“இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” இந்த பிரபலமான வார்த்தைகளைச் சொன்னது யார் ? வேறு யார்…..? கருணாநிதி தான். இந்த வார்த்தைகளை இவர் சொன்ன தருணம் எது தெரியுமா ? மாறன் சகோதரர்கள், தயாளு அம்மாளுக்குப் பிறந்த இவரது மகள் செல்வியின் முயற்சியாலும், போலித் தற்கொலை முயற்சி காரணமாகவும், கருணாநிதியின் முதலைக் குடும்பத்தோடு இணைந்ததுதான் காரணம்.
சரி. இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பை ஏன் வைக்க வேண்டும் ? சவுக்குக்கும், இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும். எப்போது. கனிமொழி, திஹார் சிறையில் கால் வைக்கும் போது. எப்போது வைப்பார் ? நாளை தெரியும். இரண்டு வாய்ப்புகள். ஒன்று, கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டு, கனிமொழி உடனடியாக நாளை மாலையே கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் படுவார். அல்லது, இந்த முன் ஜாமீன் மனு, மே 13 அன்றைக்கு தள்ளி வைக்கப் படும். தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, கைது நடவடிக்கைக்கான நேரம் நிர்ணயிக்கப் படும். இவ்வளவுதான். கைது என்பது உறுதி. கனிமொழி, சிறை செல்லும் நேரம், சவுக்கின் இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும்.
இன்று ஜெத்மலானி குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 437ல், பெண் என்றால் கைது செய்யப் படாமல் பிணையில் விட வழிவகை இருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தால் வாதிட்டார். ஜெத்மலானியை பேசாமல் மறை கழன்ற கேஸ் என்று முடிவெடுக்கலாமா என்று தெரியவில்லை. ஜெத்மலானி ஒரு பிரபலமான வழக்கறிஞர் என்பதைக் குறித்து சவுக்குக்கு மாறுபட்ட கருத்தில்லை. பிரபலமான என்பதற்காகவே நல்ல மனிதர் என்று கருத முடியாதே ? குற்றம் சாட்டப் பட்ட அத்தனை பேருக்கும், வழக்கறிஞர் வைத்துக் கொள்ள உரிமை உண்டா என்றால் உண்டு. அவர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உதவிகளும் செய்யப் பட வேண்டும்.
அண்ணா வழியில் வந்த, பெரியார் வழியில் வந்த, திமுகவுக்கு இல்லாத வழக்கறிஞர்களா ? சட்டம் படித்த எத்தனையோ பேருக்கு, எம்எல்ஏ சீட்டும் எம்பி சீட்டும் வழங்கியிருக்கிறாரே கருணாநிதி ? சட்டம் பயின்றவர், சட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர் என்று உரைத்திருக்கிறாரே… ? அத்தனை பேரையும் விட்டு விட்டு, எதற்காக ராம் ஜெத்மலானியை தேர்ந்தெடுத்தார் கருணாநிதி ? அவ்வளவு ஏன் ? நமது குஞ்சாமணியே வழக்கறிஞர் தானே ?
ஆனால், திமுக வழக்கறிஞர்களை நம்ப, கருணாநிதி இளிச்சவாயன் அல்ல. தன் மகளாயிற்றே…. அதனால் தான் ஒரு முறை நீதிமன்றம் வருவதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்கும் ராம் ஜெத்மலானியை பிடித்தார். இந்த ஜெத்மலானி ஒன்றும் நேர்மையான மனிதர் அல்ல. பிரேமானந்தா சாமியாருக்காக ஆஜராகி, அவர் ரொம்ப நல்லவர் என்று வாதாடியவர். டெல்லி வழக்கறிஞர் என்ற கித்தாப்பை நீதிமன்றத்தில் காட்டிய போது, அப்போது விசாரணை நீதிபதியாக இருந்த பானுமதியால் கண்டிக்கப் பட்டவர். நீதிபதி பானுமதியின் நேரம், அதற்குப் பிறகு, ஜெத்மலானி சட்டத் துறை அமைச்சரானார். இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, பானுமதி உயர்நீதிமன்ற நீதிபதியாவதை, 4 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தார் ஜெத்மலானி.
