மக்களவைத் தேர்தலுக்கு வெறும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளது. தமிழகத்துக்கும் சேர்த்தே தேர்தல் வரலாம் என்பதற்கான அறிகுறிகளை பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கான அறிகுறிகள் பலமாக தென்படத் தொடங்கியுள்ளன. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசை செயல்படாத அரசு என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார். ஞாயிறன்று சென்னை வந்திருந்த பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, “தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும்” என்று வெளிப்படையாகவே கூறியதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
அமித் ஷா வருகை தருவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக, வருமான வரித் துறை அதிகாரிகள் கிறிஸ்டி என்ற தமிழக அரசுக்கு முட்டை மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வந்த நிறுவனத்தில் மூன்று நாட்கள் தொடர் சோதனைகள் நடத்தியிருந்தனர். கிறிஸ்டி நிறுவனம் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சூழலில் அமித் ஷாவின் கருத்துக்களை எளிதாக பார்க்க முடியாது. தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கான காலக் கெடு குறிக்கப்பட்டு விட்டதாகவே பார்க்க முடியும்.
தற்போது திமுக தலைமையில், காங்கிரஸ், இடது சாரிகள், முஸ்லீம் லீக், முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி வெளித் தோற்றத்துக்கு ஒரு வெற்றிக் கூட்டணியாகவே தெரிகிறது. ஆனால், கண்ணுக்கு புலப்படாத வகையில் பல்வேறு மாற்றங்கள் அரசியல் களத்தில் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. விஜயகாந்தின் தேமுதிக கடந்த தேர்தலில் சந்தித்த பலத்த அடிக்கு பின், அதன் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக உள்ள நிலையில், அது ஒரு பலம் வாய்ந்த சக்தியாக வரும் தேர்தலில் இருக்க வாய்ப்பில்லை.
இப்படி ஒரு வலுவான கூட்டணியோடு, தேர்தலை உற்சாகமாக சந்திக்க வேண்டிய திமுக தொண்டர்கள் இடையே உற்சாகத்துக்கு பதிலாக சோர்வே காணப்படுகிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் போதுமான அளவுக்கு செயல்படவில்லை என்ற உணர்வை பெரும்பாலான திமுக தொண்டர்கள் பிரதிபலிக்கின்றனர். ஸ்டாலின் ஒரு போதும் கருணாநிதியாக முடியாது என்பதை ஒப்புக் கொள்ளும் திமுக தொண்டர்கள், அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக, மக்களின் நம்பிக்கையை பெறும் தலைவராக பரிணமிக்கத் தவறி விட்டார் என்றே கூறுகிறனர்.
திமுகவின் ஒரு மூத்த தலைவர் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். “ஸ்டாலின் ஒரு மக்கள் தலைவராக பரிணமிக்கும் அளவுக்கு திறன் கொண்டவரில்லை என்பதை தலைவர் கலைஞர் நன்றாகவே அறிவார். ஸ்டாலினின் வளர்ச்சியை உத்தரவாதப் படுத்தவே, வைகோ கட்சியை விட்டு ஒரு பொய்க் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டார். தன் குடும்பத்துக்காக எந்த சமரசத்தையும் செய்யத் தயங்காதவர்தான் கலைஞர். குடும்பத்துக்காக கட்சியையே இழக்கவும் அவர் தயங்க மாட்டார். ஆனால் இத்தனை பாதுகாப்புகளை அளித்த பிறகும், தொண்டர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு தலைவராக ஸ்டாலினால் தன்னை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.
சென்னை நகரின் மேயராக 1996ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னால், ஸ்டாலினால், திமுகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு இல்லை” என்றார் அந்த மூத்த தலைவர்.
ஸ்டாலின் நெருக்கடி நிலை காலத்தில் 1976ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால், அவரைப் போலவே திமுகவில் பல தொண்டர்களும் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். சிலர் காவல்துறை தாக்குதலால் உயிரையே விட்டனர். ஆனால் அப்படி அடி வாங்கியவர்கள் யாரும், பின்னாளில் இளைஞர் அணித் தலைவராகவும், பொருளாளராகவும், செயல் தலைவராகவும் கவுரவிக்கப்படவில்லை.
