பழிவாங்காமல் விட மாட்டேன் – மோடியின் சங்கல்பம்
கரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.
கரண் தாப்பர்
“என்ன பிரச்சினை என நான் சொல்கிறேன்” என நான் பேட்டியைத் தொடர்ந்தேன். “2002 கோத்ரா கொலைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும்கூட, கோத்ரா ஆவிகள் உங்களைப் பிடித்து ஆட்டுகின்றன. இவற்றை விலக்க நீங்கள் ஏன் இன்னும் அதிகமாக எதையும் செய்யவில்லை?”
“இதை [இந்தப் பணியை] கரண் தாப்பர் போன்ற ஊடகவியலாளர்களுக்கு நான் வழங்குகிறேன். அவர்களே செய்யட்டும்.”
“நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா?”
“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”
“நடைபெற்ற கொலைகளுக்கு வருந்துவதாக நீங்கள் ஏன் சொல்லக் கூடாது. முஸ்லிம்களைக் காக்க அரசு இன்னும் செய்திருக்கலாம் என்று ஏன் நீங்கள் சொல்லக் கூடாது?”
“நான் சொல்ல வேண்டியதை அந்த நேரத்தில் சொல்லிவிட்டேன்,. என் அறிக்கைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.”
“மீண்டும் சொல்லுங்களேன்.”
“பேச வேண்டும் என நீங்கள் விரும்புவதை எல்லாம், 2007இல் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை.”
“ஆனால் அதை மீண்டும் சொல்லாமல் இருப்பதன் மூலம், அந்தச் செய்தியை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்காமல் இருக்கச்செய்வதன் மூலம், குஜராத் நலனுக்கு எதிரான பிம்பம் தொடர நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இதை மாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.”
இந்தப் பரிமாற்றம் நீடித்த 2 அல்லது 2 நிமிடங்கள் முழுவதும் நரேந்திர மோடியின் முகம் உணர்ச்சிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், அவர் மகிழ்ச்சியாக இல்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. அவரது கண்கள், காட்டமாக, தீவிரமாக இருந்தன. முகத்தை அமைதியாகவும், சலனமற்றும் வைத்திருக்க அவர் முயற்சி செய்துகொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது பொறுமை அல்லது அவரது உறுதி இப்போது உடைந்தது. அவர் பேசியது போதும் என நினைத்துப் பேட்டியை முடித்துக்கொண்டார்.
“எனக்கு ஓய்வு தேவை, கொஞ்சம் தண்ணீர் தேவை” எனக் கூறியபடி அவர் மைக்கை எடுத்தார்.
முதலில் அவருக்கு நிஜமாகவே தாகம் எடுப்பதாக நினைத்து, அருகே இருந்த மேஜையில் இருந்த தண்ணீரைச் சுட்டிக்காட்டினேன். ஆனால், இது வெறும் காரணமே என்று விரைவில் புரிந்தது. பேட்டி நிஜமாகவே முடிந்துவிட்டது.
இருப்பினும் அப்போதுகூட மோடி கோபத்தை அல்லது வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. இந்த மூன்று நிமிட உரையாடலின் பதிவு, மறுநாள் சிஎன்என் – ஐபிஎன்னில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. மோடி அதில் இவ்வாறு கூறியிருந்தார். “நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். நான் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு நன்றி. இந்தப் பேட்டியை என்னால் கொடுக்க முடியாது. … இவை உங்கள் எண்ணங்கள். நீங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டிருங்கள்… நான் உங்களுடன் நட்பான உறவைத் தொடர விரும்புகிறேன்.”
அசைந்துகொடுக்காத மோடி
இதில் விநோதம் என்னவென்றால், அதன் பிறகு ஒரு மணி நேரம் அவருடன் செலவிட்டிருப்பேன். எனக்கு டீ, இனிப்பு மற்றும் குஜராத்தி டோக்லாக்களை வழங்கினார். இது போன்ற சிக்கலான நேரங்களில் அவரது விருந்தோம்பல் அசாதரணமானது.
அப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பேட்டியைத் தொடர வைக்கத் தீவிரமாக முயற்சி செய்தேன். இந்த பேட்டியை மீண்டும் எடுத்து, 2002 தொடர்பான கேள்விகளை இறுதியில் கேட்பதாகக் கூறினேன். நான் பல்வேறு விஷயங்களை எழுப்ப உள்ளதாகவும், கோத்ரா மற்றும் முஸ்லிம் கொலைகளை முதலில் கேட்கக் காரணம், இதைத் தவிர்ப்பது இருவருக்குமே சரியானதாக இருக்காது என்பதால்தான் எனக் கூறினேன். முதலிலேயே அதைப் பேசி விடுவது நல்லது என நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன்.
