ஹாஸ்டல் உள்ளேயும் போக முடியாது. போன் அடித்தாலும் எடுக்க மாட்டேன்கிறாள். “வசந்தி கால் பேக். அர்ஜன்ட்” என்று மெசேஜ் அனுப்பினேன். அனுப்பிய பிறகு எனக்கே கிறுக்குத்தனமாக இருந்தது. கால் செய்தால் அட்டென்ட் செய்யாதவள், மெசேஜுக்கு மட்டும் அனுப்பும் நிலையிலா இருப்பாள்.
‘கன்ஃபர்ம் ஆகியிருக்குமா.. ? பயந்திருப்பாளா… மயங்கி விழுந்திருப்பாளா… டென்ஷன் ஆகியிருப்பாளா…’
செல்போனில் அழைத்தாள். “எங்க இருக்க ?“ என்றாள்.
“வாசல்லயேதான் நிக்கறேன் வசந்தி… என்ன ஆச்சு வசந்தி.. டெஸ்ட் பண்ணியா… ? என்ன ரிசல்ட்.. ? “
“வர்றேன்… அங்கயே இரு.. “
“என்னன்னு போன்ல சொன்னா என்னடி… எவ்ளோ நேரம் வெயிட் பண்றது… ?“
“டூ மினிட்ஸ் டா… ப்ளீஸ்…“ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் கட் பண்ணினாள்.
ஒவ்வொரு வினாடியும் மரண அவஸ்தையாக இருந்தது. அவள் மீது எரிச்சல் வந்தது… ‘ஏன் இப்படிச் செய்கிறாள்… ? இப்படியா பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாள். போனில் சொல்லித் தொலைத்தால் என்ன.. உயிரை எடுக்கிறாளே..’ ச்சே… பயந்து போயிருப்பாள்.. நாமாக டக்கென்று கோபப்படக் கூடாது.
நேராக நடந்து வருவது தெரிந்தது. உடை மாற்றியிருந்தாள். முகத்தில் அழுததற்கான சுவடு இருக்கிறதா என்று தேடினேன். சுத்தமாக இல்லை. அருகே வந்தாள்.
“நீ இன்னும் போகலையா…. போயிருப்பன்னு நெனச்சேன்.. “
“என்ன வசந்தி… என்ன ஆச்சு சொல்லு…“ எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டேன்.
“என்ன ஆச்சு… ஒண்ணும் ஆகல.. உனக்கு சமத்துப் பத்தாது மாமா.. கன்ஃபர்ம் ஆகல… பயப்படாத”
“இத போன்லயே சொன்னா என்னடி கேடு உனக்கு…“ கோபத்தோடு சொன்னேன்.
“நீ இருக்கியா.. பயந்துகிட்டு ஓடிட்டியான்னு பாத்தேன் மாமா.. பரவாயில்ல தைரியமான ஆளுதான் நீ.. நான் அப்பவே வந்துட்டேன். அந்த மரத்துக்குப் பின்னாடி நின்னு நீ என்ன பண்றன்னு பாத்தேன். குட்டி போட்ட பூனை மாதிரி இங்குட்டும் அங்குட்டும் நடந்துக்கிட்டு இருக்க… ? “
எங்கிருந்துதான் எனக்கு அப்படிக் கோபம் வந்தது என்றே தெரியவில்லை.
“என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க… இடியட் மாதிரி பிஹேவ் பண்ற… எதுல விளையாடறதுன்னு உனக்கு அறிவே இல்லையா… எவ்ளோ டென்ஷனா நின்னுக்கிட்டு இருக்கேன்.. மயிரு மாதிரி பேசற… கை வெச்சதும் விட்டுட்டு ஓட்றவன்னு நெனச்சியா… என்னைப் பாத்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா ?“ பட படவென்று கொட்டித் தீர்த்து விட்டு, அவள் பதிலுக்கு காத்திராமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
படபடப்பும் எரிச்சலும் அடங்கவேயில்லை. நேராக வீட்டுக்குச் சென்றேன். வயிறு நிறைய தண்ணீர் குடித்து விட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். கதிரொளி எடிட்டருக்கு உடல் நிலை சரியில்லை என்று மெசேஜ் அனுப்பி விட்டு படுத்தேன். அவள் மீது மீண்டும் மீண்டும் எரிச்சலும் கோபமும் வந்தது. அப்படியே படுத்து தூங்கிப் போனேன். மணியைப் பார்த்தேன். மூன்று ஆகியிருந்தது. செல்போனை எடுத்துப் பார்த்தேன். இயல்பாக எடுத்துப் பார்ப்பது போலப் பார்த்தாலும், அவளிடம் இருந்து “சாரி“ என்று மெசேஜ் வந்திருக்கும் என்று கண்கள் தேடின.
