சமீபத்தில், லத்திக்கா சரணை டிஜிபியான நியமித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது, உச்சநீதிமன்றத்தை தமிழக முதல்வரும், அப்போதைய உள்துறை செயலரும், தற்போதைய தலைமைச் செயலருமான மாலதியும் மதித்த லட்சணம் என்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஒரு நீதிமன்றம், வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பிறகு, பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பிறகு, ஒரு தீர்ப்பை வழங்குகிறது… ஆனால், அந்தத் தீர்ப்பை மதிக்காமல், ஒரு மாநில அரசும், அதன் அதிகாரிகளும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வது என்பது, இது போலி ஜனநாயகம் என்பதைத் தானே காட்டுகிறது… … ? இவர்களின் நீதிமன்றத்தை இவர்களே மதிக்காவிட்டால், மக்கள் மட்டும் மதிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சரியாகும் ?
இந்தத் தீர்ப்பின் பின்புலம், மற்றும் இந்த வழக்கின் பின்புலம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
2006ம் ஆண்டு வரை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாநிலத்தின் தலைமைப் பதவியான டிஜிபி பணியிடத்தை தான்தோன்றித்தனமாகத் தான் நிரப்பப் பட்டு வந்தது. 22.09.2006 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பானது, காவல்துறை பணி நியமனங்களில் ஒரு ஒழுங்கமைவு வேண்டுமென்ற காரணத்தால், சில வரையறைகளை நியமித்தது. இந்த வழக்கு பிரகாஷ் சிங் வழக்கு என்று பிரபலமாக அழைக்கப் படுகிறது.
1861ஆம் ஆண்டு இயற்றப் பட்ட காவல்துறை சட்டம், பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டம் என்பதாலும், அது இந்தியர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்த ஏற்படுத்தப் பட்ட சட்டம் என்பதாலும், பிரகாஷ் சிங் என்ற ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடுக்கிறார். அவ்வழக்கில், பல்வேறு காவல்துறை சீரமைப்புத் தொடர்பான கமிட்டிகளைப் பற்றி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், நாடு சுதந்திரமடைந்து இது நாள் வரை, காவல்துறையை சீரமைக்க எந்த மாநிலமும், எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காததை கண்டு வருத்தம் தெரிவித்து, மாநில அரசுகள் இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், நம்பிக்கையோடு மட்டும் இந்த விஷயத்தை விட்டு விட முடியாது. அதனால், புதிய சட்டங்கள் உருவாக்கப் படும் வரை, இந்தக் கட்டளைகளை பின் பற்ற வேண்டும் என்று ஒரு ஏழு கட்டளைகளை பிறப்பிக்கிறது.
அந்த ஏழு கட்டளைகளில் ஒன்று, டிஜிபி நியமனம் தொடர்பானது.
அந்தக் கட்டளை என்னவென்றால்.
Selection and Minimum Tenure of DGP:
(2) The Director General of Police of the State shall be selected by the State Government from amongst the three senior-most officers of the Department who have been empanelled for promotion to that rank by the Union Public Service Commission on the basis of their length of service, very good record and range of experience for heading the police force. And, once he has been selected for the job, he should have a minimum tenure of at least two years irrespective of his date of superannuation. The DGP may, however, be relieved of his responsibilities by the State Government acting in consultation with the State Security Commission consequent upon any action taken against him under the All India Services (Discipline and Appeal) Rules or following his conviction in a court of law in a criminal offence or in a case of corruption, or if he is otherwise incapacitated from discharging his duties.
ஒரு மாநிலத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு மத்திய தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பட உள்ள மூத்த மூன்று அதிகாரிகளின் பட்டியலில் இருந்து, அந்த அதிகாரிகளின் பணிக் காலம், நற்பணி, அனுபவம், காவல்துறைக்கு தலைமை தாங்குவதற்கான தகுதி, இவற்றை வைத்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட நபர், குறைந்த பட்சம் இரண்டாண்டு காலத்திற்கு பணியில் இருக்க வேண்டும், அவர் இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறும் வயதை எட்டினாலும் கூட. அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட டிஜிபி மீது, ஊழல் புகார் இருந்தாலே, நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டாலோ, அல்லது பணி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டாலோ, மாநில பாதுகாப்புக் குழுவோடு ஆலோசித்து, அவரை பணியிலிருந்து விடுவிக்கலாம்.
