என்னால் ஒரு கணம் நம்ப முடியவில்லை. இவளா இப்படி அழுவது. என்ன ஆயிற்று இவளுக்கு.. திடீரென்று இப்படிச் சொல்கிறாளே… இவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று ஒரு பக்கம் யோசனை ஓடிக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், மனதில் மகிழ்ச்சி என்னை அறியாமல் வந்தது.
‘என்னைத்தான் பிடித்திருக்கிறது என்கிறாளே…’ ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. நம்மை விரும்புகிறார்கள் என்று கேட்கப்படும் ஒரு வார்த்தை ஏற்படுத்தும் குதூகலம்…. கிளர்ச்சி… பெண் விரும்புகிறேன் என்று சொல்லி விட்டால், ஆணுக்கு பெண்ணை விடக் கூடுதலாகவே மகிழ்ச்சி ஏற்படுகிறது. ச்சே.. முதலில் அவளை சமாதானப்படுத்த வேண்டும். இந்த சுய பாராட்டுதலில் பிறகு இறங்கிக் கொள்ளலாம்.
“வசந்தி…. அழாத வசந்தி. அழுகையை நிறுத்து. அப்பா அம்மா மாப்பிள்ளையை புடிச்சுருக்கான்னு கேப்பாங்கதானே ? அப்போ புடிக்கலன்னு சொல்லிடு… அவ்ளோதானே… இதுக்குப் போயி சின்னப்புள்ளை மாதிரி அழுதுக்கிட்டு இருக்க ?”
”இல்ல வெங்கட்.. இப்போ வேணாம்மா.. கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா கேக்கவே மாட்டேங்கறாங்க. இந்த மாப்பிள்ளைக்கு என்ன கொறச்சல்.. இப்படி வர்றவனையெல்லாம் வேணாம்னு சொல்லிக்கிட்ருந்தா என்னதான் பண்றதுன்னு திட்டிட்டே இருக்காங்க வெங்கட்.. ” என்று சொல்லிவிட்டு மேலும் அழுதாள்.
”இப்போதைக்கு சமாளிச்சுட்டு வா வசந்தி.. மெட்றாஸ் வந்ததும் பாத்துக்கலாம்.. பெரிய பொண்ணு… வக்கீலு.. எவ்ளோ பெரிய ஆபீஸ்ல வேலை செய்யற… இந்த சின்ன விஷயத்தை சமாளிக்க முடியாம அழுதா என்ன அர்த்தம் ? கமான்… கண்ணைத் தொடச்சுக்கிட்டு போயி மெட்றாஸ் கௌம்பற வேலையைப் பாரு பாப்போம்”
”ம்ம்…. ஓ.கே.. ” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி. ”நான் நைட் பேசறேன்” என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
என்ன இப்படி சொல்லி விட்டாளே… என்று யோசித்தபடியே மீண்டும் கல்யாண சுந்தரத்தைப் பார்க்க உள்ளே சென்றேன். அவர் என் வழக்கில் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தார். என் கவனமெல்லாம் வசந்தியின் மீதே இருந்தது. அவருக்கும் எனது கவனம் வேறு எங்கோ இருக்கிறது என்பது புரிந்திருக்க வேண்டும். ”ஒண்ணும் குழம்ப வேணாம் வெங்கட். எதுவா இருந்தாலும் சமாளிப்போம். கவலைப்படாம போயி நிம்மதியா இரு. ” என்றார்.
”இல்லை தோழர்… கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு” என்று சொல்லி விட்டு, அவரிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்.
‘ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாள்….. பெரிதாக சொல்லிக் கொள்ளும்படிக் கூட நெருங்கிப் பழகவில்லையே. என்ன ஆகி விட்டது அவளுக்கு. இவள் பாட்டுக்கு என்னைத்தான் பிடிக்கிறது என்று சொல்லி விட்டாள். அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா. வயது வித்தியாசம் வேறு உறுத்துகிறது. அவள் அப்பா கம்யூனிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு சொந்த ஜாதியில்தான் மாப்பிள்ளை தேடுகிறார்.
