அன்பார்ந்த கலைஞர் அவர்களுக்கு சவுக்கின் அன்பான வணக்கம். இது வரை உங்களை சவுக்கு கலைஞர் என்று அழைத்ததில்லை. ஆனால், கலைஞர் என்று அழைப்பதுதான் பிடிக்கும் என்பதால், இப்போது சவுக்கு உங்களை கலைஞர் என்றே அழைக்கிறது. ஏனெனில், பலமான எதிரியுடம் மோதுவது தான் சவுக்குக்குப் பிடிக்கும். இப்போது பலமனைத்தும் இழந்து, பலவீனமான நிலையில் உள்ள நபர் நீங்கள்.
டாக்டர் கலைஞர் என்று உங்களை அழைக்கவியலாது. ஏனெனில், உதயக்குமாரின் பிணத்தின் மீது பெற்ற பட்டம் அது.
நான் முதல்வரா இல்லையா என்பதே தெரியவில்லை என்று எப்போது புலம்பத் தொடங்கினீர்களோ, அப்போதே உங்களின் ஒட்டு மொத்த அதிகாரமும் காற்றில் கரைந்து விட்டது. திமுக வெற்றி பெறப்போகிறது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுத்த பணம், திமுகவை வெற்றி வாகை சூட வைக்கப் கோகிறது என்று, ஊருக்கும், உலகத்துக்கும், நீங்கள் சொல்லும் அம்புலிமாமா கதையை நீங்களே நம்ப மாட்டீர்கள் என்பது சவுக்குக்கு நன்கு தெரியும்.
கலைஞர் அவர்களே, உங்களோடு சவுக்குக்கு பரிச்சயம் எப்போது தெரியுமா ? 1984ம் ஆண்டு என்று நினைவு. சென்னை ஆதம்பாக்கம். அப்போது சவுக்குக்கு 9 வயது. அப்போது தேர்தல் என்று ஞாபகம். இப்போது போல, அப்போதெல்லாம், கேபிள் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில், ஈசி டிவி என்ற கருப்பு வெள்ளை டெலிவிஷனில் தான் உங்களை முதன் முதலாக சவுக்கு பார்த்தது. அப்போது, சவுக்கின் தந்தையும், பக்கத்து வீட்டுக் காரரும், உங்களின் தமிழறிவைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை வைத்து, அப்போது தொலைக் காட்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தூர்தர்ஷனில் ஒதுக்கும் நேரத்தின் போது, திமுகவுக்கு ஒதுக்கப் படும் நேரத்திற்காக ஆவலோடு காத்திருந்தது சவுக்கு. ஆனால், சவுக்குக்கு மிகுந்த வருத்தம். நீங்கள் ஆங்கிலத்தில் பேசினீர்கள்.
அதன் பிறகு, சவுக்கின் தந்தைக்கு மாதவரம் பால் பண்ணைக்கு மாறுதல் அங்கே சென்ற பிறகுதான் எம்ஜிஆர் இறந்தார். எம்ஜிஆரைப் பற்றி அவ்வளவாக தெரியா விட்டாலும், உங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார் என்ற அளவில் சவுக்குக்கு எம்ஜிஆர் மீது கோபம்.
