வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் நேர்காணல்
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யூ.சி.எல்.ஏ.) சமூக அறிவியலுக்கான இர்விங் அண்ட் ஜீன் ஸ்டேட் அறக்கட்டளை பேராசிரியரான சஞ்சய் சுப்பிரமணியம், மத்திய கால மற்றும் நவீன தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் வரலாறு, ஐரோப்பிய விரிவாக்கத்தின் வரலாறு மற்றும் ஆரம்ப கால நவீன பேரரசுகளின் நிபுணத்துவம் கொண்ட வரலாற்று ஆசிரியர். அவர் பட்டதாரி மாணவர்களுக்கு இந்திய வரலாறு மற்றும் இணைக்கப்பட்ட வரலாறுகளில் வழிகாட்டுகிறார். இந்தியாவை ஒரு நாகரிகம் என்பதைவிட, பல நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பல அற்புதமான தாக்கங்களின் மையமாகப் பார்க்கிறார். அவரது நேர்காணலிலிருந்து:
இந்தியாவில், சிறுபான்மையினரைக் குறி வைக்கும் கூட்டத்தின் தாக்குதல் போன்ற, அண்மைக்கால வன்முறை அலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இந்தத் தாக்குதல்கள் இதற்கு முன்னர் நாம் பார்த்துள்ள மதவாத வன்முறையில் இருந்து வேறுபட்டவை. முதலில் இவை மையம் இல்லாமல் நிகழ்கின்றன. இதற்கு முன்னர் கூட்ட வன்முறை தொடர் தன்மை பெற்றிருக்கும். அதில் ஒரு அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஊர்வலத்தில் தாக்குதல் நிகழலாம் அல்லது பொதுவிழாக்களின் போது வன்முறை நிகழலாம். முகலாயர்கள் காலத்தில்கூட இப்படித்தான் இருந்தது. பின்னர், சுதந்திரத்திற்குப் பின், பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்த, திட்டமிட்ட வன்முறையே அரங்கேறியது. இவற்றில் தொடர்புடையவர்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் பாதுகாப்பு அளித்தன. ஆக, மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இது பற்றி அறிந்திருந்த நிலையில், இடைப்பட்ட தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே இதில் தீவிரமாக இயங்கினர். 1984இல் இப்படித்தான் நடந்தது.
இப்போது நாம் பார்ப்பது ஓரிடத்தில் நிகழ்வது அல்ல; முன்பைவிடக் குறைவான நபர்கள் தாக்கப்படுகின்றனர். இது மையப்படுத்தப்படாமல் நிகழ்கிறது. சிறிய குழுக்களால் பல இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. இந்தக் குழுக்கள் இவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லப்படுகின்றன அல்லது அப்படிக் கற்பனை செய்துகொள்கின்றன. மேலும், இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அதிகாரத்தில் உள்ள யாரும் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் எனக் கூறுவதில்லை. இந்த வன்முறைக்கு ஒரு சாதிக்கு ஆர்வம் சார்ந்த அம்சமும் இருக்கிறது. இது மிகவும் கீழ்மட்டத்திலானது. பத்திரிகையாளர்கள் இது குறித்து செய்தி வெளியிட வேண்டாம் எனத் தீர்மானித்தால், ஒருவர் மிகவும் கவனமாக இருக்காவிட்டால், இவை பதிவாகக்கூட வாய்ப்பில்லை.
ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தாக்குதலில் ஈடுபடுபவர்கள் இது வெளியே தெரிய வேண்டும் என விரும்புகின்றனர். ஒரு சிலர் இதை வீடியோவிலும் பதிவு செய்கின்றனர். இந்தத் தகவல் உலா வருவதை, ஒரு எச்சரிக்கையாக, சமிக்ஞையாக இருப்பதை, சிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் சமூக நடத்தைக்கான கட்டுப்பாட்டு சாதனமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகின்றனர். ஒரு நாள் இங்கே, இன்னொரு நாள் அங்கே என நிகழக்கூடிய வன்முறை வகை இது. இது மொத்தமாக மேற்கொள்ளப்படும் படுகொலைகள் அல்ல. ஆனால் இதைச் செய்வதை நம்பும் அமைப்புகள் இருப்பதாக நினைப்பதை அடிப்படையாகக் கொண்டது. பின்பற்றப்படும் தன்மை கொண்டது. எனவே இது மையமாக்கப்படவில்லை என்றாலும் பெரியதொரு பொருள் இருக்கிறது.
என்ன பொருள்?
