மோடியின் செயல்முறைகள் ஏற்படுத்தும் தடங்கள் மிகவும் வலுவானவை. அவை வெறும் தழுவலிலும் கண் சிமிட்டலிலும் மறைந்து விடக்கூடியவை அல்ல
மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வலுவிழந்த வெளியுறவுக் கொள்கை. காஷ்மீர் சிக்கல் ஆகியவற்றில் அல்ல. நம் வீடுகளில் நடக்கும் விவாதங்களில், தெருக்களில் நடக்கும் உரையாடல்களில், பொதுப் பண்பாட்டுத் தளங்களில் எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூக வலைத்தளங்களில் அது அதிகமாகத் தெரிகிறது.
இந்த நாட்டில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எப்போதும் வெறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எப்போதும் அது பற்றிய வெட்க உணர்வு இருந்துவந்தது. நீங்கள் நயமானவராகவோ படித்தவராகவோ (வகுப்பறைகளில் மட்டுமல்ல, மத நூல்களையும்தான்) காட்டிக்கொள்ள விரும்பினால், உங்கள் வெறுப்புணர்வை மறைத்துவைக்க முயல்வீர்கள் இந்த வெட்க உணர்வும் நயமிக்கவராகக் காட்டிக்கொள்ளும் முனைப்பும் நீங்குவதைச் சமூகத்தில் ஒரு புதிய நேர்மையைக் கொண்டுவருவதாக வரவேற்றுவிட முடியாது. நவீன சமூகம் குறைந்தபட்சப் பொது விழுமியங்களை நிர்பந்திக்கின்றது. அவை அரசியல் சாசன சட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன. சட்டத்தின் ஆட்சியின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
வெறுப்புணர்வு குறித்த இந்த வெட்க உணர்வு மறைந்துபோவதை மோடி உறுதிசெய்துவிட்டார். ஆகக் கொடூரமான வெறுப்பை சுமப்பவர்கள், ‘நரேந்திர மோடியால் (ட்விட்டரில்) பின்பற்றப்படுபவர்கள்’ என்ற அடையாளத்தால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இந்த வெட்கமின்மையின் விளைவாக அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விழுமியங்கள் அடிக்கடி மீறப்படுகின்றன. இந்த மீறல்களைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் அவற்றால் செயல்பட முடியாதபடி சமரசம் செய்யப்பட்டுவிட்டன. வெட்க நீக்கம், நிறுவனங்களின் சீர்குலைவு என்ற கூட்டை உள்வாங்கினால்தான் பசுப் பாதுகாப்பின் பெயரில் இஸ்லாமியர்கள் கும்பல்களால் அடித்துக் கொலை செய்யப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். சட்டம் தங்களை எதுவும் செய்துவிடாது என்பதை அறிந்திருப்பவர்கள்தான் இந்த கும்பல் கொலைகளைச் செய்கிறார்கள். அது குறித்த வெட்கமற்றுப் போயிருப்பதால்தான் அந்தச் செயலைத் தாங்களே காணொளியாகப் பதிவுசெய்து வெளியிடுகிறாகள்.