அதன் பிறகு, 1989 தேர்தல். அப்போது, உங்கள் மீது இருக்கும் தீராத பற்றுதல் காரணமாக, சவுக்கு, ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, அதில் உதயசூரியன் போல, அதை கட் செய்து, அதன் மீது கலர் பேப்பர் ஒட்டி, அதன் உள்ளே ஒரு பல்பை போட்டு, வாசலில் தொங்க விட்டது சவுக்கு. சவுக்கின் தந்தை அதைப் பார்த்து விட்டு, “எடுடா… நான் கவர்ன்மென்ட் செர்வன்ட். இப்படியெல்லாம் வாசல்ல வைக்கக் கூடாது“ என்றார். ஆனால் சொல்ற பேச்சைக் கேக்குற பழக்கம் தான் சவுக்குக்கு இல்லையே…. அப்படியே வைத்திருந்ததும், இரண்டு நாட்கள் கழித்து விட்டார் ஒரு அறை. அந்த அறையை வாங்கிக் கொண்டும் சவுக்கு அடங்கவில்லை. தந்தை அலுவலகம் முடித்து வரும் வரைக்கும், அதை மாட்டி விட்டு, வரும் நேரத்தில், கழற்றி வைத்து விடும். 1983ம் ஆண்டு, பால்வளத்துறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 1300 தொழிலாளர்களை எம்ஜிஆர் அரசு, வேலை நீக்கம் செய்தது. 1989 வரை அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
திமுக 1989ம் ஆண்டு பதவி ஏற்றதும் உடனடியாக அவர்களுக்கு வேலை வழங்கியதும், உங்கள் மீது இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
அப்போது சவுக்கின் தந்தை, இந்தி படி என்று வீட்டருகில் இருந்த இந்தி வகுப்பில் சேர்த்து விட்டார். கலைஞர் அபிமானி, இந்தி படிப்பதா ? தமிழுக்கு இழுக்கில்லையா ? திமுகவின் வெற்று கோஷங்களை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கானோர் போலவே, சவுக்கும் இந்தி படிக்க மறுப்பு தெரிவித்தது. சின்னப் பையன் இல்லையா ? அப்பா சம்பாத்தியத்தில் சோறு தின்று கொண்டு, இப்படி கொள்கை பேசினால் ? நாலு அப்பு அப்பினார். நாலு அப்பு வாங்கியதும், சவுக்கின் தமிழார்வம், டவுசருக்குள் ஒளிந்து கொண்டு, ஒழுங்கு மரியாதையாக இந்தி வகுப்புக்கு சென்றது. அப்போது கற்றுக் கொண்ட இந்தி, இத்தனை ஆண்டுகளாக எப்படிக் கை கொடுத்திருக்கிறது தெரியுமா கலைஞர் அவர்களே… ? சரி அதை விடுங்கள். நாம் கதைக்கு வருவோம்.
1990ல் உங்கள் ஆட்சி சந்திரசேகர் அரசால் கலைக்கப் பட்டதும் சவுக்குக்கு ஒரே அழுகாச்சி. என்னடா இது தலைவர் ஆட்சியை இப்படி கலைத்து விட்டார்களே என்று.
அப்போது வளரும் பருவமா. கவிதை எழுதும் ஆர்வமெல்லாம் வேறு இருந்தது. இதனால் தமிழார்வம் மேலும், மேலும் கூடியது. பள்ளியில், கவிதை என்ற பெயரில் சவுக்கு எழுதியதற்கு, இரண்டாம் பரிசு வேறு கொடுத்தார்களா… ? கேட்கவே வேண்டாம்.
1991ல் நடக்கும் தேர்தலில் நீங்கள் மீண்டும் முதல்வராவீர்கள் என்று சவுக்கு நம்பிக்கையோடு காத்திருந்த போது மே மாதம் ராஜீவ் காந்தி இறந்து போனார். அப்போது நடந்த கலவரத்தில், மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் எதிரில் இருந்த உங்கள் சிலையை ஒருவர் கடப்பாறையால் குத்தி உடைத்தார். அந்தப் படம், தினத்தந்தியில் வெளியான போது, நீங்கள், அந்தத் தம்பி, என்னை முதுகில் குத்தாமல், நெஞ்சில் குத்தினான் என்பதற்காக மகிழ்கிறேன் என்று போட்டீர்களே ஒரு போடு. இப்போது அதைக் கேட்டிருந்தால் சவுக்கு, ஓவரா நெஞ்ச நக்காத பாஸூ என்று சொல்லியிருக்கும். அப்போதுதான் உங்கள் அபிமானியாயிற்றே…
தலைவர் என்னாமா ரியாக்ட் பண்றாரு… தலைவர்னா தலைவர்தான் என்று சவுக்குக்கு ஒரே புளகாங்கிதம்.
