பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப் பணக்கார அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் அதன் வருமானம் 1,034 கோடி ரூபாய் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் வருமான அறிவிக்கை (returns) தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்ட பாஜகவுக்கு ஒரு நல்ல ஆண்டாக இருந்துள்ளது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் வருமானம் 81% உயர்ந்துள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க வகையில், மற்ற அனைத்து தேசிய கட்சிகளாலும் எழுப்பப்பட்ட ஒட்டுமொத்த பணத்தை விட இது இரு மடங்கு அதிகமாகும்.
எனவே, 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சிக்கு இவ்வளவு பெரிய பணப் பெட்டியை கொடுத்ததற்காக, இந்த அற்புதமான செயல்திறனுக்காக எந்த பாஜக தலைவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும் ? யார் அந்த தலைவர் ?
இங்குதான் எல்லாமே மர்மமாக இருக்கின்றன. மேலும், நாட்டில் தேர்தல்களை நடத்துவதோடு அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும், தணிக்கை செய்யவும் வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீது ஒரு கேள்வி குறி உருவாகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய அறிக்கைகளில், கடந்த சில ஆண்டுகளாக அதன் பொருளாளர் யார் என பாஜக வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக, 2016-17 க்கான பாஜகவின் தணிக்கை செய்யப்பட்ட வருமான அறிவிக்கையில் அக்கட்சியின் பொருளாளர் யார் என் வெளிப்படையாக தெரிவிக்காமல், “பொருளாளருக்காக“ எனக் குறிப்பிட்டு எவரும் புரிந்துகொள்ள முடியாதவாறு ஒரு கையெழுத்து உள்ளது.
இந்த இரகசியம் அக்கட்சியின் அதிகாரப்புர்வ இணையதளத்திலும் தொடர்கிறது. “பாஜக-வின் தேசிய பொருளாளர்“ என்ற தலைப்பில் பக்கம் வெறுமனே நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் பாஜகவின் அறிவிப்பு தவறானது. இந்த அறிவிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அக்கட்சியின் பொருளாளர் உண்மையில் யார் என அறிவிக்குமாறு பாஜகவை தேர்தல் ஆணையம் கேட்டிருக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி “த ஒயர்“ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிப்படையான நிதி வழிமுறைகள் ”அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது அதன் கணக்குகளை பராமரிக்க கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நபர்“ என தெளிவாக குறிப்பிடுகிறது என்கிறார் தனது பெயரை வெளியிட விரும்பாத மற்றொரு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர். அதன் பொருளாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் யார் என்பதை அடையாளம் காட்ட அக்கட்சியை ஏன் தேர்தல் ஆணையம் வலியுறுத்தவில்லை எனக் கேட்டதற்கு, நிதி வருமானங்கள் ஒரு சாதாரண பதவியில் உள்ள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தை இது வரை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார் அவர்.
2014-ஆம் ஆண்டு பாஜகவின் வெற்றி மற்றும் நரேந்திர மோடி அரசாங்கம் நிறுவப்படுவதற்கு முன்பாக, அக் கட்சியின் அறிவிக்கப்பட்ட பொருளாளர் பியுஷ் கோயல். தற்போது அவர் மத்திய நிதி மற்றும் ரயில்வே அமைச்சர் ஆவார். 2014ல் அக்கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களை அமித் ஷா அறிவித்தபோது, அவைகளில் பொருளாளர் பதவி இடம் பெறவில்லை. மோடியின் மிக நம்பிக்கைக்குரியவரான “காகாஜி“ எனப்படும் பரிண்து பகத் என்பவருக்கு அப் பதவி கிடைக்கும் என ஊடகங்களில் சில ஊகங்கள் இருந்தன. ஆனால் அது நடைபெறவில்லை. எனவே, பியுஷ் கோயல், அரசாங்கத்தில் இருந்துகொண்டே, கட்சியின் உண்மையான பொருளாளராக தொடர்ந்து செயல்படுகிறாரா? இது மிக மோசமான முரண்பாடு. அல்லது, அவர் முழுமையாக களையப்பட்டிருந்தால், கட்சியின் பொருளாளர் யார் ?. பாஜக இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கிறது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி பேசுகையில் “ஒரு கட்சியின் ஆண்டு கணக்கு அறிக்கையில் கையெழுத்திடும் பொறுப்புடைய அதிகாரியின் கையொப்பம் மற்றும் பெயர் தெளிவானதாக இருக்க வேண்டும், இல்லையெனில், அது யார் என்பதைக் கண்டறிய வேண்டும்” என்கிறார்.
