தில்லி அரசு Vs இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வியுறும்போது தேசங்களும் தோல்வியுறும். நிர்வாகம் செய்யும் பொறுப்பை மக்கள் நம்பிக்கையோடு யாரிடம் கொடுத்தார்களோ அவர்களது ராஜதந்திரமே (அல்லது அதன் இன்மையே) ஒரு ஜனநாயக அமைப்பின் செயல்பாட்டின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகும்” என்கிறார். இந்தியாவின் எல்லைக்கு அப்பால் நிகழ்ந்த ஒரு சம்பவம் நீதிபதி சொல்வதன் அர்த்தத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.
இந்திய நிறுவனமான மஹீந்திரா & மஹீந்திரா இன்று வாகன உற்பத்திக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. பொறியியல் படிப்புடன் அரசு அதிகாரிகளாகப் பணியாற்றிய அனுபவமிக்க இரு சகோதரர்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க வில்லிஸ் ஜீப்பை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தைப் பெற்றனர். அதிலிருந்து அந்த ஜீப் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளது; அதன் வழித்தோன்றல்களான ஸ்கார்பியோ, XUV ஆகியவையே இன்றுவரை இந்தியச் சாலைகளை ஆளுகின்றன. ஆரம்பித்தில் நிறுவனத்தின் பெயர் மஹீந்திரா & முகம்மது என்றுதான் இருந்தது.
சர் மாலிக் குலாம் முகம்மது என்பவரே இதிலிருக்கும் ‘முகம்மது’. இந்திய ரயில்வே அக்கவுன்ட்ஸ் சர்வீசின் (Indian Railway Accounts Service) முன்னாள் ஊழியரும் சார்ட்டட் அக்கவுண்டண்டுமான முகம்மது நிறுவனத்தின் நிதித் துறையைக் கவனித்துக்கொண்டார். பிரிவினைக்குப் பின் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்ற அவர் லியாகத் அலி கானின் தலைமையில் நாட்டின் முதல் நிதியமைச்சராகப் பதவி வகித்தார். லியாகத் அலிகாலின் படுகொலைக்குப் பின் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் காஜாஅ நஸிமுதீன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்க, முகம்மது பாகிஸ்தானின் அடுத்த கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றார்.
1950இல் தனது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட இந்தியாவைப் போலன்றி பாகிஸ்தானால் தனக்கெனெ ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை அப்போது இயற்ற முடியவில்லை. இந்திய அரசுச் சட்டம், 1935 மற்றும் இந்திய சுதந்திரச் சட்டம், 1947 ஆகியவையே இன்றும் அமலில் இருந்து வருகின்றன. 1950களில் கிழக்கு பாகிஸ்தானில் மொழிக் கலவரங்கள் வெடித்தபோது கவர்னர் ஜெனரல், குலாம் முகம்மது பிரதமர் நஜிமுதீனைப் பதவி நீக்கம் செய்து இந்திய அரசுச் சட்டம், 1935இன் காலனித் திட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களையும் தம்மிடம் வைத்துக்கொண்டார். பாகிஸ்தானின் அரசியல் சாசன சட்டமன்றம் கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முனைந்தபோது, சட்டமன்றத்தையே அவர் 1954ஆம் ஆண்டில் கலைத்துவிட்டார்.
சட்டமன்றம் சிந்து உயர் நீதிமன்றத்தை நாடியபோது நீதிமன்றம் அதற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது; ஆனால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகம்மது முனீர் தலைமையிலான பெஞ்ச்சின் பிளவுபட்ட தீர்ப்பு சிந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. தனது தீர்ப்பில் அரசியலமைப்பைத் தாண்டி, பொதுச்சட்டம், சட்டக் கோட்பாடுகள், இங்கிலாந்து ஏற்படுத்திய முன்னுதாரணம் ஆகியவற்றை நாடுவது அவசியம் என்று நீதிபதி முனீர் கூறியிருந்தார். “தேவையின் காரணமாக, சட்டபூர்வமாக இல்லாத ஒன்று சட்டபூர்வமாக ஆக்கப்படுகிறது” என்னும் பிராக்டனின் கோட்பாட்டைச் சார்ந்து அவர் தீர்ப்பளித்திருந்தார்.
நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் இதன் மூலம் பாகிஸ்தானின் அதிபரானார். தன் உடல் நலம் குன்றியபோது குலாம் முகம்மது முன்னாள் அரசு அதிகாரியான இஸ்கந்தர் மீர்ஸாவை இடைக்கால கவர்னர் ஜெனரலாக நியமித்தார். 1955இல் மீர்ஸா குலாம் முகம்மதுவைப் பதவி நீக்கம் செய்து, தானே கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றார். பின்னர், பாகிஸ்தான் தன் அரசியலமைப்புச் சட்டத்தை 1956இல் ஏற்றுக் கொண்டபோது, மீர்ஸா ஜனாதிபதியாக ஆனார். தன்னால் தேர்வு செய்யப்பட்ட ராணுவத் தளபதி ஜெனரல் அயூப் கானால் 1958இல் மீர்ஸா பதவிநீக்கம் செய்யப்பட்டார். ராணுவ ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 1958இல் வழக்கு நடந்தபோது வழக்கைத் தள்ளுபடி செய்ய மீண்டும் “தேவை” கோட்பாடு பயன்படுத்தப்பட்டது. சட்டரீதியான விளக்கமே “தேவையை” ராணுவச் சட்டத்தின் அன்னையாக ஆக்கிவிட்டது.
சமீப காலங்களில் தில்லியின் துணைநிலை ஆளுநர்களாக இருந்த நஜீப் ஜங், அனில் பைஜால் இருவருமே கவர்னர் ஜெனரலைப் போல் இயங்க முற்பட்டதாகத் தெரிகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அரசு அதிகாரி அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசைக் கிட்டத்தட்ட அனைத்து நிர்வாக விஷயங்களிலும் அவர்கள் அடக்கி வைத்திருந்தனர். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 239AAஇல் கூறியுள்ளபடி, “துணைநிலை ஆளுநருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் ஏதாவது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், துணைநிலை ஆளுநர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி அவர் எடுக்கும் முடிவோடு ஒத்துப்போவார்; அத்தகைய முடிவு வரும்வரை உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் அவர் நினைக்கும் விஷயங்களில் தான் தேவை என நினைக்கும் நடவடிக்கையை எடுக்கலாம் அல்லது அது தொடர்பாக அரசுக்கு அறிவுரை வழங்கலாம்” என்பதையே அவர்கள் பெரும்பாலும் சார்ந்து இயங்கினர்.
நீதிமன்றம் வைத்த முற்றுப்புள்ளி
அனைத்து நிர்வாக விஷயங்களிலும் தான் சொல்வதே சரி என்பதுபோலவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அறிவுரையைக் கேட்கத் தேவை இல்லை என்பதுபோலவும் துணைநிலை ஆளுநர் செயல்பட்டார். 20 மில்லியன் மக்களை ஆளும் அரசு தான் விரும்பினால் மட்டுமே ஆட்சி நடத்தலாம் என்பது போல் இருந்தது அவரது அணுகுமுறை. தில்லி அரசு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கடந்த வாரத் தீர்ப்பானது இத்தகைய அரசியலமைப்பு ரீதியான ‘ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு’ ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது. அரசியல், அரசியலமைப்பு தொடர்பான காரசாரமான விவாதங்களை முடித்து வைத்த அத்தீர்ப்பு ஜனநாயக முறையில் நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உறுதிசெய்தது. எதிராளியாகச் செயல்படும் மத்திய அரசின் துணையோடு அரசியலமைப்பின் சந்துகளினூடே ‘சிந்துபாடி’ அதிகாரத்தைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்தின் பல்லைப் பிடுங்கிவிட்டது இந்தத் தீர்ப்பு.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பு இப்படிச் சொல்கிறது: “சர்வாதிகாரமாகவும், அராஜகமாகவும் நடந்துகொள்ள (சட்டத்தில்) இடமில்லை. நாடாளுமன்ற ரீதியான நமது அரசு அமைச்சரவையின் ஒட்டுமொத்தப் பொறுப்பு என்ற கோட்பாடால் நிர்வகிக்கப்படுகிறது. அமைச்சகங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் சட்டமன்றத்தில் விளக்கும் பொறுப்பு அமைச்சரவைக்கு இருக்கிறது; அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு அதன் அமைச்சரே முழுப் பொறுப்பேற்க வேண்டும்… ’உதவி மற்றும் ஆலோசனை’யின் பின்புலத்தில் ஒட்டுமொத்தப் பொறுப்பேற்கும் கோட்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அமைச்சரவை நன்கு ஆராய்ந்து எடுத்த சட்டரீதியான முடிவுக்கு, மாறுபட வேண்டும் என்பதற்காகவே துணைநிலை ஆளுநர் சம்மதம் தராவிட்டால், கூட்டுப் பொறுப்பேற்கும் கோட்பாடு முற்றிலும் அடிபட்டுவிடும்.”