இத்தீர்ப்பு வெளியான நாள் 22.09.2006. இத்தீர்ப்பு வெளி வந்த உடன், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு சந்தேகம் கேட்கும் மனுவை தாக்கல் செய்கிறது. அதன் படி, ஒரு மாநிலத்தின் டிஜிபியை தேர்ந்தெடுக்கும் உரிமை, மாநில அரசுக்கு முழுமையாக இருக்க வேண்டும் என்றும், மத்திய தேர்வாணையத்தோடு கலந்தாலோசிப்பது என்பது, தேவையற்றது மட்டுமல்லாமல், நடைமுறை சாத்தியமில்லாதது என்று முறையீடு செய்கிறது.
உச்ச நீதிமன்றம், 11.01.2007 அன்று, தமிழக அரசின் இந்த மனுவை நிராகரித்ததோடு அல்லாமல், இவ்வாறு சந்தேகம் கேட்பது என்ற போர்வையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை அனுமதிக்க முடியாது. இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டது.
05.04.2007 அன்று, கருணாநிதி அரசு, மீண்டும் ஒரு மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது ஆகும் என்று கூறுகிறது. (லத்திக்கா சரணை நியமித்தது போல, இவர்கள் இஷ்டத்துக்கு நியமனம் செய்வது மாநில அரசின் உரிமையாம்.) உச்ச நீதிமன்றம், 23.08.2007 அன்று, இந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே 11.01.2007 அன்று தமிழக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. அதன்படி, சட்டம் ஒழுங்கு டிஜிபியின் நியமனத்திற்கான கருத்துருவை உள் துறை செயலாளர் தொடங்கி, தலைமைச் செயலாளர், வழியாக முதலமைச்சர் உத்தரவைப் பெற்று, ஆளுநர் உத்தரவைப் பெற வேண்டும் என்பதுதான் அது.
இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம், மூன்று மூத்த அதிகாரிகளின் பட்டியலை தேர்வாணையத்துக்கு அனுப்புங்கள் என்று உத்தரவிட்டால், கருணாநிதியிடம் உத்தரவு வாங்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப் படுகிறது என்றால், தற்போதைய தலைமைச் செயலாளர் மாலதிக்கு என்ன ஆணவம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து 06.06.2007 அன்று மற்றொரு அரசாணை வெளியிடப் படுகிறது. அந்த அரசாணையில், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) யின் பதவிக் காலம் இரண்டாண்டுகள். அதில், இரண்டாண்டுகள் முடியும் தேதியோ, அல்லது அவர் ஓய்வு பெறும் தேதியோ, இரண்டில் எது முன்பு வருகிறதோ, அன்று அவர் பதவி முடிவடையும்.
இங்கேயும் ஒன்றை கவனியுங்கள். உச்ச நீதிமன்றம், பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளை கணக்கில் கொள்ளாமல், இரண்டாண்டுகள் வரை டிஜிபி பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாலதி, ஓய்வு பெறும் நாள் இரண்டாண்டு முடியும் முன் வந்தால் டிஜிபி பதவி முடிந்தது என்று உத்தரவிடுகிறார். (நல்லா மதிக்கிறாங்கையா சுப்ரீம் கோர்ட்ட.) மாலதி இது போல இந்தியாவின் உச்ச பட்ச நீதிமன்றத்தை மதிக்காமல் நடந்து கொண்டதற்கு பரிசு தான், அவருக்கு தலைமைச் செயலாளர் பதவி.
இப்போது லத்திக்கா சரண் விவகாரத்திற்கு வருவோம்.