அதன் பிறகு 15.06.1991 தேர்தல் அன்று சவுக்கின் தந்தை இறந்து போனதால், அந்தத் தேர்தலையும் அதன் முடிவுகளையும் சரிவர கவனிக்க முடியவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், ப்ளஸ் ஒன் சேர வேண்டாம், வேலை கிடைத்து விடும் என்று கூறியதால், பள்ளியிலும் சேரவில்லை.
அதன் பிறகு, அக்டோபர் 1991 முதல் அரசு அலுவலகத்தில் வேலை. 16 வயதில் 40 வயதுக்காரர்களோடு நட்பு. அவர்கள் அரசியல் பேசும் போது அரசியல் ஓரளவுக்கு தெரிய வந்தாலும், அரசு ஊழியர் சங்கத்தில் சேர்ந்ததும், பார்வை தெளிவாகியது. அப்போதைய ஜெயலலிதா அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களைப் பற்றி பத்திரிக்கைகளில் நாள்தோறும் வரும் செய்திகளைப் பார்க்கப் பார்க்க, கடும் கோபம் வந்தது. சந்திரலேகா மீது ஆசிட் வீசப் பட்ட போது, சந்திரலேகாவைக் காப்பாற்றி, அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்தவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய காவலர். அவர் சந்திரலேகா பட்ட அவஸ்தையை சொல்லிய போது, அந்தக் கோபம் பன்மடங்காகியது.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கத்தில், செய்திகளுக்குப் பஞ்சமா என்ன ? எஸ்டி.சோமசுந்தரம், வேனில் தொங்கிக் கொண்டு போனதிலிருந்து, டி.என்.சேஷனை, விமான நிலையத்திலிருந்து துரத்தி, தாஜ் ஓட்டலில் தாக்கிதிலிருந்து, வழக்கறிஞர்கள், விஜயன், சண்முகசுந்தரம் போன்றோர் வெட்டப் பட்டதிலிருந்து, கொடைக் கானல் ஓட்டலுக்க சட்ட விரோதமாக அனுமதி அளித்ததிலிருந்து, செய்திகளை கேட்கக் கேட்க, கோபம் பெருகிக் கொண்டே வந்தது.
1996ல் மீண்டும் உங்கள் ஆட்சி வந்ததும், சந்தோஷம் என்றால் சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். அப்போது சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியதால், விசாரணைகளை நேரில் காணும் வாய்ப்பு.
இன்று உங்களின் அன்பு உடன்பிறப்பாக இருக்கிறாரே…. டிஎம்.செல்வகணபதி…. அவர்தான் முதன் முதலாக 1996ல் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப் பட்டவர். செல்வகணபதியை கைது செய்யும் போது, அவர் சேலத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். காலை 5.30 மணிக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து கைது என்று முடிவானதும், சவுக்கு அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கி, ரயில் நிலையம் சென்றது. கைது என்று தெரிந்ததும், செல்வகணபதி முகத்தைப் பார்க்க வேண்டுமே… உஷாராக கையில் இருந்த ஒரு சூட்கேஸை உதவியாளரிடம் நைசாக கொடுத்தனுப்பினார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த மேத்யூஸ் என்ற டிஎஸ்பி, அந்த உதவியாளரை பின் தொடர்ந்து சென்று, அந்த சூட்கேஸை கைப்பற்றினால், அதன் உள்ளே ஒரு லட்ச ரூபாய் பணம் இருந்தது. அதுவும் கைப்பற்றப் பட்டது.
அதன் பிறகு, சவுக்குக்கு வேலை ஒரு நாளைக்கு 15 மணி நேரம். இரவு பகல் பாராமல், வேலை. அந்த வேலையைச் செய்வதில், சவுக்குக்கு ஒரு அலாதி பிரியம். ஊழல் ஒழிப்பு வேலையில் ஈடுபடுகிறோம் என்று அப்படி ஒரு சந்தோஷம்.
