வாழ்த்துக்கள் செல்வி ஜெயலலிதா. உங்களின் அரசியல் சகாப்தம் முடிந்து விட்டது என்று பத்திரிக்கைகளும், எதிர்க்கட்சிகளும் ஆருடம் கூறிய போதெல்லாம் அவைகளை பொய்யென்று நிரூபித்துக் காட்டியவர் நீங்கள். 1996ல் நடந்த தேர்தலில் அதிமுக எதிர்ப்பு அலையையும், ஊழலையும் தவிர வேறு எதுவுமே பிரச்சினையாக இருக்கவில்லை. அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் என்ற மூப்பனார் தலைமையிலான கட்சியும், திமுகவும் இணைந்து, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 221ல் வென்றன, திமுக தனித்து 172 எம்எல்ஏக்களைப் பெற்றிருந்தது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது சவுக்கு.
இந்தத் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றி அதை விட பெரிய வெற்றி என்றே சவுக்கு கருதுகிறது. ஏனென்றால், அப்போது வாக்காளர்களுக்கு பணம் என்ற ஒரு விஷயம் இல்லை. மேலும், உங்கள் கட்சி, கலகலத்துப் போயிருந்த காங்கிரஸ் கட்சியையும், பெரிய பிளவைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியை மட்டுமே நம்பியிருந்தது. உங்கள் வாக்கு வங்கியும் பெரும் அளவில் சரிந்திருந்தது. ஆனால், இன்று, திமுகவும், காங்கிரசும், பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும், உங்களது எதிர் அணியில் இருந்த போதும் 202 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். மிகப் பெரிய வெற்றி தான் இது.
அதிமுக வாக்கு வங்கியை மட்டுமே வைத்து, நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது என்பது மற்ற அனைவரையும் விட உங்களுக்கு நன்கு தெரியும். அதன் காரணமாகத் தான் நீங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு கணிசமான அளவில் சீட்டுகளை ஒதுக்கினீர்கள். அதிமுக வாக்கு வங்கிக்கு விழுந்த வாக்குகளைத் தவிர்த்து, மீதம் உள்ள அத்தனை வாக்குகளும், திமுக எதிர்ப்பு வாக்குகளே என்பதை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள் என சவுக்கு நம்புகிறது. நீங்களே எதிர்ப்பார்த்திராத ஒரு மிகப் பெரிய வெற்றியை தமிழக மக்கள் தேடித் தந்திருக்கிறார்கள்.
தமிழக மக்கள் உங்கள் மீது மிகப் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உங்களின் கடந்த கால தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பார்ப்பில் தான் உங்களுக்கு இப்படி ஒரு மகத்தான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் என்று விடிவு என்று காத்திருந்து, தங்கள் கோபத்தை அதிமுகவுக்கு வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த வாக்குகளும், அடுத்த ஐந்தாண்டுகள் உங்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஆட்சியும், தமிழக மக்களுக்குச் சொந்தமானது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நாடு முழுவதும் இன்று பரவிப் போய்க் கிடக்கிற ஊழல் என்னும் பேயை விரட்ட, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை உங்களின் முக்கிய இலக்காக வைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். தேவையான ஊழல் வழக்குகளைப் பதிவு செய்வதோடு, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். அரசியல்வாதிகள் தவிர்த்து, திமுக ஆட்சியில் கொள்ளையில் பங்கு பெற்றுள்ள, அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். கேபிள் டிவி அரசுடமை, மின் வெட்டு ஒழிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் உங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாலும், அந்த தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் சொல்லியிருப்பதாலும், அதற்குள் போக விரும்பவில்லை.
மக்கள் நலனைப் பேணும், நல்லாட்சி வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நாளை மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ள உங்களுக்கு சவுக்கு சார்பாகவும், சவுக்கு வாசகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.