நான் என்ன ஜாதி என்பது தெரிந்தால் ஒத்துக் கொள்வார்களா ? விளைவுகள் தெரியாமல் பேசுகிறாளே…’ என்று யதார்த்த நிலைமைகள் உறைத்தாலும், அவள் அழுதுகொண்டே “எனக்கு உன்னைத்தான் பிடிச்சுருக்கு வெங்கட்” என்று சொல்லியது இனிமையாக ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
அன்று இரவே புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்தாள். எனக்கு கதிரொளியில் வேலை இருந்ததால் பகலில் அவளைச் சந்திக்க முடியவில்லை. மாலை வழக்கம் போல கோட்டை ரயில் நிலையத்தில் அவளை ஏற்றிக் கொண்டேன். என்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைப் பார்த்தேன்.
‘எப்போது சொல்லப் போகிறாள்…. எனக்கு உன்னைத்தான் புடிச்சுருக்கு வெங்கட்… காதில் ரீங்காரமிட்ட படியே இருந்தது’
“பையனை புடிக்கலைன்னு சொல்லிட்டேன் வெங்கட்” என்றாள் உற்சாகமாக. கண்ணாடி வழியே பார்த்தேன். என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள். ‘இவளா அழுதுகொண்டே நேற்று பேசியது… ?’
நேராக காபி ஷாப்புக்குச் சென்றோம். எல்லா சீட்டும் நிரம்பியிருந்தன. வழக்கமாக காதல் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கடைசிக் கேபின் மட்டும் காலியாக இருந்தது. அங்கே சென்று அமர்ந்தோம். முத்தமிட ஏற்ற இடமாகத்தான் இருந்தது.
உட்கார்ந்தவுடன் அவளே ஆரம்பித்தாள்.
“வர்றவன் எல்லாம் வௌங்காதவனா வர்றான் வெங்கட். நேத்து வந்தவன் கழுத்துல தங்கச் செயின் போட்டுக்கிட்டு ரெண்டு பட்டன தொறந்து விட்டுக்கிட்டு வந்து உக்கார்றான். பி.இ முடிச்சுருக்கானாம். ப்ரைவெட்டா பைனான்ஸ் பிசினெஸ் பண்றானாம். அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பட்டியில எப்படி வெங்கட் இருக்கறது… புடிக்கலன்னு சொன்னேன். எங்க அம்மா உடனே 20 ஏக்கர் நெலம் இருக்கு.. மூணு வீடு இருக்கு. ரெண்டு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்னு சொல்றாங்க. உக்காந்து சாப்ட்றதுக்கா கல்யாணம் பண்றேன்… ஸ்ட்ரிக்டா வேணாம்னு சொல்லிட்டேன்.“
மனது அரற்றிக் கொண்டே இருந்தது. ‘சீக்கிரம் சொல்லேன் வசந்தி… எத்தனை நேரம் காத்திருப்பது..’
“அப்பா என்ன சொன்னாரு ?“
“அப்பா ஒண்ணும் பெருசா சொல்லலை. உனக்குப் புடிக்கலன்னா வேணாம்னு சொல்லிட்டாரு. ஆனா இவங்க கொண்டுட்டு வர்ற மாப்பிள்ளையெல்லாம் இதே மாதிரிதான் வெங்கட் இருக்கு…“
‘மாப்பிள்ளைகள் இப்படி இருப்பதால் என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருப்பாளோ… ஒரு வேளை மாப்பிள்ளை இவளுக்குப் பிடித்தது போல அமைந்திருந்தால் பேசாமல் சரி என்று சொல்லி விட்டு இந்நேரம் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு வந்திருப்பாளோ..’
“சரி நல்ல மாப்பிள்ளையா வருவாங்க வசந்தி. டோன்ட் ஒர்ரி.. “ என்றேன். நேற்று அழுகையோடு என்னைத்தான் பிடித்திருக்கிறது என்று சொன்னதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாமோ என்று உள்ளுணர்வு சொல்லியது.