சவுக்கு வாசகர்களில் பல பேர், சவுக்குக்கு திமுக அரசால், இத்தனை தொந்தரவுகள் வந்ததால், திமுக எதிர்ப்பாளர் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞர் அவர்களே…. சவுக்கு திமுக எதிர்ப்பாளராக ஆனது, 1998ல்.
அத்தனை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணைகள், உங்கள் ஆட்சியில் இருந்த பார்ப்பன அதிகாரிகளின் செல்வாக்கால், பாரபட்சமாக நடக்கத் தொடங்கின.
உங்களின் செல்லப் பிள்ளையாக அப்போது இருந்த உமாசங்கரை, நீங்கள் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, விழிப்புப் பணி ஆணையத்தில் இணை ஆணையராகப் போட்டீர்கள். அந்த துடிப்பான அதிகாரி, பாரபட்சம் பார்க்காமல், ஊழல் புரிந்தவர்கள் அத்தனை பேர் மீதும், வழக்கு பதிவு செய்யச் சொல்லி பரிந்துரை செய்தார். ஆனால், பார்ப்பன ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்கும் ஊழல் வழக்குகளை மட்டும், விசாரிக்காமல் விடும்படி அவருக்கு, மறைமுகமாகவும் நேரடியாகவும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. இந்த அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடியைத் தாங்க முடியாமல், உமாசங்கர், விழிப்புப் பணி ஆணைய பணியை விட்டு, மாறுதலில் சென்றார்.
அப்போது இது போல பல ஊழல் வழக்குகளில் சிக்கிய பல்வேறு அதிகாரிகள் அவர்கள் பார்ப்பனர்கள் என்ற காரணத்தாலேயே லஞ்ச ஒழிப்புத் துறையில் அவர்கள் மீதான வழக்கு மூடப்பட்டது.
உங்களின் பல்வேறு பேச்சுக்களைக் கேட்டும், குஞ்சாமணியின் கூட்டங்களுக்கும் போனதால், சவுக்குக்கு பார்ப்பன எதிர்ப்பு உணர்வு அப்போது இருந்தது. குஞ்சாமணி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்பவர்கள், யாருக்காவது, காலையில் சரியாக கக்கூஸ் வரவில்லை என்றால் கூட, அதற்குக் காரணம், பார்ப்பனர்களும், பார்ப்பனீயமுமே என்று நம்பி விடுவார்கள். அப்படி ஒரு உடான்ஸ் விடுவார் குஞ்சாமணி.
திமுகவின் அடி நாதமே பார்ப்பன எதிர்ப்பு என்று நம்பிக் கொண்டிருந்த சவுக்குக்கு, முதல் அடி, கலைஞரின் ஆட்சியில், பார்ப்பனர்களுக்கு இத்தனை செல்வாக்கா என்பது மட்டுமல்ல. அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்கள் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்தது, கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்காகவா 15 மணி நேரம் வேலை செய்தோம்…. ? இதற்காகவா, நள்ளிரவு 12 மணிக்கு இரவு உணவு உண்டு, வேலை பார்த்தோம் என்ற அதிர்ச்சி நீங்க பல நாட்கள் ஆகின கலைஞர் அவர்களே….
அப்போதுதான் உங்கள் மீது முதன் முதலாக சந்தேகம் ஏற்பட்டது. அப்போது சந்தேகம் ஏற்பட்டாலும், ஊழலை ஒழித்தவராயிற்றே என்பதால், உங்கள் மீது, பாசம் இருக்கத் தான் செய்தது. அப்போது, சென்னை நகரில் பல்வேறு பாலங்கள் கட்டப் பட்டன. கட்சிக் காரர்கள் கூட, பெரிய அளவில் சம்பாதிக்க வில்லை. ஓரளவுக்கு நல்லாட்சியாகவே அந்த ஆட்சி அமைந்தது. குறிப்பாக உழவர் சந்தை போன்ற திட்டங்கள், மிகச் சிறப்பான திட்டங்களாக இருந்தது.