இவை எதுவும் நரேந்திர மோடியிடம் செல்லுபடியாகவில்லை. மூன்று நிமிடங்களில் வெளியேறினால், சேனல் அதை மறுநாள் தொடர்ந்து ஒளிபரப்பும் என்று அதன் பிறகு அவரிடம் கூறினேன். இது ஒரு செய்தி போலக் கருதப்படும். ஒவ்வொரு செய்தி அறிக்கையிலும் இது இடம்பெறும். இதற்கு பதிலாக, முழுப் பேட்டி அளித்தால், அது ஒளிபரப்பப்பட்டு, ஒரு மறு ஒளிபரப்போடு மறக்கப்பட்டுவிடும் என்று கூறினேன். இதுவும் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
மோடி தனது மனநிலை மாறிவிட்டது எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். வேறு ஒரு நேரத்தில் பேட்டி அளிப்பதாகக் கூறினார். ஆனால் அதே நேரத்தில் நாம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இதை அவர் முன்னரே கூறினார். இப்போது மீண்டும், மீண்டும் கூறினார்.
ஒரு மணி நேரம் ஆன பிறகு, தில்லிக்கான விமானத்துக்கு நேரமாகிவிட்டதால் நான் புறப்பட வேண்டும் எனக் கூறினேன். நாங்கள் கைகுலுக்கி விடைபெற்றோம்.
அந்த வார ஞாயிறு அன்று அந்த பேட்டியை சேனல் வெளியிட்டது. அது உடனே தலைப்புச் செய்தியானது. நான் கணித்தது போலவே அது ஒவ்வொரு செய்தி அறிக்கையிலும் இடம்பெற்றது. மோடி வெளியேறியது பெரிய செய்தி. குஜராத் தேர்தலுக்கு நடுவே இது நடந்ததால் காங்கிரஸ் கட்சி இதைக் குஷியாகப் பயன்படுத்திக்கொண்டது.
திங்கள் அன்று நண்பகல் மோடி அழைத்தார். “Mere kandhe pe bandook rakh ke aap goli mar rahe ho.” என அவர் இந்தியில் கூறினார் (என்னை உங்கள் அனுகூலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று பொருள்).
இப்படித்தான் நடக்கும் என நான் கணித்திருந்தேன் எனக் கூறினேன். இதனால்தான் பேட்டியை விட்டு வெளியேறுவதைவிட அதை முடித்திருக்க வேண்டும் என்று கூறினேன்.
மோடி சிரித்தார். அதன் பிறகு அவர் சொன்னதை மறக்க மாட்டேன்.
“சகோதரர் கரண், நான் உங்களை விரும்புகிறேன். நான் தில்லியில் இருக்கும்போது இருவரும் ஒன்றாக உணவு அருந்தலாம்”.
விடைபெறும்போது கூறப்படும் புத்திசாலித்தனமான வார்த்தைகள் இவை என்பதுதான் உண்மை. அதன் பிறகு நான் மோடியை சந்திக்கவே இல்லை. நாங்கள் பேசக்கூட இல்லை. சேர்ந்து சாப்பிடுவதற்கான அழைப்புக்கு இடமே இல்லை.
ஆனால் – இது மிகவும் முக்கியம் – இந்த பேட்டிக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு பாஜகவுடனான எனது உறவு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் என்ன நடந்தது என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்க விரும்பினர். நானும் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் இதைப் பகிர்ந்துகொண்டேன். அதைவிட முக்கியமாக, யாரும் பேட்டி கொடுக்க மறுக்கவில்லை ஏன் ஒப்புக்கொள்ளத் தயக்கம்கூடக் காட்டவில்லை.
2007 முதல் 2015 வரை ஏன் 2016 துவக்கம் வரை இப்படித்தான் இருந்தது. நரேந்திர மோடியின் முதல் ஆண்டு அல்லது 18 மாத கால ஆட்சியில்கூட என்னுடனான பாஜக அணுகுமுறை மாறவில்லை. அதன் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் என் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் அல்லது பேட்டி அளித்தனர். இந்தப் பேட்டி நடைபெறவே இல்லை அல்லது மறக்கப்பட்டுவிட்டதுபோல இருந்தது. ஏனெனில் 2014இல் அது நடந்து ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன.
என்னதான் நடந்தது?
