மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் நிலையில், பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் நீட்டை தவிர்க்க முடியாது என்றுணர்ந்த மாணவர்கள் அதற்கு தங்களை தயார் படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சில ஆங்கில ஊடகங்கள் நீட்டில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியா டுடே பத்திரிகை நடத்திய “ஆபரேஷன் விட்டமின் சி” என்ற ஸ்டிங் ஆபரேஷனில், தனியார் மருத்துவக்கல்லூரி நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு, இடங்களை ப்ரீ புக்கிங் முறையில் 15 லட்சம் முதல் விற்கப்படுவதை கண்டறிந்தது. கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாத சீட்டுகளை கல்லூரிகள் மானேஜ்மேன்ட் கோட்டா மூலம் நிரப்பிக்கொள்ளுவது வாடிக்கை ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் திட்டமிட்டு கவுன்சிலிங்கில் நிரப்படப்படாமல் அதை முன்கூட்டியே விற்கப்படுகிறது இணைப்பு
நீட்டிற்கு ஆதரவு தெரிவித்த பெரும்பாலானோர் சொன்ன காரணம், நீட் தேர்வு வந்த பின் நன்கொடை வாங்கிக்கொண்டு நடக்கும் ஆள்சேர்ப்பு குறையும் அதனால் ஏழை மாணவர்களும் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடியும் என்பதே, அதை பொய் ஆக்கும் நிலையில் மேற்சொன்ன சம்பவம் நடந்திருக்கிறது.
கல்லூரிப் படிப்பு வணிகமாகி விட்ட நிலையில் இத்தகைய கல்லூரிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதற்காகவே புரோக்கர்களை நாடு முழுவதும் இயக்கி வருகிறார்கள், சில கல்லூரிகளில் மாணவர்களே புரோக்கர் வேலை செய்து சம்பாதித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கமிஷன் காசை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலைசெய்யப்பட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொழிலில் நேரம் குறைவு. போட்டியோ அதிகம். லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருக்கும் வசதியான மாணவரை அடையாளம் காண்பது அவ்வளவு எளிது அல்ல. மிகப்பெரிய தொடர்பு வட்டம் வைத்திருக்கும் ஒரு சில ப்ரோக்கர்களால் மட்டுமே இதில் பெருமளவு சம்பாதிக்க இயலும்.
முன்பு எல்லாம் ஸ்கூல் , டியூஷன், எண்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங் சென்டர் ஆகிய இடங்களில் இருந்து மாணவர் பட்டியல் வாங்கி அவர்களில் யார் தேறுவார்கள் மாட்டார்கள் என கண்டறிந்து, தேர்வு முடிந்த பின் அவர்களின் மதிப்பெண்ணை அறிந்து தொடர்பு ஏற்படுத்தி இடம் வாங்கி கொடுப்பார்கள். ஒரு புரோக்கர் அதிகபட்சமாக வருடத்திற்கு 10 இடங்கள் நிரப்புவதே சிரமம்.
நீட் அமலாக்கத்துக்கு முன்னால், எனக்கு தெரிந்த சில ப்ரோக்கர்கள், அடுத்த ஆண்டு மருத்துவ சீட்டுகளுக்கு ஆள் பிடிக்கும் பணியை முதலாண்டு அக்டோபர் மாதமே தொடங்கி விடுவார்கள். வெளிப்படையாகவே, தெரிந்தவர்களின் பிள்ளைகள் ப்ளஸ் டூ படிக்கின்றனரா, எந்த கல்லூரியில் சீட் வேண்டும் என்பதை விசாரித்தறிந்து சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களை அணுகுவார்கள்.
நீட் தேர்வு செயலாக்கத்துக்கு வந்த பிறகு, இதில் நிறைய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. ஆனாலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், கோடிக் கோடியாக அள்ளித் தரும் இந்த சீட் விற்பனையை விடுவதற்கு தயாராக இல்லை.
இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வணிகப்பொருள் டேட்டா, ஒரு நபரின் தேவையை கச்சிதமாக அறிந்து அதை அவரிடம் நாமாகவே கொண்டு சேர்த்தால் அதற்கான மதிப்பும் அதிகம், நேர விரயமும் குறைவு. இதை தான் கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா முதன் முதலாக facebook டேட்டாவை திருடி, தங்கள் வியாபாரத்தை விஸ்தீரணம் செய்தது.
இது போக, ஆதார் டேட்டா திருட்டு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் டேட்டாக்களை விலை கொடுத்து வாங்கி, பல நிறுவனங்கள் பயன்படுத்துவதையும், அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதையும் நாம் கண்டு வருகிறோம்.
இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர், ஈமெயில் முகவரி, தொலைபேசி எண், நீட் மதிப்பெண் ஆகிய தகவல்களை இணையத்தில் விற்கப் படுகிறது என்ற தகவலை wire இணையதளம் வெளியிட்டிருந்தது.
தகவல்களை வெளியிட்ட இணையத்தளம் பற்றிய விபரத்தை wire வெளியிட வில்லை. சிறிய முயற்சியால் அந்த தளம் http://neetdata.com என்பது தெரியவருகிறது, அந்த தளம் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்தத்தளத்தை சென்னையை சேர்ந்த ஸ்ரீ ஆதித்தியா டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோடம்பாக்கம் எம்எல்எம் திருமண மாளிகை வளாகத்தில், முதல் தளத்தில் இருந்து செயல்படுவதாக கூறும், ஆதித்யா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்தான் neetdata.com இணையதளம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிறுவனத்தை பற்றிய தகவல்கள் மற்றும் பதிவு என் பொது வெளியில் கிடைக்கவில்லை. praveenatluri@yahoo.co.in என்ற முகவரி தான் நமக்கு இருக்கும் ஒரே துப்பு , அதை கொண்டு மேலும் தேடினால் அதே முகவரியில் நாரி டெக்னாலஜி என்ற நிறுவனம் சாலிகிராமத்தில் இயங்கி வருகிறது தெரியவருகிறது
அதன் உரிமையாளர்கள் பிரவீன் சவுத்ரி மற்றும் சுபாஷினி டில்லிபாபு இணைப்பு
நாரி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணையதளமான http://naritechnologies.com/ இப்போது வேலை செய்யவில்லை.
Neetdata.com என்ற இணையதளத்தை பதிவு செய்ய, எந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியிருக்கிறார்களோ, அதை பயன்படுத்தி, மொத்தம் எத்தனை இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பார்த்தால், மொத்தம் 11 இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1) datadesk.in
2) engineeringstudentsdata.com
3) 12thstudentsdata.in
4) allstudentsdatabase.com
5) graduatesstudentsdata.com
6) studentsdatabaseproviders.in
7) jee-data.com
8) mbaapplicantsdata.com
9) plus2database.com
இந்த அனைத்து இணையதளங்களுமே, ஒரே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி, ஆதித்யா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த 12 நிறுவனங்களில் 12thstudentsdata.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பேசியபோது, 50 ஆயிரம் மாணவர்களின் தொலைபேசி எண்ணோடு கூடிய டேட்டாவுக்கு 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்றும், அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எஸ்எம்எஸ் அனுப்ப முடியும் என்றும், என்னோடு பேசியவர் தெரிவித்தார். இணைப்பு
மேலும் விபரங்களை கேட்போது, அவர் அனுப்பும் மின்னஞ்சல் முகவரிக்கு, அலுவல் ரீதியாக டேட்டாக்களை கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் மேல் விபரங்களை அனுப்புவதாக தெரிவித்தார்.
இதுபோல இன்ஜினியரிங் கல்லுரியில் படிக்கும் மாணவர்கள் விபரங்கள் அடங்கிய தகவல்களை http://engineeringstudentsdata.com என்ற இணையதளம் மூலம் விற்று வருகின்றனர்
whois டொமைன் செர்ச்சில் அந்த நிறுவனத்தின் பெயர் வரவில்லை ஆனால் அந்த தளத்தில் காண்டாக்ட் அஸ் பேஜில் உள்ள தொடர்பு எண்ணும் 12th ஸ்டுடென்ட்ஸ் டேட்டாவில் கொடுக்க பட்ட எண்ணும் ஒரே எண் அதனால் இரண்டு இணையமும் ஒருவருடையதாகத்தான் தான் இருக்க வேண்டும்
JEE தேர்வு எழுதிய மாணவர்கள் விபரத்தை http://jee-data.com என்ற இணையத்தளத்தில் பதிவேற்றி உள்ளனர், அதில் உள்ள தொடர்பு எண்ணும் மேல் சொன்ன தொடர்பு எண்ணும் ஒன்று
MBA, BBA மாணவர்கள் டேட்டா தனியாக இணையதளத்தில் பதிவேற்றி உள்ளனர்
இதே போன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நீட் உயர் கல்விக்கான தேர்வில் நடந்தது, ஒரு ஏஜென்ட் நீட் தேர்வு எழுதிய மாணவியை தொடர்பு கொண்டு அவருக்கு மருத்துவக்கல்லுரியில் இடம் வாங்கிக்கொடுப்பதாக கூறியிருக்கிறார் மேலும் அந்த பெண்ணின் பிறந்த தேதி, ஆதார் எண் என அனைத்தையும் சரியாக கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து அந்த பெண் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார், நீதிபதி போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் இணைப்பு
இப்படி மாணவர்களின் தனிநபர் விபரங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் திரட்டி ஒரு வியாபார நோக்கத்திற்கு விற்பது எவ்வளவு பெரிய குற்றம்? இவர்களுக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைக்கிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை.