1984ம் ஆண்டு இளைஞர் அணித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், அந்தப் பதவியில் 27 ஆண்டுகள் இருந்தார். திமுகவின் பொருளாளர் ஆக்கப்பட்ட பின்புதான் அந்தப் பதவியை இழக்க அவருக்கு மனம் வந்தது. தற்போது செயல் தலைவரான பின்பும், பொருளாளர் பதவியை விட்டுத் தர மனமில்லாமல் அவரே வைத்திருக்கிறார்.
இளைஞரணித் தலைவராக்கப் பட்ட பின்னர், ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் பின்னடைவே கிடையாது. பின்னர் தேர்தலில் தோல்விகளை சந்தித்தாலும், அவர் கட்சியில் கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் போட்டியில்லாத தலைவராகவே இருந்து வருகிறார்.
திமுக இயக்கம் வெறும் பேச்சினாலேயே வளர்ந்த இயக்கம் என்றால் மிகையாகாது. எதுகை மோனை வசனங்கள், வீர உரை வீச்சுகள், வார்த்தை ஜாலங்களாலேயே வளர்ந்த இயக்கம் திமுக. திராவிட நாடு கோரிக்கை, பார்ப்பன எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, மொழிக் கொள்கை என்று கேட்பவர்களை தங்கள் வார்த்தை ஜாலங்களால் வசீகரித்த இயக்கம் திமுக. இன்றும் திமுகவில் பேச்சாளர்களுக்கு குறையே கிடையாது. ஆனால், அத்தகைய பேச்சுத் திறன் எதுவுமேயின்றி, கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையிலேயே இன்று தலைவராக உருவாகியிருக்கிறார் ஸ்டாலின்.
தலைவர்களின் சொற்பொழிவை கேட்க, திமுக தொண்டர்கள் , வரிசையில் நின்று பணம் கட்டி மாநாடுகளில் பங்கேற்ற காலங்கள் உண்டு. ஆனால் அரசியலில் 40 ஆண்டு கால அனுபவத்துக்கு பிறகும், இன்னும் ஸ்டாலினால் கையில் துண்டு சீட்டு இல்லாமல் நான்கு வரிகளை பேச முடியவில்லை.
திமுகவின் அந்த மூத்த தலைவர் தொடர்ந்தார். “ எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளிலும், திமுகவில் வைகோ தொண்டர்களை வசீகரிக்கக் கூடிய ஒரு தலைவராக இருந்தார். குறிப்பாக அவர் பாஸ்போர்ட் விசா இன்றி, இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்து தமிழகம் திரும்பிய பிறகு, அவர் புகழ் திமுக தொண்டர்கள் இடையே உச்சத்துக்கு சென்றது. அவர் உரையை கேட்பதற்காகவே தொண்டர்கள் சாரி சாரியாக திமுக கூட்டங்களுக்கு வந்தனர்.
பல நேரங்களில், வைகோ பேசி முடித்ததும், கலைஞர் பேசுவதற்கு முன்பாகவே கூட்டம் கலைந்த சூழலெல்லாம் ஏற்பட்டுள்ளது. இனியும் வைகோ திமுகவில் தொடர்ந்தால், ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்த, கலைஞர், வைகோ விடுதலைப் புலிகளோடு சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்ற பழியை சுமத்தி, வைகோவை கட்சியிலிருந்து 1993ம் ஆண்டு வெளியேற்றினார்.
வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு, ஸ்டாலினுக்கு திமுகவில் போட்டியே இல்லை. பல மாவட்டங்களில் செல்வாக்காக இருந்த திமுக தலைவர்கள் கூட, கட்சியில் ஸ்டாலினுக்கு பின்னர்தான் நாம் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கினர்” என்றார் அந்தத் தலைவர்.
வரலாறு திரும்பும். வரலாறு நெடுக, மன்னர் ஆட்சி காலத்தில், ஆட்சியை பிடிப்பதற்கான சகோதர யுத்தங்களை நாம் பார்த்துள்ளோம். திமுக மட்டும் விதிவிலக்கா என்ன ?
அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான மோதல் தொடங்கியது.
1989ம் ஆண்டு, கருணாநிதியால், மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அழகிரி. கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்பதற்காக அழகிரி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், தென் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் முதல், வேட்பாளர்கள் தேர்வு வரை, அனைத்தையும் அழகிரியே முடிவு செய்தார். திமுகவில் தென் மண்டலத்தில் ஒரு பெரும் அதிகார மையமாக அழகிரி உருவானார். தன்னை நம்பி வந்தவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று அழகிரி பற்றி தொண்டர்களிடையே ஒரு நம்பிக்கை உருவானது.
