
பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 2014 ல் அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து , இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்து அடிப்படைவாதிகளின் பல்வேறு செயல்கள் அமைதியின்மையை ஏற்படுத்தினாலும் அவை அரசால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவதைப் போலவே, மற்றவர்களும், பாஜக தலைவர்களால் ஊக்குவிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஆபத்து மிக்கவர்களாக வளர்ந்துள்ளனர்.
மிகவும் கவலைப்படக் கூடிய பல நிகழ்வுகள், நேரடியாக அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல் எதிரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறது – இது இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் பாஜக சேர்வதற்கு உதவியது – வன்முறை குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல உயர் பதவிகளுக்கு உயர்த்தியிருக்கிறார். ஆயினும், உச்ச நீதிமன்றத்தில் இதை விட இன்னும் பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் தெரிவிக்கின்றன — இந்திய ஜனநாயத்தின் அடிப்படை கட்டமைப்பு இன்னும் ஆட்டம் கண்டுள்ளது என்பதையே அது உணர்த்தியது.
உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, மற்றும் ஐந்தாவது மிக மூத்த நீதிபதிகள் ஜனவரி மாதத்தில் ஒரு வழக்கதிற்கு மாறான செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோது அந்த நெருக்கடி புறக்கணிக்க முடியாததாக ஆனது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடத்தைக்கு அவர்களது கடுமையான ஆட்சேபனைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். “இந்த நிறுவனம் பாதுகாக்கப்படாவிட்டால், இந்த நாட்டில் ஜனநாயகம் உயிர்வாழ முடியாது” என்று அவர்கள் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டனர்.
இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துள்ளது. 1972ல், நீதித்துறை அதிகாரத்தை மீறி, சொத்துரிமைக்கான உரிமை போன்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகளை குறைப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ”அதிகமான தலையீடு மூலம் நமது நாட்டின் முழு சமூக-பொருளாதார அமைப்பை மீளமைக்கும் முயற்சியாகும்” என அவரது அமைச்சர்களில் ஒருவர் சொன்னார். அந்த முயற்சியை உச்சநீதிமன்றம் தலையிட்டு தடுத்ததை அடுத்து, இந்திரா காந்தி, அவர் சொல்படி தலையாட்டும் ஒரு நபரை தலைமை நீதிபதியாக நியமித்தார். இது மற்ற நீதிபதிகளை இராஜிநாமா செய்ய தூண்டியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், வாழ்க்கை மற்றும் அடிப்படை உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்று அரசாங்கம் வாதிட்டபோது, உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. “அவசர நிலை“ என்று அறியப்பட்ட 1975-1977 காலகட்டத்தில் மாதக்கணக்கில் தடுப்புக்காவல், கட்டாய கருத்தடை மற்றும் பத்திரிகை தணிக்கை ஆகியவை தொடர்ந்தன. வெற்றியை எதிர்பார்த்து, இந்திரா காந்தி தேர்தலை அறிவிக்காமலிருந்தால் — பின்னர் தோல்வியுற்றிருக்கவில்லை என்றால் – இந்திய ஜனநாயகம் எப்படி தப்பிப் பிழைத்திருக்கும் என்பது அச்சமூட்டுவதாகவே உள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதியின் நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மையை மீண்டும் ஒரு முறை கேள்விக்குள்ளாக்கியிருக்கிது. ஏப்ரலில், எதிர்க்கட்சிகள் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்வதற்கான கண்டன தீர்மானம் கொண்டுவந்தபோது அரசாங்க ஆவணங்களை பொய்யாக்குதல், பரபரப்பான வழக்குகளை திரைமறைவில் கையாளுதல் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகளை அவருக்கெதிராக பட்டியலிட்டனர். இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராக இப்படியொரு தீர்மானம் கொண்டு வந்தது வரலாற்றில் முதல் முறையாகும். தீபக் மிஸ்ரா எடுத்த பல்வேறு முடிவுகளால், தனிப்பட்ட முறையில் மிஸ்ராவோ அல்லது பாஜகவோ ஆதாயம் அடைந்துள்ளன.
