரணை ஆணையமும், அதன் வழக்கறிஞரும், சிங்காரவேலுவை விட மிகப்பெரிய குற்றவாளிகள். இந்த ஆணையம், அதன் வழக்கறிஞர் போன்ற நபர்கள் இருப்பதால்தான் சிங்காரவேலுக்கள் உருவாகிறார்கள். தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பார்கள்.”
தட்டச்சர் கம்ப்யூட்டரில் நான் சொன்னதை அப்படியே அடித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களைப் போல தட்டச்சரின் கவனம் சிதையக் கூடாது. சாட்சி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே அடிக்க வேண்டும். சாட்சி இறுதியாக அவர் அடித்ததை படித்துப் பார்த்து விட்டு சரியாக இருந்தால், அந்த வாக்குமூலத்தின் கீழே கையெழுத்திட வேண்டும். நிறைய தவறுகள் இருந்தால் திருத்தம் செய்து எடுத்துத் தரச் சொல்லிக் கேட்கலாம்.
நான் பேசி முடித்ததும், ஒரு நிமிடம் அமைதி நிலவியது.
“ராஜராஜன், விட்னஸ் சொன்ன எல்லாத்தையும் பதிவு பண்ண முடியாது. சில விஷயங்களை நீக்க வேண்டி இருக்கு.“
“விட்னஸ் சொன்ன எல்லாவற்றையும் பதிவு செய்யா விட்டால் வாக்குமூலத்தில் கையெழுத்திட மாட்டார். அவர் சொல்வதை அப்படியே பதிவு செய்ய வேண்டியதுதான் ஆணையத்தின் வேலை. அதை நீட்டவோ, சுருக்கவோ, யாருக்கும் அதிகாரம் இல்லை. பதிவு செய்ய உத்தரவிடுகிறீர்களா ? இல்லை நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி, இங்கே நடக்கும் நாடகத்தை மனுவாக தாக்கல் செய்யவா ?” என்றார் ராஜராஜன்.
நீதிபதி முகத்தில் மருட்சி. தட்டச்சரை பார்த்து, “ப்ளீஸ் ரெக்கார்ட் எவ்ரிதிங்” என்றார்.
வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு விட்டு, வெளியே வந்தோம்.
“என்ன வெங்கட் இவ்வளவு எமோஷனலா ஆயிட்டீங்க. ? “
“சார்.. பாலகிருஷ்ணன் ஈஸ் மை ஐடியலாக் சார். ஒரு சாதாரண மனுஷனா இருந்து, எவ்வளவு பெரிய வேலை செய்துருக்கார் தெரியுமா அவரு. அவரு மட்டும் அந்த ஆதாரங்களை பத்திரப்படுத்தலன்னா இந்த ஸ்கேமே வெளியில வந்துருக்காது சார்.”
”இனிமே உங்களைத் திருப்பிக் கூப்பிட மாட்டாங்கன்னு நெனைக்கறேன். கூப்பிட்டா எனக்கு தகவல் சொல்லுங்க. அநேகமா உங்களுக்கு எதிரா ஏதாவது ரெக்கமன்டேஷன் குடுப்பான் இந்த ஆள். ரிப்போர்ட் சப்மிட் பண்ண பிறகுதான் தெரியும். லெட் ஆஸ் ஸீ.. ”
”ரொம்ப தேங்ஸ் சார்.. ” அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நேராக அலுவலகம் சென்றேன். எடிட்டர் இல்லை. ‘எடிட்டர் இருந்தால் விபரத்தை சொல்லி விட்டு நேராக வீட்டுக்காவது போகலாம். எல்லா விபரங்களையும் போனிலும் சொல்ல முடியாது.’ யோசித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன்.
நடந்து முடிந்தவை எல்லாமே நிஜமா என்று ஆச்சர்யமாக இருந்தது. நானா இப்படிப் பேசினேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. சற்று அமைதியாக இருந்திருக்கலாமோ என்று தோன்றினாலும், அமைதியாக இருந்தால் மட்டும் என்ன செய்து விடப்போகிறார்கள் என்றும் தோன்றியது. குறைந்தபட்சம், அந்த நீதிபதிக்கோ, அந்த கமிஷனுக்கோ நான் பயப்படவில்லை என்பதை நிரூபித்தாகி விட்டது. ஒரு வகையில் திருப்தியான உணர்வு ஏற்பட்டது.
