அண்ணா பல்கலைகழகமும், ஆளுனர் மாளிகையும்.
இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ? இரண்டும் எதிர் எதிரே அமைந்துள்ளன. அதுவா ? இல்லை.
ஆட்டுக்கு தாடியும், ஆளுனர் பதவியும் தேவையற்றவை என்பதே திமுகவின் கொள்கை. அப்படிப்பட்ட கொள்கையை உடைய திமுக, தற்போதைய கவர்னர் பர்னாலாவை ‘தாடி வைத்த தங்கம்’ என்று புகழ்கிறது. திமுகவினர், ஒருவரை புகழ்ந்தாலும், உள்நோக்கம் இருக்கும், இகழ்ந்தாலும் உள்நோக்கம் இருக்கும். இதற்குள் செல்லும் முன், அண்ணா பல்கலைகழகத்தைப் பற்றி ஒரு ஃப்ளாஸ் பேக்.
2007ம் ஆண்டு. சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அப்போது அங்கே ஐஜியாக இருந்த கே.ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இருவரும், உரிய மதிப்பெண் பெறாத தங்கள் பிள்ளைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து சிறப்பு கோட்டாவில் சீட் வாங்கியிருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. இவ்வாறு இந்த இரண்டு அதிகாரிகளும் வாங்கியது தவறு. ஏனென்றால், ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா மீதான வழக்கை முடித்தார். நரேந்திர பால் சிங், செங்கோட்டையன் மற்றும் வளர்மதி மீதான வழக்குகளை முடித்தார். இவ்வாறு இந்த இரண்டு அதிகாரிகளும் சீட் வாங்கியது, கலைஞர் டிவிக்கு 200 கோடி கொடுத்தது போலவே லஞ்சம் என்றே சட்டம் சொல்கிறது. சரி, இதைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் எல்லோரும் பேசுகிறார்கள் ஆனால், யாரும் எதுவும் செய்ய முன்வரவில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அப்போதுதான் அமலுக்கு வந்தது. இதைப் பயன்படுத்தி தவலைப் பெறலாம் என்று முயற்சி எடுத்தால், சவுக்கு அரசு ஊழியராக இருப்பதால், நேரடியாக தகவலை பெற முடியாது. மாதவரத்தில் இருந்த சவுக்கின் நண்பரை அவர் பெயரில் தகவல் பெற்றுத் தருமாறு கேட்ட போது, அவர் சம்மதித்தார். சரி தகவல் கேட்கலாம் என்றால், இவர்களின் பிள்ளைகள் பெயர் வேண்டுமே ? ராதாகிருஷ்ணன் மகன் பெயர் சந்தீப் என்று தெரிந்து விட்டது. நரேந்திர பால் சிங் மகள் பெயர் தெரியவில்லை. அவர் வீட்டில் வேலை செய்யும் கான்ஸ்டபிளிடமும், டிரைவரிடமும் கேட்டால், அவர்கள் அந்தப் பெண்ணை ‘பிங்கி’ என்று அழைப்பார்கள் என்று சொன்னார்கள். என்னடா இது நாய்குட்டி பெயர் போல இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது, சவுக்குக்கு அலுவலகத்தில் பயன்படுத்த கம்ப்யூட்டர் ஒன்று கொடுத்தார்கள். அந்தக் கம்ப்யூட்டர் அதற்கு முன்பு நரேந்தர் பால் சிங் பயன்படுத்தியது. அந்தக் கம்ப்யூட்டர் உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால், Respected Madam என்று தொடங்கி, அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கேட்டு, நரேந்திர பால் சிங் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. பழம் நழுவி நேரடியாக வாயிலேயே விழுந்தது போலிருந்தது. அவர் மகள் பெயர் குர்பானி சிங்.
நண்பர் சவுக்கு சொன்னபடி அண்ணா பல்கலைகழகத்தில் தகவல் கேட்டு அனுப்பி இரண்டாவது நாளிலிருந்து அவருக்கு மிரட்டல் தொடங்கியது. இரண்டாவது நாள் ஒருவர், தான் அண்ணா பல்கலைகழகத்தில் பணி புரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘சார் உங்களுக்கு எந்த ப்ராச்சில சீட் வேணும்னு சொல்லுங்க.’ கேள்வியெல்லாம் கேட்காதீங்க என்று சொன்னார். அடுத்தடுத்த நாள்களில் வீட்டுக்கு தினமும் ஒரு போலீஸ்காரர் வந்து, மிரட்டுவார். நண்பர் பயந்ததும், டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் தகவல் கேட்பவருக்கு மிரட்டல் என்று பெரிய செய்தி வந்தது.
ஆனால் இந்தச் செய்திக்கெல்லாம் ராதாகிருஷ்ணன் பயந்தவரா என்ன ? நண்பருக்கு மிரட்டல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு, இணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காகவே Hum Jhanenge என்ற போரம் உள்ளது. அந்த போரத்தில், இந்தத் தகவலை பதிவு செய்த போது, ஆதரவு வெள்ளமெனக் குவிந்தது. இந்தியா முழுவதும் இருந்து ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் பிள்ளைகளைப் பற்றிய தகவலை கேட்டு 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. அதற்குப் பிறகு மிரட்டல் நின்றது. பிறகு தகவல் ஆணையத்தில் விசாரணை நடந்து, தகவல் பெற்று, சிபிஐ விசாரணை வேண்டி புகார் கொடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததெல்லாம் தனிக் கதை.