2006ல் திமுக உருவாக்கிய கூட்டணியில் இருந்த கட்சிகள் பல, திமுகவை விட்டு விலகிச் சென்றிருந்தன. அந்த நிலையில்தான், மதுரை திருமங்கலத்தில், இடைத் தேர்தல் வந்தது. ஒற்றை ஆளாக, தன் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி, மாபெரும் வெற்றியை கருணாநிதிக்கு பரிசளித்தார் அழகிரி.
அழகிரிக்காகவே, தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்று ஒரு பதவி உருவாக்கப்பட்டது. தென் மண்டலத்தின் மன்னராகவே ஆனார் அழகிரி.
காவிரி மண்டலத்தை சேர்ந்த ஒரு திமுக தலைவர், “அழகிரிக்கு கிடைத்து வரும் முக்கியத்துவம் குறித்து ஸ்டாலினுக்கு தொடக்கம் முதலே பொறாமை இருந்து வந்தது. அழகிரியை தனக்கு நேரடியான போட்டியாகவே பார்த்தார் ஸ்டாலின். எப்போது அழகிரியை காலி செய்யலாம் என்று திட்டமிட்டு வந்த ஸ்டாலினின் வலையில், அழகிரி தானாகவே விழுந்தார்.” என்றார்.
2014 பாராளுமன்றத் தேர்தல், ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் கட்சி ஏறக்குறைய முழுமையாகவே வந்ததை உணர்த்தியது. தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே எடுத்தார். அழகிரியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்டோர் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் அழகிரி கடும் கோபமடைந்தார்.
இயல்பான மனிதரான அழகிரி, வெளிப்படையாக ஸ்டாலினை விமர்சித்து அறிக்கைகள் பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். இவற்றை சுட்டிக் காட்டி, ஸ்டாலின் கருணாநிதியிடம் அழகிரியை நீக்கியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். மார்ச் 2014ல், அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். திமுக தொண்டர்கள் அழகிரியோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
அழகிரியின் நீக்கமே சட்டப்படி செல்லாது என்று கூறுகின்றனர் சட்ட வல்லுனர்கள். ஒரு அறிக்கையின் மூலமாக அழகிரி நீக்கப்பட்டார். கட்சியின் பொதுக் குழுவோ, செயற்குழுவோ, அழகிரியின் நீக்கம் குறித்து விவாதித்தது கிடையாது.
கட்சியை ஸ்டாலின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போனது ஒரு புறம் இருந்தாலும், அழகிரியின் கோபத்துக்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு.
திமுகவின் நிதிகள் அனைத்தையும் கையாள்வது இரண்டு முக்கிய அறக்கட்டளைகள். ஒன்று திமுக அறக்கட்டளை. மற்றொன்று முரசொலி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் ஆயிரக்கணக்கான கோடிகள். தமிழகமெங்கும் இந்த அறக்கட்டளைகளுக்கு சொத்துக்கள் உண்டு. இது தவிர்த்து, இந்த சொத்துக்களை நிர்வகிக்க சொத்துப் பாதுகாப்பு குழு என்று ஒன்று உண்டு. இந்த அறக்கட்டளைகளில் தன் மகன் உதயநிதியை ஸ்டாலின் உறுப்பினராக்கினார். சொத்துப் பாதுகாப்புக் குழுவிலும் உறுப்பினராக்கினார்.
இதுதான் அழகிரியின் கோபத்துக்கு முக்கிய காரணம். இன்னும் பச்சையாக சொல்லப்போனால், நானும் கருணாநிதியின் மகன்தானே ? சொத்தில் ஸ்டாலின் மகனுக்கு பங்கு கொடுத்தால் என் மகனுக்கு பங்கு எங்கே என்பதே கோபம். அந்த கோபத்தில் நியாயம் உண்டுதானே ? இது தவிர, முரசொலி நாளேட்டின் நிர்வாக இயக்குநராகவும், உதயநிதி ஸ்டாலினை நியமித்தார் ஸ்டாலின்.
முரசொலி நாளேட்டின் பவள விழா நிகழ்ச்சியில், முரசொலி நாளேட்டின் மேலாண் இயக்குநர் என்ற பொறுப்பில், உதயநிதி அவ்விழாவில் உரையாற்றியதை கண்டு முகம் சுளிக்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது.