அவளும் அதற்கேற்றார் போல “நீ மெட்றாஸ்லயே இருந்தா, உன்னைப் பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு கஷ்டமா இருக்கு. உன்னையும் அடிக்கடி லீவ் போட்டுட்டு வரச் சொல்ல முடியல. அதனால, பேசாம மதுரைக்கு போறேன்னு சொல்லிட்டு வந்துடுன்னு சொல்றாங்க. மதுரைக்கு வந்து அப்பாக் கூட ப்ராக்டிஸ் பண்ணுமாம். டெய்லி கழுத்துல செயின் போட்ட ஒருத்தனக் கூட்டிட்டு வருவாங்க. நான் புடவை கட்டிக்கிட்டு பொம்மை மாதிரி போயி நிக்கணும். இப்படியே எத்தனை நாளு நின்னுக்கிட்டு இருக்கறது வெங்கட் ? எனக்கே வெறுத்துப் போச்சு.. ஊருக்கு என்னைக் கூப்புடும்போது பொண்ணு பாக்கன்னு சொன்னா வரமாட்டேன்னு, அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லித்தான் வரச் சொன்னாங்க. அங்க போனா இந்த மாதிரி பண்றாங்க.”
‘எப்போது சொல்லப் போகிறாள்… இப்படி சோதிக்கிறாளே… ?’ தவிப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினேன்.
”அப்பா என்ன சொன்னாரு…. ? ”
“நான் மெட்றாஸ்ல வேலை பாக்கறது பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு கஷ்டமா இருக்குன்னு, என்னையை வேலையை விட்டுட்டு மதுரைக்கு வரச் சொல்லிட்டாரு. அடுத்த மாசக் கடைசிக்குள்ள அங்க போயிடனுமாம். நாங்க நீ சொல்ற மாப்பிள்ளையப் பாக்கறோம். நீ வீட்டோட இரு. இங்க வந்து என் கூட ப்ராக்டிஸ் பண்ணுன்னு சொல்றார் வெங்கட். அந்த ஊருல ப்ராக்டிஸ் பண்றத நெனச்சாலே குமட்டிக்கிட்டு வருது.”
”உங்க அப்பா அம்மாக்கிட்ட பேசிப் புரிய வைக்க வேண்டியதுதானே வசந்தி..? ”
”இல்ல வெங்கட் பேசிப் பாத்துட்டேன். அவங்க மதுரைக்கு வான்னு ஒத்தக் கால்ல நிக்கறாங்க. ”
ஆர்டர் செய்த காபி வந்தது. இன்றைக்கும் இதயம் வரைந்திருந்தார்கள். இது வரைக்கும் அவளை பெண் பார்க்க வந்தவர்களின் கதையைச் சொன்னாள்.
‘இவள் சொல்வாள் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஏமாற்றம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. அவளைப் போலவே இயல்பாகப் பேச முயற்சித்தேன்.’
”உங்களுக்கும் வயசாகுது வசந்தி. உங்க அப்பா அம்மாவுக்கு யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எண்ணம் இருக்காதா ?”
”எனக்குப் புடிச்ச மாதிரி எவனும் அமைச்சுத் தொலைக்க மாட்றானே.. என்ன பண்றது வெங்கட்…”
‘அமைதியாக இருந்தேன். ஒரு வார்த்தை வாய் திறந்து நேற்று சொன்னது போல எனக்கு நீதான் வேண்டும் என்று சொல்ல மாட்டேன்கிறாளே… நேற்று சொன்னதற்குள் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும்… ?’
