தித்திப்பான முத்தங்கள் அதன் சுவையை இழந்தன. ‘ச்சே… என்ன இது இப்படி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டோமே… என்னவாக இருக்கும்…’ உடனே சற்று நெரிசல் இல்லாத இடத்துக்கு வந்து எடிட்டரை அழைத்தேன்.
எங்கப்பா போயிட்ட வெங்கட்… ? போனை ஏன் ஆப் பண்ணி வைக்கிற ?“
“சார் தண்ணில விழுந்துடுச்சு சார்…“ பதட்டமில்லாமல் பொய் வந்தது.
“இப்போ எங்க இருக்க ? “
“ராயப்பேட்டா சார்…”
“ஆபீசுக்கு உடனே வா….“
இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இவளோடு செலவு செய்யலாம் என்று நினைத்திருந்தேன். இவளிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. எப்போதும் இல்லாத நெருக்கம் தோன்றியது போல இருந்தது. இந்த நேரத்தில் போய் ஏன் இப்படி… ? ச்சை… சற்று நேரம் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே.. இனிப்பின் சுவை அடங்குவதற்குள் கசப்பு ஊறுகிறதே !!
“வசந்தி. அர்ஜென்டா ஆபீஸ் போகணும். உன்னை…. உங்களை எங்க ட்ராப் பண்ணணும் ?“
“சும்மா வா போன்னே பேசு… இவ்ளோ ஆயிட்ட பிறகு மரியாதை குடுக்கற மாதிரி எதுக்கு இன்னும் சீன் போட்டுக்கிட்டு இருக்கற ?“ என்று சொல்லி விட்டு கிண்டலாகப் பார்த்தாள்.
“இல்ல எங்க ட்ராப் பண்ணட்டும்.. ? “
“அர்ஜென்டுனா போயிட்டு வா. எங்கயும் ட்ராப் பண்ண வேணாம். நான் பஸ் புடிச்சு போயிக்கறேன். இன்னும் நெறய்ய டைம் இருக்கு.. “ என்றாள்.
அவளை ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் இறக்கி விட்டு கிளம்பினேன். அலுவலகம் சென்றதும் நேராக எடிட்டர் அறைக்குச் சென்றேன்.
“எங்கப்பா போன ? ஒரு அவசரத்துக்கு கான்டாக்ட் பண்ண முடியலையே“ என்று எரிச்சலாகக் கேட்டார்.
“இல்ல சார்.. ஒரு சோர்ஸை பாக்க வேண்டியிருந்தது… அதான்…“
“சரி அத விடு… கமிஷன்ல என்ன நடந்துச்சு… ? “
நீதிபதி வேலாயுதம் கமிஷனில் ராஜராஜனோடு ஆஜராகியது முதல், அவரோடு நடந்த வாக்குவாதம், என் கண்ணீர் உட்பட அனைத்தையும் சொல்லி முடித்தேன்.
“என்னப்பா இப்படிப் பண்ணியிருக்க… ? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல ?“
“சார் .. நீங்க போன வாரம் பூரா டெல்லியில இருந்தீங்க சார்….“
“ஏம்ப்பா… ஒரு போன் பண்ணிருக்கலாம்ல…. போன் சேஃப் இல்லன்னா மெயில் போட்டுருக்கலாமே…“
மெயில் அனுப்பியிருக்கலாம்தான். வசந்திக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதில்தானே என் கவனம் முழுக்க இருந்தது.. இவரிடம் நடந்தவற்றை உடனடியாக சொல்லாமல் விட்டது எனக்கே எரிச்சலாக இருந்தது.