நேற்று அளித்த பேட்டியில் கூட, நான் வழக்கறிஞராக கட்சிக்காரர்களுக்காக வாதாடுவதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன என்று கூசாமல் புளுகிய ஜெத்மலானி, ஜெஸ்ஸிகா லால் என்ற இளம்பெண், ஒரு மது விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு, சரக்கு தர மறுத்த காரணத்தால், 300 பேர் முன்னிலையில் அவளை பணக்காரத் திமிர் காரணமாக சுட்டுச் கொன்ற மனு ஷர்மா என்ற நபருக்காக வாதாடியவர்.
மிக மிக திறமையான வழக்கறிஞர் என்று அழைக்கப் படும் ஜெத்மலானி, ஒரு பத்திரிக்கையாளரான கரண் தாப்பர், ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக எப்படி ஆஜரானீர்கள் என்று கேட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியாமல், பேட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றார். (ஜெத்மலானி பேட்டி, பாகம் 1, பாகம் 2, பாகம் 3)
அதனால், ஜெத்மலானி, கனிமொழிக்காக ஆஜராவது சாலப் பொருத்தமே.
ஒரு நபரை சிபிஐ விசாரித்ததாலேயே அவர் குற்றவாளியாக முடியாது, சிபிஐ கைது செய்ததாலேயே அவர் குற்றவாளியாகி விட மாட்டார், என்று பசப்பிய கருணாநிதி, ஆண்டிமுத்து ராசா பதவி விலகும் போது என்ன கூறினார் என்பதை சற்றே நினைவு கூர்வோம்.
“தி.மு.க. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளைப் பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம்-பெரம்பலூர் பகுதியில் பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி ராசா- தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கழகத்திற்கும் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து `தலித்` இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.
அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று, ஜனநாயகக் கூடங்களில் சந்தைக்கடை இரைச்சல் மேலிடவும், நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப்பெற்று வருகின்றன.
அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறை 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையைக் கையாண்டு அளித்து வந்ததோ, அதே முறையைத்தான் தம்பி ராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் ராஜினாமா செய்தே தீர வேண்டுமென்று பிடிவாதம் செய்து-நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.”
பிப்ரவரி மாதம் நடந்த திமுக பொதுக்கூட்டத்திலே
“தம்பி ராஜா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று செய்திருக்கிற குற்றம் என்னவென்று பார்த்தால் – ஏழையெளிய மக்களுக்கு இந்தத் தொலைபேசியை – இதுவரையில் பணக்காரர்கள் மாத்திரம், சீமான் வீட்டுப் பிள்ளைகள் – சீமாட்டிகள் மாத்திரம் பயன்படுத்திய இந்தத் தொலைபேசியை – நடவு நட்டுக் கொண்டிருக்கின்ற நாகம்மாளும், தயிர் விற்றுக் கொண்டிருக்கின்ற தையல் நாயகியும் – போகும்போதே ஒரு கையிலே கலயம், தலையிலே சும்மாடு – அந்தச் சும்மாட்டின் மேலே தயிர் பானை, பால் பானை – காதிலே இந்தத் தொலைபேசி – அதிலே “”””மோர் வாங்கலியோ, மோர்”” என்ற கூச்சலுக்குப் பதிலாக, “”””ஹலோ, ஹலோ”” என்று இங்கிருந்து தொலைபேசி வழியாக இன்னொரு பகுதியிலே உள்ள அம்மையாரையோ, சொந்தக்காரர்களையோ, நண்பர்களையோ அழைத்துப் பேசுகிற அளவிற்கு – மிக மிகக் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான ஒரு நிலையை – கோடானு கோடி மக்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்ற அளவிற்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை – டில்லியிலே கைதாகியிருக்கின்ற நம்முடைய தம்பி ராஜாவுக்கு உண்டு.
இவர் தான் கருணாநிதி சொன்ன தயிர் விற்கும் தையல் நாயகியோ ?
நான் இங்கிருந்தவாறே, இந்த மக்களின் சார்பாக டில்லிச் சிறைச்சாலையிலே இருக்கின்ற தம்பி ராஜாவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் – வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த ஏழை மக்கள், எளிய மக்கள் – அவரவர்கள் பயன்படுத்துகின்ற இந்தத் தொலைபேசி இவ்வளவு அதிகமாக இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்றால், இந்தச் சாதனை புரிந்தவர் தம்பி ராஜா.”
பட்டிக்காட்டுப் பொட்டலிலே பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளரும், தலித் இனத்தின் தகத்தகாய கதிரவனுமான ஆண்டிமுத்து ராசா தான் அனைத்துச் சதிச் செயல்களிலும் ஈடுபட்டார் என்பதே கருணாநிதியின் கண்மணி கனிமொழி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜெத்மலானி நேற்று டெல்லி நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம்.