”உங்களைப் பிடிச்சுருக்குன்னு வீட்ல சொல்லலாம் வெங்கட். பட், உங்க மேல இருக்கற கேசு. உங்களுக்கு இருக்கற பிரச்சினைகள் இதையெல்லாம் சொன்னா ஒத்துக்கவே மாட்டாங்க…. அதுக்கு ஒரு பெரிய போராட்டம் நடத்தனும். அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு. அவங்க பேச்சைக் கேக்காம கல்யாணம் பண்ணா ஒடஞ்சு போயிடுவாங்க. அதனாலத்தான் இதப் பத்திப் பேச்சையே எடுக்கலை. அவங்களே நோண்டி நோண்டிக் கேட்டாங்க.. யாரையாவது லவ் பண்றியான்னு.. யாரையும் இல்லம்மான்னு சொல்லிட்டேன். ”
எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும், கேட்காமல் இருக்க முடியவில்லை. சுற்றி வளைத்துக் கேட்கலாம் என்று கேட்டேன்.
”ஏன் நீங்க யாரையுமே லவ் பண்ணலையா ? ”
‘உன்னைத்தான் என்று சொல்லுவாள் என்று துடிப்போடு காத்திருந்தேன்.’
”ம். ஹை கோர்ட்ல விக்னேஷ்னு ஒரு அட்வகேட் இருக்கான். என் செட் தான். அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ரெண்டு பேருக்கும் ஒத்து வரலை. ம்யூச்சுவல் கன்சென்ட்ல டைவெர்ஸ் அப்ளை பண்ணிருக்காங்க. அவன்தான் என்னை எப்பப் பாத்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டுட்டே இருப்பான்.. ”
‘மனம் லயித்து கிடார் வாசித்துக் கொண்டிருக்கையில் நரம்பு அறுந்தது போல் இருந்தது.
என் ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு ”சரின்னு சொல்லிட வேண்டியதுதானே… ? ” என்றேன்.
”அவன் சீரியசா சொல்ற மாதிரி தெரியலை வெங்கட். ரொம்ப டேலன்டான பையன். செம ப்ரில்லியன்ட். என்னை அவனுக்கு ரொம்பப் புடிக்கும். எனக்கும் அவனை ரொம்பப் புடிக்கும். ஆனா அவன் பேசறதை சீரியசாவும் எடுத்துக்க முடியலை. என்கிட்ட மட்டும் இல்லை. நெறய்ய பொண்ணுங்கக் கிட்ட இதே மாதிரிக் கேப்பான்.. ”
எனக்கும் அவனைப் பிடிக்கும் என்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என் முகம் மாறியதை கவனித்தாள். நான் அமைதியானேன். என்னைச் சமாதானப்படுத்துவது போல “என் ஃப்ரெண்ட், சுமதி நான் போயி பேசறேன்னு சொல்லிருந்தா. நான் பேச வேணாம்னு சொல்லிட்டேன்.” என்றாள்.
என்னால் எதுவும் பேச முடியவில்லை. மனசு கனத்தது போலிருந்தது. ஒரு பெண், அதுவும் நான் விரும்பி மனசு லயித்த ஒரு பெண், அவளுக்கு இன்னொருவனை பிடிக்கும் என்று சொன்னால் அது எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமாக இல்லை. சட்டென்று எழுந்து போக வேண்டும் போலிருந்தது. வெளியே போய் தம் அடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் அமைதியாகி மனம் சுருங்கியதை கவனித்து விட்டாள். நான் கீழே எதையோ தேடுவது போல கீழே குனிந்து கொண்டேன்.
“வெங்கட்… இங்க பாருங்க….. வெங்கட்…” என்று அழுத்தமாக சொன்னாள்.
நான் நிமிர்ந்து பார்த்து “சொல்லுங்க“ என்று சொல்லி விட்டு மீண்டும் கீழே குனிந்து கொண்டேன். என் கையைப் பிடித்துக் கொண்டாள். மீண்டும் “வெங்கட்… லிஸ்ஸன் டு மி… என்ன ஆச்சு…“ என்று என்ன ஆனது என்று தெரியாதது போலக் கேட்டாள்.
