ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் எவ்வளவுதான் நியாயமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றாலும் அவருடைய வகுப்புவாத உணர்வுகள் அம்பலமாகிவிடுகின்றன.
மதம் மாறி மணம்புரிந்த ஒரு தம்பதியருக்கு பாஸ்போர்ட் விஷயத்தில் தொந்தரவு செய்த தனது அமைச்சக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சங்க பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் கடுமையாக ஏசி, இழிவுபடுத்தினார்கள். ஒரு வார காலம் நீடித்த இந்த அவமானகரமான போக்கில் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரியின் சுரத்தில்லாத அறிக்கைகள் மட்டுமே விதிவிலக்காக அமைந்தன. பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ், சுஷ்மா ஸ்வராஜைக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் தொண்டர்களை ஒருவழியாகத் தற்போது கண்டித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த அதிகாரி, ஆவணங்கள் சரியாக இருந்தபோதும் தான்வி சேத்துக்குப் பிரச்சினை தந்துள்ளார். தான்வி சமர்ப்பித்த ஆவணங்களுள் ‘நிக்கஹாமா’வில் (முஸ்லிம் திருமணச் சான்றிதழ்) தான்வியின் பெயர் ‘ஷாதியா அனஸ்’ என இருப்பதால் அவருக்கு அவரது பெயரில் பாஸ்போர்ட் கிடைக்காது என அந்த ஊழியர் கூறிவிட்டார். இவ்வித வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தாமும் எதிர்கொண்டதாக தான்வியின் கணவர் முகமது அனஸ் சித்திகி கூறுகிறார்.
ட்விட்டர் மூலம் அமைச்சரைத் தொடர்புகொண்டு தான்வி உதவி கோரிய பின் விஷயத்தை மறுபரிசீலனை செய்ய சுஷ்மா உத்தரவிட, அதன் பின் எல்லா ஆவணங்களும் முறையாக இருந்ததால் பாஸ்போர்ட் தர உத்தரவு அளிக்கப்பட்டது. பிரச்சினை உருவாக்கிய அதிகாரி அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
பாஜகவே ஆட்சியில் இருந்தாலும் வகுப்புவாத ரீதியில் தொல்லை தரும் அதிகாரி விதிமீறல் புரிய அனுமதிக்கப்பட மாட்டார் என்பதற்கு அமைச்சரைப் பாராட்டுவதற்குப் பதிலாக இந்துத்வா அமைப்புகள் அமைச்சருக்கெதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன.
தான்வி சேத், அவரது கணவர் மட்டுமின்றி முஸ்லிம் சமுதாயத்தினர் மீதே சந்தேகம் கிளப்பும் தகவல் திரட்டும் வேலையை இந்துத்வாவின் பொய்ச் செய்தி உற்பத்தியாளர்கள் உடனடியாக ஆரம்பித்துவிட்டனர். முஸ்லிம்களுக்கு ‘அதீத அன்பு’ கிடைப்பதாகவும் கடமையைச் செய்து வரும் தவறிழைக்காத ‘இந்து’ அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாகவும் கூறினர். தேவையற்ற இக்கருத்துகள் மீது ‘சூடான’ விவாதங்களை அரசு ஆதரவு தொலைக்காட்சி சேனல்களும் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுவது தொடர்பான நிலுவையில் இருக்கும் விதிமுறைகள் பற்றி ஒன்றுமே தெரியாமல் சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டன.
’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள ராம் மாதவ் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அரசு அதிகாரியின் இடமாற்றம் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக இருந்தாலும் அதன் பின்னணியில் இருக்கும் “போலி மதசார்பற்ற ஆர்வமும் நோக்கமும்” முக்கியமான பிரச்சினைகள்தாம் என்று அவர் கூறியுள்ளார். “அதைவிட முக்கியமானது என்னவென்றால் சமூக ஊடகத்தில் கண்டனம் தெரிவிக்க நாம் பயன்படுத்தும் மொழி ஏற்றுக்கொள்ளுமளவுக்கு (நன்றாக) இருக்கிறதா என்பதே,” எனக் கூறுகிறார்.
அதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஊடக வழியிலான கண்டனங்களை எதிர்க்கும் மாதவுக்கும் நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். ஆயினும் கட்டுரையின் வேறு பகுதியில் பெரும்பான்மையினரை ஆதரிக்கும் அவரது மனப்பாங்கு நன்கு வெளிப்படுகிறது என்பது வேறு விஷயம்:
“நிக்கஹாமாவில் வேறொரு பெயரை எழுதச் செய்யும் மதகுருக்களையும் அதை அதிகாரபூர்வமானதாக வைத்துக்கொண்டு மேற்கொண்டு வேலைகளைச் செய்யும் அதிகாரிகளையும்தான் ஊடக நண்பர்கள் இலக்காக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, இவ்விஷயத்தில் இந்துவாகவே இருக்க விரும்புவதாக கூறிய அப்பெண் வில்லனாகவும், அவள் பெயரை மாற்றிய பிற்போக்குச் சிந்தனையுடைய மதகுரு ஹீரோவாகவும் ஆகிவிட்டனர்.”
முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் தன் சொந்தப் பெயரில் இருக்க விரும்பிய தான்விக்கு சந்தேகத்தின் பலன் கிடைத்திருக்க வேண்டும் என்று மாதவ் கூறுகிறார். “பல தனிநபர்கள் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பின்னும் தனது மத அடையாளத்தை வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். பொது வாழ்வில் – ஏன் பாஜகவிலும் – அப்படிப் பலர் உள்ளனர். இந்திய சமூகம், கலாசாரத்தின் பல்லினம்சார் குணத்தின் ஒப்பற்ற உதாரணம் இது,” என்கிறார்.
