அந்த இடத்தில் கூட்டம் சேரத் தொடங்கியது. சிகப்பு நிற சான்ட்ரோ கார். நிறுத்துவது போல நிறுத்தி விட்டு அந்தக் கார் நிற்காமல் பறந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் ஏய் ஏய் என்று கத்தினார்கள். அவர்கள் கத்தியது காதில் விழுந்திருந்தால் கூட நிறுத்தியிருக்கவா போகிறான்…
எழுந்து பார்த்தேன். கீழே விழுந்ததில் இடது கையில் முழங்கைக்குக் கீழே தேய்த்து தோல் பிய்த்துக் கொண்டு இருந்தது. ரத்தம் வழியாமல் மெள்ள மெள்ள ஊறியது.
ஆட்டோக் காரர் ஒருவர், காரில் சென்றவனை கெட்டவார்த்தையில் திட்டினார். “வாங்க சார் ஹாஸ்பிட்டல் போகலாம், பக்கத்துலதான் இருக்கு என்று அந்த ஆட்டோக்காரரே அழைத்தார். ரத்தம் ஊறுவதையும், சாலையில் இருந்த மண் கீழே விழுந்து தேய்த்த இடத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன். இதை க்ளீன் செய்து மருந்து போடாவிட்டால் சிக்கலை ஏற்படுத்தும் என்று தோன்றியது.
“ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு சார்.. ? “ என்று கேட்டதும், அடுத்த தெருவிலேயே இருப்பதாக சொன்னார்.
ஆட்டோவில் வாருங்கள் என்று அவரின் அழைப்பை வேண்டாம் என்று மறுத்து, நானே மருத்துவமனைக்குச் சென்றேன். லேசான சிராய்ப்புதான் என்றாலும், தோல் முழுமையாக பிய்ந்திருந்தது. வலியை விட எரிச்சல் அதிகமாக இருந்தது. ஃபோர்செப்சில் பஞ்சைப் பிடித்து, பழுப்பு நிறத்தில் ஒரு திரவத்தை அந்தப் பஞ்சில் ஊற்றி தேய்த்தபோது வலி தலைக்கேறியது. பல்லை இறுக்கக் கடித்துக் கொண்டேன். டாக்டர் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
வீட்டுக்கு வந்ததும், அம்மாவிடம் சொல்லாமல் தலை வலிக்கிறது என்று சொல்லி விட்டுப் போய் படுத்து விட்டேன். வலி விண் விண்ணென்றது.
இடித்து விட்டு நிற்காமல் போன அந்தக் கார் மீண்டும் மீண்டும் உறுத்திக் கொண்டே இருந்தது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் குழப்பமாக இருந்தது. இயல்பாக நடந்த விபத்தா இல்லை என் மரணத்தை நோக்கிய சதியா ? கையில் வலி கூடிக்கொண்டே இருந்தது. சாப்பிடும்போது அம்மா பார்த்து விடுவாளென்று சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி விட்டேன். அந்தக் குழப்பத்தோடே தூங்கிவிட்டேன்.
காலை எழுந்ததும் வலி விபத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியது. பல் விளக்கும்போது அம்மா பார்த்து விட்டாள்… “என்னடா இது.. “ என்று பதறினாள். நாய் குறுக்கே வந்து விட்டது என்றேன்.. கையை புரட்டிப் பார்த்து விட்டு, நான் மருத்துவமனை சென்று வந்திருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொண்டு, இவனுக்கு நேரமே சரியில்ல என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டே சென்றாள். அந்தக் காரை என் எண்ணத்திலிருந்து அகற்ற முடியவில்லை. பின்னால் வந்து இடித்தான்.. நான் சற்று எசகு பிசகாக விழுந்திருந்தால் இன்னும் பலமாக அடிபட்டிருக்கும். என்னைக் கொல்வது நோக்கமாக இருக்காதோ.. மிரட்டுவதுதான் நோக்கமாக இருக்குமோ. கொல்வதாக இருந்தால் இன்னும் வேகமாக இடித்திருப்பானோ.. அவன் இடித்த நேரம் பார்த்து சாலை ட்ராஃபிக் இல்லாமல் இருந்தது.. ட்ராஃபிக் இருந்தால் சிக்கியிருப்பான்..