கருணாநிதி செயல்பாட்டோடு இருந்த வரையில், ஸ்டாலினின் இந்த நகர்வுகளை நேரம் வருகையில் அழைத்து கண்டிப்பார். ஒரு அளவுக்கு மேல் குடும்ப ஆதிக்கம் போனால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்தவர். ஆனால் அவர் செயல்பாடு இழந்த பிறகு, ஸ்டாலினை கேட்பதற்கு ஆளே இல்லாமல் போனது. ஸ்டாலினை சுற்றி, ஆமாம் சாமி போடுபவர்களும், ஜால்ராக்களும் மட்டுமே நிறைந்தனர்.
கட்சியின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுபவர்களை ஸ்டாலின் வெறுத்தார். அவர்களை ஒதுக்கினார். உதயநிதியின் புகழ்பாடுபவர்களையும், ஸ்டாலினின் ஆளுமைகளை புகழ்ந்துரைப்பவர்களையுமே அவர் விரும்பினார்.
“தளபதி, தமிழ்நாட்டு ஜனங்களுக்கு நம்பளை விட்டா வேற யாரு இருக்கா ?
நேத்து நீங்க சட்டசபையில பேசுனதை பாத்து, ஆளுங்கட்சிக் காரங்க கலங்கிப் போயிட்டானுங்க. அதுலயும், நேரடியா எடப்பாடியை பாத்து ஒரு கேள்வி கேட்டீங்க பாருங்க.
ஆடிப் போயிட்டானுங்க.
நீங்க வேற தளபதி. நாம பிரச்சாரமே பண்ண வேண்டாம். தேர்தல் எப்போ வரும். தளபதியை எப்போ முதல்வராக்கறதுன்னு ஜனங்க தூங்கும்போது கூட விரலை நீட்டிக்கிட்டே தூங்கறாங்க.
நேத்து நீங்க ஜிம்ல எக்சர்சைஸ் பண்ற வீடியோவுக்கு ஃபேஸ்புக்குல எவ்வளவு லைக் தெரியுமா ? இந்த வயசுல கூட இவ்வளவு ஆரோக்கியமா இருக்காரேன்னு லைக்ஸ் அள்ளுது”
இது போன்ற வசனங்கள்தான் ஸ்டாலினை சுற்றி ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அவரும் அதைத்தான் விரும்புகிறார்.
இன்று திமுகவில் அத்தனை முக்கிய முடிவுகளையும் எடுப்பவர்கள், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், மகேஷ் பொய்யாமொழி, அண்ணா நகர் கார்த்திக் மற்றும் எவ.வேலு ஆகியோர் மட்டுமே. இந்த ஜால்ரா கூட்டத்தைத் தாண்டி ஸ்டாலினை அணுகவும் அவரிடம் பேசவும் முடியாது.
கட்சியில் உருப்படியான ஆலோசனைகளை யாராவது சொன்னால், அவர்களிடம் வெறுமனே தலையசைக்கும் ஸ்டாலின், இந்த ஜால்ரா கூட்டம் சொல்வதை மட்டுமே ஆர்வத்தோடு கேட்கிறார் என்கின்றனர் கட்சித் தலைவர்கள். ஸ்டாலினின் மனம் கோணும்படி எதையாவது சொன்னால், கட்சியில் ஓரங்கட்டப்படுவோம், அரசியல் எதிர்காலமே முடிந்து விடும் என்பது, திமுகவின் மேல் மட்டத் தலைவர்கள் அனைவருக்குமே தெரிந்துள்ளது. கருணாநிதியின் தோழரான துரைமுருகனே, ஸ்டாலினுக்கு ஜால்ரா போடத் தொடங்கி விட்டார் என்றால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
திமுக என்பது கருணாநிதியின் குடும்ப சொத்து. அந்த சொத்தை முழுமையாக இளைய மகன் ஸ்டாலினும், அவர் மகன் உதயநிதியும்தான் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை தொண்டர்களும், தலைவர்களும் உணர்ந்து கொண்டார்கள். அதை எதிர்க்க ஒருவரும் தயாரில்லை. ஆனால் அவர்களின் மன வருத்தமே ஜெயலலிதா இல்லாத இந்த நிலையில் கூட, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக, மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், ஸ்டாலினால் நடந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம்தான்.