இப்போது ஆளுனர் மாளிகை விஷயத்துக்கு வருவோம். ஆளுனர் பர்னாலா, வரலாறு படைத்துள்ளார். என்ன வரலாறு ? இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில், பதவிக்காலம் முடியாத ஒரு துணை
வேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளார். அந்தத் துணை வேந்தர் வேறு யாருமல்ல. அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் ஜவஹர் தான் அது.
வேந்தர் பர்னலா, 01.03.2011 அன்று மன்னர் ஜவஹருக்கு எழுதிய கடிதத்தில் பல்கலைக்கழக சட்டம் 11(3)ன்படி, உங்களுடை பதவிக்காலம் 27.06.2011க்கு பிறகு ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
பல்கலைக்கழகம் சட்டத்தின் விதி 11(3) என்பது, துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்த பிறகுதான் ஓராண்டு நீட்டிக்கலாம் என்று கூறுகிறது, அதாவது மன்னர் ஜவஹர் பதவிக்காலம் 26.06.2011 அன்று மாலை 5.45க்கு முடிவடைகிறது, அன்று மாலை 5.46க்கு ஒராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடலாம்.
சரி எதற்காக இப்படிப் பட்ட ஒரு அப்பட்டமான விதி மீறலை செய்திருக்கிறார் பர்னாலா ?
அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டா என்று ஒரு கோட்டா வைத்திருக்கிறார்கள். இந்தக் கோட்டா 1999ம் ஆண்டு, அண்ணா பல்கலைகழகத்தின் சின்டிகேட் தீர்மானத்தின் படி மொத்த சீட்டுகளில் 2 சதவிகிதத்தை கவர்மென்ட் கோட்டாவுக்கு ஒதுக்கலாம் முடிவெடுத்தனர். இதன் படி அண்ணா பல்கலைகழகத்தில் ஒரு பிரிவில் உள்ள மொத்த இடத்தில் 2 சதவிகிதத்தை ஒதுக்கலாம். உதாரணத்துக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 100 சீட் இருக்கிறதென்றால் 2 சீட்டுகளை கவர்மென்ட் கோட்டாவுக்கு ஒதுக்கலாம். 20 சீட்டுகள் ஒதுக்கினால் ? அதுதான் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது.
உலகின் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும் அண்ணா பல்கலைகழக கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கிண்டி, மெட்ராஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும், அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகிய மூன்றிலும், இந்த அயோக்கியத்தனங்கள் அரங்கேறி வருகின்றன.
அண்ணா பல்கலைகழக கல்லூரிகளில் ஒரு இடம் அதிகரிக்கப் பட வேண்டும் என்றால் கூட, ஏஐசிடிஇ என்று அழைக்கப் படும், பொறியியல் கல்லூரிகளுக்கான அகில இந்திய அமைப்பு தான் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், எந்தவிதமான அனுமதியும் இல்லாமல், சகட்டு மேனிக்கு அட்மிஷன்கள் போடப்பட்டுள்ளன. கடைசியாக 2001ம் ஆண்டில் சீட்டுகள் எண்ணிக்கையை ஏஐசிடிஇ அதிகரித்துள்ளது. அதற்குப் பிறகு அதிகரிக்கவே இல்லை.
எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூக்கேஷன்ஸ் பிரிவை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இந்தப் பிரிவில் 2010ம் ஆண்டில் மொத்த இடங்கள் 180. ஆனால் படிப்பது 296. கூடுதல் 116. இவற்றில் 22 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். 7 இன்டஸ்ட்ரியல் கோட்டா. மீதம் உள்ள 87 இடங்கள் ஒரு இடம் சராசரியாக 20 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இது எலேக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிக்கேஷன்ஸ் பிரிவில் 2010 ஆண்டுக்கு மட்டும். இதே பிரிவில் கூடுதலாக படிப்பவர்களின் எண்ணிக்கை 2009ல் 156, 2008ல் 156 மற்றும் 2007ல் 40. 2010ம் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து, ஆண்டில் மொத்தம் 258 மாணவர்கள் அனுமதிக்கப் பட்ட தொகையை விட, கூடுதலாக படிக்கின்றனர். 258 X 20,00,000 = 51 கோடி. 2007 முதல் 2010 வரை 600 பேர் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளனர். நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு ரயில் கம்பார்ட்மென்ட்டில் 70 பெர்த்துகள் தான் உள்ளன. 120 டிக்கட்டுகள் வழங்கினால் ? அதுதான் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது. மெக்கானிக்கல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சைன்ஸ், என்று அத்தனை பிரிவுகளிலும் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.
கவர்னர் மகனையும், அவர் நண்பரையும், வசூல் செய்ய அனுமதி தந்ததற்கான கைமாறு தான், மன்னர் ஜவஹருக்கு பணி நீட்டிப்பு.
ஒரு சீட் 25 லட்சத்துக்கு விற்கப் பட்டு அது, கவர்னர் பர்னாலாவின் மகன், அவரது பிசினஸ் பார்ட்னர் நஜிம்முதின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோரோடு பங்கு போட்டுக் கொள்ளப் படுகிறது.
இந்த கவர்மென்ட் கோட்டாவில் சீட் பெறுபவர்கள் ஏழைப் பாழைகளோ இல்லாதவர்களோ அல்ல. உயர் உயர் அதிகாரிகளின் பிள்ளைகளும், கொழுத்த முதலாளிகளும் தான்.
இந்த ஊழல் இந்த ஆண்டும் தொடராமல் நிற்க வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். அது நிற்கும் வரை சவுக்கு ஓயாது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும்.