கடந்த காலங்களில் இக்கட்டுரைகளில் நான் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே எழுதிவந்துள்ளேன். வாசகர்களுக்குப் பிடித்த ஒன்றுக்கு மேற்பட்ட விஷயத்தைப் பற்றி இன்று நான் எழுதப்போகிறேன்; நரேந்திர மோடி (தலைமையிலான) அரசின் வெற்று வாய்ச் சவடால்களைத் தோலுரித்துக் காட்ட இவை உதவக்கூடும்.
முதலாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலின் விண்ணைத் தொடும் விலை உயர்வு. மே, 2014இல் பாஜக அரசு பதவியேற்றபோது சர்வதேச மார்க்கெட்டில் கச்சா பெட்ரோலியத்தின் விலை ஒரு பேரலுக்கு 105 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த அரசு பதவியேற்ற பின் பல மாதங்கள் வரை பேரலுக்கு 26-30 டாலர் என விலை குறைவாக இருந்ததால் மோடி அரசு இத்தனை ஆண்டுகளாகப் பெரும் லாபத்தைச் சம்பாதித்து வந்தது. காலப்போக்கில் விலை உயர ஆரம்பித்து இப்போது பேரல் ஒன்றுக்கு 73-76 டாலராக உயர்ந்து விட்டது. இதற்கு முன் விலை உயர ஆரம்பித்தபோது அதன் சுமையானது அரசுக்குள் மூன்று வழிகளில் பிரித்துவிடப்பட்டது; அரசு வரியைக் குறைத்தது. எண்ணெய் நிறுவனங்கள் நிதிச் சுமையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டன. நுகர்வோர் அதிக விலை கொடுத்து பெட்ரோல் / டீசலை வாங்கினர். சர்வதேச எண்ணெய் விலை குறைந்தபோது, அதனால் பெறப்பட்ட ஆதாயங்களும் இதே அடிப்படையில் இந்த மூன்று பயனுரிமையாளர்களிடையே சரிசமமாகப் பகிரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பேராசை கொண்ட இந்த அரசு லாபம் முழுவதையும் தன் வசமே வைத்துக்கொண்டது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தபோதும் பெட்ரோல் / டீசலை மிக அதிக விலையிலேயே தொடர்ந்து வாங்கிவந்தனர்.
இது ஒரு புறமிருக்க, மறு புறம் வரிகளை உயர்த்தி அனைத்து ஆதாயங்களையும் இந்த அரசு தான் மட்டுமே பெற்றுக்கொள்கிறது. விலைவாசி அதிகரிக்கத் தொடங்கியது முதல், நுகர்வோர் அவதிப்படும்படி எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் / டீசலின் விலையை நிர்ணயிக்க அனுமதியும் வழங்கியது. சமீப காலங்களில் ரூபாயின் மதிப்பு தேய்ந்ததற்கு பெட்ரோல் / டீசலின் விலை உயர்வும் ஒரு காரணமாகும்; இதனால் இவற்றின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டன. இப்போதைக்கு அரசு வரிச் சுமையைக் குறைக்காது என மத்திய நிதித் துறைச் செயலரும் அறிவித்துவிட்டார். பெட்ரோல் / டீசலின் விலை ஒவ்வொரு நாளுக்கும் மாற்றி நிர்ணயிக்கப்படுவதால் நுகர்வோர் படும் கஷ்டம் விவரிக்க முடியாதது. அரசின் அணுகுமுறை இவ்விஷயத்தில் ‘தலை விழுந்தால் நான் வெற்றி, பூ விழுந்தால் நீ தோல்வி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் இருக்கிறது.
