அந்தோணி செல்வராஜ், க்ளாஸ்டன், கந்தையா, மணிராஜ், ஜெயராம், சண்முகம், தமிழரசன், வினிதா, மற்றும் வினிஸ்டா ஆகிய ஒன்பது பேர், செவ்வாய் மாலை 5 மணி வரையில் காவல்த் துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர்.
இன்று நடந்த போராட்டம், திடீரென்று, நேற்று இரவு திட்டமிடப்பட்டு இன்று காலை அரங்கேறிய போராட்டம் அல்ல. 100 நாட்களாக நடைபெறும் போராட்டத்தின் தொடர்ச்சி. இன்று காலை, நடைபெற்ற போராட்டம், தடையை மீறி நடைபெற்ற போராட்டம் என்பதை காவல்துறை நன்றாகவே அறியும். இருந்தும், உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சரும், டிஜிபி டிகே.ராஜேந்திரனும் காட்டிய மெத்தனமும், அலட்சியமுமே இன்று 11 உயிர்களை பலி கொண்டிருக்கிறது.
ஸ்டர்லைட் போராட்டம் 100 நாட்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சிறு தமிழ் தேசிய குழுக்களோ, சுற்றுச் சூழல் குழுக்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நடத்தும் போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்கள் இணைந்து நடத்தும் போராட்டம். ஏனென்றால், ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 25 ஆண்டுகளாக, பூமியையும், காற்றையும் நஞ்சாக்கும் இந்த ஆலையால் ஏற்படும் துன்பங்களை அனுபவிப்பவர்கள் அவர்களே நாமல்ல.
இந்த ஸ்டெர்லைட் ஆலை, முதன் முதலில் மஹாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டமான ரத்னகிரி மாவட்டத்தில்தான் தொடங்குவதாக இருந்தது. இதற்காக அரசு 500 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஒதுக்கியது. ஆனால், அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையாக போராடினார்கள். ஆலை தொடங்கி ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் தாமிரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக மகாராஷ்டிராவின் நகர்ப்புர வளர்ச்சி நிலையத்தை, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது. அந்த ஆய்வு அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்வது, சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் என்று பரிந்துரை செய்ததை அடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை மகாரஷ்டிர அரசு ரத்து செய்தது. இணைப்பு
இதையடுத்து வேதாந்தா (ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம்) தேர்ந்தெடுத்த மாநிலம்தான் தமிழ்நாடு. தமிழக வளங்களை கொள்ளையடித்து, சுற்றுச் சூழலை நாசம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ரத்தின கம்பளம் போட்டு வரவேற்றவர்தான் ஜெயலலிதா.
1 ஆகஸ்ட் 1994ம் அன்று, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை அமைக்க தடையின்மை சான்று வழங்கியது. உடனடியாகவே இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டதை தொடங்கினார்கள். ஆனால், காவல்துறையை வைத்து, மக்கள் போராட்டத்தை வன்முறையாக ஒடுக்கினார் ஜெயலலிதா.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தடையில்லா சான்று வழங்கியபோது, சுற்றுச் சூழலுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்த்து. ஆனால் ஸ்டெர்லைட் இதை செய்யாமலேயே உற்பத்தியை தொடங்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 14 அக்டோபர் 1996 அன்று அனுமதி அளித்தது. அப்போதும் மக்கள் போராட்டம் நடத்தத்தான் செய்தார்கள். கருணாநிதியும் மக்கள் எதிர்ப்பை பற்றி கவலை கொள்ளாமல்தான் அனுமதி அளித்தார். அன்று வேதாந்தாவுக்கும், ஸ்டெர்லைட்டுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தவர், திமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும், கருணாநிதியால் முரட்டு பக்தன் என்று வர்ணிக்கப்பட்டவருமான பெரியசாமி. அப்போது அவர் விட்டுச் சென்ற பணியை, அவர் மகள் கீதா ஜீவன் இப்போதும் செவ்வனே செய்து வருகிறார்.
நவம்பர் 1998ல், சென்னை உயர்நீதிமன்றம், தடையில்லா சான்று வழங்குகையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஒன்றைக் கூட ஸ்டெர்லைட் நிறைவேற்றவில்லை என்று கூறி, ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்தது. நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அது தடை செய்யப்பட்டது. அதே உயர்நீதிமன்ற அமர்வு, பத்து நாட்களில், நாக்பூர் ஆய்வு மையம் மீண்டும் ஒரு முறை ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, அது வரை தொழிற்சாலையில் உற்பத்தி நடக்கலாம் என்றும் கூறியது. அந்த நாக்பூர் ஆய்வு மையம். 45 நாட்களில், ஸ்டெர்லைட் ஆலை ஒரு அற்புதமான, நேர்த்தியான சுற்றுச் சூழலை பாதுகாக்கும் ஆலை என்று சான்றளித்தது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் தாமிரத்தைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அனுமதி அளித்திருந்தது. ஆனால் ஸ்டெர்லைட் உற்பத்தி செய்ததோ, 1,75,242 டன் தாமிரம். இதை மட்டுமே காரணமாக வைத்து தொழிற்சாலையை தடை செய்திருக்க முடியும். ஆனால் இது ஒரு நாளும் நடக்கவில்லை.
21 செப்டம்பர் 2004ல், உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக் குழு, ஒரு நாளைக்கு 391 டன் தாமிரத்திலிருந்து 900 டன்னாக, உற்பத்தியை அதிகரிக்க வேதாந்தா விடுத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஒரு புறம் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கோரி விட்டு, அனுமதி கிடைக்கும் முன்னரே, ஆலை விரிவாக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று உள்ளன என்பதையும் அது சுட்டிக்காட்டியது. 22 அக்டோபர் 2004 அன்று, உச்சநீதின்ற ஆய்வுக் குழு ஆய்வு செய்த மறு நாள், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஸ்டெர்லைட்டின் ஆலை விரிவாக்கத்துக்கு தடையில்லா சான்று வழங்கியது.