திருமணத்திற்குப் பின் ஒருவர் தன் பெயரை மாற்றிக்கொள்கிறாரா இல்லையா என்பது பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒரு கட்சியின் தேசிய பொதுச் செயலாளார் ஏன் கருத்து கூற வேண்டும்? பாஸ்போர்ட் இந்தியக் குடிமகனுக்குத் தரப்படுகிறது என்றும், இந்துவாக இருக்கலாமா, முஸ்லிமாக இருக்காலாம என முடிவெடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் மாதவுக்குத் தெரியாதா என்ன?
‘முஸ்லிம்’ என்பதால் ஆதரவு கோருவதாக இதுவரை இழிக்கப்பட்ட தான்வி சேத், முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் இந்துவாக இருக்க விரும்பிய காரணத்தால் ராம் மாதவின் பார்வையில் ‘ஹீரோ’ ஆகிவிட்டார். ‘ஹதியா’விற்கோ தன் பெயரை மாற்றிக்கொள்ள விரும்பும் வேறு இந்து ஆண் (அ) பெண்ணுக்கு என்ன ஆகும்? பெயரை மாற்றிக்கொள்ளும் இந்துக்களல்லாத சமூகத்தினரின் கதி?
தாமும் குடும்பத்தாரும் பின்பற்றும் சம்பிரதாயம், நம்பிக்கை, பாரம்பரியம் அடிப்படையில் திருமணம் செய்துகொள்பவர்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளனர். அச்சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு பற்றித் தீர்ப்பு சொல்லவோ, தொடர்பான மதகுருக்களை ஊடகத்தில் கழுவி ஊற்றுமாறு கூறவோ மாதவ் போன்றோருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. வெறுமனே கருத்து கூற மாதவ் முற்பட்டால், அதிலாவது அவர் நிலையாக இருக்க வேண்டும்.
நடிகர்களாக இருந்து பாஜக அரசியல்வாதிகளாக மாறிய தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் 25 வருட ’நிக்கஹாமா’ 2004ஆம் ஆண்டில்தான் பொது ஆவணமாகியது. தர்மேந்திராவுக்கு அது 2ஆவது திருணம் என்பதால் அவர்கள் இஸ்லாமுக்கு மதம்மாறித் திருமணம் செய்திருந்தனர்; தர்மேந்திரா ‘திலாவர்’ எனவும் ஹேமமாலினி ‘ஆயிஷா’ எனவும் தத்தம் பெயர்களை (திருமணத்திற்காக) மாற்றியிருந்தனர். இதைப் பற்றிக் கேட்ட நிருபரிடம் “இது எங்கள் அந்தரங்க விஷயம்; இதைப் பற்றிக் கேட்க வேண்டாம்” என்று ஹேமமாலினி ஒருமுறை கூறினார்; அவர் கூறியது முற்றிலும் சரி. ஆனால், ராம் மாதவின் கருத்தின்படி, இவர்களிருவரின் பெயரை மாற்றிய மதகுருவை பாஜகவின் ஊடகச் செயலாளர்கள் சும்மா விடவே கூடாது!
நடிகையும் மாடலுமான ஹேசல் கீச் 2016ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கைத் திருமணம் செய்தபின் தன் பெயரை ‘குர்பசந்த் கௌர்’ என மாற்றிக்கொண்டார். சந்த் பல்வீந்தர் சிங் அவருக்கு இப்பெயரை மாற்றிவைத்தார். இவரையும் சங் பரிவார் அமைப்பினர் இந்திய சமூக, கலாசார விதிமீறல் செய்ததற்காகக் கழுவி ஊற்றுவார்களா?
சில இந்து மராட்டியர்கள் திருமணங்களின்போது மணமகன் தரப்பினர் பெண்ணின் பெயர், குலப்பெயரையும்கூட மாற்றுவார்கள். இதன்படி இந்துக்கள் செய்வதையும் ராம்மாதவும் அவரது ஆதரவாளர்களும் கண்டிப்பார்களா?
ஆர்.எஸ்.எஸ். போதனைகளின்படி அவர் கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டார்; அவரது கட்டுரையின் நோக்கமே, இவ்விஷயத்தில் வகுப்பு ரீதியாகப் பிளவுபடுத்தும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் அமைச்சரைப் பற்றிய ஊடக விமரிசனங்களை நிறுத்திக்கொள்ளும்படி போதிப்பதுதான்.
தான்வி சேத்தின் பாஸ்போர்ட் பற்றிய அனைத்துத் தகவல்களும் வெளிவந்துவிட்டதன் பின்னணியில் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல் என்னும் சங்கப் பரிவாரத்தின் வாதம் இவ்விஷயத்தில் வலுவிழந்துபோய்விட்டது. இந்நிலையில் வகுப்புவாதப் பசி கொண்ட பாஜகவின் ஊடக அணியினருக்குத் தீனி போடும் வகையில் ஏதாவது ‘காதல் புனிதப் போர்’ கிடைக்குமா என ராம் மாதவ் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்!
நன்றி: தி வயர் இணையதளம் (https://thewire.in/politics/the-bjp-wants-its-trolls-to-forget-sushma-and-keep-the-focus-on-muslims)
தமிழில்: சுப்ரபாலா
There is nothing wrong in translating good articles to Tamil. Savukku is good on this.
Translation seems to affect flow of the article. Very difficult to follow the contents. Should avoid word – word translation and maintain content to content translation. I suggest to two stage writing. One is straight translation followed by rephrasing in Tamil in a readable manner.
Savukku should consider anbu commen.true its very difficult to follow the content.please maintain content to content translation
Has Savukku become Tamil version of The Wire ?