பலரைக் கதிகலங்க வைத்திருக்கும் இன்னொரு செய்தி கள்ள நோட்டு உலவுவது. ‘பணமதிப்புக் குறைப்பு’ நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டு எதிர்காலத்தில் இருக்காது என பிரதமரே முன்பு கூறியிருந்தார். அரசின் நிதித் துறை உளவுப் பிரிவு அறிக்கையின்படி, 2016-17இல் வங்கிகளில் 7.33 லட்சம் தடவை கள்ள நோட்டு டெபாசிட் செய்யப்பட்டது; இது 2015-16க்கான 4.10 லட்சம் தடவையைவிட மிக அதிகமாகும். கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள் அரசை எப்போதும் முந்தியே செல்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
அதுபோலவே, வங்கி தொடர்பான மோசடிகள் கடந்த ஐந்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துவிட்டன; மோசடி செய்யப்பட்ட பணம் 2013-14இல் ரூ. 10,000 கோடியாக இருந்து 2017-18இல் ரூ. 28,000 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்காண்டுகளில் இம்மாதிரி மோசடி செய்யப்பட்ட பணம் ரூ. 90,000 கோடி ஆகும்.
வேறொரு அறிக்கையின்படி நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் குறைந்துவரும் ஆபரேட்டர்களின் எண்ணிக்கையால் அதிக அளவு வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஒவ்வொரு வட்டத்திலும் சராசரியாக 10 ஆபரேட்டர்கள் இருந்தார்கள். இது தற்போது 6 ஆகக் குறைந்துவிட்டது. வேலைக்கு ஆளெடுக்கும் நிறுவனமான CIEL HRஇன் அறிக்கையின்படி இதனால் 80000 முதல் 90000வரை வேலைகள் இழக்கப்பட்டிருக்கலாம். வேலைவாய்ப்புகள் அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டிருப்பதாக எப்பாடு பட்டாவது நிரூபிக்க Employees Provident Fund Organization (EPFO) என்னும் அமைப்பின் தகவல்களை ஆதாரமாக மத்திய அரசு காட்டுகிறது. அரசின் இத்தகவல்கள் மீது பல பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியதுடன் EPFOவின் தகவல்கள் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களே அல்ல என்றும் கூறியுள்ளனர். இத்தகவல்கள் ஏற்கனவே EPFOவில் பதிவுசெய்து வேலையில் உள்ளவர்கள் பற்றியது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், பச்சைப் பொய்களைச் சொல்வதிலிருந்து அரசை யார் தடுக்க முடியும்?
வேலைவாய்ப்பு விவரங்களை ‘மேம்படுத்த’ நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனக்ரியா தலைமையில் பணிக் குழு ஒன்றை 2017 மே மாதம் அரசு நியமித்தது. EPFO, ESIC & PFRDA ஆகியவை தரும் தகவல் அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாவது பற்றிய தகவல்களைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களை இக்குழு அரசுக்குச் சுட்டிக்காட்டியது. குழுவைப் பொறுத்தவரை இம்மூன்று ஏஜென்சிகள் திரட்டியுள்ள தகவல்களில் ஏதாவது சேர்த்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆகிவிடாது. பணிக் குழுவை முறைப்படுத்தும் வரையறையை அளக்கவே இவ்விவரம் பயன்படலாம். இதை நிரூபிக்க 20 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி வசதியை ஊழியர்களுக்குத் தருமாறு கோரப்பட்டதை அது சுட்டிக்காட்டியுள்ளது. ஆக, ஒரு நிறுவனத்தில் 19 ஊழியர்கள் இருந்தால், அது EPFOவிற்கு வைப்பு நிதி கட்டாது. ஆனல் ஒரு ஊழியர் உபரியாகச் சேர்ந்து ஊழியர் எண்ணிக்கை 20 ஆக ஆகிவிட்டால், அது EPFO-வில் பதிவு செய்து எல்லா ஊழியர்களுக்கும் வைப்பு நிதி கட்டியாக வேண்டும். ஒரே ஒரு ஊழியர் கூடுதலாகச் சேர்ந்தால் முன்பிருந்த 19 ஊழியர்களுக்கும் வைப்புநிதி