வசந்திக்கு எப்போது உன் வேலை முடியும் என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன். 5.30 என்று பதில் அனுப்பினாள். நான் உன்னை உயர்நீதிமன்றம் வந்து பிக் அப் செய்து கொள்ளட்டுமா என்று கேட்டேன்.. சற்று நேரம் கழித்து, ஓ எஸ் என்றாள்.
வேலாயுதம் கமிஷன் ஏற்படுத்தியிருந்த டென்ஷன் சற்று விலகியது போல இருந்தது. ஆனால் அதை நினைத்ததும், எரிச்சலோடு சேர்ந்து என்ன செய்து விடுவான் என்ற அலட்சியமும் வந்தது. அந்த நீதிபதியை வலுக்கட்டாயமாக எண்ணங்களில் இருந்து விலக்கினேன்.
மாலை சரியாக 5.30 மணிக்கு, உயர் நீதிமன்றத்தின் மெயின் நுழைவாயில் அருகே நின்றேன். எங்கே இருக்கிறாய் என்று மெசெஜ் அனுப்பினாள். சொன்னேன். அங்கே நிற்காதே.. யாராவது பார்த்து விடுவார்கள். கோட்டை ரயில் நிலையத்தின் கீழ் சென்று நில். நான் அங்கே வருகிறேன் என்று சொன்னாள்.
ஜீன்ஸ் அணிந்து டீ ஷர்ட் போட்டுக் கொண்டு, கவலையே இல்லாமல் அலட்டலோடு அலையும் இவளா இப்படி யாராவது பார்த்து விடுவார்கள் என்று பயப்படுகிறாள் … ? ஆச்சர்யமாக இருக்கிறதே… இதில் ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்… ஒன்று அவளின் கவலையில்லாத அலட்டல் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே உண்மையாக இருக்க முடியுமா ?.. அவளின் தன்மைக்கு, யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அல்லவா இருக்க வேண்டும்… ? குழப்பத்தோடு பைக்கை கோட்டை ரயில் நிலையத்தின் கீழே நிறுத்திவிட்டு காத்திருந்தேன்.
வந்தாள். எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள். வண்டியின் கண்ணாடியை அவள் முகம் தெரிவது போல அட்ஜஸ்ட் செய்தேன். அவள் ஏதோ யோசனையில் இருந்தாள். அவளாகச் சொல்லட்டும் என்று நானும் எதுவும் கேட்கவில்லை. காபி ஷாப் சென்று அமர்ந்ததும், மெனு கார்டை அவளிடமே நீட்டினேன். வேறு ஏதோ யோசனையில் நீங்களே சொல்லுங்க என்றாள். நான் ஆர்டர் செய்து விட்டு… “என்ன வசந்தி… ஏதாவது பிரச்சினையா… ? “ என்றேன்.
“இல்லை வெங்கட்.. சீனியர் ரொம்பத் திட்டிட்டாரு.. “
‘இதற்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்…’
“நீங்க என்ன பண்ணீங்க… ? “
“ஒரு ஜட்ஜ்மென்ட் எடுக்கச் சொன்னார்… நான் அவர் சொன்ன ஜட்ஜ்மென்டைத்தான் எடுத்தேன்… ஆனா வேற ஏதோ கோபத்துல கன்னா பின்னான்னு திட்டிட்டார்.. “
“சரி விடுங்க.. சீனியர்தானே… “ என்று என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியாமல் சொன்னேன்.