குறிப்பாக ஒரு வழக்கு அவசரமாக முடிக்கப்பட்ட விசாரணை மற்றும் பெரும் சதிச்செயல் தொடர்பானது. அது நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரண விசாரணை. ஒரு பரபரப்பான குற்ற விசாரணை, அதைக் கையாளும் நீதிபதியின் மர்ம மரணம் மற்றும் அந்த மரண விசாரணையை உச்ச நீதிமன்றம் சந்தேகத்துக்குரிய முறையில் கையாளுதல் என இது ஒரு ஊழலுக்குள் உள்ள ஊழலுக்குள் உள்ள ஒரு ஊழல்.
அவரது மரணத்தின் போது, 2014 ல், லோயா மத்திய புலனாய்வுப் பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக இருந்தார். அவர் ஒரு கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அவ்வழக்கில், பிரதமர் நரேந்திரமோடியின் நம்பகமான தளபதியும், தற்போதைய பாஜக தலைவருமான அமித் ஷா குற்றஞ்சாட்டப்பட்டவர். அந்த குற்றம் குஜராத் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. மோடி தலைமையிலான அரசாங்கத்தில் அப்போது ஜுனியர் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் உத்தரவின் பேரில் சொராபுதீன் ஷேக் என்வரையும் அவரது மனைவி கவுசர் பீவியையும் போலீஸார் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி லோயா விடாப்பிடியாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். அமித் ஷா மீதான குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்வதற்கு முன், இரண்டு துரதிர்ஷ்டமாக காரியங்கள் அவரை சூழ்ந்தன. முதலில், உள்ளுர் போலீஸாரால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. பின்னர், ஒரு வாரத்திற்குப் பிறகு, நீதித்துறை சகாக்கள் அவரை மற்றொரு சகாவின் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளும்படி வலியுறுத்தினர். மருத்துவ பதிவுகளின் படியும், அத்திருமணத்தில் லோயாவுடன் இருந்ததாகக் கூறும் நீதிபதிகளின் கூற்றுப்படியும், லோயாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்ட்டது. அவர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவர் ஒரு மாரடைப்பில் இறந்தார்.
இதுகுறித்து, துணிச்சலான கேரவன் மாத இதழின் இணையதளத்தில் இந்நிகழ்வுகளின் கூற்றுகள் குறித்து தொடர்ச்சியான செய்திகள் வெளியாயின. ஒரு நீதிபதி நோயுற்றிருந்ததோ அல்லது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்தோ தங்களுக்கு எதுவும் நினைவில்லை என்று லோயா தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஓட்டலில் பணிபுரியும் ஒரு டஜன் ஊழியர்கள் “கேரவன்“ இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர். இது ஒரு நாடகம். அவ்வாறு நடைபெற்றிருந்தால் அவர்கள் கவனிக்காமல் இருந்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என அந்த ஊழியர்கள் கூறினர். பாஜகவுடன் மிகவம் நெருக்கமாக உள்ள மகரந்த் வையாவஹரே என்ற ஒரு டாக்டர் இரகசியமாக உடற்கூறு ஆய்வு செய்தார் என லோயாவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வழங்கிய மருத்துவமனையின் பல ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த அறிக்கையை தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சக ஜுனியர் டாக்டரை வையாவஹரே சத்தம் போட்டார் என்றும், தனது முன்னிலையில் வேலை செய்யும்படியும் அவர் பணித்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். லோயாவுக்கு இரத்தம் தோய்ந்த தலைக்காயம் இருந்ததாகவும், ஆனால் அது போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஒரு ஊழியர் கேரவனிடம் தெரிவித்தார். மரணத்திற்கான காரணம் ஒரு மாரடைப்பு என்ற அதன் முடிவு மிகவும் கேள்விக்குரியது, ஏனென்றால், லோயாவுக்கு congested dura என்ற தலைக்கு உடல் அதிர்ச்சியை குறிக்கும் ஒரு வடிவமான மூளை காயம் இருந்துள்ளது. ஒரு உள்ளுர் செய்தித்தாளின்படி, டாக்டர் வையவஹரே அவர் மருத்துவத் தொழிலில் தவறிழைத்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். அவைகளில், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை தவறாக கையாண்டதாக பதினேழு குற்றச்சாட்டுக்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளின் பட்டியல் தொடர்கிறது. எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி) தேதி தவறாக இருக்கிறது; ஹோட்டலில் தங்கும் விடுதி பதிவு திருத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது; லோயாவின் மொபைல் ஃபோனில் அழைப்பு பதிவுகள் மற்றும் தகவல்கள் அழிக்கப்பட்டு அவரது குடும்பத்திற்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. லோயாவின் சொந்த மாநிலமாக மகாராஷ்டிராவின் மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மோஹித் ஷா, அமித் ஷா வழக்கில் ஒரு சாதகமான தீர்ப்பு வழங்க 15 மில்லியன் டாலர் தனக்கு லஞ்சமாக தர முன்வந்ததாக லோயா தெரிவித்ததாக அவரது சகோதரி “கேரவனி“டம் கூறினார். லோயாவின் தந்தை இவற்றில் பலவற்றை கேரவனுக்கு உறுதிபடுத்தினார்.