ஸ்டாலினோடு ஒப்பிடுகையில், எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும், அரசியலில் குழந்தைகள். அவரின் அனுபவத்தோடு, டீக்கடை நடத்திய பன்னீர்செல்வமோ, புளி வியாபாரம் செய்து கொண்டிருந்த பழனிச்சாமியோ போட்டியிட முடியாது. ஆனால் இவர்களைக் கூட ஸ்டாலினால் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியவில்லையே என்று வேதனைப் படுகிறார்கள்.
சென்னையில் உள்ள ஒரு மூத்த பத்திரிக்கையாளர் பேசுகையில் “ஸ்டாலினின் செயல்பாடுகளை கடந்த ஒரு வருடமாக கவனித்து வருகிறேன். அரசியலுக்கு அடிப்படை தேவையான, வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அவரிடம் இல்லை. தலைமைப் பண்புகளும் இல்லை. கருணாநிதி முழு செயல்பாட்டோடு இருந்திருந்தால், இந்த ஆட்சியை கவிழ்த்திருப்பார். அல்லது, அவர்கள் நாள்தோறும் கதறி அழும்படி செய்திருப்பார்.
ஸ்டாலின் கருணாநிதி கிடையாது. அவர் கருணாநிதியின் மகன் என்பதனால் மட்டுமே கருணாநிதி ஆகி விட முடியாது. ஸ்டாலினுக்கு செயல் தலைவர் என்ற பதவி, தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கப்பட்டது.
தன்னிச்சையாக ஒரு தேர்தலை சந்தித்து அவர் அதில் வெற்றி பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 2014 மற்றும் 2016 தேர்தல் தோல்விகள் ஒரு புறம் இருக்க, ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுக டெப்பாசிட் இழந்தது தனிப்பட்ட முறையில் ஸ்டாலினின் தோல்வி. பண பலம் காரணமாக திமுக தோற்றது என்று ஸ்டாலின் காரணம் கூறினாலும், அது தோற்றவனின் புலம்பலாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த ஓர் ஆண்டாக, ஸ்டாலின் பல சந்தர்ப்பங்களை தவற விட்டுள்ளார். நடப்பு அரசியல் நிலைமையில், அவர் மேலும் சந்தர்ப்பங்களை தவற விடுவாரேயானால், 2019 அவருக்கு மிக நெருக்கடியான தேர்தல் ஆண்டாக அமையும்.
அதிமுகவை எதிர்க்கும் ஒரு பலமான தலைவராக ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்தத் தவறி விட்டார் என்றே கருத வேண்டியுள்ளது. அதிமுகவும், திமுகவும் பரம எதிரிகள். இரண்டும் களத்தில் நேருக்கு நேராக 40 ஆண்டுகளாக மோதி வந்துள்ளன. ஆனால் அதிமுகவின் மிக மிக முக்கியமான தலைவர் இல்லாத இந்த நிலையில் கூட, அதிமுகவை எதிர்க்கும் ஒரு வலுவான கட்சியாக திமுகவை நிலைநிறுத்த ஸ்டாலின் தவறி விட்டார்.
ஒரு புறம், டிடிவி தினகரன், வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்டாலின் கடுமையாக பின்தங்கியுள்ளார். மிக மிக பலவீனமான நிலையில் உள்ள அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் நிலையில் கூட திமுக இன்று இல்லை.
தீவிரமாக மறு பரிசீலனை செய்து, தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள ஸ்டாலின் தவறுவாறேயானால், அவரின் முதல்வர் கனவு அப்படியேதான் இருக்கும். கனவாக.” என்றார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.
அந்த மூத்த பத்திரிக்கையாளர் மிகைப்படுத்தவில்லை. தொடர்ந்து பல தவறான முடிவுகளையே ஸ்டாலின் எடுத்து வருகிறார். 89 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு, சட்டப்பேரவையில் அரசையும், அமைச்சர்களையும் துளைத்து எடுத்து அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்க ஸ்டாலினால் முடியவில்லை.
எப்படியாவது, காவல்துறை உதவியோடு போராடும் மக்களை சிறையில் அடைத்து, நிறைவேற்றியே தீருவேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுத்தும் சேலம் 8 வழிச் சாலை விவகாரம், ஸ்டாலினுகு அவர் வணங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கொடுத்த அற்புத வரம். ஆனால் இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாளாமல் கோட்டை விட்டு விட்டார் ஸ்டாலின்.