ராசா டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்திடமிருந்து 200 கோடி ரூபாய் வாங்கினார் என்று வைத்துக் கொண்டாலும், அதனால் கனிமொழிக்கு என்ன பொறுப்பு வந்து விடப் போகிறது ? கனிமொழி ஏதாவது ஒரு காகிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று காட்டுங்கள் பார்க்கலாம் ? அவருக்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தமே இல்லை. 20 % பங்குகள் வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே கனிமொழி குற்றம் செய்தவர் ஆகி விடுவாரா ?
ராஜாவை எனக்குத் தெரியவே தெரியாதுன்னா யாருமே நம்ப மாட்றாங்க…
இதுதான் நேற்று ராம் ஜெத்மலானி எடுத்துரைத்த வாதம். நேற்று சிபிஐ நீதிமன்றத்தில், கனிமொழிக்கு ஆதரவாக 11 திமுக எம்பிக்கள் வந்திருந்து, கனிமொழிக்கான தங்கள் ஆதரவையும் கருணாநிதி மீதும், எம்பி பதவி மீதுமான தங்கள் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், எந்த ராசாவுக்காக ஊர் ஊராக, ‘ஸ்பெக்ட்ரம் விவகாரம். நடந்தது என்ன ?’ என்று கூட்டம் போட்டார்களோ, அந்த ராசாவிடம் ஒருவரும் பேசக் கூட இல்லை.
ராசா இப்படிப் பட்ட பலி கடா என்றால், சரத் குமார் என்று அப்பாவியான ஆடாக இருப்பவர் இன்னும் மோசமான பலி கடா.
இப்படி சிரிச்சுகிக்கிட்டு இருந்த என்னை…
இந்த சரத் குமார், கேடி சகோதரர்களோடு லயோலா கல்லூரியில் படித்தவர். சன் டிவி தொடங்கியது முதலாக, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவரை, கேடி சகோதரர்கள், என்ன காரணத்தாலோ ஓரங்கட்டினார்கள். ஓரங்கட்டப் பட்டவர் சில மாதங்கள் ஆந்திராவில் சென்று ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தினார் என்கிறார்கள். கேடி சகோதரர்களோடு யுத்தம் தொடங்கியவுடன், கலைஞர் டிவி தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது. அதற்காக மிக திறமையான நிர்வாகியாக அறியப்படும், சரத் குமாரை, ஆந்திராவிலிருந்து அழைத்து வருகிறார் ஆற்காடு வீராச்சாமி. கலைஞர் டிவியும், தொடங்கப் பட்டு அமோகமாக நடந்து வருகிறது.
இப்படி பண்ணிட்டாங்களே…. ?
இந்த நேரத்தில், கருணாநிதியின் இதயம் இனித்து, கண்கள் பனித்து, குடும்பம் இணைந்ததும், நடந்த முதல் விவகாரம் என்ன தெரியுமா ?
கேடி சகோதரர்கள் புல்லாக சரக்கடித்து விட்டு, நேராக சரத் குமார் வீட்டுக்கு சென்று, “எங்களுக்கு எதிராகவாடா டிவி சேனல் தொடங்குகிறாய்” என்று அவரை அடித்து, சரத் குமாரின் காலை உடைத்து, பிறகு அவர்களே மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
எனக்கு கையெழுத்து போடவே தெரியாது…. நான் எப்படி டைரக்டரா கலைஞர் டிவிக்காக கையெழுத்து போட்ருக்க முடியும் ?
இந்த சரத் குமார் தான் இன்று கருணாநிதி குடும்பத்தால் மஞ்சள் தண்ணீர் தெளித்து அறுக்கப் பட இருக்கிறார். கடந்த வாரம், சரத் குமாரின் மனைவி, கருணாநிதி காலில் விழுந்து தன் கணவரை காப்பாற்றுமாறு கதறியிருக்கிறார். அப்போது காப்பாற்றுகிறேன் என்று வாக்கு கொடுத்த கருணாநிதி, நேற்று “கலைஞர் டிவி ஆவணங்களில் கையெழுத்திட்டவர் கனிமொழி அல்ல” என்று வாதிட்டுள்ளார். கனிமொழி அல்ல என்றால், கையெழுத்து போட்ட சரத் குமாரை பிடித்து சிறையில் அடையுங்கள் என்று பொருள்.