அப்போது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் யார் தெரியுமா ? ஊர் போற்றும் உத்தமராக இன்று வலம் வரும் ஆ.ராசாதான். மத்திய அரசு அனுமதி அளித்ததால், ஜெயலலிதா முறுக்கிக் கொண்டார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை வைத்து, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தார். 7 ஏப்ரல் 2005 அன்று, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறது. அப்போதும் அமைச்சராக ஆ.ராசாதான் இருக்கிறார். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது. இதற்குள் ஜெயலலிதாவை சரிக்கட்டாமலா இருநதிருப்பார்கள் ? ஆலை விரிவாக்கம் அனுமதிக்கப்படுகிறது. உற்பத்தி ஒரு நாளைக்கு 391 டன்னிலிருந்து, 900 டன்னாக அதிகரிக்கிறது.
2008ம் ஆண்டு, உற்பத்தியை 1200 டன்னாக அதிகரிக்க தமிழக அரசிடம் ஸ்டெர்லைட் அனுமதி கோருகிறது. அதற்கான அனுமதியும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. அந்த அனுமதியை அளித்தது கருணாநிதி. 2010ல், சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கிறது. அந்த தடையை எதிர்த்து, ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று உத்தரவிட்டு, இறுதி உத்தரவை பிறப்பிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டெர்லைட் எந்த அனுமதியும் இல்லாமல் தன் உற்பத்தியை தொடர்ந்து நடத்துகிறது.
2 ஏப்ரல் 2013 அன்று, ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பை வழங்குகிறது. மனுதாரர்கள் தரப்பில் ஸ்டெர்லைட் சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இறுதியாக என்ன தீர்ப்பு அளித்த்து தெரியுமா ? பாதிப்புகள் உண்மைதான். இது வரை ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசுக்கு 100 கோடி செலுத்த வேண்டும். ஆனால் ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்பதே. இணைப்பு
ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தால், வன்முறை செய்தவனை, அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, அவளை தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கலாம் என்பதற்கும் இதற்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இதன் பிறகு, ஸ்டெர்லைட், காட்டில் மழைதான். கட்டுப்பாடே கிடையாது. தற்போது இந்த போராட்டங்கள் தொடங்கியதற்கான காரணமே, ஸ்டெர்லைட் மேலும் தனது உற்பத்தியை அதிகரிப்பதற்காக, தொழிற்சாலையை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள்தான். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவுபடுத்தப் போகிறது என்ற தகவல் வந்ததுமே தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 14 பிப்ரவரி 2018 அன்று போராட்டம் தொடங்கியது. போராட்டம் தொடங்கிய முதல் நாளே, தமிழக அரசு போராட்டம் நடத்திய 250 பேரை கைது செய்தது. அன்று முதல் இந்த போராட்டம் நாள் தவறாமல் நடந்து வருகிறது.
பல்வேறு வகையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போராட்டம் தடையில்லாமல் நடைபெற்றது. ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கிடையாது என்று ஒப்புக்காக அதிமுக அடிமை அமைச்சர்கள் பேட்டியளித்தாலும், உண்மையில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்டெர்லைட்டின் தலைமை நிர்வாகி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
11 ஏப்ரல் 2018 அன்று அவர் அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் நிச்சயம் நடைபெறும். எல்லா அனுமதிகளும் கிடைத்து விடும். 2019 இறுதியில், புதிய ஆலை தொடங்கும் என்று பேட்டியளித்தார் மேலும், தற்போது நடைபெறும் போராட்டங்கள் ஆலை விரிவாக்கத்தை எந்த விதத்திலும் தடுக்காது என்றும் அந்நிய சக்திகளின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றும் கூறினார். இணைப்பு இதே கருத்தை, ஆர்எஸ்எஸ் பிரமுகரும், மைலாப்பூர் ப்ரோக்கருமான குருமூர்த்தி பிரதிபலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பெருந்திரளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் எந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ, அந்த ஆலையின் தலைமை நிர்வாகி ஆலை விரிவாக்கம் நிச்சயம் நடக்கும் என்று பேட்டியளிக்கிறார் என்றால் பின்புலத்தில் எத்தனை பேரங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். இன்று அமைச்சர்கள் பேசுவது எல்லாமே முழுமையான பொய்களே தவிர வேறில்லை.
இன்று (22 மே 2018) அன்று நடைபெற்ற போராட்டம் ஏற்கனவே நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சிதான் என்றாலும், இன்று ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு என்ற கோரிக்கையோடு மக்கள் திரண்டார்கள். அரசாங்கத்துக்கு இது குறித்து தகவல் தெரியுமா என்றால் நன்றாக தெரியும். அது தெரிந்ததனால்தான் 144 தடை உத்தரவே பிறப்பிக்கப்பட்டிருந்த்து.
இத்தனை நாட்களாக நடந்து வந்த போராட்டத்திற்கு மக்கள் எந்த அளவில் திரண்டார்கள் என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. அது கண் முன்னால் நடந்த விஷயம். 98 நாட்களாக நடந்து வந்த போராட்டங்களின் தீவிரத் தன்மை குறித்து உளவுத் துறை அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியே இருந்திருக்கிறது.
இன்று நடைபெற உள்ள போராட்டம் குறித்தும், மக்கள் பெருந்திரளாக வருவார்கள் என்பது குறித்தும், உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
இது தவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள போராட்டத்தை ஒட்டி, 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம், மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் 18.05.2018 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இன்றைய போராட்டம் அமைதியாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் “22.05.2018 அன்று, நடைபெற உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த துண்டறிக்கையில் உள்ள வாசகங்கள், போராட்டம் நடத்துபவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக தெரியவில்லை.