ஒரு புத்தி கூர்மையுள்ள அரசியல் தலைவர், உடனடியாக சேலம் 8 வழிச் சாலையை எதிர்த்து பாதயாத்திரையை அறிவித்திருக்க வேண்டும். 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் கிராம மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறியிருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, கிராமம் கிராமமாக சென்றிருக்க வேண்டும்.
ஆனால் ஸ்டாலினோ, சட்டப்பேரவையிலேயே, திமுக 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை. மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது என்று பேசுகிறார். 8 வழிச் சாலை எத்தகைய பண விரயம், அவசியமற்றது என்று ஊடகங்களில் நாள்தோறும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், ஸ்டாலினோ, ஏறக்குறைய எடப்பாடியின் குரலாகவே சட்டப்பேரவையில் ஒலிக்கிறார்.
ஆனால், வட தமிழகத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியோ, 8 வழிச் சாலை விவகாரத்தை வலுவாக கையில் எடுத்துள்ளது. அதன் தலைவர் மருத்துவர் ராமதாஸ், அரசை கேள்விகளால் துளைத்து எடுக்கிறார். அன்புமணி ராமதாஸ். அந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கிராமம் கிராமமாக சென்று சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் தற்போது நிலவும் கடுமையான அதிருப்தியைக் கூட ஸ்டாலினால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதிமுகவில் தற்போது, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிகளிடையே கடுமையான முரண்பாடுகள் நிலவி வருகின்றன. ஆனால் இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி, அந்த அணியை உடைத்து, அதிலிருந்து சிலரை திமுகவுக்கு எடுக்கும் திறன் கூட இல்லாமல் ஸ்டாலின் இருந்து வருகிறார்.
ஆனால், டிடிவி தினகரனோ, பாட்டாளி மக்கள் கட்சியோ, இடது சாரிகளோ, முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு, விரிவான அறிக்கைகள் மூலம் அரசுக்கான கடும் நெருக்கடியை தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.
கூட்டணி கட்சியினரை கையாள்வதிலும், ஸ்டாலினுக்கு போதுமான திறன் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் கூட, திமுகவை கைவிடாமல்தான் காங்கிரஸ் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியை வெறுப்பூட்டி, விலக வைக்கும் காரியத்தையே ஸ்டாலின் செய்து வருகிறார்.
மம்தா பானர்ஜி மூன்றாவது அணி முன்னெடுப்பை பற்றி பேசியதும், அவருக்கு வாழ்த்து சொல்லியதையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவே பார்க்க முடியும். மூன்றாவது அணிக்கான சாத்தியக் கூறுகள், தேர்தலுக்கு முன்னால் ஏற்பட வாய்ப்பு குறைவு என்பதை சிறுபிள்ளை கூட அறியும்.
செவ்வாயன்று, சொந்த காரணங்களுக்காக ஸ்டாலின் குடும்பத்தோடு லண்டன் சென்றார். திமுக வரும் 30ம் தேதி மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த உள்ளது. லண்டன் சென்ற ஸ்டாலின், டெல்லி சென்று, ராகுல் காந்தியை சந்தித்து விட்டு, அங்கிருந்து லண்டன் சென்றிருந்தால் அது ஒரு நல்ல நகர்வாக இருந்திருக்கும். ஆனால், திருச்சி சிவாவை வைத்து, ராகுல் காந்திக்கு அழைப்பு அளித்துள்ளார். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்காது என்பது வெளிப்படை.
தமிழகத்தில் திமுகவை விட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியே இல்லை என்று ஸ்டாலின் தப்புக் கணக்கு போடுகிறார். திமுகவை கழற்றி விட்டு, காங்கிரஸ் கட்சி, டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி என்று தனி கூட்டணி அமைத்தால், திமுக நிலைமை என்ன என்பதை ஸ்டாலின் சிந்திக்க மறுக்கிறார்.
டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களோடு நல்ல உறவில் இருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை ஏன் இது போன்ற நோக்கங்களுக்கு ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ள மறுக்கிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளது. டெல்லி பத்திரிக்கையாளர்கள், கனிமொழிக்கு கட்சிகளை கடந்து அனைத்துத் தலைவர்களிடமும், நல்ல மரியாதை உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் ஸ்டாலினோ, கனிமொழியை சுத்தமாக டெல்லி அரசியலிலும் ஓரங்கட்டி விட வேண்டும் என்று தீர்மானமாக இருப்பதாக கூறப்படுகிறது. கனிமொழி நிச்சயமாக தமிழக முதல்வராக போட்டியிடப் போவதில்லை. அவரை திமுக சார்பாக டெல்லி விவகாரங்களை கையாளச் சொல்வது, நல்ல அணுகுமுறையாக இருக்கும். ஆனால், ஸ்டாலின் தன் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறு யாரையும் எந்த முக்கியமான விவகாரத்துக்கும் நம்பத் தயாராக இல்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பெண் வாக்குகளை பெற, திமுகவிடம் நல்ல உத்தி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கனிமொழியை மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள செய்து, பெண் வாக்காளர்களை சந்திக்க வைத்து, பெண் வாக்குகளை கவர்வது ஒரு சரியான உத்தியாக இருக்கும். ஆனால், ஸ்டாலினோ, மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, அம்மக்களை சந்திக்க தூத்துக்குடிக்கு கனிமொழி செல்வதற்கு கூட அனுமதி மறுத்து விட்டார் என்றே கூறப்படுகிறது.
இப்படி யாரையுமே ஸ்டாலின் நம்பாமல் இருப்பது அவரின் தன்னம்பிக்கை குறைபாட்டையும், அச்ச உணர்வையுமே வெளிப்படுத்துகிறது. ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்பதை ஸ்டாலின் ஏன் உணர மறுக்கிறார் என்பது புரியவில்லை.
தன்னை முதல்வராகவும், தன் மகனை துணை முதல்வராகவும் நினைத்துக் கொண்டு, ஸ்டாலின் விட்டத்தைப் பார்த்து கனவு காண்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி, ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவை கவனித்து வருபவர். அவர் பேசுகையில், “ கொள்கையில்லாத அரசியல், ஏழு பெரும் பாவங்களில் ஒன்று என்றார் மகாத்மா காந்தி
ஸ்டாலின் செய்து கொண்டிருப்பது, கொள்கையில்லாத அரசியலே.
கருணாநிதி முதுமை காரணமாக செயலிழந்து இருந்தபோது, தனது கட்சி செல்வாக்கால், தன்னைத்தானே செயல் தலைவராக அறிவித்துக் கொண்டவர்தான் ஸ்டாலின். தலைவர்களை உருவாக்க முடியாது. உருவாக வேண்டும் என்பதை ஸ்டாலின் மேலும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ஸ்டாலின் தொண்டர்கள் விருப்பத்தையும் நிறைவேற்றவில்லை, பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை.
சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, போட்டி சட்டசபையை அறிவாலயத்தில் நடத்தியபோது, அவர் கட்சியின் முன்னணித் தலைவர்களே சிரித்தார்கள். தற்போது நடக்கும் அதிமுக அரசாங்கத்தை பதவியிறக்க ஸ்டாலின் தவறிய காரணத்தால், திமுக தொண்டர்கள், ஸ்டாலினை கருணாநிதியோடு ஒப்பிடத் தொடங்கினர்.
திமுகவின் முக்கிய தொண்டர்களிடையே, தமிழக அரசு செயல்படுத்தும் மக்கள் விரோத திட்டங்களான ஸ்டெர்லைட், பசுமை விரைவுச் சாலை, சூயஸ் குடிநீர் திட்டம், சேலம் விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களில் ஸ்டாலினுக்கே எடப்பாடி பழனிச்சாமி பங்கு அளிக்கிறார் என்ற பேச்சு உள்ளது. ஆனால் ஸ்டாலினோ, ஒட்டுமொத்த தொண்டர்களும் தன் பின்னால் என்ற கனவில் இருக்கிறார்.
ஸ்டாலின் அரசியல் சாணக்கியரான கருணாநிதியிடமிருந்து அரசியல் கற்றிருக்க வேண்டும். ஆனால் சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் மருமகனிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்கிறார் ஸ்டாலின். ஒட்டுமொத்த மாநிலமும் போராட்டங்களால் பற்றி எரிகையில், ஸ்டாலின் குடும்பத்தோடு லண்டன் சுற்றுலா செல்கிறார்.
அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக இருப்பதற்கு ஸ்டாலினுக்கு உண்மையிலேயே தகுதி இருக்கிறதா என்ற கேள்விதான், திமுகவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இதயத்தில் எழும்பியவண்ணம் உள்ளது.