“என்ன சார் பண்ணச் சொல்றீங்க என்ன ? என்னை ஹ்யுமிலியேட் (humiliate) பண்ணணும்னே வரச்சொல்லி இந்த மாதிரி கேள்வி கேட்டாங்க சார்.. நான் அமைதியா பதில் சொல்லியிருந்தா மட்டும் விட்டுடுவாங்களா சார் ? என் மேல தப்பு இல்லன்னா சார் சொல்லப் போறாங்க… ?“
“எனக்குப் புரியுது வெங்கட். பட். இப்போ நமக்குத்தானே தொந்தரவு அதிகமாகுது… ? உன் மேல சிபிஐ போட்ட கேஸை அவனுங்க அல்மோஸ்ட் மறந்திருந்தாங்க. வர்ற வாரம் சார்ஜ் ஷீட் போட்றதா சொல்றாங்க. சார்ஜ் ஷீட் போட்டுட்டா அடிக்கடி கோர்டுக்கு போக வேண்டி வரும். உன் வேலை கெட்டுப் போயிடும் வெங்கட். நீ வேலாயுதம் கிட்ட சண்டை போடாம இருந்துருந்தா இவ்ளோ சீக்கிரம் சார்ஜ் ஷீட் போட்ருப்பாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு..“
“சார். அவங்க பவர்ஃபுல்லான ஆளுங்க. சண்டை போட்டாலும் போடாட்டாலும், அவனுங்க பண்றத பண்ணிக்கிட்டுத்தான் இருக்கப்போறாங்க. அவங்க மெரட்டலுக்கு நான் பயந்து பணிஞ்சு போயிட்றதனால ஒண்ணும் நடக்கப் போறதில்ல. இன்னைக்கு இல்லன்னா ஆறு மாசம் கழிச்சு சார்ஜ் ஷீட் போட்ருப்பாங்க சார். இந்த கேஸ்ல மேல் நடவடிக்கை தேவையில்லைன்னு ரிப்போர்ட் குடுப்பாங்கன்னா நம்பறீங்க ? அவங்க இந்த விஷயத்தை விட்டுடுவாங்கன்னு நான் நெனைக்கல சார். “
“நீ சொல்றதும் கரெக்ட்தாம்பா… பட் ஐ யம் வொர்ரீட் (worried) வெங்கட். நல்ல ஜர்னலிஸ்டா நீ வரணும். அதான் என் ஆசை. நல்ல ஜர்னலிஸ்டை பாக்கறது இப்போல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஜர்னலிஸ்ட்ன்ற பேர்ல காலேஜ்ல சீட் வாங்கறது, ஹவுசிங் போர்ட் அலாட்மென்ட் வாங்கறது, பொலிட்டிக்கல் ப்ரோக்கர் வேலை பண்றதுன்னு பத்திரிக்கைத் துறையில நல்ல ஆளுங்கள விட புல்லுருவிகள் அதிகமாயிட்டாங்க வெங்கட். நான் உன்ன நல்லா ட்ரெயின் பண்ணி, நல்ல ஜர்னலிஸ்டா உருவாக்கணும்னு ஆசைப்பட்றேன். பட் உன்னை நாசம் பண்ணிடுவாங்களோன்னு கவலையா இருக்கு. யு ஹேவ் டு வின்.(you have to win)”
“சார். துணிஞ்சு இறங்கியாச்சு சார். சமாளிக்கலாம். எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பட் கவலையா இல்ல. சமாளிச்சு ஜெயிச்சு வருவேன்னு நம்பிக்கை இருக்கு சார். “
“ஆல்ரைட் வெங்கட். நீயே இவ்ளோ தைரியமா இருக்கும்போது, நான் எதுக்கு பயப்படனும். சமாளிக்கலாம் விடு. ராஜராஜன் ட்ரையல் நடத்த மாட்டாரு. பட் அவரைப் போயிப் பாரு. யாரையாவது ரெஃபர் பண்ணுவாரு. ட்ரையல் நடத்தறதுக்கு நல்ல லாயரா என்கேஜ் பண்ணிடலாம். எதைப் பத்தியும் கவலைப்படாத வெங்கட்.”