யாரிடமாவது இதைப் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. நாளை வசந்தி வந்து விடுவாள். வசந்திக்குத் தெரிந்தால் பயந்து விடுவாள். இப்போது பேசலாமா… மணி 11 ஆகி விட்டது. இந்நேரம் வந்து கொண்டிருப்பாள். தூங்கியிருப்பாள். காலையில் பேசிக் கொள்ளலாம்
மறுநாள் ஹாஸ்டலுக்குப் போனேன். இரண்டு வாரங்கள் கழித்துப் பார்ப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கையைப் பிடித்துக் கொண்டேன்.
“காபி ஷாப் போலாமா…. ?“ என்றேன்.
“ம் வா.. “
வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் தோளில் சாய்ந்து கொண்டாள். சட்டென்று இறுக்கிப் பிடித்தாள்.
“ஏய்.. என்னடி ஆச்சு உனக்கு…“
“ம் பிடிக்கலன்னா சொல்லு.. “ என்று விலகினாள்
வண்டி ஓட்டிக் கொண்டே, சட்டென்று கையை இழுத்து இறுக்கிக் கொண்டேன். “பிடிக்கலன்னு சொன்னேனா…. இடியட்.. என்ன ஆச்சு.. அம்மிணி இவ்ளோ பாசத்தை பொழியறீங்களேன்னு கேட்டேன்…“
“ம் சும்மாதான்.. ரெண்டு வாரம் ஆச்சுல்ல பாத்து… நீ ஜாலியா இருந்துருப்ப.. நான் உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்தேன். எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா…“
“ஏய் நானும்தான்டி கஷ்டப்பட்டேன். நீ வீட்ல இருக்கறதுனால போன் பண்றதுக்கும் பயமா இருந்துச்சு.. “
டக்கென்று தோளைக் கடித்தாள்.. வலித்தது.
“என்னடி பண்ற.. வலிக்குது…“
“ம் ஆசையா இருக்கு கடிச்சேன். வேணும்னா நீ திருப்பிக் கடிச்சுக்கோ“
“தனியா மாட்டுனேன்னா நீ அவ்ளோதாண்டி.. ரெண்டு நாளைக்கு எந்திரிக்கவே முடியாது.. “
“கிழிச்ச நீ.. சும்மா வாயிலே உதார் விடாத.. “
“நீ பாரு என்ன ஆகறன்னு.. “
“பாக்கலாம் டா… நீயா நானான்னு பாத்துடலாம்.. “
காபி ஷாப் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு, காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம்.
“என்ன சொல்றாங்க வசந்தி… ? “
“யாரு என்ன சொல்றாங்க… ? “
“என்ன வசந்தி வெளையாட்ற… உங்க வீட்லதான்…“
“அதப் பத்தி அப்புறம் பேசிக்கலாம் வெங்கட்…. “
“என்னப்பா.. என்ன சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்கனும்னுதானே கேக்கறேன்.. ? “
“இப்போ என்னடா… நாளைக்கேவா கல்யாணம் ஆகப்போகுது எனக்கு… ? இப்போ உன் முன்னாடி கல்லு மாதிரி உக்காந்துருக்கேன்ல .. “
“ம்.. “
“அப்புறம் என்ன… ? வேற ஏதாவது பேசு.. “
“நேத்து ஆக்சிடென்ட் ஆயிடுச்சு வசந்தி.. “
பதறினாள்.. “என்னடா சொல்ற.. எங்க அடிபட்டுச்சு… ?“
“பெருசா ஒண்ணும் இல்ல. “ என்று கையைக் காண்பித்தேன். தோல் உரிந்த இடத்தைச் சுற்றி வீங்கியிருந்தது.
“நல்ல வேளை ப்ராக்சர் எதுவும் ஆகலை.. இப்படியேவா வண்டி ஓட்டிக்கிட்டு வந்த… வலிக்கல ?“
“ரொம்ப ஒண்ணும் வலி இல்ல… பட் இது ஆக்சிடென்ட்டா இல்ல… யாராவது வேணும்னே பண்ணாங்களான்னு டவுட்டாவே இருக்கு வசந்தி.. “
“ரொம்ப கற்பனை பண்ணாத வெங்கட்… நீ தேவையில்லாம பயப்பட்ற… ஒரு நாளைக்கு ஆயிரம் ஆக்சிடென்ட் நடக்குது.. இதப்போயி பெரிய கான்ஸ்பிரசி மாதிரி சொல்றியே… ஃபர்கெட் இட்.“
“இல்ல வசந்தி.. எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு.“
“தேவையில்லாம மனசக் கொழப்பிக்காத வெங்கட். அம்மா எப்படி இருக்காங்க.. கால் வலின்னு சொன்னியே. இப்போ பரவாயில்லையா.. “
“ம். பரவாயில்லை..
