இதயம் வேகமாகத் துடித்தது. அந்தத் தியேட்டரின் குளிரையும் மீறி வேர்ப்பது போலிருந்தது. அவள் பதில் சொல்லாமல் தயங்கிய அந்த ஒவ்வொரு நொடியும் மூச்சுத் திணறல் ஏற்படுவது போலிருந்தது.
‘அவசரப்பட்டு விட்டோமோ ? அவள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையோ.. இத்தோடு நம்மிடம் பேசுவதை நிறுத்தி விடுவாளோ..’ என்று பல்வேறு எண்ணங்கள் படபடப்பாக கடந்தன.
“ம்.. போலாம்….” என்று அவள் சொல்லிய போது உற்சாகம் ஏற்படுவதற்கு பதிலாக அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது. அவள் சொன்ன பதிலின் தாக்கம் சற்று தாமதமாக உறைத்தது.
”இப்போவே போலாமா ? ” என்றேன்.
”ம்” என்று மட்டும் பதில் சொன்னாள். பதற்றம் வந்தது போலிருந்தது. உடனே எழுந்திருப்பதா … இல்லை படம் ஆரம்பித்ததும் கிளம்பலாமா.. சட்டென்று எழுந்தேன். அவளும் எழுந்தாள்.
தியேட்டரில் படம் தொடங்குவதற்காக காத்திருந்தவர்கள், ஏதோ எமர்ஜென்ஸி போலிருக்கிறது என்று நாற்காலியில் இருந்து பின்னால் நகர்ந்து அவசரமாக வழி விட்டார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், வண்டியை ரொம்ப தூரத்தில் நிறுத்தியிருப்பது நினைவுக்கு வந்தது. ‘ச்சே… பார்க்கிங்குக்கு ஒரு நூறு ரூபாய் கேட்பான்.. இதற்குப் போய் கஞ்சத்தனம் பார்த்துக் கொண்டு…. என்று என் மீதே அலுப்பாக இருந்தது. சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் பிடித்தால் திட்டுவாள். பேசமாட்டாள். அதுவும் வீட்டுக்குப் போகும் இந்த நேரத்தில் சிகரெட் பிடித்தால் அவ்வளவுதான்.’
இருவரும் எதுவும் பேசாமல் நடந்தோம். ஏதாவது பேசி நிலைமையை இயல்பாக்க வேண்டுமென்று முயற்சி செய்தால் என்ன பேசுவதென்று எதுவுமே பேசுவதற்கு இல்லாதது போலிருந்தது.
அவசர அவசரமாக நடந்து வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றோம். ஏதாவது பேச வேண்டும் என்று முயற்சி செய்தேன். எதுவுமே பேசத் தோன்றவில்லை. கண்ணாடி வழியாக அவள் முகத்தைப் பார்த்தேன். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “வசந்தி… “ என்று அழைத்தேன். “ம்“ என்றாள். “சாப்பிட வீட்ல எதுவும் இருக்காது. உனக்கு சாப்ட ஏதாவது வாங்கிக்கலாமா ?“
“ம்“ என்றாள். “என்ன வேணும் ?“
“பிஸ்கட் வாங்கு.. “
நல்ல பேக்கரியாகப் பார்த்து வண்டியை நிறுத்தி என்ன பிஸ்கட் வேண்டும் என்று கேட்டேன். லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கிக் கொண்டாள். இந்தப் பெண்கள், சாப்பிடும் விஷயத்தில் கூட நளினமாகத்தான் இருக்கிறார்கள். காபியில் இதயம் வரைந்தால் ரசிக்கிறார்கள். இதய வடிவில் அமைந்துள்ள பிஸ்கட்டை விரும்புகிறார்கள்.
வண்டி வீட்டை நெருங்க நெருங்க பக்கத்து வீட்டில் யாராவது இருப்பார்களோ என்ற பயம் வந்தது. டக்கென்று அவளும் கேட்டாள்.
“உங்க பக்கத்து வீட்டுல யாராவது இருப்பாங்களா வெங்கட் ?“
“அதெல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க“
உள்ளுக்குள் யாரும் இருக்கக் கூடாதே என்று இருந்தது. இன்று சனிக்கிழமை. காலை 10 மணிக்கு வீட்டை அடைந்தால் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அப்போதுதான் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு, வீட்டுக்குள் வேலையாக இருப்பார்கள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டடேன்.