ஸ்டாலின் திமுகவை மட்டும் நாசமாக்கவில்லை. தற்போது மாநிலத்தில் நடைபெறும் மக்கள் விரோத அரசுக்கு மறைமுகமாக துணை போவதன் மூலமாக, இந்த மாநிலத்தையும் நாசம் செய்து வருகிறார்.
வரலாறு, ஸ்டாலினிடம் கருணை காட்டப் போவதில்லை. வரலாற்றின் கடைசி பக்கங்களில், கருணாநிதி என்ற மயிலின் இடத்தை ஆக்ரமித்த வான்கோழி என்றே ஸ்டாலின் பதிவு செய்யப்படுவார்” என்றார் அந்த காவல்துறை அதிகாரி.
மீண்டும் ஒரு முறை ஸ்டாலினுக்கு அவர் தந்தையின் குறளோவியத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
கூடுதலாக கண்ணதாசனின் வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்.
யாருக்கென்றும் அழுபவன்தான் மக்கள் தலைவனாக முடியும். தன் குடும்பத்துக்காக அழுபவன் “குடும்பத் தலைவனாக ” மட்டுமே ஆக முடியும்.
ஸ்டாலினிடம் அரசியல் மசால குறைவு தான்..ஆனால் வேறு வழியில்லையே..!!
தளபதி ஒரு தலைவனுக்கு உரிய அனைத்து தலைமைத்துவ பண்புகளை பெற்ற ஒரு தலைவர் அவருக்கு உங்களை மாதிரி உள்ள ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு கட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுக வுக்கு இல்லை
It is true sankar.it was a golden opportunity for DMK to down the EDP government. Even People would thanks DMK. But it was miserably mishandled by Stalin. To pull the hands of speaker and sat in speakers seat gave a golden opportunity to EDP to sent DMK out of house. Stalin would have teach his members how to act in assembly. It is not Stalin’s fate but it is our fate
இதை ஒரு அல்லக்கையின் புலம்பளாக பார்க்கிறேன்
very nicely written article..bard hitting truth..
சவுக்கு தமிழர் நிலம், தமிழர் வளம் என்று பேசும் முகிலன், சகாயம் போன்றோரிடம் ஒரு குவளை வாங்கி குடிக்கவும். ஒரு வேளை நீங்கள் உங்கள் திராவிட போதையிலிருந்து தெளிவடைய கூடும்
Savukku is a paid proxy for Congress. See how he supports Congress and great women leader “Kanimozhi”.
Show one article where he wholeheartedly exposed Sonia , Rahul and clan.
அனுகுமுறை அரசியல் சாணக்யதனம் எதார்தமான பேச்சு மக்களை கவர்ந்திழுக்கும் வல்லமை படைத்த ஒரே தலைவர் டி டி வி தினகரன் மட்டுமே இதனை ஒப்பக்கொள்ள தி மு க ஆதரவாளர் சவக்கு சங்கருக்கு மனமில்லை நேர்மையும் இல்லை எத்தனை எத்தனை அபான்டமான குற்றசாட்டுகள் பொய் வழக்குகள் இந்தியாவில் இதுவரை இல்லாத ரைடுகள் இத்தனையும் தாங்கி எதிர்த்து கர்ஜிக்கும் சிங்கமாகவும் சட்டமன்றத்தில் உண்மையான எதிர்கட்சி தலைவராக இருக்கும் டி டி வி எங்கே?தத்தி சுடலை எங்கே? அடுத்த முதல்வர் டி டி வி தான் இதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது,.
இது போன்ற நாதாரிகளை நம்பி இருக்கவேண்டிய நிலைமை தமிழ்நாட்டு மக்களுக்கு வந்ததற்க்கு காரணம் இந்த மக்களேதான்…
வான்கோழியா ?? சீக்கு வந்த கோழியா???
தங்களை போன்ற பத்திரிக்கையாளர்கள் திமுக மீது மட்டும் எந்த காலத்திலும் விமர்சனம் வைப்பதில் மிக தேர்ந்தவர்கள் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் உடனே அதனால் லாபம் இல்லை என்பது பிஜேபி உடன் கூட்டணி வைத்தால் தங்களது கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்பது தனியாக நின்றால் கட்சி தேறாது என்பது என்ன சொன்னாலும் திமுக செல்லும் பாதையில் அது தொடர்ந்து பயணிக்கும் படுந்தோல்வியையும் சந்தித்தது மிக பிரமாண்ட வெற்றியும் சுவைத்தது எந்த மாற்றமில்லை