காலையிலிருந்து சவுக்குக்கு வாழ்த்துக்கள், தொலைபேசியிலும், நேரிலும் குவிந்த வண்ணம் உள்ளன. திமுகவின் இந்த வீழ்ச்சிக்கு சவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்தனர். திமுகவின் இந்த வீழ்ச்சி ஊர் கூடி இழுக்கப் பட்ட தேர் என்று சவுக்கு கருதும் அதே நேரத்தில், இந்த வெற்றியை சவுக்கு தனது வாசர்களின் காலடியில் சமர்ப்பிக்கிறது.
ஏற்கனவே எழுதியது போல, சவுக்கு தொடங்கப் படுவதற்கான காரணம், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஊடகச் சூழலே…. பல்வேறு காரணங்களால், ஊடகங்கள் கருணாநிதியின் கைப்பாவையாக இருந்தன. சவுக்கின் நண்பர்கள் மூலமாக கருணாநிதி குடும்பம் மற்றும் கடவுளுக்கு நிகரான அதிகாரம் படைத்திருந்த ஜாபர் சேட் ஆகியோரைப் பற்றி ஆதாரங்களோடு செய்தி வெளியிட முயற்சி செய்தாலும், ஜாபரை பற்றி ஒரு மூச்சு கூட எந்த பத்திரிக்கையிலும் வராது. நண்பர்களான பத்திரிக்கையாளர்கள், இந்த செய்தியை எடிட்டர் அனுமதிக்க மறுத்து விட்டார் என்று சொல்லும் போது, ஆதாரங்களோடு உண்மைச் செய்தியை வெளியிடக் கூட முடியாத அளவுக்கு, நெருக்கடி நிலையா அமலில் இருக்கிறது என்ற ஆச்சர்யம் வந்தது.
ஆனால், இணையம் என்ற அபாரமான தொழில்நுட்பம் இருக்கும் போது எதற்காக கவலைப் பட வேண்டும் ? கருணாநிதி அரசும், வேலையிலிருந்து இடை நீக்கம் செய்து நேரம் ஒதுக்கிக் கொடுத்த போது இதை விட வேறு என்ன வேலை ? இப்படி ப்ளாகாக தொடங்கப் பட்டது தான் சவுக்கு. நல்ல விஷயங்களுக்கு மக்கள் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதற்கு சவுக்கு ஒரு நல்ல உதாரணம். யாரோ ஒரு கிறுக்குப் பயல் ஏதோ எழுதுகிறான் என்று இல்லாமல், வாசகர்கள் கொடுத்த அமோக ஆதரவு என்பது மறக்கவே முடியாதது.
சவுக்கு எழுதத் தொடங்கிய பிறகு தான், கருணாநிதிக்கு விசுவாசமான செய்திகளைப் போட்டு கருணாநிதியின் ஜால்ராவாக மாறிப் போன ஊடகங்களைப் பார்த்து சலித்துப் போன ஏராளமான நல்ல உள்ளங்கள், சவுக்கு போன்ற ஒரு மாற்று ஊடகத்தை எதிர்ப்பார்த்தே இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. சவுக்கு தொடங்குகையில் வைக்கப் பட்ட ஒரே ஒரு அளவு கோல், பொய்யை எழுதக் கூடாது என்பது மட்டுமே.
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
அல்லவா ? இலவசமாகத்தானே படிக்கிறார்கள், அதனால் என்ன என்ற அலட்சியப் போக்கு ஒரு நாளும் இருந்தது கிடையாது. தங்களின் விலை மதிக்க முடியாத நேரத்தை அல்லவா, சவுக்கு வாசகர்கள் சவுக்குக்காக தருகின்றனர் ? அந்த அடிப்படையில் தொடர்ந்து உண்மை சார்ந்து எழுதி வந்ததால், தொடக்கத்தில் தயக்கத்தோடு ஆதரவளித்த வாசகர்கள், தங்கள் முழுமையான ஆதரவை தரத் தொடங்கினார்கள். அது மட்டுமன்றி ஆதாரங்களோடு செய்திகள் வெளியிட்டதால், சவுக்கு மீது வாசகர்களுக்கு மெல்ல மெல்ல நம்பிக்கை ஏற்பட்டது.
நாட்கள் செல்லச் செல்ல, மற்ற ஊடகங்களுக்கு செய்தியை தருவதற்கு பதிலாக, சவுக்கிலேயே முக்கிய ஊழல்கள் அம்பலப் படுத்தப் பட்டன. சவுக்கின் வெற்யி எந்த அளவுக்கு என்றால், இன்று ஒரு நாள் மட்டும் இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை 48,000 பேர் படித்துள்ளனர். இன்று சவுக்கின் ஹிட்ஸ் 30 லட்சத்தை கடந்தது.
