‘நீதியின் பார்வை’ என்ற தலைப்பில் மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு நிகழ்வில் நீதிபதி ரஞ்சன் கொகோய் ஆற்றிய உரையின் சுருக்கம்.
“உரையாற்ற அழைத்த எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு என் நன்றிகள். ராம்நாத் கோயங்கா ஜீ அவர்களை நான் பார்த்ததே இல்லை என்றாலும் அவரது மரபுவழி வந்த எழுத்துக்களால் ஆக்கபூர்வமாக பாதிக்கப்பட்டுள்ளேன். நமது சொந்த செய்தித்தாளை தொடங்கும்படி கேட்டுக்கொண்ட காந்திஜியின் அறைகூவலுக்கு பதில்தரும் விதமாக அவர் இப்பத்திரிகையைத் தொடங்கினார். ஆங்கிலேயருக்கெதிராக பத்திரிகை நடத்தும் திண்ணம் அவரிடமிருந்தது. ஊடகச் சுதந்திரம் இன்று தழைத்தோங்க அவசரநிலைக் காலத்தின்போதும் அதன் பின்னரும் அவர் ஆற்றிய பங்கு அபரிமிதமானதாகும். இன்று அவரை அதனால்தான் ‘பத்திரிகையுலக மாவீரர்’ என்றெல்லாம் கொண்டாடுகிறோம்.
”தன் கொள்கையில் அத்தீவிரமாக இருந்த அவர் சிலசமயம் மாறுபட்ட கருத்தையும் பயமின்றியும் உறுதியாகவும் சொன்னார். தர்பங்கா, சென்னை முதல் மும்பை வரை, அரசியலமைப்புச் சட்ட ஆக்கம் முதல் நீதிமன்றங்கள் வரையான அவரது பயணமே நமக்குப் பெரும் உந்துதலாக அமையக்கூடியது. ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நாலு எனச் சொல்ல இருக்கும் சுதந்திரம்தான் நிஜமான சுதந்திரம். அது இருந்தால், மற்றவை தானாகவே வரும்,” என்ற கருத்து இப்போது நினைவுக்கு வருகிறது. இதற்காகத்தான் கோயங்காஜீ அரும்பாடுபட்டார்.
“பயமின்றி, நினைத்ததை நினைத்தவாறே அவர் கூறினார்; அதற்கான விலையைக் கொடுக்கவும் அவர் தயங்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்மே நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்: கோயங்கா நம்மில் இருக்கிறாரா, அவரது கொள்கைகள், கருத்துகளை நாம் நினைவில் வைத்திருக்கிறோமா? சில கேள்விகள் வலியூட்டுபவையாக இருந்தாலும் இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். அரசியலமைப்புச் சட்ட விதிகளை உருவாக்கவும் அர்த்தமுள்ள ஜனநாயகம் நாட்டில் தழைக்கவும் அரும்பாடு பட்டவரை மறக்கலாமா?
“பிரதான ஆசிரியர் திரு ராஜ்கமல் ஜா அவர்கள் கூறியதைப் போல, ‘நீதியின் பார்வை’ பற்றிச் சொல்ல வேண்டியவை பல உள்ளன. கோயங்காவின் பயமற்ற சுதந்திரமான உணர்வும் பாரபட்சமின்றி புலனாயும் திறனும்தான் நீதியின் அடித்தளமாக இருந்தன. அப்படியானால் நீதியின் உடல்/வடிவம் என்னவாக இருக்க முடியும்? சமீபத்தில் நீதித்துறை பற்றி பேசப்படுவதுபோல் முன்பு எப்போதும் பேசப்பட்டதில்லை. அமெரிக்காவின் ‘தந்தை’யான ஹாமில்டன் சொன்னது போல ‘அரசின் 3 பிரிவுகளில் அபாயக்குறைவான பிரிவு நீதித்துறை’ என்பது இப்போது பொருந்துமா? ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆய்வில் உலகில் வலிமையான முதல் 100 நபர்களில் நீதித்துறையைச் சார்ந்தவர்களும் இருக்கின்றனரே!
அரசியலமைப்புச் சட்டம் இயற்றியது முதல் இன்று வரை (நீதித்துறை) பயணத்தை நாம் உற்றுநோக்கி நம்மை நாமே சீர்செய்துகொள்ள இதுவே மிகப் பொருத்தமான தருணமாகும். நீதியின் அடித்தளம், உருவம்/கட்டமைப்பு இரண்டையும் மதிப்பீடு செய்தாக வேண்டுமென்றே நான் கருதுகிறேன்.
