1991-1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, காங்கிரஸ், பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுப்பினர். இதற்கு சட்டசபையில் பதிலளித்த, ஜெயலலிதா, சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்து வந்ததா என்று கேட்டார். கேட்டதோடு நில்லாமல், சிபிஐ ஒன்றும் தவறே செய்யாத ஒரு அமைப்பு அல்ல என்றும் கூறினார்.
இன்றைக்கு, உச்ச நீதிமன்றமே, சிபிஐ மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று நற்சான்று அளித்துள்ளது. நாடே மிக ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில், சிபிஐ இரண்டு குற்றப் பத்திரிக்கைளை தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு குற்றப் பத்திரிக்கைகளிலும், சிபிஐ சரியான முறையிலும், நேர்மையான முறையிலும் செயல்பட்டிருக்கிறதா என்பதை வைத்தே, சிபிஐ யின் பாரபட்சமற்ற அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்.
சிபிஐ யின் முதல் குற்றப் பத்திரிக்கையை எடுத்துக் கொள்வோம். இந்தக் குற்றப் பத்திரிக்கையின் படி, ஸ்பெக்ட்ரம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் தேதியை 25.09.2007 என ராசா மாற்றியதே கூட்டுச் சதித் திட்டத்தின் வெளிப்பாடு என்று தெரிவிக்கிறது. இவ்வாறு 25.09.2007 என்பதை கடைசித் தேதியாக மாற்றியதனால் தான், ஸ்வான் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் பயன் பெற முடிந்தது என்று சிபிஐ தெரிவிக்கிறது. இவ்வாறு கடைசித் தேதியை தன்னிச்சையாக ராசா மாற்ற முயற்சி எடுத்ததற்கு, தொலைத் தொடர்புத்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறித் தான் ராசா, தனது சதித்திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்று சிபிஐ தெரிவிக்கிறது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கருத்தை பெற வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கோப்பில் எழுதியதை தொடர்ந்து, கோப்பு நீதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் படுகிறது. நீதித்துறை அமைச்சகம், இந்த முடிவை ஒரு அமைச்சர் எடுப்பதற்கு பதிலாக, ஒரு அமைச்சரவை குழு எடுக்கலாம் என பரிந்துரைக்கிறது.
இந்த நிலையில், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆ.ராசா, 02.11.2007 அன்று, மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், நீதித்துறை அமைச்சகம், ‘ஓவராக பேசுகிறது’ அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏராளமானோர், ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பித்திருப்பதால், உடனடியாக ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும் என்று எழுதுகிறார்.
அந்தக் கடிதம் பிரதமரைச் சென்றடையும் முன்பாகவே, அதே நாளில் 02.11.2007 அன்றே மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “ஏராளமானோர், ஸ்பெக்ட்ரம் வேண்டி, விண்ணப்பித்திருப்பதால், எவ்வளவு ஸ்பெக்ட்ரம் இருக்கிறது என்பதை கவனமாக பரிசீலிக்கவும், ஸ்பெக்ட்ரம் வழங்காமல் வெறும் லைசென்ஸ் மட்டும் வழங்குவதால் யாருக்கும் பயன் இல்லை” என்று எழுதுகிறார்.
அன்று இரவே, மன்மோகனுக்கு ராசா பதில் எழுதுகிறார். எந்த விதிமுறைகளையும் மீறாமலே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதனால், விதிமீறல் இல்லாமலே முடிவெடுக்கப் படும் என்று எழுதுகிறார்.
