தேர்தல் முடிந்த ஒரு வாரமாக, கேடி சகோதரர்களில் தொல்லை தாங்கவே முடியவில்லை.
தினம், தினம் ஒரு புதிய தியரியை கிளப்பி விட்ட வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு புறம் என்றால், இந்த குருமாராஜ் என்ற கொசுத் தொல்லை வேறு தாங்கவே முடியவில்லை.
கேடி சகோதரர்கள் கிளப்பி விட்ட முதல் தியரி என்னவென்றால், லயோலா கல்லூரி ஒரு எக்ஸிட் போல் சர்வே எடுத்திருப்பதாகவும், அந்த சர்வேயின் படி, திமுக கூட்டணி 135 தொகுதிகளில் ஜெயிக்கப் போவதாகவும், தேர்தல் முடிந்த ஏப்ரல் 13க்கு மறு நாள் முதல் வலம் வந்தது.
லயோலா கல்லூரி, இது போல சர்வேக்களை லயோலா கல்லூரி எடுப்பதில்லை என்றும், லயோலா கல்லூரி சர்வே எடுக்கும் ஏஜேன்சி அல்ல என்றும், சர்வே எடுக்கும் ஒரு துறை அக் கல்லூரியின் ஒரு அங்கம் என்பதால், உடனடியாக இது போல சர்வே எடுக்க முடியாது என்றும், விளக்கிச் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
அடுத்த தியரி, மகளிர் சுய உதவிக் குழுக்கள். இம்முறை என்ன சொன்னார்கள் என்றால், மகளில் சுய உதவிக் குழுக்களுக்கு, திமுவினர் முழுமையாக பணம் கொடுத்திருக்கிறார்கள், அதனால் பெண்கள் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். பணம் பெற்ற பெண்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள், திமுகவுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்பது அடுத்த தியரி.
இந்தக் கருமம் பிடித்தவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படி இருந்தால், தேர்தல் ஆணையம், இது போல பெருமளவு கெடுபிடிகளைச் செய்யாத பாராளுமன்றத் தேர்தலின் போது, இவர்கள் ஏன் 40 தொகுதிகளிலும் ஜெயிக்கவில்லை ? பாராளுமன்றத் தேர்தலின் போது, பெருமளவில் பணம் விநியோகிக்கப் பட்டதும், ஏறக்குறைய அனைத்து தொகுதிகளிலும், இந்த நிலை நிலவியது, சவுக்கு வாசகர்கள் பல பேருக்குத் தெரியும். அப்படி இருக்கையில், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் ஏன் ஜெயிக்கவில்லை ?
அது முடிந்ததா ? அடுத்ததாக இவர்கள் கிளப்பி விட்டது, விக்கி லீக்ஸ் இணைய தளம், திமுக கூட்டணி 135 தொகுதிகளில் வெல்லப் போகிறது என்று செய்தி வெளியிட்டிருப்பதாக. இந்தச் செய்தியை சவுக்கு சரிபார்க்கக் கூட முயலவில்லை. எதற்குச் சரிபார்க்க வேண்டும் ? விக்கிலீக்ஸ் இணைய தளம் என்பது, பல்வேறு சிரமங்களுக்கிடையில், உலகில் உள்ள பல்வேறு அரசுகளில் ரகசியி ஆவணங்களை அம்பலப்படுத்தும் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஒரு தளம். அந்த தளத்தின் முக்கிய நோக்கமே, அரசின் ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுதான். அப்படி இருக்கையில், விக்கிலீக்ஸ் இணைய தளம் திமுக கூட்டணி 135 தொகுதிகளில் ஜெயிக்கப் போவதாக பரப்பப் படும் செய்தி விஷமத்தனமானது. விக்கிலீக்ஸ் இணை தளம் எந்தக் காலத்தில் எக்சிட் போல் எடுத்திருக்கிறது ?