எந்த மெசேஜும் வரவில்லை. திமிர் பிடித்தவள். என்ன ஆனாலும் சரி. நாம் கால் பண்ணவும் கூடாது. பேசவும் கூடாது என்று தீர்மானம் செய்து விட்டு, வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்றால், அவள் ஏன் இன்னும் எதுவுமே பேசவில்லை என்பதே மீண்டும் மீண்டும் உறுத்திக் கொண்டிருந்தது.
அலுவலகத்திற்குச் சென்றேன். எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையை பல முறை திருத்த வேண்டியதாக இருந்தது. கவனம் செலுத்துவது கஷ்டமாக இருந்தது. ஃபேஸ் புக்கில் லாகின் செய்தேன். ஆன் லைனில்தான் இருந்தாள். நானும் ஆன்லைன் வந்தேன். ஆனால் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கவேயில்லை. அவளுக்கு மேசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று பல முறை யோசித்து விட்டு, அனுப்பவில்லை.
‘என்ன பெண் இவள்… என் கோபத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள மறுக்கிறாளே… எல்லா விஷயங்களிலும் விளையாடுவதைப் போல, இதிலும் விளையாடியதால்தானே கோபம் வந்தது. ஒரு வார்த்தை சாரி என்று சொன்னால் என்ன குறைந்து போகும்… ?’
நானாக தொடர்பு கொள்வதில்லை என்று முடிவு செய்தேன். தினந்தோறும் மாலையில் காபி ஷாப் சென்று பழக்கப்பட்டு, அன்று மாலை அவள் இல்லாமல் இருந்தது பெரிய வெறுமையாக இருந்தது. அவள் சென்னையில் இருந்தும், அவளைப் பார்க்காமல் இருப்பது பெரிய அழுத்தத்தை எற்படுத்தியது. ஆனாலும், அவள் விளையாடிய விளையாட்டு ஏற்படுத்திய எரிச்சல் இன்னும் அடங்காமல் இருந்தது.
மாலை கடந்து இரவு வந்த பின்னும், அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. படுக்கையில் உறக்கம் பிடிக்காமல், புரண்டு புரண்டு படுத்தும், அவள் நினைவு மட்டுமே உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு வேளை நாம்தான் தேவையில்லாமல் கோபப்பட்டு விட்டோமோ.. சின்னப் பெண். ஏதோ விளையாட்டுத்தனமாக செய்து விட்டாள் அதற்குப் போய் அதிகமாக திட்டி விட்டோமோ…’ அப்படியே உறங்கி விட்டேன்.
காலையில் எழுந்ததும், அவள் இன்னும் பேசவில்லை என்பதே முதலில் உறைத்தது. எதுவுமே யோசிக்காமல் “குட் மார்னிங்” என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன். பதிலுக்கு அவளும் குட் மார்னிங் என்று அனுப்பினாள். மாலையில் காபி ஷாப்புக்கு போகலாமா என்று அனுப்பினேன். யெஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அனுப்பினாள். மனம் சற்றே லேசானது போல இருந்த்து. அது வரையில், நான் ஒரு அழுத்தத்தில் இருந்ததை உணர முடிந்தது.
அலுவலகம் கிளம்பி சென்றேன். எடிட்டர் திருத்தித் தரச் சொல்லி அனுப்பியிருந்த கட்டுரையை மீண்டும் சரி பார்த்து எழுதி முடித்தேன். மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளையும் பார்த்து அனுப்புமாறு மெயிலில் அனுப்பியிருந்தார். அனைத்தையும் பார்த்து முடிக்கையில் மாலை ஆகியிருந்தது. நான் இப்போது வந்து உன்னை பிக்கப் செய்து கொள்ளட்டா என்று செய்தி அனுப்பியதும், கம் டு ஹாஸ்டல் என்று பதில் அனுப்பியிருந்தாள்.
வேலைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டு, ஹாஸ்டல் கிளம்பினேன். வந்து விட்டேன் என்று தகவல் அனுப்பியதும் வருகிறேன் என்று சொல்லி விட்டு, வழக்கம் போல 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாள். எதுவும் பேசாமலேயே காபி ஷாப் சென்றோம். உம்மென்று உட்கார்ந்திருந்தாள்.
“நீ அப்படி பண்ணது சரியா வசந்தி… இப்டி வெளையாடலாமா ?“
“அதுக்காக… அப்பிடி திட்டுவியா… ? கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்ற… ? எங்க அப்பா என்ன ஒரு நாள் கூட அப்பிடியெல்லாம் திட்னதேயில்ல தெரியுமா ?“
“வசந்தி… எவ்ளோ டென்ஷனோடு வெளியில நின்னுக்கிட்டு இருந்தேன். போன் பண்ணா எடுக்கல… எஸ்எம்எஸ் பண்ணா ரிப்ளை பண்ணல… அரை மணி நேரம் கழிச்சு வந்து, சும்மா வெளையாட்டுக்கு அப்டி பண்ணேன்னு சொன்னா கோவம் வருமா வராதா… உன்னைத் திட்டாம என்ன பண்றது ?“
“நான் ஒத்தப் பொண்ணு… செல்லமா வளந்தேன். நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும்… ஒரு சின்ன விஷயத்துக்கே இப்டி திட்ற… நாளைக்கு என்னை எப்படி சந்தோஷமா வச்சுக்கப் போற….“
இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று சற்று மலைப்பு வந்தது. செய்த தப்பை ஒத்துக் கொள்ளாமல் நியாயப்படுத்தியே பேசிக் கொண்டிருக்கிறாளே…
“நீ பண்ற தப்ப ஒத்துக்கவே மாட்டியாடி….“
“வெங்கட்… வயிறு வலிக்கற மாதிரி இருக்கு வெங்கட்… இன்னைக்கு நைட் ஸ்டார்ட் ஆயிடும்னு நெனைக்கிறேன்…“
எனது அனைத்துக் கோபமும் மனதை விட்டு தும்மலைப் போல வெளியேறியது.
“ரொம்ப வலிக்குதா வசந்தி…?”
“வலிக்குது. பட் இன்னும் ஸ்டார்ட் ஆகல.. ஸ்வீட் சாப்பிட்டா சீக்கிரம் வந்துடும். கேக் ஆர்டர் பண்ணு.”
சர்வரை அழைத்து கேக் எடுத்து வரச் சொன்னேன்.
“நாளன்னைக்கு ஊருக்குப் போகணும். எங்க அப்பாக்கு பர்த்டே. பகல் ட்ரெயின்லதான் போலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா… ?“
“நான் மதுரைக்கு வந்து எங்கடி தங்கறது… நீ பாட்டுக்கு வீட்டுக்குப் போயிடுவ.. நான் மட்டும் என்ன பண்றது.. “
“எங்க வீட்டுக்கு வா… எங்க அப்பா அம்மாவைப் பாத்துட்டுப் போ.. “
“டிக்கெட்ஸ் போட்டாச்சா….“
“இன்னும் இல்ல.. டட்கல்ல புக் பண்ணு. “
அலுவலகத்துக்கு என்ன பொய் சொல்லி லீவ் எடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவசரமாக ஒரு ட்ராவல் ஏஜென்ட்டைப் பிடித்து, வைகையில் ஏசியில் இரண்டு சீட்கள் புக் செய்தது 1200 ரூபாய் ஆனது. அவள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கையில் பத்திரமாக அவளை மதுரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருந்தது. அவள் ஹாஸ்டலுக்கு அருகிலேயே ரயில் நிலையம் இருந்ததால் நேராக ஹாஸ்டல் சென்றேன். செல்லும்போதே, அவள் உடல் நிலை கருதி, ஜுஸ் வாங்கி வைத்துக் கொண்டேன்.