ராசா கடிதம் எழுதிய 02.11.2007 அன்றே, அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பாகவே மன்மோகன் ராசாவுக்கு எப்படி கடிதம் எழுதுகிறார். ராசா தன்னை இந்த விவகாரத்தில் கோர்த்து விடப் பார்க்கிறார், அதனால் நாம் முந்திக் கொள்வோம் என்று மன்மோகன் இப்படி கடிதம் எழுதினாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மன்மோகன் ராசாவுக்கு எழுதிய கடிதம் எப்போது தயார் செய்யப் பட்டது, இவ்வாறு கடிதம் எழுத வேண்டும் என்ற உத்தரவு யாரால் வழங்கப் பட்டது, நேரடியாக ராசாவை அழைத்து விவாதிக்காமல், இப்படி கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன, என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டியது மன்மோகன் அல்லவா ? மன்மோகன் சிங்கின் செயலாளர், அந்தரங்க காரியதரிசி, பிரதமர் அலுவலகத்தில் இந்த கடிதத்தை தயார் செய்தவர் என்று அத்தனை பேரையும் அல்லவா சாட்சியாக விசாரிக்க வேண்டும் ? மன்மோகனை ஏன் சிபிஐ விசாரிக்கவில்லை ? மன்மோகனின் கீழ் சிபிஐ பணியாற்றுவதாலா ?
இது மட்டும் அல்ல. இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும் போது, ராசாவின் தீய நோக்கத்துக்கு மற்றொரு தடை, வருகிறது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையை பின்பற்றினாலும், ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு முன்பாக விண்ணப்பம் வழங்கிய நிறுவனங்களும் இருப்பதால், அந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்க ஏதுவாக, ஒரு மணி நேரத்திற்குள் மொத்த கட்டணத்திற்கான வரைவோலையை (டிமான்ட் ட்ராப்ட்) வழங்க வேண்டும் என்ற விதிமுறையில் ராசா திருத்தம் கொண்டு வருகிறார். இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த, தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், இவ்வாறு விதிமுறையை மாற்ற இயலாது என்று கோப்பிலேயே எழுதி விடுகிறார்கள். இவ்வாறு கோப்பிலேயே பதிவு செய்தது, ராசாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கோப்பில் எழுதியதை எப்படி அழிக்க முடியும் ?
இதை மீறுவதற்கு ராசா கையாண்ட தந்திரம், மன்மோகனுக்கு மீண்டும் ஒரு கடிதம். அந்தக் கடிதத்தில், விண்ணப்பங்கள் ஏராளமாக வந்துள்ளன. நேரமோ மிகக் குறைவாக இருக்கிறது (எதுக்கு துட்டு வாங்கவா ?) அதனால் நான் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, உடனடியாக ஸ்பெக்ட்ரம் வழங்குவதென முடிவெடுத்து விட்டேன்…. என்று கடிதம் எழுதுகிறார்.
மன்மோகன் பிரதமரா, ராசா பிரதமரா என்ற சந்தேகம் எழுகிறதல்லவா ? மன்மோகனுக்கு அது போன்ற சந்தேகமெல்லாம் இல்லை. நான் பிரதமராக இருக்க வேண்டுமே என்ற கவலை மட்டுமே. பிரதமருக்கு கீழ் பணியாற்றும், ஒரு அமைச்சர், நான் இப்படித் தான் செய்யப் போகிறேன் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால், அந்தக் கோப்பை என்னிடம் அனுப்புங்கள் என்றல்லவா மன்மோகன் உத்தரவிட்டிருக்க வேண்டும் ? அதை விடுத்து, மன்மோகன் என்ன செய்தார் தெரியுமா ? ராசாவுக்கு ஒரு பதில் கடிதம் எழுதுகிறார்.
இதுதான் மன்மோகன் எழுதிய கடிதம். ஒரு நபர், நான் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறேன் என்று மற்றொருவருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தை பெற்றவர், உங்கள் கடிதம் வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு, அது போல ஒரு கொள்ளை உண்மையிலேயே நடந்தது என்றால், முன் கூட்டியே தகவல் பெற்ற நபரை கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றப் பத்திரிக்கையில் சேர்ப்பது தானே முறை ? ஆனால், மன்மோகனை சாட்சியாக கூட சிபிஐ விசாரிக்கவில்லை என்பதே, சிபிஐ யின் யோக்யதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அல்லவா ?