இதில் ஈடுபடுபவர்கள் நோக்கங்கள் மற்றும் செயல்களை மீறி, தங்களுக்கு எதுவும் ஆகாது என்றும் மேலே உள்ளவர்களின் ஆதரவைத் தாங்கள் பெற்றிருப்பதாகவும் உணர்ந்திருக்கின்றனர். இதை அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒரு பயோடேட்டா போல என்று வைத்துக்கொள்ளலாம். இது பகுதி அளவு ஆர்வம் சார்ந்த, குறை காணும் தன்மை கொண்ட வன்முறை. ஏனெனில் இதை உங்களால் செய்ய முடிகிறது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இவை நிகழ்கின்றன, சில பகுதிகளில் நிகழவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் நம்பிக்கை இல்லாத வலுவான பிராந்தியக் கட்சி ஆட்சியில் இருந்தால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் இவை நிகழ்வதில்லை.
மேலிடத் தலைமையில் இருந்து கீழே உள்ளவர்களுக்கு ஒரு செய்தி செல்கிறதா?
இதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். பாதி சர்வாதிகாரம் இருக்கும் ஆட்சியில், ஆனாலும் ஜனநாயகத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டியிருக்கும் நிலையில், ஜனநயகத்தின் கடிவாளத்தை முற்றிலுமாக யாரும் அகற்ற விரும்புவதில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் எல்லாமே இரட்டை நிலைப்பாடு கொண்டவை. எனவே, அதிகாரத்தில் உள்ளவர்கள் குறிப்பிட்ட செயல்களை விரும்பவில்லை என உணர்த்தும் செய்தி எப்போதாவது தெரிவிக்கப்படும் ஆனால், அதிகாரபூர்வமான செய்திக்கு நேர் எதிரான செய்தியும் ரகசிய வழியில் தெரிவிக்கப்படுகிறது. இது எதற்காக என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், வலதுசாரிகள்கூட, கிறிஸ்துவர்கள் அல்லது முஸ்லிம்களை அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற விரும்பவில்லை, ஆனால் தாங்கள் இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர பிரஜைகள் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கேற்ப அவர்கள் நடத்தையைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறார்கள். சிறுபான்மையினர் இந்தச் செய்தியை உள்வாங்கிக்கொள்ளும் வகையில், அடையாளபூர்வமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
உலகின் மற்ற பகுதிகளில் கூட்டத்தால் அடித்துக் கொல்லப்படுவது எப்படி நிகழ்கிறது?
1860 அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. கருப்பின அடிமைகளாக இருந்தவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால், சட்டத்திற்கு ஏற்ப சமூக மனநிலை மாறவில்லை. அதோடு, ஒரு பெரும்பான்மை (வெள்ளையர்) கட்சி, சிறுபான்மையினர் கறுப்பர்கள்தான் வெள்ளையர்களைத் தாக்கக்கூடும் எனும் தவறான எண்ணத்தைப் பரப்பியது. வெள்ளைப் பெண்களைக் கறுப்பின ஆண்களிடமிருந்து காக்க வேண்டும் என்பது மிகவும் வலுவான, தவறான அபிப்ராயமாக இருந்தது. கறுப்பர்கள் அடிமைப்படுத்தப்பட்டதால்தான் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வந்தனர் என்பதால் இது குரூமான முரணாகும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்; அவர்கள் மீதே பழியும் சொல்லப்பட்டது. இந்தியாவில் இது போன்ற நிலை இல்லை என்றாலும்கூட, நாம் ஒருகாலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தோம் என்பதற்கான வரலாற்றுக் கணக்கு வழக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதாக நினைக்கும் களங்கம் முஸ்லிம்கள் மீது படிந்திருக்கிறது. பெரும்பான்மையினர் தங்களைப் பொறுத்துக்கொள்கின்றனரே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர்கள் உணரவைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன.
இந்த நிலையை எப்படி மாற்றுவது?
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி பலவீனமாக இருக்கிறது என்பது பிரச்சினை. ஆனாலும், ஒரு அரசு செயல்பட, வெளிநாட்டு முதலீட்டிற்கான பாதுகாப்பான இடமாக அது அமைய வேண்டும். அதற்கு, சட்டத்தின் ஆட்சி தேவை. யாரேனும் சட்டத்தை அமல்படுத்த முன்வரும் வரை பிரச்சினை இருக்கவே செய்யும். இந்தியாவில் சட்டங்கள் போதுமானவை. ஆனால் அவற்றைச் செயல்படுத்த வேண்டும். இந்த சக்திகள் பின் வாங்கிவிடுவார்கள் என நினைப்பது மடத்தனம். இறுதியில் அவர்கள் இது நாட்டுக்கு நல்லது அல்ல என்று அல்லது ஆட்சியின் பிம்பத்திற்கு நல்லது அல்ல என்று நினைக்கலாம். இன்று கிறிஸ்துவர்கள் அல்லது முஸ்லிம்கள், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தச் சூழலில் பலவிதமான வெறுப்புகள் மறைந்திருக்கலாம்.