“கண்டிப்பா சார். நாம ஜெயிச்சு காட்டணும் சார். பின்வாங்கக் கூடாது. பயப்படக் கூடாது. சிங்காரவேலு 1200 கோடி ரூபா மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவன் சார். இன்னும் பல நூறு கோடியை கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கறவன். அவனுக்கு தன் பதவியைக் காப்பாத்தணும், பணத்தைக் காப்பாத்தணும், அரசியல் வாழ்க்கையை காப்பாத்தணும், அவன் குடும்பத்தைக் காப்பாத்தணும். அதனால அவன் எந்த எல்லைக்கும் போவான் சார். ஆனா நம்ப கண்ணு முன்னாடி நடக்கற அநியாயத்தப் பாத்து மனசு பொறுக்க முடியாமதானே சார் இந்த வேலையே செய்யறோம்.. நாம சோந்து போனாலோ, பயந்தாலோ, சிங்காரவேலு ஜெயிச்சுடுவான். அதுக்கு நாம இடம் குடுக்கக் கூடாது சார்.. “
“யூ ஆர் ரைட் வெங்கட்… சம் டைம்ஸ் யு இன்ஸ்பையர் மி யங் மேன். (Some times you inspire me young man) நீ போயி வேலையப் பாரு.. பாத்துக்கலாம். “
எடிட்டரிடம் வீர வசனம் பேசி விட்டு வந்தாலும் மனசுக்குள் கவலையும் மலைப்பும் இருக்கத்தான் செய்தது. எப்படி சமாளிப்பது எப்போது இந்தத் தொல்லைகள் ஓயும் என்ற மலைப்பு. வசந்தியைப் பார்ப்பது தடை படுமோ என்ற கவலையும் இருந்தது. வசந்தியோடு இவ்வளவு நெருக்கம் ஏற்படாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த லேசான பலவீனம் கூட வந்திருக்காது. உறவுகளும் குடும்பங்களும்தான், எத்தனை பலமான சங்கிலிகளாக மனிதனை இழுத்துக் கட்டிப் போடுகின்றன ?
வழக்கில் தண்டனை கிடைத்தால் ஜெயிலுக்குப் போய் விடுவோம் என்ற கவலையை விட, வசந்தியைப் பார்க்க முடியாதே என்ற கவலையே பெரிதாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இதைப் பற்றி யோசித்திருந்தால் எந்தக் கவலையும் இல்லாமல் நான் ஜெயிலுக்குப் போயிருப்பேனோ !!!
எடிட்டர் சொன்னது போலவே இரண்டு நாட்களில் கோர்ட்டிலிருந்து சம்மன் வந்தது. சம்மன் வந்ததும் எடுத்துக் கொண்டு ராஜராஜனை சந்திக்கச் சென்றேன். அவர் முருகவேல் என்ற வழக்கறிஞரிடம் அனுப்பி வைத்தார். அவர் வழக்கை முழுவதுமாக நடத்துவதற்கு ஒரு லட்ச ரூபாய் கேட்டார்.
‘ஒரு லட்ச ரூபாய்க்கு எங்கே போவது…’ எடிட்டரிடம் விபரத்தைச் சொன்னேன்.
“நான் ராஜராஜன் கிட்ட பேசி ஏதாவது குறைக்க முடியுமான்னு பாக்கறேன். நீ உன்னால எவ்வளோ அரேன்ஞ் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணு. நான் மீதியை ஏற்பாடு பண்றேன்“ என்றார்.
எனது வங்கியில் 10 ஆயிரம் இருந்தது. அம்மாவிடம் என்ன ஏது என்ற விபரம் சொல்லாமல், பணம் கேட்டேன். அவள் தன்னிடம் 50 ஆயிரம் இருப்பதாக மறுநாள் வங்கியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
அதற்குள் எடிட்டர் போன் செய்து, முருகவேலை மீண்டும் சென்று பார்க்கச் சொன்னார். முருகவேல் அவர் ஃபீசை 50 ஆயிரமாக குறைத்துக் கொண்டார்.
