தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களின் முன்னுரிமைகளை கண்காணிக்கும் வகையில் தொலைக்காட்சி அமைப்பு பெட்டிகளில் ஒரு “சிப்“ அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏப்ரல் 28 தேதியிட்ட எனது வலைப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். நம்முடைய வீடுகளின் தனியுரிமையை ஆக்கிரமிக்கவும், நமக்கு தெரியாமல் அல்லது நம்முடைய சம்மதமின்றி தகவல்களை சேகரிக்கவும் இது ஒரு மோசமான வடிவமைப்பு என்று நான் சுட்டிக்காட்டியிருந்தேன். நேரம் கடந்திருப்பினும், அரசாங்கத்திலிருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை. கடந்த சில நாட்களில், அரசாங்கம் இன்னும் இரண்டு மோசமான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
முதலாவது, சமூக ஊடகங்கள் மற்றும் போலி செய்திகளைக் கையாள்வது. இரண்டாவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் சர்வன்ட்ஸ் எனப்படும் குடிமைப் பணியார்களுக்கு பணி மற்றும் கேடர் ஒதுக்கீடு செய்வது பற்றியது. இவை இரண்டையும் நாம் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாட்டின் 716 மாவட்டங்களில் ஒரு சமூக ஊடக தகவல்தொடர்பு மையத்தை திறக்க முடிவு செய்துள்ளது. அதில் ஆன்லைன் உள்ளடக்கத்தை கண்காணிக்கும் நபர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது என்று நான் தினமும் காலையில் படிக்கும் பல பத்திரிகைகளில் ஒரு பத்திரிகையில் ஒரு சிறிய செய்தி அண்மையில் நமக்கு தெரிவித்தது. போலி செய்திகளை பரப்பும் பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தண்டிக்க இதே போன்ற ஒரு நடவடிக்கையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கொண்டுவந்தபோது அது பிரதமர் அலுவலகத்தால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதற்காக பிரதமருக்கு பெரும் பாராட்டு மழை பொழியப்பட்டதை நினைவுகூறலாம். இதுபோன்ற ஒரு பெரிய நடவடிக்கையை அவராகவே சொந்தமாக எடுத்திருக்க முடியாது என பலரும் நம்பியபோதிலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திலிருந்து ஸ்மிருதிராணி மாற்றப்பட்டார். அதுபோலவே. இப்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் புதிய அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட உள்ள ஏற்பாடு மிகவும் மோசமாக தோன்றுகிறது.
புதிய கண்காணிப்புக் கருவி பெரும்பாலான இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் உள்ளடக்கத்தைப் படிக்கவும், சூழ்நிலைப்படுத்தவும் மற்றும் பதிலளிக்கவும் முடியும். மேலும், பயனாளர்களின் விபரங்களை அலசி, ஆராய்ந்து, அவர்கள் டேட்டாக்களை எடுத்து, பயனாளர்களைப் பற்றிய ஒரு 360 டிகிரி பார்வையை பெற முடியும். பயனாளர்களின் பழக்க வழக்கங்கள், வாங்கும் தன்மை, அவர்கள் விருப்பங்கள், கடந்த கால நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் இது ஒரு தனி டேட்டாவை உருவாக்குவதோடு ஒரு பயனாளரை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் (followers) அவர்களது பழக்க வழக்கங்கள் என்ன என்பது போன்ற அடிப்படை பண்புக்கூறுகளுடன், ஒரு கருத்தை பரப்பக் கூடிய செல்வாக்கு மிக்கவர்களை அடையாளம் காண தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு உதவும்.
“ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் Broadcast Engineering Consultants India Limited (BECIL) மூலம் முழு திட்டமும் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் BECIL ஊடக மையங்கள் பிராந்திய ஊடகங்கள் மற்றும் உள்ளூர் நிகழ்வுகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும், உள்ளூர் செய்தித் தாள்கள், கேபிள் சேனல்கள், FM நிலையங்கள் மற்றும் முக்கிய சமூக ஊடகங்களை (பேஸ்புக் ஐடிக்கள், ட்விட்டர் ஹேண்டில்கள்) கண்காணிக்கும். அவர்கள் போலியான மற்றும் தவறான செய்திகளையும் தகவல்களையும் பரப்புகிறார்களா என்று கண்காணிக்கப்படும். பல்வேறு முக்கிய சம்பவங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் எத்தகைய தாக்கம் ஏற்படுகிறது என்பது கண்காணிக்கப்பட்டு, அலசப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒரு நாளைக்கு ஆறு அறிக்கைகள் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.