2001 தேர்தல் வந்ததும், அப்போது ஆதரவு அலையும் இல்லை, எதிர்ப்பு அலையும் இல்லை. மம்மி ரிட்டர்ன்ஸ் என்று ஜெயலலிதா, முழுப் பெரும்பான்மையோடு, ஆட்சியைப் பிடித்தார். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பது வரலாறு. ஊழல் குற்றச் சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும், அடக்கு முறைகள் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருந்தன.
2006ல், மைனாரிட்டி அரசை நீங்கள் அமைத்த போது, சவுக்குக்கு பெரிய அளவில் ஆர்வமும் இல்லை, வருத்தமும் இல்லை. அக்டோபர் 2006ல் ஒரு உயர் அதிகாரியை சந்தித்த போது அவர் சொன்னத் தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அந்த அதிகாரி, தமிழ்நாட்டின் வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருகிறது என்று சொன்ன போது, சவுக்கால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அந்த அதிகாரி அளந்து பேசுபவர். விபரம் தெரியாமல், பேச மாட்டார். அவர் சொன்னதும், ஏற்பட்ட அதிர்ச்சி நாளுக்கு நாள், கூடிக் கொண்டே போனது. எங்கு தொட்டாலும் ஊழல், எதிலும் ஊழல் என்று உங்கள் ஆட்சியின் மீதும், உங்கள் மீதும், 1991ல் ஜெயலலிதா அரசு மீது ஏற்பட்டது போன்றே இப்போதும் ஏற்பட்டது.
2006 தொடங்கியதிலிருந்தே, உங்களின் குடும்பத்தின் ஆதிக்கம் தமிழகம் முழுக்க வெளிப்படையாக தெரிய ஆரம்பித்த போது, உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும், பட்டுப் போனது. தமிழில் பெயர் வைத்தால் முழுமையான வரி விலக்கு என்று நீங்கள் அறிவித்த போது பட்டுப் போன பாசம் உங்கள் மீது அருவெருப்பாக மாறியது. அதற்குப் பிறகு, உங்கள் ஆட்சியில் நடந்த பல்வேறு விவகாரங்களைப் பற்றி சவுக்கில் விரிவாகவே பதியப் பட்டுள்ளது.
கலைஞர் அவர்களே… நீங்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற குறளுக்கு ஏற்றார் போன்ற நிர்வாகத் திறன் படைத்தவர் நீங்கள். நல்ல அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை அந்தந்தப் பதவிகளில் நியமிக்கக் கூடிய வல்லமை பெற்ற நீங்கள் சறுக்கியது ஜாபர் சேட் விவகாரத்தில் தான்.
ஜாபர் சேட்டை உளவுத் துறைத் தலைவராக 2007ம் ஆண்டு நியமித்தது முதற்கொண்டே, உங்களின் அழிவு காலம் தொடங்கியது. ஒட்டுக் கேட்பது என்பது, அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் வேலைதான் என்றாலும், சகட்டு மேனிக்கு பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஜாபர் சேட் ஒட்டுக் கேட்ட போது, அது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் D3D டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தி, சகட்டு மேனிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், என்று அத்தனை பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்ட போது நீங்கள் கவனமடைந்திருக்க வேண்டும்.
பல்வேறு அதிகாரிகள் மீது உங்கள் அரசில் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அந்த அதிகாரிகளில் ஓரிருவர் மீதாவது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், ஒருவர் மீது கூட நீங்கள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் ஜாபர் சேட்தான் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஒன்று இரண்டு என்று தொடங்கி, உங்கள் ஆட்சியில் நல்ல பதவியில் இருந்த அத்தனை அதிகாரிகளும் ஊழல் மன்னர்களாகி, மக்களை சுரண்டிக் கொள்ளையடித்ததன் பலனை அவர்கள் யாரும் அனுபவிக்கவில்லை கலைஞர் அவர்களே… நீங்கள் தான் அனுபவிக்கப் போகிறீர்கள். அவர்கள் அதிகாரிகள். அவர்களுக்கு எந்த அரசு வந்தாலும், சம்பளமும், வேளையாளும், ஏவலாட்களும் இருப்பார்கள். ஆனால், ஆட்சி போனால், நீங்கள் சிறையிலிருப்பீர்கள் என்பதை மறந்து போய் விட்டீர்கள் கலைஞர் அவர்களே….