எனக்குத் தோன்றியது போல இவளுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இவள் சொன்னது மாதிரி நாம்தான் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ….
“என்னடா யோசிச்சுக்கிட்டே இருக்க.. சியர் அப் டார்லிங்.. எத்தனை நாள் கழிச்சு வந்துருக்கேன்.. என்னப் பாத்தது ஒனக்கு கொஞ்சம் கூட சந்தோஷமாவே இல்ல..” என்று சிணுங்கினாள்.
“அய்யோ இல்ல வசந்தி.. என்ன பேசற.. சந்தோஷம் இல்லாமையா பாக்க வந்துருக்கேன்.. “
“உண்மையிலேயே சந்தோஷமா… இல்ல நான் போனதும் இதான் சாக்குன்னு வேற எவ பின்னாடியாவது போயிட்டியா.. “
“போனா சும்மா விட்ருவியா நீ… ஆஞ்சுற மாட்ட..”
“அந்த பயம் இருக்கட்டும்.. அப்ப திட்டுவேன்னு பயத்துலதான் கம்முனு இருக்க.. இல்லன்னா போயிடுவ… அப்படித்தானே…“
“என்ன மேடம் புல் ஃபார்ம்ல இருக்கீங்க போல இருக்கு….“
“எஸ்.. அப்ஸல்யூட்லி. இல்லன்னா உன்ன மாதிரி ஆளை சமாளிக்க முடியுமா ? நான் இருக்கும்போதே உன் கண்ணு மேயுது…”
“ச்சீ. சத்தியமா நான் உன்னைத் தவிர யாரையுமே பாக்கறது கூட இல்லை தெரியுமா.. அதோ அந்த கார்னர்ல டக்கரா ஒரு ஃபிகர் உக்காந்துருக்கரத நான் பாக்கவேயில்ல தெரியுமா….“
“டேய் பொறுக்கி.. தெரியும்டா உன்னப் பத்தி… என்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்பவே முழுங்கற மாதிரி பாத்தியே..“
“நீ தானேடி சாட்ல வந்த… நானா உன்கிட்ட வந்து பேசுனேன். என்ன சொல்ற.. நீ சரியான ஜொள்ளு..”
“நான் சின்னப்பொண்ணு.. ஏதோ ஆர்ட்டிக்கிள் நல்லா எழுதுறியேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சேட் பண்ணா.. எப்போ எப்போன்னு அலைஞ்சுக்கிட்டு என் பின்னாடியே வர்ற.. ? பெரிய மனுசன் மாதிரியாடா நடந்துக்கிட்ட நீ… ? “
“நீ அவ்ளோ அழகா இருந்தடா கண்ணு… உன் பின்னாடி எப்படி அலையாம இருக்க முடியும் ? அலையாம இருந்தா எனக்கு கண்ணு குருடுன்னு அர்த்தம்.. “
“அய்யோ.. ஸோ ஸ்வீட் மாமா…. நாளைக்கு என்னை எங்க கூட்டிட்டுப் போற மாமா… “
”எங்க வேணாலும்.. ”
”வேண்டா வெறுப்பால்லாம் கூட்டிட்டுப் போக வேணாம்பா.. ” பொய்யாகக் கோபித்தாள்.