ஒரே இடத்தில் இருந்து கொண்டு, முழுமையான டேட்டாவை சேகரித்து இந்த புதிய அமைப்பு பதிவு செய்யும். அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்வோர் குறித்த முழுமையான விபரங்கள் உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படும். அப்படி கருத்துக்களை எதிராக பதிவு செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இது உதவும். இந்த அமைப்பு மூலமாக, இந்தியா குறித்து, உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பு மற்றும் மரியாதையை உயர்த்த இந்த முறை உதவும் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எதிர்ப்பார்க்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறை ஆபத்தானதாக தோன்றுகிறது, அரசாங்கம் நம்முடைய நடவடிக்கைகளையும், எதிர்கால எண்ணங்களையும்கூட கண்காணிக்கும். இது அரசு வகிக்க வேண்டிய பாத்திரமா? அல்லது அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையா? மனித உரிமைகள் மற்றும், தனி நபர் சுதந்திரத்தின் மீது அக்கறை உள்ள அனைத்துத் தரப்பும் இதை முழுமையான விவாதத்துக்குள்ளாக்க வேண்டியது மிக அவசியம்.
பிரதமரின் அலுவலகத்தினால் இந்தியாவின் அரசாங்க அமைச்சகங்களுக்கு பேரழிவுத் திட்டம் என்னவெனில் IAS மற்றும் பிற சேவைகளுக்கான UPSC தேர்வில் வெற்றிகரமாக போட்டியிட்ட தேர்வாளர்களுக்கான பணிகளின் ஒதுக்கீடு. UPSC பரீட்சையில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு சேவை ஒதுக்கீடு செய்யப்படக் கூடாது. ஆனால் அடிப்படை வகுப்பில் (foundation course) அவர்களின் செயல்திறன் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது இந்த பரிந்துரை. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் போட்டித் தேர்வுகளில் கண்டறியப்பட்ட தகுதிகளின் அடிப்படையிலேயே பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய போட்டித் தேர்வுகள் தொடங்கிய சுதந்திர காலத்திலிருந்து நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை. முதலிடத்தில் இருக்கும் தேர்வர் அவருக்கு விருப்பமான சேவைக்கு தகுதி பெறுவார். தேர்வரின் செயல் திறனும் நிச்சயமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்படியாக, எனது 21 வது இளம் வயதில் நான் போட்டித் தேர்வை எழுதியபோது, இந்திய ஆட்சிப் பணிக்கும், இந்திய வெளியுறவு சேவைக்கும் இடையே எதை தேர்ந்தெடுப்பது என எனது முன்னுரைிமையை தெரிவிக்க வேண்டும். இந்திய காவல் பணி மற்றும் பிற பணிகளுக்கும் எனது முன்னுரிமையை தெரிவிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கு தேர்வெழுதுபவர் அவரது சொந்த மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கிடையே அவரது முன்னுரிமையை தெரிவிக்க வேண்டும். ஆகையால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணத்தில் எல்லாமே தெள்ளத் தெளிவாக இருந்தது. வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் தேர்வரின் தரவரிசை அறியப்பட்டது. மற்றவர்கள் தலையிட்டு இதில் மாற்றங்களை செய்வது ஏறக்குறைய சாத்தியமே அல்லாமல் இருந்தது.
இந்த முறையை தற்போது தலைகீழாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன பல கட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஒரு தேர்வரைப் பற்றி அந்த சமயத்திலெல்லாம் தெரியாத அப்படி என்ன விஷயத்தை மூன்று நான்கு மாத அடிப்படை பயிற்சியில் கண்டு பிடிக்க முடியும் ? UPSCயால் பாரபட்சமற்று செயல்படுத்தப்படும் தேர்ச்சி நடைமுறை, தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய முறையால் பாரபட்சமானதாக மாற்றப்பட எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. தரவரிசையில் பத்தாவது இடத்தில் உள்ளவர் IAS க்கு தகுதியற்றவராகவும், தரவரிசையில் 285வது இடத்தில் உள்ளவர் தகுதியுடையவராகவும் கருதப்பட்டால் எப்படி இருக்கும் ? அதையும், முசூரி அக்காடமியில் நான்கைந்து பயிற்சியாளர்கள் இந்த முடிவை எடுப்பது எப்படி சரியானதொரு தேர்ச்சி முறையாக இருக்கும் ? கடந்த 70 ஆண்டுகளாக UPSC ஆல் நடத்தப்பட்ட அமைப்பில் நம்பிக்கை இல்லாததையே இது நிரூபிக்கிறது.
இந்த நாட்டிலுள்ள மக்கள் இப்பொழுது மோடி அரசாங்கத்தை பல விஷயங்களில் நம்பவில்லை. நான் மேலே குறிப்பிட்டுள்ள அரசாங்கத்தின் இந்த இரண்டு நகர்வுகளும் அந்த சந்தேகங்களை மேலும் பலப்படுத்துகின்றன. இந்த இரண்டு திட்டங்களையும் மக்கள் கூடிய சீக்கிரம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
முன்னாள் நிதியமைச்சர் மற்றும் முன்னாள் பாஜக எம்பி யஷ்வந்த் சின்ஹா
Minimum Govt and Maximum Governance was the slogan for BJP in 2014 and they are doing the reverse . Today Another article came in NDTV saying Govt wants a company to develop tools to monitor Social Media . https://www.ndtv.com/india-news/government-to-intensify-scrutiny-of-social-media-emails-foreign-media-1859689?pfrom=home-topstories