அந்த துண்டறிக்கையில் உள்ள விபரங்கள், மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் பொது மக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவு பிறப்பிப்பது சரியான நடவடிக்கையாகும்.” என்று தீர்ப்பளித்துள்ளது.
இத்தனை நாட்களாக நடந்த போராட்டங்களை கவனத்தில் கொண்டு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை. இன்று பெரும் கூட்டம் கூட உள்ளது என்பதை உளவுத் துறையும், எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாவட்ட காவல்துறைக்கும் அனுப்பியுள்ளது.
அற்பனுக்கு அர்த்த ராத்திரியில் வாழ்வு வந்தது போல முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு, இந்த அறிக்கையின் முக்கியத்துவம் என்ன என்பது புரிந்ததா என்றே தெரியவில்லை. நிச்சயம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எடப்பாடிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. முதலில் ஜெயலலிதா காலிலும், பின்னர் சசிகலா காலிலும் விழுந்து, அவர்கள் வீசியெறியும் எலும்புகளை பொறுக்கி உடல் வளர்த்த நபரை முதல்வராக்கினால் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
ஏனென்றால், 100 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, போராட்டக் காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தன்னை கடவுளாக சித்தரிக்கும் திரைப்படத்தை மக்கள் வரிப்பணத்தில் தயாரித்து, அதை சினிமா திரையரங்குகளில் திரையிட உத்தரவிடும் நபர் என்ன ஜென்மமாக இருக்க முடியும் ?
உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரி கூறியது என்னவென்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்காக செல்லும்போதெல்லாம், “எஸ்பி சார். இந்த இன்கம் டாக்ஸ் ரெய்டு வர்றதை முன்னாடியே கண்டுபிடிச்சி சொல்ல மாட்டீங்களா. வாட்ஸப்புல பேசறதை எப்படி ஒட்டுக் கேக்கறது ?” என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார் அந்த அதிகாரி. அதற்கு சாத்தியமில்லை என்றதும், மிகுந்த சலிப்போடு “என்ன அதிகாரி நீங்க. எது கேட்டாலும் முடியாதுன்னு சொல்றீங்க” என்பார் எடப்பாடி. “இவன் கிட்டயெல்லாம் வேலை பாக்கணும்ன்றது என் தலையெழுத்துங்க. இந்த வயசுல இனி வேற வேலைக்கு போக முடியாது. இல்லன்னா தூக்கி போட்டுட்டு போயிடுவேன்” என்றார்.
2011ம் ஆண்டு, பரமக்குடி இமானுவேல் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் இறந்த சம்பவத்துக்கு அடுத்த ஆண்டு நிகழ்வின்போது, ஜெயலலிதா காவல் துறை அதிகாரிகளை அழைத்து தெளிவாக இந்த முறை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறக் கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டார்.
2012ம் ஆண்டு இமானுவேல் நினைவு நாளின்போது, தற்போது டிஜிபியாக உள்ள டிகே.ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தார். நிகழ்ச்சி நடக்கும் முதல் நாளன்றே ராஜேந்திரன் ராமநாதபுரம் சென்றார். தென் மண்டல ஐஜி, மேற்கு மண்டல ஐஜி வரவழைக்கப்பட்டனர். நான்கு டிஐஜிக்கள், 9 எஸ்பிகள், 40 டிஎஸ்பிகள் என்று பெரும் அளவில் அதிகாரிகள் முகாமிட்டு, மக்கள் வரும் பாதைகள், வன்முறை நடக்க சாத்தியமுள்ள இடங்கள், வன்முறை செய்யக் கூடியவர்கள் என்று அத்தனையும் கணக்கில் கொள்ளப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2012ம் ஆண்டு முதல், இன்று வரை, இமானுவேல் நினைவு நாளிலும் பிரச்சினை இல்லை. முத்துராமலிங்கம் நினைவு நாளிலும் பிரச்சினை இல்லை.
இது போல இன்றைய போராட்டத்துக்கும் உரிய திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தூத்துக்குடி செல்லவில்லை. தென் மண்டல ஐஜி கூட தூத்துக்குடியில் இல்லை. நெல்லை சரக டிஐஜி கபில் குமார் சரத்கர் மட்டுமே களத்தில் இருந்த மூத்த அதிகாரி.
ஒரு படையின் தளபதிக்கு தன் படைகளை வழி நடத்தும் திறமை இருக்க வேண்டும். உரிய திட்டமிடல் வேண்டும். முன்னணியில் நின்று படைக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். இவை எதுவுமே டிகே.ராஜேந்திரனிடம் இல்லை. டிகே.ராஜேந்திரன் காக்கி சீருடை அணிந்து கொண்டு, ஒரு ஏடிஎம்மின் காவலாளியாக இருக்க மட்டுமே லாயக்கானவர். ஒரு காவல்துறை மூத்த அதிகாரிக்கான எந்தத் தகுதியும் ராஜேந்திரனுக்கு கிடையாது.