“ஒண்ணும் இல்லைங்க… நாளைக்கு ஸ்டோரி டெட்லைன்.. அதான் சீக்கிரம் முடிக்கணுமேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். வேற ஒண்ணும் இல்லை.“
“எனக்குத் தெரியாதா என்னன்னு… என்ன இது… இவ்வளோ எமோஷனலா நீங்க…“
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க…“
“கமான் வெங்கட்….“ என்று சொல்லி விட்டு கேபினுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். எதற்குப் பார்க்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று கண் இமைக்கும் நேரத்திற்குள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு கம்மென்று அமர்ந்து கொண்டாள்.
ஒரு வினாடியில் பல ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்திற்குள் மின்னல் தோன்றினாலும், அந்த மின்னலின் ஒளி நீண்ட நேரம் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது. அவளின் அந்த முத்தம் அந்த மின்னல் தோன்றுவதற்கு தேவைப்பட்ட நேரத்தில் நடந்து முடிந்தாலும், அதன் சுவை நீண்ட நேரத்திற்கு கன்னத்தில் தித்தித்தது. வாயடைத்துப் போனேன்.
ஒரு வினாடி முன்பு வரை எரிச்சலோடு முகம் தெரியாத அந்த விக்னேஷ் என்பவனை சபித்துக் கொண்டு, என்னை நானே நொந்து கொண்டு எப்போது கிளம்பலாம் என்று தீவிர யோசனையில் இருந்தேன். ஒரு வினாடி கழிந்தவுடன் எப்படி நிலைமையைத் தலைகீழாக மாற்றி விட்டாள்.
வியப்பில் விரிந்திருந்த என் கண்களைப் பார்த்துக் கொண்டே, “மிஸ்டர் ஜர்னலிஸ்ட்… என்ன ஆச்சு…? பேய் அடிச்சுடுச்சா ? இப்படி பாக்கறீங்க…“ என்று கேட்டு விட்டு வழக்கம் போலச் சிரித்தாள்.
‘பெண் என்னும் மாயப்பிசாசு என்று யார் சொன்னது ?
இவர்கள் பிசாசேதான். சந்தேகமே இல்லை. ஒரு வினாடி அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டு மேலே நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். மறு வினாடி, உச்சி வானில் ஏற்றி விட்டு, கொஞ்ச நேரம் பறந்து விட்டு வா என்று சிறகு கொடுக்கிறார்கள்…. இவர்கள் மாயப் பிசாசல்லாமல் வேறு என்ன ?’
எவ்வளவு எளிதாக என் மூடை மாற்றி விட்டாள் !!! அவள் செய்த காரியத்தின் வியப்பும் மகிழ்ச்சியும் என்னை விட்டுப் போவதற்கு வெகு நேரம் ஆனது. நானும் மனிதன்தான். எனக்கும் உணர்ச்சிகள் இல்லாமல் இல்லை. அவளோடு நெருக்கமாக இருக்கையில் எனக்கும் அவள் கையைப் பிடிக்க வேண்டும் என்ற குறுகுறுப்பு பல நாள் தோன்றியிருக்கிறது. தியேட்டரில் சினிமாப் பார்க்கையில் அவள் வாசனை என்னை கிறக்கியிருக்கிறது. ஆனாலும், அவளை முத்தமிட வேண்டும் என்ற குறுகுறுப்பை அவள் தவறாக நினைத்து விடுவாளோ என்று அழித்திருக்கிறேன். எப்போது அவள் என்னோடு பைக்கில் வந்தாலும், வேகமாக ப்ரேக் அடித்து விடக் கூடாதே என்று மிகக் கவனமாக இருந்திருக்கிறேன்.
ஆனால் ஒரு வினாடியில் எப்படி இயல்பாக முத்தமிட்டு விட்டு எதுவுமே தெரியாதது போல என்னைப் பார்த்து குரும்பாக சிரித்துக் கொண்டு இருக்கிறாள் ? இதை நான் செய்திருந்தால் அமைதியாக இருந்திருப்பாளா… ஓங்கி ஒரு அறை விட்டிருக்கலாம். அல்லது இத்தனை நாள் பழகியதற்காக அறையாமல் விட்டு விட்டு, கோபமாக திட்டி விட்டு போயிருக்கலாம். இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று சபித்திருக்கலாம்… இது போல எதிர்பாராத முத்தம் கிடைத்த எந்த ஆணும் பெண்ணை அறைந்ததாக கேள்விப் பட்டது கூட இல்லை.