எனவேதான், தீண்டத்தகாத காலம் துவங்கியபோது, இதற்கு பேட்டிதான் காரணம் என முதலில் நான் எற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதுதான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்குச் சிறிது காலம் ஆனது. பின்னர், நன்கறியப்பட்ட வெளிவிவகாரத் துறை அதிகாரியும் நூலாசிரியரும் அரசியல்வாதியுமான பவன் வர்மா 2017, அக்டோபர் 18இல் இதற்கான ஆதாரத்தைக் காண்பித்தார். அவர் கூறியது, நிருபேந்திர மிஸ்ரா கூறியதுடன் ஒத்துப்போனது. பவன் கூறிய கதை திகைக்க வைத்தது.
என் அலுவகலத்தில் அமர்ந்தபடி, அவரது கண்கள் நரேந்திர மோடியின் புகைப்படம் மீது பதிந்தது. நான் பேட்டி கண்ட முன்னாள் பிரதமர்களின் படம் இருந்தது. மோடியின் படம் தொலைக்காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது. அவர் மைக்கை எடுத்து, பேட்டியை விட்டு வெளியேறும் காட்சியின் படம் அது. சிஎன்என் – ஐபிஎன் புகைப்படக் குறிப்பும் அதன் கீழ் இருந்தது: “இந்தப் பேட்டியை அளிக்க முடியாது.”
“இந்த பேட்டி பற்றி பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார் தெரியுமா?” என்று பவன் திடீரெனக் கேட்டார். “2014 தேர்தலுக்குத் தயாரானபோது, இதை 30 முறை மோடியைப் பார்க்க வைத்ததாக அவர் கூறினார். கடினமான கேள்விகள் அல்லது சங்கடமான தருணங்களை எப்படி எதிர்கொள்வது என மோடிக்குக் கற்றுத்தர உங்கள் பேட்டியை அவர் குழு பயன்படுத்தியது.”
அதன் பிறகு என்ன நடந்தது என்பது இன்னும் ஆச்சரியமானது. பிராசாந்த் கிஷோருடனான உரையாடல் பற்றி பவன் மேலும் தகவல்களைச் சொன்னார். அவரது தரப்பில் எந்த கசப்பான உணர்வும் இல்லை என்று என்னை நம்ப வைப்பதற்காகப் பேட்டிக்குப் பின் திட்டமிட்டு என்னை ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்ததாக மோடி பிரசாந்திடம் கூறியிருக்கிறார். டீ, இனிப்பு மற்றும் டோக்லா என்னை நிராயுதபாணியாக ஆக்குவதற்கான உத்தியின் அங்கம். மோடி மிகவும் நட்பாக இருந்தார், பேட்டியால் அவர் பாதிக்கப்பட்டதாகவே தெரியவில்லை என நான் பவனிடம் கூறியபோது, அது திட்டமிடப்பட்டது என்றார்.
“ஆனால் உங்களுக்கு வேறு ஒன்று தெரியுமா?” பவன் மேலும் கூறினார்.
“உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்றும், வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் பழிவாங்குவேன் என்றும் மோடி பிரசாந்திடம் கூறினார். பிரசாந்த இதை இரண்டு மூன்று முறை கூறியிருக்கிறார். இது மோடி சாதாரணமாகக் கூறிய கருத்து அல்ல. இதுதான் மோடியின் நோக்கம் என்றும், இதை நிறைவேற்றும்வரை அவர் ஓய மாட்டார் என்றும் பிரசாந்த் நம்பினார்.”
பவன் சொல்வதை நம்பாமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை. என்னைத் தவறாக நினைக்கவைக்க அல்லது உண்மையை மிகைப்படுத்திச் சொல்வதில் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை. அதைவிட முக்கியமாக, அவர் கூறியது 2016க்குப் பிறகு பாஜக என்னை நடத்திய விதத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் உதவியது. இதன் காரணமாகவே செய்தித் தொடர்பாளர்கள் என் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்தனர். அமைச்சர்கள் பேட்டி கொடுக்க மறுக்கத் துவங்கினர், அமித் ஷா ஆரம்பத்தில் உறுதி அளித்தாலும் அதன் பிறகு பதிலும் அளிக்கவில்லை என் அழைப்புகளை எடுக்கவும் இல்லை. இதன் காரணமாகவே, மிஸ்ரா பேசியபோது மோடி என்னைச் சந்தித்துப் பிரச்சினையைத் தீர்க்க ஒப்புக்கொள்ளவில்லை.
ஹார்பர் காலின்ஸ் வெளியிட்ட கரண் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் புத்தகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது.
நன்றி: தி வயர்
முற்றும்