கர்நாடகாவின் கயிறை இப்போது கையில் பிடித்துள்ள மனிதர் வஜூபாய் வாலா. காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கர்நாடகாவில் அரசு அமைக்க உரிமை கோரிவருகிறது என்பதால், ஆளுநர் வாலாவின் நகர்வுகளை ஆர்வமாக கவனித்து வருகின்றனர். தென்னிந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் ஆளுநராக மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் ஒரு முழுநேர ஆர்எஸ்எஸ்காரராக இருந்தார். குஜராத் அமைச்சரவையில் அமைச்சராகவும் நீண்ட நாட்கள் இருந்துள்ளார்.
கர்நாடகாவில் அரசு அமைக்க உரிமை கோரும் குமாரசாமியின் கோரிக்கையை ஆதரித்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 117 எம்.எல்.ஏக்களின் பட்டியலை சமர்ப்பித்திருந்தாலும், இப்போது பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்துள்ளார். சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது.
80 வயதான வாலா, வணிக மையமான ராஜ்கோட்டிலிருந்து 1970களின் தொடக்கத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 26-வயதில், பாஜகவின் முந்தைய அவதாரமான பாரதீய ஜனசங்கத்தில் சேர்ந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சிறிது காலமாக அவர் பங்குபெற்றபோதிலும், ஒரு முக்கிய பாத்திரம் எதுவும் வகிக்கவில்லை.
1970-களின் பிற்பகுதியில் அவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார். அதனால், ராஜ்கோட்டில் முக்கியத்துவம் பெற்றார். 1975-ல் மாநகராட்சி உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், நகரில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காங்கிரஸ் கோட்டையை வெற்றிகரமாக உடைத்தபோதுதான பாஜக மாநில தலைமையால் அவர் கவனிக்கப்பட்டார் என்கிறார் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்.
பெரும்பாலும் சுவாரஸ்யமான பழைய நிகழ்வுகள் மற்றும் கத்தியவாடிக்கே உரிய நகைச்சுவை கலந்த பேச்சுத் திறன்கள் மூலம் மக்களுடன் இணைக்கும் அவரது திறமை மற்றும் தன்-முனைப்பற்ற நடத்தை ஆகியவை ஒரு செல்வாக்கு நிலைக்கு தள்ளியது. அவர் பள்ளி நாட்களிலிருந்து தொடர்பிலிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் அவரது கணிசமான சமூகமான OBC காரடியா ராஜபுத்திரர்களின் ஆதரவை அவர் ஏற்கெனவே பெற்றிருந்தார். 1983 ல் ராஜ்காட்டின் மேயராக ஆனார், அது மேலும் அவரை “வளமையாக்கியது.”
1985 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராஜ் கோட் மேற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். தொடர்ந்து ஏழு முறை அத்தொகுதியை அவர் தக்கவைத்தார்.
சாதாரண பொதுமக்கள் அவரை எப்போதும் சந்திக்கலாம் என்ற அவரது அணுகுமறை அவரை ஒரு மாநில அளவிலான பாஜக தலைவராக்கியது. இதன் விளைவாக, பாஜக அரசில் அவருக்கு முக்கியமான அமைச்சரவைகளை அவரது கட்சி வெகுமதியாக வழங்கியது. 1998 முதல் 2012 வரை குஜராத் நிதி மற்றும் வருவாய் அமைச்சராக பணியாற்றினார், அதன்பின், அவர் சட்டமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
இவர் 1998 முதல் 2001 வரை பாஜகவின் முதலமைச்சராக இருந்த கேசுபாய் படேலின் ஒரு தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், பாஜக அணிகளில் ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பிறகு, முதலமைச்சராக பொறுப்பேற்க நரேந்திர மோடி புது தில்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டபோது, அவர் (மோடி) போட்டியிடுவதற்காக தன்னுடைய தொகுதியை காலி செய்து கொடுத்தார். இது அவரை மோடியின் நல்லெண்ணத்துக்குள் கொண்டு வந்தது. முதலமைச்சர் மோடியின் கீழ் ஒன்பது ஆண்டுகள் நிதியமைச்சராக வாலா பணியாற்றினார். மோடியின் தலைமையின்போது, கேசுபாய் படேலின் ஆதரவாளர்கள் என கருதப்பட்ட பலர் வெளியேற்றப்பட்ட போதும், 13 ஆண்டுகாலம் குஜராத் மாநில முதலமைச்சராக மோடி பணியாற்றிய காலம் வரை அவரது நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக வாலா இருந்தார்.