ரத்தம் தோய்ந்த பிரிவினையின்போது (1947) சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுடன் நீதித்துறை சீர்திருத்தமும் பெருமளவு உணரப்பட்டது; போனது போகட்டும், இனிவரும் சமுதாயம் சமத்துவத்தை – ஜனநாயக ஒற்றுமையுடன் கலந்த சமத்துவம் – வலியுறுத்தும் என்பதே பலரது கனவாக இருந்தது. மதசார்பற்ற அரசாங்கத்தில் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். நீதித்துறையை சீரமைக்க – அது மக்கள் சுலமபாக அணுகும்படியாக இருக்குமாறு – அவசரத்தேவை இருந்தது. இது பல கோட்பாடுகளின் சங்கமமாகும்: அரிஸ்டாட்டிலின் கோட்பாடு, ஜான் ஸ்டூவர்ட் மில்லின் தத்துவம், ரால்சின் சமத்துவக் கோட்பாடு ஆகியவை இதில் அடங்கியுள்ளன. அரசியலமைப்புச் சட்ட முன்னுரையில் இவ்வனைத்தும் இடம்பெற்றுள்ளன: நீதி என்பது சோஷலிசம், ஜனநாயகம், சுதந்திரம், சமநிலை ஆகியவற்றின் சங்கமமே தவிர தனிக்கருத்து அல்ல. இதை நிலைநிறுத்த வேண்டிய கடமை சட்டமன்றம், அதிகாரவர்க்கம் மற்றும் நீதித்துறையினருடையது.
சட்டமன்றம், அதிகாரவர்க்கம் ஆகியவை இதில் ஆற்றியுள்ள கடமையைப் பற்றிப் பார்க்காமல் நீதித்துறையின் பொறுப்பைப் பற்றி மட்டும் இங்குப் பேசப் போகிறேன். சிலநாட்களுக்கு முன்பு நான் சொன்னதுபோல் அரசியலமைப்புச் சட்ட ஆதாயத்தை அனைவருக்கும் வழங்குவது என்பது வானவில்லைத் துரத்துவது போல கடினமான வேலையல்ல; இது நீதிமன்றங்களில் செய்யப்பட வேண்டிய கடமையாகும். தீர்ப்பின் வாயிலாக நீதிமன்றங்களில் கூறப்படுவற்றால்தான் நாடு என்னும் கட்டமைப்பு உருவாகிறது. அரசியலமைப்பின் விருப்பக் காரணியும் செயல்பாட்டுக் காரணியும் எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். விருப்பக் காரணி போதனை செய்வது போலும் செயல்பாட்டுக் காரணி கிட்டத்தட்ட தோல்வியுறுவது போலும் இருக்கும். இரண்டுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்க நம்மாலானதைச் செய்யலாம்.
ஷ்ரேயா சிங்கால் வழக்கில் 2015ஆம் ஆண்டுத் தீர்ப்பை எடுத்துக் கொள்ளலாம். பிரிவு 66Aஇல் மக்களது தெரிந்து கொள்ளும் உரிமை நேரடியாகப் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது. இதுவும் வேறுசில முந்தைய தீர்ப்புகளும் சராசரி இந்தியனின் பேசும் உரிமையை ஊடக உரிமைகளின் பின்னணியில் எடுத்துக் காட்டின: தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதையும் கட்டுப்பாடுகள் ஜனநாயக விரோதமானவை என்றும் அவை விளக்கின. ஆக, ‘நீதியின் பார்வை’ நீதிமன்ற வளாகத்தில்தான் அடையப்பபட்டது: ஒருமுறை, இருமுறையல்ல, பலமுறைகள். ஆனால் இது நிஜவடிவம் பெற்றுள்ளதா? இத்தீர்ப்புகளின் பெரும் வெற்றி அடிமட்டம்வரை சென்றுள்ளதா? இருக்கும் உண்மைகளே இதற்குப் பதில். உண்மையாகப் பார்த்தால் பெருங்குழப்பமே நிலவுகிறது. செய்தி தருபவர் மீது வழக்குப் போடுகிறீர்கள், அவரைக் கொல்கிறீர்கள் (அ) பயத்தின் காரணமாக அவராலும் சரியாக/நடுநிலையாகச் செய்தி தரமுடிவதில்லை.