ரொம்ப சோர்வாக இருந்தாள். கண்களில் களைப்பு தெரிந்தது. ரயிலில் ஏறியதும், என் மேல் சாய்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் மடியில் படுத்து உறங்கி விட்டாள். உறங்குகிறாள் என்று நினைத்துப் பார்த்தேன், அழுது கொண்டிருந்தாள்.
“என்ன வசந்தி… ஏன் அழுவுற…“
“வயிறு வலிக்குது வெங்கட்…“ இந்த நேரத்தில் அவள் வலியில் பங்கு கொள்ள முடியாத கையறு நிலை விரக்தியை ஏற்படுத்தியது. அப்படியே உறங்கி விட்டாள். மதுரையில் இறங்கியதும், அவள் வீட்டுக்கு 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்றாள். நான் இங்கேயே ரூம் எடுத்துத் தங்கி விடுகிறேன் என்று சொன்னாலும், என் வீட்டு வரை வந்து என்னை விட்டு விட்டு வா என்று பிடிவாதமாகச் சொன்னாள்.
டவுன் பஸ் பிடித்து அவள் வீடு வரை சென்று இறக்கி விட்டு விட்டு, மீண்டும் மதுரை டவுனுக்கு வந்தேன். நாளை என்னை வீட்டுக்கு அழைப்பதாகச் சொல்லியிருந்தாள்.
பார்ப்பதற்கு சுமாராக இருந்த ஒரு லாட்ஜில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வாடகை சொன்னார்கள். அதே அறையில் தங்கினேன். சென்னையைப் போலவே மதுரையும் பரபரப்பாகத்தான் இருந்தது. எங்கு பார்த்தாலும் உணவகங்கள். எளிமையான மனிதர்களாக தோன்றினார்கள்.
காலை 10 மணிக்கே அழைத்தாள். “வெங்கட்.. நேரா பஸ்டான்ட் உள்ள போயி, பரவை போற பஸ் எங்க நிக்கும்னு கேட்டுக்க. அந்த பஸ்ல ஏறி, காய்கறி மார்க்கெட்னு கேட்டா எறக்கி விடுவாங்க. வந்து எறங்கிட்டு போன் பண்ணு. நானே வந்துட்றேன். “
இறங்கி விட்டு போன் செய்ததும், துள்ளிக் கொண்டு ஐந்தே நிமிடங்களில் வந்தாள். அங்கிருந்து ஐந்து நிமிடங்களில் அவள் வீடு வந்தது.
“அப்பா நான் சொன்னேன்ல… கோட்டைச்சாமி.. இவருதாம்பா….“
“வாங்க தம்பி.. உக்காருங்க.” என்றவர் ஒடிசலான தேகத்தோடு இருந்தார். எளிமையான கிராமத்து முகம். சற்று நேரத்தில் அவள் அம்மா வந்து, “வாங்க தம்பி“ என்ற தண்ணீர் கொடுத்தார்.
“தம்பிக்கு சொந்த ஊரு எது.. ? “ என்று அவள் அப்பா ஆரம்பித்தார்.
சொன்னேன். “என் பேரு மீனாட்சி சுந்தரம் தம்பி. மதுரை மீனாட்சி பேரை வச்சாங்க. பாப்பா உங்களப் பத்தி நெறய்ய சொல்லியிருக்கு. நல்லா எழுதுவீங்கன்னு. நான் கதிரொளி தவறாம படிக்கறவன் தம்பி. நெறய்ய எழுதியிருக்கீங்க. படிச்சுருக்கேன். கூடப்பொறந்தவங்க எத்தனை பேரு…“
சொன்னேன்.
“நான் நெனைவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து பார்ட்டியிலதான் இருக்கேன் தம்பி. மீனாட்சி சுந்தரம்னா மதுரையில தெரியாத ஆளே இருக்க முடியாது. “
மவுனமாக சிரித்து விட்டு அமர்ந்திருந்தேன். பதற்றமாகத்தான் இருந்தது. என்னை அளவெடுப்பதற்காக இந்த ஆள் இத்தனை கேள்விகளைக் கேட்கிறாரோ என்று தோன்றியது. ஏதாவது சொல்லியிருப்பாளா ?