“உங்களைப் பத்தி ராஜராஜன் இப்போதான் விளக்கமா சொன்னார். நான் எல்லா க்ளையன்டும் மாதிரின்னு நெனச்சு ரெகுலர் ஃபீஸ் சொல்லிட்டேன்.“
“பரவாயில்லை சார். நாளைக்கு குடுத்துட்றேன் சார்.“
“தட்ஸ் ஓ.கே… நாளைக்கே குடுங்க.. நாளைக்கு ஃபர்ஸ்ட் சம்மன். உங்களுக்கு சார்ஜ் ஷீட் காப்பி குடுப்பாங்க. அதை வாங்கிட்டு ஆபீஸ்ல குடுத்துடுங்க. நான் சார்ஜ் ஷீட் படிச்சுப் பாத்துட்டு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்றேன். டோன்ட் ஒர்ரி. ராஜராஜன் சார் உங்களைப் பத்தி நெறைய்ய சொல்லியிருக்காரு. தைரியமா இருங்க.“
“தேங்ஸ் சார்.. “
“நாளைக்கு கோர்ட்ல ஒண்ணும் மேஜரா இருக்காது. ஜுனியரை அனுப்பறேன். போயிட்டு வாங்க.“
மறுநாள் எழும்பூர் நீதிமன்றம். பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. எங்கே பார்த்தாலும் கருப்புக் கோட்டணிந்த வழக்கறிஞர்கள் பரபரபப்பாக ஓடிக்கொண்டு இருந்தார்கள். என்னுடைய நீதிமன்றம் எங்கே இருக்கிறது என்பதை விசாரித்து சென்றேன். சிறிது நேரத்தில் முருகவேலின் ஜுனியர் அழைத்தார். எங்கே இருக்கிறேன் என்பதைக் கேட்டுக் கொண்டு நேரடியாக வந்தார்.
“இந்த இடத்திலயே இருங்க. உங்க பேரக் கூப்புடுவாங்க. அப்ப வந்து நிக்கணும். அப்பாப் பேரைக் கேப்பாங்க. வக்கீல் வச்சுக்க வசதி இருக்கான்னு கேப்பாங்க. இருக்குன்னு சொல்லுங்க. உங்க கேசை சிபிஐ கோர்டுக்கு மாத்தறேன்னு சொல்லுவாங்க. அடுத்து என்னைக்கு வரணும்னு சொல்லுவாங்க. எங்கயும் போயிடாதீங்க. கூப்புடும்போது இங்கயே இருங்க. “ என்றார்.
அவர் இருக்கச் சொன்ன இடத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். என்னைப் போலவே வழக்குக்காக வந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு பெண் கவலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பெரும்பாலும் சாதாரண விளிம்பு நிலை மனிதர்களாக இருந்தார்கள். தங்களுக்குள் அரட்டை அடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி வந்து அமர்ந்தார். பெண் நீதிபதி. வெளியில் இருந்த கூட்டத்தால், என் பெயரை அழைப்பது கேட்குமா கேட்காதா என்று சந்தேகமாக இருந்தது. அதனால் இன்னும் நெருக்கமாக சென்று நின்று கொண்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து “சிபிஐ கேசஸ்.. வெங்கட்.. “ என்று என் பெயர் உரக்க அழைக்கப்பட்டது.
ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் நின்ற கைதிகளுக்கான கூண்டில் சென்று நின்றேன்.
“பேரச் சொல்லுங்க. அப்பாப் பேரச் சொல்லுங்க.. வக்கீல் வச்சுக்க வசதி இருக்கா.. உங்க கேஸை செசன்ஸ் கோர்டுக்கு மாத்திருக்கு. அடுத்த மாசம் பத்தாம் தேதி ஆஜராகணும். காப்பி வாங்கிட்டு கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க“ என்று பதிவு செய்திருந்த ஒலிநாடாப் போல பேசினார் நீதிபதி.