அன்று மன்மோகன் தலையிட்டு, ராசாவை தடுத்திருந்தார் என்றால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியிருக்கும் தானே ? இன்று இந்த சிபிஐ விசாரணை, அதற்கு ஒரு செலவு என்று தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கான அவசியம் இல்லாமல் போயிருக்குமே ?
இந்த நிலையில், சிபிஐ யின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய மன்மோகன், சிபிஐ, விருப்பு வெறுப்பின்றி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளது, சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ?
இதோடு முடியவில்லை. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக குலாம் ஈ வானாவதி என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு வழக்கறிஞர் வேலையை தவிர, மற்ற எல்லா வேலைகளும் அத்துப் படி. அந்த நபரிடம், ராசா, இது போல, நான் விதிமுறைகளை மாற்றி ஒரே நாளில் மொத்த பணத்தையும், வரைவோலையாக கட்ட வேண்டும் என்ற உத்தரவிடப் போகிறேன் என்று எழுதுகிறார். அதற்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில், வானாவதி, “ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான கோப்புகளை நான் பார்த்து விட்டேன். ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான வழக்குககள் எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. எடுக்க உத்தேசித்திருக்கும் முடிவு நியாயமானதும், வெளிப்படையானதும் ஆகும். இது தொடர்பான பத்திரிக்கை குறிப்பு, அனைத்தையும் வெளிப்படையானதாக்கும். எல்லாம் சரியாக உள்ளது”. இதுதான் வானாவதி வழங்கிய கருத்துரை.
இந்த நபர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட வேண்டுமா இல்லையா என்று சொல்லுங்கள். இந்த நபரும் சேர்க்கப் படவில்லை.
இதை விட, சிபிஐ செய்துள்ள மிகப் பெரிய குளறுபடி ஒன்று உள்ளது. அது, மன்மோகனையும், வானாவதியையும் காப்பாற்றியதை விட, மிகப் பெரிய அயோக்கியத்தனமானது.
ஆண்டிமுத்து ராசா மற்றும், யூனிடெக் நிறுவனம் மற்றும், ரிலையன்ஸ் (ஸ்வான்) ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டு தேசத்தில் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை கொள்ளையடித்ததாக குற்றச் சாட்டு. இவர்களுக்கு இணையாக இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்ட மற்றொரு நிறுவனம், டாடா. டாடா நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இரட்டை லைசென்ஸ் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் படுகிறது. இரட்டை லைசென்ஸ் என்றால் என்னவென்றால், ஏற்கனவே லைசென்ஸ் பெற்று, சிடிஎம்ஏ தொழில் நுட்பத்திற்காக ஸ்பெக்ட்ரம், ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, ஜிஎஸ்எம் தொழில் நுட்பத்திலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது. ரிலையன்ஸ் மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது போல ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணபப்பித்திருந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய ராசா, ஜனவரி 2008ல் டாடா நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்குமே, 2001ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய விலையில் ஒதுக்குகிறார். இந்த ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. நிதித் துறை, தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் அதிகாரிகள், எழுத்து பூர்வமாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். ஆனால், ராசா, ‘போங்கடா வெண்ணைகளா’ என்று 2001 விலையான 1700 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். ரத்தன் டாடா என்ன செய்கிறார் தெரியுமா ? ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற உடன், டாடா டெலிசர்வீசஸின் 27 சதவிகித பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ என்ற நிறுவனத்துக்கு விற்கிறார். எவ்வளவுக்கு தெரியுமா 14 ஆயிரம் கோடிக்கு. இப்படி கொள்ளை லாபம் பெற்றதற்காகத் தான், அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ் கட்டிடத்தை ராசாத்தி அம்மாளுக்கும், அவரின் தவப்புதல்விக்கும் தாரை வார்த்தார் ரத்தன் டாடா.