இப்போது அடுத்ததாக இன்று இவர்கள் கிளப்பி விட்டிருக்கும் புதிய சமாச்சாரம், டெய்லர் நெல்சன் சோஃப்ரெஸ் என்ற நிறுவனம், எக்சிட் போல் நடத்தி முடிவுகள் வெளியிட்டிருக்கிறதாம். அம்முடிவுகளின் படி, திமுவின் பெற்ற வாக்கு சதவிகிதம், 47.8% அதிமுகவின் வாக்கு 44.2 %, மற்றும் திமுக கூட்டணி 140 இடங்களையும், அதிமுக கூட்டணி 94 இடங்களையும் பெறும் என்று அடுத்த கணிப்பை வெளியிட்டதோடு, இந்த நிறுவனம், இந்து பத்திரிக்கைக்காக சர்வே எடுக்கும் நிறுவனம் என்றும் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த எஸ்எம்எஸ்களைத் தவிர்த்து, இது போல திருகல் வேலையில் ஈடுபடும் ஒரு பத்திரிக்கை ஒன்று உண்டு என்றால், அது நக்கீரன் என்ற மஞ்சள் பத்திரிக்கைதான். தேர்தல் முடிந்த மறுநாள் அன்று, அனைத்து பத்திரிக்கைகளிலும், தலைப்புச் செய்தி “வரலாறு படைத்த தமிழகம்” என்று தமிழகத்தில் பதிவு செய்யப் பட்ட அதிகப் படியான வாக்கு விகிதத்தை வைத்தே அவ்வாறு தலைப்புச் செய்திகள் வெளியிட்டன. ஆனால் நக்கீரன் பத்திரிக்கையில் கடந்த இதழில், வாக்குப் பதிவு சதவிகிதம், பெருமளவு அதிகரிக்கவேயில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
இதையடுத்து, நம்ம குருமாராஜ், ‘திக் திக் ரிப்போர்ட்‘ என்று ஒரு கட்டுரையை இந்த இதழ் நக்கீரனில் எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில் 104 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் வாக்குப் பதிவு கூடுதலாக உள்ளதாம்.
பெண்கள் வாக்களிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்றால், திமுக ஆட்சியில் அமல்படுத்தப் பட்ட பெண்களுக்கான நலத்திட்டங்களான, இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை, ஏழைப் பெண்களுக்கு 25 ஆயிரம், முதியோருக்கு 500 ரூபாய் உதவி, முதிர்க்கன்னிகளுக்கு அரசு உதவி ஆகிய திட்டங்களால், பெண்கள் தவறாமல் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்களாம்.
குருமாராஜ் சொல்வதையே எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் வாக்களித்த பெண்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே, 83 லட்சத்து, 71 ஆயிரத்து, 744 ஆகும். இதில் கர்ப்பிணிப் பெண்கள் எத்தனை சதவிகிதம் இருக்கும் ? முதிர் கன்னிகளின் சதவிகிதம் எத்தனை இருக்கும் ? முதியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ?
உள்ளபடியே அந்தத் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டாலும், அத்தனை கர்ப்பிணிப் பெண்களுமா உதவித் தொகை பெறுவார்கள் ?
அடுத்ததாக, இளைஞர்கள் பெருமளவில் வாக்களித்தாலும், திமுக அரசு, மருத்துவம் இன்ஜினியரிங் போன்ற தொழிற் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 35 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கட்டணச் சலுகை அளித்துள்ளதாம் கலைஞர் அரசு. இதனால் 74 ஆயிரத்து 800 பேர் இன்ஜினியர்கள் அல்லத மருத்துவர்கள் ஆக வாய்ப்பு உருவாகியுள்ளதால், அத்தனை இளைய வாக்குகளும், திமுகவுக்கே போயிருக்கும். அதனால், இளைஞர்களில் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் திமுகவுக்கு வாக்ளித்திருப்பார்களாம். (குருமாராஜ் உங்களுக்கே இது ஓவராக இல்லை ?)
இந்தக் காரணங்களாலே திமுக கூட்டணிக்கு 140 இடங்கள் கிடைக்கும் என்று குருமாராஜ் சொல்கிறார்.
வாக்காளர்களுக்கு பணம் 60 சதவிகிதத்துக்கும் மேல் கொடுக்கப் பட்டு விட்டது என்பது, திமுகவினர் வெற்றி பெற்று விடுவோம் என்று சொல்வதற்கு ஒரு காரணம்.