இருநூறு பக்கங்கள் கொண்ட ஸ்பைரல் பைண்டிங் செய்த ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டு விட்டு, அதை வாங்கி வழக்கறிஞரிடம் கொடுத்து விட்டு, அலுவலகம் சென்றேன். சிஸ்டத்தை உயிரூட்டி மெயில்களைப் பார்த்தேன்.
ஃபேஸ் புக்கை லாக் செய்தேன். வசந்தி ஆன்லைனில் இருந்தாள்..
“ஹாய்“ என்று மெசேஜ் அனுப்பினேன்.
“நான் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்..“ என்றாள்.
“நானும்“ என்று பதில் அனுப்பினேன்.
நான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும் என்றாலும், அவளும் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றதும் சந்தோஷமாக இருந்தது.
“ஈவ்னிங் ஷாப்பிங் போலாமா ?“
‘வேறு என்ன பதில் சொல்வேன் சரி என்பதைத் தவிர ?’
எங்கே போகலாம் என்றதும் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்றாள். ‘இவளுக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூவைத் தவிர வேறு எதுவுமே தெரியாதா ?‘ என்று யோசித்துக் கொண்டே போகலாம் என்றேன்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ தாண்டி சென்று கொண்டிருந்ததும் என்னை உலுக்கினாள்.
“எங்க போற வெங்கட்… “ என்றாள். போன வாட்டி சினிமா பாத்துட்டு வரும்போது பார்க்கிங் 100 ரூபா ஆச்சு. இன்னைக்கு நெறய்ய டைம் இருக்கு. வண்டியை அங்க நிறுத்திட்டு நடந்து வரலாம் என்றேன்.
“என் மாமா சமத்து…“ என்றாள்.
மாமா என்று அழைத்தது வித்தியாசமாக இருந்தது. குதூகலத்தை ஏற்படுத்தியது. வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த லேன்ட்மார்க் சென்றோம். நேராக நான் புத்தகப் பகுதிக்கு சென்றேன்.
“எங்க போற.. நான் ஃப்ரென்டுக்கு கிப்ட் வாங்கணும்“ என்றாள்.
“புக் கிப்ட் குடுக்கலாமே… ? “
“அவ புக்கெல்லாம் படிக்க மாட்டா…“ என்பதை ஏதோ பெருமையான தகுதி போல சொன்னாள்.
“சரி என்ன வாங்கலாம்… சொல்லு.. “
“டெட்டி பேர் வாங்கலாம்… அவளுக்கு ரொம்ப புடிக்கும். எனக்கும் புடிக்கும். வா அங்க போலாம்“ என்று பொம்மைகள் வைத்திருந்த பகுதியை நோக்கி துள்ளிக் கொண்டு ஓடினாள்…
குழந்தைகளாக இருக்கும் ஆண் பிள்ளைகள், ஒரு வயதுக்குப் பிறகு பொம்மைகளை வைத்து விளையாடுவதில்லை. அப்படி பொம்மைகளை வைத்து விளையாடும் வளர்ந்த பிள்ளைகளுக்கு அறிவு வளர்ச்சி குறைவோ என்ற சந்தேகத்தோடே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் பெண்கள் எத்தனை வயதானாலும் டெட்டி பேர் வைத்துக் கொள்வது ஏன் ஒரு முரணாகத் தோன்றுவதேயில்லை ?
300 ரூபாய் விலையில் ஒரு டெட்டி பேர் பொம்மையை எடுத்து இது நல்லா இருக்கா என்று கேட்டாள். எல்லா பொம்மைகளும் அழகாகத்தான் இருந்தன. அவள் எடுத்ததை விட, ரோஸ் நிறத்தில் ஒரு பொம்மை இன்னும் அழகாக இருந்தது.
நான் அந்த ரோஸ் நிற பொம்மையைக் கையில் எடுத்தேன்.
