டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் கடந்த வாரம் இது தொடர்பான ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அச்செய்தியில், மத்தியக் குற்றப் பிரிவில் ஊழல் அதிகமாகி விட்டதாகவும் அதனால் கண்ணாயிரத்தின் கட்டுப் பாட்டில் இருந்து கூடுதல் காவல் ஆணையாளர் சஞ்சய் அரோராவின் கட்டுப் பாட்டில் இந்தப் பிரிவு மாற்றப் பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.
இதையடுத்து, செப்டம்பர் 7ந் தேதி நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் செய்தி என்ற போர்வையில் ஒரு கால் பக்க விளம்பரம் கண்ணாயிரம் சார்பாக கொடுக்கப் பட்டிருந்தது.
அந்த விளம்பரத்தில் சஞ்சய் அரோராவிடம் நான்தான் அதிகாரதை பகிர்ந்தளித்தேன் என்று கண்ணாயிரம் கூறுவதாக வந்துள்ளது. அந்த விளம்பரத்தை ஆழமாக பார்த்தால் பல உண்மைகள் புலப்படுகின்றன.
“இந்த மாற்றம் தொடர்பாக எவ்வித அரசு உத்தரவும் கிடையாது. இது எனது சொந்த நிர்வாக ரீதியான முடிவு. மத்தியக் குற்றப் பிரிவை கூடுதலாக ஒரு அதிகாரி மேற்பார்வை செய்தால் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதால் இவ்வாறு செய்துள்ளேன்“ கூடுதல் காவல் ஆணையாளரும் எனது கட்டுப் பாட்டில்தான் பணியாற்றுகிறார் என்று கண்ணாயிரம் பேட்டியளித்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் கண்ணாயிரத்துக்கு, மத்தியக் குற்றப் பரிவு துணை ஆணையாளர் ஸ்ரீதரும் ஒத்து ஊதியுள்ளார். கட்டப் பஞ்சாயத்து நடக்கிறதாமே என்ற புகாருக்கு, ஒரே ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுக் காட்டுங்கள் பார்ப்போம் என்று ஸ்ரீதர் சவால் விடுகிறார்.
இது தொடர்பான உண்மை நிலையென்ன என்று சவுக்கு புலனாய்வில் இறங்கியது. இதில் நமக்கு கிடைத்த தகவல்கள், சவுக்கு வாசகர்களுக்கு உள்ளது உள்ளபடியே வழங்கப் படுகிறது.
மத்தியக் குற்றப் பிரிவு என்பது மிக முக்கிய வழக்குகளை மட்டும் விசாரிக்கும் ஒரு பிரிவாகும். மிக முக்கிய வழக்குகள் என்றால் என்ன ? கோடிகள் தொடர்பான வழக்குகள் தான் முக்கிய வழக்குகள்.
இது போன்ற கோடிகள் புழங்கும் வழக்குகளின் புலனாய்வு எப்படி நடக்கும் தெரியுமா ?
ஒரு உதாரணம் வைத்துக் கொள்வோம். சவுக்கு உங்களுக்கு 5 கோடி ரூபாய் பணம் தர வேண்டும். தராமல் ஏமாற்றி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் ? மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்வீர்கள்.
உங்களுக்கு சவுக்கு கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட வேண்டுமா, அல்லது உங்கள் பணம் திரும்பி வர வேண்டுமா ? அனைவருக்கும் பணம் திரும்பி வர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும்.
நீங்கள் புகார் கொடுத்ததும் சட்டப் படி வழக்கு பதிவு செய்து, சவுக்கை கைது செய்து சிறையில் அடைத்தால் உங்களுக்கு பணம் எப்படி வரும் ?
அதனால் மத்தியக் குற்றப் பிரிவில் என்ன செய்வார்கள் தெரியுமா ? கட்டப் பஞ்சாயத்து. இரவோடு இரவாக, சவுக்கை தூக்கிக் கொண்டு வருவார்கள். வந்ததும் கட்டப் பஞ்சாயத்து தொடங்கும். புகார் கொடுத்த உங்கள் செல்வாக்கைப் பொறுத்து, சவுக்குக்கு மரியாதை கிடைக்கும்.