“பேசாம இந்தப் ப்ரொபஷனையே விட்டுட்டு வேற ப்ரொபஷனுக்குப் போயிடலாமான்னு நெனைக்கறேன்… ஐ யம் சிக்.. “
“வசந்தி… நான் இருக்கற ப்ரொபஷனை விட உங்க ப்ரொபஷன் நல்ல ப்ரொபஷன். என்னால, நாட்டுல இருக்கற குறைகளைச் சுட்டிக் காட்டத்தான் முடியும். அதுக்கு என்னால எந்தத் தீர்வையும் தர முடியாது. ஆனா உங்களை மாதிரி வக்கீல்கள், அதுக்கான தீர்வுகளை ஏற்படுத்தித் தரக் கூடிய நிலைமையில இருக்கீங்க. நாடு இன்னைக்கு இருக்கற நெலைமையில மனித உரிமைகள் நாள்தோறும் மீறப்படுது. அதைத் தடுத்து நிறுத்தற உரிமை இருக்கற ஒரே ப்ரொபஷன் உங்க ப்ரொபஷன்தான்… “
“அது எனக்குத் தெரியும் வெங்கட்… அதுக்காகத்தான் எங்க அப்பா நான் வக்கீலாகனும்னு விரும்புனாரு.. லீவ் இட்.. வேற ஏதாவது ப்ளசன்டா பேசுவோம். “
“நீங்க ஏன் என்னை இன்னைக்கு ஹை கோர்ட் பக்கத்துல நிக்க வேணாம்னு சொன்னீங்க..? “
“என்ன வெங்கட் பேசறீங்க… யாராவது பாத்துட்டு எங்க அப்பாகிட்ட சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான்… என்னை ரொம்ப நாளாவே மதுரையில வந்து ப்ராக்டிஸ் பண்ணுன்னு சொல்லி கூப்பிட்டுகிட்டு இருக்கார். இந்த மாதிரி ஏதாவது ஒரு விஷயம் அவரு காதுக்குப் போச்சுன்னா அதோட என் கதை க்ளோஸ். அந்த ஊருலையே என் வாழ்க்கை அழிஞ்சுடும்.“
“இங்க ஹாஸ்டல்ல சாப்டுகிட்டு ஏன் கஷ்டப்படணும் ? மதுரையில இருந்தா வீட்டோட இருந்துக்கிட்டு, ப்ராக்டிசும் பண்ண மாதிரி இருக்கும். அம்மா அப்பாவோடவும் இருக்கலாம்ல… ?“
“எனக்கு மதுரையில ப்ராக்டிஸ் பண்றதுல துளி கூட இஷ்டம் இல்ல. எக்ஸ்போஷர் ரொம்ப கம்மி. இங்கன்னா நல்லா கத்துக்கலாம். அன்ட் இந்த ஃபன் (fun) வருமா ? மதுரையில என்ன இருக்கு ? செம போர்.“
‘வீட்டுக்கு அடக்கமான பெண்ணாக அம்மா அப்பாவிடமும் பேர் வாங்க வேண்டும். தற்போதைய இள வயது யுவதிகள் ஊரைச் சுற்றி அனுபவிக்கும் அனைத்துச் சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டும். அப்படி அனுபவிப்பது தன் வீட்டுக்கும் தெரியக் கூடாது. எவ்வளவு கவனமாக வாழ்க்கையை திட்டமிடுகிறாள்… ?’
“உங்க வீட்டுல மேரேஜ் பத்தி பேசலையா வசந்தி ?“
“அய்யோ அதை ஏன் கேக்கறீங்க வெங்கட்.. டெய்லி போன் பண்ணும் போதெல்லாம் இதே பாட்டுதான். எப்போ கல்யாணம் பண்ணிக்கற… எப்போ கல்யாணம் பண்ணிக்கறன்னு… நான் மெட்றாஸ்ல இருக்கறதால அவங்களால டெய்லி பொண்ணு பாக்க ஆளைக் கூட்டிட்டு வந்து காட்ட முடியலை. அதுக்காகவும், என்னை மதுரைக்கு வா வா ன்னு உயிரை எடுக்கறாங்க.. “
“டீடெயில்ஸ் குடுங்க… நான் வேணா மாப்பிள்ளை பாக்கறேன்.. “
“நீங்க ஆணியே புடுங்க வேணாம்.. எங்க அப்பா அம்மா பண்ற தொந்தரவு போதாதுன்னு நீங்களும் ஆரம்பிக்காதீங்க. முக்குலத்தோருக்குன்னு ஒரு மேரேஜ் சென்டர் இருக்கு.. அங்க ரிஜிஸ்டர் பண்ணி வச்சுருக்காங்க.. அதுலையும் எங்க கம்யூனிட்டியிலேயே பாக்கனும்னு அடம் பிடிக்கறாங்க… எங்க கம்யூனிட்டியிலே பெரும்பாலும், வட்டிக்கு விட்றவனுங்க.. கழுத்துல பெரிய தங்கச் செயின் போட்டுக்கிட்டு புல்லட்ல சுத்துவானுங்க… எனக்கு அந்த மாதிரி ஒரு மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு பட்டிக்காட்டுல சிக்கிகிக்கறதுல விருப்பம் இல்லை. “