வண்டியை நிறுத்திய உடனேயே வசந்தியிடம், நான் முன்னால் போனதும், என் பின்னாலேயே வேகமாக வர வேண்டும் என்று. வேக வேகமாக இரண்டாவது மாடியை அடைந்தோம்.
அன்றெக்கென்று பார்த்து, சொல்லி வைத்தார்ப் போல, ,இரண்டு பெண்கள் வாசலிலேயே உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்…. அவசர அவசரமாக பூட்டைத் திறந்து உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழ் போட்டேன். சோஃபாவில் அமர்ந்தாள்.
“வா உள்ளே வந்து வீட்டைப் பாரு.” என்று அழைத்தேன்.
“கொஞ்சம் இரு. படபடப்பா இருக்கு… தண்ணி குடு..” என்றாள்.
ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்தேன். எழுந்து உள்ளே வந்தாள். ஒவ்வொரு அறையாக காண்பித்தேன்.
“இதுதான் உன் ரூமா… ?“
“ம்ம். “ எனக்கு இருந்தது போலவே அவளுக்கும் பதற்றம் இருந்ததை உணர முடிந்தது. ஐந்து நிமிடம் தொடர்ந்தாற்போல இடைவெளி விடாமல் சிரித்துக் கொண்டிருப்பவள், இன்டர்வ்யூவுக்குப் போவது போல சீரியசாக இருந்தாள்.
‘இப்படியே பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதானா… ? திரையரங்கில் இருட்டில் இருந்த தைரியம் இப்போது வர மாட்டேன்கிறதே…’ ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, லேப்டாப்பை ஆன் பண்ணட்டா ? “ஃபேஸ் புக் பாக்கனுமா ? “ என்று கேட்டு விட்டு, அவள் பதிலுக்குக் காத்திராமல், லேப்டாப்பை ஆன் செய்தேன். நான் லேப்டாப்பை ஆன் செய்து கொண்டிருக்கும் போதே, என்னை பின்புறமாக வந்து கட்டி அணைத்து, காதருகே வந்து “நீ இருக்கும்போது ஃபேஸ் புக் எதுக்கு மாமா ? “ என்று கிசுகிசுத்தாள்.
திடீரென்று என்னுள் புகுந்த வெறி என்னை ஆட்கொண்டது. அடுத்த வினாடியே அவளைக் கட்டியணைத்து படுக்கையில் சாய்த்தேன். என்னால் ஆட்கொள்ளப்படக் காத்திருந்தவள் போல நெகிழ்ந்தாள். வாசனையாக இருந்தாள். அவள் வாசனை என்னை வெறி கொள்ளச் செய்தது. வெறியோடு அவளை அள்ளினேன். அள்ள அள்ள அணுக்கமானாள். மூர்க்கமாக முத்தமிட்டேன். மூர்க்கத்தை முறியடித்தாள். நுகர்ந்தேன். மலரானாள். பருகினேன். அமுதமானாள். படர்ந்தேன். பரவினாள். மோசமான பட்ஜெட்டைப் பார்த்த பங்குச் சந்தை போல என் முத்தங்கள் சரிந்தன. குடகுக் காவிரியாய் பொங்கினாள். “வெங்கட்…..” என்று கத்தினாள். அவள் வாயைப் பொத்தினேன். ஏகாந்தவெளியில் சஞ்சரிக்கும் போது கூட, பக்கத்து வீட்டுக்கு தெரிந்து விடப்போகிறதே என்ற கவலையைத் தவிர்க்க முடியவில்லை.
வியர்வையை துடைத்து விட்டுப் படுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். இதைத்தான் சொன்னானா பாரதி, ‘காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம், கலவியினால் மானுடர்க்கு கவலை தீரும் என்று… ?’ புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் கிடைத்தது போலிருந்தது. மனம் சலசலப்பு இல்லாமல் அமைதியாக இருப்பது போலிருந்தது. ‘இப்போது சிங்காரவேலு பற்றிய ஆவணம் கிடைத்திருந்தால் இதை விட்டு விட்டு அதை வெளியிடும் வேலையைச் செய்திருப்பேனா’ என்று தோன்றியது.. சிங்காரவேலுவாவது புடலங்காயாவது… இந்த நேரத்தில் அவன் எண்ணம் எதற்கு…
“வெங்கட்….“
“ம்“
“நாம எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கலாம் வெங்கட்…“
“பண்ணிக்கலாம்.. “
“என்ன நீ… சலிச்சுக்கிட்டு பதில் சொல்ற…“
“பண்ணிக்கலாம்மா.. கண்டிப்பா பண்ணிக்கலாம். “
“எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க வெங்கட். “
“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் வசந்தி. உனக்கு வேற கல்யாணம் பண்ண ட்ரை பண்ணாங்கன்னா, ஹேபியஸ் கார்ப்பஸ் போட்டுட்றேன். என் பொண்டாட்டிய கடத்தி வெச்சுருக்காங்கன்னு… உங்க அப்பன் அலறிடுவான்.. “
“லூசு மாதிரி பேசாத வெங்கட்.. என்னால அப்படியெல்லாம் பண்ண முடியாது. எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. ஏதாவது ஆச்சுன்னா அவங்க செத்துப் போயிடுவாங்க…“
‘இந்தப் பெண்களை என்னதான் செய்வது.. ? என்னைக் காதலித்து விட்டு, நான் அவளுக்கு வேண்டுமென்றும் சொல்கிறாள். அப்பா அம்மாவும் முக்கியம் என்று சொல்கிறாள். அப்பா அம்மா செத்துப் போனால் பரவாயில்லை என்றா சொல்ல முடியும் ?’