பில் வந்தது. பணத்தை பர்ஸிலிருந்து எடுத்து வைத்து விட்டு, மீண்டும் அவளைப் பார்த்தேன். “வாட்… இன்னைக்குதான் என்னை மொத தடவைப் பாக்கறது போல பாக்கறீங்க… இது வரைக்கும் என்னைப் பாத்ததில்லையா… இல்லைப் பொண்ணையே பாத்ததில்லையா… ? “ என்று கேட்டு விட்டு மீண்டும் சிரித்தாள்.
பர்ஸை எடுத்து பாக்கெட்டில் வைக்கலாம் என்று எடுத்தபோது தவறி கீழே விழுந்தது. எடுப்பதற்காக குனிந்தபோது அதே போல மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டாள். எழுந்ததும் சிரித்தாள்.
பர்ஸை எடுப்பது போல எடுத்து வேண்டுமென்றே மீண்டும் தவற விட்டேன். குனிந்து எடுக்கையில் வேண்டுமென்றே குனிந்தபடியே இருந்தேன்.
“ஹய்யே… போங்கு.. ஒண்ணும் கிடைக்காது… இடுப்புதான் வலிக்கும் எந்திரிங்க “ என்றாள்.
“என்ன இது கிஸ் குடுத்ததுக்கு ஒரு எஃபெக்டும் காணோம்… புடிக்கலையா… ?“ என்றாள்.
போலியாக முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, “ஆமாங்க… புடிக்கலை“ என்றேன்.. அவளும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் அய்யய்யோ.. இப்போ என்ன பண்றது… ?“ என்றாள்.
“அதாங்க… திருப்பிக் குடுத்துடலாம்னு பாக்கறேன்…“ என்றேன் சிரித்துக் கொண்டே.
“அதை உடனே குடுத்துருக்கனும்…. இவ்ளோ லேட்டாவா…. லேட் ஆனதுக்கு உங்களுக்கு ஃபைன். நாளைக்கு மத்யானம் எஸ்கேப்ல ஹிந்தி படத்துக்கு ரெண்டு டிக்கட் பண்ணியிருக்கேன். அங்க வந்து, வட்டியோட சேத்துக் குடுங்க…“
“நாளைக்கா ? “ என்றேன்.
“ஏன் வேலை இருக்கா….. வேலை இருந்தா பாருங்க… பரவாயில்லை. நான் என் ரூம் மேட்டோட போயிக்கறேன்.. நாளைக்கு அவளுக்கும் லீவு“ என்றாள். நான் எப்படியும் வருவேன் என்பதை அவளுக்கு தெரிந்திருந்தது.
“இல்லைங்க.. நானே வர்றேன்….“
“யாரோ ஸ்டோரி டெட்லைன் இருக்குன்னு சொன்ன மாதிரி இருக்கு…“
“அதை இன்னைக்கு நைட்டே முடிச்சுடுவேங்க…“
வீட்டுக்குத் திரும்பிய பிறகு, முகத்தைக் கழுவக் கூட மனது வரவில்லை. இந்த அம்மாவுக்கு என்ன தெரியும்.. என்னடா கை கால் கூட கழுவாம வந்து உக்காந்துட்ட…..
“கழுவிட்டேம்மா…. நீ சாப்பாடு போடு“ என்று இயல்பாக பொய்யுரைத்தேன்.
அவள் முத்தமிட்ட கன்னத்தை தடவிக் கொண்டே உறங்கிப் போனேன்.