1992ம் ஆண்டு, கும்பகோணத்தில் மகாமகம் நடந்தபோது தஞ்சை எஸ்பியாக இருந்தவர் டிகே.ராஜேந்திரன்தான். அப்போது சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
அதே போல 1999ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, காவல்துறை சரிவர செயல்படாமல் தடியடி நடத்திய காரணத்தால், 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரண்டு புகழுக்கும் சொந்தக்காரர் டிகே.ராஜேந்திரன்தான். இப்படிப்பட்ட மங்குணியை எடப்பாடி பழனிச்சாமி நள்ளிரவில் பதவி நீட்டிப்பு அளித்து டிஜிபியாக்குகிறார் என்றால் எடப்பாடி எப்படிப்பட்ட மங்குணி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் “தொடக்கப் புள்ளி முதல் இந்த சம்பவம் மாவட்ட நிர்வாகத்தால் தவறாகக் கையாளப்பட்டது. போராட்டக்காரர்களின் எண்ணவோட்டத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள தவறியது மாவட்ட நிர்வாகம். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ஐஜி அல்லது டிஐஜி போன்ற மூத்த அதிகாரிகள் அந்த இடத்தில் இல்லை. இந்த போராட்டம் மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. நக்சல் அமைப்புகள், கிராம மக்களிடையே புகுந்து, நிலைமையை மேலும் தீவிரமாக்கினார்கள். இந்த மூன்று மாதங்களில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியோ, டிஜிபியோ ஒரே ஒரு முறை கூட, நேரில் சென்று நிலைமையை ஆராயவில்லை. உள்துறை செயலாளர் கூட, இந்த போராட்டத்தின் தீவிரத் தன்மையை ஆய்வு நடத்த முனையவில்லை. இந்த மெத்தனப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் போராட்டத்திற்குள்ளே, பல சமூக விரோத சக்திகள் புகுந்து, ஊடகத்தில் ஒரு பிரிவினரின் உதவியோடு போராட்டத்தின் திசையை மாற்றுவதில் வெற்றி கண்டார்கள். சாதாரண மக்களின் எதிர்ப்பார்ப்பு, 25 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் தங்களின் குறைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே.
மூத்த அதிகாரிகள் இந்த போராட்டம் மற்றும் அதன் தொடர் விளைவுகள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருந்ததால், கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை தெரியாமல் போனது. இதனால் சட்டம் ஒழுங்குக்கு எத்தகைய சிக்கல் வரும் என்பதையும் உணரத் தவறினர்.
இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து, உடனடியாக காவல்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளை எடுக்காவிடில், வருங்காலத்தில் இதை விட மோசமான சம்பவங்கள் நடப்பதை தடுக்க இயலாது.” என்றார்.
அந்த காவல்துறை அதிகாரி கூறியது போல, மாவட்ட நிர்வாகம் இந்த சிக்கலை எதிர்கொள்ள எத்தகைய தயார் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
காவல்துறை என்பது ஒரு வேட்டை நாய். அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரையில்தான் அது சாதுவான பிராணி. அதை கட்டவிழ்த்து விட்டால், வேட்டை நாய்க்கான குணத்தோடுதான் பாயும். அப்படித்தான் அது பயிற்றுவிக்கப்படுகிறது.
100 நாட்களாக தொடர்ந்து போராடியும், நமது பிரச்சினைகளை மயிரளவு கூட மதிக்காத நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் எத்தகைய கோபத்தோடு இருப்பார்கள் என்பதை நிர்வாகம் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதை யாருமே உணர்ந்ததாக தெரியவில்லை.
20 ஆயிரம் மக்கள் திரண்டு வருகையில் சில நூறு காவல்துறையினர் என்னதான் செய்து விட முடியும் ? இது போன்ற பெருந்திரள் போராட்டங்களில் யார் முதல் கல்லை வீசியத என்பதை கணிப்பது ஏறக்குறைய முடியாத காரியம். கல்லெறிந்த்து காவல்துறையாகக் கூட இருக்கலாம். அந்த முதல் கல்லுக்கு பிறகு, மக்கள் கூட்டமாக மாறுவார்கள். கூட்ட மனப்பான்மையில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். இன்றும் அப்படித்தான் நடந்தது.
வன்முறை கல்வீச்சில் தொடங்கி, வாகனங்களுக்கு தீவைப்பதில் பரவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடும் வரை பரவியது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், காம்பவுன்ட் சுவர் ஏறிக் குதித்து, அருகில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆட்சியர் அலுவலக கோப்புகள் கொளுத்தப்பட்டன.
அது வரை நடத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டு வீச்சுகள், தடியடிகள் பலன் தரவில்லை. காவல்துறையை மக்கள் கூட்டத்தோடு ஒப்பிடுகையில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.
சுடு என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஒரு காவலர் இப்படித்தான் சுட வேண்டும் என்று அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாது. மனிதத் தன்மை உள்ள காவலர், மனிதர்களை குறிவைத்துத் தாக்காமல், கூட்டத்தை கலைப்பதில் முனைவார். மனிதர்களை வாய்ப்பு கிடைத்தால் கொல்வதில் ஆனந்தம் கொள்ளும் ஒரு நபர் இது போல வாய்ப்பு கிடைத்தால், எத்தனை பேரை கொல்வது என்று போட்டி போட்டுக் கொண்டு கொலை செய்வார். இதை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தடுத்திருக்க முடியும். வேட்டை நாய்களை கட்டுப்படுத்த, அதன் பயிற்சியாளர்கள் அருகே இல்லாதபோது, வேட்டை நாயை நாம் குறை சொல்லி என்ன பயன் ?
இது போன்ற சம்பவங்களை மூடி மறைக்க வழக்கம் போல பயன்படுத்தப்படும் அதே ஆயுதத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பயன்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக் கட்டு வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம், மூன்று மாதத்துக்குள் 23 ஏப்ரல் 2017க்குள் அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். தற்போது ஒரு வருடம் கடந்து விட்டது. நீதிபதி ராஜேஸ்வரன், அரசு செலவில், மக்கள் வரிப்பணத்தில், ட்ரைவர் அலுவலகம், அரசு குடியிருப்பு, உதவியாளர்கள், ஸ்டெனோ, மாதம் ஒன்றரை லட்சத்துக்கு மேல் ஊதியம் என்று சொகுசாக வசதிகளை அனுபவிக்கையில் எதற்காக மூன்று மாதத்தில் அறிக்கை கொடுப்பார் ?