பதிலேதும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக இருந்தேன்.
“சொல்லு வெங்கட். கம்முனு இருக்க.. “
“நாளைக்கேவா உனக்கு கல்யாணம் ஆகப்போகுது… ஆகும்போது பாத்துக்கலாம்.. “
உடனே எங்கேயோ அவளை விட்டு விட்டுப் போய் விடுவது போல, என்னை மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“இன்னைக்கு நைட் இங்கயே தங்கிடேன் வசந்தி… ஹாஸ்டல்ல சொன்னா போதுமா… லெட்டர் எழுதிக் கொடுக்கணுமா ? “
“அய்யய்யோ… நான் தங்க மாட்டேம்பா… என்னை ஒரு வழிப் பண்ணிடுவ… நாளைக்கு எனக்கு நெறய்ய வேலை இருக்கு.“
மதியம் சமைத்தாள். பறிமாறினாள். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல ஊட்டி விட்டாள். மனதுக்குப் பிடித்தவனை குழந்தையாகவே பார்க்கிறார்கள் பெண்கள். அவனைத் தாலாட்டுகிறார்கள். தாங்குகிறார்கள். அவன் மீது அன்பைப் பொழிகிறார்கள். பாசத்தால் திக்குமுக்காட வைக்கிறார்கள்.
மாலை அவள் கிளம்பும் நேரம் வந்ததும், வசந்தி.. டைம் ஆச்சு.. கௌம்பு என்றேன்..
“தங்க சொன்ன… இப்போ போ ன்னு சொல்ற…. நான் உனக்கு போர் அடிச்சுட்டேன்.. இல்ல ?“
“என்னம்மா… நீதானே தங்க முடியாது போகணும்னு சொன்ன. நீ சொன்னதும், தங்குனா ஹாஸ்டல்ல ஏதாவது ப்ராப்ளம்னு நெனச்சுட்டேன்.“
“நான் சொன்னா.. உடனே சரின்னுடுவியா… அப்போ உனக்கு நான் போனாப் போதும்.. “ என்று சொல்லி விட்டு சிரித்தாள். என்னை திணற வைப்பதில் அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு.
“என்ன வசந்தி இப்டி பண்ற ? நான்தானே உன்னைத் தங்குன்னே சொன்னேன்..“
“சரி சரி… அழாத செல்லம்… நீ தங்குன்னு சொன்னதுமே, நான் லோக்கல் கார்டியன் வீட்ல தங்கிக்கறேன்னு மெசேஜ் அனுப்பிட்டேன். உண்மையிலேயே நான் தங்கணும்னு ஆசைப்பட்டியா.. இல்லை சும்மா சொன்னியான்னு டெஸ்ட் பண்ணேன்.“
“உனக்கு என்னை இப்படி வம்பு பண்றதுல என்னடி சந்தோஷம்..? “
உடல் நெருக்கம் இயல்பாக டி விகுதியை பயன்படுத்தும் உரிமையை அளித்திருந்ததை தாமதமாகத்தான் உணர்ந்தேன்.
“இதுலதான் எனக்கு சந்தோஷம்.. “. சிரிப்பு.
“திரு திருன்னு முழிக்கற பாரு.. அதப் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு”
விடியற்காலை நாலு மணி வரை இருவருமே உறங்கவில்லை. திடீரென்று போனை எடுத்து, எப்எம்ல் பாட்டு போட்டாள். “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” என்று ஆஷா போஸ்லே கொஞ்சிக் கொண்டிருந்தார். நான் அப்போது இருந்த மோன நிலைக்காகவே பாடப்பட்ட பாடல் போல தோன்றியது.