வசதி கிடைக்கும். இந்நிலையில் இந்த 19 ஊழியர்களைப் புதிதாகப் பணிக்குச் சேர்ந்தவர்களாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அது பெரும் தவறாகும். முன்பெல்லாம் தொழிலாளர் பீரோ தனது காலாண்டு ஆய்வின்படி புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களைத் தந்தது; ஆனால், இதனால் வேலைவாய்ப்பு அதிகமாக உயர்ந்ததாகத் தெரியாததால், இனிமேல் ஆய்வு நடத்த வேண்டாமென பீரோவிடம் சொல்ல அரசு திட்டமிட்டுள்ளது. ஆக, இந்நோக்கத்துகாக தவறாக வழிநடத்தும் EPFO விவரங்களையே பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான நேரம், அவற்றுக்கான செலவினம் பற்றிய தகவல்கள் ஒரு அரசின் நல்ல ஆளுகையின் அடையாளமாக இருக்கும். அதாவது, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்ட திட்டங்களின் செலவு கட்டுக்குள் இருக்கும். அப்படி முடியாத திட்டங்களின் செலவு கூடியிருக்கும். எந்த அளவு கூடுகிறது என்பதை வைத்து நிர்வாகத் திறனை மதிப்பிடலாம். கடந்த காலத்தில் எந்த அரசும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு அவ்வளவாக வெற்றி பெறவில்லை. மோடி அரசு கடந்த கால அரசுகளைவிட வித்தியாசமானது அல்லவா? அந்த அரசுகளைவிட மோடி அரசு திறமையானது அல்லவா? அது குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துச் செலவைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையானது 356 மாபெரும் கட்டமைப்புத் திட்டங்களின் செலவு திட்டமிட்டதைவிட ரூ.2.19 லட்சம் கோடி அதிகமாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த 356 திட்டங்களில் 258 திட்டங்கள் திட்டமிட்டதைவிடக் கூடுதல் காலத்தை எடுத்துக்கொண்டிருப்பதையும் இந்த அறிக்கை காட்டுகிறது.
திட்டங்கள் கால தாமதமாவதற்கும், அதிகச் செலவினம் பிடிப்பதற்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நாம் பலமுறை விமர்சனம் செய்துள்ளோம்; ஏனெனில் இதனால்தான் வங்கிகளின் செயல்படாச் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. மோடி அரசு பதவியேற்ற பின் இந்நிலை மாறாமல் எல்லாமே ‘வழக்கம்போல்தான்’ நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்கிடையே பொருளாதாரம் தவிர்த்த இதர துறைகளில் நம்பிக்கையூட்டும் (?) சில செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன் கத்துவாவில் நடைபெற்ற 8 வயதுப் பெண்ணின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நாட்டையே உலுக்கியது. அது பற்றி சமீபத்தில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பாஜக துணை முதல்வராக நியமிக்கப்பட்ட நவீந்தர் குப்தா கருத்து தெரிவிக்கையில் அது ஒரு ‘சிறு விஷயம்’ என்று கூறியுள்ளார். வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களுக்குப் பெருமளவில் காரணமானவரான கத்துவா எம்.எல்.ஏ. ராஜீவ் ஜஸ்ரோட்டியாவை மாநில அமைச்சரவையில் புது அமைச்சராக பாஜக ஆக்கியுள்ளது!
(யஷ்வந்த் சின்ஹா முன்னாள் மத்திய நிதியமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளவர்)
யஷ்வந்த் சின்ஹா
நன்றி: https://www.ndtv.com/opinion/the-week-in-lies-of-the-modi-government-by-yashwant-sinha-1847881
தமிழில்: சுப்ரபாலா
According to the EPF new rules, this limit is now going to be halved. This means that any Firm which has a minimum of 10 employees has to be registered with the Employees’ Provident Fund and Miscellaneous Provisions Act.