லோயா படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு நேரடி ஆதாரம் இல்லை. ஆனால், இந்த கண்டுபிடிப்புகள் கடுமையான மூடிமறைப்புக்களை குறிக்கின்றன. இருப்பினும், லோயாவின் மரணத்தின் சூழ்நிலைகளைப் பற்றிய நியாயமான சந்தேகத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் முடிவெடுக்கும் பொறுப்பிலிருந்து மூத்த நீதிபதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதற்கு இந்த தீர்ப்பு பல சமீபத்திய வழக்கு உதாரணங்களில் ஒன்றாகும்.
எந்த நீதிபதி எந்த வழக்கை விசாரணை செய்வார் என்று வழக்குகளை பட்டியலிடும் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆரம்பத்தில் லோயா வழக்கை மூத்த பாஜக தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமான அருண் மிஸ்ரா என்ற மிகவும் ஜுனியரான நீதிபதி ஒருவருக்கு ஒதுக்கினார். அடுத்த நாள், நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, லோயா வழக்கை குறிப்பாக தலைமை நீதிபதி கையாளும் முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெளிவுபடுத்தினர். அதன் விளைவாக, மிஸ்ரா அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். இதையடுத்து, அந்த வழக்கை தான் உறுப்பினராக உள்ள மற்றொரு பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார். அந்த பெஞ்சில் வேறு எந்த மூத்த நீதிபதியும் இருக்கவில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் நியமிக்கப்பட்ட மற்ற இரண்டு உறுப்பினர்கள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய இருவரும் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் (மொஹித் ஷாவுடன் சேர்ந்து) பணியாற்றியுள்ளனர். லோயா இயற்கையான காரணங்களால் இறந்தார் எனக் கூறிய சாட்சிகள் உள்பட இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பல்வேறு நபர்களை அறிந்திருந்தனர்.
என்ன சந்தேகம் இருந்தாலும் பரவாயில்லை. விசாரணை நடத்தத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவு, ஒருதலைப்பட்ச முயற்சியாகவே தோன்றுகிறது. லோயாவுடன் இருந்த நீதிபதிகளை ”கேள்வி கேட்க முடியாது” என வலியுறுத்துவதில் அந்த உறுதி தெரிகிறது. இந்த வழக்கில் வாதிட்ட இரண்டு வழக்கறிஞர்கள், நீதிபதிகளை குறுக்கு விசாரணை செய்து அவர்களது சாட்சியத்தை பதிவுசெய்ய வேண்டும் என கேட்டனர். இந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த முயற்சி ”நீதித்துறைக்கு அவமானம் ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் உண்மையான நோக்கமாகும்,” என தீர்ப்பில் எழுதியது.