”அவர் ஒரு நடைமுறை அறிந்த, மென்மையாக பேசும் தலைவர். சட்டமன்றத்தில் மிகவும் பதட்டமான சூழ்நிலையை தனது நகைச்சுவை மூலம் எளிதாக்க கூடியவர். குஜராத் சட்டப்பேரவையில் 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவர் என்ற பெருமைக்குரியவர். ஒரு பேச்சாளராக, மிகவும் குழப்பமான தருணங்களில் அவையை கட்டுக்குள் கொண்டுவர தனது நகைச்சுவையை பயன்படுத்தினார்,” என்கிறார் அம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர்.
அவரது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில், கட்சியிலும் மிக முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். குஜராத் மாநில பாஜக தலைவராக பணியாற்றியுள்ளார். ஒரு அமைச்சராக அவரது பணி 2012ல் முடிவடைந்தபிறகு, 2014வரை அவர் குஜராத் மாநில சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தார். குல்தான்லால் டோலாக்கியா மற்றும் அஷோக் பட் ஆகியோருக்கு பிறகு, மாநிலத்தில் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக வாலா இருந்தார் என அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும், அவருடைய அரசியல் நிலைப்பாட்டோடு அவரது வர்த்தகம் வளர்ச்சியுற்ற நிலையில், சட்டவிரோதமாக தனிப்பட்ட லாபத்தை சம்பாதிக்க தனது பதவிகளை பயன்படுத்திக்கொண்டதாக அவர் மீதான குற்றஞ்சாட்டை அவர் சந்திக்கத் தொடங்கினார். “ராஜ்கோட் மற்றும் அஹமதாபாத் பிராந்தியங்களில் ரியல் எஸ்டேட் துறையில் அவருக்கு பல பிசினெஸ்கள் உள்ளது என்றுது பரவலாக பேசப்படுகிறது. கடந்த தசாப்தத்தில் கட்டப்பட்ட ஒவ்வொரு பிரதான சொத்துக்களிலும், நேரடியாக இல்லை என்றாலும், அவருக்கு அதில் ஒரு பங்கு இருந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், அகமாதாபாத்தில் ஒரு பங்குச் சந்தை ஊழலில் அவரது வெளிப்படையான ஈடுபாடு விவாதிக்கப்பட்டது. எனினும், அந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதை நான் சொல்லியாகணும்,” என்றார் அந்த மூத்த பத்திரிகையாளர். பா.ஜ.க தலைவர்கள் அவரை கட்சியின் “அவசரகால நெருக்கடிகளை கையாள்பவராக” பார்த்தனர். அதனால், கட்சியில் அவரது அவசியத்தன்மை மறுக்கப்படாமல் இருந்தது. பா.ஜ.க தொண்டர்களும், தலைவர்களும் சிக்கலான தருணங்களின்போது அவரை நேரடியாக அணுகுவர். அவர் தனிப்பட்ட நெருக்கடிகளில் அவர்களுக்கு உதவி செய்வார். அவர் மூத்த தலைவராக வளர்ந்து கொண்டே இருந்ததால், தேசிய தலைவர்களுக்கு கட்சியின் முரண்பாடுகளைத் தீர்க்க “அவரை போய் பாருங்கள்“ என்ற நபராக இருந்தார்,” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புள்ள ஒரு விவசாய தலைவர். ”தன்னுடைய எதிர்ப்பாளர்களையும் எப்படி சந்தோசமாக வைத்திருப்பது என்பதும் அவருக்கு தெரியும்” என்கிறார் அந்த விவசாய தலைவர்.