“வெங்கட்…..”
“ம்“
“வெங்கட்…..“
“ம். சொல்லு“
“இந்த பாட்டுல ஒரு தப்பு இருக்கு பாத்தியா ? “
“என் கவனத்தில் பெரும்பகுதியை பாடலிலேயே வைத்துக் கொண்டு, “என்ன தப்பு“
“நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி ன்னு வருதுல்ல. ஆக்சுவல்லி, நமைச் சேர்த்த பகலுக்கொரு நன்றின்னுதானே இருக்கணும் ? “
“ஏன்டி… உனக்கு அறிவே இல்லையா. நல்ல பாட்டு கேக்கும்போது, இப்படியா மொக்கத்தனமாக கேள்வி கேப்ப ? “
“சரி நீ பாட்டையே கேளு“ என்று கூறி விட்டு தள்ளிப் படுத்துக் கொண்டாள்.
“அய்யோ… கோச்சுக்காத. சாரி. சாரி. பாட்டா முக்கியம். நீதான் கண்ணு முக்கியம். வா“ என்று அணைத்தேன். படர்ந்து கொண்டாள்.
பெண்கள் எத்தனை எளிதாக ஆண்களை ஒரு வினாடியில் சரணாகதி அடைய வைக்கிறார்கள் ? அவள் அணைப்பையும் ஸ்பரிசத்தையும் தியாகம் செய்ய நான் தயாராக இல்லை. எத்தனை மன்னிப்பு கேட்பதற்கும் தயாராக இருந்தேன்.
மறுநாள் மாலை கிளம்பும் வரை என்னை ஒரு நிமிடம் கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடவில்லை. சமைக்கும் போது கூட, என் பக்கத்திலேயே இரு என்று பக்கத்தில் வைத்துக் கொண்டாள். பேப்பர் படிக்கக் கூட விடவில்லை. நான் இருக்கும் போது உலக செய்தி அவ்வளவு முக்கியமா என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.
கிளம்பும்போது அழுதாள். “என்ன வசந்தி இது… ஏன் இப்போ கண்ணைக் கசக்கற…“
“எனக்குப் போகவே மனசு இல்லை வெங்கட்…. உன் கூடவே இருக்கணும் போல இருக்கு.. “
“இன்னைக்கும் தங்கலாம் வசந்தி.. பட் உனக்கும் நாளைக்கு ஆபீஸ் இருக்கு.. எனக்கும் வேலை இருக்கு. மார்னிங் கிளம்புனா டென்ஷன். எனக்கு மட்டும் உன்னைத் தங்க வைக்க ஆசையில்லையா… ?“
ஹாஸ்டலில் இறக்கி விட்டவுடன் மீண்டும் அழுதாள். என்ன இது இப்படி இருக்கிறாளே… இவள் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளா விட்டால் செத்துக் கித்து போய் விடுவாளோ என்று பயமாகக் கூட இருந்தது. மறுநாள் உடம்பு வலி என்று லீவ் எடுத்தாள். உன்னால்தான் என்று செல்லமாகத் திட்டினாள்.
அடுத்த பதினைந்து நாட்கள் கதிரொளி அலுவலகத்தில் நான் செலவிட்ட நேரம் குறைந்து போனது. எப்போது ஸ்டோரியை அடித்து முடிப்போம், கிளம்புவோம் என்று பரபரப்பாக கிளம்பினேன். எடிட்டர் கூட ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார்.
உல்லாசப் பறவைகளாக சென்னையைச் சுற்றினோம். சென்னை நகரில் உள்ள பணக்கார மால்கள் எனக்கு பூர்ஷ்வா கலாச்சாரமாகத் தோன்றத் தவறின. சென்னை நகரில் உள்ள அத்தனை மால்களும் அத்துப்படியானது. ஸ்பென்சர், சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யு, ஸ்கை வாக் என்று ஒவ்வொரு இடமாக புனித யாத்திரை போவது போலச் சென்றோம்.