ஜனநாயகம் பெரும்பான்மைவாதத்திற்கு வலு சேர்ப்பதாக நினைக்கும் வகையிலான தேர்தல் வெற்றிகளால் வரும் பிரச்சினையா இது?
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை மட்டும் சார்ந்ததாக ஆகிவிடாமல் எப்படி தடுப்பது? இது எப்போதுமே பிரச்சினைதான். பிரதிநிதித்துவத்திற்காக விட்டுக்கொடுக்க முடியாத சில உரிமைகள் மக்களுக்கு இருக்கின்றன என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்தியாவில், வாக்குகள் மற்றும் பிரதிநிதித்துவம் இருப்பதாலேயே மற்ற உரிமைகள் பிரச்சினை இல்லை என சிலர் நினைக்கின்றனர். உரிமைகளை காப்பதற்கான அமைப்புகள் எவை? நீதித்துறை, அரசு மற்றும் சிவில் அமைப்புகள் இதைச் செய்ய வேண்டும். ஆனால் இன்று இந்த மூன்றில் இரண்டு அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யவில்லை. தங்களுக்குப் போதுமான உரிமைகள் இல்லை எனச் சில குழுக்கள் நினைக்கும் நிலை உள்ள மற்ற சமூகங்களில் என்ன நடந்திருக்கிறது என்றால், அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளத் துவங்குகின்றனர். அமெரிக்காவில் இது நிகழ்ந்துள்ளது. நாம் இந்த அளவுக்குத் தள்ளப்பட்ட சமூகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம். வன்முறைக்கு பதில் வன்முறையே எனும் நிலைக்கு சமூகம் தள்ளப்படுகிறது. நல்லவேளையாக ஒரு சில சமூகங்கள் போல எதற்கெடுத்தாலும் ஆயுதம் ஏந்தும் நிலை நமக்கில்லை.
சில ஆண்டுகளாக நடக்கும் இத்தகைய மையமில்லாத கூட்டத்தின் தாக்குதலின் விளைவுகள் என்ன?
நாம் நீண்ட காலப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக நினைக்கிறோம். அடுத்த ஏழு ஆண்டுகளை நோக்கும்போது, சகஜம் எனும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளப் போதுமான நேரம் இருக்கிறது. இந்தக் கால அளவில், ஒரு காலத்தில் ஆட்சேபமாகக் கருதப்பட்டவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை உண்டாகியிருக்கலாம். அதோடு, கடினமான அரசியல் மொழியும் ஏற்கனவே தென்படுகிறது. இந்த மாற்றம், துவேஷத்திற்கான பொதுவான மனநிலை மற்றும் சமூக ஊடகத்தின் அனாமதேய தன்மை, நுட்பமானதாக இருக்கிறது. சோகம் என்னவெனில், சர்வதேச அளவிலும் இதே போன்ற நிலை தான் நிறைய இடங்களில் இருக்கிறது. எனவே நாம் மட்டும் தான் இப்படி என நினைக்க வேண்டாம். துருக்கியில் முஸ்லிம் அடிப்படைவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வலுப்பெறுகிறது. ரஷ்யாவில் பாரம்பரிய சர்ச், சர்வாதிகார அரசுடன் கைகோர்த்திருக்கிறது. புதிய ஜனநாயக நாடுகளில் இதுதான் புதிய சகஜ நிலையாக இருக்கிறது. அவை தேவைப்படும்போது ஜனநாயகம் என்கின்றன. ஆனால், மெல்ல சமூகத்தில் நிலை மாறிக்கொண்டிருக்கிறது. இதுதான் நிலை என்றால், சமூகத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்க, அரசியல் வர வேண்டும். சிவில் அமைப்புகள் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அரசியலை அமைப்பை எதிர்ப்பதன் மூலம் இது நிகழாது. அரசியல் அமைப்பு தனது உறுதியை உணர்த்துவதற்கான காலம் இது, இல்லை எனில் ஒரு கட்சி ஆட்சியின் விளைவைத் தொடர்ந்து அனுபவிக்கும் நிலை உண்டாகும்.
சீமா சிஷ்டி
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/india/lynch-mobs-seem-to-know-nothing-will-happen-to-them-sanjay-subrahmanyamucla-scholar-4755228/
Thambi,, Sanjay Subramanyam ….was famous for writing against Aryan existence ……Avar peusrathu ellam correctnu neneicca Adhaiyum podalaame mozhi peyarthu…. [ Nan avar solrathi erkavillai based on Linguistics TAMIL has a different family tree I believe]