31.08.2010 அன்று, கே.பி.ஜெயின், டிஜிபியாக நியமிக்கப் படுகிறார். இவர் டிஜிபியாக நியமிக்கப் பட, ட்ராலி பாய் பாண்டியன் எப்படி உதவி செய்தார் என்பதும், செங்குன்றம் அருகே உள்ள ஜெயின் கோயிலில் என்னென்ன பூஜைகள் நடத்தப் பட்டன என்பதும் தனிக் கதை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஜெயின் 31.08.2010 வரை டிஜிபியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மர்மமான முறையில் திடீரென்று, ஜெயின் 14.01.2010 முதல் 102 நாட்கள் விடுப்பில் செல்கிறார். மனைவி இறந்தால் கூட, பதவியில் இருக்கும் அதிகாரிகள் விடுப்பு எடுக்க மாட்டார்கள் என்பது காவல்துறையில் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஜெயின் ஏன் விடுப்பில் சென்றார் என்ற விபரத்தை சவுக்கு ஏற்கனவே ஜாபர் சேட் தொடர்பான பதிவில் எழுதியுள்ளது. ஜெயின் விடுப்பில் சென்றதும், லத்திக்கா சரணை டிஜிபியாக நியமிக்கிறார் கருணாநிதி.
லத்திக்கா சரண் டிஜிபியாக நியமனம் செய்யப் பட்ட கோப்பில், “டிஜிபியாக திருமதி லத்திக்கா சரணை நியமிக்கலாம்“ என்று எழுதி கருணாநிதி கையெழுத்திட்டுள்ளார். இந்தக் கோப்பில், லத்திக்கா சரணை விட பதவியில் மூத்தவர்களாக இருந்த, என்.பாலச்சந்திரன், ஆர்.நட்ராஜ், கே.விஜயக்குமார், வி.பாலச்சந்திரன் ஆகிய ஒருவர் பெயரும் பரிசீலிக்கப் படவில்லை.
ஜாபர் சேட், மாலதி, ஸ்ரீபதி ஆகிய மூன்று பேரும் தானே அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… …. ? இந்த அதிகாரிகள் சரியான பட்டியலை வைத்திருக்கிறார்களா, இவரை விட பணியில் மூத்தவர்கள் இருக்கிறார்களா, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படிதான் இந்த நியமனம் நடந்திருக்கிறதா என்பதையெல்லாம் பரிசீலிப்பதை விட, கருணாநிதிக்கு, குஷ்புவை வைத்து திராவிட கலாச்சாரத்தை வளர்ப்பதும், ஆயிரம் நங்கையர்கள் நடனத்தை பார்ப்பதும் என்று பல்வேறு வேலைகள் இருக்கிறது அல்லவா ?
இவ்வாறு தான் லத்திக்கா சரண் டிஜிபியாக நியமிக்கப் பட்டார். இத்தனை அதிகாரிகளையும் ஓவர்டேக் செய்து லத்திக்கா சரண் ஏன் நியமிக்கப் பட்டார், மற்றவர்கள் ஏன் பரிசீலிக்கப் படவில்லை என்ற ஒரு விபரமும் அந்தக் கோப்பில் இல்லை.
இந்த நியமனத்தை எதிர்த்து, நட்ராஜ் மத்திய தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுக்கிறார். தீர்ப்பாணையம், வழக்கை விசாரிக்காமலே, எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பாமலேயே, தள்ளுபடி செய்கிறது. இதை எதிர்த்து, நட்ராஜ் உயர் நீதிமன்றம் வருகிறார். இந்த வழக்கில் தான் மாநில அரசின் முகத்தில் அறைவது போன்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
அத்தீர்ப்பின் சாரம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, மாநில முதலமைச்சர் டிஜிபியை தேர்ந்தெடுப்பார் என்ற அரசாணை தவறு,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கால அவகாசம் வழங்கியும் அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
அரசியல் சட்டப் பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்பது இந்நாட்டின் சட்டமாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறான வகையில் அரசாணை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் செய்யப் பட்ட இரண்டு மேல் முறையீட்டு மனுக்களிலும் சொல்லியும் உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில், இப்போது அதை அமல்ப்படுத்துவதில் சிக்கல் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதைத் தவிர, மாநில அரசுக்கு வேறு வழியே இல்லை.
மாநிலத்தின் டிஜிபி நியமனம் தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்ற மாநில அரசின் வாதம் தவறானது.
மாநில அரசுக்கு டிஜிபி நியமனம் செய்வதில் முழு உரிமை உண்டு என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது.