ஜூன் 19 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸில்’ ஜனநாயகம் எவ்வாறு இறக்கிறது என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் “சுதந்திரமான நீதிபதிகளும் உரக்கப் பேசும் பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தின் முதல்நிலைப் பாதுகாவலர்கள். ஜனநாயகச் சாவு பற்றிய அறிக்கைகள் அதீதமானவைதான்; ஆனால், அரசு இயங்கும் முறை மோசமாகவுள்ளதால் அதற்குத்தான் ஆதரவு தேவைப்படுகிறது” என்றிருந்தது. சுதந்திரமான நீதிபதிகளும் உரக்கப்பேசும் பத்திரிகையாளர்களும் என்பதற்குப் பதில் சுதந்திரமான பத்திரிகையாளர்களும் உரக்கப்பேசும் நீதிபதிகளும் இதைச் செய்யலாம். 1986இல் பிஜூ எம்மானுவேல் வழக்கில் ஜெஹோவாவின் 3 சாட்சிகள் பள்ளியில் பிறர் பாடும் தேசிய கீதத்தைத் தாம் பாட மறுத்தனர். அவர்கள் மூவரும் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்பது வேறு விஷயம். உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது பள்ளியை விட்டு வெளியேற்றுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் மிகக் குறைந்த அளவில் உள்ளோரும் மனமுவந்து தமது அடையாளத்தைப் பார்க்க முடியும் சாத்தியக்கூறுதான் ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என தீர்ப்பளிக்கப்பட்டது. “நாம் எப்பவுமே சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள், அரசியலமைப்புச் சட்டமும் அதையே சொல்வதால் அது நீர்த்துப்போக நாம் விடவே கூடாது,” என்றது அத்தீர்ப்பு.
நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றத் தலையீடு இருப்பது சரியா, தவறா என உங்களில் பலர் யோசிக்கலாம். தீர்ப்புகளின் சாரம் என்னவெனில் தார்மீக நெறிமுறை குறந்துவிட்டது, அரசியலமைப்பு நெறிமுறை அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதே. அரசியலமைப்புச் சட்டசபையில் தனது கடைசி உரையில் நாம் அரசியல் ஜனநாயக நாடாக மட்டுமின்றி சமூக ஜனநாயக நாடாகவும் இருக்கவேண்டுமென்று அம்பேத்கர் கூறினார். அவரது வரைமுறையில் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வாழ்க்கை முறையாக சமூக ஜனநாயகம் இருக்க வேண்டும். நம்நாடு வெற்றிகரமான அரசியல் ஜனநாயகமா என்ற கேள்விக்கு நான் வரவில்லை; ஆனால், பல விதங்களில் நம்நாடு சமூக ஜனநாயகமாக இருப்பதாக நான் நிஜமாக நம்புகிறேன். புதிய இந்தியாவும் வறுமைக் கோட்டின் கீழ் உழலும் இந்தியாவும் நம்மெதிரே உள்ளன. பிற்சொன்ன இந்தியாவுக்கு கல்வி/சுகாதாரநலம் அல்லது நீதிமன்றங்கள் எளிதில் கிட்டுவதில்லை. எனவே, ‘நீதியின் பார்வை’ இலக்கை நாம் எவ்வளது தூரம்வரை அடந்துள்ளோம் என்பது அவரவர் பார்வையைப் பொருத்ததாகும்.
சுதந்திரமடைந்த முதல் 50 ஆண்டுகளில் அமைந்த வலுவான நீதிமன்றக் கட்டமைப்பின் ஆதாயத்தை நாம் இன்றுவரை அனுபவித்துவருகிறோம். அதுவே நம்மை உந்துகிறது. ஆனால் இன்றைய நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அதிக காலம் பிடிக்கின்றன. இதை ஒட்டுமொத்த தோல்வி என நான் சொல்ல மாட்டேன்; ஆனால், சட்டத்தை மதிக்கும் நம் நாட்டில் இப்படியான நிலை இருக்கக்கூடாது. இதற்கும் பல்வேறு சவால்களைச் சமாளிக்கவும் நீதித்துறையைப் பொதுமக்களுக்கானதாக ஆக்கவும் நீதித்துறைப் புரட்சி தேவையே தவிர சீர்திருத்தம் அல்ல. நீதித்துறையை முடிவு சார்ந்த நிலையமாக ஆக்கினால்தான் அதன் தீர்ப்புகள் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். நீதித்துறை இன்னமும் தீவிரமாகச் செயல்பட வேண்டுமென்பதே என் கருத்து. விதிகளை அமல்படுத்திக் கட்டளைகள் பிறப்பிப்பதைத் தவிர அரசியலமிப்பு தார்மிகத்தையும் அது வெளிப்படுத்த வேண்டும். விதிகளை விளக்குவதில் அனைத்து மட்டங்களிலும் இன்னும் உத்வேகம் தேவை. சவால்கள் நிறைந்த நீதித்துறையில் இதை அமல்படுத்துவது மிகக் கடினமான ஒரு விஷயமே.