தனிநபர் பாதுகாப்பு சட்டம் இல்லாத நம் நாட்டில் தொடர்ந்து இது போன்ற தகவல்கள் தெரிந்தும் தெரியாமலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது அதிர்ச்சியளிக்கிறது
இது குறித்து, சைபர் க்ரைமில் நீண்ட அனுபவம் உள்ள ஒரு மூத்த அதிகாரியிடம் பேசியபோது, “இவர்கள் விற்பனை செய்யும் இந்த டேட்டாவை, எங்கிருந்து எடுத்துள்ளனர் என்பதை வைத்தே, இவர்கள் சட்டத்தை மீறியுள்ளார்களா இல்லையா என்பதை கூற முடியும்.
தற்போது பல பொறியியல் மற்றும், துணை மருத்துவ கல்லூரிகள் (செவிலியர், உயிரியல் தொழில்நுட்பம், போன்றவை) இதர கல்லூரிகளுக்கு, மாணவர்களை அணுகி, அவர்களை தங்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும். முழுமையான சேர்க்கை நடைபெற்றால்தான், கல்லூரியை நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாணவர்களை அணுக இந்த டேட்டா தேவையாக இருக்கிறது.
மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள கீழ் நிலை ஊழியர்களிடம், ஆயிரமோ இரண்டாயிரமோ அளித்து, மாணவர்களின் டேட்டாக்கள் அடங்கிய சிடிக்களை பெற்று வருகிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
அப்படி மாவட்டந்தோறும் பெற்று கூட இவர்கள் அதை மொத்தமாக தொகுத்து விற்கலாம். அப்படி இருந்தால் கூட, இது சட்டவிரோதம்தான். ஏனெனில் அது கல்வித் துறைக்கு சொந்தமாக உள்ள டேட்டா.
மாணவர்கள், தேர்வுக்காகத்தான் தங்கள் தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்கிறார்கள். யாரோ ஒரு தனியார் அதை எடுத்து விற்பனை செய்ய அல்ல.” என்றார்.
இப்படி மாணவர்களின் தனிநபர் விபரங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் திரட்டி ஒரு வியாபார நோக்கத்திற்கு விற்பது எவ்வளவு பெரிய குற்றம்? இவர்களுக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைக்கிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை.
இந்த கட்டுரை எழுதும் இந்தக் கணம் வரை, ப்ளஸ் டூ மாணவர்கள், நீட் எழுதிய மாணவர்கள், ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் என, மாணவர்களின் டேட்டாக்கள் சராசரியாக 2 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு தயாராக இருக்கிறது.
சொந்த மக்களின் விவசாய நிலங்களை பிடுங்கி,
கார்ப்பரேட்டுக்களுக்கு விற்பனை செய்ய முயலும் ஒரு அரசு.
அதை எதிர்த்துக் கேட்போரை சிறையில் தள்ளும் ஒரு அரசு.
அதை எதிர்த்து எழுதும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் ஒரு அரசு.
இந்த அரசிடம் மாணவர்களின் டேட்டா திருட்டு பற்றி பேசுவது நியாயமில்லைதான்.
ஆனாலும், இதை பொது வெளியில் அம்பலப்படுத்துவது நமது கடமையல்லவா ?
Congrats savukku team for their excellent homework
இது பலவருடங்களாக தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது! மாணவர்களின் தகவல்கள் பெறுவதற்கு என்று வேலையாட்களை இதுபோன்ற டேட்டா விற்பனை நிறுவனகள் வைத்துள்ளன..
LAST MONTH ONE PERSON FROM CHENNAI TOLD ME MY SONS DETAIL WITH NEET MARK EXACTLY AND ASKED FOR MBBS STUDY OPPOTUNITY IN RUSSIA,PHILIPINES ETC.SO THEY ALSO INVOLVED IN THIS IRREGULARITY
நாதாரி பயபுள்ளைக இப்படியும் திருடுறானுக 😳 😳அடிமைகள் இதை அனுமதிக்கும் போல