“என்னடா, அய்யாவையே ஏமாத்தப் பாக்கிறியா ? “ என்று நாலு அறை விழும். பிறகு, சவுக்குக்கு மனைவி குடும்பம் இருந்தால், அவர்கள் அனைவரும் கைது செய்யப் படுவார்கள் என்ற மிரட்டல் விடப் படும். இந்த மிரட்டலிலேயே அஞ்சி பெரும்பாலானோர் தர வேண்டிய ஐந்து கோடியில் 1 கோடியை உடனடியாக தந்து விடுகிறேன், மீதமுள்ள் தொகையை நான்கு தவணையில் தருகிறேன் என்று ஒப்புக் கொள்வார்கள். இந்த ஒப்புகையை அப்படியே எழுதித் தரச் சொல்வார்கள். மத்தியக் குற்றப் பிரிவு அதிகாரிகள் முன்பாகவே முதல் தவணை வழங்கப் பட வேண்டும்.
ஒரு கோடி ரூபாயை வசூல் செய்து தந்தவர்களுக்கு, ஐந்து லட்சமோ, பத்து லட்சமோ தருவதில் புகார் தந்தவருக்கு அப்படி என்ன தயக்கம் இருக்கப் போகிறது ?
இதில் சட்டப் படி வழக்கு பதிவு செய்து, சவுக்கை கைது செய்தால், புகார் கொடுத்தவருக்கு வர வேண்டிய தொகையும் வராது. போலீசாருக்கும் வருமானம் வராது. ஆகையால், வழக்கு பதிவு செய்யாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் தான் அனைவருக்குமே லாபம்.
இது உதாரணத்திற்கு சொன்ன கதை. மத்தியக் குற்றப் பிரிவுக்கு வரக் கூடிய புகார்கள், பல நூறு கோடிகள் தொடர்பானவை. அப்போது எவ்வளவு பணம் புழங்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இதுதான் மத்தியக் குற்றப் பிரிவு. துணை ஆணையர் ஸ்ரீதர் கட்டப் பஞ்சாயத்து செய்த ஒரே ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறச் சொன்னாரல்லவா. இதோ அவருக்கு உதாரணம்.
சென்னையில் கதிரேசன் என்பவர் தன்னை பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொண்டு ரியல் எஸ்டேட் வேலைகளைச் செய்து வருகிறார்.
இந்தக் கதிரேசன் தமிழ் நியூஸ் ஏஜென்சி என்ற ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு முக்கியமான வேலை என்னவென்றால், பத்திரிக்கையாளர் என்ற போர்வையில், முக்கியமான விஐபிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்குச் சென்று, அங்கே தன்னை ஒரு விஐபி போல காண்பித்துக் கொள்வது. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தமிழக அரசின் மக்கள் தொடர்பு அலுவலர். இரண்டாவது மனைவி, தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் நீதித் துறை நடுவராக இருக்கிறார்.
இந்தக் கதிரேசனுக்கு பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் முக்கிய வேலை அரசு வேலை வாங்கித் தருகிறேன், அரசு டெண்டர் எடுத்துத் தருகிறேன் என்று பணம் வசூல் செய்வதுதான். இவ்வாறு பணம் வசூல் செய்வதில் தகராறு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்கு முன், இவர் மீது மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்யப் பட்டது. இந்தக் கதிரேசன் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் பட்டவுடன், இவரது மக்கள் தொடர்பு அதிகாரியான மனைவி, கண்ணாயிரத்தை தொடர்பு கொண்டு பேசியவுடன், தர வேண்டிய தொகையில் பாதியை தந்தவுடன், வழக்கு பதிவு செய்யாமல் கதிரேசன் விடுவிக்கப் பட்டார்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும், அண்டர் செகரட்டரி ஒருவருக்கு, டெப்புடி செகரட்டரி பதவி வாங்கித் தருகிறேன் என்று ஒரு பெரும் தொகை பெற்றுக் கொண்டார். பதவி வாங்கித் தராததால், கோபம் அடைந்த அண்டர் செக்ரட்டரி, மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்கிறார். கதிரேசன் மீண்டும் கைது செய்யப் படுகிறார். ஐந்து மணி நேரம் கட்டப் பஞ்சாயத்து, மத்தியக் குற்றப் பரிவில் நடக்கிறது. பஞ்சாயத்தின் முடிவில், அண்டர் செகரட்டரிக்கு வர வேண்டிய பணத்தை கதிரேசன் தருவதாக எழுதிக் கொடுத்ததும், வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் கதிரேசன் விடுவிக்கப் படுகிறார்.
ஸ்ரீதர் சார். இதுக்கு பேரு கட்டப் பஞ்சாயத்து இல்லாமல் வேறு என்ன ?
இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரப் பதிவுத் துறை தலைவர், ஒரு பெரும் நில மோசடி குறித்து எழுத்து பூர்வமான புகாரை கண்ணாயிரத்துக்கு அனுப்புகிறார். கண்ணாயிரம் அந்தப் புகாரை மத்தியக் குற்றப் பிரிவுக்கு அனுப்புகிறார். சம்பந்தப் பட்ட குற்றவாளி, கூடுதல் துணை ஆணையர் வெங்கட்ராமன் என்பவரால் கைது செய்யப் படுகிறார். இவர் மீதான குற்றம் என்னவென்றால், போலி உயில் தயாரித்து நிலத்தை அபகரித்தார் என்பது. குற்றவாளியிடம் ஒரு பெரும் தொகை பெற்றுக் கொண்டு அவர் கைது செய்யப் படாமல் விடுவிக்கப் படுகிறார். அடுத்த வாரம் மீண்டும் இந்த குற்றவாளி கைது செய்யப் படுகிறார். மீண்டும் இவரிடம் ஒரு பெரும் தொகை பெற்றுக் கொண்டு, உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெரும் படி ஆலோசனையும் வழங்கப்பட்டு, விடுவிக்கப் படுகிறார்.
சம்பந்தப் பட்ட குற்றவாளி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுகிறார். உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலி உயிலை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இதற்குப் பெயர் கட்டப் பஞ்சாயத்து இல்லாமல் வேறு என்ன ?
சஞ்சய் அரோரா மத்தியக் குற்றப் பிரிவை கவனிக்க வேண்டும் என்று கண்ணாயிரம் தான் அரசிடம் கேட்டு வாங்கினேன் என்று ஒரு பெரிய புருடாவை இந்தியன் எக்ஸ்பிரஸ் விளம்பரத்தில் சொல்லியுள்ளார் கண்ணாயிரம்.
2 ஜுலை 2010ல் சஞ்சய் அரோரா, தலைமையகம் மற்றும் குற்றப் பிரிவுக்கான கூடுதல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார். இரண்டரை மாதங்களாக கண்ணாயிரம், மத்தியக் குற்றப் பிரிவின் பொறுப்பை சஞ்சய் அரோராவிடம் ஒப்படைக்காமல் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தாரா ?
சென்னை மாநகரைப் பொறுத்த வரை, ஒவ்வொரு நிர்வாக உத்தரவும், ஆட்சியாளர்களின் கண்ணசைவு இல்லாமல் நடைபெறாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நாஞ்சில் குமரன் மாநகர ஆணையாளராக இருந்த போது, கூடுதல் ஆணையாளராக இருந்த ஜாங்கிட்டிடம் இருந்து மத்தியக் குற்றப் பிரிவை பறித்துக் கொண்டார். ஆட்சியாளர்களிடம் இருந்து கடும் கண்டனம் வந்ததும், மீண்டும் ஜாங்கிட்டிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
நான்தான் சஞ்சய் அரோராவிடம் பொறுப்பை ஒப்படைத்தேன் என்று கண்ணாயிரம் விடும் புருடாவையெல்லாம், லாலி பாப் சாப்பிடும் குழந்தையிடம் போய் சொல்லச் சொல்லுங்கள்.
சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சைபர் க்ரைம் பிரிவைத் தவிர, அத்தனை பிரிவுகளும் ஊழல் மடங்களாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விபச்சாரத் தடுப்பு பிரிவு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு, அங்கே நடக்கும் அட்டூழியங்கள் என்ன என்பதை, சவுக்கே எழுத இயலாத அளவுக்கு அட்டூழியங்கள் நடக்கின்றன.
இதுதான் மத்தியக் குற்றப் பிரிவு. கண்ணாயிரம் அவர்களுக்கு சவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறது. கண்ணாயிரம் சார். கஷ்டப் பட்டு இங்கிலீஷ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்தா விட்டுடுவோம்னு நெனச்சுக்காதீங்க. நீங்க எவ்ளோ விளம்பரம் கொடுத்தாலும் வேஸ்ட். உங்களப் பத்தி எழுத, சவுக்குகிட்ட வண்டி வண்டியா மேட்டர் இருக்கு. அடுத்த விளம்பரம் கொடுத்தீங்கன்னா, அதுக்கு மறுப்பு சவுக்கில் கட்டாயம் வரும். சம்பளம் வாங்குனோமா, வேலையப் பாத்தோமான்னு இல்லாம, உங்களுக்கு எதுக்கு இந்த விளம்பர மோகம் ? இப்படி ஒரு கேவலமான பொழப்பு பொழைக்கறதுக்கு, நாண்டுக்கிட்டு சாகலாம்.