சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட ஒரு ஜாமீன் இந்தக் கேள்வியை எழுப்புகிறது.
சவுக்கு இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் : வழக்கறிஞர்கள். சவுக்கு ஜாபர் சேட் போன்ற உயர் அதிகாரிகளின் பல்வேறு சதிச்செயல்களை முறியடித்ததற்கு காரணம் : வழக்கறிஞர்கள். சவுக்கு பல்வேறு மனித உரிமை விஷயங்களை எடுத்து எழுதுவதும், வழக்காடுவதற்கும் காரணம் : வழக்கறிஞர்கள். அதனால் சவுக்கு வழக்கறிஞர்களுக்கு ரொம்பவே கடமைப் பட்டுள்ளது.
அதற்காக வழக்கறிஞர்கள் செய்யும் எல்லாமே சரியாகி விடுமா ? ஆகாது. எல்லா சமூகத்திலும் இருக்கும் கருப்பு ஆடுகளைப் போலவே தான் வழக்கறிஞர் சமூகத்திலும், கருப்பு ஆடுகள் இருக்கின்றன.
விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் வரும் பெண்களை அடிப்பது, காவல் நிலையம் சென்று கட்டைப் பஞ்சாயத்து செய்வது, எழும்பூர் நீதிமன்றத்தில், வக்காலத்து தாக்கல் செய்து விட்டு, 2 லட்சம் கொடுத்தால் தான், வக்காலத்தை திரும்ப பெறுவேன் என்று, அராஜகம் செய்வது என்று, இந்தத் தொழிலிலும், அநியாயங்களில் ஈடுபடும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களையெல்லாம் வழக்கறிஞர்களாகவே ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், சென்னை சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட ஒரு பொது நல வழக்கில் ஒரு உத்தரவு போட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை எப்படி நடக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு, தமிழக அரசு சார்பில், வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் என்று பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று தமிழக அரசு சொன்ன ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங். இந்த ஆர்ம்ஸ்ட்ராங் சென்னை கொளத்தூரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர்.
இந்த விஷயத்தை, பொது நல வழக்கு தொடர்ந்தவர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியதும், கடும் கோபம் அடைந்த உச்சநீதிமன்றம், உடனடியாக சம்பந்தப் பட்டவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.
அவ்வாறு உச்ச நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டவர்களில் ஒருவர், வழக்கறிஞர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த், கடந்த சனிக்கிழமை, உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் அவர்களின் வீட்டில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்கிறார். அந்த மனுவை விசாரித்த, நீதிபதி சுதந்திரம், ரஜினிகாந்துக்கு, 10,000 ரூபாய் உறுதிப் பத்திரத்தோடு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சனிக்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
நீதிபதி சுதந்திரம்
இந்த ஜாமீன் பல கேள்விகளை எழுப்புகிறது.
வழக்கறிஞர்கள் கைது செய்யப் படவே கூடாதா ?
மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமைகள் தானே அவர்களுக்கும் ?
வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகள் ஜாமீன் வழங்குவது போல, தவறு செய்யும் காவல்துறையினரை, அவர்கள் கைது செய்யாமல் விடுவது நியாயம் தானே ?
இவ்வாறு வீட்டில் ஜாமீன் வழங்குவதென்றால், காவல்துறையினரால் கைது செய்யப் படும் மற்றவர்களுக்கும் வீட்டில் ஜாமீன் வழங்குவார்களா நீதிபதிகள் ?
வீட்டில் வழக்குகளை விசாரிப்பது என்றால், எதற்காக கோடை விடுமுறை ?
மற்ற எல்லா வழக்குகளிலும், அரசுத் தரப்பு நியாயத்தை கேட்ட பிறகு ஜாமீன் வழங்கும் நீதிபதி, இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே ஜாமீன் வழங்கியது ஏன் ?
இது போல, வழக்கறிஞர்களுக்கு மட்டும், நீதிபதிகள் சாதகமாக நடந்து கொண்டால், பொது மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை வரும் ?
இது போல நீதிபதிகள் ஜாமீன் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை வந்தால், வழக்கறிஞர்கள் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யத் துணிவார்களே ?
ரஜினிகாந்துக்கு வழங்கிய இந்த ஜாமீன் மட்டும் கிடையாது. இதே போல இரண்டு மாதத்துக்கு முன், இதை விட பெரிய அயோக்கியத்தனம் நடைபெற்றது.
டெல்லி சிபிஐ அதிகாரிகள், ஒரு தனியார் சட்டக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் கேட்டதாக, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் தனபால்ராஜ் என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இவருக்கு இடைத் தரகராக செயல்பட்ட மனீஷ் தியாகி மற்றும், ராஜீந்தர் சிங் ரானா என்பவரையும் கைது செய்து, தனபால் ராஜ் வீட்டில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை ஒட்டி, தனபால் ராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறார்.
தனபால் ராஜ்
எஃப்ஐஆர் டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும் ? ஆனால் தாக்கல் செய்தார்கள். இதையொட்டி, இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்ற போது, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அந்த நீதிமன்றத்துக்கு சென்று, ஜாமீன் கொடுத்தே ஆக வேண்டும் என்று, ஏறக்குறைய மிரட்டும் வகையில் நடந்து கொண்டார்கள்.
ஒரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர், எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், அதையெல்லாம் சமாளித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்காகத்தான், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, இத்தனை அதிகாரங்களை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், அந்த உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன், நான்கு வாரங்களுக்கு, தனபால் ராஜுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நான்கு வாரங்கள் கழித்து, டெல்லி நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
நீதிபதி அருணா ஜெகதீசன்
தனபால் ராஜ் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியதும், அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டதும், பிறகு அவரை சிபிஐ கைது செய்ய உத்தரவிட்டதும், குறிப்பிடத் தக்கது.
இந்த விவகாரம் இரண்டிலும், தவறு செய்தவர்கள் வழக்கறிஞர்கள் என்பதை விட, நீதிபதிகள் என்பதே சாலப் பொருத்தம். வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்காக ஆயிரம் பேசுவார்கள், கேட்பார்கள். ஒரு நீதிபதியாக இருப்பவர், எவ்வித மிரட்டலுக்கும் செவி சாய்க்காமல், சட்டத்தை அலசி ஆராய்ந்தல்லவா நீதிபரிபாலணம் செய்ய வேண்டும் ?
வழக்கறிஞர்களுக்கு மட்டும் தனியாகவா சட்டம் இயற்றப் பட்டுள்ளது ?
ஒளிவு மறைவின்றி, வழக்கறிஞர்களுக்கு அப்பட்டமாக சாதமாக நடந்து கொள்ளும், நீதிபதிகளை சவுக்கு வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற போக்குகள், பொது மக்கள் மத்தியில், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் என்பதையும் சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது. நீதியை நிலைநாட்டுங்கள் நீதிபதிகளே…. வழக்கறிஞர்கள் மட்டுமல்ல… நீதிபதிகளாகிய நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.