அதிர்ச்சி என்ற வார்த்தை என் உணர்வுகளை வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது. அதிர்ச்சி, ஆச்சர்யம், வியப்பு என்று எல்லாவற்றையும் சேர்த்தது போன்ற ஒரு உணர்வு. என்ன செய்வது என்று புரியவில்லை. அவள் நம்பருக்கு போன் அடித்துப் பார்த்தேன். எடுக்கவேயில்லை.
வசந்தி… ஐ யம் வொர்ரீட்.. வாட் ஹேப்பன்ட்… ப்ளீஸ் கான்டக்ட் இம்மீடியட்லீ என்று செய்தியனுப்பினேன். பதிலில்லை.
நேராக அலுவலகத்துக்குச் சென்று பேஸ் புக்கில் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்த்தேன். அதிலும் இல்லை. யாஹூவிலும் இல்லை. எஸ்.எம்.எஸ் வந்தது. அவசரமாக எடுத்துப் பார்த்தேன். எடுத்துப் பார்த்தால் “கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ், ஜார்க்கண்ட்“ என்று மட்டும் இருந்தது. இந்த நேரத்தில் என்ன இழவு இது என்று கோபம் வந்தது. இருபது நாட்களுக்கு முன், இதே போல ஒரு மெயில் வந்திருந்தது. அதில் வெறுமனே கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ் என்பது மட்டுமே இருந்தது. ஏதோ ஸ்பாம் மெயில் என்று உடனே டெலிட் செய்து விட்டேன். ஏன் திருப்பி எனக்கு இதே விவகாரத்தை மெசேஜாக அனுப்ப வேண்டும்… ?
இது என்ன விவகாரம் என்பது ஒரு புறம் என் ஆர்வத்தை தூண்டினாலும், அதில் என் கவனத்தை செலுத்தும் நிலையில் நான் இல்லை.
எப்படி அவளைக் கான்டாக்ட் செய்வது.. சிவகாசியில் அவள் நெருங்கிய தோழியின் எண்ணுக்கு முயற்சி செய்தேன். அவள் எடுக்கவேயில்லை. வீட்டின் லேன்ட் லைனுக்கு அடிக்க பயமாக இருந்தது. தொடர்பு கொள்ள வேறு வழியே இல்லை என்பதால், லேண்ட் லைனுக்கு முயற்சி செய்தேன். அவள் அம்மா எடுத்து, “சொல்லுங்க… யாரு வேணும்..” என்றார். உடனே இணைப்பைத் துண்டித்தேன். எப்படித் தொடர்பு கொள்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டாலும் புரியவில்லை.
அவள் போய்விட்டாள் என்றதும் வீட்டில் யாருக்காவது மோசமாக உடல்நிலை சரியில்லாமல் போயிருக்குமோ என்றுதான் தோன்றியது.. ஆனால் அதற்கு ஹாஸ்டலை ஏன் காலி செய்ய வேண்டும் என்பது புரியவேயில்லை. மூன்று வருடங்களாகத் தங்கியிருந்த அறையைக் காலி செய்வது என்றால் விளையாட்டா… எப்படி ஒரு ஆளாய்ச் செய்தாள்… ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை….
எடிட்டர் வரச் சொன்னார்.