இந்த முடிவுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க அடித்தளம் மஹாராஷ்டிரா மாநில உளவுத்துறையின் அறிக்கையாகும். அந்த உளவுத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, கேரவன் செய்தியில் குறிப்பிட்டுள்ள சில நபர்களை விசாரித்ததாகவும், அப்போது அவர்கள் அனைவரும் கேரவன் நிருபர்களிடம் ஏற்கெனவே கூறப்பட்ட வாக்குமூலத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறியது. இந்த பின்வாங்குதல்கள் சில வற்புறுத்தல்களின் கீழ் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை நீதிமன்றம் ஆராயவில்லை. அதனுடைய நேர்காணல்களின் வீடியோ மற்றும் ஆடியோ பதிவை வெளியிட்ட கேரவனின் எந்த பத்திரிகையாளருடனும் அது கலந்துரையாடியதாக தெரியவில்லை. அந்த பத்திரிகை செய்தியின் பொருளில் பெரும்பாலானவை நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.
லோயாவின் மரணத்தின் உண்மையான காரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த தனது கடமையை, பொறுப்பை உச்சநீதிமன்றம் தட்டிக்கழிக்கிறது. லோயாவின் ஈசிஜி, ஹிஸ்டோ பேத்தாலஜி அறிக்கை மற்றும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளை இரண்டு புகழ்பெற்ற டாக்டர்கள் பகிரங்கமாக எதிர்த்து சவால் விட்டனர். ஆனால், மகாராஷ்டிரா மாநில அதிகாரிகள் மற்றொரு டாக்டரை கொண்டு வந்தனர். அவர் அந்த மருத்துவ ஆவணங்கள் சரியானவை என்று வாதிட்டார். மருத்துவ நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாத சிக்கலை எதிர்கொண்ட நீதிமன்றம், எந்த மருத்துவரின் கருத்தும் சரியானது அல்ல என்று கூறி, லோயாவின் மரணத்திற்கு காரணமான சர்ச்சைக்குரிய விவகாரத்தை ஒரு திறந்த கேள்விக்கு விட்டுவிட்டது.
லோயா விவகாரம் சர்ச்சை எழுப்பியிருக்கும் ஒரே ஒரு உச்ச நீதிமன்ற வழக்கு அல்ல. உண்மையான நெருக்கடி கடந்த இலையுதிர் காலத்தில் தொடங்கியது. நீதிமன்றத்தை வெளிப்படையாக விமரிசிப்பவரும் இரண்டாவது மூத்த நீதிபதியுமான ஜஸ்தி செலமேஸ்வர், தலைமை நீதிபதி தொடர்புள்ள லஞ்சக் குற்றச்சாட்டுகளின் மீது ஒரு சிறப்பு விசாரணையை கோரிய மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டார். வெளிப்படையான கருத்து போல இருந்த போதிலும், நீதிபதி செல்லமேஸ்வரின் உத்தரவை ரத்துச் செய்து, வழக்கின் விசாரணையை தான் தேர்ந்தெடுத்த இளைய நீதிபதிகளிடம் ஒப்படைத்து தலைமை நீதிபதி மிஸ்ரா உத்தரவிட்டார். எதிர்பார்ததபடியே, மிஸ்ராவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. உண்மையில், இந்த விவகாரத்தில் தண்டிக்கப்பட்ட ஒரே மக்கள், மனுதாரர்கள்தான். உச்ச நீதிமன்றம் விவரித்தபடி ”இறுமாப்பான, இழிவான, ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற” குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக அவர்கள் 25 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டனர்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை மூத்த வழக்கறிஞர்களால் “முன்னுரிமை பெஞ்ச்” என அழைக்கப்படும் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மிஸ்ரா ஒதுக்கியிருப்பது அவரது நேர்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. பல கட்டுரைகள் மற்றும் என்னுடனான நேர்காணல்களில் பிரபல வழக்கறிஞரும் நீதித்துறை ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் ஒரு கோட்பாட்டை சொல்லியிருக்கிறார். ஏப்ரல் மாதம் அவர் எழுதியபடி, ”தலைமை நீதிபதியை மிரட்டி, நீதிமன்றத்தில் தன்னுடைய வேலையை அவர் மூலம் செய்துமுடிக்க அவரை பாஜக பயன்படுத்துகிறது.” தலைமை நீதிபதி மிஸ்ரா மீது அரசாங்கம் ஊழல் வழக்கு தொடராதவரை, அரசாங்கம் இட்ட கட்டளைகளைத்தான் அவர் செய்து முடிப்பார். என்கிறார் பூஷன். நாடாளுமன்றத்தின் மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் நீதிமன்றத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தும் “அறிவிக்கப்படாத அவசரநிலை” திரும்பியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்றத்தில் ஒரு தொடர் வெற்றிகளைப் பெற்றபிறகு, கர்நாடகா மாநிலத்தில் ஒரு சர்ச்சைக்குரிய தேர்தலில் பாஜக கடந்த மாதம் ஒரு கலவையான தீர்ப்பை பெற்றது, நீதிமன்றத்தின் மூலம் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற பாஜகவின் முயற்சி வெற்றி பெறவில்லை.