சுவாரஸ்யமாக, தற்போதைய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒரு மாநகராட்சி உறுப்பினராக துவங்கி, பின்னர் ராஜ்கோட் மாநகராட்சி மேயர் ஆனார். தீவிர அரசியலிலிருந்து வாலா ஓய்வுபெற்ற பிறகு, ராஜ்கோட் மேற்கு தொகுதியை விஜய் ரூபானி ஆக்கிரமித்துள்ளார். அவரது ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு இருந்தபோதும், காங்கிரஸ் எதிரி இந்திராணி ராஜ்யகுருவிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டபோதும், ரூபானியால் இன்னும் பதவியில் நீடிக்க முடிகிறது. அதற்கான பெருமை வாலாவையே சேரும். காரணம், தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் ராஜ்கோட் மேற்கு தொகுதியை பாஜகவுக்கு மிக பாதுகாப்பான தொகுதியாக மாற்றியிருக்கிறார்.
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும், வாலாவுக்கு கர்நாடக ஆளுநர் என்ற பரிசு வழங்கப்பட்டது. தனது நகைச்சுவை பேச்சால் மக்கள் கூட்டத்தை இழுக்கும் வஜுபாய் வாலா, கன்னட மொழி பேசும் மாநிலத்தில் தனது கத்தியவாடி அறிவு மற்றும் நகைச்சுவையைப் பயன்படுத்த வாய்ப்பின்றி, கர்நாடகாவில் மிகவும் சிரமப்பட்டுவருவதாக அவரைப்பற்றி ஒரு நகைச்சுவை உலவுகிறது.
அனேகமாக, இந்த அசௌகரியம்தான். 2016ல் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். “ஆடம்பரமான ஆடைகள் மற்றும் உதட்டுச்சாயம்” ஆகியவற்றை விட்டு விடுமாறு கல்லூரி செல்லும் பெண்களை அவர் நகைச்சுவையாக வலியுறுத்தினார். கல்வி நிறுவனம் அழகு போட்டி நடக்கும் ஒரு மேடையல்ல என அவர் நினைப்பதாக கூறினார்.
”இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகிய இருவரும் புத்திசாலிகள். வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க நீங்கள் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அடிமைத்தனத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும். இளம் பெண்கள் தங்களது நவநாகரீக உடைகளை கைவிட வேண்டும். நீங்கள் (இளம் பெண்கள்) கல்லூரிக்கு பாடம் பயில வருகிறீர்கள், அழகு போட்டி எதிலும் கலந்துகொள்வதற்காக அல்ல. நீங்கள் (இளம் பெண்கள்) புருவத்தை திருத்தவோ, உதட்டுச் சாயம் பூசவோ அல்லது உங்களது தலைமுடியை வெட்டிக் குறைக்கவோ தேவையில்லை,” என மைசூரில் 2016ல் நடைபெற்ற 103வது இந்திய அறிவியல் காங்கிரஸின் நிறைவு விழாவில் பேசுகையில் கூறினார். அவரது இந்த கருத்துக்கள் பெண்கள் உரிமை குழுக்களால் பரவலாக கண்டிக்கப்பட்டன.
ஆயினும், இன்று, அவர் ஒரு மாறுபட்ட வகையிலான சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். அவர் வகிக்கும் பதவியும், சங்பரிவாரத்துக்கான அவரது விசுவாசமும் நேரடி மோதலில் உள்ளன. 1996ல் வாலா குஜராத் மாநில பாஜக தலைவராக இருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த எச்.டி.தேவெ கௌடா பாஜக ஆட்சியைக் கலைத்தார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தன்னுடைய முகநூல் பதிவில் ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்துள்ளார். கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி கோரும் தேவெ கௌடாவின் மகன் குமாரசாமியை வஜுபாய் வாலா பழிவாங்க இதுதான் சரியான தருணம் என அவர் நினைத்தாரா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
எடியூரப்பாவை அரசு அமைக்க அழைத்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்திற்கான தனது கடமை மற்றும் கட்சி விசுவாசம் ஆகியவற்றிற்கு இடையே அவர் எதை முக்கியமாக கருதுகிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
-அஜோய் ஆஷிர்வாத் மகாபிரசாதா
பெண்கள் உதட்டு சாயம் பூசுவதையும், அழகு படுத்துவதையும் விட்டொழிக்க வேண்டும். ஆண்களை போல் உடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.