எடிட்டர் அறைக்குள் நுழைந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் என்ன ஆகியிருக்கும் என்பதே ஓடிக்கொண்டிருந்தது. “வெங்கட். இந்தா இது 2ஜி தொடர்பான டாக்குமென்ட்ஸ்… ஜெனெக்ஸ் எக்சிம் ஒரு கம்பெனி. இது மத்திய டெலிகாம் மினிஸ்டரோட பினாமி கம்பெனின்னு சொல்றாங்க. செக் பண்ணுங்க.. “
“நேரா ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனிஸ்க்கு போகவா சார்.. “
“அதெல்லாம் லேட்டாகும்பா… நெட்ல ஆர்ஓசி சைட்டுக்குப் போனா எல்லா டாக்குமென்ட்ஸும் இருக்கப் போகுது.. என்ன டிஃப்பிகல்டி (difficulty) உனக்கு ? க்விக்கா எடு… வர்ற இஷ்யூவுக்கு யூஸ் பண்ண முடியுமான்னு பாக்கலாம்…“
“சரி சார். “
‘எடிட்டர் ஆர்ஓசி வெப்சைட்டில் கம்பெனி விபரங்களை எடுக்கலாம் என்று சொன்னது எனக்கு இது வரை தெரியாமல் இருந்தது வெட்கமாக இருந்தது. இந்நேரம் நான் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா…’
ஆர்.ஓ.சி வெப்சைட்டுக்குப் போனேன். படிப்படியாக ஏராளமான வழிமுறைகள் வைத்திருந்தார்கள். பதிவு செய்து விட்டு லாகின் செய்வதற்கே ஒரு மணி நேரம் ஆனது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ் புக்கில் சென்று, ஏதாவது செய்தி அனுப்பியிருக்கிறாளா என்று பார்த்தேன். எந்த செய்தியும் இல்லை.
எடிட்டர் சொன்ன நிறுவனத்தின் ஆண்டு வருவாய், செலவு, நிகர லாபம், கம்பெனி நிர்வாகத்தின் போர்டு மீட்டிங் விபரங்கள், என்று ஒரு நிறுவனத்தின் அத்தனை ஆவணங்களும் இருந்தன. இப்படி ஒரு வரப்பிரசாதமான வெப்சைட்டை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேனே… அந்த வேலையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் வசந்தி கவனத்தை விட்டு தற்காலிகமாக அகன்றாள்.
ஜெனெக்ஸ் எக்சிம் நிறுவனத்தின் ஆவணங்களை பார்வைட்டு டவுன்லோட் செய்தேன்.
அந்நிறுவனத்தில் மொரீஷியசைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2008ம் ஆண்டில் 800 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் முதல் ஆண்டில் நஷ்டக் கணக்கு காண்பித்திருந்தது. ஒரே ஆண்டில் நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனம் எதற்காக 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் ? அதுவும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்பட்ட அதே 2008ம் ஆண்டில் இந்த முதலீடு நடந்துள்ளது. நிறுவனத்தின் பங்குதாரர் என்று ஒரு முஸ்லீம் பெயர் இருந்தது.
‘தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் இந்து… இந்த நிறுவனத்தை நடத்துபவர் ஒரு முஸ்லீம்.. எப்படித் தொடர்புப் படுத்துவது…’
அனைத்து ஆவணங்களையும் ப்ரின்ட் எடுத்துக் கொண்டு எடிட்டரிடம் கொடுத்தேன்.
“சார்.. பல ட்ரான்ஸாக்ஷன்ஸ் சந்தேகமா இருக்கு சார்… பட் மினிஸ்டரை கனெக்ட் பண்ண முடியாது சார்.. ஓனர் ஒரு முஸ்லீம். மினிஸ்டர் ஹிண்டுவாச்சே சார்…“
“ஏதாவது இருக்கும்யா… நல்லாப் பாத்தியா…“ என்று மொத்த ஆவணங்களையும் வாங்கிப் பார்வையிடத் தொடங்கினார்.
“இதோ பாரு வெங்கட்…. என்ன பாத்த நீ… என்று ஒரு டாக்குமென்டை எடுத்து நீட்டினார். “
சேஞ்ச் ஆப் டைரக்டர் என்று கடிதம் இருந்தது. அதில் பரமேஸ்வரி என்பவர் இயக்குநர் பதவியிலிருந்து 2009 தொடக்கத்தில் ராஜினாமா செய்திருந்த விபரம் இருந்தது. சார் “நானும் இதைப் பாத்தேன் சார்.. இந்த அம்மாவும் ஹிண்டுதானே சார்…“
“என்ன வெங்கட் நீ… இந்த அம்மா மத்திய அமைச்சரோட வொய்ஃப்யா.. எப்படி இது தெரியாம இருக்க… வீ ஹேவ் ய ஸ்டோரி மேன்… (We have a story man ) இந்தா இந்த டாக்குமென்ட்ஸை வச்சுக்க.. ஒரு ரஃப் ட்ராப்ட் (rough draft) போட்டு அனுப்பு.. இன்னைக்கு நைட்டுக்குள்ள அனுப்பனும். இந்த இஷ்யூவிலயே ப்ரேக் பண்ணிடலாம்…“
பேஸ் புக்கில் மீண்டும் லாகின் செய்து பார்த்தால் அவளிடமிருந்து எந்த செய்தியும் இல்லை.