திருச்செந்தூர் கோவிலின் உண்டியல் சரிபார்ப்பு அதிகாரியாக இருந்த சுப்ரமணியம் பிள்ளை 26.11.1980 அன்று மர்மமான முறையில் இறந்து போகிறார். கோவிலின் அறங்காவலர்காக இருந்த அதிமுகவினர் உண்டியல் காசை திருடுவதை அவர் தடுத்தார் என்பதே அவர் மரணத்துக்கு காரணமாக இருந்தது. மற்ற நீதிபதிளைப் போலவே நினைத்து, நீதிபதி சிஜேஆர்.பால் என்பவரை விசாரணை நீதிபதியாக நியமித்தார் எம்ஜிஆர். நியமித்து விட்டு, சுப்ரமணியம் பிள்ளை தற்கொலை செய்து கொண்டார் என்று கூசாமல் கூறினார் எம்ஜிஆர். ஆனால் நீதிபதி பால், சுப்ரமணியம் பிள்ளை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திட்டவட்டமாக அறிக்கை அளித்தார்.
நீதிபதி சிஜேஆர் பால் போன்ற நீதிபதிகளை இப்போது பார்க்க இயலாது.
தாமரபரணி ஆற்றோரம் நடந்த மாஞ்சோலை தொழிலாளர் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட மோகன் கமிஷன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை விசாரிக்க அமைக்கப்பட்ட சண்முகம் கமிஷன், தொலைபேசி ஒட்டுக் கேட்பு புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட சண்முகம் கமிஷன், பரமக்குடி வன்முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் ஆகிய அனைத்து கமிஷன்களுமே, அரசுக்கு ஆதரவான அறிக்கைகளைத்தான் அளித்தன.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்யும் நோக்கமே, ஓய்வுக்கு பின், கையில் பிச்சைத் தட்டோடு, எப்போது மீண்டும் பதவி கிடைக்கும் என்று அலையும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை மனதில் வைத்துத்தான். (விதிவிலக்கான நேர்மையான நீதிபதிகள் உண்டு).
அப்படியிருக்கையில், எடப்பாடி பழனிச்சாமி விரும்பியதை அறிக்கையாகத் தரத் தயாராக இருக்கும் ஒரு அடிமை நீதிபதியை கண்டு பிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை. மேலே சொன்ன அனைத்து விசாரணை ஆணையங்களும் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை தடுப்பது எப்படி என்று நீண்ட பரிந்துரைகளை அளித்துள்ளன. ஆனால் இந்தப் பரிந்துரைகள், தலைமைச் செயலகத்தின் பொதுத் துறையின் அழுக்கு படிந்த அலமாரிகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த விசாரணை ஆணையங்களால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.
நிற்க. வேதாந்தா நிறுவனத்தின் மீது சுற்றுச் சூழலை அழிக்கிறது, இயற்கையை சுரண்டுகிறது என்ற குற்றச்சாட்டு, தமிழகத்தில் மட்டுமல்ல, ஒதிஷா, சட்டீஸ்கர் மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ளன. இயற்கையை சீரழித்து, தனது செல்வத்தை பெருக்கும் நபர்தான் வேதாந்தாவின் உரிமையாளர் அனில் அகர்வால். இவருக்காகத்தான் எடப்பாடி அரசு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறது.
தூத்துக்குடி மரணத்துக்கு பொறுப்பானவர்கள் என்று அடையாளம் காணப்பட வேண்டியவர்களில் முதன்மையானவர்கள் உள்துறையை தன் கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல் துறையின் தலைவராக இருக்கும் டிகே.ராஜேந்திரன்.
இன்று இறந்து போன அந்த 11 பேர், விலை மதிக்க முடியாத மனித உயிர்கள். அவர்களின் நோக்கம், பாழ்படும் எங்கள் மண்ணையும் காற்றையும் காப்பாற்றுங்கள் என்பதே. இது ஜீவாதார கோரிக்கை. அடிப்படை உரிமை. இதை கேட்டதற்காக 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இது போல இன்றும் பல மரணங்களை நிகழ்த்தி, அந்த பிணங்களின் மேல் சிரித்துக் கொண்டே ஆட்சி நடத்தும் அளவுக்கான கேவலமான பிறவிதான் எடப்பாடி பழனிச்சாமியும் அவர் அமைச்சர்களும்.
வழக்கமான ஆர்ப்பாட்டங்கள், கருப்புக் கொடி, மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம் போன்றவைகளுக்கான காலம் கடந்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது வந்து விட்டது.
கட்சி வேறுபாடுகளை மறந்து, ஸ்டாலின், டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி, வைகோ, திருமாவளவன், இடது சாரிகள், இதர இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும். ராஜினாமா செய்யும் வரை, இந்த போராட்டம் தொடர வேண்டும். இறந்த 11 உயிர்களுக்கு அதிமுக அடிமைகளை பதில் சொல்ல வைக்க வேண்டும். சட்டபேரவை ஒரு நிமிடம் கூட நடக்கக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமி இந்தப் பதவியை விட்டு ஓடும் வரை இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும்.
எதிர்க்கட்சியாக உள்ள அத்தனை தலைவர்களின் கடமை இது.
பாரதிதாசனின் இந்தப் பாடலை நாம் செயல்படுத்த வேண்டிய தருணம் இது.
கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
அலைமா கடல் நிலம் வானிலுன்
அணி மாளிகை ரதமே
அவை ஏறிடும் விதமே யுன
ததிகாரம் நிறுவுவாய்!
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
உலகாள உனது தாய் மிக
உயிர் வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!