”ஏய் என்னடி.. வேண்டா வெறுப்பான்னு சொன்னேனா… ”
”அப்புறம்.. சலிச்சுக்கிட்டே போகலாம்னு சொன்ன மாதிரி இருக்கு..? ”
”அய்யோ.. இல்லடி… எங்க வேணாலும் போலாம்.. ஐ யம் அட் யுவர் டிஸ்போசல் டுமாரோ… (I am at your disposal tomorrow) டுமாரோ ஈஸ் எக்ஸ்க்ளுஸிவ்லி ஃபார் யு.. (Tomorrow is exclusively for you) என் லைஃபையே உனக்காக தந்துட்டேன்.. நாளைக்கு ஒரு நாளை உனக்காக ஸ்பென்ட் பண்ண மாட்டேனா…”
டக்கென்று எழுந்து உதட்டில் முத்தமிட்டாள். யாராவது வருகிறார்களா என்று அவசரமாக பார்த்தேன்…
“யாரும் வரலடா.. பாத்துட்டுத்தான் குடுத்தேன். “
சொன்னபடி மறுநாள் காலை எட்டரை மணிக்கெல்லாம் ஹாஸ்டல் சென்று காத்திருந்தேன். வழக்கம் போலவே அன்றும் அரை மணி நேரம் கழித்தே வந்தாள். அவள் வந்த உடனேயே லேட்டானதற்கு சமாதானம் அவள் எப்படிச் சொல்லுவாள் என்பதை கிண்டலாக நடித்துக் காட்டினேன்.
“சாரி.. வெங்கட்… லேட்டாயிடுச்சு… இதத்தானே சொல்லப்போற… உக்காருடி வண்டில..” என்றேன்..
“என்னை எப்போப்பாத்தாலும் திட்டிட்டே இருக்க….“ என்று செல்லமாக மூஞ்சை சுருக்கிக் கொண்டாள்.
“அத விடு.. எங்கப் போலாம்னு சொல்லு…“
“எங்கயாவது போ.. சினிமாவுக்குப் போலாமா… ? இல்ல ஷாப்பிங் போலாமா ? “
“எதுனாலும் ஓ.கே.. “
“ஷாப்பிங் போலாம்.. எனக்கு ட்ரெஸ் வாங்கணும்.. “
“எதுக்குடி ட்ரெஸ்.. ஊருக்குப் போறதுக்கு முன்னாடிதானே வாங்குன.. ?”
“ம்.. அடுத்த வாரம் என் பர்த்டே.. அதுக்கு வாங்கிக்க சொல்லி எங்க அப்பா பணம் போட்ருக்காரு…“
ச்சை… நான் அவள் பிறந்தநாளை எப்படி மறந்தேன்.. பல தடவைகள் சொல்லியிருக்கிறாள்.. ச்சை.. உறுத்தலாக இருந்தது. ஊருக்கு முன் நான் அல்லவா ஞாபகம் வைத்திருக்க வேண்டும்..
“சாரி வசந்தி…. மறந்துட்டேன்…“
“உங்களுக்கு இதெல்லாம் எப்படி சார் ஞாபகம் இருக்கும். எவன் எங்க மாட்டுவான்.. எவனை சிக்க வைக்கலாம்னு அதுலதான் உன் கவனம்.. “
“உனக்கு என்னடி வேணும்.. சொல்லு.. வாங்கித் தர்றேன்…”
“எனக்கு ஒண்ணும் வேணாம்பா…. எங்க அப்பா ட்ரெஸ் வாங்கிக்க பணம் குடுத்துருக்காரு.. நீங்க கூட்டிட்டு வந்து விடுங்க போதும்..“
அவள் நான் பிறந்தநாளை மறந்ததை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை… என்ன செய்து சமாதானப்படுத்துவது….
அண்ணா நகர் வழியாக சென்று கொண்டிருந்தோம்.. ஒரு லேப்டாப் விற்பனை செய்யும் கடை வந்தது. டக்கென்று வண்டியை நிறுத்தினேன்.
“எறங்கு…“
“இங்க எதுக்குடா நிறுத்தற.. ? “
“எறங்கு சொல்றேன்.. “
நேராக லேப்டாப் கடைக்குள் சென்றேன். அவளிடம் எதுவுமே பேசவில்லை. டிஸ்ப்ளேயில் வைத்திருந்த பல லேப்டாப்கள் பிசினெஸ் லேப்டாப்களாக முரட்டுத்தனமாக இருந்தன. சோனியில் மட்டும் பெண்களுக்கென்றே செய்தது போல நளினமாக, அழகான வண்ணத்தில் வைத்திருந்தார்கள். சோனி லேப்டாப்பைப் பார்த்து இதை எடுத்துக கொள்கிறேன் என்றேன்.