இன்றைய நீதித்துறையின் நிலை இதுதான்: அது தன் கருவிகள் சரியில்லை எனப் புலம்பும் தொழிலாளி அல்ல; கருவியே இல்லாத ஒரு தொழிலாளி. வழக்காடுவதில் செலவாகும் நேரம், நீதிபதிகளின் செயல்திறன் பற்றிய புள்ளிவிவரங்களை நான் இப்போது தரப்போவதில்லை. புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் முன்பு சொன்னதைப் போல் “சொல்ல வேண்டியவை எல்லாமே முன்னரே சொல்லப்பட்டுவிட்டன; யாரும் அதைக் கவனிக்காததால், நாம் திரும்பவும் அதைச் சொல்ல வேண்டும்.” நாட்டில் நிலவும் சட்டசேவைக் கட்டமைப்புகளை ஆராய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நான் கருதுகிறேன்.
சட்டம் பற்றிய விழிப்புணர்வு, சட்ட அதிகாரம் ஆகியவை ஒடுக்கப்பட்ட பிரிவினரைச் சென்றடையச் செய்யவேண்டும். அந்தரங்கச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை சிறையில் இருப்பவர்களில் 67% பேர் விசாரணைக்கைதிகள்; அவர்களில் ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகம் (அதிலும் 18-30 வயதுள்ளவர்கள்). இதை 7% உள்ள இங்கிலாந்துடன் அல்லது 22.7% உள்ள அமெரிக்காவுடன் ஒப்பிடவும். பெரும்பாலானவர்கள் ஓராண்டு வரை காவலில் வைக்கப்படுவது இதில் மிகப்பெரும் குறைபாடாகும்; இவர்கள் செய்ததெல்லாம் சிறு அல்லது அதற்கும் குறைவான தவறுகள்/சட்ட மீறல்களே.
எனவேதான் தீவிர சுதந்திரமே நீதித்துறையின் அடிப்படையான கோட்பாடு என கோயங்கா கூறியிருப்பாரென நினைக்கிறேன். பலருக்கு நீதித்துறையே இறுதி நம்பிக்கையாக இருக்கிறது: என்ன ஆனாலும் அவர்களுக்கு நீதி தரப்பட வேண்டும். தன்னிடமுள்ள அனைத்தையும் வைத்துச் செயல்படும் நீதித்துறை அரசியலமைப்புச் சட்ட பார்வையை விழிப்புடன் பாதுகாத்து வருகிறது. சமூதாயம் இதை நம்புகிறது; இத்துறையில் நானும் ஒருவனாக இருப்பது எனக்குப் பெருமை தரும் விஷயமாகும். இதன் நம்பகத்தன்மையே இதன் வலிமையாகும். நமது தார்மீக, நிறுவனநிலைச் சமநிலையைப் பராமரிக்க நாம் விரும்பினால் இத்துறை தூய்மையாக, சுதந்திரமாக, தீவிரமாக எப்போதுமே இருந்தாக வேண்டும்; ஒரு சங்கிலியில் அனைத்துத் துளைகளும் இணைப்புகளும் வலுவாக இருந்தாக வேண்டுமல்லவா? அதுபோலத்தான் இந்த நீதித்துறையும். இங்கிருந்து ஆரம்பித்தாலே நமது சுய பரிசோதனை சுத்தமாக இருக்கும்.
வருங்காலத்தில் நமது தவறிழைக்காத குணம்தான் நம்மைத் தனித்துக் காட்ட வேண்டும். ‘ஒவ்வொரு போதையும் தவறே: அது போதை மருந்தாக இருந்தாலும் சரி, கொள்கைப் பிடிப்பாக இருந்தாலும் சரி’ என்று கார்ல் யூங் கூறியது போல இதுதான் நாம் செய்ய வேண்டியதைச் செய்து முடிக்கச் சரியான சூழலாக இருக்க முடியும்.
நன்றி! ஜெய்ஹிந்த்!!
தமிழில்: சுப்ரபாலா
**