இந்த வெறுப்பின் பலன்களை ஆர்.எஸ்.எஸ். அறுவடை செய்துகொண்டிருக்கிறது. அது அரசற்ற நிலையை விரும்பும் அமைப்பு அல்ல. சட்டத்தின் ஆட்சியை இல்லாமல் ஆக்குவதும் அதன் விருப்பம் அல்ல. ஆனால் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கும் அதன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படும் வரையில் இதுபோன்ற தந்திரமான நெறிப் பிறழ்வுகளை ஏற்றுக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். தயாராக இருக்கிறது. ராமஜென்மபூமி இயக்கம், 1992இல் பாபர் மசூதி இடிப்பு, 2002இல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகிய தருணங்களில் அது எப்படி நடந்துகொண்டதோ அப்படியே இப்போதும் நடந்துகொள்கிறது. ஆர்.எஸ்.எஸ். கனவுகாணும் லட்சிய இந்து ராஷ்டிரத்தில் ஒரு மசூதிகூட இடிக்கப்படாது, ஒரு இஸ்லாமியர்கூட கும்பல்களால் கொல்லப்பட மாட்டார். அதற்கான தேவை இருக்காது. ஏனெனில், இஸ்லாமியர்கள் தங்களது இடத்தை அறிந்திருப்பார்கள். இந்துக்களின் சகிப்புத்தன்மையால்தான் தாங்கள் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
அரசியல் சாசனத்திலோ சட்டத்திலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முடியும் என்பதற்கு குஜராத்தான் சரியான உதாரணம். இன்று அந்த மாநில மக்கள்தொகையின் 10% இருக்கும் மக்களுக்குச் சட்டமன்றத்தில் இடமில்லை, பொது வாழ்வில் அவர்களது கருத்துக்களுக்கு இடமில்லை. 1985இல் இருந்தே இந்த குஜராத் மாதிரி உருவாகத் தொடங்கிவிட்டது. அப்போது உயர்ஜாதி இந்துக்களை தனிமைப்படுத்தி, ‘கம்’ (KHAM – Kshathriya, Harijan, Aadivasi, Muslim) என்று அடையாளப்படுத்தப்படும் சத்ரிய, ஹரிஜன, ஆதிவாசி, இஸ்லாமிய மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக அகமதாபாத்தில் மதக் கலவரங்கள் வெடித்தன. இந்த குஜராத் மாதிரி மோடியால் உருவாக்கப்பட்டதல்ல. இது மோடிக்கு வெகுகாலம் முன்பே தொடங்கிவிட்டது. அவருக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் நாம் இந்த குஜராத் மாதிரியைக் கண்டுதான் அஞ்ச வேண்டுமே அன்றி மோடியின் வளர்ச்சியையோ வீழ்ச்சியையோ அல்ல.
மோடி ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு ரொம்ப வசதியானவர். நேற்று வாஜ்பாயி அதற்கு வசதியாக இருந்ததைப் போல இன்று மோடி. வருங்காலத்தில் மோடி ஒரு தேர்தலில் தோற்பார். வாஜ்பாய் அத்வானிக்கும் பின்னர் அத்வானி மோடிக்கும் வழிவிட்டதைப் போல மோடியும் வேறொருவருக்கு வழிவிடுவார். கடந்த நான்கு ஆண்டுகளில், மோடி பணமதிப்பு நீக்கத்தையும் செல்ஃபி புகைப்படங்களையும் வைத்து விளையாடிக்கொண்டிருக்கையில் ஆர்.எஸ்.எஸ். தனது நோக்கங்களில் வெற்றியடைய திட்டமிட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. கல்விப் புலமும் ஊடகங்களும் ஆளும் அரசுக்கு அடிபணிபவையாக ஆக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு துறைகளிலும் இருப்பவர்கள் மோடிக்கு விசுவாசமாக இருப்பதன் மூலமாக அல்ல அவர் பின்பற்றும் சித்தாந்தம் அதாவது ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தத்துக்கு விசுவாசமாக இருப்பதன் மூலமாகவே தொழில் வாழ்வின் அடுத்த கட்டங்களை அடைய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இதன் தாக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மற்ற அனைத்துச் செயல்களின் தாக்கமும் மிக நீண்ட காலம் நீடிக்கப் போகின்றன. .
நிறுவனங்கள் பாழாக்கப்படுவதை நிறுத்துவதற்கே நாம் உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும். அடிப்படைக் காரணிகளை முதலில் களைய வேண்டும் என்பது தவறான வாதம். ஒரு முடிச்சை அவிழ்ப்பதை அம்முடிச்சு உருவாகக் காரணமான கடைசிப் படியை அவிழ்ப்பதன் மூலமாகத்தான் தொடங்க முடியும். காங்கிரஸ் உட்பட மோடியை எதிர்க்கும் எந்தக் கட்சியும் இந்தப் பாதையில் முன்னோக்கிச் செல்ல முனைவதில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசுவின் பெயரால் நடக்கும் கும்பல் கொலைகள் நிறுத்தப்பட அதிக வாய்ப்பிருப்பது உண்மைதான். ஆனால் பசுவின் பெயரிலான வன்முறை அக்கட்சியின் அரசியலுக்குப் பொருத்தமற்றது என்பதன் விளைவாகத்தான் அது தடுக்கப்படுமே தவிர சட்டம் ஒழுங்கு அமைப்பானது திறம்படப் பணியாற்றுவதால் அல்ல. உண்மையில் சட்டம்ஒழுங்கு சீர்கேடு காங்கிரஸ் ஆட்சியில்தான் தொடங்கியது.