“நான் இந்த ஜாதி கீதியெல்லாம் பாக்கறதில்ல தம்பி. நம்ப வீட்டுக்கு எல்லாரும் வந்து சாப்பிடுவாங்க. பொண்ணையும் அப்படித்தான் வளத்துருக்கேன். ரொம்ப சுதந்திரமான பொண்ணு. “
அந்தக் கணம் முதல் அவரைப் பிடிக்காமல் போனது. ‘எல்லோரும் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள் என்று என்னிடம் எதற்காகச் சொல்ல வேண்டும் ? நீ என் வீட்டில் வந்து சாப்பிடுவதை நான் பெரிய மனது பண்ணி அனுமதிக்கிறேன் என்பதற்காகவா ? ஒரு தாழ்த்தப்பட்டவனை வீட்டுக்குள் அழைத்து சோறு போடுவதை ஏதோ ஒரு புரவலரின் செயலாக நினைக்கும் இவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான்… ? இவன் மனதில் எப்படி ஒரு சாதி வன்மம் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை வெளிப்படும் ?‘
என் முகம் மாறியதை வசந்தி கவனித்து விட்டாள். அவளைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.
மீனாட்சி சுந்தரம் தொடர்ந்தார். “இந்தப் பிள்ளைக்குத்தான் ஒரு மாப்பிள்ளை பாக்க தேடிக்கிட்டே இருக்கேன்… ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்கது தம்பி.. நீங்கதான் மெட்றாஸ்ல இருக்கீங்களே… ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்களேன்.. நான் இந்த சாதி கீதியெல்லாம் பெருசா பாக்கறதில்ல தம்பி.. பையன் நல்ல பையனா இருக்கணும். இவளை நல்லா வச்சுக் காப்பாத்தணும். அவ்வளவுதான். “
“சொல்றேன் சார். “ என்றேன்.
“அப்பா சாப்பாடு போடட்டா.. நேரமாகுது.. சாப்ட்ருங்க.. “ என்றாள்.
“கையைக் கழுவிட்டு வாங்க தம்பி.
எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. “இல்ல சார். இன்னொரு ஃப்ரென்ட் வீட்டுக்கு லன்ச்சுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தேன். போகனும்.“
“வீட்டுக்கு மொத மொத வந்துருக்கீங்க.. சாப்பிடாமப் போனா எப்படி தம்பி ? “
அவள் கண்ணாலேயே கெஞ்சினாள். எனக்கு அவளிடம் கண்ணில் பேசிக் கொண்டிருப்பதைப் அவள் அப்பா பார்த்து விடப் போகிறாரோ என்ற பயமாக இருந்தது. அதற்குள் எஸ்எம்எஸ் அனுப்பினாள். “வெங்கட் ப்ளீஸ். உனக்காக நானே சமைச்ச வச்சுருக்கேன். ப்ளீஸ். “
கோபத்தையெல்லாம், துடைத்து ஓரமாக வைத்து விட்டு, அவள் தந்தையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தது போல சரி சார் என்று தலையாட்டினேன்.
பிரியாணி செய்திருந்தார்கள். இரவு உணவு சாப்பிட முடியாத அளவுக்கு சாப்பிட்டேன். அவள் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி. “தேங்க்யூ மாமா…“ என்று எஸ்எம்எஸ் அனுப்பினாள்.
கிளம்பி நேராக ஹோட்டலுக்கு வந்தேன். மாலை 4 மணிக்கு வந்து சந்திப்பதாக சொல்லியிருந்தாள். நாலு மணிக்கு தயாராகி, கீழே இறங்கி வந்து நின்றேன்.
“வா உனக்கு எங்க ஊர் ஜிகர்தண்டா வாங்கித் தர்றேன். இது மாதிரி சாப்ட்ருக்கவே மாட்ட. “ திருமலை நாயக்கர் மஹாலைத் தாண்டி ஒரு கடைக்கு அழைத்துச் சென்றாள்.