சவுக்கு சங்கறே வெட்டி முன்டம் வீனாபோன தன்டம் இவன் சீமானை பற்றி புரளி பரப்புபவன் இதை எப்படி நம்புவது
//கட்சி வேறுபாடுகளை மறந்து, ஸ்டாலின், டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி, வைகோ, திருமாவளவன், இடது சாரிகள், இதர இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும். //
its so funny to see Shankar still living in an inferiority complex when it comes to Naam Tamizhar Katchi bcos in the above list NTK has higher vote shared that vaiko, thirumavalavan and left but as usual Mr.Shankar wantedly avoids mentioning Seeman… “Seeman peralam solli ethuku avara naamale periyal aakanumnu” yenga aiya savukku shankar nenaikraru (as usual)… Funny guy
” ஆட்சியில் இல்லாத தலைவர்களின் தற்போதைய நிலைப்பாடு ” …: பாவப்பட்ட மக்கள் — ” எங்களையும் ஏதோ முடிந்ததை செய்கிறார்கள் என சகித்துக் கொள்கிறார்கள் ” ….?
உண்மைதான் …! தினம் ஏதாவது ஒரு வாழ்வாதார பிரச்னை அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதால் இப்போதெல்லாம் எங்களால் முடிந்தது – ஒரு அறிக்கை விடுவது – அப்புறம் குறட்டை விட்டு அடுத்த அறிக்கைக்கு ரெடியாவது — தனியே செய்துக் காட்டிய போராட்ட சூடு – சொரணை எல்லாம் — தற்போது ” மரத்து போய் ” தோழமை என்று கூட்டாக செய்து காட்டும் நிலையில் இருக்கிறோம் …!
காவிரி மற்றும் ஜீவாதார உரிமைகளுக்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாேது விறுவிறுப்பு காட்டாமல் அடக்கியே வாசிப்பாேம் … எங்களுக்கு நல்ல பதவிகளுக்கு மட்டும் குரலை உயர்த்தி உரிமைக்காக பாேராடுவாேம்…
அதுமட்டுமில்லாமல் — நீட் – வன்கொடுமை – கந்து வட்டி – கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை — ஏன் இந்த துப்பாக்கி சூடுக்கும் — போன்ற பல உயிர் இழப்புகளுக்கு – அரசு நிர்ணயிக்கிற உயிருக்கான விலையை — நாங்கள் கொஞ்சம் அதிகமான விலையை நிர்ணயித்து கொடுக்க சொல்லி அறிக்கை விடுகிறோம் — இறந்தவரின் வீடுகளுக்கே சென்று ” ஒப்பாரி ” வைத்து கண்ணீர் சிந்தி எங்களது திறமையைக் காட்டுகிறோம் …சிபிஐ விசாரணை என்று கூக்குரல் இடுகிறோம் … !
சாலை மறியல் – மனித சங்கிலி — பிற ரகப் போராட்டங்களை அனைத்துக் கட்சியினருடனும் சேர்ந்து செய்து — கைதாகி குளிர்சாதன வசதியுள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்கி உயர் ரக உணவை உண்டு — உறங்கி மாலையில் விடுதலையாகி கம்பீரமாக வெளியே வருகிறோம் … நாங்கள் இந்த கிளை சிறைச்சாலை — மத்திய சிறைச்சாலை பக்கமெல்லாம் சென்று பல வருடங்கள் கடந்து விட்டன …! சட்டசபைக்குள் சென்றதும் — உடனே வெளிநடப்பு செய்து ” கின்னஸ் ” சாதனைக்காக காத்திருக்கிறோம் …!!
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து நாங்கள் மக்களுக்கு ஆற்றும் தொண்டு எல்லோரும் அறிந்ததே … ! எங்களை போல மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு போராடுபவர்கள் வேறு யாராவது இருந்தால் காட்டுங்கள் பாப்போம் …
என்ன சில நேரங்களில் ” பகுத்தறிவு ” பேசி நாங்கள் யார் என்பதை நிலை நிறுத்திக் கொள்கிறோம் — அவ்வப்போது மறைந்த தலைவர்களின் கொட்டேஷன்களை தொட்டு — மதவாதம் — பிரிவினை — வன் கொடுமை — ஊழல் — லஞ்சம் –தொழிலாளர் நலன் — மாநில உரிமை — கல்விக் கொள்கை — கையாலாகாத அரசு என்று மறக்காமல் வார்த்தையாடுகிறோம் — எழுதுகிறோம் ….!
ஊழல் — லஞ்சம் – லாவண்ணியம் என்று – அதில் ஊறிப்போனவர்களுடன் சேர்ந்து நாங்கள் குரல் கொடுப்பது உலக முழுக்க பிரபலம் … என்னவோ எங்களால் முடிந்தளவு செய்கிறோம் … அவ்வளவே …!!!
மறைந்த தலைவர்களின் மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி எந்த சேதாரமும் இல்லாமல் வாழ்கிறோம் …. ! மக்களும் எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று நினைத்து ஒத்து போகப் பழகி விட்டார்கள் …!!!
இன்று நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் எதற்கு — ஓட்டு பொறுக்கத்தான் … ! ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் — ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடும் இவர்களுக்கு கை வந்த கலை …!! மக்கள் தான் பலியாகிறார்கள் — இவர்கள் சொகுசாக பவனி வருகிறார்கள் — நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்டவர்களை பார்க்கும் போது … மாறும் — எல்லாமே மாறும் …!!!
I don’t think Tuticorin plant will never be shut down by vedanda unless some miracle happens
why?
some facts:
1. Sterlite is the leading copper supplier in india. As per vedantha site 36% of copper used in india, is been supplied by sterlite Tuticorin
2. This plant operates in high profit margin for the current production 400kton with Revenue of 25000 crore per year
As India is copper hungry nation. And copper price is increasing across the world due to economic activity. Hence vedantha decided to double the production from 400tonnes to 800 tonnes with investment of 700 millon dollar in that it already spend $200 million as per today’s Q3 statement filed in london
So once extended plant is operational the sterlite would make a revenue of more than 50,000 crore/year from Tuticorin plant at current copper price. This will increase significantly if the copper price increase .
Now with such a figure, don’t you think they will go for any extent?
For further info, In Q3 figure they have mentioned they have cost burden is increasing but revenue is not increasing (partly down to closure of Tuticorin plan though they don’t say it directly). Due to the Q3 result published today their mkt share is been down 11.5% today.