அரசாணையின் படி லத்திக்கா சரண் நியமிக்கப் பட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில், அரசாணையை தவறு என்கிற போது, அதை எப்படி பின்பற்ற முடியும் ?
தேர்வாணையத்தை பரிசீலித்தால் கால தாமதம் ஆகும் என்ற மாநில அரசின் கூற்றை தேர்வாணையம் மறுத்துள்ளது. மேலும், தேர்வாணையத்திற்கு பட்டியலை அனுப்பாமலேயே, இது போன்ற முடிவுக்கு வர இயலாது. மேலும் பட்டியலை தேர்வாணையத்திற்கு அனுப்பாமல், மத்திய அரசிற்கு அனுப்பியதன் காரணம் என்ன என்பதும் புரியவில்லை.
நட்ராஜ் மீது, தேர்தல் ஆணையம் மாற்றச் சொல்லி உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற விபரத்தை லத்திக்கா சரண் நியமனம் செய்யப் பட்ட கோப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடாத போது, இப்போது அதைக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
விஜயக்குமார் அயல்பணியாக சர்தார் வல்லபாய் பட்டேல் அகாடமிக்கு போய் விட்டார் என்பதால் அவர் பெயர் பரிசீலிக்கப் படவில்லை என்பதை ஏற்க இயலாது என்பது மட்டுமல்ல, அது தவறும் கூட. மேலும், விஜயக்குமாரின் விருப்பத்தை கேட்காமலே, இத்தகைய முடிவுக்கு வந்தது தவறு.
உரிய விசாரணை நடத்தாமல், மத்திய தீர்ப்பாணையம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது தவறு.
உரிய கால நீட்டிப்புக் கொடுத்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசு செயல்படுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப் படாமல் இருப்பது எங்கள் கவனத்திற்கு வருகையில், அதைச் செயல்படுத்த தேவையான உத்தரவை பிறப்பிப்பது இந்த நீதிமன்றத்தின் கடமை.
டிஜிபி தரத்தில் உள்ள மூத்த மூன்று அதிகாரிகளின் பட்டியலை மத்திய தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, தேர்வாணையம் தேர்ந்த பட்டியலை தயாரித்து மாநில அரசிடம் வழங்க வேண்டும்.
தேர்வாணையத்தின் பட்டியலில் இருந்து ஒரு அதிகாரியை மாநில அரசு டிஜிபியாக 07.12.2010க்கு முன்பு நியமிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் முடியும் வரை லத்திக்கா சரண் டிஜிபியாக நீடிக்கலாம்.
எடுத்த நடவடிக்கைகளின் விபரங்களை மாநில அரசு 14.12.2010 அன்று இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
என்பதுதான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.
சரி. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். கே.பி.ஜெயின் ஓய்வு பெற்று விட்டார். என்.பாலச்சந்திரன் ஓய்வு பெற்று விட்டார். வி.பாலச்சந்திரன் ஓய்வு பெற்று விட்டார். தற்போது, டிஜிபி பணிக்கான போட்டியில் இருக்கும் முதல் மூவர் ஆர்.நட்ராஜ், கே.விஜயக்குமார் மற்றும் லத்திக்கா சரண்.
இவர்களுள் ஆர்.நட்ராஜ், 31.03.2011 அன்று ஓய்வு பெற உள்ளார். விஜயக்குமார் 30.09.2012ல் ஓய்வு பெற உள்ளார். லத்திக்கா 31.03.2012ல் ஓய்வு பெற உள்ளார். இவர்கள் மூவரைத் தவிர, வேறு யாரும் இந்தப் பட்டியலில் இல்லையா என்றால் இருக்கிறார். ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் எஸ்.கே.உபாத்யாய்.
இவர் லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவர் என்றாலும், இன்றும் கூடுதல் டிஜிபியாகவே உள்ளார். அதற்கு காரணம், தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்று பிரபலமாக அழைக்கப் பட்ட வழக்கில் அவர் சிக்கியது தான்.