அவசர அவசரமாக அந்த மிகப்பெரிய ஊழலின் தொடக்கப் புள்ளியிலிருந்து தொடங்கி மத்திய அமைச்சர் எப்படி தொடக்கம் முதலே இந்த ஊழலை மறைப்பதற்கு முயற்சி செய்தார் என்பதை விபரமாக கட்டுரையில் எழுதினேன். எடிட்டர் போனில் அழைத்தார்.
“வெங்கட்… முடிச்சுட்டியா….“
“இல்ல சார். பாதி முடிச்சுட்டேன்…“
“கொஞ்சம் வந்துட்டுப் போ…“
அவர் அறையில் நுழைந்ததும், “இன்னும் ஒன் அவர்ல முடிச்சுட்றேன் சார் என்றேன்.. அதுக்குக் கூப்பிடலய்யா… ஒரு முஸ்லீம்னு சொன்னியே… அவன் வேற யாரும் இல்ல. மினிஸ்டரோட பினாமியேதான்.. தே போத் பிலாங் டு சேம் ஹோம் டவுன். (They both belong to the same home town) இப்போதான் டீட்டெயில்ஸ் வந்துச்சு..
நீ பெரம்பலூர் போக வேண்டியிருக்கும். நெக்ஸ்ட் வீக் இந்த ஸ்டோரிய வச்சுக்கலாம். வேற யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணாத.. இந்த வாரம் கவருக்கு வேற பண்ணலாம். “
“எப்போ சார் பெரம்பலூருக்குப் போகணும் ? “
“ஸ்டார்ட் டுநைட்..“
நேராக மதுரைக்குப் போய் அவளைப் பார்த்து விட்டு பிறகு பெரம்பலூர் போனால் என்ன என்று தோன்றியது. மதுரைக்குப் போனாலும் அவள் வீட்டுக்கு எப்படிப் போவது… எப்படியாவது போய்ப் பார்த்து விடலாம். இப்படியே எந்தத் தகவலும் இல்லாமல் எத்தனை நாள் இங்கே உட்கார்ந்திருப்பது. வீட்டுக்குள் அடைத்துக் கூட வைத்திருக்கலாம்.
போனை எடுத்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ், ஜார்க்கண்ட் என்ற அந்த மெசேஜ் கண்ணில் பட்டது.
எதற்காக இந்தப் பெயரை எனக்கு அனுப்புகிறார்கள்… எடிட்டர் சொன்ன ஆர்.ஓ.சி இணையதளத்தில் அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதா என்று தேடினேன். ஜார்கண்ட் மாநிலத்தில் கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ் என்று ஒரு நிறுவனம் இருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி தோண்ட சுரங்கத்துக்கான லைசென்ஸ் பெற்றிருந்தது அந்த நிறுவனம். அந்த நிறுவனம் தொடங்கப்பட்டதே லைசென்ஸ் வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான். ‘ஜார்கண்டில் லைசென்ஸ் பெற்றதில் ஏதோ ஊழல் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது… ஆனால் இதை கதிரொளியில் எப்படி ஸ்டோரியாகப் பண்ணுவது… ? வட இந்திய ஊடகங்களில் வந்தால்தானே உரிய தாக்கம் ஏற்படும்… எதற்காக நமக்கு இத்தகவலை அனுப்பியிருக்கிறார்கள்…. புரியவில்லையே..’