இது ஒவ்வொரு முடிவையும் நேர்மையற்ற வழியில் மாற்ற முடியாது என்பதை காட்டுகிறது. ”பாஜக அல்ல. காங்கிரஸ்தான் நீதித்துறையை தரம்தாழ்த்தி, சிதைக்க மற்றும் சிறுமைப்படுத்த முயல்கிறது,” என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். உண்மையாகவே பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலைக்கு காரணமான காங்கிரஸ் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் அடிக்கடி சொல்கின்றனர்.
பல அரசியல் நோக்கர்கள் கவலை அடைந்துள்ளனர் ” நீதித்துறை மீதான அரசாங்கத்தின் அறிக்கைகள் முக மதிப்பில் எடுக்கப்படக் கூடாது,” என இந்திய அரசியலமைப்பு குறித்த ஒரு புத்தகத்தின் ஆசிரியரும், நீதித்துறை விவகாரங்களில் ஊடக விமரிசகருமான கௌதம் பாட்டியா என்னிடம் தெரிவித்தார். ”வெளிப் பார்வைக்கு பெரும் ஆபத்துகள் இல்லாதது போல தோன்றினாலும் எவையெல்லாம் நடக்கக் கூடாதோ அவை நடக்கிறது. காங்கிரஸ் அறிவித்த நெருக்கடி நிலையிலிருந்து பிஜேபி ஒரு பாடத்தை கற்றுள்ளது. ஆகையால் வெளிப்படையாக எதுவும் தெரியாதது போல, நேரடி மோதல்கள் இல்லாதது போல வெளிப்பார்வைக்கு தெரியாத வகையில் பல பிழைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுள்ளது” என்கிறார் கௌதம் பாட்டியா.
இத்தகைய ரகசியமான குறுக்கீடுகள் நீதிபதி நியமனங்களில் அப்பட்டமாக தெரிகிறது. பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு வழங்கியதற்கு பிறகு, குறைந்தது இரண்டு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் கே.எம். ஜோசப், மாநில அளவிலான உயர் நீதிமன்றங்களில் பதவி குறைக்கப்பட்டுள்ளார் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 26 ம் தேதி, உச்ச நீதிமன்றத்திற்கு ஜோசப்பின் பதவி உயர்வை நிராகரித்த அரசாங்கத்தின் முடிவை மிஸ்ரா ஆதரித்தார். அதற்கு அடுத்த நாள், இரண்டு ஓய்வுபெற்ற மூத்த நீதிபதிகள் அரசாங்கத்தை கடுமையாக விமரிசித்தனர், அவர்களில் ஒருவர் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா. ”ஜோஸப்பை தடுக்கும் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தின் இதயத்தின் மீதான தாக்குதல்” என அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு கூறினார்.
உச்ச நீதிமன்றம் மீதான கவனம் தடம் மாறி, ஏப்ரல் மாதம் கீழமை நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பு, நீதித்துறை சுதந்திரம் பற்றிய கேள்விகளை எழுப்பியது. சுவாமி அசீமானந் என்ற ஒரு இந்து தீவிரவாதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஐந்து வெடிகுண்டுத் தாக்குதல்களில் 119 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இவர் தொடர்புடையவர். மோடி உட்பட பாஜகவுடன் அசீமானந் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். தில்லி மாஜிஸ்திரேட் முன்பாகவும் வேறு சில இடங்களிலும் அவர் பலமுறை குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தனது தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார். அசீமானந் விடுதலை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரங்களிலேயே, அந்த வழக்கில் தலைமை வகித்த நீதிபதி ”தனிப்பட்ட காரணங்களை” மேற்கோள்காட்டி தனது பதவியை ராஜினா செய்தார் . “த பிரிண்ட்“ என்ற செய்தி மற்றும் பகுப்பாய்வு இணையதளத்தின் கூற்றுப்படி, நீதிபதி மிஸ்ராவின் இக்கட்டான நிலையைப்போல, தொடர்பில்லாத ஒரு வழக்கில் இந்த நீதிபதி ஒரு ஊழல் விசாரணையை எதிர்கொள்கிறார் என பூஷண் கூறுகிறார்.
