யார் இந்த ராதாகிருஷ்ணன் ? சர்வபள்ளி ராதாகிருஷ்ணனா ? இல்லை. இல்லை. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு துளியும் ஒழுங்கில்லாத கே.ராதாகிருஷ்ணன் நாயுடுதான் இது.
அப்படி என்ன செய்து விட்டார் ராதாகிருஷ்ணன் ? தேர்தல் முடிந்ததும், எலெக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டிருக்கும், அனைத்து இடங்களிலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட உடனேயே, களத்தில் இறங்கினார் ராதாகிருஷ்ணன். வாக்கு இயந்திரங்கள் வைத்திருக்கும் அனைத்து இடங்களையும், தமிழகம் முழுக்க நேரில் சென்று ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார்.
இதில் என்ன தவறு இருக்கிறது ? சட்டம் ஒழுங்கை மேற்பார்வை செய்யும் ஒரு கூடுதல் டிஜிபி இப்படி ஆய்வு செய்யக் கூடாதா ? செய்யலாம் தான் தவறில்லை.
ஆனால், மேற்கு மண்டலத்தை ஆய்வு செய்யச் செல்கையில் மட்டும், ராதாகிருஷ்ணன், தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்றார். கோவையில் உள்ள வாக்கு இயந்திரங்களை பார்வையிடச் சென்ற அவர், அங்கிருந்து மசணக்குடிக்கு சென்றார். இதுவும் கூட தவறு கிடையாது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதையே தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு, பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது மனைவியை அழைத்துக் கொண்டு, அலுவல் ரீதியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவது கூட தவறு கிடையாது.
பிறகு என்னதான் தவறு ? ராதாகிருஷ்ணன், கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவைச் சந்தித்து, தனது மனைவியோடு, காலில் விழுந்து சரணாகதி அடைய முயற்சி செய்தார் என்ற தகவல் தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழக காவல்துறையில் பெரும்பாலான சில அதிகாரிகள், இரண்டு திராவிடக் கட்சிகளில் தங்களுக்கு பிடித்தமானது எது என்பதை தேர்ந்தெடுத்து, அதில் ஒரு கட்சியோடு நெருக்கம் பாராட்டுவார்கள். மற்ற சில அதிகாரிகள், எந்தக் கட்சி வந்தாலும், சூடு சொரணை ஏதும் இல்லாமல் வெட்கமே இல்லாமல், அப்போது ஆட்சிக்கு வரும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் காலையோ கையையோ பிடித்து, ஏதாவது ஒரு நல்ல பதவிக்கு வருவது வழக்கம். ஜாபர் சேட், சாரங்கன், சைலேந்திரபாபு, போன்றவர்கள் இந்த வகை.
இந்த இரண்டாவது வகையில் தான், ராதாகிருஷ்ணனும் வருவார். 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ராதாகிருஷ்ணன், அமோகமாக இருந்தார். பலகோடி ரூபாய் ஊழலான சென்னை மாநகராட்சி பாலம் கட்டும் ஊழலில் தொடங்கி, தற்போதயை தலைமைச் செயலாளர் மாலதி மீது எப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை வழங்கியது வரை, கொடி கட்டிப் பறந்தார். அவரது செயல்பாடுகளைப் பாராட்டி, (????) சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்த அவரது மகன் சந்தீப்புக்கு, அரசு கோட்டாவின் கீழ், அண்ணா பல்கலைகழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவில் இடம் ஒதுக்கப் பட்டது.
திமுக 2006ல் ஆட்சிக்கு வந்ததும், அந்தர் பல்டி அடித்தார் ராதாகிருஷ்ணன். ஆற்காடு வீராச்சாமிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார் பி.வி.தாமஸ் என்ற அதிகாரி. அவர், ஆற்காடு மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன கருத்தை ஏற்காமல், ராதாகிருஷ்ணனும், அப்போதைய இயக்குநர் நாஞ்சில் குமரனும், பி.வி.தாமஸை மிரட்டு மிரட்டு என்று மிரட்டி, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வகை செய்ய ஏதுவாக இறுதி அறிக்கை கொடுக்க வைத்தார்கள்.