யார் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று பார்த்தேன்… ஏன் எனக்கு இதை அனுப்பியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. இரண்டு பங்குதாரர்கள். ஒருவர் கார்த்திக் சிங்காரவேலு. மத்திய உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிங்காரவேலுவின் வாரிசு… வாரிசு பெயரில் பினாமியாக சுரங்க ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் சிங்காரவேலு… அதிகார துஷ்பிரயோகம் என்று வழக்கு தொடர முடியாதென்றாலும் அரசியல் ரீதியாக ஏற்கனவே சிக்கலில் இருக்கும் சிங்காரவேலுவுக்கு புதிய சிக்கலை உருவாக்குவதற்கு இது தாராளமாகப் போதும். எதிர்க்கட்சிகள் அல்வாப் போல இதை எடுத்துக் கொள்ளும்.
சிங்காரவேலுவை தாக்குவதென்றால் எனக்கு இனம் புரியாத ஒரு இன்பம் ஏற்படுகிறது. நம்பியார் போல சிரிக்க வேண்டும் போல இருந்தது. மற்றொரு நபர் யார் என்று தெரியவில்லை. சண்முகம் என்று பெயர் இருந்தது. முகவரி சென்னை அண்ணா நகர் என்று இருந்தது. யாராக இருக்கும் ?
ஊருக்குப் புறப்படுவதற்கு நிறைய நேரம் இருந்தது. அண்ணா நகர் சென்று பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினேன். அண்ணா நகரின் நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணித்து ஒரு வழியாக அந்த முகவரியை அடைந்தேன். அந்தத் தெரு முழுக்க பணக்காரர்கள் வாழும் தெரு என்பது தெருவில் நுழைந்ததுமே தெரிந்தது. சாலைகள் சுத்தமாக இருந்தன. சாலைகளில் குப்பைகள் குறைவாக இருந்தன. சாலையோரம் நடப்பட்டிருந்த மரங்கள் சரியான பராமரிப்போடு இருந்தன.
முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி இந்த அளவுக்குக் கூட இல்லாவிட்டால் எப்படி.. அங்கே இஸ்திரி போட்டுக் கொண்டிருக்கும் பெரியவரிடம் வீட்டு எண்ணைச் சொல்லி கேட்டேன். இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் வீடு என்று அடையாளம் சொன்னார். அந்த வீட்டு வாசலை அடைந்தவுடன் எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிக்கு அளவேயில்லை. ஆ… என்று கத்தி குதிக்க வேண்டும் போலிருந்தது. அந்த வீட்டின் வாசலில் சிகப்பு விளக்கு வைத்த ஸ்கார்ப்பியோ வண்டி நின்று கொண்டிருந்தது. பெரிய மரத்திலான கதவு. அந்தக் கதவின் அருகே காம்பவுன்டு சுவற்றில் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் வேலாயுதம் என்று இருந்தது…
ஒழிந்தான் வேலாயுதம்…
என்னென்ன பேச்சு பேசினான் அவன்…. ?
இப்போது விளங்கியது சிங்காரவேலுவின் ஏஜென்ட் போல ஏன் நடந்து கொண்டான் என்று… அந்த சண்முகம் இந்த வேலாயுதத்தின் மகன்தானா என்று திடீரென்று சந்தேகம் ஏற்பட்டது. அந்த சண்முகத்தின் முழு விபரங்கள் வழங்கப்பட்டிருந்த இடத்தில் சன் ஆஃப் என்று இருந்ததை நான் சரியாக கவனிக்கவில்லை. இந்த வீட்டில் அந்த சண்முகம் வாடகைக்கு குடியிருந்தால்.. அத்தனையும் வீண்…
யோசிக்காமல் வண்டியை திருப்பி அலுவலகம் அடைந்தேன். அந்த ஆவணங்களை சேமித்து வைத்திருந்த கோப்பை மீண்டும் திறந்து பார்த்தேன். அட்சர சுத்தமாக சன் ஆஃப் வேலாயுதம் என்று இருந்தது. போதும்… இது போதும்… இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் ஒழித்துக் கட்ட இது போதும்.
