நான் வேள்வி தொடர் தொடங்குவதற்கு முன்பே குறிப்பிட்டதைப் போல, கதைகளும், புதினங்களும் எழுதுவதற்கு எனக்கு தயக்கம் என்பதை விட, அச்சமே அதிகம். ஜெயகாந்தன், சுஜாதா, சு.சமுத்திரம், சா.கந்தசாமி, ஜெயமோகன், போன்றவர்களின் எழுத்துக்களை படித்த பிறகு, நாம் இந்த விபரீத முயற்சியில் ஒரு நாளும் இறங்கக் கூடாது என்றே நினைத்திருந்தேன். எழுத்தாளர் சுஜாதா, அவர் ஸ்ரீரங்கத்தில் வயலின் கற்றுக் கொள்ள எடுத்த முயற்சியை, அவர் வயலின் வாசித்ததை பூனை பிரசிவிக்கையில் ஏற்படுத்தும் ஒலி போல இருந்தது என்று வர்ணித்திருந்தார்.
அதே தயக்கங்கள் எனக்கும் உண்டு. ஒரு குமாஸ்தாவாக வாழ்க்கையை தொடங்கிய எனக்கு, எழுத்து என்பது, எட்டாத கனியாகவே இருந்தது. திரைப்பட விமர்சனங்கள் எழுத ஆர்வம் வரும். ஆனால் எழுதி எங்கே வெளியிடுவது ? யார் படிப்பார்கள் ? பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, எழுதுவதைத் தவிர வேறு வழியே இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டபோதுதான், எழுதத் தொடங்கினேன். இணையத்தின் வீச்சு எத்தகையது. அது எத்தனை பேரை சென்றடையும் என்ற விபரங்கள் எனக்கு அப்போது தெரியாது. ஆவணங்களோடு ஊழலை வெளியிடுங்கள் என்று பெரிய ஊடகங்களின் அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் படியேறினேன். ஒரே ஒரு ஊடகம் கூட அன்று திமுக அரசுக்கு எதிராக செய்தி வெளியிட தயாராக இல்லை.
அந்த கோபத்தில்தான் நான் இணையத்தில் எழுதத் தொடங்கினேன். அன்றைய உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டின் வீட்டு மனை ஊழல் ஆதாரத்தை சவுக்கில் வெளியிட்ட மறு நாள் காலை 7.30க்கு கைது செய்யப்பட்டேன். கைது செய்யப்பட்தை ஒட்டி 26 ஜுலை 2010ல் எழுதிய கட்டுரை. இதன் பிறகு பரவலாக என் கட்டுரைகள் விவாதிக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் மத்தியில் கட்டுரைகள் பேசப்பட்டன.
பத்திரிக்கையாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். சாதாரண வாசகர்களும் மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்கினர்.
பரவலாக சவுக்கு கட்டுரைகள் வரவேற்பை பெற்றதும், மீண்டும் கதை எழுதும் ஆசை துளிர் விடத் தொடங்கியது. ஆனாலும், தயக்கம் போகவேயில்லை. 2012ல், கதை எழுதும் ஆர்வத்தை என் நண்பர் நாசரிடம் சொன்னபோது, தாராளமாக எழுது. நான் எடிட் செய்கிறேன் என்று சொன்னார். விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். ஆனால் என் தயக்கத்தின் காரணமாக, ஒரு ப்ளாக் தொடங்கி, யாரிடமும் சொல்லாமல், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நண்பர்களிடம் மட்டும் சொன்னேன். அவர்கள் படித்து விட்டு, நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது, எனது திருப்திக்காக சொன்னார்கள் என்றே எடுத்துக் கொண்டேன்.
நம்ம அடையாளம் வார இதழில் பணியாற்றியபோது, அதன் ஆசிரியர்கள் கோசல்ராம் மற்றும் கதிர் சாரிடம் இது பற்றிக் கூறியபோது, அவர்கள் படித்து விட்டு, மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கூறியதோடு, அதை தொடராகவும் அந்த இதழில் வெளியிட்டனர்.
இருப்பினும் இதை சவுக்கில் வெளியிட எனது தயக்கம் அகலவேயில்லை. ஜனவரி மாதம் நான் எழுதிய ஊழல் உளவு, அரசியல் நூல் வெளியிடப்பட்டது. அந்நூலை படித்த பெரும்பாலானோர் ரசித்ததாகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்தனர். அப்போதுதான் முதல் முறையாக, அந்தக் கதையை சவுக்கில் வெளியிட்டால் என்ன என்ற எண்ணமே வந்தது.
முதல் எபிசோடை சவுக்கில் வெளியிட்டபோது, அதற்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் அடுத்தடுத்த எபிசோடுகளை வாசகர்கள் ரசித்தனர் என்பதை என்னால் காண முடிந்தது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே வேள்வியின் அத்தனை எபிசோடுகளும் சவுக்கில் வெளி வந்தது.
அந்தக் கதை உண்மையா ?