இந்த அறிக்கை திமுக ஆட்சிக்கு வருவதற்கு 20 நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் பட்டது. திமுக பதவியேற்ற மறுநாள், தலைமைச் செயலகம் அனுப்பப் பட்ட அந்த அறிக்கையை அகற்றி, அது போல அறிக்கையே அனுப்பாதது போல கோப்புகளை திருத்தினார் ராதாகிருஷ்ணன். வீராச்சாமியை சந்தித்து, சாதி ரீதியாக உறவாடி, எப்படியாவது காப்பாற்றுமாறு கெஞ்சினார். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ? ஆற்காடு வீராச்சாமியும், ‘சரி ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம சாதிக்கார அதிகாரி’ என்று, ராதாகிருஷ்ணனுக்காக நல்ல பதவி கேட்டு, கருணாநிதியிடம் பரிந்துரை செய்தார்.
அதற்குப் பிறகு, ராதாகிருஷ்ணனுக்கு சுக்கிர திசைதான். சென்னை மாநகர ஆணையாளர் பதவி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி என்று திமுக ஆட்சியிலும், கொடி கட்டிப் பறந்தார்.
கருணாநிதியின் கடைக்கண் பார்வை கிடைத்து விட்டது என்று, ராதாகிருஷ்ணன் ஆடிய ஆட்டத்துக்கு அளவே இல்லை. இந்த அடிப்படையிலேயே, உயர்நீதிமன்றத்தில் புகுந்து, வழக்கறிஞர்கள் மீது, கடும் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார். அந்தத் தாக்குதல் சிக்கலை ஏற்படுத்தியதும், அப்போது விசாரணைக்காக நியமிக்கப் பட்ட, நீதிபதி கிருஷ்ணாவையே கரெக்டிங் செய்து, தனக்கு ஆதரவாக அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்தார்.
இப்படிப் பட்ட ராதாகிருஷ்ணன், மனைவியோடு கோவை சென்றது, கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவை சந்தித்து சரணாகதி அடைவதற்காக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை சவுக்கிடம் சொன்னது, ராதாகிருஷ்ணனை விட, பணியில் மூத்த அதிகாரிகள் என்பதால், இந்தத் தகவலை புறந்தள்ளுவதற்கு இல்லை.
கடந்த வாரம் ஞாயிறன்று மதியம், இந்தத் தகவல் கிடைத்ததும், இதைச் சரிபார்ப்பதற்காக, கோவையில் உள்ள தொடர்புகளை தொடர்பு கொண்டு, விசாரிக்கப் பட்டு இருந்தது. அதற்குள் சவுக்கிடம் இத்தகவலைச் சொன்ன அதிகாரிகளும், இது தொடர்பான விசாரணையில் இறங்கியிருந்தார்கள்.
இந்தத் தகவல் ராதாகிருஷ்ணனை அடைந்ததும், ஞாயிறன்று இரவே அவசர அவசரமாக, கிளம்பி சென்னை திரும்பினார். வாக்கு எந்திரங்களை பார்வையிடுவது மட்டுமே இவரது வேலையாக இருந்திருந்தால், பார்வையிடல் முடிந்ததுமே, கோவையிலிருந்து கிளம்பியிருக்க வேண்டும். இன்பச் சுற்றுலா செல்வது நோக்கமாக இருந்திருந்தால், மசனக்குடியில் ஞாயிறு இரவு மட்டுமாவது தங்கியிருக்க வேண்டும். இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல், இரவு 9.30 மணி விமானத்திற்கு இரவு 9.15க்கு கோவை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் ராதாகிருஷ்ணன். அப்படி எதற்கு அவசர அவசரமாக கிளம்பி சென்னை வர வேண்டும் ?
ராதாகிருஷ்ணனின் இந்த மர்மமான நடத்தை, அவர் கொடநாட்டில் சென்று ஜெயலலிதாவின் காலில் விழுவதற்காகவே சென்றிருப்பாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
ராதாகிருஷ்ணன் அவர்களே…. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமென்றால், உயர்நீதிமன்றத்தில் உங்கள் காவல்துறையை விட்டு தாக்கினீர்களே…. அந்த வழக்கறிஞர்களின் காலில் விழுங்கள். சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும். அதை விடுத்து, நீங்கள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து நல்ல பதவியை வாங்கலாம் என்று முயற்சி செய்தீர்களே ஆனால், உங்களின் அந்த முயற்சியை சவுக்கு நிச்சயம் முறியடிக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
என்னவோ போங்கள்.