Hope people can link all …
திராவிட அரசியலின் கள்ள காமத்தில் பிறநத குழந்தயை இந்த ஸ்டெரிலைட்டு.
இதன் பெற்று எடுத்தவள் அழுகி செத்தாள்,இதை வளர்த்த தந்தை அழுகி கொண்டிருக்கிறான்.
இராமசாமி பயல் தமிழினம் மீண்டு வரமுடியாத சுயநல புதை குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டான்.
இன்று நீட்டுக்காக சட்டையை கிழித்துக்கொள்ளும் தனியார் மருத்துவக்கல்லுரிகளின் தளபதி.
இன்று மூன்று மாவட்ட அளவில் பந்திற்காவது அழைப்புவிடுத்திருக்க வேண்டும் ஆனால்
நடிகர் விவேக் சொன்னதை போல் ரவுடி என்றால் எங்கவது செல்ல வேண்டும் ,வேகமாக ரிட்டன் ஆகவேண்டும் அதைப்போல துப்பாக்கி சூட்டிற்க்காக உத்தரவிட்ட தலைமை செயலாளரை போய் சந்தித்தார்.
உண்மை நிலவரம் தெரியுமா துத்துக்குடி தொகுதி எதிர்க்கட்சி எம் எல் ஏ எங்கே இருக்கிறார் என்று இன்று வரை தெரியவில்லை . வாங்கிய காசு க்கு விசுவாசாமா ?????
கொல்லபட்டவர்களின் உடம்பில் பாய்ந்த புல்லட்களில் அடிமைக்கழகம் மற்றூம் கொள்ளைகார
கழகம் பேர் மட்டும்மில்லை
அய்யா, அம்மா என்று சொல்லி காசு வாங்கிக்கொண்டும் ,வாங்கமலும் ஏறத்தாழ ஐம்பதுக்கு
மேற்பட்ட அடிமைகளையும் ,திருடர்களையும் டெல்லிக்கும் ,சென்னைக்கும் அனுப்பி வைத்தவர்களின்
பெயரும் இருக்கிறது.
தமிழகத்தில் சென்ற எம்பிக்கள் இரு அவையிலும் இணைந்து ஸ்டெரிலைட்டை மூட விட்டால்
காஷ்மீர் பிரிவினை வாதத்தை ஆதரித்து குரல் கொடுத்தால் போதும் எந்த மத்திய அரசும் சுப்ரிம்
கோர்ட்டிற்கு நாம் காத்திருக்க தேவையில்லை.
ஆனால் இவர்களது மடிமுழுவதும் திருட்டு கனம் ஆதலால் வழி நெடுகிலும் பயம்.
தூத்துக்குடி…
1) ஊர்வலம் பனிமய’மாதா’ கோயிலில் (சர்ச்) தொடங்கியது ஏன்?
2) ‘அறவழிப்’ போராட்டக் காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டது ஏன்?
3) காவல்துறை வாகனம் ‘வஜ்ரா’ கவிழ்த்துப் போட்டு எரிக்கப்பட்டது ஏன்?
4) காவல்துறையினர் சுமார் 10 பேர் – தமிழர்கள் – தாக்கிக் குதறப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது ஏன்?
5) கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது ஏன்?
6) ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புகள் – தொழிலாளத் தோழர்களின் வீடுகள் – தாக்கப்பட்டது ஏன்?
7) தனியார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது ஏன்?
இத்தனை ‘ஏன்’ களுக்கும், “ஆம், அது அப்படித்தான்; அது போராடுபவர்களின் உரிமை”- என்பது எவரது பதிலாகவும் இருக்குமானால் எனது பணிவான பதில் இதுதான்:- ‘சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி இரண்டையும் விரும்பும் சாதாரணப் பிரஜை என்ற வகையில் போலீஸ் வேறு வழியின்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கை சரியே’!
20000 பேர் கலந்து கொள்ளும் ஊர்வலத்தில் அத்தனை பேரும் வன்முறையாளராக இருக்க முடியாது! ஒரு 20 பேர் வன்முறையைத் தொடங்கினால் போதும்! அது 100, 200, 300 என்று பரவி ஒரு Mob Psychology ல் பலரிடமும் தொற்றிக் கொள்ளும்!
கூட்டம் கொடுக்கும் தைரியம் இது! சாதாரணமாக ‘ஏட்டு’ எதிரே வந்தாலே, பீடியை ஒளித்துக் கொள்பவன் கூட அப்போது போலீஸ் ஜீப்பை எட்டி உதைப்பான்! ஆனால் அந்த முதல் வன்முறைத் தீக்கங்கு எங்கிருந்து புறப்பட்டது? அந்த முதல் 20 பேர் யார்?
‘முதல் கல்லை எறிந்த’- அந்தப் ‘பரிசுத்தவான்’ யார்? நெக்கி நெருங்கியடித்து, பல்கிப் பெருகும் ஆவேசத்தோடு கலவரக் கும்பல் நெருங்கும் போது, போலீஸ் துப்பாக்கி இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்யாது! கடைசியில் எவன் தூண்டிவிட்டானோ அவன் வேடிக்கை பார்க்க வந்தவன் போல் வெகுளியாய் முகம் மாறுவான்! ஜனத்தோடு ஜனமாய்க் கரைந்துவிடுவான்! எவனோ இன்னொரு அப்பாவி அடி வாங்குவான்!
சுழலும் லட்டிக்கும், சீறும் துப்பாக்கிக்கும் முதல் கல் எறிந்தவன் யார், ஓரமாய் நின்று பார்த்தவன் யார் என்றெல்லாம் தெரியாது! ‘POLICE FIRED AT THE MOB!’- அப்படிதான் செய்தியே வரும்!