ஜனவரி மாதம் தொடங்கியதுமே, தேர்தல் பணிகளை சவுக்கு தொடங்கி விட்டது. அயராது உழைத்தால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. ஊர் கூடி இழுத்த தேர் என்று சொன்னதற்கு காரணம், சவுக்கோடு சேர்ந்து திமுகவை வீழ்த்த பணியாற்றியவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. எத்தனை பேர் உழைத்தார்கள் தெரியுமா ? அவர்கள் அத்தனை பேருக்கும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அமைச்சராக வேண்டும், சலுகைகள் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. நாடு நன்றாக இருக்க வேண்டும். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே…… வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.
திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன ஆபத்து தெரியுமா ? இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கக் கூடும். தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம், இந்தியா முழுவதும் பரவியிருக்கும். எத்தனை பெரிய ஊழல்கள், அயோக்கியத்தனங்கள் செய்தாலும், தேர்தல் சமயத்தில் மக்களுக்கு பணம் கொடுத்தால் வென்று விடலாம் என்ற இறுமாப்பு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் வந்திருக்கும். பிறகு தேர்தலைச் சந்திக்க யாராவது பயப்படுவார்களா என்ன ? இந்தக் காரணத்துக்காகத் தான் திமுக வீழ்த்தப் பட வேண்டும்.
கடந்த வாரம் வரை எத்தனை இறுமாப்பாக பேசினார்கள் என்று யோசித்துப் பாருங்கள். திமுகவின் நலத் திட்டங்களுக்காக மக்கள் வாக்களிப்பார்கள், ஆரிய திராவிடப் போர் நடக்கிறது, தேர்தல் ஆணையம் நெருக்கடி நிலையை அமல்படுத்தியிருக்கிறது என்று.
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்…. நியாயத்தைப் பேசும் பத்திரிக்கையாளர்களை நடு ரோட்டில் வெட்டுவதற்குக் கூட தயங்கியிருக்க மாட்டார்கள். அதற்கு, கருணாநிதியின் ஜால்ராக்களாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் துணை நின்றிருப்பார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாகவும், உயர்நிதிமன்ற நீதிபதிகள் முன்பாகவும், கருணாநிதி முன்பாகவும், நான்கு வழக்கறிஞர்களை 100 ரவுடிகள் சேர்ந்து தாக்கியதை வேடிக்கை பார்த்த பேடிகள் தானே இந்த காவல்துறை அதிகாரிகள் ? இந்த காரணத்துக்காகத் தான் திமுக வீழ்த்தப் பட வேண்டும்.
ஜனவரி மாதம் தொடங்கி, சவுக்குக்கு ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேர உறக்கம் தான். ஏற்கனவே ஒப்புக் கொண்ட மற்றொரு எழுத்துப் பணி காரணமாகவும், சவுக்கு வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்ற காரணத்துக்காகவும் உறக்கம் இழக்க வேண்டி வந்தது. இந்தத் தேர்தலில் சவுக்குக்கு கிடைத்த முதல் வெற்றி, ஜாபர் சேட் உளவுத்துறை பதவியிலிருந்து அகற்றப் பட்டதே. ஜாபர் உளவுத்துறையில் தொடர்ந்திருந்தால், அதிமுக இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது என்பதில் சவுக்குக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
2010 ஜுலை மாதம் எழுதிய கட்டுரையிலேயே ஜாபர் சேட், உளவுத் துறை பதவியிருந்து அகற்ற வேண்டும் என சவுக்கு எழுதியிருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத் தகுந்தது. ஜாபர் சேட்டுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி, அந்த ஆதாரங்களை, தேர்தல் ஆணையத்துக்கு சவுக்கு அனுப்பி வைத்தது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறது. ஜாபர் சேட்டிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்திய போது, சவுக்கின் புகாரும் சேர்த்து விசாரிக்கப் பட்டது என்பதையும் உங்களோடு சவுக்கு பகிர்ந்து கொள்கிறது. அனைத்து ஊடகங்களும் என் கையில், கருணாநிதி என் கையில், அனைவரது தொலைபேசி உரையாடல்களும் என் கையில் என்று இறுமாந்து இருந்தார் ஜாபர். அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருந்த ஜாபரை, பல கோடி ரூபாய் பணத்தை தன் வசம் வைத்திருந்த ஜாபரை, சவுக்கு எதிர்த்தது, டேவிட்டுக்கும் கோலியாத்திற்கும் நடந்த யுத்தத்தைப் போன்றது தான். இறுதியில், டேவிட்டைப் போன்றே சவுக்கும் வென்றது. ஜாபர் வீழ்த்தப் பட்டார்.