சட்டம் ஒழுங்கு இயந்திரம் அரசியல்மயமாக்கப்பட்டு அது தன் பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்ததால்தான் 1984இல் சீக்கியர்களின் கொலையை காங்கிரஸால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது. இந்தியாவைக் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்தபோது இஸ்லாமியர்களுக்கெதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கும் இது பொருந்தும். நாடாளுமன்றத்தின் வழியான மாற்றத்தின் மூலம் சட்டம் ஒழுங்கு இயந்திரத்தைச் சுதந்திரமாகச் செயல்பட வைப்பதைத் தன் கடமையாகக் கொள்வதிலிருந்து காங்கிரஸ் இந்த பிரச்சினையைச் சரிசெய்யத் தொடங்கலாம். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற நேரடிச் சங்கிலியின் கண்ணிகளாக இருக்கும் காவல் நிலைய அதிகாரி, மாவட்டக் காவல் துறைத் தலைவர். காவல் துறைத் தலைமை அதிகாரி, நிர்வாகத் தலைவர்கள், உள்துறை அமைச்சர், இறுதியாக முதலமைச்சர் ஆகியோரை சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய அளவில் சீர்குலைவதற்குப் பொறுப்பாக்குவது என்ற ஒற்றை மாற்றத்தின் மூலம் பல வகையான கும்பல் வன்முறைகளைத் தடுக்க முடியும். ஆனால் காங்கிரஸ் இப்படி ஒரு மாற்றத்தை செயல்படுத்த எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை. ஏனென்றால் அதுவும் கும்பல் வன்முறையைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கும்பல் கொலைகள் குறையலாம்தான். ஆனால் 1984ஐப் போல் அக்கட்சிக்குப் பயன்படும் வன்முறை நிகழும் என்றால் அந்த வன்முறை அதேபோல் மீண்டும் கட்டவிழ்க்கப்படும்.
இதே புரிதலை ஊடகங்கள், கல்விப் புலத்தின் இன்றைய நிலைக்கும் நீட்டிக்கலாம். இவற்றில் காங்கிரஸ் தொடங்கிவைத்த நிலைதான் இன்று அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. இவை இரண்டையும் மேலும் சீரழிக்க மோடி காங்கிரஸ் பயன்படுத்தியே அதே வழிமுறைகளைத்தான் பயன்படுத்தினார். ஊடகங்களைப் பொறுத்தவரை கார்ப்பரேட் சக்திகள் அரசின் கருணையைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில் செய்தி நிறுவனங்கள் கார்ப்பரேட்மயமாகியிருப்பதில் இது பிரதிபலிக்கிறது. ஆட்சியில் இருக்கும் கட்சியுடைய கருத்துகளைப் பிரதிபலிக்கும் கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவளிப்பது, கல்வி நிறுவனங்களுக்கு நிதி, நிலம் உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் கல்விப் புலத்தின் இந்தச் சீரழிவு உறுதிசெய்யப்படுகிறது.