ஜாபர் சேட், இது போன்ற விவகாரங்களை உங்கள் கண்களுக்கு வராமல் மறைத்து விடுவார் என்பதால் தானே, பல்வேறு ஊடகங்கள் சூசகமாக, உங்கள் ஆட்சியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி கோடிட்டுக் காட்டின ? ஆனால், உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாமல், அந்தப் பத்திரிக்கைகளை முடக்க நீங்கள் எடுத்த முயற்சியை ஒரு நல்ல உளவுத் துறையின் தலைவராக இருப்பவர் தடுத்திருக்க வேண்டாமா ? “அய்யா இது தவறு, இந்தப் பத்திரிக்கைகள் எப்போது வேண்டுமானாலும், நம்மை திருப்பித் தாக்கும்” என்று சொல்லியிருக்க வேண்டாமா ?
ஒட்டு மொத்தமாக ஒரு மாநிலத்தில் இருக்கும் அத்தனைப் பத்திரிக்கைகளும், உங்களுக்கு எதிராக திரும்பும் வரை உங்களை கொண்டு விட்டது ஜாபர் சேட் என்பதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுத்தீர்கள் ?
உளவு என்ற விவகாரத்திற்கு எந்த அளவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பதை ராசாத்தி அம்மாளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். அப்படி இருக்கையில், முக்கிய விவகாரங்களை உங்கள் பார்வையிலிருந்து மறைத்து, அவருக்கு தேவையான விஷயங்களை மட்டும் உங்கள் காதுக்கு கொண்டு வந்த போதே நீங்கள் கவனமடைந்திருக்க வேண்டாமா ?
ஓய்வெடுங்கள் என்று பத்திரிக்கையாளர் ஞானி உங்களுக்கு கடிதம் எழுதிய போது, அந்த ஞானியை பார்ப்பனர் என்று உங்கஙள கட்சிக் காரர்களையும், ஜால்ராக்களையும் வைத்து விட்ட விட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா ? அப்போது நீங்கள் ஓய்வெடுத்திருந்தீர்கள் என்றால், இப்போது இப்படி புலம்ப நேர்ந்திருக்குமா கலைஞர் அவர்களே… ?
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராசா பணம் கொண்டு வந்து கொடுத்த போதே, அவரைத் தடுத்திருக்க வேண்டாமா ? உங்களிடம் இல்லாத பணமா ? ஸ்பெக்ட்ரம் பணம் இல்லாமல் இருந்தால் நீங்கள் என்ன வறுமையிலா வாடியிருப்பீர்கள் ? ஒரு நல்ல உளவுத் துறைத் தலைவர், இந்த ஊழலைப் பற்றி உடனே அல்லவா உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும் ? அப்படிச் சொல்லியிருந்தால், உங்கள் மகள் நாளை சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்குமா ?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி உங்களை அலர்ட் செய்திருக்க வேண்டிய அதிகாரி, அந்த ஊழலில் பங்கு வாங்கிக் கொண்டிருந்த போது, அதை கண்டறியாமல், நீங்கள் பாராட்டு விழாவில் திளைத்துக் கொண்டிருந்த காரணத்தாலேயே நீங்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே……
அப்போது உங்கள் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஜாபர் சேட்டை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட போதாவது, நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா ? லட்சக்கணக்கான வோட்டுக்களைப் பெற்றுத் தரும் அரசியல் கட்சித் தலைவரை விட, ஒரு ஐபிஎஸ் அதிகாரியா முக்கியம் ? எலும்புத் துண்டுக்கு அலையும் நாயைப் போல உங்கள் கோபாலபுரம் வீட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் காத்துக் கிடந்தார்களே…. அவர்களை விட ஜாபர் சேட் என்ன அப்படி முக்கியம் ?