மறுநாள் வெளியே அசைன்மென்ட் என்று சொல்லி விட்டு சினிமாவுக்கு பரபரப்பாக கிளம்பினேன்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ. நகரத்தின் மையப்பகுதியில் செல்வச் செழிப்போடு அமைந்திருந்த வணிக வளாகம். கணக்கில்லா கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களும், லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணத்தை செலவழிக்க வழியில்லாமல் அலைபவர்களும், அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து, உழைப்பின் அருமை தெரியாத செல்வந்தர்களுக்காகவுமே கட்டிய கனவு உலகம்.
அதன் உள்ளே கால் வைத்ததுமே, இந்த உலகம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தும். நாளை பைக்குக்கு பெட்ரோல் போட வேண்டும் என்று நினைப்பவனுக்கு அங்கே வேலையில்லை. எங்கே பார்த்தாலும் பணத்தின் செறுக்கு திமிறி வழிந்தது. வெளியில் பத்து ரூபாய்க்கு விற்கும் கேக்கை 120 ரூபாய்க்கு கவலையில்லாமல் வாங்கி கொறித்துக் கொண்டிருந்தார்கள். பண வீக்கத்தின் அடையாளமாக உடல் வீங்கிய கனவான்களும் கனவதிகளும் எஸ்கலேட்டர்களை சிரமப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்படி மல்ட்டிப்ளெக்ஸுகளில் பணத்தை அழிப்பவர்கள், ஏழைகளின் கஷ்டம் தெரியாத ஐந்தறிவு படைத்தவர்கள் என்று தீவிரமான கருத்து கொண்டிருந்த நான் எனது ஆறாம் அறிவை துறந்து எஸ்கலேட்டரில் ஏறினேன்.
பிரதமரின் ப்ரெஸ் மீட்டுக்குச் செல்வதை விட அதிகமான பாதுகாப்பு. கொண்டு சென்றிருந்த பையைச் சோதனையிட்டார்கள். லைட்டர், தீப்பெட்டி போன்றவற்றை பறிமுதல் செய்தார்கள். தன் லாபத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பண முதலைகளின் கவலையும், அச்சமும் அந்த சோதனையில் தெரிந்தது. இதை விட அதிகமான பொதுமக்கள் கூடும் கோவில்களில் கூட இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
தியேட்டரில் இரண்டு பேர் அமரக் கூடிய சோபா செட் போன்ற இருக்கை. சாய்ந்து கொள்ள வசதியாக, சொகுசாக இருந்தது. கூட்டம் அவ்வளாக இல்லை.
படம் தொடங்கியதும், தைரியமாக அவள் கையைப் பிடித்தேன். மறுப்பேதும் சொல்லாமல் என் தோளில் சாய்ந்து கொண்டாள். தியேட்டரில் ஆரம்ப சலசலப்புகள் அடங்கியதும் அவள் கன்னத்தில் முத்தமிடச் சென்றபோது செல்போன் அடித்தது. எரிச்சலோடு அதை சுவிட்ச் ஆப் செய்தேன்.
கன்னத்தில் முத்தமிட்டேன். சிணுங்கினாள். மீண்டும் முத்தமிட்டேன். முகத்தைத் திருப்பி இதழில் முத்தமிட்டாள். இடைவேளை திடீரென்று வந்தது போலிருந்தது. அவசரமாக விலகினோம்.
“சாப்பிட எதுவும் வாங்கிக் குடுக்க மாட்டியா… ஒரு மணி நேரமா உறிஞ்சி எடுத்துட்ட…“ என்று சொன்னதும் உறைத்தது. பாப்கார்ன் வாங்கலாம் என்று பார்த்தால், 90 ரூபாய் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சியில் 5 ரூபாய்க்கு பாப்கார்ன் வாங்கி விட்டு, மொத்தக் கண்காட்சியையும் சுற்றி முடித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எவ்வித உறுத்தலுமின்றி, வரிசையில் நின்று வாங்கினார்கள்.
படம் முடிந்ததும், “ஒரு நிமிஷமாவது படம் பாக்க விட்டியா…“ என்று அலுத்துக் கொண்டாள்.