‘அய்யோ எடிட்டரிடம் உடனே சொல்ல வேண்டுமே… அவர் செல்லுக்குத் தொடர்பு கொண்டேன்…
“சார்.. ஸ்டாப் ப்ரெஸ் சொல்லுங்க சார்.. அர்ஜென்ட் சார்.. “
“அப்படி என்னப்பா அர்ஜென்ட்…..“
“சார் நேராப் பேசலாம் சார்… இப்போ எங்க இருக்கீங்க சார்….“
“நான் டி நகர்ல இருக்கேன்பா.. ஆபீஸ் வர மாட்டேனே… ரொம்ப அர்ஜென்டா…“
“ரொம்ப அர்ஜென்ட் சார்.. நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் வர்றேன்.. “
“நானே வர்றேம்பா… வெயிட் பண்ணு.. “
அவர் வருவது வரை எனக்குத் தலைகால் புரியவில்லை. அனைத்து ஆவணங்களையும் இரண்டு காப்பிகள் ப்ரின்ட் அவுட் எடுத்தேன்.
அரை மணி நேரம் கழித்து வந்தார்.
“ஸ்டாப் ப்ரெஸ் குடுக்கற அளவுக்கு என்னப்பா அவசரம்…. என்ன விஷயம் சொல்லு….“
“சார்.. புதையலே கிடைச்சுருக்கு சார்.. “ என்று என் சந்தோஷத்தை விவரிக்க முடியாமல் திணறினேன்..
“சொல்லுப்பா என்ன கெடச்சுருக்கு“
ஆவணங்களை அவரிடம் கொடுத்தேன். “திஸ் ஈஸ் ய குட் ஸ்டோரி வெங்கட். பட் ஸ்டாப் ப்ரெஸ் எப்படி குடுக்கறது.. நெக்ஸ்ட் வீக் கேரி பண்ணலாம்“
“சார் அந்த சண்முகம்ன்ற இன்னொரு பார்ட்னர் யாரு தெரியுதா சார்… “
“யாருப்பா யாராவது பினாமியா இருப்பாங்க… அதையெல்லாம் ப்ரூவ் பண்றது கஷ்டம் வெங்கட். “
“சார்.. ஜட்ஜ் வேலாயுதத்தோட பையன் சார்…..“
“வாட்….“ என்று சொல்லி விட்டு, ஆவணங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தார்.
“ஃபென்டாஸ்டிக் வெங்கட்… ஃபேபுலஸ் ஜாப்.. (Fabulous job) திஸ் வில் ஃபினிஷ் வேலாயுதம்…“
“நீ அந்த வீட்டுக்குப் போய் பாத்தியா… வேற வேலாயுதம் அன்ட் வேற சண்முகமாகக் கூட இருக்கலாம். “
“சார் வீட்டு காம்பவுண்ட்ல ஜஸ்டிஸ் வேலாயுதம்னு க்ளீனா போர்டு இருக்கு சார். அது மட்டுமில்லாம நம்ப கமிஷனுக்குப் போனப்போ அங்க நின்னுக்கிட்டிருந்த வண்டி அந்த வீட்டு முன்னாடி நிக்குது சார்.. “
“இந்த இஷ்யூவுக்கே கொண்டு வரலாம்.. ஒரு நாள் டிலே ஆகும். பரவாயில்லை..
கட கடன்னு ஸ்டோரி ரெடி பண்ணிக் கொண்டு வா… ஆபீஸ் லேன்ட் லைன்லேர்ந்து வேலாயுதம் வீட்டுக்குப் போன் பண்ணி ரெண்டு நிமிஷம் ஏதாவது பேசு… இந்த விஷயம் பத்தி மட்டும் எதுவும் பேசிடாத. அந்த ஆளுக்கிட்ட கருத்துக் கேட்காம போட்டோம்னா ஒன் சைடட் ஸ்டோரின்னு சொல்லிடுவாங்க. பட் கருத்துக் கேட்டா இன்னைக்கு நைட்டே ஆபீஸுக்கு சீல் வச்சுடுவான்.. நாளைக்கு ரெக்கார்டுக்கு கேட்டா ரெண்டு நிமிஷம் பேசுனோம். அவர் பதில் சொல்ல மறுத்துட்டாருன்னு அந்த ஃபோன் காலை வச்சு மேனேஜ் பண்ணிடலாம். கமான் க்விக். வி வில் நெயில் திஸ் பாஸ்டர்ட் (We will nail this bastard)“ என்றார்.