இந்த பண விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் காரணமாக, கடந்த தேர்தல்களைப் போல வெளிப்படையாக இந்த முறை பணம் கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை. கொடுக்கப் பட்ட தொகையும், 300, 500 அதிகபட்சம் 1000. இந்தத் தொகையையும், விளிம்பு நிலை மக்களை குறிவைத்தே கொடுத்திருக்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் என்பவர்கள், ஏற்கனவே, திமுக அல்லது அதிமுக என்று வாக்கு வங்கிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் எந்தத் தேர்தலிலும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
எல்லா தேர்தல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள், 20 சதவிகிதம் உள்ள படித்த நடுத்தர வர்க்கம். இவர்கள் தான் இறுதி நேரத்தில், யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுப்பவர்கள். இவர்கள் தான் அலையை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த படித்த நடுத்தர வர்க்கம், இந்த தேர்தல் நாள் அன்று காலை 8 மணி முதல், வரிசையில் நின்று வாக்களித்தது. படித்த நடுத்தர வர்க்கம் காலை 8 மணி முதல் வெயிலைப் பொருட்படுத்தாமல், கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்குவதற்காக வரிசையில் நின்றது என்றால், அதை நம்புவதற்கு மிக மிக கடினமாக உள்ளது.
வடிவேலு சொல்வது போல, “ஒங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்கு” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அப்படியே இவர்கள் சொல்வது போல, திமுக கூட்டணி வெற்றி பெறுகிறது என்றே வைத்துக் கொள்வோம்.
அது யாருடைய ஆட்சியாக அமையும் ?
128 இடங்களில் வெற்றி பெற்று, தனியாக, தமிழினத்தின் ஒரே தலைவர், முத்தமிழ் அறிஞர் ஆட்சி அமைக்கப் போகிறாரா ? போட்டியிட்டதே, 118. இதில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தால் கூட, 80 சீட்டுகளுக்கு மேல் ஜெயிக்க முடியாது. 80 சீட்டுகளோடு, திமுக அமைக்கப் போகும் கூட்டணி ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும். அப்படி வகித்தால், மருத்துவர் அய்யா திமுகவின் மென்னியை முறித்து விடுவார். கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்காத போதே, திமுக அரசு பெயில் என்று, மார்க் போட்டு மானத்தை வாங்கியவர் ராமதாஸ். இவரைத் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளின் தொந்தரவு, கருணாநிதியை ஆட்சியை கலைக்கும் அளவுக்கு நெருக்கடியைத் தரும்.
இவை எல்லாவற்றுக்கும் மேல், ராமதாஸின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு, அவரின் அந்தரங்கங்களை அறிந்து கொண்ட ஜாபர் சேட்டை ராமதாஸ் ஒரு போதும் மன்னிக்க மாட்டார். அதனால், பங்காளியை காப்பாற்றலாம் என்ற குருமாராஜின் பகல் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. நிறைவேறவும் விடமாட்டோம். அப்புறம் சவுக்கும் அதன் வாசகர்களும் எதற்கு இருக்கிறார்கள் ?
என்ன பாஸ் இன்னும் 18 நாள் தானே…? ரிசல்ட் தெரிஞ்சுடப் போகுது. அதுக்குள்ள எதுக்கு இந்த பில்டப் ? இது நீங்கள் பத்திரிக்கைக்காக வெளியிடும் செய்தியா ? இல்லை உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக் கொள்கிறீர்களா ? எது எப்படியோ பாஸ். நீங்களே ஜெயிச்சுட்டுப் போங்க. 18 நாள்ல தெரிஞ்சுடப் போகுது. அது வரைக்கும் சுகுணா விலாஸ் க்ளப்புல போய் சரக்கப் போடுங்க பாஸ். இல்லன்னா உங்க பங்காளி இப்போ புதுசா போற “மை பாருக்கு” போங்க. காபரேயெல்லாம் பாத்துட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க பாஸ். டென்ஷன் ஆகாதீங்க.