பாஜக சம்பந்தப்பட்ட தற்போதைய விஷயத்தில், கேள்விக்குரிய ஆவணங்களை பார்க்கவில்லையாதலால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறிய மற்றொரு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ”இது அனைத்துமே அதன் கணக்கு அறிக்கைகள் தயாரிப்பதற்கு பொறுப்பானவர் யார் என அக்கட்சியின் அரசியலமைப்பில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தது. எனது கடந்தகால அனுபவத்திலிருந்து நான் அதை கூறமுடியும்,” என்கிறார்.
ஒரு தேசிய செயலாளரை அக்கட்சியின் தலைவர்தான் நியமிக்க வேண்டும் என்கிறது பாஜகவின் அரசியலமைப்பு. கட்சியின் வருமானம் மற்றும் செலவின கணக்குகளை தக்கவைத்து, அவற்றை தணிக்கை செய்ய வேண்டியது அக்கட்சியின் பொருளாளரின் கடமைகள் ஆகும் என அக்கட்சியின் அரசியலமைப்பு கூறுகிறது. கட்சிக்கு நிதி திரட்டுவதைப் பொறுத்தவரை, அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். (கட்சி நிதியின்) ஒவ்வொரு ரசீதும் மத்திய அல்லது மாநில அளவில் சம்பந்தப்பட்ட பொருளாளரின் தொலைநகல் (fascimile) கையொப்பம் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, 2014-லிலிருந்து தேசிய அளவில் எழுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு பாஜக வழங்கிய ரசீதுகளில் யாருடைய கையொப்பம் இடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
கட்சியின் கணக்குகளுடன் கோயல் புற அளவில் ஈடுபட்டிருந்தாலும் கூட, மோடி அரசில் இது போன்ற நேரடி முரண்பாடுகள் முதல் முறையல்ல. . பியுஷ் கோயல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் வெளியுறவு அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஆகிய அனைவரும் “இந்தியா ஃபவுண்டேஷன்“ என்ற அறக்கட்டளையின் இயக்குநர்களாக உள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் மகனான ஷௌரியா டவல் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் போன்ற சிந்தனையாளர் குழுவால் நடத்தப்படும் இந்த அறக்கட்டளையின் திட்டங்கள் MNCs. எனப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவன ஸ்பான்ஸர்களை ஈர்த்துள்ளது.
பொதுவாக, நிதிகளை திரட்டிக்கொண்டிருக்கும்போது பொருளாளர்கள் பல வழிகளில் நிதி திரட்டுவார்கள் என்பதால் அரசியல் கட்சிகள் தங்களது பொருளாளர்களை அரசாங்க பதவிகளிலிருந்து விலக்கி வைப்பதன் மூலம் முரண்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. மோதிலால் வோரா காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மற்றும் அதன் வரவு செலவு கணக்குகளில் கையொப்பமிடுபவர். அவர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கவில்லை
ராஜ்நாத் சிங்கின் விடுபட்ட பதவிகாலத்தை முடிக்க அமித் ஷா 2014-ல் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டபோது, பொருளாளரைச் சுற்றி ரகசியம் வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஷா கட்சித் தலைவராக ஒரு முழு மூன்று வருட காலத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பின்கீழ், அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக, மேலும் ஒரு மூன்றாண்டு காலம் பதவி வகிக்க உரிமை பெற்றவர். ஷா இரண்டாவது முறையாக தலைவர் பதவி பெறவேண்டும் அல்லது பொதுத் தேர்தல்கள்வரை அவர் தலைவர் பதவியில் நீட்டிப்பதை தொடர வேண்டும் என்பதே தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நிலவும் ஒருமித்த கருத்து என அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் சக்திமிக்க தலைவரான அமித் ஷாவின் தற்போதைய பதவிக்காலம் பிரதமராக தன்னுடைய பதவிக்காலத்துடன் இணைந்து இருக்கும் என மோடி வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.
அமித் ஷா கட்சியின் முக்கிய நிதி திரட்டுபவராக இருக்கும் கோயலுடன் சேர்ந்து பாஜகவின் பொருளாளராக செயல்படுகிறார் என்ற ஊகம் வலுவடைந்துள்ளது. ஒரு வெளிப்படையான அரசியல் கட்சி என தன்னை பெருமைப்படுத்திக் கொண்ட பாஜகவில், பொருளாளரின் அடையாளம் போன்ற விவரங்கள் பொது வெளியில் இருக்க வேண்டும். மோடியும் அமித் ஷாவும் மட்டுமே அனைத்துமாக உள்ள “மோடிமயமான“ பாஜகவில் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வேறு எவரும், தேர்தல் ஆணையம்கூட, தைரியமாக இக்கேள்விகளை கேட்கக்கூடாது என்ற நிலையே உள்ளது.