நவம்பர் 2007ல், ரத்தன் டாடா கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம், நீரா ராடியா மூலமாக, கருணாநிதியிடம் நேரடியாக கொடுக்கப் படுகிறது. (இளைஞன் படத்துல, நீரா ராடியாவ கருணாநிதி ஏன் ஹீரோயினா போடல ?. அவங்க கழக நீரோட்டத்துல இணைஞ்சிருந்தா, குஷ்பூவுக்கு இடம் இல்லாம போயிருக்குமா ?)
அந்தக் கடிதத்தில், “இந்திய வரலாற்றில் தொலைத் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பு உங்கள் கட்சியிடம் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வையோடும், புதிய சிந்தனைப் போக்கோடும், நீங்களும் உங்கள் அமைச்சரும் இத்துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை பாராட்ட வேண்டியது வரலாற்றின் கடமை. தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சியை சீர்குலைக்க பல்வேறு சக்திகள் முயன்று வருகின்றன. அந்த பொய்யான தகவல்கள் குறித்த உண்மையை உங்களுக்கு விளக்குவதற்காக நீரா ராடியாவிடம் இக்கடிதத்தை நேரடியாக கொடுத்தனுப்புகிறேன்.”
இந்தக் கடிதத்தை விட, கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ? இது வரை எந்த அமைச்சரையுமே பாராட்டாத ரத்தன் டாடா, எதற்காக தனிப்பட்ட முறையில் இப்படி ஒரு கடிதத்தை எழுத வேண்டும் ?
இது மட்டுமல்ல. யூனிடெக் நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலிருந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற விலை 1700 கோடி ரூபாய். இந்த 1700 கோடி ரூபாயும், டாடா நிறுவனத்தால் வழங்கப் பட்டிருக்கிறது என்பது விசித்திரமான உண்மை. டாடா குழுமத்தின் டாடா ரியாலிட்டி நிறுவனத்தின் மூலமாக யூனிடெக் நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட 1700 கோடி ரூபாயையும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக யூனிடெக் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது, ஆதாரங்களோடு அம்பலப் பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஸ்வான் நிறுவனம் என்ற ஒன்றை உருவாக்கியதென்றால், டாடா நிறுவனம், ஏற்கனவே இருந்த யூனிடெக் நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரித்ததாகவே தெரியவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம் தனது பங்குகளை துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு விற்றது, யூனிடெக் நிறுவனம் தனது பங்குகளை நார்வேயின் டெலிநார் என்ற நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது என்று பட்டியலிடும், சிபிஐ, டாடா நிறுவனம், டோகோமோவுக்கு தனது பங்குகளை விற்று கொள்ளையோ கொள்ளை அடித்ததைப் பற்றி மூச்சு விடவில்லை.
சிபிஐ வானத்திலிருந்து குதித்ததா என்ற கேள்வி சரியான கேள்வி தானே ? போபர்ஸ் விவகாரத்தில் சிபிஐ, செய்த அயோக்கியத் தனங்களை பார்த்திருக்கிறோம் தானே…. ? இது மட்டும் என்ன விதிவிலக்கா ?
சிபிஐயில் பணியாற்றுபவர்களும் மனிதர்கள் தானே…. ? அவர்களுக்கும், ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், உயிர் பயம் எல்லாம் இருக்கும் தானே… ?
சரி இவ்வளவு நேரம் சீரியசாகவே படித்து விட்டோம். கொஞ்சம் நகைச்சுவையை சுவைக்கலாமா. தான் எடுக்கும் முடிவுகள் குறித்து, மன்மோகனுக்கு கடிதம் எழுதிய ராசா, மற்ற விவகாரங்களுக்குப் பிறகு, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது.
“இந்தத் துறையில் நான் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே, மக்களுக்கு குறைந்த விலையில் செல்போன் சேவையை வழங்குவதற்காகவும், கிராமப் புறங்களில் செல்போன் சேவையை விரிவுபடுத்துவதற்காகவுமே.”