பூஷண் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சியால் ஆதரிக்கப்படும் நீதித் துறையின் உடனடி தீர்வு மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானம் ஆகும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு தீர்மானத்தை முன்வைத்தபிறகு, அது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவால் நிராகரிக்கப்பட்டது. பாஜகவின் நீண்டகால அரசியல்வாதியான வெங்கையா நாயுடு மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அந்த நடவடிக்கை “மோசமானதாகவும், திடுக்கிடும் வகையிலும்” இருந்தது என்று வாதிட்டு வெங்கையா நாயுடுவின் நிராகரிப்பின் சட்டபூர்வ தன்மையை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் எதிர்க்க முயன்றனர். அவர்களுடைய மனு – வேறு எந்த மூத்த நீதிபதிகளாலும் அல்ல,- தலைமை நீதிபதி மிஸ்ராவால் விசாரிக்கப்பட உள்ளதாக பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முயற்சியை நிறுத்திக் கொண்டனர். சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்காமல் இருந்தால், தலைமை நீதிபதி மிஸ்ரா இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவிக்காலம் முடிவடையும் வரை அதிகாரத்தில் இருப்பார்.
தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி A.P. ஷா, நிரந்தர சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளார். மற்ற விஷயங்களுக்கு மத்தியில், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தால் பயன்படுத்தப்பட்ட வழக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கான மிகத் தெளிவான அமைப்புமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஷா பரிந்துரைத்தார். தலைமை நீதிபதி அவருடைய விருப்ப அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்தை இது தடுக்கும். ஆனால் அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால், தலைமை நீதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக இருக்கிறார். நீதித்துறையின் செயல்பாடுகளை ஒளிபுகாமல் காப்பாற்ற அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. “[அசீமானந்த் மற்றும் லோயா வழக்குகளில்] முடிவுகள் பாஜக ஊழியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளன. ஆளும் பாஜகவுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ்.
இந்திரா காந்தியின் காங்கிரஸின் அதி தீவிரமான நடவடிக்கைகளில் இருந்து நரேந்திர மோடியின் ஆளும்கட்சி நன்றாக கற்றுக்கொண்டது போல தெரிகிறது. மோடியின் அரசாங்கம் அதன் அதன் நேரடி கண்காணிப்பில், கடந்த கால எதேச்சதிகார ஆட்சி முறையை, வேறு வடிவத்தில் செயல்படுத்தி, அதன் விளைவுகள் முன்பை விட அதி தீவிரமாக இருப்பதை உறுதி செய்து வருகிறது.
அலெக்ஸ் ட்ராப்
அது போல மோடியை பற்றி என்ன கூறினாலும் புறம் பேசுபவர்களை புறம் தள்ளி போய்க் கொண்டே இருப்போம் ! காரியம் சாதிப்பவன் அதிகம் பேசமாட்டான்!
எழுதி செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேல் செல்லும்! அழுது புரண்டு தொழுதாலும் அதிலொரு எழுத்து மறைந்திடுமோ?/ என்பது கலீல் கிப்ரானின் கவிதை வரிகள்!
மோடியின் சித்து வேலை என்று சொல்லுங்கள். அல்லது மோடியே ஒரு சித்தர் என்று கூட சொல்லுங்கள்!! ஆனால் மோடியால் காங்கிரசை ஒழிக்க முடிந்தால் அந்த ஒரு காரணத்துக்காகவே அடுத்த முறையும் போடலாம் ஒட்டு மோடி அவர்களுக்கு!