திமுக வீழும் என்று சவுக்கு உறுதியாக நம்பியது. வீழ்த்தப் பட வேண்டும் என்று விரும்பியது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே சவுக்கில், திமுக ஆட்சி முடிய என்று கவுண்ட் டவுன் போடப் பட்டது. அந்த கவுண்ட்டவுனைப் பார்த்து, பலர் சிரித்தார்கள், கேலி பேசினார்கள். ஆனால், இதை நடத்தியே தீருவது என்று சவுக்கு உறுதியாக இருந்தது. சவுக்கு வாசகர்கள் பலர், தொலைக் காட்சி சேனல்களில் வந்த கருத்துக் கணிப்பை பற்றி எழுதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். எந்தக் கருத்துக் கணிப்பும், தமிழக மக்களின் மனதை படிக்க முடியாது என்பதில் சவுக்கு தீர்மானமாக இருந்தது. தமிழகத்தில் இருந்த சூழலில், மக்கள் வெளிப்படையாக அதிமுகவுக்கு வாக்களித்தேன் என்று வெளிப்படையாக சொல்லும் நிலையா இருந்தது ? அப்படி இருக்கும் போது கருத்துக் கேட்பவர்களிடம் மக்கள் எப்படி உண்மையைச் சொல்லுவார்கள். இதன் காரணமாகவே தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பற்றி சவுக்கு எழுதவில்லை.
தேர்தல் முடிந்ததும், சில மூத்த பத்திரிக்கையாளர்கள் உட்பட, பலரும், அதிமுக இப்படி ஒரு வெற்றியை பெற வாய்ப்பே இல்லை, திமுகவை வீழ்த்த முடியாது, பணம் கொடுத்து விட்டார்கள், வென்று விடுவார்கள் என்று பேசினார்கள். ஆனால் சவுக்குக்கு மட்டும், மக்கள் மீது அபார நம்பிக்கை இருந்தது. மக்கள் முட்டாள்கள் அல்ல தோழர்களே….. 1975ல் இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அமல் படுத்திய போது, நாடு முழுவதும் கோபம் எழுந்தது. அதற்குப் பிறகு, 1977ல் நெருக்கடி நிலை முடிந்து தேர்தல் வந்த போது, அசைக்க முடியாதவர், வீழ்த்தப் பட முடியாதவர் என்று கருதிய இந்திரா காந்தியை மக்கள் வீழ்த்தவில்லையா ? இப்போது இருப்பது போல தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத காலம். வானொலி மட்டும் தான். டிவி கூட இல்லை. அதனால், மக்கள் மீது சவுக்குக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. மக்களே பிரதானம். எத்தனை பணம் கொடுத்தாலும், அவர்களை பிச்சைக்காரர்களாக கருதினாலும், எப்படி ஒரு தண்டனையை திமுகவுக்கு கொடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
திமுக மீது இருந்த கோபம், ஏறக்குறைய எதிர்க்கட்சியே இல்லாத வகையில், செய்து விட்டது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
ஆனால் நாம் எதற்கு இருக்கிறோம் ? சவுக்கு என்ற இயக்கமாக வளர்ந்துள்ள நாம் பொறுப்புள்ள எதிர்க்கட்சி செய்யும் பணியை செய்ய மாட்டோமா என்ன ? நல்ல விஷயங்களை பாராட்டும் அதே நேரத்தில், தவறுகளை சுட்டிக் காட்ட சுணக்கம் காட்டுவோமா என்ன ? நமது பணி மேலும் கூடியிருக்கிறது தோழர்களே…. தொடர்ந்து பணியாற்றுவோம். வருங்காலம் நமதே.
வெற்றியை சுவைக்கும் இந்த நேரத்தில், இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் என சவுக்கு குறிப்பிட விரும்புவது, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் ஆகிய இருவரையும். அஞ்சா நெஞ்சன் என்று வலம் வந்த சோனகிரியை, சாரி, அழகிரியின் கொட்டத்தை அடக்கி, வீட்டுக்குள் முடக்கி, ஆணவத்தை ஒடுக்கி, போட்டார் ஒரு கிடுக்கி. பிரவீன் குமாரும், அவருடன் பணியாற்றிய அதிகாரி அமுதாவும், தேர்தல் ஆணையத்தின் மற்ற அதிகாரிகளும், செய்த பணி மட்டுமே, தமிழகத்தில் இந்த தேர்தல் நியாயமான முறையில் நடக்க உதவியது. இவர்கள் இத்தனை கெடுபிடிகள் செய்யாதிருந்தால், சாலையில் நின்று, சட்டைப் பையில் பணத்தை திணித்து, திமுகவுக்கு வாக்களிக்க மறுத்தால், ரெண்டு அடி வேறு அடித்திருப்பார்கள்.
கர்நாடக மாநிலத் தலைமைச் செயலகத்தில் ‘அரசுப் பணி, ஆண்டவனின் பணி’ என்று எழுதிப் போட்டிருப்பார்கள். இவர்கள் செய்தது ஆண்டவனின் பணி மட்டுமல்ல, ஆண்டவனை ஆட்டி வைத்து, ஆள்வது நானில்லை என்று புலம்ப வைத்த பணி.
இந்த நேரத்திலே, சவுக்கு இவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறது. ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன் போன்ற அயோக்கியர்கள் அதிகாரிகளாக இருக்கும் இதே தமிழ்நாட்டில் நீங்களும் அதிகாரிகளாக இருந்து சிறப்பாக பணியாற்றியதுதான் அனைத்தும் முடிந்து போகவில்லை என, எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது அய்யா. உங்களுக்கு சவுக்கு வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே……