முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடி தேசிய தலைநகரப் பகுதியான டெல்லிக்கு திடீரென வந்துள்ளது. அது தற்காலிகமாக தற்போது அகன்றுள்ளது. ஆனால் இது ஏற்படுத்தியுள்ள பார தூர விளைவுகள் அவ்வளவு எளிதாக விட்டுப் போகாது.
டெல்லியின் முதலமைச்சர், அவரது மூன்று மூத்த அமைச்சரவை உறுப்பினர்களுடன், ஒன்பது நாட்களாக லெப்டினென்ட் கவர்னர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தற்காலிகமாக அந்த நெருக்கடி அகன்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வர முன்னெப்போதும் இல்லாத வரலாற்றுச் சிறப்பான வெற்றியோடு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2015 ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை அது பெற்றது. அதன் பின்னர், ஆளுமை தொடர்பான பிரச்சினைகள் சீக்கிரத்திலேயே தொடங்கின. தில்லி மற்றும் இந்திய அரசின் தேசிய தலைநகரப் பகுதியில் இரண்டு வெவ்வேறு அரசியல் கட்சிகளின் ஆட்சிமுறை அதிகாரத்தில் இருப்பது என்பது முதல் முறை அல்ல. இருப்பினும், ஜனநாயகத்துக்கு உட்பட்டு பெரிய அளவில் முரண்கள் ஏற்படாமல் ஆட்சி நடந்தது.
டெல்லியில் NCT இன் ஆளுகை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லெப்டினென்ட் கவர்னர் என இரட்டை ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும், அதிகாரங்கள் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அரசியலமைப்பு, நாட்டின் இரண்டு வகையான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.
மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். யூனியன் பிரதேசங்கள் ஒரு நிர்வாகியால் நிர்வகிக்கப்பட வேண்டும். 1991ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் 69 வது திருத்தம் மூலம், அரசியலமைப்பின் 8 வது பகுதிக்குள் 239AA- வது நிபந்தனையை (ஆர்டிகிளை) உட்செலுத்தியதன் மூலம் டெல்லிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. குறிப்பாக டெல்லிக்கு உரிய இந்த நிபந்தனையை சொருகியதன்மூலம், அரசியல் சட்டம் 239வது பிரிவு தில்லி மாநிலத்திற்கு செயல்படுத்துவது நின்றுவிட்டது. அரசியலமைப்புச் சட்ட நிபந்தனை 239AA குறிப்பாக ஒரு சட்டசபைக்கு வழங்கப்படுகிறது, சட்டமன்ற அதிகாரங்களை வழங்குவதோடு, துணை நிலை ஆளுநராக இருப்பவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடனேயே செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் தொடர்பான 1, 2 மற்றும் 18 துறைகள் டெல்லி சட்டமன்றத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. துணை நிலை ஆளுநருக்கும், ஒரு துறையின் பொறுப்பாளரான அமைச்சருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க ஒரு தனி வழி உள்ளது. அதன்படி, இந்த விவகாரம் முதலில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். வேறுபாடு நீடித்தால், அந்த விவகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.
இந்த ஏற்பாட்டை, ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்தவுடனேயே, மே 21, 2015 தேதியிட்ட அறிவிப்பு மூலம் சட்டவிரோதமாக மத்திய அரசால் மாற்றியமைக்கப்பட்டது. பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் போன்றவற்றோடு சேர்த்து, Services சேவைகள் என்ற பிரிவையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இதன் மூலம் டெல்லியிலுள்ள NCT-ன் சேவைகளின் முழுமையான கட்டுப்பாட்டை மத்திய அரசு பின் வாசல் வழியாக கையிலெடுத்துக் கொண்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட நான்காம் பிரிவு அரசு ஊழியர்கள் IV-ம் பிரிவு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிட்டது. எனவே, ஒரு கோப்பை (ஃபைல்) ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு பியூனை ஒரு அமைச்சர் உத்தரவிட்டு, அந்த ப்யூன் அதை செய்யத் தவறினால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் அமைச்சரால் எடுக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை மத்திய அரசின் இந்த அறிவிக்கை ஒரு ஜோக்காக மாற்றி விட்டது.
தில்லி அரசு இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. தில்லி உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தோற்றதால், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இறுதி விசாரணை டிசம்பர் 6, 2017 அன்று முடிவடைந்தது.. அதன் உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால், அதன் சொந்த வழிகாட்டுதலின்படி, உச்ச நீதிமன்றம் விசாரணை முடிந்த மூன்று மாதங்களுக்குள் அதன் உத்தரவை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஐந்து மாதங்கள் கழித்தும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
முதலமைச்சரின் இல்லத்தில் நள்ளிரவு கூட்டத்தில் தில்லி தலைமைச் செயலாளருக்கு நடந்தது மிகவும் துரதிர்ஷ்டமானது. அரசாங்க ஊழியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் உள்ள வார்த்தை மோதல்கள் தெரியாமலிருக்க இயலாது. ஐந்து மாதங்களாக அது சீழ்பிடிக்கும் நிலைக்கு அனுமதிப்பதற்கு பதிலாக அப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது அது civil servants எனப்படும் அரசு ஊழியர்களால் ஒரு முழு அளவிலான தொழிற்சங்க வகையிலான போராட்ட பரிமாணத்தை அடைந்துள்ளது. இது தற்போது ஏற்கமுடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது. ஒரு குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு டெல்லி காவல்துறையின் விசாரணையில் உள்ளது. அதன் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டாமா ?
இரட்டையாட்சி என்பது ஒரு பிழையான ஆட்சி முறையாகும். எனினும், அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தின் வருகை வரை அது நியாயமாக திருப்திகரமாக செயல்பட்டிருந்தது. இதற்கான காரணத்தை தேட வேண்டியதில்லை.
சட்டமன்ற தேர்தலில் பாஜக முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. 70 இடங்களைக் கொண்ட ஒரு அவையில் வெறுமனே 3 இடங்களில் மட்டுமே அது வெற்றிபெற முடிந்தது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் முகமாக இருந்தார். இதனால், தில்லி தேர்தல் தெரிவிக்கும் செய்தி என்னவெனில், இந்தியாவின் தேசிய தலைநகர் பகுதியில் கெஜ்ரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி தோற்றுவிட்டார் என்பதே. ஒரு அடல்பிஹாரி வாஜ்பாயாக இருந்திருந்தால் மிகுந்த முதிர்ச்சியுடன் இதை ஏற்றுக் கொண்டு இராஜதந்திரத்தைக் காட்டியிருப்பார். காங்கிரஸ் கட்சி 1998-ல் தில்லி தேர்தலில் வெற்றி பெற்றபோது உண்மையில் அவர் அவ்வாறே செய்தார்.
ஆனால் மோடி அரசோ, மே 21, 2015 அறிவிப்பை வெளியிட்டு ஆம் ஆத்மி ஆட்சியை முடக்கி செயலிழக்கச் செய்தது. ஆம் ஆத்மி முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஆட்சி அளிக்கும் அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது. அல்லது, போராடுவது. ஆம் ஆத்மி போராட்ட வழியை தேர்ந்தெடுத்தது.
உடனடியாக இந்த சிக்கல் மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டும். டெல்லியின் துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை உள்துறை அமைச்சர் அழைத்துப் பேசி டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடனான அதிகாரவர்க்கத்தின் ஒத்துழையாமை போன்ற சிக்கல்கள் மீண்டும் எழாமல் தீர்க்க வேண்டும். உண்மையில், அதை அவர் சிக்கல் தொடங்கியபோதே செய்திருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்காமல் மே 21, 2015 ன் அறிவிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதையே இராஜதந்திரம் கோருகிறது.
நீண்டகால தீர்வு என்ன ? முதலாவதாக, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து.(full statehood for Delh) வழங்க வேண்டும். இது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தேசிய தலைநகரத்தின் ஆட்சி மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் உள்ளனர். அந்த காரணத்தினால்தான், சட்டப்பேரவையுடன் டெல்லிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டபோது, பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் ஆகியவை அதன் எல்லைக்கு வெளியே வைக்கப்பட்டு, லெப்டினன்ட் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஏற்பாடு இப்போது தோல்வியடைந்திருக்கிறது. இதற்கான தீர்வு என்னவெனில் மத்திய அரசு புது டெல்லி மாநகராட்சியின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் முழுமையான கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டு, அதன் பிரதிநிதி மூலம் அதை ஒரு யூனியன் பிரதேசமாக நேரடியாக நிர்வகிக்கும். மீதமுள்ள தேசிய தலைநகரப் பகுதிகள் ஒரு மாநில அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களுடன் டெல்லியின் முழுமையான மாநிலமாக அமைக்கப்பட வேண்டும். இதற்கு சண்டிகரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு உலக அரசாங்கத்தைப் போன்ற ஐக்கிய நாடுகள் சபையை நியூயார்க் நடத்துகிறது, எனினும், போலீஸ் உள்ளிட்ட நியூயார்க்கின் முழு நிர்வாகமும் நியூயார்க்கின் மேயரிடம் இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மோடியை தோற்கடித்ததற்காக கெஜ்ரிவால் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
யஷ்வந்த் சின்ஹா