ஜூன் மாதம், ஊடகங்கள் கார்ப்பரேட்மயமாதல் குறித்து இதழியலாளர் பி.சாய்நாத்தின் உரை நிகழ்வில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். ஊடகத்தின் உரிமையாளர் யாராக இருக்கலாம் என்பதை முறைப்படுத்துவது தொடங்கி பல்வேறு நாடாளுமன்ற வழியான தீர்வுகளைக் கோரும் பிரச்சினை இது. கல்விப் புலத்துக்கும் இது பொருந்தும். இதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவையில்லை, அரசியல் விருப்புறுதிதான் வேண்டும். ஆனால் இவற்றை ஒருமுறை செயல்படுத்திவிட்டால், நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதையும் மோடியையோ காங்கிரஸையோ பிரச்சினைகளின் தேவைக்கு ஏற்ப விமர்சிப்பதையும் உறுதிசெய்வதற்கான செயல்முறை தொடங்கிவிடும். ஆனால் மோடியைப் போலவே காங்கிரஸும் மாற்றுக் கருத்தை ஜீரணித்துக்கொண்டதில்லை. மாற்றுக் கருத்தை எதிர்ப்பதில் மோடியைவிடக் காங்கிரஸ் கொஞ்சம் குறைவான செயல்திறன் கொண்டது என்பதுதான் வேறுபாடு.
ராகுல் காந்தியின் இந்து மதம் மீதான புதிய காதலையும் அல்லது அந்த உண்மையை அவர் பொதுவில் அறிவித்திருப்பது பற்றியும் நிறைய பேசியாகிவிட்டது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போதும் அதைப் பற்றி அவர் பேசினார். இந்துவாக இருப்பது என்றால் என்ன என்று பாஜக தனக்குக் கற்றுக்கொடுத்திருப்பதாகச் சொன்னார். ஆனால் ராகுல் இந்து மதத்தைவிட அரசியல் சாசனத்தின் மீது அதிக பற்றைச் செலுத்துவதுதான் நல்ல பயன்களைத் தர முடியும்.
ராகுல், தனது உரையை முடித்துவிட்டு மோடியிடம் சென்று அவரைக் கட்டிப்பித்தது அன்றைய நாளைத் தனது வெற்றியாக்கிக்கொள்ளும் முனைப்பில்தான். சில வகைகளில் அவர் வெல்லவும் செய்தார். மோடியின் சிறப்புத் திறமைகளான சைகைகள் மற்றும் அடையாள அரசியலை வைத்து முதல் முறையாக ராகுல் காந்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். புதிய ராகுலைக் கொண்டாடுவதன் மூலம், விமர்சகர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு இந்தியனிடமும் எதிர்பார்க்கும் மதப் பற்றையும் அரசியல் உலகில் மோடியால் நமக்கு அளிக்கப்பட்ட அரசியலையே தனது அரசியலாகவும் கொண்டிருக்கும் ஒருவரைக் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கும்பல் கொலைகள் பற்றி எதுவும் இடம்பெறாததில் வியக்க எதுவும் இல்லை. ராகுலின் அடையாளபூர்வ வெற்றி கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த அதே நாளின் இரவில் ஒர் இஸ்லாமியர் அல்வாரில் கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார்.
இன்று நாம் காங்கிரஸின் கருணையை நம்பி வாழக் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். பாஜகவைவிட காங்கிரஸ் அதிக கருணை கொண்டது என்பதால். ஆனால் சின்னச் சின்னக் கருணைகளுக்காக நம்மை நன்றியுடன் இருக்கச் சொல்பவர்கள் பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்கள், காங்கிரஸ் நமது நிறுவனங்களை மறுகட்டமைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க விடுவதன் மூலம், ஒன்று அல்லது இரண்டு அரசுகளின் ஆட்சிக் காலங்களுக்குப் பிறகு மோடியின் இடத்துக்கு வேறோருவர் வருவதை உறுதிசெய்வார்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேர்வாக இருப்பார். அவர் மோடியைவிடத் தீவிர வலதுசாரியாக இருப்பார். மோடி வாஜ்பாயைவிடத் தீவிர வலதுசாரியாக இருந்ததைப் போல. துரதிருஷ்டவசமாக இதெல்லாம் நடக்கையில், காங்கிரஸை நிபந்தைனைகளற்று ஆதரிக்கச் சொல்பவர்களின் தவறுகள் குறித்து முன்கூட்டியே எச்சரித்த திருப்தி எந்தப் பயனையும் தராது.
ஹர்தோஷ் சிங் பால்
நன்றி: கேரவான் (http://www.caravanmagazine.in/politics/modis-legacy-will-not-disappear-with-hug-wink)