“இதான் நல்லா இருக்குன்னு சொன்னியே… அப்புறம் அது எதுக்கு ?“
“இது உனக்கு”
கண்கள் விரியச் சந்தோஷப்பட்டாள். ‘பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்… ?’
காதருகே வந்து, ”தனியா இருந்துருந்தா உனக்கு ஆயிரம் முத்தம் குடுத்துருப்பேன் மாமா…. யு ஆர் சோ ஸ்வீட்.. ” என்றாள்.
”இன்னொரு டெட்டி பேர் எடுத்துட்டு வரவா ?”
”டெட்டி பேரே வேணாம் மாமா… உனக்கு எவ்வளவு முத்தம் வேணாலும் தர்றேன்…”
‘அந்த கணத்தில் அவளுக்காக உயிரை விடலாம் என்று தோன்றியது.’
இரண்டு பொம்மைகளுக்கும் சேர்த்து, க்ரெடிட் கார்டில் பணம் கொடுத்து விட்டு கிளம்பினோம்.
ஹாஸ்டலில் சென்று இறக்கி விட்டதும், அவள் டெட்டி பேரை எடுத்த ஒரு முறை பார்த்துக் கொண்டாள். முத்தம் கொடுத்தாள்.
”பொம்மைக்கு மட்டும்தானா ?…”
”உனக்கும் தர்றேன்டா… இந்த வாரம் சினிமாவுக்குப் போலாமா ?”
”சனிக்கிழமை வேலை இருக்குமா இல்லையான்னு தெரியலையே.. ”
”காலையில ஒம்போது மணிக்கேவா உனக்கு வேலை வந்துடும்.. காலையில ஒம்போது மணி ஷோவுக்கு பண்ணு..”
”ஒம்போது மணிக்கு எங்க படம் போட்றாங்க….”
”இடியட்… எல்லா சாட்டர்டே சண்டேவும் எல்லா மல்டிப்ளெக்ஸ்லயும் ஒம்போது மணிக்கு ஷோ இருக்கு. பதினோரு மணிக்கெல்லாம் முடிஞ்சுடும். அப்புறம் போயி நீ உன் வேலையைப் பாரு”
ஏதோ ஒரு தெலுங்குப் படம் காலை ஒன்பது மணிக்கு இருந்தது. அவளைக் கேட்காமலேயே ரிசர்வ் செய்தேன்.
சனிக்கிழமை படம் முடிந்து வெளியே வரும்போது மறுநாள் ஞாயிற்றுக் கிழமைக்கும் டிக்கட் புக் செய்யச் சொன்னாள்.
நான்கு வாரங்கள் கடந்திருந்தன. அந்த நான்கு வாரங்களில் அவள் என் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப்போயிருந்தாள். தினந்தோறும் காபி ஷாப். ஒரு நாளைக்கு கணக்கில்லாத எஸ்எம்எஸ்கள். ஒரு நாள் கூட சந்திக்காமல் இருந்தால், காற்றில் ஆக்சிஜன் குறைந்தது போல இருந்தது.
அந்த ஞாயிற்றுக் கிழமையும் அப்படித்தான் காலை ஒன்பது மணிக்கு இந்தி படத்தில் உட்கார்ந்திருந்தோம். படம் இன்னும் தொடங்கவில்லை.
”இப்படியே எவ்வளவு நாள் படம் பாத்துட்டு ஊரை சுத்தறது வெங்கட்… வீட்ல வேற மதுரைக்கு கௌம்பி வா வான்னு தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சீனியர் ஒரு வருஷம் போகட்டும்னு சொல்றாருன்னு சொன்னேன். உங்க சீனியர் கிட்ட நான் பேசறேன்றாரு எங்க அப்பா.. ”
”நம்ப மேட்டரைப் பத்தி சொல்லு உங்க வீட்ல…..”