“உன்கிட்டதான் லேப்டாப் இருக்குல்லடா… எதுக்கு இன்னொன்னு வாங்கற.. “
“அது ரிப்பேர் ஆயிடுச்சு…. சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க… அதான்.. “
“ஓ.கே.. ஓ.கே…“
பில்லுக்கு பணத்தை செலுத்தி விட்டு வெளியே வந்தோம். வந்ததும் ஹேப்பி பர்த்டே என்று சொல்லியபடி அவள் கையில் கொடுத்தேன்.
சட்டென்று அவள் கண்கள் கலங்கின… என்ன வெங்கட் இப்படிப் பண்ற… நான் உன்ன சும்மாதான்டா கிண்டல் பண்ணேன்.. ஏன்டா இவ்ளோ வெலை கொடுத்து வாங்குன.. எனக்கு எதுக்குடா இப்போ லேப்டாப்.. “
“எனக்குப் புடிச்சுருக்கு வாங்கித் தர்றேன்.. வச்சுக்கடி… எனிதிங் ஃபார் யு…“
சட்டென்று எம்பி கன்னத்தில் முத்தமிட்டாள். “யேய் ரோடுடி…“
“இருக்கட்டும் போடா…“
”வெங்கட்… உங்க வீட்டுக்குப் போலாம்டா… உங்க அம்மாவைப் பாக்கணும்.. ஃபோன்லதான பேசிருக்கேன்.. சினிமாவுக்கு இன்னொரு நாள் போலாம்.. ”
”ஓ எஸ்.. ஷி வில் பி வெரி ஹேப்பி.. போலாம் வா.. ”
நேராக ஹாஸ்டலில் சென்று லேப்டாப்பை வைத்து விட்டு, வீட்டுக்குச் சென்றோம்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா ஆச்சர்யமாகப் பார்த்தாள்… அவளே அறிமுகப்படுத்திக் கொண்டாள்.. ”அம்மா நான்தான் வசந்தி.. உங்கக் கூட போன்ல பேசியிருக்கேன்.. ஞாபகம் இல்லையா… ? ”
”இருக்கும்மா… வக்கீல்தானே நீ…”
”ஆமாம்மா.. வக்கீல் வசந்திதான். எப்படி இருக்கீங்க.. உடம்பு நல்லா இருக்கா…?”
”நல்லா இருக்கும்மா.. உக்காரும்மா. காபி போட்றேன்.. ”
”நான் லன்ச் சாப்டலாம்னு வந்தா காபி மட்டும்தானா.. ? ”
”லன்ச் பண்றேம்மா.. மொதல்ல காபி சாப்புடு… என்னம்மா பொட்டு கூட வைக்காம வந்துருக்க..”
”இல்லம்மா வச்சேன்.. கீழ விழுந்துருச்சு. ” கூசாமல் புளுகினாள். அன்று அவள் வரும்போதே பொட்டு வைத்திருக்கவில்லை.
அம்மா சட்டென்று குங்குமச் சிமிழை எடுத்து பொட்டு வைத்து விட்டாள். பொட்டு வைத்ததும் வசந்தியை முத்தமிட்டாள். இவளும் பதிலுக்கு முத்தமிட்டாள். சட்டென்று அந்த இடம் நெகிழ்ச்சியால் நிறைந்தது போலிருந்தது. பேசிக்கிட்ரும்மா வந்துட்றேன் என்று சொல்லி விட்டு அம்மா காபி போட கிச்சனுக்குள் சென்றாள். இவள் என்னோடு உட்காராமல், டக்கென்று கிச்சனுக்குள் சென்றாள். இருவரும் ரகசியமாக காதில் விழாதவாறு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒன்றும் கண்டுகொள்ளாமல் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் காப்பியோடு ஹாலுக்கு வந்தார்கள். ”என்னம்மா பேசிக்கிட்டிருந்த இவக்கிட்ட…”
”கல்யாணம் பண்ணிக்க, பண்ணிக்கன்னு சொல்றேன்.. இவன் முடியாதுன்னு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டுருக்கான்னு நீ பண்றததானே சொன்னேன்..”
