அன்பார்ந்த உறவுகளே,
புதிய அரசு பதவியேற்ற உடன் செய்ய வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைப் பற்றி தங்கள் ஆலோசனைகளை வெளியடுங்கள் என்று சவுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அன்பு உறவுகள், தங்கள் நேரத்தை ஒதுக்கி, அற்புதமான ஆலோசனைகளை வழங்கயிருக்கிறார்கள்.
இந்த ஆலோசனைகள், வாசகர்கள், இந்த மாநிலத்தை எப்படி நேசிக்கிறார்கள் என்பதையும், மக்கள் நலனில் எப்படி அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
பின்னூட்டங்களில் நீங்கள் கண்டவாறு, ஜெயலலிதா ஆட்சிக்கு வரவே போவதில்லை, அவசர குடுக்கை போலச் செயல்படுகிறீர்கள் என்ற கண்டனங்களுக்கும் குறைவில்லை.
இந்த ஆலோசனைகளை தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைகளை மூன்று பகுதிகளாக பிரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. உடனடியாக செயல்படுத்தப் படவேண்டியவைகள் (Priority basis) நீண்டகால அடிப்படையில் செயல்படுத்தப் பட வேண்டியவை (Long term basis). இது தவிரவும், நண்பர்கள் சொல்லியி ஆலோசனைகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை சம்பந்தப் பட்ட விவகாரங்களை தனியாக தொகுத்து, செல்வி.ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப் பட்டு வருகின்றன. அடுத்த வாரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
வாசகர்களிடம் சவுக்கு உரிமையோடு அடுத்த கோரிக்கையையும் வைக்கலாம் தானே ?
கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும், செய்திருக்கக் கூடிய ஊழல்கள் கணக்கிலடங்கா. இந்த ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தான் என்றாலும், அவர்களுக்கு உதவ வேண்டியது, சவுக்கு இயக்கம் என்ற அளவில் நமது கடமையல்லவா ?
அதனால், பல்வேறு தொடர்புகளை கொண்ட சவுக்கு வாசகர்களாகிய உங்களின் பங்கேற்பு இல்லாமல், இந்த விசாரணைகள் சிறப்பாக முடிவடையும் என்று சவுக்கு நம்பவில்லை.
முதலமைச்சர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர், திமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் செய்த ஊழல்கள் குறித்து உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பல்வேறு தகவல்கள் தெரிந்திருக்கும்.
அந்தத் தகவல்களை, newsavukku@gmail.com என்ற அதே மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும். தயவு செய்து பின்னூட்டமாக போட வேண்டாம். அந்தத் தகவல்களை அனுப்புபவர்களின் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்கள் ரகசியமாக வைத்திருக்கப் படும். எக்காரணம் கொண்டும் வெளியிடப் பட மாட்டாது.
இவ்வாறு சேகரிக்கப் படும் தகவல்கள், லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக பொறுப்பேற்கும், அதிகாரியிடம், சவுக்கு வாசகர்கள் சார்பாக, நேரடியாக வழங்கப் படும் என்பதை, சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
அடித்து தூள் பண்ணுங்கள் பார்ப்போம்.