எடிட்டர் இப்படி எக்சைட் ஆகி நான் பார்த்ததேயில்லை. என்னை விட அவர் பரபரபப்பாக இருந்தார். உடனே கட்டுரையை தயார் செய்ய ஆரம்பித்தேன்.
சிங்காரவேலு மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் வெளியானதை அறிமுகமாக வைத்துத் தொடங்கி உண்மையை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்க சிங்காரவேலு எப்படித் திட்டமிட்டுப் பணியாற்றினார், அந்த ஆணையத்திற்கு வேலாயுதத்தை எப்படி வசதியாக முன்னெச்சரிக்கையாகத் தேர்ந்தெடுத்தனர், ஆணைய விசாரணையின்போது, எடிட்டரை வேலாயுதம் எப்படி தேவையற்ற கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்தினார், என்னை எப்படி மிரட்டினார், உண்மையை மறைக்க என்னென்னவெல்லாம் செய்தார் என்று அத்தனை விவகாரங்களையும் கட்டுரையில் கொண்டு வந்தேன். இது குறித்து நீதிபதி வேலாயுதத்தின் கருத்து கேட்க கதிரொளியை தொடர்பு கொண்ட போது அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார் என்று குறிப்பிட்டேன்.
உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் ஒரு நீதிபதி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்த கட்டுரையின் இறுதியில் வைத்தேன். கிருஷ்ணய்யர், பகவதி போன்ற நீதித்துறை மகான்கள் இந்திய நீதித்துறையை உலக அளவில் புகழ்பெறச் செய்தார்கள். அவர்கள் இந்திய நீதித்துறையின் மணிமகுடமென்றால் சிங்காரவேலுவின் மகனும், தன் மகனும் தொழில் ரீதியாக பங்குதாரர்களாக இருக்கையில் அந்த விஷயத்தை மறைத்து, சிங்காரவேலு மீதான ஊழல் புகாரை விசாரிக்க நடக்கும் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை தயக்கமில்லாமல் ஏற்று நடத்தி வரும், வேலாயுதம் போன்ற நீதிபதிகள், இந்திய நீதித்துறைக்கே களங்கம் என்று கட்டுரையை முடித்தேன்.
தலைப்பு எடிட்டர் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். “நீதிதேவன் மயக்கம்“ என்று தலைப்பு வைத்தார் எடிட்டர். ஒரு சில மாற்றங்களைத் தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை.
அன்று இரவே லே அவுட் முடித்தோம். ஒரு பக்கம் சிங்காரவேலுவின் படமும் பக்கத்தில் நீதிபதி வேலாயுதம் படமும் வைத்து நடுவில் நீதி தேவதை தலை குனிந்து இருப்பதாக அட்டை தயார் செய்யப்பட்டது. அட்டை மிக அழகாக வந்திருந்தது.
20 ஆயிரம் போஸ்டர்கள் அடிக்க உத்தரவிட்டார். மறு நாள் இரவு போஸ்டர்கள் அத்தனையும் ஒட்டி முடிக்க வேண்டும் என்று கூறினார் எடிட்டர். ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து, ப்ரின்டுக்கு அனுப்பி விட்டு, நானும் எடிட்டரும் விடியற்காலை 5 மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பினோம். கிளம்பும்போது, எடிட்டர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.