என்னமோ தெரியவில்லை. வசந்தியை பார்த்துமே பிடித்து விட்டது அம்மாவுக்கு. கல்யாணம் வேண்டாம் என்று நான் பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருந்து விட்டு, திடீரென்று வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்ததும் அம்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வசந்தி ரொம்ப இயல்பாக அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள். வெளிநாட்டிலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த மகளோடு அன்னியோன்யமாக உரையாடும் ஒரு தாயும் மகளும் போல பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாளே என்று கூடத் தோன்றியது. ஒரே நாளில் அவ்வளவு நெருக்கமாகி விட்டார்கள்.
ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இருக்கிறதா என்று கேட்டு விட்டு வாரா வாரம் வீட்டுக்கு வந்து சாப்பிடு என்று இயல்பாக வசந்தியை அழைத்தாள் அம்மா. அவளும் மகிழ்ச்சியாக வர்றேன் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள். உங்க வீட்ல எத்தனை பேர், அப்பா என்ன பண்றாரு… அம்மா என்னப் பண்றாங்க என்று அவள் வரலாறையே முழுமையாக தெரிந்து கொண்டாள்.
பேசிக் கொண்டிருக்கும்போதே அம்மா போன் ஒலித்தது. ””அய்யய்யோ… அப்படியாங்க… கொஞ்சம் இருங்க. நான் பத்து நிமிஷத்துல வர்றேன்.. ” என்று அம்மா பதற்றமாக பதில் சொன்னாள்.
”என்னம்மா ஆச்சு…”
”கார்த்திக் அம்மா இருக்காங்கள்ல.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்களாம்டா.. அவங்க பையன் ஆபிஸ்லேர்ந்து வர லேட்டாகும். ஹாஸ்பிட்டல் போகணும்னு வரச் சொல்றாங்க.. நான் போயிட்டு வந்துட்றேன்.. நீ இரும்மா… ஒன் அவர்ல வந்துட்றேன்.. என்னை வந்து அவங்க வீட்ல எறக்கி விட்டுட்றா.. ”
அம்மா வெளியே போகிறாள் என்றதும் என்னையறியாமல் குதூகலம் ஏற்பட்டது. வசந்தியோடு தனிமை என்ற எண்ணமே உடலில் சூட்டை ஏற்படுத்தியது. பதற்றத்தை காண்பித்துக் கொள்ளக் கூடாது என்று கஷ்டப்பட்டு நிதானமாக இருப்பது போல இருக்க முயற்சித்தேன். அவள் எனக்கு மேல் பரபரப்பானாள். என் கண்களை சந்திப்பதைத் தவிர்த்தாள். மேஜையில் இருந்த கதிரொளியை எடுத்து ஏதோ ஆழமாக படிப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
”வாடா போலாம்” என்று அம்மா அழைத்ததும் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இரண்டு தெருக்கள் தள்ளி இருந்தது அந்த கார்த்திக் அம்மாவின் வீடு. நேராகச் சென்று அம்மாவிடம் சீக்கிரம் வந்து விடு என்று சொல்லி விட்டு, திரும்பியபோது பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது. எங்கே கீழே விழுந்து விடுவேனோ என்று பயமாக இருந்தது. ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தேன். சத்தம் வராமல் கதவை தாழிட்டேன்.
ஹாலில் இல்லாமல் பெட்ரூமில் என் லேப்டாப்பில் பேஸ் புக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் சென்று கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன்.
‘ஆண்டவா… எவ்வளவு வாசனையாக இருக்கிறாள்….’
”ஏய் கம்முனு இருடா.. அம்மா வந்துடப்போறாங்க…” வரமாட்டாங்கடி என்று சொல்லியவாறே இறுக்க அணைத்தேன். வெங்கட் வேணாம் வெங்கட் என்ற முனகியபடியே தளர்ந்தாள். முத்தங்களால் அவளை நனைக்கத் தொடங்கினேன். காமம் வெறியூட்டியது. அவள் வெறி இரட்டிப்பானது. ஆணாக மாறினாள். புலியாக என்னை வேட்டையாடியாள். வேட்டையாடி, வேட்டையாடப்பட்டு, காமக்கடலில் நீந்த முயன்று அலைகளால் ஒதுக்கப்பட்ட சருகு போல களைத்தோம்.
மாலை அம்மா வந்ததும் சொல்லி விட்டுக் கிளம்பினோம். அவளை ஹாஸ்டலில் இறக்கி விட்டேன். நாளை முழுவதும் அவளுக்கு வேலை இருப்பதாகச் சொன்னாள்.