சரத்குமாரோடு, தற்போது, கலைஞர் டிவியில் இயக்குநராக இருக்கும், கருணாநிதியின் மருமகன் அமிர்தத்தையும் சிறையில் அடையுங்கள் என்று ஜெத்மலானியை வாதிடச் சொல்வாரா கருணாநிதி ?
அமிர்தம் : சைட் அடிச்சுக்கிட்டே போய் சிபிஐல சிக்கிட்டான். நல்ல வேளை நம்ப உஷாராயிட்டோம்.
கலைஞர் டிவிக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை, கலைஞர் டிவிக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை, தயாளுவுக்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தம் இல்லையென்றால், அப்புறம் யாருதுதாண்டா கலைஞர் டிவி ?
கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்ட உடன், கலைஞர் டிவி தொடங்க வேண்டும் என்றால், யாரை வைத்து வேண்டுமானாலும், தொடங்கியிருக்கலாமே…. கருணாநிதிக்கு ஒரு அடிமை சிக்காமலா போயிருப்பான் ? ஆனால், அந்த அடிமை பத்து இருபது ரூபாயை திருடி விட்டால் ? அந்த பத்து இருபது ரூபாயும், தன் குடும்பத்துக்கே வர வேண்டும் என்ற பேராசைதான் இன்று கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.
சிபிஐ அடுத்த கட்டமாக தனது விசாரணையையும் தொடங்க வேண்டியிருக்கிறது. கலைஞர் டிவி பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டோம் என்கிறார்களே… அந்தப் பணத்தை எப்படித் திருப்பிக் கொடுத்தார்கள் தெரியுமா ?
கலைஞர் டிவியா ? அப்டின்னா ?
அஞ்சுகம் பிலிம்ஸ் (கருணாநிதி குடும்பத்துடையது) சார்பில் 70 கோடி. கலைஞர் டிவியில் விளம்பரம் கொடுப்பதற்காக அட்வான்ஸ் 96 கோடி. வங்கியில் ஓவர் ட்ராப்ட் 70 கோடி. அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 70 கோடி எப்படி வந்தது என்று விசாரித்தாலே, கலைஞர் டிவியில் மேலும் சிலர் திஹார் செல்வார்கள்.
96 கோடி ரூபாயை மூடுவிழா நடத்தப் படப் போகும் கலைஞர் டிவிக்கு எந்த முட்டாள் கொடுத்தான் என்று விசாரித்தால், இந்தியா சிமென்ட்ஸின் சீனிவாசன் சிக்குவார். எதற்காக அய்யா இந்தப் பணத்தை கொடுத்தாய் என்று கேட்டால், ஜாபர் சேட் சிக்குவார். ஜாபர் சேட் மூலமாக, கருணாநிதி குடும்பத்தின் அத்தனை வண்டவாளங்களும், தண்டவாளத்தில் ஏறும்.
கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் சவுக்கு நினைவூட்ட விரும்புகிறது. இன்று நீங்கள் இருவரும் மிகுந்த மனக்குழப்பத்திலும், அச்சத்திலும் இருப்பீர்கள். எங்கே தன் மகள் சிறை சென்று விடுவாளோ என்று கருணாநிதி கலக்கத்தில் இருப்பார். ஆனால், 2009ம் ஆண்டு, இதே மே மாதத்தில், முள்ளி வாய்க்கால் பகுதியில், பெண்களும், குழந்தைகளும், குண்டு வீச்சுக்கு இறையாகிக் கொண்டிருந்த போது, வேடிக்கை பார்த்தவர்கள் நீங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று உலகமே இறைஞ்சிய போது, நீரா ராடியாவோடு, கனிமொழி, அமைச்சரவை குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததை மறந்து விடக் கூடாது. போலி உண்ணாவிரதம் இருந்தும், எம்பிக்கள் ராஜினாமா என்று நாடகம் நடத்தியும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி என்று நடித்தும் போர் நிறுத்தத்திற்கான போராட்டத்தை கருணாநிதி நீர்த்துப் போகச் செய்ததை மறந்து விடக் கூடாது.
இந்த ஒரு காரணத்துக்காகவேனும், கனிமொழி, திஹார் சிறையில் அடைக்கப் பட வேண்டும். அந்த காட்சியை கருணாநிதி கண்டு, வேதனையிலும், கையறு நிலையை நினைத்தும், கதறி அழ வேண்டும்.
அப்போதுதான் சவுக்கின் இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்.