லஞ்ச வழக்கில் சிக்கிய உறவினர் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று சொன்ன பூங்கோதை மீண்டும் அமைச்சராகி விட்டார். ஜெயலலிதாவை எப்படியாவது வழக்கில் சிக்க வையுங்கள் என்று சொன்ன திரிபாதி, பல கோடிகளை சம்பாதித்து ஓய்வு பெற்று விட்டார். இந்த வழக்கில் இடை நீக்கம் செய்யப் பட்டிருந்த சட்ட ஆலோசகர் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டு ஓய்வு பெற்று விட்டார். ஒரு உதவி ஆய்வாளருக்கு மூன்று ஆண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப் பட்டது. மற்றொரு காவலருக்கு இரண்டு ஆண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப் பட்டது.
ஆனால் உபாத்யாய் மட்டும், பதவி உயர்வு வழங்கப் படாமல், ஒரு டம்மி போஸ்டில் இருக்கிறார்.
உபாத்யாய் அப்படி என்ன தவறு செய்து விட்டார்… … ? திமுக அரசில், கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், தொடர்ந்து ஜெயலலிதா மீது புதிய ஊழல் வழக்குகளை பதிவு செய்யச் சொல்லி, திரிபாதி நெருக்கடி கொடுத்து வந்தார். இந்த நெருக்கடிகளை உபாத்யாவால் ஒரு அளவுக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து வைக்கிறார். திரிபாதி மற்றும் உபாத்யாய் இருவருக்கும் இடையில் மட்டும் 150 தொலைபேசி உரையாடல்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே வெளி வந்தது. மீதம் உள்ள 148 உரையாடல்கள், நீதிமன்றத்தில் உள்ளன
உபாத்யாய் மீது துறை விசாரணை நடைபெற்று, அவர் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரி அளித்த அறிக்கை, 2 ஆண்டுகளாக, தலைமைச் செயலகத்தில் உறங்கிக் கொண்டிருப்பதன் காரணம், லத்திக்கா சரணை டிஜிபியாக ஆக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன ? விசாரணை அதிகாரி தனது அறிக்கையை அளித்த பின், அதன் மீது உத்தரவு பிறப்பித்து, உபாத்யாய்க்கு பதவி உயர்வு அளித்து விட்டால், முதல் மூன்று அதிகாரிகளில், உபாத்யாய் வந்து விடுவார். அவர் 2013ம் ஆண்டில் தான் ஓய்வு பெறுகிறார் என்பதால், அவரை கூடுதலான அச்சத்தோடு பார்க்கிறார் லத்திக்கா சரண்.
தன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தந்திரமாக மூடி நடவடிக்கையிலிருந்து தப்பித்த தற்போதைய தலைமைச் செயலாளர் மாலதி, உபாத்யாய் போன்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி, தகுதி சிறிதும் இல்லாத ஒருவரை டிஜிபி ஆக ஆக்குவது என்பது, எத்தனை மோசமான ஒரு சூழல் என்பதை எண்ணிப் பாருங்கள்.
மாலதி, ராதாகிருஷ்ணன், ஜாபர் சேட், உள்துறைச் செயலர், ஞானதேசிகன் ஆகியோர் சேர்ந்து, மீண்டும் லத்திக்கா சரணையே டிஜிபியாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறித்தானே ஆக வேண்டும். கடந்த உள்ளாட்சித் தேர்தல்களின் போது, மாநகர ஆணையராக இருந்த லத்திக்கா சரண் நடந்து கொண்ட “பாரபட்சமற்ற முறை“ பற்றி சென்னை உயர்நீதிமன்றம் விரிவாக பதிவு செய்திருப்பதால், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன், லத்திக்கா மாற்றப் படுவார். அதே போல தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன், ஜாபர் சேட்டையும் ஒரு டம்மி போஸ்டுக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளை, சவுக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகமும், மற்ற தன்னார்வ அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளோடு இணைந்து மேற்கொள்ளும்.
நான் எப்போதும் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பவன். நீதித்துறை மீது, மிகுந்த மரியாதை வைத்திருப்பவன், அந்த அம்மையாரைப் போல, நீதித்துறையை மதிக்கத் தெரியாதவன் நான் அல்ல என்று பேசும் கருணாநிதி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அளித்துள்ள மரியாதையைப் பார்த்தீர்களா ?