அடுத்த இரண்டு நாட்களும் அவளைப் பார்க்க முடியவில்லை. எனக்கும் அடுத்த இதழுக்கான கட்டுரை வேலைகள் சரியாக இருந்ததால் ஒன்றிரண்டு மெசேஜ் அனுப்பி விட்டு வேலைகளில் மூழ்கி விட்டேன்.
மூன்றாவது நாளும் அவளிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. தொடர்ந்து கால் செய்தால் எந்த அழைப்புக்கும் பதில் இல்லை. மெசேஜுக்கும் பதில் இல்லை. உடம்பு சரியில்லாமல் போயிருக்குமா.. இல்லை போனை தொலைத்து விட்டாளா.. ?
ஒன்றும் புரியாமல் நேரே ஹாஸ்டலுக்குப் போய் பார்ப்போம் என்று வாசலில் காத்திருந்தேன். மீண்டும் போன் அடித்தால் எடுக்கவேயில்லை. என்ன இப்படிப் பண்ணுகிறாளே என்று எரிச்சலாக இருந்தது.
அவள் ரூம் மேட்டின் நம்பர் இருந்தது.
“ஹலோ… நான் வசந்தி ஃப்ரெண்ட் வெங்கட் பேசறேன்.. வசந்தி ஃபோன் பண்ணா எடுக்க மாட்றாங்க. உடம்பு இது சரியில்லையா…? எங்க இருக்காங்க.. ? “
“உங்ககிட்ட சொல்லலயா…… ? அவங்க முந்தாநாளே ஹாஸ்டலை காலி பண்ணிக்கிட்டு மதுரை போயிட்டாங்களே… உங்ககிட்ட சொல்லிட்டதா சொன்னாங்களே… ?
அதற்குப் பிறகு அவள் பேசியது கேட்கவில்லை.
தொடரும்.
கம்யூனிஸ்ட் கட்சில வளர்ப்பா வளர்த்து கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிக்கொடுத்து கடைசில மனச பறி கொடுத்திட்டு வந்து நிக்கிறீங்களே தோழர்! லேப்டாப்பும் போச்சு, திருப்பி கேட்டாக்க, “அது”க்கும் இதுக்கும் சரியாப்போச்சுன்னு சொல்லீடும். வேலை போய்டுச்சுன்னா கோர்ட்டுக்கு போய் வாங்கிடலாம். ஏமாத்திட்டான்னு கோர்ட்டுக்கு போனா தீர்ப்பு வற்றதுக்குள்ள வயசாகிடுமே? இதல்லாம் கோர்ட்டுல எடுத்தாக்க மத்த நிஜமான கேச விசாரிக்கவே முடியாதே?
Sir ur story narration is superb, Iam in really doubt whether Iam reading a political thriller or a romantic novel. Simply superb. Keep up the momentum sir.
twist than unga kitta pdicha style… semmaaaaa sir..
சவுக்கை எனக்கு அரசியல் திருடர்களை வேட்டையாடும் பத்திரிக்கையாகவே தெரியும். வேள்வியை கடந்த மூன்று நான்கு பாகங்களாகவே படிக்கிறேன்.
வேள்வி மிகவும் பிடித்துள்ளது. காதலில் பெண்கள் கடைசியில் என்ன செய்வார்களோ அதையே வசந்தியும் செய்வதாக தோன்றுகிறது…
அரசியல் + காதல் + சஸ்பென்ஸ் த்ரில் இவை யாவும் கலந்து கட்டி அடிக்கறீங்க. இடையிடையே வரும் இடைவெளி தான் அதிகம்.. தொடர்ந்து தொடரைப் பதிப்பித்தால் சந்தோஷம் அடைவோம்
காதல் வேள்வியில் டுவிஸ்டுகள் அணல் பரக்கிறது. எங்களையெல்லாம் ரொம்ப எதிர்ப்பார்க்கவைக்காம சீக்கிரமா அடுத்த பாகத்தை கொடுத்துவிடுங்கள் தயவுசெய்து.
ையையோ போச்சா? என்ன சார் ஆச்சு?
Sir, I don’t like this story. Savukku is investigative online journal . please close this love story. Publish articles .I except you like The Wire
Puthu laptop (vada) Poche?
Patchi parandhiduchchu…..inimel “Satti suttadhadaa, Kai vittadhadaa..”