“பின்னிட்டய்யா…. ரொம்பப் பெருமையா இருக்குய்யா… ஐ யம் டபுளிங் யுவர் சாலரி.. (I am doubling your salary) கோ அன்ட் செலிப்ரேட்.. (Go and celebrate) “
அவரிடம் குழந்தையைப் போன்ற உற்சாகம் காணப்பட்டது. என்னதான் மூத்தப் பத்திரிக்கையாளர் அனுபவசாலி என்றெல்லாம் இருந்தாலும், தன்னை அவமானப்படுத்திய வேலாயுதத்தை பழிவாங்கிய மகிழ்ச்சியை எடிட்டரிடம் பார்க்க முடிந்தது.
“ஐ யம் டபுளிங் யுவர் சாலரி…“ ஏதோ சந்தோஷத்தில் சொல்லி விட்டு மறந்து விடுவாரா.. இல்லை உண்மையிலேயே சொல்கிறாரா… ச்சே… ஹி ஈஸ் ய மேன் ஆஃப் வேர்ட். (He is a man of word)
எடிட்டர் பாராட்டியது ஒரு புறம், சம்பள உயர்வு ஒரு புறம்… எல்லாவற்றையும் தாண்டி, இந்த இதழைப் பார்க்கும்போது, சிங்காரவேலுவின் மன நிலையை நினைத்தால்….. இதழ் வெளியே வருகையில் என்ன ஆகுமோ என்று பரபரவென்று இருந்தது. வீட்டுக்குச் செல்லும்போது விடிந்து வெளிச்சம் வந்து விட்டது.
ஏதாவது சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம் என்று தோன்றியது. அம்மா எழுந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். ஏதாவது டிபன் குடும்மா என்று சொல்லி விட்டு லேப்டாப்பை ஆன் செய்து ஃபேஸ் புக்கினுள் நுழைந்தேன். ஏதாவது செய்தி அனுப்பியிருப்பாளா என்று பார்த்தால் எந்த செய்தியும் இல்லை. அவள் பேஜுக்குச் சென்றேன்.
“வசந்தி என்கேஜ்ட் டு சங்கர நாராயணன்” என்று புகைப்படத்தோடு இருந்தது.
தொடரும்.
வேள்வி தொடரட்டும் ப்ளீஸ் .. வேள்வியின் தழல் நீளட்டும்..
கதை எழுதும் சூத்திரத்தை பிடித்து விட்டீர்கள்
என்னவோ தோழர், தென்றல் வீசிடும் சோலையில் மான் ஒடும் நதிக்கரையில், குயில் கூவ பூத்துக்குழுங்கிய தொடர் திடீரென பாலைவனத்தில் மதியம் வெயிலில் கழுகுகள் சூழ நடப்பது போல ஒரு உணர்வு.
என்னவோ எக்ஸ்பர்டாட்டம் அட்வைஸ் கொடுக்கிறாங்க…, சும்மா கடல போட்டு, சினிமாவுக்கு கூட போயிருக்க மாட்டானுக.
palaniyappan singaravelu is a palaniyappan chidambaram rite thaane?
palanivel singaravelu is a palanivel chidambaram rite thaane?
சில பெண்கள் இப்படித்தான் ஆனால் பசங்க எப்பவுமே ரொம்ப புத்திசாலி.
Let’s wait for next episode!
பட படப்பாகவும் இருக்கிறது,
கிளு கிளுப்பாகவும் இருக்கிறது. ஓடக்கூடிய திரைப்படத்தின் கதையும் உங்களிடம் உள்ளது
இளங்கோ
படபடப்பாகவும் இருக்கிறது,
கிளு கிளுப்பாகவும் இருக்கிறது. ஓடக்கூடிய திரைப்படத்தின் கதையும் உங்களிடம் உள்ளது.
the long awaited naught which is there in the first part come to light now! it’s beyond the thrill.
For a dedicated worker reltionship is a dead weight!
இந்த பெண்களே இப்படித்தான் சார், கடைசியில் அப்பா சொன்னார் அம்மா செத்துடுவேன்னு மிரட்டினாங்க அப்பிடின்னுட்டு போயிடுவாங்க….
கடைசியில் உங்களுக்கும் அல்வாதான் போல😂😂😂