“நீங்க என்ன கம்யூனிட்டி…“
“பிறமலைக் கள்ளர்… எங்க அப்பா கொஞ்சம் ஓக்கேனாலும், எங்க அம்மா வேற கம்யூனிட்டியில பாக்கறதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க. அதுனாலதான் நானும், இதை எவ்வளவு தள்ளிப் போடலாம்னு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.“
“உங்க அப்பா பார்ட்டியில இருக்கார்னு சொன்னீங்க.. ? அப்புறம் ஏன் உங்க கம்யூனிட்டியிலயே பாக்கறாரு… ? சிபிஎம்லயே யாராவது நல்ல ஆளாப் பாத்து முடிச்சுட வேண்டியதுதானே…“
“அந்த மாதிரியும் யாரும் அமையலயே… அமைஞ்சா எனக்கும் சந்தோஷம்தான்..“
“யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே… “
“எங்க வீட்லயும் லவ் மேரேஜுக்கு ரொம்ப எதிர்ப்பெல்லாம் தெரிவிக்க மாட்டாங்க. ஆனா இது வரைக்கும் அது மாதிரி எதுவும் அமையலை…“
நேரமாகி விட்டது. கிளம்பலாம் என்று கிளம்பினோம். அவளை ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டு பேசிக் கொண்டிருந்தேன். “நாளைக்கு என்ன பண்ணப் போறீங்க வெங்கட். எனக்கு ஆபீஸ் ஹாஃப் டே தான்…“
“எனக்கும் பெருசா ஒண்ணும் வேலை இல்லை. “
“சினிமாவுக்குப் போகலாமா ? “
“போலாம்.. என்ன படம் போலாம்… ? “
“பயணம்னு ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க… மூணு மணிக்கு புக் பண்ணிடுங்க… என்னை இங்கயே வந்து பிக் அப் பண்ணிக்கங்க.”
“சரிங்க.. “
“நாளைக்கு நான் என்ன ட்ரெஸ் போட்டுகிட்டு வரட்டும்.. ? “
“என்னங்க என்னைக் கேக்கறீங்க…“
“உங்களைக் கேக்காம… உங்கக் கூடதானே வர்றேன்… ? உங்க கூட வரும்போது நான் அழகா தெரிய வேணாமா… ? “ என்றாள் சிரித்துக் கொண்டே…
“உங்களுக்கு எந்த ட்ரெஸ் ரொம்ப புடிக்குமோ… அதைப் போட்டுகிட்டு வாங்க. உங்களுக்கு எல்லா ட்ரெஸும் அழகாத்தான் இருக்கு…“
“அய்யோ.. ஸோ ஸ்வீட்…“ என்று சொல்லிவிட்டு நேரமாகிறது என்று கிளம்பினாள்.
‘கிளம்பி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது நாளை அவளோடு சினிமாவுக்குப் போகப்போகிறோம் என்ற விஷயம் குதூகலத்தை ஏற்படுத்தியது. எத்தனையோ முறை சினிமாவுக்குப் போயிருக்கிறேன். பல தடவைகள் சினிமா தியேட்டரில் ஜோடியாக சினிமாவுக்கு வருபவர்களைப் பார்த்து பொறாமைப் படவில்லையென்றாலும், ஆதங்கப்பட்டிருக்கிறேன். கையை கோரத்துக் கொண்டு, ஆனந்தமாக பேசிக்கொண்டு, சினிமா பார்ப்பதற்காக நாங்கள் வரவில்லை…. எங்கள் நெருக்கத்தை இந்த சினிமா அதிகப்படுத்தியிருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டு ஆனந்தமாக சிரிப்போடு வந்திருக்கும் பல ஜோடிகளைப் பார்த்திருக்கிறேன்… நானும் நாளை ஜோடியாக சினிமாவுக்குப் போகப் போகிறேன் என்ற நினைவு ஏற்படுத்திய உற்சாகம் அளவற்றதாக இருந்தது.’