இதுபற்றி மேலும் கூறும் நீதிபதி சந்திரசூட், “அமைச்சரவை வடிவ அரசில், முடிவெடுக்கும் முக்கிய அதிகாரம் முதலமைச்சர் தலைமை வகிக்கும் அமைச்சரவையிடம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 239AA(4)இன் ‘உதவி மற்றும் ஆலோசனை’ பகுதி இக்கோட்பாடை அங்கீகரிக்கிறது. அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி துணைநிலை ஆளுநர் செயல்படும்போது, ஜனநாயக அரசில் உண்மையான முடிவெடுக்கும் அதிகாரம் அதிகாரிகளிடம்தான் இருக்கிறது என்பதை இது அங்கீகரிக்கிறது. துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவரின் கருத்துக்குச் சில விஷயங்களை அனுப்புகையில் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் முடிவை அவர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” என்கிறார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு தீர்ப்புகளுடனும் தான் ஒத்துப்போவதாகத் தெரிவித்த நீதிபதி அசோக் பூஷண், “அனைத்துத் தீர்மானங்கள், கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை துணைநிலை ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். தில்லி நிர்வாகம் பற்றி அவருக்குத் தெரிய வேண்டுமென்பதே முடிவுகள் பற்றித் தெரியப்படுத்துவதன் நோக்கமாகும். முடிவுகள் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டால்தான் வரைவுகள், முடிவுகளை ஆய்ந்து 1991 சட்டப்படியும் 1993 விதிப்படியும் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரால் செயல்பட முடியும்; தெரிவிப்பதன் நோக்கம் சம்மதம் பெறுவது மட்டுமல்ல……” என்கிறார்.
ஐந்தாண்டு ஆட்சியின் 3½ ஆண்டுகள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உருவாக்கிய அரசியல் சட்ட மோதல்களில் போய்விட்டன. நிர்வாகத்தைத் தவிர இங்கு பாதிக்கப்படுவது பாரபட்சமின்றி, அரசியல் கலக்காமல் செயல்பட வேண்டிய அதிகாரிகளின் புகழும்தான். அரசியல் சண்டையில் தாம் எந்தப் பக்கம் எனக் காட்டிய அரசு அதிகாரிகள் நீதிமன்றத்திலும் மக்கள் தரும் மரியாதையிலும் தோற்றுவிட்டனர். அரசியல் ரீதியான நெருக்குதலுக்கு நிர்வாக முடக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நல்லது நடந்திருக்கிறது!
பாகிஸ்தான் பற்றிய கதையுடன் இறுதியாக இதை முடித்துக்கொள்வோம். 1958இல் நிலவிய அரசியல் குழப்பத்தைச் சரிசெய்ய ராணுவ ஆட்சியை அமல்படுத்தி ராணுவத்தின் உதவியை நாடினார் ஜனாதிபதி. ‘ராணுவ ஆட்சி’ (ஆங்கிலத்தில் மார்ஷியல் லா) என்ற சொற்றொடரை “பாகிஸ்தானில் இப்போது மாஷால்லா (நல்லது) நடந்துவிட்டது,” என மக்களில் சிலர் வேடிக்கையாகக் கூறினர். இந்திய நீதிமன்றங்கள் “தேவை” கோட்பாட்டை நாடிச் செல்ல வேண்டிய அவசியமற்ற நிலை நிலவுவது இந்திய நாட்டின் அதிருஷ்டமே. நமது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இம்முறை தோற்றிருக்கலாம், ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் பெரும் பிரச்சினை தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், நமது அரைகுறை கூட்டாட்சி ஒன்றிய அரசியலானது ஜனநாயகத் தன்மை கொண்டதாகவே நீடிக்கவும் பிரார்த்திப்போம்!
நன்றி: தி இந்து (https://www.thehindu.com/opinion/lead/the-democratic-mandate-in-delhi/article24366926.ece)
சஞ்சய் ஹெக்டே
தமிழில்: சுப்ரபாலா
Arun Jaitley said the very next day that the judgement is not binding on the Lt. Governor and its Status Quo… Also the judgement has a funny comment that “Not all trivial issues should go to the President” without telling what is a Trivial Issue… Bjp will keep irritating Kejriwal and he will left with the only option to approach SC and by the time the next judgement comes Delhi will get into election mode…
Great Indian Democracy…