”எங்களது கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொண்டிருந்தோம்….. ஆனால் இப்போது அமித் ஷா அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். நான் ஒரு மத்திய அமைச்சராக இருக்கிறேன். பாஜகவின் பொருளாளர் யார் என்பதை நான் நேர்மையாக சொல்ல முடியாது. கோயலுக்குப் பிறகு பொருளாளர் யார் அல்லது அவரே இன்னும் தொடர்கிறாரா என்பது ஒரு மர்மமாக இருக்கிறது. அவரும் அமித் ஷாவுமே கட்சியின் முக்கிய நிதி திரட்டுபவர்களாக இருக்கின்றனர் என்பது என்னுடைய பெறு நிறுவன தொடர்புகளிலிலிருந்து எனக்கு தெரியும்,“ என்கிறார் ஒரு மூத்த மத்திய அமைச்சர்.
தேர்தல் ஆணையத்திடம் அறிவிப்பு மற்றும் கட்சியில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்படும் “வெற்றிடம்“ ஆகியவை கட்சி ஆவணங்களில் உள்ள முறைகேடுகள் பற்றி மோடி-ஷா ஆகிய இருவருக்கும் நன்றாகவே தெரியும் என்பதையே காட்டுகின்றன.
தனது குஜராத் நாட்களிலிருந்தே தனக்கு நன்றாக பரிச்சயமான ஏ.கே. ஜோதியை தலைமைத் தேர்தல் ஆணையராக மோடி நியமித்த பிறகு, ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கெட்ட பெயரெடுத்துள்ள தேர்தல் ஆணையம், பாஜகவை கடுமையான கேள்விகள் கேட்டிருக்க வேண்டும் என்கின்றனர் அரசியலமைப்பு வல்லுனர்கள்.
ஜோதியின் பதவியின் கடைசி நாளன்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தது மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் மீதான தொடர்ச்சியான சர்ச்சைக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பெரிய மூக்குடைப்பாக, எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கத்தை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது. அதன் பொருளாளர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என பாஜகவை கேட்காதது தேர்தல் ஆணையம் மோடி அரசாங்கத்திற்கு அடிபணிவதற்கான தெளிவான உதாரணம்.
ஸ்வாதி சதுர்வேதி
I also endorsed the views of pooze kutty.pl
சவுக்கு வலைத்தளத்தின் பலமே மைய நீரோட்டத்தில் இருந்து விலகி, தமிழ்-தமிழர்களுக்கு தேவையான செய்திகளை சொல்வதுதான். உதாரணம் சன் டீவி ராஜா? மாதிரி செய்திகளை மற்ற பத்திரிக்கைகள் வெளியிடாது. அதே போல ஜாபர் சேட்- ஜாங்கிட் – போன்ற செய்திகளையும் பொதுவெளியில் படிக்க இயலாது. அதில் இருந்து இப்போது விலகி, பஜக- காங்கிரஸ் செய்திகளை பொது ஊடகங்களிலேயே காணலாம். அதே போல சினிமா பீட் தேவையற்ற ஒன்று. ரஜினி படம் வந்தால்தான் என்ன? நீங்கள் முழு நேர ஊடகவியலாராக மாறி இருக்கலாம். ஆனால் சவுக்கு தளமும் மாறி விட்டது ஏமாற்றமளிக்கிறது. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சவுக்கு வலைத்தளத்திற்கு தேவையில்லை. அதுவும் மத்திய அரசைப்பற்றி? இங்கு பஜக பெரிய கட்சியாக வரமுடியாது.
ஐயா, தற்போதைய மீடியாக்களுக்கு சோதனையான காலகட்டங்களில், தி வயர் போன்ற ஒரு சில மீடியாக்கள் தைரியமாக உயிரை பணயம் வைத்து உண்மையான செய்திகளை மக்களுக்கு தருகிறது. அதை என் போன்ற ஆங்கிலம் படிக்க தெரியாத தமிழர்களுக்கு சவுக்கு மட்டுமே மொழிபெயர்த்து தருகிறது. அதையும் தங்களைபோன்றவர்கள் தடுத்தால் எங்களை போன்றவர்களுக்கு தின மலம் போன்ற பிஜேபி சார்பு ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கைகள் (99% பத்திரிக்கைகள் அப்படித்தானே உள்ளது) தரும் செய்திகளை அறியமுடியும். ஆகையால் சவுக்கை தடுக்காதீர்கள்.