வாங்க என்பது, வா என்று இயல்பாக மாறியிருந்தது. ‘உடல் நெருக்கம் ஒரு ஆணையும் பெண்ணையும் எப்படி இணைத்து விடுகிறது ?’
செல்போனை ஆன் செய்தேன்.
“கால் மி.. அர்ஜென்ட்” என்று எடிட்டர் செய்தி அனுப்பியிருந்தார்.
தொடரும்.
பெண் என்னும் மாயப்பிசாசு என்று யார் சொன்னது ?
இவர்கள் பிசாசேதான். சந்தேகமே இல்லை. ஒரு வினாடி அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டு மேலே நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். மறு வினாடி, உச்சி வானில் ஏற்றி விட்டு, கொஞ்ச நேரம் பறந்து விட்டு வா என்று சிறகு கொடுக்கிறார்கள்…. இவர்கள் மாயப் பிசாசல்லாமல் வேறு என்ன ?’
arumai bro…loved those lines
Started reading velvi now….. your narration is owsome…
Romantic love story brother!
Wow… what a writing 🙂 Always just read your political essays.. and avoid this Velvi series… just today read this 26th velvi. Feel good writing.. now I have to read from the beginning. In your theatre scene .. I felt my first movie experience with my wife after the marriage..
Gopinath L.
Toronto
are you a Kalki Krishnamuthi fan.. probably read and liked ” Ponniyin Selvan”….. I see shades of his writing style in your writing… may be or may not be you are his fan … good keep it up… only a few can write like this…
உங்களுக்குள் இவ்வளவு ரொமான்ஸ் ஆ…
“அதன்(EA) உள்ளே கால் வைத்ததுமே, இந்த உலகம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தும்”
This is feel by every middle class family member.
“அதன்(EA) உள்ளே கால் வைத்ததுமே, இந்த உலகம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தும்”
This is feel by every middle class family member.
editor; “call me urgent!”
me; “post next parts soon, interesting!”
ரசித்தவை ..
==========
ஆறாம் அறிவை துறந்து எஸ்கலேட்டரில் ஏறினேன்.
அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து, உழைப்பின் அருமை தெரியாத செல்வந்தர்களுக்காகவுமே கட்டிய கனவு உலகம்.
ஒரு வினாடியில் பல ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்திற்குள் மின்னல் தோன்றினாலும், அந்த மின்னலின் ஒளி நீண்ட நேரம் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.
yaa. me too….
Super!! Going on very interesting!!
ஒவ்வொரு அத்தியாயத்தையும் பயங்கர சஸ்பென்சோடு முடிக்கிறீர்கள். பிரஷர் ஏறுது பாஸ்.
Wow…அவர்களின் உலகத்தில் இருந்தது போன்ற உணர்வு….செம இன்டெரஸ்டிங்கா இருக்கு…
Yov…ha ha ha…it became more romantic now…
Bro Semma, ungalaukulaium oru 5 Jemini ganeshan, 10 kamal irukar bro. love the naration, hmmmmm peru muuchu thaan vidanum.waitng for வேள்வி – 27.
இவர்கள் பிசாசேதான். சந்தேகமே இல்லை. ஒரு வினாடி அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டு மேலே நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். மறு வினாடி, உச்சி வானில் ஏற்றி விட்டு, கொஞ்ச நேரம் பறந்து விட்டு வா என்று சிறகு கொடுக்கிறார்கள்…. இவர்கள் மாயப் பிசாசல்லாமல் வேறு என்ன ?’ Niceeeee words 👌
அடடடடா! ரொம்ப இன்ட்ரெஸ்டிங் சார். வெல்லிவிழா முடித்து 26 ஆம் பகுதியை நிறைவுசெய்திருக்கும் வேள்வியின் நாயகனுக்கு வாழ்த்துகள்!
நன்றிகள் நன்றிகள்.
Very romantic and realistic!!!
Super…27 epo varum brother
Very nice