ஒரு ஜாபர்சேட்டுக்காக, ஒரு அரசியல் கட்சியின் கூட்டணியை இழக்கும் அளவுக்கு உங்கள் அறிவை மழுங்கடித்து, மூளைச் சலவை செய்து வைத்திருந்தார் ஜாபர் சேட்.
ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாகிய நீங்கள், ஈழம் விவகாரம் போன்றதொரு விவகாரத்தை கை நழுவ விட்டிருக்கலாமா ? ஈழம் விவகாரம் பெரிதாகிய ஜனவரி 2009லேயே, நீங்கள், ஆட்சி தேவையில்லை என்று தூக்கி எறிந்து, காங்கிரஸுக்கு எதிராக போர்ப்பரணி பாடியிருந்து தேர்தலைச் சந்தித்து இருந்தால், இன்று இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்திருந்தாலும் கூட உங்களை அசைத்திருக்க முடியுமா ? அன்று ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பதவியைத் துறந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், ஜெயலலிதாவைத் தவிர, அத்தனைக் கட்சிகளும் உங்கள் பின்னால் அல்லவா அணிவகுத்திருக்கும் ?
அத்தனை கட்சிகளின் துணையோடு நீங்கள் தேர்தலைச் சந்தித்திருந்தால், யாராவது உங்களை அசைத்திருக்க முடியுமா ?
இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை கோட்டை விடுவதற்கு ஜாபர் சேட்டைத் தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும் ?
முக்கிய பிரமுகர்களின் அந்தரங்கமான உரையாடல்களை பதிவு செய்து, உங்களுக்கு போட்டுக் காட்டியதைத் தவிர, உளவுத் துறை அதிகாரியாக வேறு என்ன செய்து விட்டார் உங்களுக்கு ஜாபர் சேட் ? நீங்கள் ஈடுபடாத சரச சல்லாபங்களிலா அந்த முக்கியப் பிரமுகர்கள் ஈடுபட்டு விட்டார்கள் ? அப்படியே ஈடுபட்டாலும், அது ஆட்சி நிர்வாகத்திற்கு அவ்வளவு முக்கியமா என்ன ?
இது போல எத்தனையோ விவகாரங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்ட முடியும் கலைஞர் அவர்களே…..
இன்று வெளி வந்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழைப் பாருங்கள் கலைஞர் அவர்களே. ஜாபர் சேட், அதிமுகவின் முக்கியப் பிரமுகரைச் சந்தித்து, “உங்களுக்குத் தேவையான இரண்டு முக்கியக் கோப்புகளைக் கொடுத்து விடுகிறேன். அதிமுக ஆட்சி வந்ததும் என்னை அவமானப் படுத்தாதீர்கள். ஒரு வருடத்துக்கு நல்ல பதவி வேண்டாம். ஒரு வருடத்துக்குப் பிறகு நல்ல பதவி கொடுங்கள் “ என்று பேசியிருக்கிறார் என்பதை படித்துப் பாருங்கள் கலைஞர் அவர்களே…
இப்போதாவது பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறீர்களா ? ஆனால், நீங்கள் இதைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது கலைஞர் அவர்களே. காலம் கடந்து விட்டது. உங்கள் கண் முன்னால் திமுக உடையப் போகிறது. உங்கள் மனைவி மக்கள் சிறை செல்லப் போகிறார்கள்.
இத்தனை விவகாரமும், உங்களின் மோசமான அனுமானத்தால் (Poor judgment) வந்தது கலைஞர் அவர்களே….
133 அடியில் சிலை வைத்தீர்களே…. அந்த அய்யன் சொல்லும் குறளை படிக்க வேண்டாம் ?
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
அந்தத் தீரா இடும்புதான் உங்களை வாட்டப் போகிறது.