எனவே கல்வீச்சையும், தீவைப்பையும் நியாயப் படுத்தாமல், அப்படி முதலில் கல் எறிந்து, முதல் நெருப்பைப் பற்றவைத்துக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, ஒளிந்துகொண்டு ”அப்பாவி உயிர்கள்”- பலியாகக் காரணமான, அந்த ‘வீரத் தமிழர்களை’ அடையாளம் காண அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்!
அப்படி ஒருவேளை செத்தவனில் சிலர்”அப்பாவி தமிழன்”- இல்லை; அவனும் ஒரு கல் எறிந்த, அவனும் ஒரு பொறி பற்றவைத்த “அடப் பாவி தமிழனாக” இருந்தால், அவனுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்தட்டும்!
இவன் எவனாவது அவனவன் கட்சி ஆபீஸ் மேல் கல்லை விட்டு எறிந்தால் – “அது போர்க்குணம் சார்”- என்று பாராட்டுவானா? “அடித்தட்டு மக்களின் அழுத்தப்பட்ட உணர்வு பீறிடுகிறது சார்!”- என்பானா? எனவே அரசியல் கட்சிகளின் பொறுப்பு கூடுதலாகிறது!
CCTV காமெரா, இதர வீடியோ பதிவுகள் மூலம் கல்லெறியாத, தீ வைக்காத ‘அப்பாவித்’ தமிழர்களையும், கல் வீசிய, தீ வைத்த ‘அடப் பாவி’ தமிழனையும் இனம் பிரித்துக் கண்டெடுத்துக் கண்ணீர் சிந்தவும், கண்டனம் செய்யவுமான பெரும் பொறுப்பு அரசியல் கட்சிகளின் முன்னே இருக்கிறது! அவர்கள் “பொறுப்பானவர்கள்”- “சத்தியமே பேசக்கூடியவர்கள்” என்று நம்ப வேண்டிய “பொறுப்பு” நமக்கு இருக்கிறது!!!
காலா காலம் இந்த மாதிரி அரச பயங்கர வாதங்களை திசை திருப்ப கையாலப்படும் யுக்தியே உம்ம கேள்விகள் அனைத்தும்.
நீர் குறிப்பிட்ட அந்த ‘Mob’ மனப்பான்மை ‘அரச அதிகாரம்’ அறியாதா? என்ன செய்தால் அறவழிப் போராட்டங்கள் கலவரமாக மாறும் என்பதையும் அந்த ‘அரச அதிகாரம்’ அறியாதா?
தூத்துக்குடி ‘அறவழிப்’ போராட்டத்தை கலவரமாக மாற்ற முதலில் தடி(லத்தி) எடுத்து கலைக்க முற்பட்டது யார்? ஏன்? எதனால்?
இது தான் ஆரம்ப புள்ளி.
ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது பலதரப்பட்டவர்களும் வருவார்கள் என்று தெரியாதா? அதில் நீர் குறிப்பிடும் அந்த சமூக விரோதிகளும் வருவார்கள் என்பதை அறியாததா அரசு? அதை முன் கூட்டிய செயல் திட்டத்துடன் மக்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்து அமைதியாக கலைய செய்திருக்க முடிந்திருக்குமா முடியாதா? அப்படி செய்திருந்தால் கல் வீச்சு எப்படி நடந்திருக்கும் அதையொட்டிய கலவரம் எப்படி நடந்திருக்கும்.
எந்த கலவரத்தையும் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அரசும் அதன் போலிசும். அமைதியாக நடந்த அறவழிப் போராட்டத்தை திட்டமிட்டு கொலைக்களமாக ஆக்கி கொன்று குவித்த குற்றம் யாருடையது? அது எந்தவிததில் நியாயம்.
//இந்த இரண்டு புகழுக்கும் சொந்தக்காரர் டிகே.ராஜேந்திரன்தான். இப்படிப்பட்ட மங்குணியை எடப்பாடி பழனிச்சாமி நள்ளிரவில் பதவி நீட்டிப்பு அளித்து டிஜிபியாக்குகிறார் என்றால் எடப்பாடி எப்படிப்பட்ட மங்குணி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.//
100% correct..!
உலகாள உனது தாய் மிக
உயிர் வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!
ippa உடனே விழி தமிழா nu podura idho da adutha stage Devar ,Nadar…… nu poduviya SHANKAR Ref Unga latest Youtube Interviewla seeman pathi Question ketapa ipadai dhan nee soona SHANKARU….
Value points..salute..
This killings will continue for Nutrino, Sagar Mala, Methane, Hydro carbon, Salem Green ways Project, Ariyalur Cement Factories…Finally our Tamil will be like Srilankan Tamil one day..
அருமை
Sir an excellent valuable timely released article sir u have exposed AtoZ u r doing the job of opposition party work u alone can do this job we need u sir pl continue ur services to the people u r not bothered who is who ur aim is always people welfare pl continue sir darkness should be eliminated u alone can bring bright light to world u r a warrior ur the ultimate winner we r all with u people r after u sir u alone lead Tamilnadu in future sir
காவல்துறை என்பது ஒரு வேட்டை நாய். அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரையில்தான் அது சாதுவான பிராணி. அதை கட்டவிழ்த்து விட்டால், வேட்டை நாய்க்கான குணத்தோடுதான் பாயும். அப்படித்தான் அது பயிற்றுவிக்கப்படுகிறது
ஸ்டாலின் வேஸ்ட் பீஸ்
என்ன செய்ய திமுகவிடம் தான் 90 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்
I agree police are hunting dogs and bark on masters order..but mad hunting dogs to be put down..
தோழர், கொல்ல ப் பட்டவர் கள் மிக முக்கியமாக இந்த 100 நாள் போராட்டம் நடத்தியவர்கள்…திட்டமிடப்பட்டு குறிபார்த்து ஸ்னைபர்களை கொண்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. முகநூலில் kaaritv என்னும் பக்கத்தை பார்க்கவும்