“அப்பா என்னடி சொன்னாரு ?“
“ம் ம்… ஒண்ணும் சொல்லல. “ என்று அவள் சொல்லும் போதே ஏதோ விவாதித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
“சொல்லு வசந்தி.. என்ன சொன்னாரு…“
“நீ ஜர்னலிஸ்டா இருக்கறதுனால ஒனக்கு நெறய்ய பேரைத் தெரியுமாம். அதுனால நீ கண்டிப்பா ஒரு மாப்பிள்ளை பாத்து சொல்லுவியாம்.“
தப்பித் தவறி இவனைக் காதலிக்கிறேன் என்று சொல்லி விடாதே என்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு இது.
“உங்க அப்பா இன்டைரெக்டா என்னை வேண்டாம்னு சொல்றாருன்னு அர்த்தம்”
“அப்படியெல்லாம் இல்லை வெங்கட். நம்ம மேட்டர் இன்னும் அவங்களுக்குத் தெரியாதுல்ல.. அதுக்குள்ள எப்படி இந்த முடிவுக்கு வர்ற.. ”
“பொண்ணைப் பெத்தவங்கள கொறச்சு எடை போட்றாத வசந்தி. ஒரு பையனை நீ வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அளவுக்கு பழகறன்னா அவன் உனக்கு எந்த அளவுக்கு க்ளோஸ்னு அவங்களுக்கு தெரியும். தெரியாமையா உங்க அப்பா இப்படி பேசுறாரு.. “
“இல்லை வெங்கட். எங்க அப்பா ரொம்ப லிபரல். அப்பிடியெல்லாம் நெனைக்காத…இதப்பத்தி அப்புறமா பேசலாமா வெங்கட்.. நல்ல மூட்ல இருக்கோம். ஸ்பாயில் பண்ணிக்க வேணாமே.. “
“இதப் பத்திப் பேசாம வேற எதப் பத்தி பேசறது வசந்தி.. இப்டியே ஊரைச் சுத்திக்கிட்டு இருப்போம்.. நீ வேற யாரயாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிடுவ… ஐ யம் சாரி வெங்கட். எனக்கு வேற வழி தெரியலன்னு சொல்லுவ.. அதான் நடக்கப் போகுது.“
“அப்படியெல்லாம் இல்ல வெங்கட். மெட்றாஸ் போயிப் பேசிக்கலாம் பா.. ப்ளீஸ் டா.. என் கண்ணுல்ல…“
‘இதற்கு மேல் இவளிடம் என்ன பேசுவது…?????’
அதற்குப் பிறகு அவளிடம் பேசியிருந்து விட்டு அன்று இரவே சென்னைக்குக் கிளம்பினேன்.
அடுத்த நான்கு நாட்களுக்கு வேலை சரியாக இருந்தது. ஆனால் காபி ஷாப் போவது தவறாமல் நடந்தது. அந்த சனிக்கிழமை காலை சினிமா பார்த்து விட்டு, வரும்போது தன்னை மீண்டும் பெண் பார்க்க அடுத்த வாரம் வர இருப்பதாக சொன்னாள்.
“இப்படியே ஒவ்வொருத்தன் முன்னாடி போயி எத்தனை நாள் நின்னக்கிட்டு இருக்கறதா உத்தேசம் வசந்தி… ? வீட்ல பேசறதா ஐடியா இருக்கா இல்லையா… ?“
“என்னை என்ன வெங்கட் பண்ணச் சொல்ற.. பயமா இருக்கு வெங்கட். அம்மா ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்கு… தாங்கவாங்களான்னு சந்தேகமா இருக்கு.. “
“அப்போ உங்க அம்மா ஹெல்த் சரியாகறதுக்கு ஒரு 10 வருஷம் ஆச்சுன்னா அது வரைக்கும் வெயிட் பண்ணலாமா ?“
“என்ன வெங்கட் இப்டி எதுக்கெடுத்தாலும் கோவப்பட்ற ?. கொஞ்ச நாள் போகட்டும் வெங்கட்.“
“வசந்தி.. என்னால காலா காலத்துக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. எப்போ பேசற உங்க வீட்லன்னு சொல்லு. இல்லன்னா சொல்லு நான் பேசறேன்.“
“அவ்ளோ தைரியமா நீ பேசிடுவியா… பேசு பாப்போம். இந்தா எங்க அப்பா நம்பர்.. “ என்று கொடுத்தாள்.