வேள்வியை படித்த பல வாசகர்கள் கேட்ட, கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா என்பதே ?
உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். எந்த பாத்திரமும் முழுமையான கற்பனையாக இருக்க வாய்ப்பு கிடையாது. விலங்குகளை நேசிக்கும் மனிதனின் ஆசையே, விநாயகர் பாத்திரம். இரண்டு மனைவிகளோடு ஒரே நேரத்தில் குடும்பம் நடத்த வேண்டும் என்ற அவனது விருப்பமே முருகன் பாத்திரம். சிவனின் பாத்திரமும் அதுவே.
தாய் வழிச் சமூகத்தின் நீட்சியே பாஞ்சாலி பாத்திரம். ஒரு பெண் ஏளனமாக சிரிப்பதை ஒரு ஆணால் எப்படி பொருத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்துவதே துரியோதனின் பாத்திரம். ஒரு மனிதன் எப்படி கருணையே வடிவானவனாக இருக்க வேண்டும் என்பதே ஏசுநாதர் பாத்திரம்.
ஒருவன் நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதே நபிகள் பாத்திரம். மனிதனின் அற்புதமான படைப்பாற்றலுக்கு சிறந்த உதாரணங்களே நமது கடவுள்கள். மனிதனே ஒரு பாத்திரத்தை உருவாக்கி, அவனே அந்த பாத்திரங்களைப் பார்த்து பயப்படுவதுதான் படைப்பாற்றலின் உச்சம். நமது படைப்பாற்றலின் அற்புதங்கள்தான், ஆண்களும், பெண்களும், அரவாணிகளும், விலங்குகளும் நம்மால் கடவுளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
வேள்வி கதையில் வரும், வெங்கட்களும், வசந்திகளும், கல்யாண சுந்தரங்களும், சிங்காரவேலுக்களும் எங்காவது வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். அது போன்ற காதல்கள் நம்மைச் சுற்றிக் கூட இருக்கும், நமக்குத் தெரியாததால் அந்தக் காதல்கள் பொய்யாகி விடுவதில்லை.
நமது மனதின் ஆசைகளையும் நிராசைகளையும் கடவுளாக வடிக்கையில், ஒரு கதையின் மாந்தர்களாக வடிப்பது சரியானதுதானே ? உங்களில் யார், வசந்திகளாகவும், வெங்கட்களாகவும் வாழ்ந்து பார்க்க ஆசைப்படாதவர் ? நானும் ஆசைப்பட்டேன். அப்படி ஒருத்தியை காதலிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டேன். அவளை நினைத்து கிரங்க வேண்டும் என்று விரும்பினேன். அவள் குரல் கேட்டு இரவு முழுவதும் உறங்காமல் அவளை தழுவிக் கொண்டே, கண்ணை மூட வைக்கும் உறக்கத்தை புறந்தள்ள வேண்டும் என்று கனவு கண்டேன். எனது கனவின் வடிவமே வேள்வி. வெங்கட்டும், வசந்தியும் எங்காவது ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
வேள்வியின் இதர பாத்திரங்களில் நான் சந்தித்தவர்களும் உள்ளார்கள். சந்திக்காதவர்களும் உள்ளார்கள். எனக்கு காவல்துறை, சிறை, நீதிமன்றம், விசாரணை ஆணையத்தில் கிடைத்த அனுபவங்களின் சாயல் வேள்வியில் ஏராளமாக இருக்கின்றன.
வேள்வியின் முடிவு சரியா ?
வெங்கட், சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வழங்கும் ராம்நாத் கோயங்கா விருதை பெறுகையில் முதல் வரிசையில் வெங்கட்டின் தாயும், கைக் குழந்தையோடு வசந்தியும் அமர்ந்து பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்த ஒரு முடிவை வைக்க எனக்கும் விருப்பமே. ஆனால் யதார்த்தம் அப்படியானது இல்லை.
பெட்ரோல் பங்கில் கலப்படத்தை தடுக்க முயற்சித்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி மஞ்சுநாத் சண்முகம் 2005ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தேசிய நெடுஞ்சாலைகளை தரமற்று அமைத்த காண்ட்ராக்டரை, 7 கிலோ மீட்டர் சாலைகளை மீண்டும் அமைக்க உத்தரவிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய பொறியாளர் சத்யேந்திர துபே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள ஊழலை வெளிக் கொணர்ந்த சமூக ஆர்வலர், சதீஷ் ஷெட்டி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுக்க முயன்ற 2009ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி நரேந்திர குமார் ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, ஜார்கண்டில் உணவுத் துறையில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்திய, சமூக ஆர்வலர் லலித் மேத்தா, கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கடவுள் மறுப்பு கொள்கை பேசியவர்களும், சிறந்த எழுத்தாளர்களுமான, நரேந்திர தாபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது சமீபத்திய வரலாறு.
அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் அதை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை அத்தனை எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. மூர்த்தன்யமாக எதிர்த்து, அவர்களை அழித்து ஒழிக்கவே முயலும். இது எல்லா அரசுகளுக்கும் பொருந்தும். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பபவர்கள், தங்களை சாமான்யன் ஒருவன் எதிர்த்து கேள்வி எழுப்புவதை விரும்புவதில்லை. அப்படி கேள்வி எழுப்பும் நபரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதை விட, அடுத்து ஒருவரும் கேள்வி எழுப்பக் கூடாது என்ற உதாரணத்தை உரக்கச் சொல்லவே அதிகார வர்க்கம் விரும்பும். அதுதான் யதார்த்தம்.
அந்த யதார்த்தத்தை புறக்கணித்து, ஒரு மகிழ்ச்சியான முடிவை ஏற்படுத்த என் மனம் ஒப்பவில்லை.
வேள்வி பலரை சென்றடைந்ததோடு பலராலும் பாராட்டப்படுவதை என்னால் பார்க்க முடிகிறது. மேலும் கதைகளை நான் எழுதலாம் என்ற நம்பிக்கையை இந்த ஆதரவு உருவாக்கியிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு கதை எழுதும் மனநிலை எனக்கில்லை. அரசியல் மற்றும் புலனாய்வு கட்டுரைகள் எழுதுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.
வசந்தியைப் போல மேலும் ஒரு கனவுக் காதலி என் மனதில் குடியேறுகையில், அடுத்த கதையைப் பற்றி சிந்திக்கலாம்.
இத்தொடரை தங்களது நேரத்தை செலவழித்து, படித்து என்னை உற்சாகப்படுத்திய எனது அன்பு வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அவர்களுக்காகத்தானே என் எழுத்து ?
இந்த புதினத்தையும், நூல் வடிவில் வெளியிட முன்வந்துள்ள கிழக்கு பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள்.
அன்புடன்
சவுக்கு சங்கர்.
28 மே 2018
உங்கள் எழுத்துக்களில் பல விமர்சனம் கொண்டிருந்தாலும், செய்தியை அதன் தன்மை மாறாமல் வெளியிடவே விரும்புவதை உங்கள் எழுத்து உணர்த்துகிறது. நல்ல கதை பல பெரிய மனிதர்களை தோலுரித்து தொங்க விட்டதற்கு வாழ்த்துக்கள்
Unexpected ending… nice one… Easily we can link the characters with real faces… Well done…
உண்மையை உரக்க சொல்லும் தைரியக்காரரை பாராட்டுகிறேன். ஊழல்வாதிகளின் பெயரைத்தான் நேரடியாக சொல்லமுடிவதில்லை.
Dear Mr. Shankar, I am of the opinion that you have got excellent writing skill. You have the ability to put down exactly what you think about a matter on a paper. You are able to use right words with short sentences , which are the most required quality of a writer. You have trained yourself in writing many political articles. I understand that your articles are complete in all manners. But, when I read your story, it gave me an impression that it is going to explain major incidents and sequences of activities of the different characters. But, when I was just thinking it has started well, it was closed all on a sudden. i.e it was completed like an article. As a story, I consider it is not complete. I like to cite out a serial article written by Ra. Ki. Rangarajan “Yeppadi Kathai Yezhuthuvathu”. Kindly read that book once. Also, please read an article written by Sujataha about writing a story. I hope you can improve your skills in writing stories too.
sirappaka irundhtha…. kaadhalil social media paduthum paadu kuritha vivaranaikal mika sirappaka aminthathu…Melum thodara en nenjarndha vaazhthukal
Great story. But we can not accept this sad ending. Please continue writing.. your style of narration is just like Sujatha..
Really it was nice and interesting….keep writing
அருமையான எழுத்து நடை ..தொடருங்கள்..
வசந்தி என்ற நபர் ஒருவர் கதையின் சுவாரசியத்திற்கு உருவாக்கப்பட்டது, மற்ற நபர்கள் வாழ்க்கையில் சந்தித்த உண்மையான மனிதர்கள் என்பதால் சிங்காரவேலு சிதம்பரம் என்பதும் அது நடந்த உண்மை சம்பவம் குறித்து எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற திருடர்களை மக்களுக்கு தெரியப்படுத்தி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து கவனமாக கதையில் எழுதியதற்கு நன்றி.மேலும் நிறைய எதிர் பார்க்கிறேன்.
Super fast thrilling story,just marvelous.please continue to write,it will be an inspiration for readers to face life difficulties bravely.Thank you so much.
பல வருடங்களாக தங்களது எழுத்துகளை பல இடங்களில் வாசித்து வருகிறேன் … அதே போல் தொடர் கதையும் மிக நன்றாக இருந்தது …. தங்களின் எழுத்து பாணி மிகவும் நன்று ..தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்
ஒரு அதி வேக ரயிலில் பயணம் செய்து விட்டு இறங்கிய அனுபவம்…..உங்கள் தொடரைப் படித்து முடித்ததும்..