இரவு வசந்தியைத் தவிர் அத்தனை எண்ணங்களும் கனவுகளாக வந்தன. கனவில் எடிட்டர் என் ஸ்டோரி ஒன்றை குப்பை என்று கத்தினார். நீதிபதி வேலாயுதம், அரெஸ்ட் திஸ் ஃபெல்லோ என்று உத்தரவிட்டார். வக்கீல் ராஜராஜன், சாரி வெங்கட். உங்கள் வழக்கை என்னால் நடத்த முடியாது என்றார். அம்மா திடீரென்று எழுந்து நெஞ்சு வலிக்கிறது என்றாள். தூக்கி வாரிப்போட்டது. டக்கென்று எழுந்தேன். கரண்ட் போயிருந்தது. உடல் முழுக்க வேர்வை. மணி இரண்டு.
எழுந்து குளித்தேன். அதற்கு மேல் தூக்கம் வராது. ஓஷோ சொற்பொழிவுகளை எடுத்து படித்தேன். எதுவுமே மண்டையில் ஏறவில்லை. எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
ரத்தச் சிவப்பு வண்ணத்தில் ஒரு டாப்சும், கருப்பு நிற ஜீன்சும் அணிந்திருந்தாள். கையில் மரத்தால் செய்யப்பட்டது போன்ற ஒரு பெரிய வளையல் அணிந்திருந்தாள். முகத்தில் மேக்கப் சற்று அதிகமாகத் தென்பட்டது. ‘என்னோடு வருவதால் அதிகமாக மேக்கப் போட்டிருக்கிறாளோ…?’
உட்லண்ட்ஸ் தியேட்டர். சென்னை நகரின் ஆடம்பரமற்ற தியேட்டர்களில் அது ஒன்று. ஹம் ஆப்கே ஹேய்ன் கவுன் என்ற இந்தித் திரைப்படம் 300 நாட்கள் ஓடியது. அதெல்லாம் மல்ட்டிப்ளெக்ஸூகள் உருவாகாத காலம். மக்கள் நல்ல சினிமாவைத் தேடி அலை அலையாக வருவார்கள். உட்லண்ட்ஸ் தியேட்டர் அருகிலேயே எஸ்கேப் அவென்யூ வந்து விட்டதால் உட்லண்ட்ஸ் தன் சோபையை இழந்து விட்டது.
தியேட்டரில் வந்து அமர்ந்ததும் செல்போனில் யாருக்கோ வேக வேகமாக எஸ்எம்எஸ் அனுப்பிக் கொண்டிருந்தாள். நான் அவள் செல்பானைப் பார்த்து விட்டு எதுவும் கேட்காமல் அமர்ந்திருந்தேன். அவளாகவே சொன்னாள். “எங்க ஆபீஸ் பக்கத்துல ஒருத்தன் இருக்கான்… சரியான ஜொள்ளு… எப்போப் பாரு கவிதைன்னு மொக்கையா எதையாவது டைப் பண்ணி அனுப்பிக்கிட்டே இருப்பான்.. அனுப்பாதன்னு சொன்னாலும் விடாம உயிரை எடுப்பான்…“
“ம்ம்“
‘பிடிக்கவில்லையென்றால் இவள் எதற்கு அவனுக்கு பதில் அனுப்ப வேண்டும் ? எந்த பதிலும் வரவில்லையென்றால் எத்தனை நாளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பான்… ?’
படம் தொடங்கியதும் பல காட்சிகளில் வாய் விட்டு சிரி சிரியென்று சிரித்தாள். சிரிக்கும்போது இயல்பாக என் மேல் பட்டாள். பெரிய நகைச்சுவை என்றாள் என்னை அடித்துச் சிரித்தாள். வாசனையாக இருந்தாள். இறுதிக் காட்சியில் டென்ஷன் ஏறும்போது என் கையைப் பிடித்துக் கொண்டாள்.