நம்பரை வாங்கி என் மொபைலில் டயல் செய்தேன். நான் விளையாடுகிறேன் என்று நினைத்துக் கொண்டு நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
ரிங் போனது…
“ஹலோ என்றார்.. “
“மிஸ்டர் மீனாட்சி சுந்தரம்… ? “
அவள் முகத்தைப் பொத்திக் கொண்டு வேணாம் என்று துடித்தாள்.
“ஆமாங்க…“
“சார் வணக்கம். நான் கோட்டைச்சாமி பேசறேன். போன வாரம் உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே….“
“சொல்லுங்க தம்பி. நல்லா இருக்கீங்களா ? “
“நல்லா இருக்கேன் சார்.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. “
“சொல்லுங்க தம்பி…“
“உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்பட்றேன். நான் பேசறது உங்க பொண்ணுக்குத் தெரியாது. நேரா உங்ககிட்ட கேக்கலாம்னு தோணுச்சு. “
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
“நாங்க எங்க பொண்ணுக்கிட்ட பேசிட்டு தகவல் சொல்றோம் தம்பி. “ என்று லைனைக் கட் செய்தார்.
“வைத்தவுடன், என்ன வெங்கட் இப்படிப் பண்ணிட்ட… விளையாட்டா சொன்னதுக்கு இப்படியா பேசுவ….. அய்யோ…. என்ன நடக்கப் போகுதோ” என்று அவள் புலம்பிக்கொண்டேயிருந்த போது அவள் செல்போன் அடித்தது.
அவள் அம்மா.
தொடரும்.
ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் பரபரப்பு அடுத்து என்ன நடக்கும் என ஆர்வமாக உள்ளது வசந்தி அருமை
உயிரை அறுத்தது போலிருக்கிறதே… நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே… எப்படி இது நடக்கும் ? தாங்க முடிய வில்லையே… இனி எதற்காக வாழ வேண்டும் ? என்ன இருக்கிறது இனி வாழ்வதற்கு ? துரோகத்தின் வலி என்பது இதுதானா ? எப்படி முடிந்தது அவளால் ? ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா ?
இத நெனச்சாதான் சும்மா பக்….ன்னு இருக்கு…
I read your book and savukku from last Chennai book fare.
Excellent writing in all subjects.
I like so much every word in ” Velvi” and it’s love.
Thanks to u ,your family,friends and intellectuals around u for giving a great gift to our society.
THIS STORY WAS TRUE OR IMAGINE
awesome tempting for next episode
சார் கதை சூப்பர் தயவு செஞ்சு சொல்லறேன் அவங்களை நல்லபடியா சேர்த்து வையுங்க , உங்களுக்கு புண்ணியமா போகும் , நல்ல எதார்த்தமான காதல் .
இந்த investigation journalism த்தலாம் தூக்கி போட்டுட்டு… Romance story எழுதுங்க bro.. lovely
2010 லிருந்து சவுக்கு வாசித்து வருகிறேன். ஊழலை வெளிக்கொணரும் வலைத்தள பத்திரிக்கையாளராக சங்கரைப் பார்த்த எனக்கு, காதலை யதார்த்தம் யதார்த்தமாக எழுதும் கதை ஆசிரியராகப் பார்க்கவும் பிடித்திருக்கிறது. இவரால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது என இன்னும் வியந்து கொண்டே இருக்கிறேன்.
always the final twist sema. eppudi sir ipdi.
சினிமா கதை போல விறுவிறுப்பா இருக்கு
In General Indian Movies, if Hero is attacking a big villain or some organised crime, the heroin character will be just for the time pass. After few scenes her character will not have any importance unless villain takes her as hostile and threaten the hero. Here, it shows that crime, thriller, love, family, sentiment, curiosity etc is created by Shankar. Great work. You will be remembered for your journalism and writings than your actual sufferings. Good luck.
sema