ட்ரெஸ் வேண்டும் என்று கேட்டாள். ஸ்கை வாக்கில் உள்ள ஷோ ரூமுக்கு அழைத்துச் சென்றாள். தலையணை உறையை கையும் காலும் வைத்து சற்று நீளமாக தைத்தது போல இருந்த உடையை 1600 ரூபாய் விலை போட்டிருந்தார்கள். மறு பேச்சு பேசாமல் வாங்கினேன். ப்ளாஸ்டிக் பணம் இருக்கும் வரை என்ன கவலை ? அந்த மாலிலேயே இருந்த பிபா, மேக்ஸ், மெலாஞ், இன் ஸ்டோர் என்று ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு நாள் உடை வாங்கினோம். டாப்ஸ், லெக்கிங்ஸ், பாட்டியாலா பாட்டம், டைட்ஸ், என்று பெண்கள் உடைகள் அத்துப்படியாகின.
உள்ளாடைகளின் அளவுகளின் தாத்பரியத்தை விளக்கினாள். ஒரு ட்ரெஸ் எடுக்க மூன்று மணி நேரம் செலவழித்தாள். பத்து முறை ட்ரயல் பார்த்தாள். ட்ரையல் ரூம் வாசலில் என்னைப் போலப் பரிதாபமாக நின்று கொண்டிருந்த ஆண்களோடு நானும் சேர்ந்து காத்திருந்து, ஒவ்வொரு ஆடையை உடுத்தி வெளியே வரும்போதும், சூப்பர், அட்டகாசம், ஆசம், லவ்லி என்று சொல்லப் பழகிக் கொண்டேன். ட்ரையல் ரூம் வாசலில் நின்று கொண்டு, மற்ற அறைகளில் இருந்து வெளியே வரும் மற்ற பெண்களையும் சேர்த்து ரசிப்பது வாடிக்கையாகிப் போனது.
லிப்க்ளாஸில் எத்தனை வகைகள், லிப்ஸ்டிக்கில் எத்தனை வகைகள், முகத்தில் ஃபவுன்டேஷன் போடுவதற்கு என்னென்ன வகைகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு ஃபேஸ் வாஷ், வகைவகையான நெயில் பாலீஷ் வகைகள் என்று என் பொது அறிவு விரிந்து கொண்டே போனது.
மால்கள் போரடித்தவுடன், தியாகராய நகரின் வீதிகளை அளவெடுத்தோம். நான் என் யதார்த்த உலகத்தை விட்டு வெகு தூரம் போயிருந்தேன்.
ஒரு நாள் காலை ஆறு மணிக்கு அவள் செய்த போன் அழைப்பு, நிம்மதியைக் கெடுத்தது.
“வெங்கட்… டேட்ஸ் தள்ளிப் போயிடுச்சுடா….“. அவள் குரலில் பதற்றம் மட்டுமே இருந்தது.
“எத்தனை நாள் ஆச்சு…. “
“பத்து நாள் வெங்கட்… பயம்மா இருக்குடா…“ என்று அழத் தொடங்கினாள்.
அவளை விட எனக்குப் பதற்றம் அதிகரித்தது. ‘எப்படிச் சமாளிப்பது… என்ன செய்வது.. யாரிடம் கேட்பது.. வெளியே தெரிந்தால் என்ன ஆகும்… சேஃப் பீரியட் ஒன்றும் ஆகாது என்று அவள்தானே சொன்னாள்..’
“நீ பதட்டப்படாமல் ஹாஸ்டல்லயே இரு… நான் வர்றேன்.. அழாத வசந்தி… அன்ட் டோன்ட் ஒர்ரி.. “
நாசர் நினைவுக்கு வந்தான். பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். வேறு யாரிடமும் விவாதிக்க முடியாது. வெளியே தெரிந்தால் என்ன ஆகும்… அழைத்தேன். விபரத்தைச் சொன்னேன்.
“என்னடா இது… இவ்வளவு நாளா போனே பண்ணலையேன்னு நெனைச்சேன்… கங்கிராஜுலேஷன்ஸ்… அப்பா ஆகப்போற… ட்ரீட் குடுக்காம கவலையாப் பேசற….“
“நாசர் விளையாடாத… … ஐ யம் இன் ய மெஸ்….“
“திஸ் ஈஸ் நாட் ய மெஸ் வெங்கட்.. திஸ் ஈஸ் ப்ளிஸ் (Bliss)…“
“அய்யோ நாசர்… நெலமையப் புரிஞ்சுக்க நாசர்…“
“புரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்… நீங்க ரெண்டு பேரும் வேற வேற கம்யூனிட்டிதானே… கண்டிப்பா அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. பொண்ணும் உன்னைக் கழட்டி விட்டுடும். அப்புறம் நீதான் லூசு மாதிரி சுத்துவ.. ஒரு கவிஞன் கூடச் சொல்லியிருக்கான். காதலிக்கும்போதே கருத்தரிக்க வைத்திருந்தால் பேதலிக்க விட்டுப் பிரிந்திருக்க மாட்டாளேன்னு… கவிஞர் தீர்க்கதரிசி.. நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சுருக்கு… வேஸ்ட் பண்ணாத…“
“நாசர் ஐ யம் நாட் இன் ய மூட் ஃபார் ஜோக்ஸ்… (Nasser I am not in a mood for jokes)“
“ஐ நெவர் செட் இட்ஸ் ய ஜோக்.. (I never said it’s a joke) “
எனக்குக் கோபம் வந்தது.
“நாசர்…“ என்று கத்தினேன்.
“ஓ.கே.. ஓ.கே… இவ்ளோ நாள் என் ஞாபகமே வராம, கண்டுக்காம இருந்தல்ல.. அதான் கொஞ்ச நேரம் கலாய்க்கலாமேன்னு சொன்னேன். டோன்ட் ஒர்ரி.. ஃபர்ஸ்ட் நீங்க சந்தேகப்பட்றது உண்மையான்னு டெஸ்ட் பண்ணு. உண்மைன்னா அடுத்தது என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். ஒரே தடவையில கர்ப்பம் ஆகறது, தமிழ் சினிமாவுல மட்டும்தான் சாத்தியம். அதனால நிச்சயம் பயப்பட்ற மாதிரி எதுவும் இருக்காது. நேரா மெடிக்கல் ஷாப் போ. ப்ரெக்னன்சி கார்டுன்னு கேளு. தருவாங்க. அதுலயே எப்டி யூஸ் பண்றதுன்னு போட்ருப்பான். அதை கன்ஃபர்ம் பண்ணிட்டு, நெக்ஸ்ட் ஸ்டெப் பத்தி யோசிக்கலாம். “
“அது எங்க கெடைக்கும்….“
“சொன்னேனே வெங்கட்.. எல்லா மெடிக்கல் ஷாப்புலயும் கிடைக்கும். கவலப் படாம போ.. “
வசந்தியிடம் போன் செய்து, அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று சொல்லி விட்டு, கிளம்பினேன். முதல் மெடிக்கல் ஷாப்பிலேயே கிடைத்தது. எப்படி உபயோகப்படுத்துவது என்று விபரமாக உள்ளே விளக்கக் குறிப்பு இருக்கிறது என்று போட்டிருந்தது.
அவள் ஹாஸ்டலை அடையும் முன்பாகவே வெளியே வா என்று மெசேஜ் அனுப்பினேன். சென்று இறங்கிய ஒரு நிமிடத்தில் வந்தாள். முகம் முழுவதும் பதற்றம் இருந்தது. முகத்தில் அழுத தடயம் இருந்தது.
“வசந்தி எப்படி யூஸ் பண்ணணும்னு டீட்டெயிலா உள்ளே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருக்கு. போயி டெஸ்ட் பண்ணிட்டு, உடனே மெசேஜ் அனுப்பு. நான் இங்கயே வெயிட் பண்றேன்.
அவள் சென்று அரை மணி நேரமாகியும் எந்தத் தகவலும் இல்லை. போனில் ரிங் போய்க் கொண்டே இருந்தது.
தொடரும்
“சேஃப் பீரியட் ஒன்றும் ஆகாது என்று அவள்தானே சொன்னாள்..”
நல்லா சொல்றாருய்யா டீட்டெய்லு…
“அப்ப” ச்…சொல்லவேயில்ல…..
Wow semmaya poguthu bro waiting for next part
Bro, I used to read Vealvi from part 1. Your writing skills with poetic lines are excellent. Great .. keep going .. and looking your blog every day morning and evening for new part in vealvi
ji sema ji. story alludhu. most liking part is the way you explain your thought processing.
செம த்ரில்லிங்கோட… காதலும் பட்டய கெளப்புது.
Foil your coil before checking her oil…
Sheild your DingDong nothing goes Wrong…
😃
இப்போதெல்லாம் சவுக்கு தளத்தில் வேள்வி தொடர் மட்டுமே படிக்கிறேன்…
Bro naan padicha speedla enakku heart attacke vanthurukum konjam slow bro mudiyalai pinchu manasu thaangathu. Vasanthi super ponnu bro dont miss her.
🙂
Medhuva odindu irundha sarakku traina, ippadi express vegathula oattureengalae comrade. Thadam purandida pogudhu…
🙂