”பயமா இருக்கு வெங்கட்.. உன் மேல கேஸ் பென்டிங்ன்றது தெரிஞ்சா ஒத்துக்க மாட்டாங்க வெங்கட். ”
”உங்க அப்பாவும் வக்கீல்தானே… கேஸ் இருக்கறவன்லாம் கெட்டவன்னா உங்க அப்பா எதுக்கு கெட்டவனுக்கு கேஸ் நடத்தறாரு… ? உனக்குத் தெரியாதா என் மேல இருக்கற கேஸ் பத்தி ? எக்ஸ்ப்ளெயின் பண்ணு..”
”என்னை மட்டும் கேள்வி கேக்கறியே… நீ சொல்லிட்டியா உங்க அம்மாக்கிட்ட… ?”
”ஒரு நாள் உன்னை நேரா கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். ஐ திங்க் ஷி வில் லைக் யு.. (I think she will like you)”
”உங்க அம்மாவப் பாக்கறதுக்கு இந்த ட்ரெஸ் ஓகேவா.. இல்ல சுடிதார் போட்டு, பூவெல்லாம் வச்சுக்கிட்டு வரவா ? ”
”ஏன் இந்த ட்ரெஸ்ஸூக்கு என்ன… நல்லாத்தானே இருக்கு.. யு லுக் செக்ஸி.. ”
”ச்சே… அம்மாவை மொத மொதப் பாக்கும்போது இப்டியா போறது.. என்ன நெனைப்பாங்க…”
”இன்னைக்கா போகப்போறோம்.. அம்மா ஊருக்குப் போயிருக்காங்க. புதன் கிழமைதான் வர்றாங்க.. சோ இன்னொரு நாள்.. ”
”இங்கேர்ந்து உங்க வீடு எவ்ளோ தூரம்…” ரொம்ப இயல்பாக கேட்டாள்.
”இங்கேர்ந்து ஒரு பத்து கிலோ மீட்டர் இருக்கும். ”
”போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்…”
”ட்ராஃபிக் இல்லன்னா ஹாஃப் அன் அவர் ஆகும். ட்ராஃபிக்னா ஒன் அவர் ஆகும்.”
”மாமாங்கற செல்லப் பேரை விட ட்யூப் லைட்தான் உனக்கு சரியான பேர் ”
ட்யூப் லைட்தான் நான்.. அவள் எதற்காக இவ்வளவு கேள்விகள் கேட்கிறாள் உறைக்கவேயில்லையே என்று யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே டக்கென்று ஐடியா பல்ப் உள்ளே எரிந்தது. இதுக்கு தான் இவ்வளவு கேள்விகளா ? சற்றும் யோசிக்காமல் அவளிடம் கேட்டு விட்டேன்..
”வீட்டுக்கு வேணா போயி…... ……..….. பேசிக்கிட்டு இருக்கலாமா ?”
கேட்டு முடித்தவுடன் என் இதயத்துடிப்பு தாறுமாறாக அடிப்பதை உணர முடிந்தது.
தொடரும்..
may be vasanthi is also planted by singaravelu
வீட்டுக்கு வேணா போயி…… ……..….. பேசிக்கிட்டு இருக்கலாமா ?”
“குழந்தைகளாக இருக்கும் ஆண் பிள்ளைகள், ஒரு வயதுக்குப் பிறகு பொம்மைகளை வைத்து விளையாடுவதில்லை. அப்படி பொம்மைகளை வைத்து விளையாடும் வளர்ந்த பிள்ளைகளுக்கு அறிவு வளர்ச்சி குறைவோ என்ற சந்தேகத்தோடே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் பெண்கள் எத்தனை வயதானாலும் டெட்டி பேர் வைத்துக் கொள்வது ஏன் ஒரு முரணாகத் தோன்றுவதேயில்லை ?” super lines sir! wonderful analyse
Kalakuringa Bro. Semmmmmmmmma. you made me think to love someone again. good narration.