மீண்டும் ஹாஸ்டல். மீண்டும் உரையாடல். அவள் அவன் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருப்பவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியது உறுத்திக் கொண்டே இருந்தது. அவள் எஸ்எம்எஸ் அனுப்பும் பல நபர்களில் நானும் ஒருத்தன் என்றே தோன்றியது. நான்தான் என் மனதில் தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறேன் என்று தோன்றியது. அவள் இது போன்ற எந்த எண்ணங்களும் இல்லாமல் இயல்பாக என்னோடு பழகிக் கொண்டிருக்கலாம்… நானாக தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்… என் வயது என்ன ? அவள் வயது என்ன ? ஏறக்குறைய பத்து வருடங்கள் வித்தியாசம்… இது எப்படி சரியாக வரும். எனக்கு இருக்கும் இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவே இது போன்ற கற்பனை வாழ்வு தேவையற்றதோ.. …
மறுநாள் மதுரைக்குச் செல்வதாகச் சொன்னாள். ‘நாளை பார்க்க முடியாதே….’
சோம்பலான ஞாயிற்றுக் கிழமையாக விடிந்தது. வண்டி கிளம்பி விட்டது என்று செய்தி அனுப்பியிருந்தாள். ஹேவ் ய ஹேப்பி ஜர்னி என்று பதில் அனுப்பினேன்… மதியத்துக்கு மேல், சாப்பிட்டு விட்டு, கல்யாண சுந்தரத்தைப் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினேன்.
வேலாயுதம் கமிஷனில் நடந்தவை அனைத்தையும் அவரிடம் விவரித்தேன். அமைதியாக கேட்டுக் கொண்டார்.
“வெங்கட் அந்தக் கமிஷன் ரிப்போர்ட்….“ என்று அவர் தொடங்கும் போது செல்போன் அடித்தது.
வசந்தி… “தோழர் பேசிட்டு வந்துட்றேன் தோழர்“ என்று சொல்லி விட்டு, வெளியே வந்தேன்.
“வெங்கட்…..“ என்று கத்தி அழுதாள். பகீரென்று இருந்தது….
“என்னமா ஆச்சு… அழாத வசந்தி.. ரிலாக்ஸ். சொல்லு. என்ன ஆச்சு. அப்பா அம்மாவுக்கு ஏதாவது உடம்புக்கு பிரச்சினையா ?“
“இல்ல வெங்கட். அவங்க நல்லா இருக்காங்க” என்று கூறி விட்டு மீண்டும் கேவல்.
“சரி. அழாம சொல்லு. என்ன ஆச்சு ?”
“என்னைப் பொண்ணு பாக்க வந்துருக்காங்க வெங்கட்….“ என்று சொல்லி விட்டு மீண்டும் அழுதாள்…
‘என்ன இவள்.. பெண்ணைப் பெற்றவர்கள் திருமண ஏற்பாடுகளைச் செய்யத்தான் செய்வார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா.. பிடிக்காத மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க முயற்சிக்கிறார்களா… ?’
“மாப்பிள்ளை பிடிக்கலன்னா அப்பாக்கிட்ட ஓபனா பேசிடு வசந்தி அழாத… உன்னை மீறி கல்யாணம் பண்ணி வச்சுட மாட்டாங்க வசந்தி.. ப்ளீஸ் … அழாத.. பாத்துக்கலாம்.. கவலப் படாதம்மா.. “
“எனக்கு உன்னைத்தான் புடிச்சுருக்கு வெங்கட்” என்று பெரிதாக அழுதாள்
தொடரும்.
tv serial mathiri end la suspense vakiringala….
Very Interesting! Please release Velvi 26 before Monday.
Thats very interesting….i am daily check in my inbox about savukku please share with many friends
really thanks for sankar and savukku
ஒரு வாசகனை மிக லாவகமாக தன்னோடு இழுத்து செல்கிறீர் .
படபடப்பு ,பரிதவிப்பு ,பயம் ,ஆர்வம் ,இழையோடும் காதல் இப்படி ஒவ்வொரு விதத்திலும் வசீகரிக்கிறீர்.
—
மு .செ .மல்லையா ..
Eppo Sir kadai-yaa thorappeenga…. Eppo sir vaelvi-26 varrum? 😉
Very Interesting!
venkat ungalai andha kamishan sonna madhiri jayilla dhan podanum… Pennin manathai thirudiya kutrathukku….
That’s interesting.